உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் அத்தியாயம் 55.1
மலைச் சரிவில், அடர்ந்த மரங்களுக்கு இடையே இருந்தது அந்த ரெசார்ட். பிரிமியர் ஹனிமூன் ஸ்வீட்டிற்கான அனைத்து தகுதிகளையும் கொண்டிருந்தது அந்த அறை. மெத்தைக்கு முன் இருந்த தடுப்புச் சுவர் கண்ணாடி என்பதால், அதன் முழு நீளத்திற்கும் திரை இருந்தது. திரையை விலக்கி, அறையின் கண்ணாடிக் கதவைத் திறந்து வெளியே வந்தவனை விஸ்தாரமான மேல்மாடம் வரவேற்றது.
‘மலையின் அழகு கண்களை நிறைக்கும். பச்சை நிறத்தின் வாசம் மூச்சுக் காற்றோடு கலக்கும். கனத்த கர்பிணி மேகம் பரிசளிக்கும் குளுமையை மேனி ரசித்து, சிலிர்க்கும். அருவியின் இரைச்சல், ப்ளூடூத்தோடு இணைக்கப்படாத காதுகளுக்கு இனிமையாக இருக்கும். கண்டிப்பாக இது தனிமையை நாடி வரும் தேனிலவு ஜோடிகளுக்கு உகந்த இடம் என்பதில் சந்தேகமே வேண்டாம்’ என்ற வார்த்தைகள் அச்சுபிசாகாது உண்மையென கண் முன் விரிந்திருந்த காட்ச்சி கூறியது.
கர்நாடகாவிற்குச் செல்ல வேண்டும் என்றோ, சோம்வார்பேட்டையில் தேனிலவைக் கழிக்க வேண்டும் என்றோ யசோ கேட்கவில்லை. இந்த இடம் பொருந்தி வந்ததால், இதைத் தேர்வு செய்திருந்தான் ரகு.
Advertisement
எப்பொழுதும் போல் மொட்டை மாடியில்… குட்டி கட்டிலில் நடக்கும் சம்பாஷனை இல்லை. இது அடுக்களையில் அவன் இளமையைச் சோதித்துக் கொண்டே அவள் வைத்த கோரிக்கை. சும்மா கேட்டாலே பூம் பூம் மாடு போல் தலை ஆட்டும் ரகு… ‘தீண்டாமை ஒரு பாவச் செயல், அதை ஒழித்தே ஆவேன்’ எனும் கோட்பாட்டோடு நிற்பவளிடமா மறுத்துப் பேசப் போகிறான்?
மீசையை வருடிக் கொண்டே, “மலைப் பிரதேசம்” என்றாள். ஆட்சேபிக்காது, சரி என்றான்.
புருவத்தை நீவி, “மலை முகட்ட உரசிட்டே போரப் பனி மேகக் கூட்டம்” என்றாள்.
Advertisement
மலைக்கும் குளிரும் தானே? மேகத்தைப் போர்த்தி கொள்வதில் இவனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பதால் அதற்கும் சரி என்றான்.
Advertisement
“நம்ம ரெசார்ட், மலைக்கு மேல இருக்கணும்” என்றாள், ‘மேல’யிலும் அவன் உதட்டிலும் அழுத்தம் கொடுத்து. உதட்டில் பதிந்த அழுத்தம் இன்னும் வேண்டும் போல் இருந்தாலும், அவள் செய்து கொண்டிருந்த அலப்பறையில் அவன் அதை பற்றி வாய் திறந்தான் இல்லை.
“மல மேல… உச்சியில” என்றவள் அவர்களுக்கிடையே காற்றை அனுமதித்தாள். அது பிடிக்காது அவள் இடையை வளைத்தாள். காற்று இடையே மாட்டி நசுங்கியதை இருவரும் பொருட்படுத்தவில்லை. மலைப் பிரதேசம் சென்றுவிட்டு, மலை அடிவாரத்தில் நமக்கு என்ன வேலை? “சரி” என்றான்.
“பெரிய ரூம். ஒரு பக்கம் முழுசும் கண்ணாடி சுவர். மெத்தையில இருந்து பார்த்தா, அருவி, மலைச் சரிவு, பெரிய பெரிய மரங்கள், குருவி… அதாவது இயற்கை மட்டும் தான் தெரியணும்.”
Advertisement
“ஓக்கே ஓக்கே” மெத்தை என்றதும் மற்றது எல்லாம் பின் சென்றது காதலனுக்கு.
“நீ… நான்… இயற்கை. அங்க தான் நம்ம ஹனிமூண்” என்றாள் அவன் மார்பில் கோலம் வரைந்து. கண்கள் ஒளிர, “நல்லா இருக்கே” என்றான் ரகு.
“ரசிச்சுட்டே…” அவன் உல்லாசமாகச் சிரித்தான். அவளும், “போடா போக்கிரி” என்று போலியாகச் சிணுங்கிச் சிரித்தவள் அவன் கரத்தினுள் அடங்கியிருந்தாள்.
அவள் கேட்ட அனைத்தும் இருக்கிறதா எனப் பார்த்து பார்த்து அறையைத் தேர்வு செய்தவன், இதோ வந்தும் விட்டான். பால்கனியில் அமர்ந்திருந்தவன் மடியில் அவள் இல்லை. கரத்தில் கூர்கின் காபி இல்லை, திருமண பத்திரிக்கை இருந்தது.
யாரின் பத்திரிக்கை? அட… இது நம் ரகு-யசோவின் திருமண அழைப்பிதழ். திருமண நாளுக்கு இன்னும் ஒரு வாரம் இருக்க, ரகு தனித்து இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறான்?
கையிலிருந்த திருமண அழைப்பிதழை அமைதியாக பார்த்து அமர்ந்திருந்தான் ரகு. ‘எங்கள் காதலின் புதிய அத்தியாயத்தை எங்களோடு கொண்டாட வாருங்கள்’ எனும் அர்த்ததோடு தங்க நிறத்தில் பளபளத்துக் கொண்டிருந்த ஆங்கில எழுத்துகளை மௌனமாகப் பார்த்தான்.
செவ்வக வடிவிலிருந்த அழைப்பிதழின் கீழே நீண்டு நின்ற தங்க நிற பட்டையை இழுத்தான். அழைப்பிதழின் கீழ்ப் பாதியில் நின்றிருந்த குட்டி பெண் பொம்மையை நோக்கி, மேலே இருந்த குட்டி பையன் உருவம் கையில் இதயத்தோடு இறங்கியது. முழுவதுமாக இழுத்து முடிக்க, குட்டி உருவங்கள் இரண்டின் உதடுகளும் முத்தமிட்டுக் கொண்டு நின்றிருந்தன. தங்க நிற பட்டை முழு நீளத் தாளாக, திருமண அழைப்பிதழுக்கான வாசகத்தை ஏந்தி இருந்தது.
நிச்சயம் முடிந்த கையோடு இவனும் யசோதராவுமாக தங்கள் தோழர்களுக்குக் கொடுக்கவென தேர்ந்தெடுத்த அழைப்பிதழை கண்கொட்டாது மணி நேரமாகப் பார்த்து அமர்ந்திருப்பவனுக்குள், “கல்யாணத்த நிறுத்த வேண்டாம் ரகு… பிளீஸ்” என யசோவின் அழுகுரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
யசோவின் சிறு வாட்டத்தைக் கூட பொறுக்காத ரகு, அவள் கண்ணீர் விட்டுக் கதறிய போதும் எப்படிக் கல்லாக இருந்தான்?
“சாரி, வீர். மருந்து உங்க சிம்டம்ஸ்ச மட்டும் தான் மட்டு படுத்தி இருக்கு. நமக்கு வேற வழி இல்ல, ஆப்பரேஷன் மூலமா தான் கட்டிய ரிமூவ் பண்ண முடியும். அது இருக்க லோக்கேஷனுக்கு அத முழுசா எடுக்க முடியாது. ரேடியேஷன் கொடுக்க வேண்டியிருக்கும்.” என்றதோடு அருண் நிறுத்தியிருந்தால், ரகு கண்டிப்பாக யசோவின் கண்ணீருக்குக் கரைந்திருப்பான்.
அறுவை சிகிச்சையின் பின் நினைவுகள் தப்பி விடும் என்றால் அவனும் என்ன செய்வான்?
“மெம்மொரி லாஸ்ன்னா? புரியல டாக்டர்” என மீண்டும் கேட்டு தெளிவுபடுத்தியபின் ரகு எடுத்த முடிவு தான் இது.
“கொஞ்ச மாசம் இந்த வாழ்க்கைய வாழ்ந்துடுறேன். இதுக்கு மேல வலி தாங்காதுன்னு வரும் போது சர்ஜரிய பார்த்துகலாம். நான் குணமாகி வரும் போது… புது ரகுவா வருவேன். நீங்க எல்லாருமே எனக்கு புதுசா தெரிவீங்க. அந்த ரகு எப்படி இருப்பான்னு தெரியாது. கல்யாணம்… அத அப்போ பார்ப்போம்” என்ற குண்டை போட்ட அவனுக்கும், அதை விழுங்கிய அனைவருக்கும் வலித்தது.
“டியுமரா?” என அதிர்ந்தாள் யசோ. “எ…எப்போ தெரியும்?” எனத் திக்கினாள். “ஏன் மறைச்ச?” எனச் சண்டையிட்டாள். “நீ மட்டும் மனகஷ்டத்த சுமப்பியா? நான் யாரு உனக்கு?” எனக் கோபித்தாள். “உன்னால என்னை மறக்கவே முடியாது.” என ஜோதிடம் கூறினாள். “கல்யாணம் பண்ணிக்கலாம். சேர்ந்தே போராடலாம்” என யானை பலம் கொடுத்தாள். “சரி ஆகிடும் டா… நீ நான், நம்ம குழந்தைங்கன்னு இதே வீட்டுல வாழுவோம்” எனக் குறி கூறினாள்.
‘நீ… நான், சரி. ஆனால் சிகிச்சைக்குப் பின்… குழந்தைக்கு வழி இல்லாது போய் விடுமே’ என நினைத்த மாத்திரத்தில் இளகிய ரகுவின் மனம் மீண்டும் கடினபட்டது.
“எனக்கு நீ போதும். உனக்கு நான் போதும் ரகு. குழந்தை பிறந்தா நல்லது. இல்லாட்டா… போகட்டும் விடு.” என எப்படி எல்லாமோ அவனை சமாதானம் செய்ய முயன்றாள்.
“சையன்ஸ் வளர்ந்திருக்கு வீர். சின்ன வயசு… உங்க ஸ்பர்ம ஃபிரீஸ் பண்ணி வச்சுடலாம்.” என்ற அருணின் கூற்றை இவனால் ஏற்று கொள்ளமுடியவில்லை. ஆனால் அது தான் ஒரே வழி என்றால், யசோவிற்காக அதையும் முயற்சி செய்ய மனதைத் தேற்றிக் கொண்டான்.
யசோவின் கண்ணீர் சுமாராக வேலை செய்தது. “சர்ஜரி முடியட்டும். நீ மேல படி. திரும்பவும் காதலிப்போம். அப்பறம் கல்யாணம் பண்ணிக்கலாம்” என்றான் தீர்மானமாக.
அன்று தான் கடைசியாக அவன் பேபி அவனோடு பேசியது. அதன்பின் யசோ அவனோடு பேசவில்லை. அழுதாள். கரைந்தாள். “எல்லாம் உன் இஷ்டம்ன்னா நான் எதுக்கு பேசணும்? போடா” என்றுவிட்டாள்.
யாருமில்லா தனி அறையில் அவள் நினைவோடு அமர்ந்திருப்பதே பெரிய வரம் போல் அமர்ந்திருக்கிறான். நினைவுகள் என்பது சாபமா இல்லை ஆசீர்வாதமா என்பது நினைவுகளைப் பொறுத்தது. இன்னும் சில மாதங்களில் அவனுக்கு அவன் யசோவை தெரியப் போவதில்லை. அவனுக்கு அறுவை சிகிச்சை பெரிய விஷயமில்லை. ஆனால்… யசோவை, அவன் ஐயாவை, அம்மாவை, உற்றாரை, தோழர்களை, அவன் படிப்பை எனப் பலதையும் மறந்தபின் அவன் வாழ்க்கை எப்படி இருக்கும்?
மறக்கப் போவது உறுதி. அதிலிருந்து தன் நினைவுகளை எப்படிக் காப்பது என யோசித்தவன், நினைவுகள் அனைத்தையும் அவன் கைப்பட எழுத ஆரம்பித்தான். புகைப்படங்கள், அவன் எழுத்துக்கு வலு கொடுத்தது. மருத்துவர் மறதியைப் பற்றிக் கூறிய பின் முழு நேர வேலையாக இதைத் தான் செய்து கொண்டிருக்கிறான்.
கைப்பேசி இசைத்தது. கையிலிருந்த திருமண அழைப்பிதழைத் தேநீர் மேசையின் மீதிருந்த நினைவு புத்தகத்தினுள் வைத்தான். கைப்பேசி ‘பாஸ் காலிங்’ என்று விடாது சிணுங்கிக் கொண்டே இருந்தது. வேலையை விட்ட பின்னும் இவர் விடமாட்டேன் என்கிறாரே என எண்ணிக் கொண்டே, “சொல்லுங்க தல” என்றான்.
“டேய்… என் பையன் கல்யாணத்துக்கு உனக்கு பத்திரிக்கை வச்சேன் தான? ரேண்டு நாள் முன்னாடியே வர சொன்னேனா? எங்க போன? இன்னைக்கு ஹல்திக்கு ஏன் வரல?” என எடுத்ததும் ரகுவின் மீது பாய்ந்தார்.
ஐந்து நாளுக்கு விழாவை வைத்தது போதாதென்று, இரண்டு நாள்கள் கொசுறா? “ஏழு நாளுக்கு எங்க பாஸ் போவேன்? கல்யாணத்துக்குக் கண்டிப்பா வரேன் பாஸ்” என்றான், நெற்றியை விரலால் கீறிக் கொண்டே.
“வீர்… விளையாடாத. லீவ் இல்லன்னு கதை கூட உன்னால சொல்ல முடியாது. வேலைய விட்டுட்டு தாத்தாவோட தோட்டத்த தான பார்த்துட்டு இருக்க? வரதுக்கு என்ன டா? சும்மா சாக்குப் போக்கு சொல்லாம, வந்து சேரு” எனக் காதில் ரத்தம் வரும் வரை பாடி தீர்த்தார்.
அவருக்கு நேரம் இருக்கிறது. பணம் இருக்கிறது, அவற்றை எப்படி செலவு செய்வது என அவருக்குத் தெரியவில்லை போலும், வடகத்தியர் போல் ஹல்தி, சங்கீத், மெஹந்தி என என்னென்னவோ வரிசையாக விழா வைத்திருக்கிறார். ஆனால் ரகுவிற்கு நேரம் இல்லையே. கிடைக்கும் நேரம் முழுவதையும் அவள் நினைவுகளில் மூழ்கி இருக்க மனம் விரும்புகிறது. இவருக்குச் சொன்னால் புரியுமா?
எழுத வேண்டும், அவன் வாழ்வின் ஒவ்வொரு அழகான தருணங்களையும் அதன் உணர்வு மாறாது எழுத வேண்டும். எழுதும் ஒவ்வொரு வார்த்தையிலும் அவன் யசோவின் மீதான பாசத்தை, ஆசையை, பெருங்காதலை கொட்ட வேண்டும். விட்டுப் போன கனவுகளை, அவள் விருப்பங்களை எல்லாம் எழுதி வைக்க வேண்டும். இதற்கிடையே இவரின் மகன் திருமண வைபோகம் அவசியமா?
எப்படி இவரிடம் இருந்து தப்பிப்பது என யோசித்தவனுக்குள் ஒரு மாற்றம். இப்படியான நெருக்கமான நட்பை மீண்டும் அவன் எப்பொழுது உணருவான்? சட்டென அங்குப் போக முடிவெடுத்தான்.
“பாஸ் பாஸ்… நிறுத்துங்க பாஸ். காதுல ரத்தம் வருது. இதுக்கு மேல பாடி தாங்காது. இங்க தான், கூர்க்ல இருக்கேன். எதையும் மறக்கல, நாளைக்கு முதல் ஆளா வந்து நிக்கிறேன்” என்று அவரை மலை இறக்கினான்.
“முன்னாடியே சொல்றதுக்கு என்ன டா?” என்றவர் சலுகையாக்கக் கோபித்து, உரிமையாக மீண்டும் ஒரு முறை அழைத்து வைத்தார். அது அப்படிதான்… ரகுவோடு பழகுபவர்களுக்கு அவன் என்றுமே ஸ்பெஷல்.
மீண்டுமாக ரகு அமர்ந்தான். மறுநாள் மதியம் வரை அவன் எழுத்து நீண்டது. மயிலிறகாய் கனத்த நோட்டு புத்தகம், பல கதைகளோடும் புகைப்படங்களோடும் ரகுவின் மனம் போலவே கனம் கூடியிருந்தது.
முன்மாலை பொழுதில் அறையை காலி செய்தான். இதே கூர்கில் தான் திருமணம் என்றாலும் இங்கிருந்து தினமும் போய் வர முடியாது என்பதால் ரகு இடத்தை காலி செய்தான். கிளம்பியபின், தான் எங்குச் செல்ல வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. அவர் கொடுத்திருந்த பத்திரிக்கையை பெயருக்காகவேனும் திறந்து பார்த்திருக்கலாம். எங்கு, எப்பொழுது என எந்த விபரமும் தெரியவில்லை. தோழனுக்கு அழைத்து, “லொக்கேஷன அனுப்பு டா” எனக் கேட்டு, விழா ஏற்பாடாயிருந்த இடத்தின் அருகே இருந்த நட்சத்திர விடுதி ஒன்றில் அறையை புக் செய்தான்.
விழா துவங்க நேரம் இருந்தது. சற்று நேரம் ஓய்வெடுத்து, குளித்து, வழியில் வாங்கி வந்த புது உடைக்குள் தன்னை புகுத்திக் கொண்டான்.
சுபிக்ஷா மணப்பெண் என்றதுமே ரகுவின் பார்வை இடத்தை ஆராய்ந்தது. திருமணத்திற்கு ஒரு வாரம் முன் சுபிக்ஷாவின் திருமணம் இருப்பதால் கூர்கை பார்க்க முடியாது என யசோ விட்ட கண்ணீரில் மூழ்காது இருக்கத் தானே, அவர்களது தேனிலவை இங்குக் கொண்டாட முடிவெடுத்திருந்தான். நீண்ட பெருமூச்சு வந்து போனது.
இரவானது விழா நிறைவு பெற. வாரக் கடைசி என்றதால் அவனோடு வேலை செய்த பலர் வந்திருக்க, கடந்து சென்ற நிமிடங்கள் வேகமாகவே கடந்திருந்தன.
“என்ன கூட்டம்? அரேஜ்மென்ட்ஸ், பூட் எல்லாம் நல்லா இருந்துது. லீவ் கிடைச்சா இப்படியே அஞ்சு நாளும் டேரா போட்டிருப்பேன். கல்யாணத்துக்கு லீவ் கேட்டதுக்கு ‘உனக்கா கல்யாணம்?’ன்னு கேட்டான். அதுதான் இன்னைக்கு வந்தேன். சரி டா மச்சான்… நான் கிளம்பறேன். நீ எப்பிடி… நாளைக்கும் வர்றீயா வீர்?” அவனோடு வேலை பார்த்த தோழன் கேட்டான்.
“இல்ல… கல்யாணத்தன்னைக்கு தலை காட்டிட்டு போவேன்” என்றான் இவன்.
இவர்கள் ஓர் ஓரமாகப் பேசிக் கொண்டிருக்க, “நீங்க ரிஷி தான?” என ஒருத்தி வந்தாள். கடந்த மூன்று மணி நேரத்தில் இது நான்காவது முறை இப்படி யாராவது ஒரு பெண் வந்து அவனை எங்கோ பார்த்திருப்பது போல் கூறுவதும், பேச்சு கொடுப்பதும், பேசி இவன் தகவல்களை வாங்க முயல்வதும் என்பதால், வந்தவளை ஒரு பார்வை பார்த்தான். அவ்வளவு தான். பின், மீண்டும் அவன் தோழனோடு பேச்சைத் தொடர்ந்தான்.
‘பெரிய இவன்…’ வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டே அவள் சென்றுவிட, “என்ன டா செய்ற? அவ பேச்சு கொடுத்தா… நீயும் பேச்சு கொடுக்கணும். அப்பறம் அப்படியே தள்ளிட்டு போகணும். இப்படி பண்ணின, கடைசி வரைக்கும் மொரட்டு சிங்கிள் தான் நீ” என அட்வைஸ் மழை பொழிந்தான் தோழன்.
“நீ இப்போ தான வந்த. அது தான் புரியாம பேசற. ரொம்ப நேரமாவே இது போயிட்டிருக்கு. அனேகமா பெட் கட்டி விளையாடுறாங்களா இருக்கும். கண்டுக்காத” என்றான் ரகு.
நேரம் சென்றது. ரகு அவ்வப்போது கைப்பேசியை பார்த்தான். யசோவை அழைத்தான். எடுப்பார் இல்லாது அழைப்பு முடிந்தது. கண்கள் நாலாபுறமும் சுற்றித் தோற்றன.
“சொன்னதும் திரும்பாத வீர். அந்த பொண்ணுங்க உன்ன காட்டி காட்டி ஏதோ சொல்றாங்க. நீ சொன்னது சரி தான். உன்ன வச்சு கேம் விளையாடுறாளுங்க.” என்றவன், “அடுத்து ஒருத்தி வரா. கொஞ்சம் நேரம் நீ விளையாடு…” எனக் கண்ணடித்தான்.
“அப்படிங்கிற? செஞ்சுடுவோம்” எனச் சிரித்தான்.
“ஹாய்” என ஒருத்தி வந்தாள், முகம் கொள்ளா புன்னகையோடு.
முகம் மலர்ந்த ரகு, “ஹாய்” என்றான். காற்று தான் வந்தது.