Skip to content
Post Views: 4,588
தூறல் – 25
சொன்னது போன்றே அன்று மாலையே தன் குடும்பத்தோடு ஐஸ்கிரீம் பார்லர் சென்று மகளுக்கு அவள் விரும்பிய ஃப்ளேவரில் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்து கடற்கரைக்கும் அழைத்துச் சென்றிருந்தான் குரு. ராதாவை அழைத்தபோது முழங்கால் வலிப்பதாக கூறி முகத்தை சுருக்கிக் கொண்டவர் அவர்களை மட்டும் சென்று வருமாறு கூறி இருந்தார். உண்மையில் அவர்களுக்கான தனிமையை கொடுத்து அவனுக்கென்று தனி குடும்பத்தை அவனை முழுதாக உணர வைக்க வேண்டும் என்று வேண்டுமென்றே தவிர்த்திருந்தார் ராதா.
Advertisement
இரவு உணவு எதுவும் சமைக்க வேண்டாம் என்று அவரிடம் கூறியவன் வரும்போது அவருக்கு வாங்கி வருவதாக கூறி இருந்தான்.
கடற்கரை மணலில் தந்தை தாய் இருவரின் கைகளையும் இருபுறமும் பிடித்துக் கொண்டு நடப்பதும், ஓடுவதும், கால்களை தூக்கிக் கொண்டு தொங்குவதுமாக கலகலவென சிரிப்புடன் மகிழ்ச்சியாக உலவிக் கொண்டிருந்தாள் சவி.
Advertisement
Advertisement
ராதா எத்தனையோ முறை அழைத்தும் ராமநாதபுரத்தில் உள்ள எந்த கடற்கரைக்கும் அஞ்சலி சென்றதே இல்லை. எதிலுமே அவளுக்கு நாட்டமோ விருப்பமோ இல்லை. திக்கு தெரியாமல் யாருக்கோ பயந்து எங்கோ வந்து ஒளிந்து கொண்ட மனநிலையில் இருந்தவளுக்கு வெளியில் சுற்றித் திரியும் மனநிலையும் இல்லை… அதற்கான மகிழ்ச்சியும் இல்லை.
இன்று தன்னவனுடன் மாலை கதிர் சாயும் அந்திவேளையில் கடலுடனான அந்த அழகிய அஸ்தமனத்தை தன்னவனோடு இணைந்து கண்கள் நிறைத்து மகிழ்வோடு பார்த்தபடியே அமர்ந்திருந்தாள் அஞ்சலி. யாரேனும் தெரிந்தவர்கள் இங்கு வந்து பார்த்து தன்னை சேர்ந்தவர்களுக்கு தகவல் கொடுத்துவிட்டால் என்ன செய்வது என்ற பயமெல்லாம் அன்றாடம் அவள் பள்ளிக்கு சென்று வரும்போதுகூட அவ்வப்போது தோன்றும்.
Advertisement
ஆனால் இன்று யார் வேண்டுமானாலும் பார்க்கட்டும் எங்கு வேண்டுமானாலும் செய்தியை கொண்டு செல்லட்டும் எனக்காக என்னவன் இருக்கிறான் யார் எங்களை என்ன செய்து விட முடியும் என்ற இறுமாப்பு இதயத்தில் ஆழமாக ஏறி அமர்ந்து கொண்டது. அத்தனை நம்பிக்கையையும் தைரியத்தையும் அவள் நெஞ்சில் விதைத்திருக்கிறான் அவளவன்.
“கொரிக்க ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா..?”
அவளிடம் குனிந்து அவன் கேட்க “ஐஸ்கிரீம் சாப்பிட்டது பத்தாதுன்னு என்னென்னவோ வாங்கிக் கொடுத்து வயித்த பாதி நிறைச்சு வச்சுட்டீங்க. நைட் டிபனுக்கு கொஞ்சமாவது இடம் இருக்கட்டும். சவிக்கும் எதுவும் வேணாம்… டிபன் சாப்பிட மாட்டா…”
அவளது பேச்சுக்கு ஆமோதிப்பாய் தலையாட்டிக் கொண்டவன் அவள் அருகில் நெருங்கி அமர்ந்து கொண்டான். தந்தை தாய் இருவரின் முதுகோடு தன் முதுகை இணைத்து திரும்பி அமர்ந்து கொண்டு மணல் வீடு கட்டத் தொடங்கி இருந்தாள் சவி. அது என்னவோ அவளுக்கு இருவரில் யார் முதுகின் பின்புறமாவது தன் முதுகை சாய்த்து அமர்த்திக் கொள்ளும்போது ஒரு தனி பாதுகாப்பு உணர்வு தோன்றுகிறது போலும். அதை தாண்டிய உள்ளார்ந்த ஓர் இறுக்கமான உணர்வும் உள்ளூர ஓடுகிறது. அந்த வயதிற்கு அவளுக்கு அது புரிகிறதோ என்னவோ ஆனால் அவளை சேர்ந்தவர்களுக்கு அவளது அந்த செயல் அத்தனை மகிழ்ச்சியை தருகிறது.
முழங்கால்களை கட்டிக் கொண்டு மணல்மேட்டில் இருவரும் அமர்ந்திருக்க மகள் அவர்களின் பின்னே… தொலைவில் சூரியன் மறைந்து கொண்டு இருந்தான். மெல்ல மெல்ல இருளும் நெருங்கி வரவா என்று கேட்டுக் கொண்டிருந்தது. அமைதியாக கடலை மட்டுமே வெறித்தபடி அமர்ந்திருந்தவர்களின் விழிகளில் ஓர் புன்னகை… இதழ்களில் ஒருவித அமைதி… இதயத்தில் சொல்ல முடியாத நிம்மதி… தன்னவனின் விரல்களை கோர்த்துக் கொண்டாள் அஞ்சலி.
திரும்பி அவளைப் பார்த்தவன் ஒரு சிறு புன்னகையுடன் கோர்த்திருந்த அவளது விரல்களை எடுத்து தன் மடிமீது வைத்துக் கொண்டான்.
“குரு…”
“ம்ம்…”
“நம்ம மூனு பேரும் இப்போ உட்கார்ந்து இருக்கிற இந்த கோலத்தை அப்படியே போட்டோ எடுத்து எங்க வீட்டு ஆளுங்க கையில யாராவது கொண்டு போய் கொடுத்தா சீன் எப்படி இருக்கும்..?” சிரித்தபடியே கேட்டாள் அஞ்சலி.
“என் வேலை சுளுவாயிடுமே. நிறைய பேசி எனர்ஜி வேஸ்ட் பண்ண வேணாம்… நாலே பாயிண்ட்ல நச்சுனு முடிச்சிடுவேன்… அப்படி யாராவது பண்ணினா எனக்கும் சந்தோசம்தான்…” என்றவனுக்கும் அதே புன்னகை.
“அப்போ ஊருக்கு போய் கண்டிப்பா எங்க வீட்டுல பேசத்தான் போறீங்களா..?”
“இன்னும் என்னடி சந்தேகம்..? இனி பேசித்தான் ஆகணும்… தேவையில்லாம அசிங்கமான பூச்சுகள் உன்மேல விழறதை நான் சகிச்சுக்க மாட்டேன்…”
“ஆரம்பத்துல ராதாம்மா என்னையே உங்கள கல்யாணம் பண்ணிக்க கேட்டப்போ நீங்க ஏன் தவிர்த்தீங்க..? நிறைய ஏன் யோசிச்சீங்க..? நான் கேட்டதுக்குகூட அதுக்கு வேற ஒரு காரணம் இருந்ததுன்னு சொன்னீங்களே… இப்போ சொல்லுங்க… எதனால அப்படி ஒரு தயக்கம் உங்களுக்கு வந்தது..?”
“நான் சொன்ன காரணத்தை அத்தை உன்கிட்ட சொல்லலையா..?”
“இல்லையே…”
“நான் தமிழன்தான்… ஆனா தமிழ்நாடு கிடையாது… என் பூர்வீகம் இலங்கைன்னு உனக்கும் நல்லா தெரியும்தானே…”
“அதுக்கும் என்னை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கும் என்ன சம்பந்தம் குரு..?
“நிறைய இருக்குடி… நான் இங்கே ஒண்ட வந்தவன்தான் உரிமைப்பட்டவன் இல்ல…”
அவனது அந்த வார்த்தையில் வலி கொண்டவள் வேதனையோடு அவனை திரும்பிப் பார்த்தாள்.
“என்ன பேச்சு இது..?” அவள் குரலில்கூட அத்தனை சங்கடம்.
“உண்மையைதான்டி சொல்றேன்…” என்றவனின் புன்னகைக்கு சுருங்கிய முகத்துடன் அவனை ஆழமாய் பார்த்தாள் அஞ்சலி.
“அகதியாதான் நாங்க எல்லாம் இங்கே நுழைஞ்சிருக்கோம். இங்கே எங்களுக்கான எந்த அடையாளமும் இல்ல. இப்போகூட உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு தெளிவும் தைரியமும் எனக்கு இருக்கு. ஆனா சில கேள்விகள் சில சட்ட சிக்கல்கள் இதையெல்லாம் எப்படி ஃபேஸ் பண்ணப் போறேன்னு கொஞ்சம் தயக்கமாதான் இருக்கு அஞ்சு…”
“எ..என்ன எ..என்ன பிரச்சனை வரும்..?”
“ஒரு அகதிக்கு என் பொண்ணை கொடுப்பேனான்னு உங்க வீட்ல யோசிக்கலாம்…”
“அவங்க என்ன கொடுக்கிறது..? முடிவு பண்ண முதல்ல யாரு அவங்க..? முடிவு நான் எடுத்தாச்சு… எப்பவோ என் மனசை உங்ககிட்ட கொடுத்தாச்சு…”
அவன் அடுத்து பேசும் முன் வேகமாக இடைமறித்து பதில் அளித்திருந்தாள் அஞ்சலி.
அவளைப் பார்த்து சிரித்தவன் கோர்த்திருந்த அவளது விரல்களுக்கு அழுத்தம் கொடுத்தான்.
“உனக்கே தெரியும்… இங்கே ஒவ்வொரு நடைமுறைக்கும் நிறைய சட்டங்கள் இருக்கு… நாளைக்கு நம்ம பொண்ணு வளர்ந்து ஆளாகும்போது அவளோட ஒவ்வொரு நகர்வுக்கும் அம்மா அப்பாவோட அடையாளங்கள் கண்டிப்பா சட்டபூர்வமா கொடுக்கணும். உன்னோட சர்டிபிகேட்ஸ், உனக்கான அடையாளம், ஐடி இதெல்லாம் போதுமானதா இருந்தாலும் ஒரு அப்பாவா அவளுக்கு நான் இருந்தாலும் இந்த மண்ணைப் பொறுத்தவரைக்கும் நான் ஒரு அன்னியன்தான். எனக்கு இங்கே எந்த உரிமையும் இல்ல. ஓட்டுரிமையில ஆரம்பிச்சு இப்படி நிறைய நிறைய. என் மனைவி மகளுக்கு ஆசையா ஒரு வீடு கட்டிகூட என்னால உட்கார வைக்க முடியாது…”
தன் அத்தையிடம் அன்று சொன்னவற்றையே அவளிடமும் கூறினான்.
“என்னால பிரைவேட்ல எங்கே வேணாலும் வேலை செய்ய முடியும்… ஆனா அரசாங்கம் சம்பந்தப்பட்ட எதுலயும் நுழையவே முடியாது… இப்படி நிறைய சவால்கள் இருக்குடி…”
தெளிவாக கூறியவன் அவளிடம் இருந்து பார்வையை விலக்கி கடல்மீது பதித்தான்.
அவளிடம் சிறிது நேரம் பேச்சு இல்லை. அவனுக்கான அடையாளம் இல்லாத இடத்தில் அவர்களுக்காக ஒரு வாழ்க்கையை அவன் இங்கு தொடர வேண்டும். இங்கு அவன் நிரந்தரமாக இருக்கலாம் வசிக்கலாம். ஆனால் அதை தாண்டிய உரிமை சட்டபூர்வமாக இன்றுவரை எழுப்பப்படவில்லையே… அது அவளுக்கும்கூட ஓரளவு தெரியும்.
“இலங்கையில சட்டம் எப்படி..?” அவளும் கடலில் கண் பதித்தபடியே கேள்வி கேட்டிருந்தாள்.
“எப்படி என்டா..?”
“இலங்கையில உள்ளவங்க தமிழ்நாட்டு பொண்ணையோ பையனையோ கல்யாணம் பண்ணினா அவங்களுக்கும் அங்கே இதே நிலைமைதானா..?”
“அங்கே கொஞ்சம் வேற மாதிரிதான்… அதாவது சம்பந்தப்பட்டவங்களுக்கு பாஸ்போர்ட் விசா முறையா இருக்கணும்… திருமணத்தை முறையா பதிவு பண்ணனும்… இலங்கையிலேயே குடியேற குடியுரிமை சான்று வாங்கணும்… அப்புறம் இன்னும் வசிப்பிட சான்று NOC இதெல்லாம் கூட அவசியம். இதெல்லாம் முறையா பண்ணிட்டா கணவன் அல்லது மனைவிக்கான வசிப்பிட விசா பெற அவங்க தகுதியுள்ளவங்க ஆயிடுவாங்க. அவங்க அங்கே நிரந்தரமா வாழ ஆரம்பிக்கிறதுல ஒன்டும் பிரச்சனை வராது…”
“அதே ப்ரோசீஜர் இங்கேயும் இருக்கும் தானே…”
“இங்கே எப்படின்னு எனக்கு சரியா தெரியாதுடி… எனக்கு தெரிஞ்சவரைக்கும் இலங்கை அகதி அப்படின்னா அவங்களுக்குன்னு தனிப்பட்ட முறையில எந்த முகவரியும் கிடையாது…”
“இலங்கையில உங்களோட அடையாளம் உங்களுக்கு அப்படியே கிடைக்கும்தானே…”
“அது மாறாதே… நான் இலங்கை குடிமகன்தானே…”
“அப்போ நாம கல்யாணம் பண்ணிட்டு இலங்கை போயிடலாம் குரு…”
சிறிதும் குழப்பமின்றி அவள் அழுத்தமாக கூற அதிர்ந்து அவளை திரும்பிப் பார்த்தான் குரு.
“அஞ்சு..”
“ஏன்..? உங்களுக்கு அதுல கஷ்டமா..? திரும்ப உங்களால அங்கே போக முடியாதா..? உங்க சம்பந்தப்பட்ட எல்லாமே மொத்தமா அழிஞ்சு போயிடுச்சா..? அப்படியே அழிஞ்சு போயிருந்தாலும் நமக்கான ஒரு அடையாளத்தை அங்கே ஏற்படுத்திக்க முடியாதா..?”
அவளது வரிசையான கேள்விகளில் அவனது தொண்டைக்குழி ஏறி இறங்கியது.
“முழுசா அழிஞ்சு போகல… அரைகுறையா இருக்கு… நானும் அத்தையும் நினைச்சா திரும்ப எங்களால இலங்கைக்கு திரும்ப முடியும். எங்க வாழ்க்கையை அங்கே பழையபடி அமைச்சுக்க முடியும்…இப்போ நிலைமை அங்கே சீராதான் மாறி இருக்கு. ஆனா அங்கே போகவே விருப்பம் இல்லாமதான்டி அப்படியே இங்கே உட்கார்ந்துட்டோம்…” சொன்னவனின் குரலில் அத்தனை வலி.
“நாம இங்கே குடும்பமா வாழ்றதுல உங்களுக்கு தனிப்பட்ட முறையில சிக்கல்கள் இருக்கிற பட்சத்துல நாம இலங்கைக்கே போயிடலாம் குரு… எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்ல…”
தனது வாழ்விடத்தைக்கூட மாற்றத் தயாராகி இருப்பவள் தன்மேல் எந்த அளவிற்கு நம்பிக்கையும் காதலும் கொண்டுள்ளாள் என்பதை உணர்ந்தவனுக்கு இதயம் குளிர்ந்து போனது. அதே நேரம் மீண்டும் இலங்கை செல்வதா என்ற எண்ணம் தோன்றும்போதே அதே இதயத்தில் இருள் சூழ்ந்து கொண்டது. ஏதோ அடைப்பதை போல் தோன்றியது.
அவன் முக மாற்றத்தை கண்டு கொண்டவள் தலையை நன்றாக திருப்பி அவனைப் பார்த்தாள்.
“ஏன் குரு..? அங்கே போனா உங்க பழைய நினைவுகள் பழைய வாழ்க்கை எல்லாம் உங்களை அலைக்கழிக்கும்னு பயமா இருக்கா..?”
அவன் உள்ளார்ந்து உணர்ந்த உணர்வுகளை முழுமுற்றாக அறிந்தவளாக அப்படியே கேட்டிருந்தாள் அஞ்சலி.
பதில் பேசாமல் அவளை பார்த்தவனின் விழிகளில் புதிதான ஒரு வலி ஒட்டிக் கொண்டிருந்தது.
அவள் கேட்டது உண்மைதானே… மீண்டும் தான் வாழ்ந்த பூமியில் தான் மகிழ்ச்சியோடு வாழ்ந்து திரிந்த பகுதியில் போய் நின்றால் ஆழமாய் அமிழ்ந்து கிடக்கும் நினைவுகளும் அதில் பதிந்து போன கசப்புகளும் மீண்டும் கிளர்ந்து வெளி வந்தால் அந்த வலியின் தாக்கத்தை சமாளிக்க முடியுமா என்ற பயம்தான்.
இங்கு வந்த பின்பு மீண்டும் இலங்கை திரும்பும் எண்ணம் அவன் மனதில் எழவில்லை. வாழ்க்கை போன போக்கில் அப்படியே வாழ்ந்து விடலாம் என்று வெறுமையாய் ஒரு எண்ணம் பதிந்து இருந்தாலும், அவன் வாழ்ந்த பூமியின் மீது இயல்பான ஈர்ப்பும் பிடித்தமும் இல்லாமல் போகாதுதானே.
இத்தனை நேரம் இலகுவாக இருந்த மனம் இரும்பாக மாறியதைப் போல் கனத்து வலித்தது.
சட்டென முகம் இறுகி அமைதியாகிப் போனவனை ஆழ்ந்து பார்த்தவள் “நேரமாச்சு… போகலாமா..?” அவன் தோளில் கை வைத்து கேட்க அமைதியாக தலையசைத்துக் கொண்டவன் தன் மகளை எழுப்பி நிமிர்த்தி அவள் கவுனில் ஒட்டியிருந்த மணலை தட்டிவிட்டு கைகளில் தூக்கிக் கொண்டான்.
ஏதோ யோசனையுடன் அமைதியாக நடந்தவனின் முகத்தை அவ்வப்போது கவனித்தபடியே உடன் நடந்தாள் அஞ்சலி. அங்கு வரும்போது அவன் முகத்தில் தெரிந்த துள்ளல் இப்போது இல்லை… உணவகம் சென்று தேவையானவற்றை ஆர்டர் செய்து அமைதியாக உண்டு முடித்தனர். குழந்தைக்கு ஊட்டி அஞ்சலிக்கு பிடித்தவற்றை ஆர்டர் செய்து வாங்கிக் கொடுத்தவன் தனக்கென்று குறைவான உணவினை மட்டுமே எடுத்துக் கொண்டதையும் கவனிக்கத் தவறவில்லை அஞ்சலி.
அவன் நெஞ்சில் நெருஞ்சிமுள்ளாய் வலி தைக்கிறது என்பதை அவளால் உணர முடிந்தது.
ஆட்டோ பிடித்து வீட்டிற்குச் சென்றவர்கள் ராதாவிடம் அவருக்கான உணவை ஒப்படைத்து மீண்டும் தங்கள் வீடு வந்து சேர்ந்தனர். ஓடியாடி விளையாடியதாலும் வயிறு நிறைய உணவு உண்டதாலும் ஆட்டோவில் வரும்போதே தந்தையின் நெஞ்சில் சாய்ந்து அயர்ந்து உறங்கிப் போயிருந்தாள் சவி.
அவளை அவனிடம் இருந்து வாங்கி படுக்கையில் படுக்க வைத்து அறையில் இருந்து வெளியேறி வந்தாள் அஞ்சலி. கூடத்தில் உடையைகூட மாற்றாமல் இருக்கையில் அமைதியாக தலைசாய்த்து கண்மூடி அமர்ந்திருந்தவனை அழுத்தமாய் ஆராய்ந்தபடியே அவன் எதிரில் வந்து நின்றாள்.
அவனை ஆழமாக உணர்ந்து கொண்டவளுக்கு அவனது ஆழ்மன இரைச்சல் கேட்காதா என்ன..?
(தொடரும்)
error: Content is protected !!