Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

55 SK_UPEMM 55.2

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
அத்தியாயம் 55.2 

“ஹாய்” என ஒருத்தி வந்தாள், முகம் கொள்ளா புன்னகையோடு.

முகம் மலர்ந்த ரகு, “ஹாய்” என்றான். காற்று தான் வந்தது.

“லுக்கிங் ஸ்மார்ட்” என்றாள். “தேங்க்ஸ்” என்றவன் பார்வையில் எந்த மாற்றமும் இல்லை.



Advertisement

தோழன் சிரித்தான். “வரேன் டா… கீப் இன் டச்” என்றவன் பதிலை எதிர்பார்க்காது கிளம்பினான்.

“நான்? லெகங்கா எனக்கு நல்லா இருக்கில்ல?” என்றவள் அவன் முன் தன்னை சுற்றிக் காட்டினாள்.

“ரெண்டு கண்ணு போதல”, என்றான் வற்றா புன்னகையோடே.

Advertisement

“வெளியில குளிர்” என்றவள், அவள் இடக்கையில் ஏந்தியிருந்த ஜேக்கட்டை அவனிடம் நீட்டினாள். அதை எடுத்தவன், எழுந்தான். அவள் போட உதவினான். 

Advertisement

“ஒரு வாக் போலாமா?” என தன் வலது கரத்தை நீட்டினாள். ஏதும் கூறாது அவன் இடது கரம் அவள் வலகரத்தைப் பிடித்தது. அதில் போதுமான அழுத்தம் இருந்தது. எந்த கேள்வியும் கேட்காது அவள் இழுப்புக்கு அவன் சென்றான். இருவருமாக வாயிலை நோக்கி நடக்க, மெல்ல அவள் உடலை வளைத்து பின் பக்கமாக நெளிந்து, தன் தோழிகளிடம் ‘எப்புடி?’ என வாயசைத்து, நமட்டு சிரிப்பைச் சிந்தினாள் யசோதரா.

“என்ன பெட்டா?” சிரித்தான்.

“ம்ம்ம் பக்கிங்க, நான் விரிச்ச வலையில விழுந்துட்டாளுங்க. உன் கூட பேசிட்டே வாசல் வரைக்கும் ஒண்ணா போனா, போனவளுக்கு ஒவ்வொருத்தியும் ஆயிரம் ரூபா தரணும். உன்ன ஈசியா நினைச்சு டிரை பண்ணி ஏமாந்துட்டாளுங்க” என வாய்விட்டு சிரித்தாள்.

Advertisement

சத்தமாகச் சிரிப்பவளைப் பார்த்தவன் பார்வையில் ஆசையும் நேசமும் கொட்டிக் கிடந்தது. அன்றும் சரி இன்றும் சரி, அவன் பேபியால் அவன் மீதான கோபத்தை இழுத்துப் பிடிக்க முடிவதில்லை.

“எப்படி இருக்க பேபி?” என வினவ, “நீ தான் சொல்லேன். நீ இல்லாம நான் எப்படி இருப்பேன்?” என்றவள், தொண்டையை செருமி, “நல்லா இருக்கேன்.” என்றாள்.

“சாரி டி” என்றான் ரகு.

“தப்புன்னு புரிஞ்சா சரி தான். எங்க எல்லாரையும் விட்டுட்டு ஓடிப் போன உன் மேல வருத்தம், கோபம், கொல வெறின்னு என்னென்னவோ இருந்துது. ஆனா இப்போ இல்ல.  உன் பக்கம் இருந்தும் யோசிக்கணும் தான… அப்படி யோசிச்சேன்.” என்றவளிடமிருந்து பெருமூச்சு வந்து போனது. மூக்கு வழியே பனிப்புகை வந்தது.

“நடந்த எதையுமே மாத்த முடியாது ரகு. எங்க கூட இருக்கணும்ன்னு தான வேலைய விட்டுட்டு வீட்டுக்கு வந்த? ஆப்பரேஷன தள்ளிப் போட்ட? அப்பறம் இங்க வந்து உக்காந்திருந்தா எப்படி? வீட்டுக்கு வா ரகு. யாரும் உன்னை எதுவும் கேக்க மாட்டோம். உனக்கு தோணும் போது கல்யாணம் பண்ணலாம். உனக்கு சரின்னு தோணும் போது ஆப்பரேஷன் பண்ணலாம். இப்போ வீட்டுக்கு போலாம் சரியா?”

“இப்போவேவா? உன் ஃபிரெண்ட் கல்யாணம்?”

“டேய்… கல்யாணம் முடிச்சுட்டு, அஞ்சு நாள் கழிச்சு ஒண்ணா ஊருக்கு போறோம்” என்றாள்.

என்ன கூறுவான்? “ம்ம்ம்” என்றான், மறுப்பு தெரிவிக்காது.

“நீ வேணும்னா பாரேன், சீக்கிரம் எல்லாம் சரி ஆகிடும்” அவன் கரத்தோடு தன் கரம் பிணைத்து அவனோடு நடக்க ஆரம்பித்தாள். பல கேள்விகள்… பல பதில்கள் எனச் சம்பாஷனை தடங்கலில்லாது அரங்கேறியது.

“இன்னைக்கு ரொம்ப ஸ்மார்ட்டா இருக்க ரகு. அவளுங்க விட்ட ஜொல்லுல நான் மூழ்கிடுவேன்னே நினைச்சேன்” எனச் சிரித்தாள். சுபிக்ஷாவின் விழாவில் ரகுவை சற்றும் எதிர்பார்க்கவில்லை யசோ. உள்ளே நுழைந்த பத்தாவது நிமிடமே ரகுவை பார்த்துவிட்டாள் யசோ. அவன் கண்கள் அவளை அங்குத் தேடியதை மறைந்து நின்று ரசித்தாள். அவன் கிளம்ப ஆயத்தமாகவும் கண்ணாம்பூச்சி ஆட்டத்தை அவளே முடித்தும் வைத்தாள்.

அவன், அவள், கோர்த்திருந்த கரங்கள், யாருமற்ற நடைபாதை என அந்த இரவு அவர்களுக்கு ஏகாந்த இரவாக மாறிக் கொண்டிருந்தது. போட்டிருந்த ஜேக்கெட்டை மீறிக் குளிர் அவர்களது மேனியைத் தழுவியது.

“சில்லுன்னு இருக்கில்ல?” என்றவள், அவன் புஜத்தின் சூட்டை அவள் மேனிக்குள் இழுத்து கொண்டாள்.  சில்லென்ற காற்று இடைப்புக முடியாது மேலெழுந்து, அவன் கேசம் வருடிச் சென்றது.

‘நீங்களா?’ எனப் புன்னகைத்த நிலாப்பெண், அவளை மூடியிருந்த போர்வையைக் களைந்து வெளிச்சத்தை அள்ளி ஊற்றினாள்.

இளமையான இரவு. பாதை நீண்டிருந்தது. வெளிச்சத்தை அள்ளி தெளிக்க நிலா மங்கை தயாராக இருந்தாள். இருவரும் சேர்ந்து நடக்க வேண்டும்… அவ்வளவு தான். ஓர் உயிர் ஈருடலாக இருந்த இருவருக்கும் அதில் விருப்பம் என்பதால் கசப்பை எல்லாம் மறந்து துள்ளலோடு ஆள் அரவமற்ற சாலையில் நடந்தனர்.

“பீ பீ பூ ரகு” என்றாள் துள்ளலாக.

உயரத்தில் கொத்து கொத்தாகத் தொங்கிக் கொண்டிருந்த வெண் மலர்களைப் பார்த்தவன், “மரமல்லி… பன்னீர் பூன்னு ரெண்டு பேரு இருக்கு. அது என்ன பீ பீ?” எனக் கேட்டான்.

“பிச்சு தா… சொல்றேன்” என்றாள்.

குதித்து ஒரு கிளையைக் கீழே இழுத்து ஆட்டினான். தூரலின் சுவட்டை ஏந்தியிருந்த மரக்கிளை சாரலால் அவர்களைத் தீண்டியது. “டேய்… குளிருது டா” எனத் துள்ளி குதித்தாள். ரகுவோடு இப்படியான ஒரு இரவை எதிர்பார்த்தீரா யசோவின் இதயம் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்க, அந்த துள்ளல் அவளிடம் நன்றாகவே தெரிந்தது.

யசோவின் கைப்பேசி இசைக்க, அதை எடுத்தவள், “எனக்கு வெயிட் பண்ண வேண்டாம். நீங்க ரூமுக்கு போங்க டி. நாளைக்குப் பார்ப்போம்” என ஒரே மூச்சாகக் கூறி முடித்தாள்.

கைப்பேசியை அணைத்தவள், “இன்னைக்கு உன் கூடத் தான். தனி ரூம் தான? ரூம்ல எனக்கு இடம் இருக்குல்ல?” எனக் கேட்டாள்.

“பதில் வேணுமா?” எனக் கேட்டவன், நீள நீளமான பன்னீர்ப் பூக்களைக் கொத்தாக ஏந்தி நின்றிருந்தான்.

“ப்ச் ப்ச்” இல்லை என்பது போல் தலையசைத்தவள், அவன் கரத்திலிருந்த குட்டி பூங்கொத்தின் வாசத்தை ஆழ உள்ளிழுத்தாள். “சூப்பர் வாசம்” என்றாள். அவனுக்குச் சுத்தமாகப் பிடிக்காத வாசம் என்பதை மறந்து, “ஆமா” என்றான்.

“தேங்க்ஸ் டா” என்றவளிடம் கொடுத்தவன் இன்னும் சிலதைப் பொறுக்கி எடுத்து இவள் விரிந்த கூந்தலில் சொருகிக் கொண்டே, “கார்மேகம் நடுவே நட்சத்திரக் கூட்டம். கவிதை எப்படி?” எனப் புருவம் உயர்த்திக் கேட்டான். ரசித்தாலும், “சகிக்கல” என்றாள் இதழ் சுழித்து.

“பொய்… வாயத் திறந்தாலே பொய்” எனப் பூவை ஊதிக் கொண்டிருந்தவளின் மென் இதழை இரு விரல்களால் இழுத்து மென்மையாகக் கசக்கினான்.

“விடுடா” என அவன் கையை தள்ளிவிட்டு, பூவில் இசை மீட்டுவதில் கவனத்தைச் செலுத்த, அவன் கவனம் முழுவதும் அவள் சுருட்டி தொங்க விட்டிருந்த கூந்தலை அலங்கரிப்பதில் சென்றது.

பூக்களைக் கூந்தலில் சொருகி முடித்தவன் பார்வையில் அத்தனை ரசனை. ரசனையைக் காட்டாது, “வனதேவத மாதிரி இருக்க டி” கேலி செய்து சிரித்தான். அவன் சிரிப்பு அவளையும் தொற்றிக்கொள்ள “சிரிச்சு பயமுறுத்தாத தெய்வமே” என அதற்கும் கேலி செய்தான்.

“நேரம் டா” என அவனை இடித்துக் கொண்டே நடந்தாள். பத்து நிமிட நடைப் பயணம் அவன் தங்கியிருந்த விடுதி வாசலில் முடிந்தது.

மொட்டை மாடியில் ஒரே கட்டிலில் பல இரவுகளை கழித்தவர்களுக்கு ஒரே அறை, ஒரே கட்டில் பெரிய விஷயமாகத் தெரியவில்லை.  திறந்த வெளியும், மூடிய அறையும் ஒன்றல்ல என இவர்களுக்கு யார் கூறுவது?

அறைக்குள் நுழைந்தவள் அவசர அவசரமாகக் கழிவறைக்கு ஓடினாள். முகம் கழுவி, அதைத் துடைத்துக் கொண்டே வந்தவள், “குளிருக்கு அவசரமா வந்துடுச்சு” என வெட்க சிரிப்பு சிரித்தாள். என்னவோ எதற்கும் சிரிப்பு வந்தது.

“உன்ன இன்னைக்கு பார்ப்பேன்னு சத்தியமா எதிர்ப்பார்கல. இந்த சர்ப்ரைஸ்… எக்சைட்மென்ட்… என்னவோ பண்ணுது” என அதற்கும் அசட்டு சிரிப்பைச் சிரித்து வைத்தாள்.

யசோவின் ஒவ்வொரு அசைவில் இருக்கும் அர்த்தத்தை அறிந்தவனுக்கு அவள் தவிப்பு புரியாதா என்ன? ‘வா’ என்பதாக அவன் கை நீட்ட, வாகாக வந்து அவனுக்குள் அடங்கி நின்றாள். கண்கள் கரித்துக் கொண்டு வந்தது. அவன் முன் அழவே கூடாது என அவள் எடுத்திருந்த சத்திய பிரமாணத்தை மீறிவிடுவாளோ எனப் பயமாக இருந்தது.

“உன்ன ரொம்ப மிஸ் பண்ணினேன் லகு. உன் வருத்தம் புரியாம இல்ல. கூடவே இருந்து என்ன வேணுமோ சொல்லு. கேட்டுகிறேன். இப்படி விட்டுட்டு போகாத லகு. சத்தியமா தாங்கவே முடியல. இன்னைக்கு உன்ன பாக்குற வரைக்கும் உயிரே இல்லாத உடல் மாதிரி நடமாடிட்டு இருந்தேன் தெரியுமா? வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு இருக்கேன்னு அம்மா தான் பேக் பண்ணி அனுப்பி வச்சாங்க.” அவள் பேசிவிட்டாள். அவனால் பேச முடியவில்லை.

அவள் நிலை ரகுவிற்கு புரியாது இல்லை. மெல்லத் தலையை வருடினான். “சாரி… என்னைப் பத்தி மட்டுமே யோசிச்சு… உன்ன ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன். காம்பன்சேட் பண்ண, இந்த அஞ்சு நாளும், என்னோட பகல் இரவு முழுசும் உனக்கு. சரியா?” என்றவனை விழி விரித்துப் பார்த்தாள்.

நெற்றியோடு நெற்றியை முட்டி, “நம்பு டி முட்டக் கண்ணி. வாழ்நாள் பூர எப்போ நினைச்சாலும், அடிவயிறு வரை தித்திக்கிற நினைவுகள படைப்போம்” எனப் புன்னகைத்தான்.

“ஹனிமூனுக்கு ஒரு ரிகர்சல்லா? நல்லா தான் இருக்கு” என்று கூறி சிரித்தவள், தலையில் ஒரு கொட்டும் வாங்கிக் கொண்டாள்.

ரூம் சர்வீசின் உபயத்தால், சுட சுடத் தேநீர் வந்தது. “கூர்க் வந்து காபிக்குப் பதிலா பிளாக் டீ குடிக்கிற ஒரே ஆள் நம்மளாதான் இருப்போம்.” என்றாலும் சூடான பானம் அந்த குளிருக்கு நன்றாகவே இருந்தது.

பால்கனி, ஒற்றை போர்வைக்குள் அவன், அவன் கரத்தினுள் அவள், இருவருக்குமாக ஒரு கோப்பையில் சூடான தேநீர் என அவளின் கனவை நிறைவேற்றிக் கொண்டாள். இருவருக்கும் மனம் லேசாகவும் கனமாகவும் இருந்தது. இருவருக்குமே பேசத் தோன்றவில்லை. அந்த அணைப்பும் கதகதப்புமே போதும் என்றிருந்தது.

ஊர், இருள் போர்வையைப் போர்த்தித் தூங்கியிருந்தது. மெத்தையில் விழுந்தனர். ஊர்க் கதை பேசினாள். தாத்தா பாட்டி என ஆரம்பித்து ஏதேதோ பேசினாள். அவளின் விரல்களோடு விளையாடிக் கொண்டே கதை கேட்டான். யசோவை, அவள் வாசனையை, அவள் நெருக்கத்தை அவனின் ஒவ்வொரு அணுவிலும் சேமித்துக் கொண்டான், ரகு.

மூளை எதை மறந்தாலும், கை கொண்டு உண்ண… வாய் கொண்டு பேச… கால் கொண்டு நடக்க மறக்கப் போவதில்லை எனும்போது யசோவும், அவளோடான நினைவுகளும் அவன் மசில் மெம்மொரிக்குள் இறங்கியிருக்காதா என்ன? மனம் எதை எதையோ அசைபோட்டது. கதை பேசிக் கொண்டிருந்த இரு ஜீவன்களும் ஒரு கட்டத்தில் உறங்கியிருந்தன.

நடு நிசி முழிப்பு வந்தது யசோவிற்கு. முத்து, மணி என வேலைப்பாடு கொண்டிருந்த மேலாடை தூக்கத்தைக் கெடுத்தது. மங்கலான வெளிச்சம் அறையை நிறைத்திருந்தது. முதுகைக் காட்டி அருகில் படுத்திருந்தவனைத் தீரா ஆசையோடு பார்த்தாள். குளிருக்கு மீண்டும் கழிவறைக்குச் சென்று வந்தாள்.

கழிவறைக்குச் சென்று வந்தவளுக்கு தூக்கம் காணாமல் போயிருக்க, பால்கனி கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்றாள். சாலை விளக்குகள், தினம் தினம் இது தானே வேலை என்பது போல் ஏனோதானோவென வெளிச்சத்தை கக்கி கொண்டிருந்தன. கருநீல வானில் மேகம் அதி வேகமாக எங்கோ சென்றுகொண்டிருக்க, நிலாவைச் சுற்றி வட்ட வடிவம் தோன்றுவதும் மறைவதுமாக வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தது. ஆள் அரவமற்ற சாலையை எவ்வளவு நேரம் பார்ப்பது? சத்தம் செய்யாது அறைக்குள் நுழைந்தாள். மேசை மீதிருந்த விளக்கை உயிர்ப்பித்தாள்.

போட்டிருந்த லெகெங்கா கனத்தது. அதை கழட்டிப் போட்டவள் உள்பாவாடையோடே ரகுவின் பெட்டியை நோட்டம் விட்டாள். அவனுடைய டி-ஷர்ட் தொளதொளவென இருந்தாலும் போட்டுக்கொள்ள நன்றாக இருந்தது. ஜீன்ஸ், ஷாட்ஸ் என இருந்த இரண்டுமே இடுப்பில் நிற்காது என்பதால், போட்டிருந்த பாவாடை போதும் என்ற முடிவுக்கு வந்தவள் பெட்டியை மூடப் போகும் தறுவாயில் அந்த நோட்டு புத்தகம் அவள் கண்களைக் கவர்ந்தன. அவள் அவனுக்குக் கொடுத்த போது கன்னிப்பெண்ணின் வயிற்றைப் போல் இருந்த நோட்டு புத்தகம் இன்று, நிறைமாத கர்ப்பிணியாய் மாறியிருந்தது.

“நீ எப்படி வெயிட் போட்ட?” என கேட்டுகொண்டே அதைக் கையில் எடுத்தாள். எடுத்தவள் அதைப் புரட்டினாள். புரட்டியவள் நோட்டு புத்தகத்தோடு அமர்ந்தாள்.

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!