ஊனாகி உயிராகினாய் பெண்ணே – 3
அத்தியாயம் – 3
வீட்டிற்குள் நுழையும் போதே சுந்தரத்தின் முகத்தில் தவுசன்ட் வாட்ஸ் பல்பு எரிந்தது,.. அங்கிருந்த இருவரையும் பார்த்ததும், “அட… ரெண்டு பேரும் இங்க தான் இருக்கீங்களா!” என்று கேட்டபடி உற்சாகமாக உள்ளே வந்தவர்.. ”எப்படி இருக்கீங்கப்பா?” என்று தன் தந்தை வீரமாணிக்கத்திடம் நலம் விசாரித்தார்…
”ம்ம்… எனக்கென்ன… நல்லாத்தான் இருக்கேன்,” என்ற வீரமாணிக்கம், அவர் முகத்திலிருந்த அந்த அதிகப்படியான உற்சாகத்தைக் கவனித்து, “என்ன இவ்வளவு காலையில வந்திருக்க சுந்தர்?” என்று கேட்டார்…
Advertisement
சோபாவில் அமர்ந்த சுந்தரமோ “விஷயம் என்னன்னா… நம்ம விஷ்வாவுக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்குப்பா!” என்று ஆரம்பிக்க,.. அந்த வார்த்தைகளைக் கேட்டதும் வீரமாணிக்கத்தின் முகத்தில் சட்டென்று ஒருவித வருத்தம் வந்து மறைந்தது, தனது பேத்தி மிருதுளாவையும், பேரன் விஷ்வாவையும் இணைத்துத் திருமணம் நடத்தி வைக்கலாம் என்று அவர் மனதிற்குள் ஒரு மெல்லிய யோசனை வைத்திருந்தார் அல்லவா? இப்போது சுந்தரம் வேறொரு வரனைப் பற்றிப் பேசுவது அவருக்குச் சற்று ஏமாற்றமாக தான் இருந்தது..
ஆனால், அதே சமயம் மிருதுளாவிற்கோ பெரும் நிம்மதியாக இருந்தது. ‘அப்பாடா… இனிமே விஷ்வாவை வைத்து தாத்தா என்னிடம் பேச மாட்டார்!’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவளுக்கு விஷ்வாவைப் பற்றிய திருமணப் பேச்சு இனி வராது என்பதே பெரிய ஆறுதலாகவும் அமைந்தது…
சுந்தரம் அவர்கள் இருவர் மனநிலையை கவனிக்காமல் குதூகலத்துடன்.. “பொண்ணு ரொம்ப வசதியான வீட்டுப் பொண்ணுப்பா, குடும்பமும் ரொம்ப நல்ல குடும்பம், அந்தப் பொண்ணோட அப்பாக்கு நிறைய சொத்துபத்துக்கள் இருக்கு, நான் நினைச்ச மாதிரியான வரன் அமைஞ்சிருக்கு, இந்த வாரத்துலேயே பொண்ணு பார்க்கப் போகலாம்னு இருக்கோம், அதான் உங்ககிட்ட இதை சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்,” என்றார் பெருமிதத்துடன்…
Advertisement
வீரமாணிக்கம் மெதுவாகத் தலையசைத்து… “நல்ல விஷயம் தான் சுந்தர், விஷ்வாவுக்கு பொருத்தமான இடமா இருந்தா சரிதான், குடும்பம் எப்படி? யார் மூலமா வரன் வந்தது” என்று
அவர் கேட்கும்போதே, மிருதுளா மெல்ல எழுந்து தனது காபி கோப்பையை மேஜை மீது வைத்தாள், சுந்தரம் சொல்லப் போகும் அந்த வசதியான குடும்பம் யாராக இருக்கும் என்கிற ஆர்வம் அவளுக்குள் துளியும் இல்லை, இருப்பினும் எழுந்து போனால் முகத்தில் அடித்தார் போன்று இருக்குமே என வேறு வழியின்றி கேட்க தொடங்கினாள்,..
Advertisement
சுந்தரம் அந்த குடும்பத்தை பற்றி ஆஹா ஓஹோவென்று கூறினார், அனைத்தையும் நிதானமாக கேட்டு முடித்த வீரமாணிக்கம்,.. “பையனுக்கு வரன் பார்த்தாச்சு, ஆனா நம்ம வீட்ல கல்யாண வயசுல இன்னொரு பொண்ணு இருக்கிறதை மறந்துட்டியாப்பா? மிருதுளாவுக்கு நாமதானே கல்யாணம் பண்ணி வைக்கணும்” என்று அழுத்தமாகக் கேட்டிட, அவர் அப்படிச் சொன்னதும் சுந்தரத்தின் முகத்தில் இருந்த அந்த உற்சாகம் சற்றே குறைந்தது…
ஒரு நிமிடம் மௌனித்தவர், பிறகு… “அதை எப்படிப்பா மறப்பேன்? இவ நம்ம வீட்டுப் பொண்ணு இல்லையா? ஆனா, இவ இன்னும் அந்தப் பழைய நினைவுகள்லேயே இருக்காளே… இப்போ போய் கல்யாணப் பேச்சை எடுத்தா ஏத்துக்குவாளான்னு ஒரு தயக்கம் தான்,” என்றார் ஒருவிதப் போலி அக்கறையுடன்…
உண்மையில், சுந்தரம் தன் மகனின் திருமணத்தை முடிப்பதில்தான் குறியாக இருந்தார், மிருதுளா தங்கை மகள் என்றாலும் அவள் மீது பெரிதாக பாசமெல்லாம் இருந்ததில்லை, தன் குடும்பம் மட்டுமே முக்கியம் என்று நினைப்பவர், ஆனால் தந்தையின் மீது பாசம் உண்டு…
Advertisement
”அவளுக்குப் பிடிக்கலன்னு சொன்னா விட்டுட முடியுமா சுந்தர்? ஒரு நல்ல துணையைத் தேடிக் கொடுக்கிறது நம்ம கடமை இல்லையா?” என்று வீரமாணிக்கம் மீண்டும் வலியுறுத்திட,
மிருதுளாவிற்கு இந்த விவாதம் பெரும் சங்கடத்தைத் தந்தது.
“தாத்தா… ப்ளீஸ், இப்போ விஷ்வாவுக்கு வரன் வந்த சந்தோஷத்தைப் பத்தி மட்டும் பேசுங்களேன், என்னைப் பத்தி இப்போ எதுக்கு?” என்று இடையில் புக, சுந்தரம் உடனே அதைப் பிடித்துக் கொண்டு… “பார்த்தீங்களாப்பா… அவளே சொல்றா இல்ல? இப்போதைக்கு விஷ்வா கல்யாணம் முடியட்டும், அந்தத் தோதுல இவளுக்கும் ஏதாவது நல்ல வரன் தானாவே அமையும்,” என்று பேச்சைத் திசை திருப்பிட,வீரமாணிக்கம் ஒரு நீண்ட பெருமூச்சோடு அமைதியானார்..
சுந்தரத்தின் பேச்சில் தன் மகனைப் பற்றிய அக்கறை இருக்கிறதே தவிர, தங்கை மகள் மிருதுளாவின் எதிர்காலத்தைப் பற்றிய கவலை துளியும் இல்லை என்பது அவருக்குப் புரியவே.. ’சுந்தரத்தை நம்பிப் பிரயோஜனம் இல்லை… நான்தான் ஏதாவது செய்தாக வேண்டும்,’ என்று மனதிற்குள் திடமாக முடிவெடுத்துக் கொண்டார்….
***********
விடிந்தும் விடியாத அந்த அதிகாலை வேளையிலும், ரன்வீரின் பேலஸில் ஒருவித பரபரப்பு தொற்றிக்கொண்டிருந்தது, அந்தப் பிரம்மாண்டமான மாளிகையின் ஒரு பகுதியில், நவீன ரக உடற்பயிற்சி கருவிகள் நிறைந்த அந்தத் தனி அறைக்குள் தான் இருந்தான் ரன்வீர்…
வியர்த்து விறுவிறுக்க, அவன் தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தான், ஜிம்மிற்குச் சென்று மற்றவர்களுடன் சேர்ந்து பயிற்சி செய்வதை அவன் என்றுமே விரும்பியதில்லை, அவனது அந்தரங்கம் அவனுக்கு மிக முக்கியம். அதனால், வீட்டிலேயே சகல வசதிகளுடன் கூடிய ஒரு ஜிம்மை அமைத்திருந்தான்…
அவனது உடலின் ஒவ்வொரு தசைநாரும் அந்த அதிகப்படியான உழைப்பில் துடித்துக் கொண்டிருந்தன, கறுப்பு நிற ஜிம் பனியன் அவனது வியர்வையில் நனைந்து உடலோடு ஒட்டியிருந்தது…
”ஹ்ஹ்… ஹ்ஹ்…” அவனது மூச்சுக்காற்று சீராகவும், அதே சமயம் வேகமாகவும் வெளியேறியது, அவன் செய்துகொண்டிருந்த அந்த ‘பஞ்சிங் பேக்’ பயிற்சி, அவனது மனதிற்குள் இருக்கும் ஏதோ ஒரு வலியை வெளிப்படுத்துவது போல இருந்தது, ஒவ்வொரு குத்தும் அந்தப் பையைச் சிதறடிக்க முயன்றன…
நேற்று இரவு துறைமுகத்தில் நடந்த அந்தச் சம்பவம், அவனது மனதில் ஒரு சிறு சலனத்தைக் கூட ஏற்படுத்தவில்லை. ஆனால், இனி வரப்போகும் பெரிய டீல் பற்றி அவனது மூளை கணக்குப் போட்டுக் கொண்டே இருந்தது,..
அப்போது தான் ஜிம்மின் கதவு மெல்லத் திறக்கப்பட்டது, கையில் ஒரு ஐபாட் மற்றும் சில கோப்புகளுடன் உள்ளே நுழைந்தான் நிதின், ரன்வீர் உடற்பயிற்சி செய்யும் போது யாரும் தொந்தரவு செய்வதை அவன் அனுமதிக்க மாட்டான் என்பது நிதினுக்குத் தெரியும், ஆனால்.. இப்போது வந்திருக்கும் செய்தி அத்தனை முக்கியமானது…
ரன்வீர் பயிற்சியை நிறுத்தாமலேயே, “சொல்லு நிதின்… என்ன விஷயம்?” என்று அதிகாரத் தோரணையில் கேட்டான். அவனது குரலில் இருந்த கம்பீரம் அந்த அறையின் மௌனத்தைக் கலைத்தது…
நிதின் சற்றுத் தயங்கிவிட்டு, “ரன்வீர் அந்த கஸ்டம்ஸ் அதிகாரி அர்ஜுன் இன்னைக்கு மார்னிங் ஒரு பிரஸ் மீட் கொடுக்கப் போறதா தகவல் வந்திருக்கு, நேத்து நைட் நடந்த விஷயத்தைப் பத்தி ஏதாவது லீக் பண்ணுவானோன்னு சந்தேகம் இருக்கு,” என்றான்…
அதனை கேட்ட ரன்வீர் சட்டெனப் பயிற்சியை நிறுத்திவிட்டு, பக்கத்தில் இருந்த துண்டை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டே நிதினைத் திரும்பிப் பார்த்தவனின் விழிகளில் ஒரு மர்மமான மின்னல் தெறித்தது…
”அவன் பேச மாட்டான் நிதின், அவனுக்குத் தன்னோட குடும்பத்தோட நிம்மதி தான் முக்கியம், இருந்தாலும், அவனை ஒரு கண் வச்சுக்கோ,” என்றான் நிதானமாக.
அவனது வார்த்தைகளில் இருந்த அதிகாரம், அந்த அதிகாரியைப் பற்றிய பயம் அவனுக்குத் துளியும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியது.
அதன் பிறகு, ஒரு புத்துணர்ச்சியான குளியலை முடித்துவிட்டு, டிப்டாப்பாக உடை மாற்றி வந்தான். கருப்பு நிற பிராண்டட் ஷர்ட் மற்றும் அதற்குப் பொருத்தமான பேண்ட் அணிந்திருந்தவனின் தோற்றம், ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் அதிபனைப் போலவே இருந்தது.
நேராக டைனிங் அறைக்கு விரைந்தான். அங்கே அவனுக்கான உணவுகள் மேஜையில் சுட சுட தயாராக வைக்கப்பட்டிருந்தது..
அந்தப் பிரம்மாண்டமான டைனிங் டேபிளில் ரன்வீர் ஒருவன் மட்டுமே அமர்ந்து உணவருந்தினான், சுற்றிலும் அத்தனை வசதிகள் இருந்தும், அந்தத் தனிமை அவனுக்குப் பழகிப்போயிருந்தாலும், ஒருவித சலிப்பு அவன் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.
”நிதின்… என்கூட உட்கார்ந்து சாப்பிடலாமே!” என்று ரன்வீர் திடீரென அழைக்க, கோப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்த நிதின்…
”பாஸ் கூட ஒன்னா உட்கார்ந்து எப்படி சார் சாப்பிடுறது?” என்று சிறு கிண்டலுடன் கேட்டவனை ரன்வீர் ஒரு பார்வை தான் பார்த்தான், அந்தத் தீர்க்கமான பார்வையில் இருந்த அதிகாரமும், அதே சமயம் ஒரு மெல்லிய உரிமையும் நிதினுக்குப் புரிந்தது…
அவன் முறைத்த முறைப்பைக் கண்டு நிதின் லேசாகச் சிரித்துவிட்டு, “சும்மா சும்மா முறைக்காதடா… கிண்டல் தானே பண்ணேன்” என்று கூறிவிட்டு, அவனுக்கு எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்து உணவுண்ணத் தொடங்கினான்.
வெளியுலகிற்கு அவர்கள் பாஸ் மற்றும் பிஏ என்ற உறவில் இருந்தாலும், அந்த நான்கு சுவர்களுக்குள் அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள், ரன்வீரின் கடினமான பக்கங்களை மட்டுமல்ல, அவனது மனதின் ஆழத்தில் இருக்கும் தனிமையையும் உணர்ந்தவன் நிதின் ஒருவன் மட்டுமே…
”ஏன் ரன்வீர்… இன்னைக்கு ஒரு மாதிரியா இருக்க? அந்த போர்ட் மீட்டிங் பத்தி யோசிக்கிறியா?” சாப்பிட்டுக் கொண்டே நிதின் கேட்க, ரன்வீர் உணவை மெல்ல மென்றபடியே, “இல்ல நிதின்… இந்த வாழ்க்கையில எல்லாமே கிடைச்சிருச்சு, ஆனா ஏதோ ஒன்னு குறையுற மாதிரி ஒரு ஃபீல். இந்த மௌனம் சில சமயம் என்னை விட அதிகமா சத்தம் போடுது,” என்றான் தத்துவார்த்தமாக…
அதே நேரத்தில், மிருதுளாவின் வீட்டிலும் இதே போன்ற ஒரு மௌனம் தான் நிலவிக் கொண்டிருந்தது. ரன்வீரின் இந்த பேலஸ் எவ்வளவு பிரம்மாண்டமோ, அதே அளவு மிருதுளா இருக்கும் அந்த மாளிகையும் தனிமையில் தவித்துக் கொண்டிருந்தது…
சாப்பிட்டு முடித்துவிட்டு, ரன்வீர் தனது கோட்ஐ சரிசெய்து கொண்டு கிளம்பினான்… ”நிதின், இன்னைக்கு மீட்டிங்ல அந்த சிங்கப்பூர் டீல் பத்தி தெளிவாப் பேசி முடிச்சிடணும், எந்தத் தப்பும் நடக்கக்கூடாது,” என்று ரன்வீர் அதிகாரத்துடன் சொல்ல…
”நிச்சயமா,.. கார் ரெடியா இருக்கு,” என்றான் நிதின்.
இன்னொரு பக்கம், மிருதுளா வீட்டில் இருந்து சலிப்பு தட்டி காரை எடுத்துக்கொண்டு கிளம்பினாள், தினமும் இவ்வாறு ஒரு ட்ரைவ் செல்வது அவளது வழக்கத்தில் இருந்தது,..
தனது காரை மெதுவாகச் செலுத்தி கொண்டிருந்தவளுக்கு ஜன்னல் வழியாகத் தெரிந்த அந்தப் பரபரப்பான நகரத்தின் காட்சிகள் அவளுக்குள் எந்தப் பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்றாலும், அந்த நான்கு சுவர்களுக்குள் முடங்கிக் கிடப்பதை விட, இந்தச் சாலைப் பயணம் அவளுக்கு ஒருவித லேசான இதத்தை கொடுத்தது…
மறுபுறம், ரன்வீரின் கறுப்பு நிற மெர்சிடிஸ் கார், அவனது அரண்மனை போன்ற வீட்டின் இரும்புக் கதவுகளைத் தாண்டி கம்பீரமாகச் சாலைக்கு வந்தது, பின் இருக்கையில் அமர்ந்து ஒரு கோப்பைப் புரட்டிக் கொண்டிருந்த ரன்வீரின் முகத்தில் அதே தீவிரமான பாவம் நிலவியது.
சரியாக அந்தப் பெரிய சந்திப்பில் சிக்னல் விழ, ரன்வீரின் காரும் மிருதுளாவின் காரும் அருகருகே வந்து நின்றன, ரன்வீர் தற்செயலாகத் தலைநிமிர்ந்து பக்கவாட்டில் பார்த்தான், அவனது காரின் கறுப்பு நிறக் கண்ணாடி மெல்லக் கீழே இறங்கிட. அங்கே, அவனது காருக்கு மிக அருகில் நின்றிருந்த அந்த வெள்ளை நிறக் காரின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்தாள் மிருதுளா…
ரன்வீரின் கண்கள் அவளது முகத்தில் நிலைத்து நின்றன, அந்த முகத்தில் இருந்த ஒருவிதமான அமைதியும், அதே சமயம் அந்தத் தேடல் நிறைந்த ஏக்கமும் அவனது கவனத்தை ஏனோ ஈர்த்தன, எத்தனையோ மனிதர்களைப் பார்த்த அவனது விழிகளுக்கு, மிருதுளாவின் முகம் ஏதோ ஒரு பழைய ஓவியத்தைப் போலத் தோன்றியது, அவளது அந்த வெறித்த பார்வையும், எதையோ இழந்தது போன்ற அந்த பாவமும் ரன்வீரின் மனதிற்குள் ஒரு மெல்லிய அதிர்வை ஏற்படுத்தியது.
‘யார் இவள்? ஏன் இவ்வளவு சோகமாக இருக்கிறாள்?’ அவனுக்கு தேவையே இல்லாத இந்தத் கேள்விகள் அவன் மூளைக்குள் மின்னலென ஓடின…
ஆனால், மிருதுளா அவனது பக்கம் திரும்பவே இல்லை, அவளது பார்வைகளோ நேராக அந்தச் சிக்னல் விளக்கை நோக்கியே இருந்தன, பக்கத்தில் இவ்வளவு பிரம்மாண்டமான ஒரு கார் நிற்பதோ, அதனுள் ஒருவன் தன்னை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருப்பதோ அவளுக்குத் தெரியவே இல்லை, அவளது உலகம் அவளுக்குள்ளேயே சுருங்கிப் போயிருந்தது…
சிக்னல் பச்சை விளக்கை காட்டிட,
மிருதுளா எந்த வித சலனமும் இன்றித் தனது காரை முன்னால் செலுத்தினாள், அவள் செல்லும் திசையையே மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தவன்.. “ரன்வீர்,” என்ற நிதினின் அழைப்பில் தான் சுயநினைவிற்கு வந்தான்…
“என்னாச்சு,.. கூப்டுட்டே இருக்கேன்” அவன் வினவ,
”நத்திங் போலாம்,” என்றவன் அதோடு பேச்சை முடித்துக்கொண்டான், ஆனால், அவனது கைகளில் இருந்த கோப்புகள் இப்போது அவனது கவனத்தில் பதியவில்லை, அவளின் அந்த முகம் ரன்வீரின் இரும்பு போன்ற மனதிற்குள் ஏதோ ஒரு மாற்றத்திற்கான விதையைத் தூவிச் சென்றிருந்தது…
