உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் அத்தியாயம் 57.2
தகப்பனின் அழ தயாராக இருந்த முகம் பார்த்த மகள், “ஒண்ணும் பெஷ்ஷன இல்ல அப்பா. சி..சிச்சன் நல்லா இலுக்கு. கவல நேணா அப்பா” எனத் தகப்பனுக்கு ஆறுதல் கூறினாள்.
மலரும் வந்து சென்றுவிட்டாளே… நினைத்தவனுக்குத் தலை வலியோடு இரத்த கொதிப்பும் ஏறிவிடும் என்பதால் அடுக்களையின் பக்கம் செல்லவே கூடாது என தனக்குள் கூறிக் கொண்டான்.
“அப்பா, நீங்க பேப்பல்ல கலல் அலிச்சேன். பெட்டுக்கு கீல பலுத்துட்டே கலல் அலிச்சேன். டூ பாய்ஸ் இலுந்தாங்க… பேன்ட் ஷட்ட எல்லாம் வலைஞ்சு, லெட் கலர் அலிச்சேன் அப்பா.”
Advertisement
“எந்த பேப்பர்ல்ல கலர் அடிச்சீங்க? பாய்ஸ் படத்துக்கு கலர் அடிச்சியா?” என ஆரம்பித்தவன், நினைவு வந்தவனாக, “கடவுளே, நேத்து என் மெடிக்கல் ரிப்போட்ட சைட் டேபில்ல வச்சிருந்தேனே, அதுலயா? என்னை சொல்லணும்… ஆஹ்ஹ்” என மனதார நொந்துக் கொண்டான்.
குளியலறைக்கு மகளைத் தூக்கிச் சென்றவன், “தலைய என்ன பாடு படுத்தி வச்சிருக்க பேபி? உன்ன எப்படி கிளீன் பண்ண போறேன்னே தெரியல… கைய தூக்கு பேபி” எனப் பேசிக் கொண்டே மகளின் ஃபிராக்கை கழட்டினான்.
“அப்பா… அம்மாவும் பேபியா இலுந்தாங்க தெலியுமா? பேபி அம்மா அலுக்கா இலுப்பாங்களா, லகு கீன் பண்ணி விலுவான். பாட்டி லெண்டு பேலையும் குளிப்பாட்டுவாங்க” என மகள் அளந்துவிட்ட எதுவும் தகப்பனுக்குப் புரியவில்லை.
Advertisement
“இந்த பக்கம் வா பேபி”
Advertisement
“அப்பா குள்ச நேணா அப்பா… பேபி ஷப்பாத்தி செய்ய போலேன்” என்ற மகள் நெளிந்தாள்.
“அப்பாக்கு ஃபீவர் வர மாதிரி இருக்கு டா பேபி. சப்பாத்தி சாப்பிட வேண்டாம். நாளைக்கு செஞ்சு தர்றியா?”
“இன்னும் என்ன சர்ப்ரைஸ் வச்சிருக்க பேபி, அப்பாக்கு?”
“நலைய இலுக்கு அப்பா. ஹாலுக்கு போனதும் காத்துலேன்” மகள் அழகாகச் சிரித்தாள்.
“உன்ன உன்கிட்ட இருந்து காப்பாத்தறதே பெரிய விஷயமா இருக்கே பேபி” அழுகையை அடக்கி கொண்டே கௌதமன் கதறினான். அடுக்களையிலிருந்தவள் வாய்விட்டுச் சிரித்தாள்.
அப்பா மகளின் சம்பாஷனையைக் கேட்டுக் கொண்டே அடுக்களையை ஒருவாறு சுத்தப்படுத்தி கையில் காபியோடு வந்தவளுக்கு ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்து நின்றிருந்த அப்பாவும் மகளும் கண்ணில் பட்டனர். இடையில் பூந்துவாலியோடு நின்றிருந்தவன், குட்டி மகளை பூந்துவாலைக் கொண்டு அணைத்துப் பிடித்திருந்தான்.
நின்றிருந்தவன் முதுகைப் பார்த்து நின்றவள் கண்களில் கௌதமனின் முதுகு தழும்பு தெரிந்தது. கண்கள் ஏகத்திற்கும் விரிந்தன. தலையின் கீழ் ஆரம்பித்து நட்டெலும்பின் முழு நீளத்திற்கும் பூரான் போல் சென்றது தழும்பு. கௌதமன் அன்று தர்ஷனிடம் கூறியதெல்லாம் நினைவில் வந்தது. ‘நாலரை வருஷம் முன்ன ஒரு ஆக்சிடென்ட்… ஸ்பைன் இஞ்சுரி. அதுல படுத்த படுக்கை ஆகிட்டேன். ஒவ்வொரு நாளும் வலியில செத்து பிழைச்சேன்’. நேற்று கூறிய ‘வெட்டி ஒட்டி’ எனக் காதுக்குள் ரீங்காரமிட்டது. எவ்வளவு வலித்திருக்கும் இவனுக்கு? அன்றைய கௌதமனின் வலிக்காக இன்று யசோவின் மனம் துடித்தது.
அரவம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான் கௌதமன். கையில் காபி கோப்பையோடு அறை வாயிலில் நின்றிருந்தாள் யசோ. “இன்னும் நீ இங்க தான் இருக்கியா? நீ போயிட்டன்னு நினைச்சேன்” என்றவனுக்கு சூடான காபியோடு நின்றிருந்தவளைப் பார்க்கப் பார்க்க அத்தனை ஆசையாக இருந்தது.
“வா…” என யசோவை தன் அருகில் அழைத்தான். “இவ்வளவு நேரம் கத பேசிட்டு இருந்தவ, அப்படியே கண் அசந்துட்டா. இந்த பட்டாம்பூச்சிக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தா… இப்போ வருது பாரேன்”
இருவருமாக வண்ணத்துப் பூச்சியை வேடிக்கை பார்த்தனர். மகள் ஒரு கரத்திலிருக்க, மனதுக்கு பிடித்தவள் அருகில் இருக்க, அந்த நடுப்பகல் காபி இதமாக இறங்கியது கௌதமனுள்.
“உன் வீடு இங்க இருந்து நல்லா தெரியுது” என்றவன், “இதுக்கு முன்ன எங்க இருந்தீங்க?” எனப் பேச்சை வளர்க்கும் பொருட்டு கேட்டான்.
“பிறந்ததுல இருந்தே இங்க தான்.”
கௌதமனுக்குள் ஏதோ மணியடித்தது. அதை சுருங்கிய நெற்றி காட்டி கொடுத்தது. தோளில் உறங்கியிருந்த மகள் மெல்ல அசைந்தாள். மெல்லிசை காற்றில் கரைந்தது. இசை மீட்டிய பக்கம் யசோவின் பார்வை சென்றது. கௌதமனின் தோளில் படுத்திருந்த குழந்தையின் குட்டி கால்களிலிருந்த கொலுசை மெல்ல வருடினாள் யசோ. வெள்ளி முத்துகள் ஒன்றோடு ஒன்று இடித்துக் கொண்டு ரகசியமாகச் சிணுங்கின. மரங்களுக்கிடையே ஊடுருவி, ஜன்னல் வழியே வந்த சூரிய கதிர் குழந்தையில் கால்களில் விழுந்தது. கொலுசும் அதை அணிந்திருந்த கால்களும் யசோவின் கண்களுக்கு மிகவும் அழகாகத் தெரிந்தன. “ரொம்ப அழகா இருக்கு” என்றாள் பாதத்தை வருடி.
“ஊருக்கு போன போது அவ மாமா, விக்ரம் வாங்கி கொடுத்தான். நேத்தே உனக்கு காட்டணும்ன்னு போட்டு விட சொன்னா… அப்பறம் காட்டுவா” என்றவன் பார்வையும் அதே கொலுசின் மீது படிந்தது. மகளின் கொலுசோடு பார்வை நிற்காது, அதை வருடிக் கொண்டிருந்த விரலின் மீதும் படிந்தது. விரலில் பார்வை படிய, கௌதமன் இதயம் எம்பிக் குதித்தது.
தென்றல் வீசியது. யசொவின் முகம் வருடி கிச்சுகிச்சு மூட்டியது அடங்க மறுத்த மயிர் கற்றைகள். கொலுசை வருடிய விரல், மேல் எழுந்து முகத்தை வருடிக் கொண்டிருந்த சிகையை பின்னுக்கு தள்ளியது. விரல் சென்ற திசையோடு கௌதமனின் கண்களும் கவனமும் பயணித்தன. சுட்டு விரலில் படிந்த பார்வை நடு விரலுக்குச் சென்று… அதற்கு அடுத்த மோதிர விரலில் நிலைத்தது. அந்த விரலில் புதிதாக முளைத்திருந்த அந்த மோதிரம் கௌதமன் மூச்சை இழுத்துப் பிடித்தது.
இதய வடிவ மோதிரத்தில் வளைந்து நெளிந்திருந்த எழுத்தில் வெண்ணிற குட்டி குட்டி வைரக் கற்கள் மின்னலென மின்னின. மின்னலாக இருந்திருந்தால் கண்களை மட்டுமே துளைத்திருக்கும்… அது மின்னல் இல்லை என்பதால், யசோவின் மோதிரம் நேரே இதயத்தைத் தாக்கியது. அதன் அதிர்வை கௌதமனின் கண்கள் காட்டின.
சின்ன மோதிரமாக இருந்தால் என்ன… அதில் இருக்கும் வடிவம் சில மில்லிமீட்டர்களே இருந்தால் என்ன? கௌதமனுக்கு அந்த இதய மோதிரமும் அதில் குடி கொண்டிருக்கும் கிறுக்கலும் தெள்ள தெளிவாகத் தெரிந்தது. இதய வடிவ மோதிரத்திரத்தின் நடுவில் ஒரு கோடிருக்க, ஒரு பாதியின் மேல் பாக்கத்தில் ‘ல’வும், அடுத்த பாதியின் கீழ் பக்கம் அதே ‘ல’ சற்று நிமிர்ந்து நின்றிருந்தது.
தினமும்… இரண்டு அங்குல நீளத்திலும், இரண்டரை அங்குல அகலத்திலும் இதே கிறுக்கலை… தன் வலது மார்பில் பார்ப்பவனுக்கு அந்த கிறுக்கல் துல்லியமாகத் தெரியாதா என்ன?
இரண்டு அங்குல வரைபடம் காட்டிக் கொடுக்காததை எட்டு மில்லிமீட்டர் மோதிரம் காட்டி கொடுத்தது. அது கோடும் அல்ல… அந்த கிறுக்கல் ‘ல’வும் அல்ல. அது கேலியோகிராப்பி ‘y’! யஷோதராவை குறிக்கும் ஆங்கில எழுத்து ‘y’. மறு பாதியில் இருக்கும் எழுத்து, ரகுவீரை குறிக்கும் ‘R’.
சுமார் நான்கு வருடங்களாக ‘இந்த இதயத்தின் சொந்தக்காரி யாராகா இருக்கும்’ என்ற கௌதமனின் கேள்விக்கான விடை அவன் அருகே நிற்கிறது. இதயம் துடிக்க, “இந்த மோதிரம்…” என ஆரம்பித்தவனுக்கு அடுத்து உதிர்க்க வார்த்தைகள் தட்டுப்பாடாய் போனது.
“அப்பா பத்தர்பிளை” என மகள் கைதட்டிக் குதூகலித்தாள். யசோவின் கவனம் மீண்டும் ஜன்னலுக்கு வெளியே சென்றது. குட்டி குட்டியாக இரு வண்ணத்துப்பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன.
“விலுங்க அப்பா” என மகள் நெளிந்து வளைந்து கீழே இறங்கினாள்.
கௌதமன் கவனம் முழுவதும் யசோவின் கையிலிருந்த மோதிரத்தில் இருக்க, இறங்கவென நெளிந்த மகளை இறக்கி விட்டாள் யசோ.
“போ… போய் டிரெஸ் எடுத்துட்டு வா” என மகளை விரட்டி எழுந்தவளின் பார்வையில் இடையில் டவலோடு நின்றிருந்தவன் மார்பு தெரிந்தது. அவளால் என்றுமே மறக்கமுடியாத பரந்த மார்பில் தலை சாய்த்துப் பேசிய கதைகள் பல.
அவன் வலப்பக்க மார்பைப் பார்த்தாள். ‘வித் யூ, அன்ட்டில் தி சைலன்ஸ்’ என்று எழுதி, கீழே இருந்த இதயத்தில் YR பின்னிப் பிணைந்திருந்தன. யசோவின் உலகம் தட்டாமாலையாகச் சுற்றியது. ‘உனக்காக ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன். நீ கேட்டத என் இதயத்துல ஆழமா அழுத்தமா எழுதி வச்சிருக்கேன். யாரும் சொல்லாமலே நானே நமக்கான உறவ கண்டுபிடிச்சுடுவேன்’ என்றது அவள் காதுகளில் எதிரொலித்தது.
உலகம் சுற்றுவதை நிறுத்தியிருந்தது. யசோவின் தலை மட்டும் சுற்றுவதை நிறுத்தவில்லை. மார்பில் இருக்கும் டேட்டூ மட்டுமல்ல… அந்த பரந்து விரிந்த மார்பும் ரகுவினது என்றது யசோவின் சின்ன இதயம். யசோவின் முகத்தில் குழப்பமும் பயமும் சம விகிதத்திலிருந்தன.
“லகு” என வாய் முணுமுணுத்தது.
‘பிறந்ததுல இருந்தே இங்க தான்’, ‘பேபி அம்மா அலுக்கா இலுப்பாங்களா, லகு கிளீன் பண்ணி விலுவான்’. கௌதமனுக்குள் ஆயிரம் கேள்விகளும் சத்தங்களும் எழும்பித் தாண்டவமாடின.
நின்றிருப்பது ரகுவீரின் காதலியா இல்லை தன் காதலியா? யசோவின் மீது தனக்குக் காதல் துளிர்த்ததா? இல்லை அவன் காதலை தன் காதல் என ஏமாந்து போனானா?அவன் வனதேவதை என எண்ணியவள் அவன் தேவதை இல்லையோ? கௌதமன் உடைந்து போனான்.
“லகு…” மெல்ல மார்பை வருடினாள் யசோ. இதயத்தின் லப் டப் வேகம் எடுத்தது. கிடைக்கவே கிடைக்காது என்ற சந்தர்ப்பம் மீண்டும் அவள் முன்னால் இருக்க, யசோவின் இதயமும் படு வேகமாக இசைக்க ஆரம்பித்திருந்தது.
அவள் கரத்தை மார்போடு அழுத்திப் பிடித்தவன், “கௌதமன்” என்றான்.
ஷாக் அடித்த வேகத்தில் யசோவின் கை உருவப்பட்டது. மார்பைப் பார்த்தாள். அந்த உடலை மேல் இருந்து கீழ் வரை பார்த்தாள். அவள் ரகு. அவள் ரகுவின் முகம் இருக்க வேண்டிய இடத்தில் வேறு முகம் இருந்தது. ஏழு ஜான், ரகுவாக இருக்க, ஒரு ஜான் தலை, எட்டு ஜான் உருவத்தை “கௌதமன்” என்கிறது.
இருவரின் விழிகளும் சந்தித்து நகர மறுத்து நிலைத்து நின்றன. அவன் விழி சிகப்பேறி இருக்க, யசோவின் விழியில் வலி மட்டுமே. அதெப்படி ரகு கௌதமனாக முடியும்? ‘இல்லை’ என்பது போல் தலை அசைத்தவள் மின்னலென அவன் பார்வையை விட்டு மறைந்தாள்.
“அப்பா, ஏன் அம்மா ஸ்பீடா ஒதித்தாங்க?” எனத் தகப்பனிடம் வந்த குழந்தையின் பார்வையில் இதயவடிவு பூட்டை தாங்கிய தாங்கிய புத்தகம் விழுந்தது.
“அய்… நானுக்கு புது நோட்டு. பத்தர்பிளை வலைஞ்சு கலல் அடிக்கப் போலேன்” என்ற குழந்தையின் கரத்தில் ரகுவின் நினைவு புத்தகம் இருந்தது.
“என்ன நோட்டு?” என இவன் அதை வாங்கும் முன்னமே, மகள் பூட்டை இழுக்க, மயிலிறகு ஒன்றும், கடிதம் தாங்கிய உறை ஒன்றும், பத்திரிக்கை ஒன்றும் கீழே விழுந்தன.
“அப்பா இது பீக்காக் பெதரா?” மகள் மயிலிறகை எடுத்துக் கொள்ள, கௌதமன் அந்த நோட்டு புத்தகத்தையும், கீழே கிடந்த உறைகளையும் எடுத்தான்.
‘யஷோதரா வெட்ஸ் ரகுவீர்’ என்ற பத்திரிக்கையின் வாசகம் கௌதமனைச் சிலையாக மாற்றியதென்றால், ‘உனக்கு தான்டா மடையா… படி. மறக்கக்கூடாத நினைவுகளின் பெட்டகம்’ என்ற வாசகம் அவனை உலுக்கி போட்டது.
வீட்டிற்கு ஓடி வந்தவள் உடல் நடுங்கியது. தலை விண் விண் என வலித்தது. நடுங்கும் விரல்களை இறுக்கி பிடித்தாள். மோதிரம், கண் பார்வையில் விழுந்தது. கௌதமன் அதைக் கவனித்துக் கேட்டானே. அவளைப் போலவே அவனும் கண்டு கொண்டான் என விளங்கியது.
கண்களை இறுக மூடினாள். நிச்சய நாளும் அன்றைய இரவும் மூடிய கண்களுக்குள் வந்தது. “ரகு” என்றாள் வாய்விட்டு.
‘யசோதரா ரகுவீர்! இன்னைல இருந்து நீ என் பாதி பொண்டாட்டி. இந்த ஹார்ட்டுக்குள்ள இருக்க yயும் Rரும் எப்படி பின்னி பிணைஞ்சு இருக்கோ… நம்ம ஹார்ட்டும் எப்பவும் இப்படி தான் பின்னி பிணைஞ்சு இருக்கணும் பேபி. தாலி கட்டின பின்னாடி நீ என் முழு பொண்டாட்டி. அதுக்கப்பறம் நாம இப்படி…’ எனக் காதுகளில் அவளின் லகு, குட்டி குட்டி முத்தங்களோடு ரகசியம் கூறினான்.
திறந்து கிடந்த கதவு தட்டப்படவும் தலையை உயர்த்தினாள். கதவுக்கு வெளியே கண்களில் நீர் மினுமினுக்க ஆனந்தன் நின்றிருந்தான். “பிளீஸ் யசோ மா…” என்றான் ஆனந்தன், முதல் முதலாகப் பார்த்த ஆனந்தன் இவனில்லை. கர்வம் எல்லாம் கரைந்தவனாக, மனைவியை எப்படியேனும் பார்த்துவிட முடியாதா என்ற ஏக்கத்தோடு நின்றிருந்தான்.
இவன் நிலை மோசமா இல்லை தன் நிலை மோசமா எனப் பிரித்தறிய முடியா நிலையில் யசோ பார்த்தாள். மற்றவரிடம் கட்டளைகளை மட்டுமே பிறப்பித்து பழகியவன், “உன்ன என் கூட பிறக்காத தங்கையா நினைச்சு கேக்கறேன். ஒரு தரம் லாவண்ட்ட பேச ஹெல்ப் பண்ணு யசோ மா” என, யாரென்றே தெரியாத ஒரு பெண்ணிடம் கெஞ்சினான்.
கணவன் மற்றும் மகனைப் பிரிந்து லாவண்யா ஒன்றும் சிறக்கவில்லையே. இவன் குற்றத்திற்கு மன்னிப்பு உண்டு என ஒரு வேளை லாவண்யா முடிவெடுக்கலாம். இருவரும் பார்த்துப் பேசி ஒரு முடிவுக்கு வரட்டும், எனத் தோன்றவும், “உள்ள வாங்க” என அழைத்தவளின் பார்வை மதில் சுவர் பக்கம் சென்றது. காவலாளி மதில் சுவரின் கிர்ல் கேட்டை பெரிதாகத் திறக்க, வெண்ணிற லெக்சஸ் புழுதி பறக்க வெளியே சென்றது.