உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் அத்தியாயம் 60.1
தினம் தினம் ஆனந்தனின் வருகையும் கெஞ்சலும் யசோவை லாவண்யாவிடம் பேச வைத்தது. “பார்த்து?” எனக் கேட்டவள், என்ன நினைத்தாளோ, கணவனுக்குத் தரிசனம் கொடுக்க சம்மதித்தாள். “ஒருநாள் நீ வரும் போது, வர சொல்லு” என லாவண்யாவிடம் இருந்து தலையசைப்பு வந்தது.
அன்று அவள் தங்கி வேலை செய்யும் ‘அன்னை மாதா அன்பு இல்லதிற்குக் கௌதமன் செல்லவிருப்பதாக இருந்தது. வருடத்திற்கு ஒருமுறை கௌதமன் நேரில் சென்று கணிசமான தொகையைக் கொடுப்பது வழமை என்பதால், லாவண்யாவின் மன அமைதிக்காக அங்குக் கௌதமன் ஒரு வேலை கேட்டிருக்க, உடனே அது கிடைத்தும் விட்டது.
Advertisement
முதல் முறை கௌதமன், மகளோடும் யசோவோடும் தூத்துக்குடி சென்றான். மகள் கிடந்த மரத்தடி நிலம் அந்த இல்லத்துக் குழந்தைகளுக்குப் பூங்காவாக மாறியிருந்தது. பச்சை பசேல் என காட்சியளித்த இடத்தை யசோ ஆர்வத்தோடு பார்த்தாள். கௌதமனைக் கண்ட சரவணன் வாய் கொள்ளப் புன்னகையோடே அவன் கரம் பற்றி உள்ளே அழைத்துச் சென்றான். யாழியைப் பார்த்தவன் சிரித்தான்.
‘இவனும் இவன் ஆசிக்காவும்’ என நினைத்த கௌதமன், தன் முன் வந்து நின்ற ஃபாதரிடம், “என் பொண்ணு யாழினியாள், இவங்க அவ அம்மா யசோதரா” என மகளையும், மகளை பெற்றவளையும் அறிமுகப்படுத்தினான்.
Advertisement
“வாங்க மா, வாங்க யாழினியாள்” என வரவேற்ற பாதிரி, “ஒரு குட்டி பாப்பா வந்திருக்கா, பாக்கலாம?” என யாழின் கரம் பற்றி இல்லத்தினுள் அழைத்துச் சென்றார்.
Advertisement
‘அம்மா’ என அறிமுகப்படுத்திய கௌதமனைப் பார்த்தாள் யசோ. “அம்மா தான? அதுல குழப்பம் இல்லியே?” இவன் அவள் காதில் கிசுகிசுப்பாகக் கேட்க, அத்தனை அவசரமாக ஆம்… இல்லை என்று தலையசைத்தாள்.
“நீ என் குழந்தைக்கு அம்மான்னா, எனக்கு பொண்டாட்டி தான? அத ஒத்துக்க ஏண்டி உனக்கு வலிக்குது?” எனத் தோளை இடித்துச் சென்றவனை இயலாமையோடே பார்த்தாள். கௌதமனாக தெரிகிறான். ரகுவாக உணர வைக்கிறான். யாராக அவனைப் பார்ப்பது?
அன்றைய பொழுதை மகள் ஆர்வமாக இல்லத்துப் பிள்ளைகளோடு கழித்தாள். மகள் ஓடிய இடமெல்லாம் யசோவும் சலிக்காது ஓடினாள். “வெளியில எங்கயும் போக முடியாது. பாப்பா விளையாடட்டும். நீங்க உக்காருங்க” என அவர் அமர்ந்திருந்த படியைக் காட்டினார் பரிமளா.
Advertisement
கூட்டமாகக் குழந்தைகள் மரத்தடி நிழலில் விளையாடிக் கொண்டிருந்தனர். யாழி இங்கும் அங்குமாக ஓடிக் கொண்டிருந்தாள்.
“நாலு மாசக் குழந்தைன்னு நினைக்கிறேன் அப்போ…” என பரிமளா ஆரம்பிக்க, “என்ன?” எனக் கேட்ட யசோவின் கவனம் பரிமளாவின் பக்கம் சென்றது. “உங்க மகளோட முதல் தரம் உங்க ஹஸ்பன்ட் இங்க வரும் போது, யாழிக்கு நாலு மாசம் இல்ல?” எனக் கேட்டவர் பதிலை எதிர்பார்க்கவில்லை.
“உங்க மக கால் வச்ச நேரம் எங்களுக்கு நல்ல நேரம் ஆரம்பிச்சுது. அதுக்கப்பறம் தான் இந்த இல்லத்து குழந்தைகளுக்கு இவ்வளவு வசதி. வருஷத்துக்கு ஒரு தரம் கௌதமன் சார் வந்து பார்த்துட்டு குழந்தைகளுக்குத் தேவையான வசதிய செய்துட்டு போவார். பல பெரிய இடத்துல இருந்து கணிசமான தொகை வர ஏற்பாடு பண்ணிக் கொடுத்தார். இந்த இடம், பக்கத்தல் இருக்க அந்த பெரிய பிளே கிரௌண்ட், அந்த ஸ்கூல் எல்லாமே இந்த நாலு வருஷத்துல சார் செய்து கொடுத்தது. இந்த குழந்தைங்க எல்லாம் படிச்சு, ஒரு வேலைக்குப் போய் செட்டில் ஆகர வரைக்கும் நாம தான் பாத்துக்கணும் பரிமளான்னு சொல்லுவார். நல்ல மனுஷங்கள பார்க்கிறது அபூர்வம். நான் பார்க்கிறேன்” என்றார் பரிமளா.
ஓடிக் கொண்டிருந்த யாழி, கௌதமனை அங்குப் பார்க்கவும், “அப்பா, தூக்குங்க” என கைகளைத் தூக்கிக் கொண்டே ஓடினாள்.
மகள் ஓடி வரும் போதே அள்ளி தூக்கிக் கொள்ள, “அப்பா ஷோல்டல்ல ப்பா” என்றாள். மகளைத் தோளுக்கு மாற்றினான்.
“பே கௌண்ட் போலாம் பா” என்றாள். “அம்மாக்கு டாடா காட்டிட்டு வா” என்றவன், மகளை அருகிலிருந்த விளையாட்டு மைதானம் அழைத்துச் சென்றான்.
“இன்னும் உங்க மக அப்பா செல்லம் தான் போல” எனப் புன்னகைத்த பரிமளா, முதல் முதலாக யாழியை பார்த்த நாளுக்கு சென்றார். “அன்னைக்கும் இப்படி தான் அவர் கைக்குள்ள இருந்தா குழந்த. ஈரம் பட்டதும் அப்படி ஒரு அழுக அழுதவ, அவ அப்பா தூக்கவும் அவருக்குள்ள ஒடுங்கிக்கிட்டா. அவள ஒவ்வொரு முறை அவர் தூக்கும் போதும் ஏதோ பொக்கிஷத்த எடுக்கிற மாதிரி அவ்வளவு பத்திரமா எடுப்பார்.
எப்படி டா இவ்வளவு சின்ன குழந்தைய இந்த மனுஷன நம்பி கொடுத்தாங்கன்னு தான் பார்த்த நிமிஷம் நினைச்சேன். அவர் போகும் போது, இவர விட இந்த குழந்தைய இவ்வளவு அன்பாவும் அக்கறையாவும் வேற ஒருத்தராலையும் பார்த்துக்கவே முடியாதுன்னு நான் ஃபாதர் கிட்ட சொன்னேன்” என்றார்.
பரிமளா சென்றபின்னும் யசோவினுள் எழுந்த பிரமிப்பு அடங்காது மனம் அலைபாய்ந்தது. பிள்ளைகள் அனைவரையும் சரவணன் விளையாட அழைத்துச் சென்றிருக்க, அமைதியாக தேவாலயத்தைச் சுற்றி நடந்தாள். யாழியை முதல் பிறந்த நாளன்று பார்த்ததுமே தன் மனதை அந்த குட்டி லட்டு வாரிச் சுட்டிக் கொண்டதை நினைத்தாள்.
கௌதமன் எப்பொழுது எந்த ஷணம் தன்னுள் நுழைந்தான் எனத் தெரியவில்லை. ஏன்? எப்படி? என்றும் தெரியவில்லை. அவனுக்கு தன்னை ஏன் பிடித்தது என்றும் தெரியவில்லை. பிடித்ததிற்கு காரண காரியங்கள் தேவையில்லை போலும். இருவருக்கும் பாலமாக அமைந்தது என்னவோ யாழி தான். ஆனால் இன்று அவர்கள் விருப்பம் யாழியைத் தாண்டி நிற்கிறது.
வளைவில் யாரோ பேசும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தவள் அதிர்ந்து நின்றாள். ஆனந்தன் சாஷ்டாங்கமாக லாவண்யாவின் காலில் விழுந்திருந்தான். அசையாது நின்றிருந்தாள் லாவண்யா. “தப்பு தான்… எனக்கு வலிச்சத உனக்குத் திருப்பி கொடுக்க நினைச்சு ஆரம்பிச்சேன். சும்மா மேலோட்டமா… உன்ன வெறுப்பேத்த ஆரம்பிச்சது எந்த கட்டத்துல திசை மாறிச்சுன்னு தெரியல. நீ விவாகரத்து கேட்டு நிப்பன்னு நான் நினைச்சு கூட பாக்கல. நீ இல்லாத வீடு எனக்கு நரகமா தெரியுது. நான்… செய்தது தப்பு. உன்ன தவற என் மனசுலயும் வாழ்க்கையிலயும் யாருக்கும் இடமில்ல. பிளீஸ் என்னை மன்னிச்சு…” அவன் ஏதேதோ கூறிக் கொண்டிருந்தான்.
அதற்கு மேல் அங்கு நிற்பது சரியில்லை என நினைத்த யசோ அங்கிருந்து மகள் இருக்கும் விளையாட்டு மைதானம் சென்றாள். மனம் லாவண்யாவையே சுற்றி வந்தது. அவள் பார்த்துப் பழகிய மென்மையான லாவண் எங்கோ காணாது போயிருக்க, இவள் இறுகிப் போயிருந்தாள். அவன் காலை பிடித்துக் கொண்டு கிடக்க, யாருக்கு வந்த விருந்தோவென நின்று கொண்டிருப்பவள் காதுகளில் ஏதேனும் விழுகிறதா எனத் தெரியவில்லை.
அங்கு தான் காட்சி சரியில்லை என இங்கு வந்தால், இங்கு என்ன நடக்கிறது எனப் பார்த்தாள். மகள் அங்கிருந்த மணலில் மற்ற குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருக்க, கௌதமன் அந்த சரவணனோடும், வேறு ஒரு பெண்ணோடும் பேசிக் கொண்டிருந்தான். இல்லை இல்லை… கடித்து குதறக் காத்திருந்தான்.
கனலைக் கக்கிக்கொண்டிருக்கும் கண்களோடு, கால்களை அகட்டி, கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டி நின்ற அவன் தோற்றம் யசோவிற்கு புதிது. பல இடங்களில் கௌதமனிடம் ரகுவை பார்த்திருக்கிறாள். ஆனால் சட்டென கோபப்படும் ரகுவை அவள் கௌதமனிடம் பார்த்ததே இல்லை. இன்று அதையும் பார்த்தாயிற்று.
“அம்மா” என ஓடிவந்த யாழியோடு சென்று மணலில் அமர்ந்தாலும், அவ்வப்போது அவள் தலை கௌதமன் பக்கம் சென்றது. காலில் விழப் போன பெண்ணை ஒற்றை விரலை நீட்டி எச்சரித்தான். அவள் எதையோ யாசித்தாள். யாழியின் பக்கம் பார்த்தாள். மீண்டும் மூக்கை துடைத்தாள்.
கௌதமனைப் பார்த்து கை கூப்பினாள். அவன் முறைத்தான்… சத்தமில்லாது வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான். சரவணன், அப்பாவியாக அந்த பெண்ணையும் கௌதமனையும் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த பெண் கண்களைக் கசக்குவதும், மூக்கை துப்பட்டாவின் துடைப்பதுமாக நின்றிருந்தாள்.
“அம்மா… வீடு கட்டுலுங்க. பெலிய டீ வைக்கலாம்.” என்ற மகள் கீழே கிடந்த குச்சி ஒன்றை எடுக்க எழுந்து ஓட, ஓடும் மகள் பக்கம் கவனம் சென்றது. சிறிது நேரம் சென்று கௌதமன் இருந்த இடத்தை திரும்பிப் பார்த்தாள். கௌதமனோடு இருந்த இருவரும் சென்றிருந்தனர். கௌதமன் தலைக்குப் பின் கை கொடுத்து, கால்களை நீட்டிக் கொண்டு மரத்தடி பெஞ்சில் கண்கள் மூடி அமர்ந்திருந்தான்.
“நீ விளையாடு யாழி” என்றவள், நீண்ட நாளுக்குப் பின் கௌதமன் அருகில் அமர்ந்தாள்.
கண்கள் திறவாதே, “என்ன?” என்றான். குரல் கடுகடுத்தது.
“என்ன ஆச்சு?” என்றவளை அவன் பார்த்த பார்வையின் பொருள் விளங்கவில்லை.
“ஓஹ்… மேடத்துக்கு நான் அப்செட்டா இருக்கது கூட தெரியுதே” என்றவன் மீண்டும் கண்களை மூடிக் கொண்டான். மனம் தாறுமாறாகத் துடித்துக் கொண்டிருந்தது. வாய் திறந்தால் அனைத்தையும் கொட்டிவிடும் அபாயம் இருந்ததால் அதை இறுக மூட முயன்றான்.
“கௌதமன்… என்ன ஆச்சு?”
“என்ன ஆகணும் ஹா? இன்னும் என்ன ஆகணும் எனக்கு?” என இவன் சத்தம் போடவும், அமர்ந்திருந்த இடத்திலிருந்து மிரட்சியோடு இவனையே பார்த்தாள் குழந்தை.
“ஒண்ணும் இல்ல யாழிமா. நீ விளையாடு” என்றதும், “சளிப்பா” என்ற குழந்தை விளையாட்டைத் தொடர்ந்தாள்.
“யார் அவங்க? என்ன சொன்னாங்க… ஏன் இவ்வளவு கோபம் கௌதமன்?”
“கோபம் வராம? எனக்கு வர கோவத்துக்கு அவ சங்க நெரிச்சு…”
“கௌதமன்!”
தன்னை சமன்படுத்தியவன், “போடி… நீ யார் எனக்கு? நான் ஏன் உனக்கு சொல்லணும்?” என்றான்.
“ம்ப்ச்… கௌதமன்?”
“என்ன கௌதமன்? சொல்லு நான் யாரு உனக்கு? உனக்கும் எனக்கும் என்ன கனெக்ஷன்? நான் ஏன் மனசுல இருக்கத உங்கிட்ட சொல்லணும்?”
“யா..”
அவள் முடிக்கும் முன், “என் பொண்ண நம்ம நடுவுல கொண்டு வராத. நான் உனக்கு ஒண்ணும் இல்லியா? ஆமா… ரகுவோட நினைவுகளோட தான் நீ என்கிட்ட வாழணும். அதுக்கு ஒத்துகிட்டு தான முன்ன கல்யாணத்துக்கு சரின்னு சொன்ன? இப்போ அவன் கழுத்து மேல என் தலை இருக்குன்னு தெரிஞ்சதும் என்ன மாறி போச்சு? யாழிக்கு அம்மாவா மட்டும் இருப்பேனா… அதையும் சொல்லிடு. இப்படியே இருந்திடலாம். ஆனா, யாழிக்காக என்னைக் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு ஒரு நாளும் என்கிட்ட சொல்லி என்னை கொன்னுடாத.”
“…”
“என் மனச, என் ஃபீலிங்க எனக்கு சொந்தமாக போரவ கிட்ட மட்டும் தான் சொல்ல முடியும். இப்போ சொல்லு… நான் ஏன் அப்செட்டுன்னு உனக்கு தெரியணுமா?”
ஏதும் கூறாது அமைதி காப்பவளை என்ன செய்ய முடியும்? “போடி….” என்றான் சலிப்பு தட்டும் குரலில். நேரம் சென்றது. என்றாவது ஒரு நாள், நடந்த அனைத்தையும் யசோவிற்கு கூறிதான் ஆகவேண்டும். அந்த ‘ஒருநாள்’ இன்றா?
“யாழி என்னோட மக” என்றான், விளையாடிக் கொண்டிருந்த மகளைப் பார்த்து.
“தெரியுமே” என்றாள்.
“அவ அம்மா பேரு யசோதரா” என்றான்.
“என்ன ஆச்சு உங்களுக்குக் கௌதமன்?”
“இந்த மரத்தடியில இருந்து தான் எடுத்தேன் என் மகள. என் கண்ணு முன்னால ஒரு மூட்டைய போட்டுட்டு போற மாதிரி போனா ஒருத்தி.”
“இந்த இடம் உங்களுக்கு வேண்டாத நினைவ எல்லாம் கிளறுது. குழந்தை காதுல விழுந்திட போகுது. கண்டதை நினைச்சு, கண்டதையும் பேசாதீங்க”
“இப்போ என் கூட பேசிட்டு இருந்தாளே… அவ தான் அந்த பொம்பள. என் மகள தூக்கி போட்டுட்டு ஓடி போன பொம்பள” என்றான் குரல் கமர.
“ஐயோ… நம்ம யாழிய பார்த்துட்டு கேக்கிறாளா? நாம இங்க வந்துருக்கவே கூடாது. வேண்டாம்ன்னு தூக்கி போட்டுட்டு இப்போ பாசம் கொட்டுதாமா? நீங்க வாங்க குழந்தைய தூக்கிட்டு போகலாம். என் மகள நான் யாருக்கும் கொடுக்க மாட்டேன் கௌதமன். யாழி என் மக” என்றவள் விளையாடிக் கொண்டிருந்த மகளிடம் விரைய, “யசோ, குழந்தையைப் பயமுறுத்தாத. என்னை மீறி யாரும் அவள நெருங்க முடியாது.” எனச் சத்தம் உயர்த்தினான்.
அப்பா மீண்டும் சத்தம் போடுவதைப் பார்த்த யாழி, தன்னருகில் வந்த அம்மாவைப் பார்த்துவிட்டு அப்பாவிடம் ஓடினாள். உடலெல்லாம் மணலாக இருக்க, தந்தையின் மடி மீது அமர்ந்தவள் தகப்பன் கழுத்தைக் கட்டிக்கொண்டாள். இந்த நொடி அவனுக்கு அந்த அரவணைப்பு தேவையாக இருக்க, மகளை தன்னோடு அணைத்துக் கொண்டான்.
அதிவேகமாக இயங்கிக் கொண்டிருந்த இதயம் மெல்ல கட்டுக்குள் வர ஆரம்பித்தது. மகளின் முதுகை அவள் வருடிக் கொடுக்க, யாழியின் குட்டி கை தகப்பன் முதுகைத் தட்டிக் கொடுத்தது.