Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

56 SK_UPEMM 56.2

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
அத்தியாயம் 56.2

 

அந்த ‘ஒருகால்’ வரும் என அவள் கனவிலும் எண்ணவில்லையே. கை நடுங்க யசோ புடவையை எடுத்தாள். நிச்சய நாள் நினைவில் வந்தது. ரகுவின் ஸ்பரிசம் உணர ஆசை கொண்டு, அவன் கொடுத்த நிச்சய புடவையை உடுத்தினாள். அன்றைய கலாட்டாக்கள், அன்றைய இரவு, மாடியில் அவன் போட்டுவிட்ட மோதிரம், அவன் கண்கள், அது பிரதிபலித்த நேசம், இந்த ஜென்மத்திற்கு அவனை மறக்கவே முடியாதே.

லாக்கர் சாவி ரகுவின் நினைவு புத்தகத்திற்கு விடுதலை கொடுத்தது. அதுவரை இருந்த பயமோ தயக்கமோ இல்லாது கையில் அந்த புத்தகத்தை எடுத்தாள். உடல் ஒரு முறை சிலிர்த்து அடங்கியது. “லகு” என்றவள் புத்தகத்தை ஆழ முகர்ந்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.



Advertisement

ரகு, நிலவு, அவர்களது மாடி கட்டில்… அந்த ஏகாந்த நினைவுகளோடு மீண்டும் ஒரு முறை வாழ மனம் ஏங்கி தவித்தது.

தன் போல் ரகுவின் வீட்டை நோக்கிச் சென்றாள் யசோ. இடையே கடந்த நான்கு வருடங்கள் ரகுவின் நினைவுகளால் நிரப்பப்பட்டிருக்க, எதற்கோ கட்டுண்டவள் போல் நடந்தாள் யசோ. வீட்டு வாயிலை மிதிக்கத் தைரியமற்றவளாக வீட்டைச் சுற்றிக் கொண்டு மாடிப் படிகளில் கால் ஊன்றினாள் யசோ.

இரவு வானம் ஏழையின் ஆடையைப் போல் நட்சத்திர பொத்தல்களோடு காட்சி அளித்தது. அவர்களது கட்டிலிருந்தது. அதில் சென்று அமர்ந்தாள். கட்டிலை மெல்ல வருடினாள். நான்கு வருடங்களாக வராத கண்ணீர் வரத் துடித்தது. ரகுவை தன்னோடு இழுத்துப் பிடித்திருப்பவளால் அழ முடிவதே இல்லை.

Advertisement

ரகுவின் புஜம் இருக்கும் இடத்தில் தலை சாய்த்து கட்டிலில் படுத்தாள். நட்சத்திர மண்டலங்களைப் பற்றி ரகு கூறும் கதைகளைக் கேட்க மனம் பேராசை கொண்டது. “லகு… இருக்கியா?” என்றவளின் சத்தம் காற்றோடு கலந்தது. ஜோடி புறாக்களில் ஒன்று மட்டும் வானை வெறித்துக் கொண்டு படுத்திருக்கும் காட்சியைக் காண நிலவுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. மேகத்தை இழுத்து தலை வரை போர்த்திக் கொண்டது.

Advertisement

நேரம் மெதுவாகச் சென்றதோ… அவசரகதியில் சென்றதோ… யசோ அறியவில்லை. அவள்… அவர்களது பத்தொன்பது வருட வாழ்வை மிண்டுமாக ஒரு முறை வாழ்ந்தாள். குட்டி லகு… அழகு பொம்பையை போல் இருந்த ரகு… அவள் கைபிடித்து அவளுக்கு உலகம் காட்டிய ரகு… தன் குறைகளை குறைகளாகப் பார்க்காத தூய அன்பு கொண்ட ரகு… காதலை அள்ளி கொடுத்த ரகு…  ஏன் இன்று இல்லை?

“ரகு… ஏன் டா போன…” யசோவின் இதயம் நின்றுவிடும் போல் இருந்தது.

“நிலா இருக்கு… மலை கோட்டை இருக்கு… நான் இருக்கேன் ரகு. வா ரகு…” ஒரு முறை அழுதால் அந்த இதயம் பிழைக்க வழி இருக்க, அழுகை நெஞ்சோடு நின்று கொண்டது.

Advertisement

அவள் சோகத்தைப் பொறுக்க முடியா தென்றல், அவளை மெல்ல வருடி சென்றது. அவன் அவளை வருடியதாக எண்ணிக் கொண்டாள். “இப்படியே என் கூடவே இருந்துடு லகு. உனக்கு நான்… எனக்கு நீ. போதும் லகு” என்றவளின் அகத்தை ரகுவின் வாசம் ஆக்கிரமித்தது.

கட்டிலில் சுருண்டு படுத்திருந்தவள் அருகில் கௌதமன் அமர்ந்தான். சின்ன ஆச்சரியமும் சற்றே பெரிய ஆர்வமுமாக யசோவை பார்த்தான். அவனும் மகளும் வான நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டு படுத்து கிடக்கும் இடத்தில் யசோவை பார்த்தவனுக்கு உள்ளுக்குள் ஆனந்த தென்றல் வீசியது. 

“அம்…” அம்மா என அழைக்கப் போன மகளின் வாயில் விரல் வைத்து, “ஷ்ஷ்” என்றான் கௌதமன்.

“அம்மா தூணுராங்களா?” குழந்தை கிசுகிசுத்தாள்.

“ம்ம்ம்” எனத் தலை அசைத்தான் கௌதமன்.

அப்பாவின் வாயில் விரல் வைத்து, “ஷ்ஷூஷூ” என்ற குட்டி யாழி அப்பாவின் மடியில் அமர்ந்து கொண்டு ஏதோ அதிசயத்தைப் பார்ப்பது போல் பார்த்து அமர்ந்திருந்தாள். இன்று தூங்குமூஞ்சி பேய் அப்பாவையும் அம்மாவையும் பிடித்துக் கொண்டது என்று நினைக்கிறாளோ என்னவோ?

சுருண்டு படுத்திருந்த யசோவின் தோன்றம் கௌதமனை ஏதோ செய்தது. அமைதியாக அவளருகில் அமர்ந்து அவளையே பார்த்திருந்தான். நேரம் சென்றது. யசோ எதையோ அவ்வப்போது முணுமுணுத்தாள். நிலவு நடு வானை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்க, அம்மாவிடம் காட்ட எனப் போட்டிருந்த கொலுசு, சத்தமில்லாது யாழியை போல் உறங்கியிருந்தது.

இன்னும் எவ்வளவு நேரம் காவல் காப்பது? “யசோ?” என மெல்லத் தோள் பற்றி உலுக்கினான். “ஃபை மினிட்ஸ் டா” என விட்ட கனவை தொடர்ந்தாள். ‘நல்ல மரியாதை’ என நினைத்தவன் மகளை பார்த்தான். மகள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள்.

‘பழகிக்கோ கௌதமா’ என எண்ணியவன் மகளின் முதுகை வருடிக் கொண்டே, வானை வேடிக்கை பார்ப்பதைத் தொடர்ந்தான். இத்தனை மாதங்களில் இன்று வரை யசோ இந்த பக்கம் வந்தே இல்லை. இன்று அவள் படுத்திருப்பதைப் பார்த்தால், இந்த மாடிக்கும், இவளுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கும் என்றே தோன்றியது.

இவள் சொந்த ஊர் திருச்சி என்றது நினைவில் வந்தது. ஆக… இந்த ஊர் அவளுக்குப் புதிதல்ல. முன்பு எங்கு வசித்திருப்பாள்? அவள் வசிக்கும் அதே வீட்டிலா? அப்படியென்றால்… இந்த வீடு? இந்த வீட்டில் இருந்தவர்களை பற்றி யசோவிற்கு தெரிந்திருக்குமோ?  ‘யசோவிடம் தன்னை பற்றிக் கூற வேண்டும்’ என இவன் எண்ணியிருக்க, ‘அவளைப் பற்றி எனக்கு என்ன தெரியும்?’ என்ற எண்ணம் முதல் முறை தோன்றியது.

யசோ, மகள் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறாள். அவளுக்கு தன்னை பிடிக்கும் என்பது வரை தெரியும் என்பதால் வேறு எதைப் பற்றியும் யோசிக்கப் பிடிக்காது, வானை வேடிக்கை பார்த்தான். நட்சத்திரங்கள் சிரித்தன. அவனுக்கு நட்சத்திர சாஸ்திரங்கள் எதுவும் தெரியாது. அதனால் அதை வேடிக்கை பார்ப்பதோடு நிறுத்திக் கொண்டான். இருளிலும் நிலவை சுற்றி மேகக் கூட்டம் மாநாடு போட்டிருப்பது நன்றாகவே தெரிந்தது. மேகத்தினூடே மெல்ல தலையை எட்டி பார்த்தது நிலவு. கண்ட காட்சி மிக மிக அழகாகத் தோன்ற, மேகத்தை விட்டு வெளியே வந்து புது ஜோடியை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தது நிலவு.

“உக்காந்துட்டே இருக்க? படுக்கலியா டா?” என்ற கேள்வியோடு கௌதமன் தோளின் மீது சாய்ந்தாள் யசோதரா.

இதற்கு என்ன கூறுவது? அவள் மேனி அவன் மீது தயக்கமே இல்லாது இழைந்தது. சட்டென ஒரு சிலிர்ப்பு உடல் முழுவதும் தோன்றி அடங்க மறுத்தது கௌதமனுக்கு. தீண்டல் ஏற்படுத்தும் அவஸ்தை அவனுக்குப் பிடித்தாலும், அவள் தூக்கக் கலக்கத்தில் இருக்கிறாள் என்பதால், அதில் பூரித்துப் போக முடியாதவனாக, “யசோதரா?” என்றான்.

மின்சாரம் தீண்டியது போல் சட்டென உடல் குலுங்கியது யசோதராவிற்கு. கௌதமன் எழுந்து நின்றான். அடித்து பிடித்து எழுந்து, அவளும் கட்டிலை விட்டு இறங்கி நின்றாள். கௌதமனைப் பார்த்தவள் பேந்த பேந்த விழித்தாள் என்றால் சரியாக இருக்கும்.

“என்ன தூக்கமா?” எனப் புன்னகைதான்.

“தூங்கிட்டேனா?” என அவளும் அசட்டுப் புன்னகையைச் சிந்தினாள்.

“சாயங்காலமா தலவலின்னு படுத்தேன். நல்லா தூங்கிட்டேன். நேரங்கெட்ட நேரத்துல தூங்கிட்டு தூக்கம் வரலியேன்னு மேல வந்தேன்… நீ தூங்கிட்டு இருக்க” என அவன் மாடிக்கு வந்த காரணத்தோடு அவன் மாலையில் உறங்கியதின் காரணத்தையும் விளக்கினான்.

“இப்போ ஓகேவா?”

“ம்ம்ம்… தேங்க்ஸ். பேபிய பார்த்துகிட்டதுக்கு.”

அவள் முறைத்தாள். “ஓகே ஓகே… முறைக்காத. தெரியாம சொல்லிட்டேன்” என அவளை மலை இறக்கினான்.

“ஃபங்கஷனுக்கு போயிட்டு வந்தியா? இந்த கலரும்… இந்த சாரியும் உன்ன ரொம்ப அழகா காட்டுது” என்றான் பேச்சை வளர்க்க விரும்பி.

தன்னை ஒரு முறை குனிந்து பார்த்தவள், “தேங்க்ஸ்” என்றாள் புன்னகை முகமாக. “ம்ம் ஃபங்கஷனுக்கு வாங்கின சாரி” என்றவள் அதை மெல்ல நீவி விட்டாள். ‘இவனிடம் ரகுவை பற்றிக் கூறவேண்டுமே! எப்படி ஆரம்பிப்பது?’

மகள் அசைந்தாள். தட்டிக் கொண்டே அவன் மெல்ல நடக்க ஆரம்பித்தான். அவனோடு யசோவும் நடக்க ஆரம்பித்தாள். சற்று நேரம் மௌனமாக இருவரும் நடைபழகினர். குண்டு பல்பின் வெளிச்சத்தை ஏப்பம் விட துடித்துக் கொண்டிருந்த ஈசல்களின் சத்தத்தோடு பூச்சிகளின் ரீங்காரமும் சேர்ந்து கொண்டு வாத்தியம் இல்லாமலே இசை அமைத்துக் கொண்டிருந்தன.

“பௌர்ணமினாலே அழகு தான் இல்ல?” எனக் கௌதமன் மௌனத்தை உடைத்தான்.

“இன்னைக்கு பௌர்ணமியா?” எனக் கேட்டு கொண்டே வானைப் பார்த்தாள் யசோ. ‘என்னை நினைவிருக்கா?’ என்பது போல் நிலா சிரித்தாள்.

“ஸ்பேஸ் மான்ஸ்டர் பாதி நிலாவ திண்ணுடுச்சு. மீதி பாதி தான் இருக்கு” என்றான் சிரியாது.

அவனைச் செல்லமாக முறைத்தவள், “நான் என்ன உங்க பேபியா?” எனச் சிரித்தாள்.

“நீயும் பேபி தான்” என்றவன், “என் பொண்ணு உன்ன மாதிரி சிரிச்சுட்டு போக மாட்டா. ஏன் டா சொன்னோம்ன்னு ஃபீல் பண்ண வச்சிடுவா” என அவனும் சிரித்தான்.

“எந்த ஷேப்புல இருந்தாலும், யசோ மாதிரியே நிலாவும் கண்ணுக்கு நிறைவா இருக்கு” என்றான் நிலவை பார்த்துக் கொண்டே. அவனைத் திரும்பி ஒருமுறை பார்த்தவள் மீண்டும் வானைப் பார்த்தாள். அவன் அவளைப் பார்த்தான். நிலவின் ஒளி அவள் மீது விழுந்தது. அவள் ஒளிர்ந்தாள். நிலவு சலித்தாலும் இவள் சலிக்கமாட்டாள் என்றது மனது.

அவள் பார்வை கீழிறங்கி கோவில் பக்கம் சென்றது. இவன் கண்கள் அவள் பார்வையைத் தொடர்ந்தன.

“அங்க இருந்து பார்த்தா திருச்சி அழகா இருக்கும் இல்ல?” கௌதமன் கேட்க, “ரொம்ப” என்றாள் முகம் மலர.

“எத்தன தரம் போயிருக்க?”  என்றவன் கண்கள் யசோவின் மீது நிலைத்தன.

“நினைக்கும் போதெல்லாம் போயிருக்கேன். அப்போ அங்க நின்னு அந்தி வானையும், விளக்கில மின்னுற திருச்சியையும் பார்க்க அவ்வளவு பிடிக்கும். சின்னதுல என்னோட ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் அப்பா, அம்மா, நான், லகு போவோம்.” என்றாள் பார்வையை மலை மீதிருந்து விலக்காது.

“லகு?”

“ம்ம்ம்… நானும் அவனும் ரேஸ் வச்சிருக்கோம். யார் முதல்ல உச்சி பிள்ளயார பார்க்கிறதுன்னு. நான் ஒரு தரம் கூட ஜெயிச்சதே இல்ல” என உதட்டைச் சுழித்தாள்.

சுழித்த உதட்டை என்ன செய்யலாம்? ‘விரல் கொண்டு வருடி… உதட்டால்’ எனத் தறிகெட்டு ஓடும் யோசனையைக் கடிவாளமிட்டு இழுத்து அதை அப்படியே மென்று விழுங்கினான்.

“அந்த மலைக் கோட்டைக்கு போகணும். ஒரு நாள் நீயும் நானும் சேர்ந்து போய் பார்ப்போம். ஒரு ஃபுல்மூண் அன்னைக்கு போயி பார்க்கலாம். இன்னும் நல்லா இருக்கும் இல்ல?” என்றவன் பார்வை மலையின் மீது நிலைத்தது. அவளின் பார்வை கௌதமன் மீது நிலைத்தது.

“என்ன போலமா?” என்பது போல் அவன் புருவம் உயர்த்த, புன்னகையை பதிலாகக் கொடுத்தாள்.

“ரொம்ப நேரமா தூக்கியே வச்சிருக்கீங்க. கை வலிக்க போகுது. கட்டில்ல படுக்க வைக்கலாமே?” எனக் கேட்டாள் குழந்தையின் கரம் வருடி.

“அவளுக்கு என் ஹார்ட் பீட்ட கேட்டுட்டே தூங்கணும். இருட்டுல அங்க தனியா அவள படுக்க வச்சா… என் ஹார்ட்பீட் எகிறிடும்” என்றவன் மகளின் குட்டி கரத்தை எடுத்து மகளின் உள்ளங்கையில் இதழ் பதித்தான்.

“இந்த உலகம் எவ்வளவு அதிசியங்கள ஏந்தியிருக்கில்ல? யோசிச்சு கூட பார்க்காத ஒரு நொடியில பொக்கிஷமா ஒரு குழந்தை என் கையில” கௌதமன் மகளின் உள்ளங்கையிலிருந்து விழியை அகற்றாது பேசினான். பேசும் அவனையே பார்த்து நின்றிருந்தாள் யசோதரா.

“பெருவாழ்வு வாழ்வோம் நினைக்கிற பலர் அடுத்த நிமிஷத்த பார்க்காமலே போயிருக்காங்க. அடுத்த நாள பாக்கவே முடியாதுன்னு நூறு சதவீதம் நினைச்ச என்னை மாதிரி ஆட்கள் வருஷ கணக்கா வாழறது எல்லாம் அதிசயம் தான?”

எதைக் கூற இவன் இப்படி சுற்றி வளைக்கிறான்? எதுவானாலும் அவனே சொல்லட்டும் எனக் காத்திருந்தாள்.

 “நிரந்தரம்ன்னு நினைக்கிறது அடுத்த நாளே நமக்கு இல்லாம போறதும் உண்டு. இதில்லாம நான் இல்லன்னு நினைக்கிற நாம, நாம ஆசைப்பட்டது கிடைக்காம போனாலும் வாழத்தான் செய்யறோம் இல்ல?”

“…”

“உனக்கு ஆர்கன் டொனேஷன், டிரான்ஸ்பிளான்ட் பத்தி ஏதாவது அபிப்பிராயம் இருக்கா யசோ?”

இந்த மாடிக்கும் யசோவிற்கும் பழகிப் போன கேள்வி என்றாலும், யசோவிற்கு உள்ளுக்குள் சின்ன உதறல் எழுந்தது நிஜம். “என்ன திடீர்ன்னு?”

“சும்மா தான்.” என புன்னகைத்தான். அவன் புன்னகை அவளை ஆசுவாசப்படுத்த,

“இறந்த பிறகு மண்ணுக்குள்ள மக்கியோ, நெருப்பில பொசுங்கி வீணாகரதுக்கு பதிலா யரோ ஒருத்தருக்கு உபயோகமா இருக்கும்ன்னா நல்லது தானே?” என்றாள்.

“டிரான்ஸ்பிளான்ட் பத்தி தெரியுமா?”

“ஓஹ்… உடல் உருப்ப கொடுக்கிறவர் டோனர். அத வாங்கி தனக்குள்ள வச்சுகிறவங்க, ரெசிபியன்ட். ஒரு மனுஷன் வாழும்போதே கிட்னிய கொடுக்கலாம். ஆளுக்கு ரெண்டு கிட்னி இருந்தாலும், ஒருதன் வாழ ஒரு கிட்னி போதும். இதுல இன்ட்ரெஸ்டான விஷம் என்னென்னா பழுதான கிட்னில இன்ஃபெக்ஷன் மாதிரி பிரச்சன எதுவும் இல்லாட்டா, அத அப்படியே விட்டுட்டு, புது கிட்னிய வைப்பாக. டெல்லில ஒருத்தருக்கு இப்படி வச்சு வச்சு, அவருக்கு மொத்தம் 5 கிட்னியாம்”

“ஓஹ்…”

மாடியை இருமுறை சுற்றி முடித்தவன், குண்டு பல்பின் அடியில் நின்றான். நீள மூச்சை வெளியேற்றினான்.

“எதையோ சொல்றதுக்காக தான ஆரம்பிச்சீங்க? என்னை கேட்டுட்டு, நீங்க சும்மா இருந்தா எப்படி?”

கேட்டவளைத் திரும்பி பார்த்துப் புன்னகைத்தான்.

“1970ல ராபர்ட் வைட் ஒரு குரங்கோட தலைய, தலையில்லாதா வேற ஒரு குரங்குக்கு டிரான்ஸ்பிளான்ர் பண்ணினார். அந்த குரங்கு 8 நாள் வாழ்ந்துதாம்.”

“வாவ்… செம. ஆனா பாவம் தலைய கொடுத்ததும் போச்சு, தலைய வாங்கிகிட்ட குரங்கும் செத்து போச்சா?”

“ஆமா மனுஷன் சாப்பிடுற ஒவ்வொரு மருந்துக்கு பின்னாலயும், செய்துகிற சிகிச்சைக்கு பின்னாலயும் பல குரங்கு, பண்ணி, எலின்னு பல உயிர்களோட தியாகம் இருக்கு.”

“அது சரி… ஆமா, மனுஷ தலைய மனுஷனுக்குப் பொருத்தி பாக்கலையா?”

“2017ல உயிரில்லாத மனுஷ உடல்ல இந்த சோதனைய வெற்றிகரமா செய்ததா சொல்லபடுது.”

“எதுக்கு இந்த வேண்டாத வேலை? சாகரவங்கள நிம்மதியா சாகவிட வேண்டியது தான?”

மௌனம் காத்த கௌதமன், “நீ உயிரா நேசிக்கிற ஒருத்தர் சாக கிடந்தா இதையே சொல்லுவியா யசோதரா?” எனக் கேட்க, விக்கித்து நின்றாள் யசோ. ஒரு வாய்ப்பு… ஒரே ஒரு வாய்ப்பு இருந்தாலும் ரகுவின் மூளையை விலக்கி புது மூளையைப் பொருத்தத் தயங்கியிருக்க மாட்டாளே. மூளையை மாற்ற முடியாது என்பதால் தலையை மாற்ற முயன்றிருக்கிறார்கள். அது மட்டும் முடிந்திருந்தால், இன்று என் ரகு வேறு ஒருவனின் தலையோடு இருந்திருக்க வாய்ப்பு கிடைத்திருக்குமே.

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!