உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் அத்தியாயம் 60.2
நின்ற இடத்திலிருந்து தந்தை மகளைப் பார்த்தாள் யசோ. சிமென்ட் பென்ச்சில் சாய்ந்து அமர்ந்திருந்த கௌதமன் கண்களில் நீர் வழியும் அளவிற்கு என்ன நடந்தது எனத் தெரியவில்லை. குழந்தையைக் கொடுத்துவிடக் கேட்கிறாளா? அவனிடமிருக்கும் ஆள் பலத்திற்கும் பண பலத்திற்கும், அவனிடமிருந்து எளிதில் யாளியைப் பிடுங்கிவிட முடியுமா என்ன? எதுவாக இருந்தாலும், அவனை ஆறுதல் படுத்த மனம் உந்தி தள்ளியது. ஆனால் முடியவில்லை. யாரும் எங்களுக்குத் தேவையில்லை. எங்கள் உலகில் நாங்கள் மட்டுமே என அவர்கள் கூட்டிற்குள் அப்பா, மகள் ஒடுங்கியிருந்தனர்.
நொடிக்கு ஒருமுறை மகளின் தலை தோள் என முத்தம் கொடுக்கும் அப்பாவை மகள் நிமிர்ந்து பார்த்தாள். நீர் தளும்பி நின்ற விழிகளோடு மகளைப் பார்த்தான் தந்தை.
Advertisement
“அப்பா அலுவிலுங்க. ஆலி பேபி அலுவ வலுது.” என்ற மகளின் உதடு தன்போல் பிதுங்கியது. கண்கள் நீரால் நிரம்பின. “இல்ல மா, அப்பாக்கு கண்ணு வலி.” என்றான் குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டு. “அளுவ நேணா அப்பா. வலி போயிலும்” என்றவள் தன் மணல் கரங்களோடு கன்னம் துடைத்து, கண்களில் முத்தமிட்டாள்.
“வலி போச்சா அப்பா?”
“ஓஹ்ஹ்… அப்பவே… என்னைக்கு நீ என் கைக்குள்ள வந்தியோ அன்னைக்கே போயிடுச்சு” என்றவன் மகளை மார்போடு அணைத்துக் கொண்டான்.
Advertisement
யசோவை பார்த்தான். என்னையும் உங்கள் உலகில் சேர்த்துக் கொள்ளுங்களேன் என்ற பாவத்தோடு நின்றிருந்தவளை “வா” எனத் தலையசைத்து அழைத்தான். வந்தவள் என்ன நினைத்தாளோ, துப்பட்டாவால் அவன் கன்னத்தில் அப்பியிருந்த மணலை துடைத்தாள். மகளின் கைகளைத் துடைத்தாள். எந்த அசைவும் இல்லாது அப்பாவும் மகளும் யசோவை பார்த்தனர்.
Advertisement
“அம்மாட்ட போ” மகளை யசோவிடம் கொடுக்க, “இங்க தான் இலுப்பேன். சலியா? கண்ணு வலிச்சா கூப்பிலுங்க” என்ற மகளை வாஞ்சையோடு பார்த்தான். அழுகை முட்டிகொண்டு வந்தது. அன்று மட்டும் அவன் இங்கு வராது போயிருந்தால்? என் மகள் ஒரு அனாதையாக… நினைக்க நினைக்க மனம் வலித்தது. அப்பாவி சரவணனுக்கு இப்படி ஒரு தமக்கையா?
மீண்டும் மீண்டும் அவன் யாழியை ஆசிக்கா பாப்பா என்றதும், அவன் அக்கா இவனைப் பார்த்து பம்மியதும், ஏதோ இருக்கிறது எனத் தோன்றவும் சரவணனிடம் விசாரித்தான். கிணறு தோண்டப் பூதம் கிளம்பும் என்று எதிர்பார்க்கவில்லை கௌதமன்.
“ஆசிக்கா நைட் எல்லாம் அழுதா. அப்பறம் காலையில ஆசிக்காவ காணல. அம்மா ‘ஆசிக்கா எங்கடி’ன்னு கேட்டதுக்கு, அவளுட அப்பாட்ட கொடுத்தேன்னு சொன்னா. அம்மா ஏதேதோ கேட்டு திட்டினா. ‘போலீசோ அந்த மனுஷனோ வந்தா உன்ன கொன்னு போடுவேன்’னு சொன்னா. நீங்க வந்து பிள்ளையோடு நிக்கிதிய. அதோண்டு தான் அக்காளுக்கு உங்கள பாக்க சங்கடம்.” குட்டி யாழியைப் போலவே அனைத்தையும் அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து ஒப்பித்தான் சரவணன்.
Advertisement
ஒவ்வொரு வருஷமும் வருவான் இங்கு. இவளை இருமுறை பார்த்தும் இருக்கிறான். ஆனால் இன்று தான், சரவணன் மகளைப் பார்த்து, “அக்கா நம்மட ஆசிக்கா பாப்பா” என்றதும் கைகால் வியர்த்து நடுங்க ஆரம்பித்து, ‘அப்பன் புதருக்குள் இல்லை’ எனத் தன்னையே காட்டிக் கொடுத்துவிட்டாள்.
“திருடனும்ன்னு பிளான் போட்டு குழந்தைய திருடல சார். கிடைச்ச சந்தர்பத்த எனக்குச் சாதகமா உபயோச்சுகிட்டேன். காப்பாத்த நினைச்சு தான் கையில் கிடைச்ச ரெண்டு குழந்தையையும் அள்ளிட்டு ஓடினேன். ஒரு குழந்தைய வழியில இருந்த சிஸ்டர் வாங்கிகிட்டாங்க. இது மூக்கும் முழியுமா என்ன பாத்துது. குழந்தைனாலே அழகு. அதுவும் பட்டு ரோசா மாதிரி இருந்த இந்த பாப்பாவ பாக்க கண்ணு போதல. எனக்குள்ள எந்த சாத்தான் பூந்துதோ தெரியல… தப்பு செய்துட்டேன். நெருப்பு, புகை, கலவரம்… நான் மாட்டிக்காம இருக்க உதவிச்சு.
சில வருஷம் முன்ன குழந்த இல்லாம இருந்த எனக்கு தெரிஞ்ச ஒருத்தங்க ‘பிறந்த குழந்தை, உன் தம்பி இருக்க இல்லத்துக்கு வந்தா சொல்லு. இல்ல நீ வேல பாக்குற ஆஸ்பித்திரில யாராவது குழந்த வேண்டாம்ன்னு நினைச்சாலும் சொல்லு. எவ்வளவு செல்வானாலும் பரவால, குழந்த லட்சணமா என் கலர்ல்ல இருக்கணும்’ன்னு சொன்னது நினைவுக்கு வந்துது.
அவங்ககிட்ட ‘ஒரு வாரமான குழந்த. இல்லத்து தொட்டில்ல இருந்துது. யாரும் பாக்கதுக்கு முன்ன தூக்கி வந்துட்டேன்’னு சொல்லிக் கொடுத்தேன். வெளியில தெரிஞ்சா பிரச்சனைன்னு சொல்லி தான் கொடுத்தேன். நினைச்சத விட அதிகமாவே பணம் கிடைச்சுது. ஆனா, அன்னைக்கு என் நிம்மதி போச்சு. குற்ற உணர்ச்சி என்னை சாகடிச்சுது. ஆனாலும், குழந்தை நல்ல இடத்துல வாழுவான்னு எனக்கு நானே சமாதானம் சொல்லிப்பேன்.
குழந்தைய பெத்த அம்மாக்கு புத்தி சுவாதீனம் இல்லன்னு பேசி கேட்டிருக்கேன். அப்பா இல்லாத குழந்தை. அந்த பொண்ணோட அப்பா தான் தாய் பால புட்டில எடுத்துட்டு வந்து பால் கொடுப்பார். அவர பார்த்திருக்கேன், உயிர கையில பிடிச்சுட்டு நடமாடுற மாதிரி இருப்பார். அவரால ஒரு புத்தி பேதலிச்ச பொண்ணையும், அவ குழந்தையையும் எப்படி பாத்துக்க முடியும்? பாத்துக்க யாருமே இல்லாத குழந்தைக்கு நல்ல வாழ்க்கை கொடுத்திருக்கேன்னு என்னை நானே சமாதான படுத்திக்கிட்டேன். தெரியும் அது எனக்கு நானே சொல்லிகிட்ட சமாதாம்ன்னு தெரியும் சார். வேற வழி தெரியல.
ஆனா… மூணு மாசம் முடியும் போது, பணம் கொடுத்த அந்தம்மா உண்டாகிடுச்சு. பணத்த நீயே வச்சுக்கோ… அப்படியே குழந்தையையும் வச்சுக்கோன்னு கொடுத்துட்டாங்க. என்ன பண்ணுவேன் நான்? பயம் பிடிச்சிடுச்சு. வெளியில உண்மை தெரிஞ்சா என் வாழ்க்கையே முடிஞ்சு போயிடும். இதுல எனக்கு வீட்டுல கல்யாண பேச்சு போயிட்டிருந்துது.
சென்னைல வொர்கிங் வுமன்ஸ் ஹாஸ்டல்ல வாழற நான் அஷிகாவ பாத்துக்க முடியாதுன்னு தனி வீடு பார்த்தேன். குழந்தைய பாதுகாப்பா ஒரு ஆயாட்ட விட்டுட்டு, வேலைக்கு போய் வந்தேன். செலவ சமாளிக்க முடியல. இங்க வீட்டுக்கு வந்தா அம்மா ஆயிரம் கேள்வி கேட்டாங்க. அம்மாக்கு ஏதோ புரியவும், ‘பொழுது விடிஞ்சா உன்ன பொண்ணு பாக்க வரவன் போலீஸ். குழந்தைய அதோட வீட்டுல குடுத்துட்டு வா இல்ல அப்படியே எங்கையாது போயிடு’ன்னு சொல்லிட்டாங்க.
என்ன பண்றதுன்னு யோசிக்க கூட எனக்கு நேரமில்ல. எனக்கு தெரிஞ்ச இடத்துல குழந்தை இருக்கணும். பத்திரமாவும் இருக்கணும். அதுதான் இல்லத்துல விட்டுட்டு போயிடலாம்ன்னு விடியகாலையில தூக்கிட்டு வந்தேன். வந்த இடத்துல ஒரு கார பார்த்ததும் பயந்து குழந்தையை போட்டு ஓடிட்டேன். ஆனா வீட்டுக்குப் போன பிறகு என் நிம்மதி ஒட்டு மொத்தமா போச்சு. கிடைக்க கூடாத ஆள கையில குழந்த கிடைச்சான்னு பயந்து செத்தேன்.
திருடனுக்குத் தேள் கொட்டின கதையாகிடுச்சு. ஒரு நிமிஷ மூள கோளாரால ஒரு குழந்தையோட வாழ்க்கையே போச்சுன்னு செத்துட்டேன். அடுத்த நாள் தம்பி சொல்லித் தான் நல்ல வீட்டுக்கு குழந்த போச்சுன்னு மூச்சு வந்துது.” என்றவள் ஆயிரம் முறை மன்னிப்பு கேட்டாள்.
“நீ என் காலுல விழுந்தா, குழந்தைய தொலச்சவங்களோட வலி போயிடுமா?” அவளிடம் கேட்ட கேள்வியை இப்பொழுது மனம் கேட்டது. ‘குழந்தையோட தாத்தாவ பார்த்திருக்கதா சொல்றவ, நாளைக்கு அவர எங்கையாவது பார்த்து எங்கிட்ட சொன்ன மாதிரி அவர்கிட்டயும் ஒப்பிச்சா… என் யாழிய கேட்டு வந்து நின்னா?’ கௌதமன் மனம் பிசைந்து வலித்தது.
மனம் எதை எதையோ எண்ண, கண்கள் மகளின் மீது நிலைந்து நின்றது.
“பேபி” எனச் சத்தமாக அழைத்தான். அம்மாவும் மகளும் ஒன்று போல் திரும்பி பார்த்தனர்.
“பசிக்குதா? சாப்பிட்டு நேரேம் ஆச்சே” எனக் கேட்டான். இரு தலைகளும் இல்லை என ஆடின. பார்த்தவனுக்குச் சிரிப்பு வந்தது. “அம்மாவும் பொண்ணும்… ஒரே மாதிரி” என முணுமுணுத்த வாய் அப்படியே நின்றுவிட, கண்கள் இருவரையும் நோட்டமிட்டது. யாழின் தகப்பனாக இல்லாது… யசோவின் காதலனாக இல்லாது மூன்றாவது மனுஷனாக நிதானித்து விஷயத்தை ஆராய்ந்தான். இதில் ஆராய என்ன உள்ளது என மனம் கேட்டது.
‘யசோவோட குழந்த உயிரோட இருந்திருந்தா, இப்போ யாழி வயசிருக்கும்’ ராஜீவனின் வார்த்தைகள் காதுகளுக்குள் ரீங்கரமிட்டது. ஏன் என்னானது யசோவின் குழந்தைக்கு? ‘அப்பாக்கும் மகளுக்கும் ஒரே இடத்துல உயிர் பிரியணும்ன்னு இருந்திருக்கு’ என்றால், அவனிருந்த அதே மருத்துவமனை.
‘குழந்தைய பெத்த அம்மாக்கு புத்தி சுவாதீனம் இல்ல’ சற்று முன் இவள் கூறியதை தான் அன்று ராஜீவனும் வேறு வார்த்தைகள் கொண்டு கூறினானோ? தமிழகத்தில் எத்தனை யசோதராக்கள் உள்ளனர்? அவனுக்குத் தெரிந்து, யசோதரா என்ற ஒரே பெண், அவன் யசோ மட்டுமே.
கைப்பேசி அழைக்க, அதில் கவனம் சென்றது. விக்ரம் அழைத்திருக்க, அழைப்பை ஏற்றவன் கைப்பேசியைக் காதில் வைக்கவும், “டேய் பரதேசி நாயே… என்னை இங்க வர சொல்லிட்டு எங்கடா போன?” என்று நல்ல வார்த்தைகள் நான்கு உதிர்த்தான்.
காதை மெல்ல தேய்துவிட்டவன், “சாரி டா மச்சான்… யசோ கூட வரேன்னு சொல்லவும் உன்ன மறந்துட்டேன்” எனப் பல்லைக் காட்டினான்.
“அதுதான காலம் காலமா நடக்குது. ஃபிகர பார்த்துட கூடாதே”
“ஸ்பேர் சாவி யசோ வீட்டுல இருக்கும் டா. நான் ஐயாட்ட சொல்றேன், நீ அவர்ட்ட வாங்கிட்டு படுத்து ரெஸ்ட் எடு. நைட் வந்துடுவேன்”
“ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு இருக்கேன். நீ சொல்லி வை. ஃபோன கட் பண்ணாத. எனக்கு ஒரு கேள்வி இருக்கு. இப்போவே கேட்டாகணும்”
“என்ன?”
“உனக்கு அறிவு கம்மின்னு தெரியும். அத நீ அப்பப்போ ஊருக்கே தம்பட்டம் அடிச்சே ஆகணுமா கௌதமா?”
“என்ன டா, புரியற மாதிரி பேச மாட்டியா?”
“எதுக்கு டா யசோவ அங்க கூட்டிட்டு போன? இடம் சுட்டி பொருள் விளக்க கூட்டிட்டு போனியாக்கும்?”
“எல்லாம் தெரிஞ்ச மாதிரி உளர்றகூடாது. அவ ஃபிரெண்டுக்கு போக்கிடம் இல்லன்னு வந்து நின்னபோது இங்க வேலைக்கு சேர்த்து விட்டேன். அவங்கள பாக்க வந்தா. நானும் ஃபாதர பார்த்துட்டு போகலாமேன்னு கூட வந்தேன்”
“சரி… யாழிய எதுக்கு அங்க தூக்கிட்டு போன? உனக்கு நன்றி உணர்ச்சி பொங்கினா, எப்பவும் போல நீ மட்டும் போயிட்டு வரவேண்டியது தான? அந்த ஏரியால இருக்க யாரோ தான் குழந்தைய கொண்டு வந்து அங்க போட்டிருக்கணும். அவ கண்ணுல குழந்த பட்டு பிரச்சை ஆகிட்டா? யோசிக்க மாட்டியா நீ? அதுக்கும் ஏதாவது காரணம் சொல்லுவ. வீட்டுக்கு வா பேசிக்கலாம்” என்றவன் வைத்துவிட, கௌதமன் அரவிந்தனுக்கு அழைத்தான்.
பேச்சு அரவிந்தனிடம் இருந்தாலும் பார்வை அம்மா, மகளில் நிலைத்திருந்தது. மூச்சை இழுத்து விட்டவன், மருத்துவமனையின் பெயரையும், தீ விபத்து நாளையும் குறிப்பிட்டு, “அந்த டைம்ல யசோவோட குழந்தை அந்த ஹாஸ்பிட்டல்ல இருந்தாளா?” எனக் கேட்டான்.
“ஆமா. ஒரு வாரம் என் பேத்திய அங்க தான் வச்சிருந்தாங்க. லங்க்ஸ் ஒழுங்கா டெவலப் ஆகலன்னு சொன்னாங்க. நான் தான் தினமும் போய் பால கொடுத்துட்டு வருவேன். அன்னைக்கு அந்த கட்டிடம் கரிஞ்சு நின்னுது. ஒண்ணுமே செய்ய முடியாம மரத்தடியில் என் பேத்திக்குக் கொண்டு போன பாலோட நின்னுட்டு இருந்தேன். கடைசி வரைக்கும் என் பேத்திய என் கண்ணுல காட்டவே இல்ல.” என்றவர் குரல் உடைந்தது.
எதிர்பார்த்த பதில் தான் என்றாலும், அந்த நிமிடத்தை கடக்க கௌதமனுக்கு யானை பலம் தேவைப்பட்டது. மகள் தப்பித்ததை எண்ணி மகிழ வேண்டுமா? நாதியற்ற குழந்தையாக மரத்தடியில் கிடந்ததை நினைத்துத் துவள வேண்டுமா? இல்லை, தன் மகள் தன்னிடமே வளர்ந்து வருவதை நினைத்து புளகாங்கிதம் அடைய வேண்டுமா? கௌதமன் திணறிப் போனான்.
“உனக்கு ராஜீவன் சொன்னானா?” எனக் கேட்டவர் பதிலுக்குக் காத்திராமல், “அவ அம்மா தவறினதுலயே என் பொண்ணு நிலைகுலைஞ்சுட்டா. அம்மாக்கு அழுது முடிக்கதுக்கு முன்ன ரகுவையும் அந்த நிலைல பார்த்த என் பொண்ணுக்கு கொஞ்சம் மனநிலை சரியில்லாம போயிடுச்சு. வெறும் உயிர மட்டுமே ஏந்தின நடபிணமா தான் என் பொண்ணு அப்போ இருந்தா. நடந்த விஷயம் எதுவுமே யசோக்கு தெரியாது பா. தெரிஞ்சா தாங்க மாட்டா. பிறந்ததும் குழந்த தவறிட்டதா சொல்லி வச்சிருக்கேன். அப்படியே விட்டுடு” என்றார்.
“ஆங்…” என்றான். குரல்வளை வலித்தது. கண்களில் கரகரவென கண்ணீர் வழிந்தது. அவர்களின் மகள் யாழி என்றதும் புதிதாக எந்த பாசமும் முளைக்கவில்லை என்றாலும் ஏனென்றே தெரியாது மனம் தவித்தது.
“கண்ணு வலிதா அப்பா?” கேட்டுக் கொண்டே ஓடி வந்த யாழினியாள் அப்பாவின் மீது ஏறி கன்னம் துடைத்து, கண்களில் முத்தமிட்டாள்.
ஆம் எனத் தலையசைத்தான். “இன்னும் வலிதா?” எனக் கேட்டுக் கொண்டே மகள் மீண்டும் மீண்டும் கண்களில் முத்தம் கொடுத்தாள். மகளை தன்னோடு அணைத்தவன், “என் உயிர் பேபி நீ” என்றான்.