Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

55 SK_UPEMM 55.3

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
அத்தியாயம் 55.3

“நீ எப்படி வெயிட் போட்ட?” என கேட்டுகொண்டே அதைக் கையில் எடுத்தாள். எடுத்தவள் அதைப் புரட்டினாள். புரட்டியவள் நோட்டு புத்தகத்தோடு அமர்ந்தாள்.

ரகுவின் வாழ்க்கை வரலாறு வார்த்தைகளால் வர்ணிக்கப் பட்டிருந்தது. அவன் குழந்தைப் பருவத்தில் ஆரம்பித்து அவன் வாழ்வில் நடந்த சிறு சிறு சம்பவங்களையும் எழுதியிருந்தான். தலையில் முளைத்திருக்கும் கட்டியைப் பற்றி, அதை எடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்தையும் எழுதியிருந்தான். அதை எடுக்காவிட்டால் இறந்து போவான்… எடுத்தால் பழைய நினைவுகளை இழந்து போவான் என்று எழுதி இருந்தான். 

‘என் பேபியை நான் மறந்தால்… அது இறந்ததுக்கு சமம்’ என்ற வரியில் மனம் துடிக்க மறந்து போனது. என் ரகுவால் என்னை மறக்க முடியுமா? மருத்துவர் என்ன கடவுளா? மறந்திடுவானோ? என் ரகு என்னை எப்படி மறக்கலாம்? ‘நீ யார்?’ என்ற பார்வையை அவன் விசினால், அதைத் தாங்கத்தான் முடியுமா? நோட்டு புத்தகத்தை மூடி மேசையின் மீது வைத்தவள் அமைதியாக மெத்தையில் படுத்தாள்.



Advertisement

கண்களை மூடி அவள் வாழ்வை அலச, அதில் எங்கும் எதிலும் ரகு இருந்தான்.  தத்தி தத்தி நடந்த காலக் கதைகள் அவளுக்கு நினைவில் இல்லை என்றாலும் ரகு அவை அனைத்தையும் எழுதி இருந்தான். நினைவு தெரிந்த நாளிலிருந்தே அவன், அவள் வாழ்வில் இருந்திருக்கிறான். ‘லகு பென்சில் நேணும்’ என ஆரம்பித்து ‘ரகு, பிரியட்ஸ் டா, பேட் வாங்கிட்டு வாயேன்’ வரையிலும் ரகு அவள் வாழ்வில் இருக்கிறான். யசோ என்றாலே அதில் ரகு அடக்கம். அப்படியிருக்க, அவன் தன்னை மறந்து போனால்… நினைக்கவே முடியவில்லை.

அறுவைசிகிச்சைக்குப் பின் அவன் இந்த புத்தகத்தை படித்து, அதனால் அவன் தன்னை காதலித்தால்… நினைக்கவே பிடிக்கவில்லை. அப்பொழுதும், இதே காதலோடு மீண்டும் என்னை அவனால் காதலிக்க முடியுமா? அவன் காதல் இல்லாத ஒரு வாழ்வு? நினைக்க நினைக்க, யசோவிற்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

அவளைக் கொஞ்சும் ரகு, அவளைச் சீண்டும் ரகு, அவளோடு உருண்டு புரண்டு சண்டை இடும் ரகு, தலையில் அவ்வப்போது செல்லமாகக் கொட்டும் ரகு, அவளுக்காக மலையையும் புரட்ட யோசிக்காதா இந்த ரகு… இனி அவள் வாழ்வில் இருக்க மாட்டானே.

Advertisement

கட்டிலின் மறுபுறம் தனக்கு முதுகைக் காட்டி படுத்திருப்பவனைக் கண்ணீரோடு பார்த்தாள். அழுகையை அடக்கவே முடியாது போக, மெல்ல நகர்ந்து அவன் முதுகோடு முகம் புதைத்தாள்.

Advertisement

அழுகை மட்டுப்படும் என நினைக்க, அதுவோ இப்போதைக்கு நான் அடங்குவதாக இல்லை என அறிக்கை விடுத்தது. தன் முதுகு ஈரமாவது தெரியாது தூங்கும் ரகம் இல்லை என்பதால், “பேபி?” என அழைத்துக் கொண்டே திரும்பிப் படுத்தான் ரகு.

முதுகோ… மார்போ… எதுவாக இருந்தால் என்ன? முகம் புதைக்க நீ இருந்தால் போதும் என நினைத்திருப்பாள் போலும்… மார்பை ஈரபடுத்தும் வேலையில் மும்முரமாக இறங்கினாள்.

நேரத்தைப் பார்த்தான். இரண்டு முட்களும் தங்களைப் போலவே ஒட்டிக் கொண்டிருந்தன. “என்ன டி? பேய பாத்தியா என்ன?” என்றவனை, குத்தவா? கொல்லவா என முறைத்தாள் பெண். முறைப்பினோடே கண்ணீர் வழிந்தது.

Advertisement

“எவ்வளவு நேரமா அழுற? முதுகு குளுருது டி” என்றவன் போட்டிருந்த டி-ஷர்ட்டை கழட்டினான். “தொடச்சுக்கோ” என முகத்தை அவன் சட்டை கொண்டு துடைத்தான்.

“என்னன்னு சொன்னா தானே தெரியும்? கனவு ஏதாவது கண்டியா? தண்ணி குடிக்கிறியா?” எனக் கேட்டுக் கொண்டே போனவன் கண்கள் கட்டில் அருகே இருந்த மேசையைத் தழுவ, பார்வையில் விழுந்தது அவன் சுயசரிதை. வறண்ட தொண்டையில் இல்லாத எச்சிலை மெல்ல குடித்திறக்கினான்.

காதலின் தவிப்பில் மட்டும் தான் உருவமில்லாத உருண்டை உருளுமா என்ன? காதலியின் தவிப்பிலும் அவன் தொண்டையில் அந்த உருண்டை அடைத்தது.

“நூறுல ஒரு பங்கு பிழைக்காம போயிடலாம்ன்னு எழுதியிருக்க ரகு” எனத் தேம்பினாள்.

குரல் கரகரக்க, “பிழைச்சிடுவேன் டி.” என்றான்.

“நிஜமா?”

“சத்தியமா… உனக்காகச் சத்தியமா திரும்ப வருவேன் பேபி”

“ஏன் ரகு இந்த சினிமால வர மாதிரி, ஆக்சிடென்ட்ல தலை அடிபடாம, உயிர் போனவங்களோட ஹெல்தியான மூளைய உனக்கு டிரான்ஸ்பிளான்ட் பண்ண முடியாதா?” மூக்கை அவன் சட்டையில் துடைத்துக் கொண்டே கேட்டாள்.

“முடியாது பேபி. பில்லியன் கணக்கான நியூரான்ஸ், பிளட் வெசல்ஸ், ஃபேட், கார்ப், அன்ட் 70% ஃபிளூயிட் தான் மூளை. அதை ஒருத்தர் மண்டையோட்டுல இருந்து ஸ்கூப் பண்ணி வேற ஒருத்தர் தலையில டேமேஜ் ஆகாம பொருத்தி, அத செயல் பட வைக்க முடியாது பேபி.

அப்படியே அது சாத்தியமானாலும் அந்த புது மனுஷன் நானா இருக்க மாட்டேன் பேபி. என் உடம்புல வேற ஒருத்தன் சிறைப்பட்டு, கண்ணாடியில தெரியற ரகுவாவும் இல்லாம மூளைக்கு சொந்தக்காரனான அவனாவும் வாழ முடியாம ரொம்ப கஷ்டப்படுவான் பேபி. உனக்கும் நாளைடைவுல என் முகத்தைக் கொண்டு வேற பழக்க வழக்கத்தோடு இருக்க அவனைப் பிடிக்காது”

“உன் உடம்ப எப்படி ரகு நான் வெறுப்பேன்”

“என் உடம்புல நீ என்னை தேடினா நான் கிடைக்க மாட்டேன். அப்போ என்ன ஆகும்ன்னு நினைக்கிற? நடக்காத… நடக்கவே முடியாத ஒண்ண நினைச்சு கவலபட உன்னால தான் பேபி முடியும்” மெல்லத் தலையில் கொட்டினான்.

“வேற வழியே இல்லியா டா?”

“இல்ல டி”

“என்னை மறந்துடுவியா ரகு?” மீண்டும் அழ தயாரானாள் ரகுவின் யசோ.

“அப்படி தான் சொல்றாங்க. டியூமர், ஃப்ரன்ட் லோப்ல இருக்கனால, லாங் டர்ம் மெம்மொரி லாஸ் (long term memory loss) இருக்கும்ன்னு சொல்றாங்க”

“ரகு” எனப் பெண் தேம்பித் தேம்பி அழ, “பேபி… பிளீஸ் அழாத. சர்ஜரி பண்ணினா தான் பிழைப்பேன். பிழைச்சா தான காலம் பூரா உன்னால என்னோட சண்டை போட முடியும்.” என முகம் உயர்த்தி கண்களைத் துடைத்தான்.

“ஹாஸ்பிட்டல்ல நான் உன் கூடவே இருப்பேன். யார் என்ன சொன்னாலும் உன் பக்கத்துல நான் தான் இருப்பேன் சரியா?”

“பின்ன… என் பாதி உயிர் என் கூட இல்லாமலா?”

“நான் என்ன உன் உயிரா?”

“என் எல்லாமே நீ தான் யசோ மா. நீ மட்டும் தான். நேத்தும்… இன்னைக்கும்… நாளைக்கும். என் வாழ்நாள் பூரா இந்த மனுஷனோட மனுஷி நீ மட்டும் தான்”

அழுகையோடே, “அப்பறம் ஏன் டா கல்யாணத்த நிறுத்தின?” என ஏக்கம் வழியக் கேட்டாள்.

“கடைசியா எங்கிட்ட இருந்து நீ தப்பிக்க ஒரு சான்ஸ் கொடுத்தேன். நீ தலையைக் கொடுத்தே ஆவேன்னு நின்னா என்ன பண்றது?”

“போதையே இல்லாம பிணாத்தற லகு. நீ தான் என்ட்ட மாட்டிகிட்ட” எனப் புன்னகைத்தாள்.

நெற்றியில் இதழ் பதித்தவன், “இந்த இதயம் துடிக்க வரைக்கும், நீ… நான் சேர்ந்தே இருப்போம். நம்பு” என்றான்.

அவன் மார்பில் அவள் இதழை ஒற்றி எடுக்க, “பூ மோதி பாறை வெடிக்குமா கண்ணே? இங்குப் பூகம்பம் ஏற்படுகிறதே பெண்ணே” எனக் கூற, “டேய்…” என்றாள் மிரட்டலாய்.

“கூசுது டி… அத தான் அப்படிச் சொன்னேன்” புன்னகைத்தான்.

“இதுக்கேவா” என்றவள், அவனைக் கூச்சத்தின் உச்சத்திற்குக் கொண்டு செல்ல, “விடுடி பிசாசே” என்றான். “பிசாசு தின்னு ஏப்பம் விட்டுட்டுத் தான் விடும்” என்றாள். விளையாட்டு தொடர்ந்தது.

அறையைச் சிரிப்பலை நிறைத்தது.

“கண் விழிச்சதும்… சினிமால வர மாதிரியே, ‘எங்க இருக்கேன்? நான் யாரு? நீ யாரு’ன்னு கேப்பியா?” அவள் சிரிக்க, “அப்படி தான் போல” என அவனும் சிரித்தான். இருவரின் சிரிப்பும் கண்ணீரில் முடிந்தது.

“எ..என்னை மட்டுமாவது மறக்காத லகு” என்றாள் அவனைக் கட்டிக் கொண்டு.

குலுங்கும் முதுகை ஆதரவாகத் தடவிக் கொடுப்பவனுக்கு மட்டும் அவளை மறக்க ஆசையா என்ன? “டிரை பண்றேன் டி” என்றான் அழுகையை அடக்க முடியாது.

“நினைவுகள் போனா என்ன? உனக்காக இந்த உடம்பும் மனசும் என்னைக்கும் இருக்கும் பேபி.”

“ம்ம்”

“நம்ம காதல்ல மறந்து இந்த உடம்பு மட்டும் உன் கிட்ட வரும்… அப்போ என்னை வேண்டாம்ன்னு போகக் கூடாது சரியா?”

“ல்லகு” என்றவளுக்கு ஐயோ என்றிருந்தது.

“என் பழக்கவழக்கம் மறலாம். மூளையில கை வைக்கப்போறாங்க… என் முகம் இப்போ மாதிரி இல்லாம உனக்கு பிடிச்ச வசீகரத்த இழக்கலாம். கைக் கால் செயல்பாடு குறையலாம். நான் நானாவே இல்லாம போகலாம்… என்னை வேண்டாம்ன்னு சொல்ல மாட்டியே?”

“என்ன கேள்வி இது ரகு?”

“ம்ப்ச்… பதில் சொல்லு”

“நீ அஷ்ட கோணத்துல இருந்தாலும், நீ தான் வேணும் எனக்கு”

“நூத்துல ஒரு சதவீதமா பிரெயில் இருக்க மெம்மொரி செல்ஸ் டேமேஜ் ஆகாம நினைவோட நான் திரும்பலாம். அப்படி நினைவு தப்பி போனாலும் இந்த நோட் புக்க படிச்சு எல்லா இன்பமான நினைவுகளையும் எனக்குள்ள திரும்பவும் கொண்டு வந்துடுவேன் சரியா?” என்றான்.

“ம்ம்” என்றவள் சற்று நெரம் கழித்து, “இதையும் எழுதிக்கோ” என மெல்ல அவன் இதழை தன் ஈர இதழால் ஒற்றி எடுத்தாள்.

“ஹூம்ம்…” கண் மூடி அந்த அழகான நொடியை உள்ளுக்குள் இறக்கினான்.

“’சில்லிட்ட ஈரத் தென்றல், ரோஜா இதழை வருடி சென்றது போல் இருந்தது அவளின் முதல் முத்தம்’ன்னு எழுதவா?”

கண்களில் குறும்பு கொப்பளிக்க, “முதல் முத்தமா?” எனவும், “இன்னைக்கு கோட்டாக்கு” எனச் சிரித்தான்.

“ஆழிப்பேரலையாக என்னை முத்தத்தால் அடித்து போட்டாள்’ன்னு எழுது” என்றவள் அவனை ஈர முத்தத்தால் புரட்டிப் போட்டாள்.

“இது ரொம்ப தப்பு டி” என்றான் அணைப்பை கூட்டி.

“எது?”

“சிங்கத்த சீண்டுறது”

“ஒரு ஊருல ஒரு சிங்கம் இருந்துதாம். அது கத…”

“அடிங்…” என்றவன் கை ஓங்க… அவள் உருண்டு புரள… அவன் அவளை இழுக்க, அவன் மேல் சிரித்துக் கொண்டே விழுந்தவள் அவன் விழிகளோடு தனதை கலந்தாள்.

‘என்ன?’ என்பதாக அவன் புருவம் உயர்த்த, “அ..ஐ லவ் யூ ரகு. என்னை விட… எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் ரகு.” என்றாள்.

என்ன முயன்றும் கண்கள் குளமாவதை இருவராலும் அடக்க முடியாது போனது. எத்தனை வருட பந்தம் தங்களது. இன்று வரை இருவரும் அவர்களது உணர்வுக்கும் உறவிற்கும் பெயர் வைத்துக் கொள்ளவில்லை என்றாலும், உனக்கு நான், எனக்கு நீ என்பது இருவருக்குள்ளும் ஆழப் புதைந்த உணர்வு.

“ஏன் டி… இப்போ?” தவிப்பாய் வந்து விழுந்தது வார்த்தைகள்.

எத்தனை முறை கேட்டிருப்பான், ஒரே ஒரு முறை அவள் வாய் வழி அவள் காதலைக் கேட்க. அப்பொழுதெல்லாம் கூறாதவளுக்கு இப்பொழுது மட்டும் என்னவாம்?

“எழுதிக்கோ ரகு. நான்… நான் உன்ன உயிரா காதலிக்கேறேன்னு நான் சொன்னதா எழுதி வச்சுக்கோ. ரகு இல்லாம யசோ இல்ல. யசோ இல்லாம ரகு இல்லன்னு கொட்டை எழுத்துல எழுதி அன்டர்லைன் பண்ணி வைக்கணும் சரியா?” என்றவளை தன்னுள் இறுக்கிக் கொண்டான்.

“கண்டிப்பா எழுதறேன் பேபி… நீ இருக்க இந்த நெஞ்சில ஆழமா… அழுத்தமா எழுதி வைக்கிறேன். என்னோட உயிர் நீ தான்னு… எழுதி வைக்கிறேன். இந்த இதயம் துடிக்கிற வரை உன் கூட மட்டும் தான்னு எழுதி வைக்கிறேன். வித் யூ, அன்ட்டில் தி சைலன்ஸ் (With you, until the silence)” என்றான்.

அதன்பின் இருவருமே பேசிக்கொள்ளவில்லை. “தூங்கு மணி மூணாகுது” என்றவனின் தலை கோதலில் உறக்கம் பெண்ணை தழுவியிருக்க, அழுகையும் சிரிப்பும் ஒருவழியாக அடங்கியது. தன் அருகில் கண்ணீர் கரையோடு நித்திரையில் இருப்பவளை அமைதியாகப் பார்த்துப் படுத்திருந்தான் ரகு. தூக்கம் வர மறுத்தது.

எதிர்காலம் பயமுறுத்தியது. நினைவில் இருந்து இவனைச் சார்ந்தவர்கள் அனைவரும் அழிந்து போய்விடுவார்கள். நிகழ்வுகள் மறந்து போயிருக்கும். கற்றுத் தெரிந்திருக்கும் பலதும் நினைவலைகளில் காணாதே போய்விடும். இப்படியான வாழ்வு எதற்கு என நினைக்க முடியவில்லை. தான் இல்லாது போனால், தன்னையே மனதில் சுமந்து நிற்கும் இவள் என்னாவாள்?

குணமான பின், தனது அடுத்தகட்ட வாழ்வில் தன் விருப்பு வெறுப்புகள் என பலதும் மாறலாம். அதை நினைக்கவே பிடிக்கவில்லை ரகுவிற்கு. நித்திரையில் இருப்பவளின் கன்னம் வருடி, “பயமா இருக்கு டி… என்னோட அடுத்த பாதி வாழ்க்கையில நீ இல்லாம போயிட்டா? நினைக்கவே பயமா இருக்கு பேபி. மறந்தாலும் என் பின்னாடியே வந்து என் மனசுல இடம் பிடிக்கணும் என்ன?” என்றவன் அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.

ஆழ்ந்த உறக்கம் இல்லாது படுத்திருந்தவள், “அப்பறம் என்ன கர்மத்துக்கு அந்த நோட்டு பூரா என் பேர கிறுக்கி வச்சிருக்கியாம்? அத படிச்சுட்டு என்னை தேடி வா” என்றாள்.

“கொறட்ட விட்ட?”

“காதுக்குள்ள வந்து கத்திட்டு…” என்றவள், “நானா குறட்ட… நீ தான் டா குறட்ட மன்னன். இப்போ தூங்கு ரெக்கார்ட் பண்ணி நிருபிக்கிறேன்” என அவனை இழுத்து தன் கழுத்துக்குள் புதைத்துக் கொண்டாள். அவளை வாசம் பிடித்தான்.

“‘உஷ்ணமான தென்றல், மென் ரோஜாவைச் சீண்டியது’ன்னு எழுதி வைக்க போறேன்”

“ம்ம்ம் கண்டிப்பா இத எழுதி வை. நான் உனக்கு எவ்வளவு கிளோஸ்ன்னு உனக்கு தெரியணும்” என்றாள்.

“இன்னும் கிளோஸ் ஆகு… எல்லாத்தையும் எழுதி வைக்கிறேன்” என்றான் மயக்கும் குரலில். சின்ன சின்ன முத்தங்களால் இதயத் துடிப்பை ஏற்றிவிட்டவன், “நரம்பு துடிக்குது டி” என்றான், கழுத்தின் நாடி துடிப்பை உணர்ந்தவாரே.

இதோ… இதோடு அவள் அவனைத் தள்ளிவிடுவாள். “தீண்டாமை பாவ செயம் பேபி. பாவம் பண்ண வைக்கிற பேபி” என அவன் குழைவான். “போடா போக்கிரி” என்பாள்… என அவன் நினைத்தான். ஆனால் இன்று அவள் அவனைத் தள்ளவில்லை.

மெல்லத் தலையைத் தூக்கியவன் யசோவை பார்க்க, “தீண்டாமை பாவச் செயல் ரகு. நீ பாவம் செய்ய நான் காரணமா இருக்கக் கூடாது பார்” எனச் சிரித்தாள்.

சிரித்துக் கொண்டே, “போடி” என அவன் தள்ளி போக, அவளின் அணைப்பு இறுகியது. அவன் வெற்று மார்பின் உஷ்ணம் அவளுள் இசை மீட்டியது. தவிப்பும் தாபமுமாக, வானிலையில் சட்டென ஒரு மாற்றம்.

“பேபி?” என்றான். அவள் இதழ் பேசியது, சத்தமில்லா மௌன முத்தங்களால். அவன் மூளையின் செயல்பாட்டால், உருவமில்லா யசோவோடு பல இரவுகளைக் கழித்தவனுக்கு இது புது அனுபவம். உடலின் ஒவ்வொரு அணுவும் உயிர் பெற்றுச் சிலிர்த்துக் கொண்டன.

விடிவெள்ளி மின்னிக் கொண்டிருந்த கருநீல போர்வையைக் களைந்து வானம் பளீர் நீல போர்வையைப் போர்த்திக் கொள்ள ஆரம்பித்தது. சட்டென வானிலையில் மாற்றம். குளிர் மறைந்து வெம்மை ஆட்கொள்ள ஆரம்பித்தது. எல்லைக் கோட்டை ஆதவன் தாண்டி கொண்டிருப்பதைச் சிவந்த அடிவானம் காட்டிக் கொடுத்தது. ஜோடியாகப் பல பறவைகள் பறந்தன.

அச்சம் மடம் நாணம் எல்லாம் நாண்டுகொண்டு செத்திருக்க, கட்டிலிலிருந்த ஜோடியும் தங்களை மறந்து வேறு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தனர். ஆதவன் எல்லையைக் கடந்திருக்க வெயில் பூமியை ஆட்கொண்டது.

ரகுவின் மார்பில் தலை சாய்த்துப் படுத்திருந்தவளும் பேசவில்லை. அவளை அணைத்திருந்தவனும் பேசவில்லை. அவனுக்குள் அவஸ்தை. அவளுக்குள் அமைதி.

“பேபி” என ஆரம்பித்தான். தலை உயர்த்தினாள். கண்கள் நான்கும் மோதி நின்றன. காதல் கரை புரண்டு ஓடியது. இதோ… இந்த காதலை இனி அவள் காணமுடியுமா? முடியும் அடுத்த ஐந்து நாள்கள் காண முடியும். அதை இழக்கும் நோக்கம் இல்லை யசோவிற்கு.

“என் சந்தோஷத்த கெடுக்கிற மாதிரி ஒண்ணும் சொல்லிடாத ரகு. இந்த அஞ்சு நாள் என்னோடையதுன்னு வாக்கு கொடுத்திருக்க” என்றவள், “இத… இங்க, ரெண்டு பேரோட முழு காதலோட நடந்த சங்கமத்த, அப்படியே இல்லாட்டாலும் உனக்கு புரியற மாதிரி எழுதி வை ரகு. உனக்கும் எனக்கும் நடுவுல எதுமே, யாருமே… இல்லன்னு எழுது ரகு. நீ தான் நான். நான் தான் நீன்னு அழுத்தி எழுதி வை ரகு. காலத்த நம்ம காதல் வெல்லும்ன்னு நம்பு ரகு.” என்றாள்.

கண்கள் கலங்கப் பார்த்தான். யசோவின் உள்ளங்கை அவன் கன்னத்தை வருட அதை… அவன் தேவதையின் உள்ளங்கையைக் கன்னத்தோடு அழுத்திக் கொண்டான். தேவதைகளால் காயத்தை ஆற்ற முடியுமா? தெரியவில்லை. ஆனால், ரகுவின் தேவதையால் அவன் காயத்தை காணாமல் போகச் செய்ய முடியும். அது மட்டுமா? கத்தியின்றி, இரத்தமின்றி அவனை முழுவதுமாக அவளால் மட்டுமே முழுதாக விழுங்கி ஏப்பம் விட முடியும். ரகு விரும்பி முழுவதுமாக யசோவில் மூழ்கிக் கரைந்து போனான்.

“‘உன் ஹார்ட்ல, வித் யூ, அன்ட்டில் தி சைலன்ஸ்’ன்னு ஆழமா அழுத்தமா எழுதி வை ரகு. அங்க இருந்து யாராலையும் என்னை அழிக்க முடியாது ரகு.” என்றாள்.

கரகரத்த குரலில் “பேபி” என அவளுள் புதைந்தவன், உடைந்து அழ ஆரம்பித்தான். “எனக்கு உன்ன மறக்க வேண்டாம் டி” மனம் உடைந்து அழுதான்.

‘அழாத ரகு’ எனக் கூறிட ஆசை தான். அவனைத் தேற்றிட ஆசை தான். ஆனால் அனைத்து ஆசைகளையும் நம்மால் நிறைவேற்ற முடிவதில்லையே. காது மடல்களை கண்ணீர் நனைத்தது.

“உன்னையும் மறந்திட்ட பின்ன வாழ்ந்து என்ன பேபி பண்ண போறேன்?” என்றவன் குரல்வளை வலித்தது. மார்பில் அவன் தாலி தொங்க வேண்டிய இடத்தில் சொட்டு சொட்டாக ரகுவின் கண்ணீர் துணிகள் விழுந்தன.

அவன் அடர் கேசம் வருடிக் கொண்டிருந்தந்த விரல்களின் நடுக்கத்தை நிறுத்த வழி தெரியாது மனம் தடுமாறியது. கொத்தாக அவன் கேசம் பற்றி தன்னோடு புதைக்க எண்ணியவளின் நெஞ்சம் துக்கம் தாளாது ஏறி இறங்கியது.

மூடி இருந்த இருவர் கண்களிலும் கனவுகள் இருந்தன. அவள் கண்களில் திருமண கனவு. அதில் மணமகனாக ரகு இருந்தான். காலம் கடந்தும் அவர்கள் இப்படியே காதல் கடலில் திளைத்தனர். அவன் கண்களையும் மனதையும் யசோ நிறைத்திருந்தாள்.

அவன் கனவு கண்டான். யசோ, ரகு, குட்டி ரகு, குட்டி யசோ, அம்மா, ஐயா, தாத்தா, பாட்டி எனக் குட்டி குடும்பம் அந்த வீட்டை தங்களின் சிரிப்பால் நிறைத்திருந்தனர்.

இருவர் கனவும் ஒன்றாய் இருக்க, கனவு பலிக்கும் என்ற இருவரின் நம்பிக்கையிலும் தவறொன்றுமில்லையே?

— &&& —

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!