உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் அத்தியாயம் 58.1
அன்றைய நாள் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான தலைவலியோடு விடிந்திருக்க, உவகையோடு விடிந்திருந்தது யாழினியாளுக்கும் ராஜீவனுக்கும்.
யாழிக்கு, கேட்பார் இல்லாது அடுக்களையைச் சொப்பு சாமானாகப் பாவித்து விளையாட முடிந்தது. ராஜீவனுக்கு அப்படி என்ன இந்த விடியல் கொண்டுவந்ததாம்? கண்களை திறந்து கொண்டு கனவு காணும் ராஜீவனுக்கு, அன்றைய விடியல் எதைக் கொண்டு வந்திருக்கும்? ம்ம் ம்ம்ம்… அதே… அதையே தான்!
Advertisement
காலையில் கௌதமன் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த வேளை, ராஜீவனின் நாள் ஆரம்பித்துப் பல மணி துணிகளை விழுங்கியிருந்தது. “நான் சின்னதா இருக்கும் போது என்னோட பக்கத்து வீட்டுல தான் கிஷோர் அண்ணா இருந்தான். அப்போ நானும் அவனும் ரொம்ப கிளோஸ் ஃபிரெண்ட்ஸ். அவன் நைந்த் படிக்கும் போது ஷிப்ட் ஆகி போயிட்டான். ரொம்ப வருஷத்துக்கு அப்பறம் போன மாசம் அவன பார்த்தேன். கல்யாணம் பண்ண போறானாம். உங்கட்ட டேட் வாங்க ரொம்ப டிரை பண்ணி இருப்பான் போல… கிடைக்கல. எனக்காக அவன மீட் பண்ண முடியுமா? பக்கத்துல கும்பகோணத்துல தான் இருக்கான். நீங்க சொல்ற இடத்துக்கு, சொல்ற நேரத்துக்கு அவன கூட்டிட்டு வந்திடுறேன். பேசிட்டு, உங்களுக்குச் சரியா வந்தா ஒத்துகிட்டா போதும். முடிவு உங்க விருப்பம்.
எனக்காக ஒரே ஒரு அப்பாயின்ட்மென்ட் மட்டும் அவனுக்கு கொடுப்பீங்களா? அவன் உங்க சர்வீச புக் பண்ண டிரை பண்ணினான்னு தெரியறதுக்கு முன்ன, நானும் நீங்களும் ரொம்ப கிளோஸ்ன்னு கொஞ்சம் ஓவரா சீன் விட்டுட்டேன். இப்போ முடியாதுன்னு சொன்னா என் பேரு எக்கச்சக்கமா டேமேஜ் ஆகிடும்” என அலைபேசியின் வழியாகவே இவன் காலில் விழாத குறையாக கெஞ்சியவளுக்காக கும்பகோணத்திற்கு ஒரு வேலையாக வந்தவன் கிஷோரை இன்று காண்பதாகக் கூறியிருந்தான்.
‘ஒரு வேலையாக வந்தேன்’ என்பவனிடம், என்ன வேலை என்று கேட்டால், அவன் அதற்கும் பொய் கூற வேண்டிவரும் என்பதால் அந்த கேள்வியைத் தவிர்த்து விடலாம். வந்தவன் கிஷோரிடம் பேசிவிட்டான். ஆனால் அவன் எதிர்பார்த்த நபரைப் பார்க்க முடியவில்லை. கிஷோரோடு வருவேன் என்றவள் வராது போனது ராஜீவனுக்குள் சின்னதாக ஓர் ஏமாற்றத்தை உண்டுபண்ணியது என்று அவன் ஒத்துக் கொள்ளவில்லை என்றாலும் அது தான் உண்மை.
Advertisement
பேச்சு வார்த்தை முடியும் வரையுமே அவன் கண்கள் அவளை தேடி ஓய்ந்தன. ‘ஏன் வரல?’ என்ற எண்ணத்தோடு காரின் கதவைத் திறந்தவன் மனம் மலையளவு இல்லை என்றாலும் ஓரளவிற்கு வாட்டம் கொண்டிருந்தது.
Advertisement
பல வருடங்களுக்குப் பின் மலர்ந்த முகம், வாட்டம் கொண்டதைப் பொறுக்காத தென்றல் அவனை நோக்கி வீசியது. “ராஜீவன்” என்ற இனிமையான புல்லாங்குழல் இசை அவன் நாளை இனிமையாக்க ஆரம்பித்திருந்தது என்றால் சரியாக இருக்கும். அந்த பழக்கப்பட்ட சத்தத்திற்கு, சட்டென முகத்தில் புன்னகை அரும்பியது ராஜீவனுக்கு.
‘வந்துட்டா’ வாய் முணுமுணுத்தது. சத்தம் வந்த திசையை நோக்கி திரும்பினான் ராஜீவன். அழைத்தவளைப் பார்த்தவன் முகத்தில் பெரிதாய் புன்னகை விரிய முற்பட, அதை அடக்கி வரவழைத்த ஆச்சரிய முகபாவத்தோடு சின்னதாகப் புன்னகையை உதிர்த்தான்.
மூச்சு வாங்க ஓடிவந்திருந்தவளைப் பார்த்தவனுக்கு மூச்சு வாங்கவில்லை என்று அவன் கூறினால், சத்தியமாக அது பொய். பார்த்த நேரம் எல்லாம் ஜீன்ஸ் மற்றும் தொள தொள காட்டன் சட்டையில் இருப்பவள், இன்று வளைவு நெளிவுகளைச் சற்று தூக்கலாகவே காட்டும் சில்க் கிரேப் புடவையில் வந்து நின்றால், அவனும் என்ன செய்வான்? கொஞ்சமே கொஞ்சம் தடுமாறிப் போனான் ராஜீவன்.
காருக்குள் ஏறுவதற்காக ஓட்டுநர் இருக்கையின் பக்கம் இருந்த கதவை திறந்து நின்றிருந்தவன், உள்ளிருந்த தண்ணீரை எடுத்து நீட்டினான்.
புன்னகையை உதிர்த்து அவனை நிறைத்தவள் அண்ணாந்து நீரை வாய்க்குள் ஊற்றினாள். தொண்டை ஏறி இறங்கியது. காணாததைக் கண்டதை போல் அவள் நீர் அருந்துவதைப் பார்த்து நின்றிருந்தான். அவள் குடிக்க, இவனுக்குத் தாகம் ஏற்பட்டது. என்ன தாகம் என்பது அவரவர் கற்பனைக்கு. இதழ் எனும் அணையைத் தாண்டி வழிந்த நீர் இதழை நனைத்து, தொண்டையை வருடி, வழிந்து ரவிக்கைக்குள் இறங்கும் வரை பார்த்து நின்றவன் என்ன நினைத்தானோ, நெற்றியை தேய்துவிட்டுக் கொண்டே பார்வையை சுற்றத்தில் பதித்தான். கண் காணவில்லை என்றால் என்ன? மனம், பள்ளத்தாக்கிலும் மேட்டிலும் தாராளமாகவே புல் மேய்ந்தது.
சில மாதங்களாகத் தான் தெரியும் இவளை. தயாரிப்பாளரின் மகள் என்று அறிமுகமாகவில்லை. சினிமாட்டோகிராப்பி சொல்லித் தாருங்கள் என வந்தவளின் விருப்பம் கேமிராவை காட்டிலும் அதைப் பிடித்திருப்பவன் மீது என அங்கிருந்த அனைவருக்குமே புரிந்திருக்க, இவனுக்கு புரியாதா? புரிந்தது விஸ்வாமித்திரனுக்கு. சில நாள்களிலேயே விஸ்வாமித்திரனின் தவத்தை அலட்டல் இல்லாத நிஹிரா கலைத்தாள். லாஸ் ஏஜ்சலிசில் படிக்கக் கிடைத்த வாய்ப்பையும் விட்டு விட்டு, தன்னையே ஆட்டுக்குட்டியைப் போல் சுற்றிவரும் இந்த குட்டி முயலை பிடிக்கவும் செய்கிறது. ஆனால் சூடுபட்ட பூனை, பால் அருகில் செல்லாது தள்ளியே நிற்கிறது.
இன்றும் இவள் கேட்டதற்காகவே திருமணமாகப் போகும் தம்பதியரிடம் ‘சினிமாட்டோகிராபிக் பிரி-வெட்டிங், போஸ்ட் வெட்டிங் ஷூட்’ பற்றிப் பேசி முடிவெடுக்கத் தஞ்சையிலிருந்து கும்பகோணம் வந்தான். பொதுவாக அவனைத் தேடி அவன் அலுவலகத்திற்கு வருவார்கள். இல்லை, இவன் அலுவலகத்தில் இருந்து யாரேனும் இவ்வகை பேச்சு வார்த்தையைப் பார்த்துக் கொள்வர். இரு வருடங்களாக இவனாக சென்று ஒருவரையும் பார்ப்பதில்லை என்றாலும், “எனக்காக பிளீஸ்” என இவள் கேட்டாள் என்ற ஒரே காரணத்திற்காக தன் வேலையை எல்லாம் மறந்து இங்கு வந்து நிற்கிறான்.
“கொஞ்சம் லேட் ஆகிடுச்சு” என்றவள், “நல்ல தாகம்” எனப் பாட்டிலை அவனிடம் கொடுத்தாள். ‘கொஞ்சமா லேட்?’ என நினைத்தவன், “என்ன இந்த பக்கம்?” எனத் தெரியாதவன் போல் கேட்டான்.
“சென்னயில இருந்து காபி குடிக்க கும்பகோணத்துக்கு… ம்ம்ம்… குடிச்சாச்சா?” எனக் கேட்டவன், சிரித்தால் முத்து உதிர்ந்துவிடும் என நினைத்தான் போலும்.
“இங்க வந்து பார்த்தா பர்ஸ்ல காசு இல்ல. ஏதேச்சையா உங்கள பார்த்தேனா, ஒரு கப் டிகிரி காபி வாங்கி குடுங்கன்னு கேக்க வந்தேன்” என்றாள் நமட்டு சிரிப்போடே.
“ஏதேச்சையா?” என அவளை ஒரு முறை கீழிருந்து மேல் பார்த்தவன், “ஏறு” என்று காரின் மறுபக்க கதவைத் திறந்து விட்டான்.
காரில் ஏறாது, “நான் இந்த புடவையில நல்லா இருக்கேன் இல்ல?” என ஒரு முறை தன்னை சுற்றிக் காட்டினாள். இதழ் கொள்ளா புன்னகையோடே, “சுமாரா…” என்றவன், “ஏறு” என காரை சுற்றிக் கொண்டு அவன் இருக்கையை நோக்கிச் சென்றான்.
“கொலஸ்ட்ரால் பேசுது” என்ற முணுமுணுப்பு காதில் நன்றாகவே விழுந்தது. ராஜீவன் மனம் உல்லாசமாக விசில் அடித்தது. பட்டுக்கூட்டில் தனது காயபட்ட மனதைப் பாதுகாப்பாக வைத்திருந்த ராஜீவன், நிஹிரா என்ற பெண் முன் அவன் பாதுகாப்பு வளையம் உடைவதை உணர்ந்தானா தெரியவில்லை.
அவனையே பார்த்து அமர்ந்திருப்பவளின் பக்கம் திரும்பிப் பார்த்தவன், ‘என்ன?’ என்பது போல் புருவம் உயர்த்த, “நீங்க சிரிச்சா அழகா இருப்பீங்க ஜீவன். எப்பவாது சிரிக்கலாம். தப்பில்ல, சிரிச்சா சாமி குத்தமாகிடாது” என்றாள் இதழ் சுழித்து. சுழிக்கும் இதழை என்ன செய்யலாம் என உதித்த கேள்வியும் அவன் பதில்களைப் போலவே உள்ளுக்குள் புதைந்து போனது.
கடை தெருவை அடைந்தவர்கள் காரை ஓரம் நிறுத்தி, தெருவிற்குள் நுழைந்தனர். அன்று கும்பகோண மக்கள் மீது மேகம் கருணை காட்டியதால் இருவரும் வெயில் படராத தெருக்களில் உலா வந்தனர். ஒரு டபரா செட்டை வாங்கக் கடைத் தெருவிலிருந்த அனைத்துவித கடைகளுக்குள்ளும் நுழைந்தனர். ஏன் வந்தோம், எதற்கு வந்தோம் என மறந்து பல கடைகளை ஏறி இறங்கினர்.
“நான் சின்னதா இருக்கும் போது, அப்பா ஊட்டிக்கு போறதா பேசிட்டு இருந்தாரா… அத கேட்டுட்டு ‘நானும் கூட வர்றேன்’னு கேட்டா, முடியாது அங்க குளிர்ன்னு அம்மா சொல்லிட்டாங்க. நான் என்ன பண்ணினேன் தெரியுமா? அப்பாக்கு தெரியாம காரோட பின் சீட்டுல ஒளிஞ்சுகிட்டேன்.” என ஆர்வமாக அவள் குழந்தைப் பருவம் முதல் அனைத்தையும் அவனிடம் ஒப்புவித்தாள்.
“அப்பா பாத்தாங்களா இல்லையா?”
“இல்ல… அப்பாவும் டிரைவர் அங்கிளோட முன்னாடி உக்காந்துகிட்டாங்க. பின் சீட்டுக்கு கீழ ஒளிஞ்சுகிட்ட நான் அப்படியே தூங்கிட்டேன். அம்மா குழந்தைய காணம்ன்னு ஊர கூட்ட… யூ டர்ன் போட்டு வீட்டுக்கு போர வழில அப்பா என்னைப் பார்த்தார்.”
“அப்பறம்? முதுகுல டின் கட்டினாங்களா?”
“ஆச தான் உங்களுக்கு. ஐஞ்சு வயசு குழந்தைய யாராவது அடிப்பாங்களா? அதுவும் எங்க அப்பாக்கு நான்னா உயிர். எதுனாலும் என் இஷ்டம் தான்.” என அவனைப் பார்த்தவள், “அப்பறம் என்ன… அப்பாவோட மடியில உக்காந்துட்டே நானும் ஊட்டிக்குப் போய் ஷூட்டிங் பார்த்தேன்” என முடித்தாள்.
“நான் ஒண்ணு சொன்னா… நீங்க ஒண்ணு சொல்லணும்” என அவன் வாழ்க்கை வரலாற்றையும் கிளறினாள். முத்தை உதிற்கும் நோக்கமில்லாதவன் சிக்கனமாகப் புன்னகைத்தான்.
“கஞ்சதனத்துல இவ்வளவு தாராளம் ஆகாது கேமராமேன்” என அலுத்து கொண்டவளுக்கு மீண்டும் வசீகர புன்னகையைப் பதிலாகக் கொடுத்தான்.
“சரி விடுங்க… உங்களுக்கும் சேர்த்து நானே பேசறேன்” என்றவள் காட்டாற்றைப் போல் அவனை அடித்துக் கொண்டு சென்றாள். நேரம் அடித்து பிடித்துக் கொண்டு ஓடுவதை என்ன முயன்றும் ராஜீவனால் பிடித்து நிறுத்த முடியவில்லை. “ரொம்ப நேரமா சுத்தினதுல பசிக்குது ஜீவன்” என வயிற்றை தேய்த்தாள். புடவை மறைக்காத வயிறு, ஒட்டிப் போயிருந்தது.
“உங்களுக்கு பசிக்கலியா?” எனக் கேட்டவளிடம், “பசிக்குது” என்றான் ஒற்றை வார்த்தையில்.
அருகிலிருந்த உணவகம் ஒன்றில் அன்றைய ஸ்பெஷல் என்ன என்று கேட்டு அதையே வாங்கிக் கொண்டனர். கூட்டம் வந்தது, கூட்டம் சலசலத்தது. கூட்டம் சென்றது. அவள் சலசலப்பு அடங்கவில்லை. அவனுக்கும் காது வலிக்கவில்லை. ‘இந்த ஸ்பீட்ல சாப்பிட்டா, அப்பிடியே ஈவ்னிங் காபியும், நைட் டின்னரையும் இங்கயே முடிச்சுடலாம்’ என்ற மனசாட்சியை ஒதுக்கி தள்ளினான்.
பேசினாள், பேசினாள்… பேசிக் கொண்டே இருந்தாள். அடுத்திருந்த மேசையிலிருந்து பகோடாவின் மணமும் காபியின் மணமும் நாசியை வருடியது. நீளக் கோப்பையில் இருந்த பனிக்கூழை அவள் முடிக்கும் வரை காத்திருந்தான். “இன்னும் ஏதாவது வேணுமா?” எனக் கேட்டவனிடம், மீண்டும் வயிற்றைத் தடவி, “ஃபுள்” என அசட்டுச் சிரிப்பை உதிர்த்தாள். வயிற்றை மறைத்த மேசையின் மீது கோபம் எழுந்ததை நினைத்த மாத்திரத்தில் ‘நீயா டா’ எனச் சிரிப்பு வந்தது ராஜீவனுக்கு.
“ஏன் சிரிக்கறிங்க?”
“ஒண்ணும் இல்ல… அவங்களா வெளியில போக சொல்றதுக்கு முன்ன கிளம்பலாம்” என்றான். “அப்படி எல்லாம் சொல்ல மாட்டாங்க” என்றவள், “சொல்லுவாங்களோ?” எனச் சுற்றி ஒருமுறை பார்த்தாள். ஒருவரும் அவர்களைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. “சொல்ல மாட்டாங்க. வா போலாம்” சிரித்தவன், கதவைத் திறந்துவிட்டான்.
மீண்டுமாகக் கடைத் தெருவை வலம் வந்தனர். முக்குக்கு ஒரு கோவில் என கும்பகோணம் அதன் தன்மை மாறாது நின்றது. “எவ்வளவு கோவில் இல்ல? எனக்கு இந்த மாதிரி பழமை மாறாத கோவில் ரொம்ப பிடிக்கும். மார்கெட் பிளேஸ்ல இப்படிப்பட்ட கோவில் எல்லாம் எங்க பாக்க முடியும்? உள்ள போயிட்டு வருவோமா? கண்டுக்காம போனா சாமி கோவிச்சுக்கும். போலாமா?” எனக் கேட்டவள், அவனோடு கோவிலுக்குள் சென்றாள்.
ஒன்றாகக் கோவிலில் நுழைந்தது இருவருக்கும் மனதில் விவரிக்க முடியா இனிமையைப் பரப்பியது. தன் அருகிலிருந்தவனை பார்த்து நிஹிரா புன்னகைத்தாள். மனதின் நிறைவால் எழுந்த அவளின் புன்னகை ஜீவனை ஊடுவி அவன் ஜீவனை நிறைத்தது. அவன் கண்களோடு அவன் இதழும் புன்னகைத்தது.
எல்லாம் சரியாக நகரவேண்டும் என்பதே அவளின் வேண்டுதலாக இருக்க, அவனுக்கு வேண்டுதல் என எதுவும் இல்லை போலும். அவளையே பார்த்திருந்தான்.
“தஞ்சாவூர் பெரிய கோவில் மாதிரியே இதுவும் பாறையில செதுக்கி இருக்காங்க என்ன?” என்றவள் விரல்கள் கற்தூணை ஆசையோடு வருடின. “அது தமிழர்களோட பொற்காலம் இல்ல… அப்போ நாம பிறந்திருந்தா இத எல்லாம் எப்படி செதுக்கினாங்கன்னு நேர்ல பார்த்திருக்கலாம்” லயித்து அவள் கூற, “யாருக்குத் தெரியும். முன் ஜென்மத்துல பார்த்திருந்தாலும் பார்த்திருக்கலாம்” எனப் புன்னகைத்தான்.
அவள் கற்பனையில் இருவருமாகக் குதிரையில் நகர உலா வந்தனர். ராஜ உடையிலும் ஜீவன் அவள் ஜீவனைச் சீண்டிப் பார்த்தான். சற்று நேரம் தங்களை மறந்து கோவிலைச் சுற்றி வந்தனர். “உக்காரலாமா?” எனக் கேட்டு அவனோடு அமர்ந்தாள்.
இருவருக்குள்ளும் விவரிக்க முடியா உணர்வு. கடந்த நிமிடங்கள் அமைதியைத் தத்தெடுக் கொண்டு அமைதியாக ஊர்ந்து சென்றன. உணர மறுத்த பல உணர்வுகளும் அந்த அமைதியில் உயிர்கொண்டது.
அமைதியாக அமர்ந்திருந்த நிஹிராவின் முகம் மலர்ந்திருக்க, இதழ்கள் அவ்வப்போது விரிந்து அடங்கியது. அவள் மனம் அவளுக்கு புரிந்ததாலும், அருகில் இருப்பவன் மனம் புரிந்ததாலும் ஏற்பட்ட மகிழ்ச்சியின் வெளிப்பாடு அது. ராஜீவன் ஆழ மூச்சுவிட்டான். அவனுக்கும் அவன் மனம் புரிகிறது. அதனால் உள்ளுக்குள் ஒரு பயம் எழுந்து அடங்கியது.
நிஹிரா தன்னிடம் மட்டுமா இப்படிச் சிரித்துப் பேசுகிறாள்? இல்லையே… அவள் சுவாபமே அப்படி தான். இனிமையான பெண். அதிகம் பேசுவாள். முன்பின் அறிமுகமில்லாத நபரிடம் கூட அவளால் அரை மணி நேரம் சிரித்துப் பேச முடியும். அப்படியிருக்க, அவள் அவனோடு பழகுவதை என்னவென்று எடுத்துக்கொள்ளுவது? அப்படியே நிஹிரா தன் மீது அன்பு பூண்டிருந்தாலும், அவன் அன்பு வைத்த எந்த ஜீவனுமே அவனுக்கு நிலைத்ததில்லை என்ற பயம் ராஜீவனின் இன்ப நிமிடங்களைத் துன்பமாக்கியது.
ஏகாந்த உணர்வை “போலாமா?” என்ற ராஜீவனின் கேள்வியால் குலைக்க முடியாது போனதால், “ஓ எஸ்” எனத் துள்ளலோடு எழுந்தாள் நிஹிரா.
இலக்கில்லாத அவர்கள் நடை தொடர்ந்தது. இருவரும் சுற்றிய தெருக்களை மீண்டும் சுற்றிவரும் உணர்வில்லாது சுற்றினர்.
“ஜீவன் ஜீவன்… முராரி ஸ்வீட்ஸ் போலாமா? அம்மாக்கு இங்க கிடைக்கிற டிரை ஜாமுனும், பால் கோவாவும் ரொம்ப பிடிக்கும்” என எதிரில் தெரிந்த இனிப்பகத்தைக் காட்டி கேட்டாள்.
“தெரு தெருவா சுத்தறதுக்கு அதுவே பெட்டர். வா” என்றவன், அவளோடு கடைக்குள் நுழைந்தான். அம்மாவிற்கு வாங்க என்று தானே அழைத்தாள்? மறந்துவிட்டாள் போலும். பாதாம் பால், சோன்பப்படி எனக் கிடைத்ததை உள்ளே தள்ள ஆரம்பித்தாள்.
“சாப்பிடுங்க ஜீவன்… டிரை ஃபுரூஸ் வச்சு செஞ்சிருக்காங்க. ஹெல்தி தான்” என அவன் முன் நகர்த்தி வைத்த இனிப்பைப் பார்த்தவனுக்குத் திகட்டியது.
“நீ சாப்டு. எனக்கு வேண்டா.” என்றவனிடம், “எனக்கு அலைஞ்ச அலைச்சல்ல மதியம் சாப்டது எல்லாம் ஜீரணமே ஆகிடுச்சு. வெயிலுக்கு சில்லுன்னு குடிச்சா தேவலாம்” என்றவள் சில்லென இருந்த பாதாம் பாலை உள்ளிறக்கி, “ம்ம்ம்…” என்றாள் கண்கள் மூடி ரசனையோடே.
உதட்டைப் பார்த்தான். அதைத் தடவிச் சென்ற நாவை பார்த்தான். “ஆமா மிஸ் பண்ண கூடாதுன்னு தான் தோணுது” என்றான், பிடரியை அழுந்த தேய்த்து.
“டிரை பண்றீங்களா?” என்றவளைப் பார்த்தவனுக்கு ‘டிரை பண்ண’ ஆசை வந்தது. அவள் கரத்தில் இருந்த பானத்தை அவன் முன் நீட்டினாள். ‘இதையா?’ எனச் சலிப்போடு எண்ணியவனுக்கு வெட்கமும் சிரிப்பும் ஒன்று சேர வந்து தொலைத்தது. வேண்டாம் என்பது போல் தலையசைத்தான்.
“யுவர் லாஸ்” என்றவள் பானத்தைப் பருகினாள். அவனும் ரசனையோடே பருகினான். அவள் உதட்டால். அவன் விழியால்.
இருவரும் கால் நடையாகக் கும்பகோண சந்துபொந்துகளை எல்லாம் அளந்து, கூகிள் மேப்பை சரி பார்த்தனர். என்ன முயன்றும் சூரிய கதிர்களுக்கு இவர்களைத் தழுவ அனுமதி அளிக்கப்படாததால், ‘நான் கோவமா போறேன்’ எனச் சூரியன் மேற்கை நோக்கி நடை போட்டது.