56 SK_UPEMM 56.3
உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
அத்தியாயம் 56.3
“உயிரோட இருக்கவங்களுக்கு செய்திருக்காங்களா?” ஆவல் பொங்கக் கேட்டாள்.
“2015ல வெர்ட்னிக் ஹாஃப்மேன்னு சொல்லபடுற தண்டுவட தசை சிதைவு நோயால அவதி பட்டுட்டு இருந்த, வலேரி ஸ்பிரிடோனோவ் அவராவே ஹெட் டிரான்ஸ்பிளான்ட்க்கு முன் வந்தார். ஆனா கடைசி நேரத்துல, பல காரணங்களாக அவர் முடிவ மாத்திகிட்டார்.”
Advertisement
“ஓஹ்… இதுவரைக்கும் யாருமே இத செய்தது இல்லையா?”
“சில வருஷங்க முன்ன, மூளை சாவுல இறந்த ஒருத்தரோட உடலோட, விபத்துல உடல் ஊனமான ஒருத்தன் தலைய பொருத்தினாங்க”
“எட்டு நாள தாண்டினானா அவன்?”
Advertisement
“ம்ம்ம்… மிக மிக கொடுமையான நாட்கள்… மாதங்கள்… வருஷங்கள். வலிய மட்டுமே பார்த்த நாட்கள் அது. சாவே மேல்ன்னு நினைக்காத நாளில்லை. அது அப்போ… இப்போ வசந்த காலம் அவன் வாழ்க்கையில.”
Advertisement
“எப்படி… எப்படி சாத்தியமாச்சு?”
“லக்குன்னு சொல்லலாம். வேற என்ன சொல்ல? ஒரே மாதிரி உருவம், ஏறத் தாழ ஒரே வயசு, ஒரே பிள்ட் கிரூப்ல ரெண்டு பேர். ஒரே நேரம் ஒரே ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகராங்க. ஒருத்தனுக்குக் கழுத்து கீழ செயல்படல. ஸ்பைனல் கார்ட் டேமேஜ். ரொம்ப ஆரோக்கியமான உடலோட இருந்தவருக்கு எதிர்பாராதவிதமா பிரெயின் டெத். அவர் இறந்தா, அவரோட உடல தனமான எடுத்துக்க சொல்லியிருந்தாராம். இத என்னன்னு சொல்ல?”
அவளைப் பார்த்தவனை பார்த்து அவஸ்தையோடே புன்னகைத்தாள். ஒருவன் துரதிர்ஷ்டம் மற்றவனின் அதிர்ஷ்டமா? இல்லை… இல்லை இது இருவரின் அதிர்ஷ்டம். ஒருவன் உடல் வாழ, மற்றவன் உணர்வு வாழ்கிறது. ஆக, இருவரும் வாழத்தான் செய்கின்றனர்.
Advertisement
“இப்போ அவங்க… எப்படி இருக்காங்க?” ஏனோ மனம் தவியாய் தவித்தது.
“நல்லா அரோகியமா இருக்கான். அவன் ஒரு குழந்தைக்கு அப்பா. இப்போ, பக்கத்து வீட்டு பொண்ண காதலிக்கிறான் அந்த ஃபிராங்கென்ஸ்டைன்ஸ் மான்ஸ்ர்” என்றான்.
அதுவரை ரகுவை மட்டுமே மனதில் கொண்டு இவை அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தவள் சட்டெனக் கௌதமனைப் பார்த்தாள்.
“இது தான் என்னை வெட்டி ஒட்டின கதை யசோ” என்றான் புன்னகையின் பின் அவன் தவிப்பை அடக்கி.
இதற்கு என்ன சொல்ல வேண்டும்? எப்படி எதிர்வினையாற்ற வேண்டும்? சிலையாக நின்றாள் யசோ. இவனா… இவனுக்கா? எப்படிச் சாவை வென்றான்? எப்படி வலியைப் பொறுத்தான்?
“என்ன யசோ… ஒண்ணுமே சொல்ல மாட்டேன்ற?” என்றவன் குரலில் மெல்ல தவிப்பு எட்டிப்பார்த்தது.
யசோ ஒருவாறு தன்னை நிலைப்படுத்தினாள். “யூ ஆர் எ ஃபைட்டர். ஐ சல்யூட்” என்றாள் உணர்ந்து.
“என்னோட ரெக்கவரி டேஸ் நரகமான நாட்கள். அப்போ தான் என் பொண்ணு எனக்கு வரமா கிடைச்சா. ஆழமான கடலை என் மக கை பிடிச்சு தாண்டிட்டேன்” என்றான்.
அமைதியாக ஊர்ந்த மேகங்கள் சத்தமே இல்லாது அவர்கள் நேரத்தைக் களவாடி சென்றன. மௌனம் கூட சில நேரங்களில் அவஸ்தையாகி விடுகிறது.
அவஸ்தையைக் கடக்க நினைத்தவள், “நீங்க சொல்லிட்டீங்க. அடுத்து நான் சொல்லணும் இல்ல…” எனக் கேட்டாள்.
“என்ன? என்ன சொல்லணும்?” புரியாது பார்த்தான்.
“‘உயிரா நேசிக்கிற ஒருத்தர் சாக கிடந்தா இதையே சொல்லுவியா யசோதரா?’ன்னு கேட்டீங்களே? அதுக்கு பதில் சொல்லணுமே”
‘என்ன கூற போகிறாய் பெண்ணே’ கௌதமன் மனம் துள்ளிக் குதித்தது.
“சொல்ல மாட்டேன். சாகத் தயாரா இருக்க மூளைய எடுத்து போட்டுட்டு புது மூளைய எப்படியாவது பொருத்துங்கன்னு டாக்டர கடவுளா நினைச்சு கெஞ்சி கேப்பேன்.” என்றவள் குரல் நடுங்கியது. “கேப்பேன் இல்ல… கேட்டேன். அவருக்கும் மூளைச் சாவு தான். லகு! நான் உயிரா நேசிச்ச என் லகுக்கும் பிரெயின் டெத்ன்னு சொன்னாங்க.”
“லகு?”
“ம்ம்ம்… லகு. என் லகு. ரெண்டு பேரும் கை பிடிச்சு ஒண்ணாவே வளர்ந்தோம். உயிரா காதலிச்சோம். ரெண்டு வீட்டுலயும் சந்தோஷமா ஏத்துகிட்டாங்க. நிச்சயம் முடிஞ்சு, கல்யாணத்துக்கு நாளும் குறிச்சு, பத்திரிக்கையும் அடிச்சாங்க. அவருக்கு பிரெயின் டியூமர்ன்னு என் தலையில கல்ல போட்டாங்க. கிரிட்டிக்கல் சர்ஜரினாலும் உயிர்ச் சேதம் இருக்காது, மெம்மொரி லாஸ் மட்டும் தான்னு சொன்னாங்க.
என்னை அவர் மறக்கதுக்கு முன்ன அவரோட முழு காதலும் எனக்கு வேணும்ன்னு ஆசை பட்டேன். அவர் கருவை சுமந்து… ப்ச்… அவர மாதிரியே எனக்கு அவர் வாரிசும் நிலைக்கல. கொஞ்ச நாள் நடந்த உண்மைய ஏத்துக்க மறுத்து என்னையே மறந்த நிலைல, டிப்ரஷன்ல்ல இருந்தேன்…” என்றவளால் அதற்கு மேல் பேச முடியவில்லை. தொண்டை அடைத்தது.
“சாரி” என்றான்.
அவன் கண்பார்த்து, “நிரந்தரம்ன்னு நினைச்சவர் எனக்கு இல்லாமலே போயிட்டார். அவர் இல்லன்னு இன்னுமே என்னால ஏத்துக்கவே முடியலனாலும் அதுதானே உண்மை. ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்கவே கிடைக்காதுன்னு தெரிஞ்ச பின்னும் வாழத்தான் செய்யறேன். இந்த உலகம் விந்தையானது தான் கௌதமன்.” என்றாள்.
இப்படி ஒரு கதையை எதிர்பார்க்காத கௌதமன், அமைதியாக அவளையே பார்த்து நின்றான். கல்லூரி காலங்களில் தாக்ஷாவோடு நேரம் காலாம் பார்க்காது இன்பத்தில் திளைத்த கௌதமனுக்கு, இன்று கையில் மகளோடு நிற்கும் கௌதமனுக்கு யசோவின் கதையை ஏற்கக் கடினமாக இல்லை என்றாலும், ஏதோ செத்தது. என்ன செய்தது? தெரியவில்லை. அதனால் அமைதி காத்தான் கௌதமன்.
“என் அம்மாவ நான் நினைக்காத நாளே இல்ல. அது மாதிரி தான் அவனும். என் உடம்புல உயிர் இருக்கவரை என் அம்மா நினைவுகள் எப்படி எனக்குள்ளவே இருக்குமோ அதே மாதிரி என் லகுவோட நினைவுகளும் இருக்கும்.” என்றவள் கௌதம் கண்களைப் பார்த்தாள்.
எந்த உணர்வுகளையும் காட்டாத கண்கள் யசோவை பார்த்தன. ‘ஏதாவது சொல்லேன்’ என அவள் கண்கள் யாசிக்க, “இத நீ சொல்லி இருக்கவே வேண்டாம் யசோ. This changes nothing between us” என்றான்.
உள்ளுக்குள் பிடித்து வைத்திருந்த காற்றை வெளியே விட்டவள், மகளின் கரத்தில் பட்டும் படாமலும் முத்தம் ஒன்றை பதித்தாள். கனத்திருந்த மனம் லேசானது. “ரொம்ப நாளா சொல்ல நினைச்சு… சொல்ல தெரியமா… ஹும்ம்ம்… இன்னைக்கு சொல்லிட்டேன். குட் நைட் கௌதமன்” என்றாள் தட்டுத் தடுமாறி.
அவன் அவளைப் பார்த்துக் கொண்டே நிற்க, மகளின் பாதத்தை மெல்ல வருடி, “யாழிய சொந்த மகளா உங்களால மட்டும் இல்ல… என்னாலையும் பாக்க முடியும் கௌதமன்” என்றவள், எந்த அவசரமும் காட்டாது கட்டிலின் முன் நின்றாள். நட்சத்திர கதைகள் கூற அங்கு ரகு இல்லை. அவளுள் ரகுவின் அழியா நினைவுகள் நிறைந்திருந்தன. நிமிட நேரம் அதைப் பார்த்து நின்றாள். பின், திரும்பிப் பார்க்காது, மாடியைக் கடந்து கௌதமனின் பார்வையை விட்டு மறைந்தாள் யசோதரா.
வசந்த கால நதிகளிலே, வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே, நெஞ்சிறண்டின் நினைவலைகள்
[உண்மையோடு கற்பனை கலந்து எழுதப்பட்ட கதை. 2026 வரை மனித தலை மாற்று அறுவை சிகிச்சை செயல்பாட்டில் வரவில்லை.]
[References:
https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC5705925/
https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC6511668/
https://www.verywellhealth.com/organ-transplants-4139752]
…
