Skip to content
Post Views: 6,629
மதுவினும் இனியாள் – 32
அத்தியாயம் 32:
மது மெல்பர்ன் வருவதை ஹேரியிடம் சொல்லவில்லை. ஆனால் ஏர்போர்ட்டில் செக் அவுட் முடிந்து வெளியே வந்தால் எதிரில் அவள் நீல கண்ணன் நின்றிருந்தான். பார்த்திதான் கூறியிருக்க வேண்டும் ஹேரியிடம்.
அவனை பார்த்ததும்தான் மதுவிற்கு நிம்மதி. அப்பாடா அவனிடம் வந்துவிட்டோம். இனி அவன் பார்த்து கொள்வான் என்று ஒரு நம்பிக்கை, ஆசுவாசம் மதுவிற்கு. ஓடிபோய் அவனை கட்டி அணைத்து அவன் நெஞ்சில் சாய வேண்டும் போல் பரபரப்பு. ஆனால் அடக்கி கொண்டாள்.
Advertisement
ஹேரியும் அவ்வாறே அவளை கைகட்டிக்கொண்டு அமைதியாக பார்த்திருந்தான். அவள் இந்தியா செல்ல வேண்டும் என்று முடிவெடுத்த நிமிடத்திலிருந்து தவித்து போயிருந்தான் ஹேரி. அவள் பெற்றவர்கள் அவளை திருப்பி அனுப்புவார்களா என்றே யோசித்திருந்தான். இந்த ஐந்து நாட்களும் பார்த்தியைத்தான் பாடாய் படுத்தி விட்டான் அங்கு என்ன நடக்கிறது என்று கேட்டு.
இன்று அவன் எதிரில் மது நிற்கவும்தான் அவனுக்கும் நிம்மதி. அமைதியாக அவள் டிராலியை இழுத்து கொண்டு அவன் காருக்கு சென்றான்.
மதுவின் வீட்டை அடைந்து கதவை திறந்ததும் கைகளை விரித்தான் ஹேரி. ஓடிவந்து சரண் புகுந்தாள் அவன் நெஞ்சத்தில். நீண்ட நேரம் ஒருவரின் அருகாமையை இன்னொருவர் உணர்ந்தபடி அமைதியாக நின்றனர்.
Advertisement
ஹேரிதான் முதலில் மௌனத்தை களைத்து “பேபி” என்றான்.
Advertisement
“ம்”
“உன் பேரன்ட்ஸ் என்ன சொன்னாங்க”
“என்ன எங்க அத்தை பையன் வருண கல்யாணம் பண்ணிக்க சொன்னாங்க”
Advertisement
“நீ என்ன சொன்ன”
“நானும் சரின்னு சம்மதம் சொல்லிட்டு வந்துருக்கேன்”
அமைதியாக இருந்தவனை அவன் அணைப்பில் இருந்தபடியே நிமிர்ந்து பார்த்தவள் “என் மேல கோவம் வரலையா கண்ணா உனக்கு” என்றாள்.
“எதுக்கு”
“ப்ச்”
“இப்ப நா என்ன பண்ணனும்”
“நீ ஒன்னும் பண்ண வேண்டாம்” என்றவள் அவன் அணைப்பில் இருந்து வெளிவந்து “நா வருண்ட்ட பேச போறேன். அங்க அம்மா அப்பாக்கு நேரா பேச முடியல. இங்க வந்துதான் பேசணும்ன்னு வெய்ட் பண்ணிட்டு இருந்தேன்” என்று அவள் மொபைலை எடுத்து அவள் அப்பத்தாவிடமிருந்து வாங்கியிருந்த அவன் நம்பருக்கு கால் பண்ணினாள்.
“ஹலோ” என்று வருண் குரல் கேட்டதும் ஒரு நிமிடம் தயங்கியவள், பிறகு “ஹலோ வருண். நா மதுமிதா பேசறேன்” என்றாள். வருண் “ஹே மது டார்லிங். நானே உன்னட்ட பேசணும்ன்னு இருந்தேன். நான் நாளைக்கு வரதுக்குள்ள உன்ன யாரு ஆஸ்திரேலியா போக சொன்னது” என்று அவன் பேசி கொண்டே சென்றதும், அதை எதிர்பார்க்காத மது “வெய்ட் வருண். நா உன்னட்ட முக்கியமா பேசணும்ன்னுதான் இப்ப கால் பண்ணிருக்கேன்” என்றதும் சிறிது இடைவெளி விட்டவன் தொடர்ந்து “என்ன மது பேபி, லவ்வா…” என்று கிண்டலாக இழுத்தான்.
சுர்ரென்று கோபம் ஏறியது மதுவிற்கு.
“பேபி ன்னு சொல்லாத”
“ஏன் உன் லவ்வர் அப்படிதான் சொல்வானா. நோ ப்ராப்லம் டார்லிங். இப்ப என்ன லவ் மட்டும்தானா. நீ டேட்டிங், லிவிங் டுகெதர்ன்னு இருந்தாலும் எனக்கு ஒன்னும் ப்ராப்லம் இல்ல. நாம கல்யாணம் பண்ணிக்கலாம். எனக்கே இங்க ஏகப்பட்ட கேர்ள் பிரண்ட் டார்லிங்” என்றதும் மதுவின் முகம் அருவெறுப்பில் சுருங்கியது. அவள் பார்த்திருந்தததை வைத்து உருவாக்கி வைத்திருந்த வருண் பிம்பம் மாதிரி இவன் இல்லை. இருந்தாலும் பொறுமையாக,
“நா சொல்றத முழுசா கேளு வருண். நா லவ் பண்றவரைதான் எனக்கு கல்யாணம் பண்ணிக்கனும் . அப்பா ஹாஸ்பிடல்ல படுத்துட்டு என்ன ப்ளாக்மெயில் பண்ணி உன்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்ல வச்சார். என்னால மறுத்து பேச முடியல. அதனால நீதான் எனக்கு ஹெல்ப் பண்ணனும். நீ என்ன கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லன்னு சொல்லிடு” என்றதும் கட கடவென்று சிரித்தவன்
“உனக்கு ஒன்னு தெரியுமா டார்லிங். எனக்கு இந்த நாட்டுகாரிங்களோட டேட்டிங் பண்ணி அலுத்து போயிருந்தப்பத்தான் பாட்டியோட நீ வீடியோ கால பேசிட்டு இருந்தத கவனிச்சேன். என்ன அழகு டார்லிங் நீ. உன்ன முன்னாடி நேர்ல பார்த்தப்ப ஸ்கூல் கேர்ளா சப்பியா இருந்த. இத்தன வருஷம் கழிச்சு இப்பதான் உன் போட்டோ பாத்தேன் பாட்டி மொபைல்ல. செம ஃபிகராய்ட்ட. இப்படி ஒரு மாமன் பொண்ண வச்சிக்கிட்டு எவனாவது சும்மா இருப்பானா. எங்க அம்மா உன்ன கல்யாணம் பண்ணிக்க எனக்கு தகுதி இல்லன்னு பொண்ணு கேக்க மாட்டேன்னுதான் சொன்னாங்க. நான்தான் கட்டாய படுத்தி பொண்ணு கேக்க வச்சேன். இப்ப சொல்லு. நா எப்படி கல்யாணத்த நிறுத்துவேன். அதிலும் உன் உதட்டோர மச்சம் இருக்கு பாரு டார்லிங். என்ன தூங்கவே விட மாட்டேங்குது. அத பாத்தா …” என்று அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே மது மொபைலை கோபத்தில் விட்டெறிந்தாள். கார்பெட் தரை என்பதால் அது உடையாமல் தனி தனியாக கழண்டு விழுந்தது.
மொபைலை தூக்கி எறிந்தவள் தலையை பிடித்து கொண்டு அமர்ந்து விட்டாள். ஹேரி சிறிது நேரம் அவளை தொந்திரவு செய்யாமல் விட்டவன் பிறகு “என்னாச்சு பேபி” என்றான்.
அவனை கண்கள் கலங்க பார்த்தவள் “அவன வச்சுத்தான் என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதம் இல்லன்னு சொல்ல சொல்வோம்ன்னு நினைச்சேன். ஆனா அவன்…” என்று நிறுத்தி கொண்டவள் அவன் மடியில் சாய்ந்து கண்ணீர் விட்டாள்.
அவளை நிமிர்த்தி கண்ணீரை துடைத்து விட்டவன், வருண் என்ன பேசினான் என்பதை கொஞ்சம் கொஞ்சமாக அவளிடம் கேட்டு தெரிந்து கொண்டான். பிறகு அவள் மொபைலை எடுத்து சரி பண்ணி கொடுத்தவன் “ஒரு அஞ்சு நாள் எனக்காக பொறுமையா இரு பேபி. இந்த பிரச்சனையெல்லாம் போட்டு குழப்பிக்காம நிம்மதியா தூங்கி எழுந்து ஆபீஸ் போயிட்டு வா. அஞ்சு ஆறு நாளுக்கப்புறம் இதுக்கான தீர்வை நா சொல்றேன்” என்று அவளிடம் மென்மையாக குழந்தைக்கு சொல்வது போல் கூறி சமாதானப்படுத்திவிட்டு கிளம்பிவிட்டான்.
கிளம்பியவன் ஜானிடம் சில வேலைகளை கொடுத்தான். மூன்று நாட்கள் மெல்பர்னில் முடிக்க வேண்டிய வேலைகளை முடித்து விட்டு இந்தியாவிற்கு பிளைட் ஏறி விட்டான்.
மதுவிடம் முக்கிய வேலையாக அமெரிக்கா செல்வதாக போனில் சொல்லிவிட்டு கிளம்பினான்.
தஞ்சாவூரில் பார்த்தி அவனுக்கு புக் செய்திருந்த ரிசார்ட் ரூமிற்க்கு சென்றவன் உடனேயே பார்த்தியை கூட்டிக்கொண்டு மது வீட்டிற்கு சென்று விட்டான்.
இங்கு மீனாட்சிக்கு மனதே சரியில்லை. மது அழுது கொண்டேதான் வீட்டிலிருந்து கிளம்பினாள். ஏர்போர்ட்டுக்கும் சென்று வழி அனுப்பவில்லை. அவளும் கூப்பிடவில்லை. பார்த்திதான் தான் பார்த்துக்கொள்வதாக கூறி அழைத்து சென்றான். அங்கு சென்றும் மது பேசவே இல்லை. இவராகத்தான் அவ்வபொழுது கூப்பிட்டு நலம் விசாரித்து கொள்கிறார்.
பழைய சுட்டித்தனம் மறைந்து ஏனோதானோவென்று இருக்கிறாள். கேட்க்கும் கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு வைத்துவிடுகிறாள். எங்கு இருவரும் செல்லம் கொடுத்தால் மகள் உருப்படாமல் போய் விடுவாளோ என்று பயந்து தான் மீனாட்சி மதுவிடம் கண்டிப்பாக இருப்பார். மற்றபடி அவருக்கும் மகள் என்றால் உயிர்.
ஒரே மகள். அவளுக்கு பிறகு என்ன காரணமோ வேறு குழந்தை பிறக்கவில்லை அவருக்கு. அதனால் அவர்களின் ஒட்டு மொத்த பாசத்தையும் கொட்டித்தான் மதுவை வளர்த்திருந்தனர்.
இன்று அவள் வாழ்க்கை துணையை விருப்பப்பட்டு கேட்கிறாள். அவள் விரும்புபவனை பார்க்காமல் கண்மூடித்தனமாக மறுக்கிறோமோ என்று யோசித்து கொண்டிருந்தவரிடம் பார்த்தி போன் செய்து சொன்னான் தானும், ஹேரியும் வீட்டுக்கு வருவதாக.
அதை வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த செல்ல துரையிடம் கூறினார் மீனாட்சி. அதை அப்பத்தாவும் வருணும் கேட்டு கொண்டுதான் இருந்தனர். வருணின் அம்மா அப்பா கும்பகோணத்தில் உள்ள கோயிலுக்கு சென்றிருந்தனர்.
இரண்டு நாட்களுக்கு முன்புதான் அனைவரும் அமெரிக்காவில் இருந்து வந்திருந்தனர். வந்த கையோடு அவர்களிடம் மதுவின் காதல் விஷயத்தை கூறி விட்டார் செல்லதுரை. அவரின் அக்கா மோகனாவும், அவளின் கணவர் பாபுவும் கூட அந்த பையனிடம் பேசி பார்க்கலாமே என்று செல்லத்துரையிடம் கேட்டனர்.
ஆனால் முன்பே மதுவின் மூலமாக விஷயம் அறிந்திருந்த வருண், ஒன்றும் வேண்டாம். வெள்ளைக்காரனின் பழக்க வழக்கம் நன்றாக இருக்காது. பின் மதுதான் சிரமப்படுவாள். நானே அவளை திருமணம் செய்து கொள்கிறேன் என்று பெருந்தன்மையாக கூறிவிட்டான்.
அக்காவின் மகனை அதிலிருந்து தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார் செல்லதுரை. ஆனால் அவனை பார்த்ததில் இருந்து மீனாட்சிக்கு எதோ உறுத்தல். ஆள் மாநிறமாக இருந்தாலும் லட்சணமாக , அயல் நாட்டில் வளர்ந்தவனுக்குரிய மிடுக்கோடுதான் இருக்கிறான். டாக்டர் வேறு.
ஆனால் மீனாட்சிக்குத்தான் அவனை மதுவிற்கு பொருத்தமானவனாக ஏற்று கொள்ள முடியவில்லை. மீனாட்சியின் மாமியாரும் மகளின் மகனை மதுவிற்கு மாப்பிள்ளையாக்க ஆர்வம் காட்டியது போல் தெரியவில்லை. வந்ததிலிருந்து எல்லாவற்றையும் பார்வையாளராக பார்த்து கொண்டிருக்கிறார்.
ஆகையால் இப்போது ஹேரி வருவது அவருக்கு ஆறுதலாகவே இருந்தது. மகளுக்கு பிடித்தவன் எப்படித்தான் இருக்கிறான் என்று பார்க்கவும் ஆவலாக இருந்தது. ஆனால் செல்லத்துரை கடுப்பாகிவிட்டார். அவன் எதுக்கு என் வீட்டுக்கு வருகிறான் என்று. வருணும் அப்படித்தான் அவன் என்ன என்னை விட பெரிய ஆளா பார்த்துவிடுவோம் என்று அமர்ந்திருந்தான். அப்பத்தாவும் அவனை பார்க்க ஆவலோடுதான் காத்திருந்தார்.
இப்படி எல்லோரையும் காக்க வைத்தவன் பார்த்தியோடு காரில் இருந்து இறங்கினான். வீட்டு வாசல், காம்பவுண்டிலிருந்து உள்ளடங்கி இருப்பதால் அவன் இறங்கி நடந்து வந்து கொண்டிருந்ததை பார்த்தவர்கள் வாய் அடைத்து போயினர்.
அப்பத்தாதான் “என்ன கம்பீரம், என்ன தோரணை. பையன் ராஜா மாதிரில்ல இருக்கான். அதான் என் பேத்தி மயங்கிட்டா” என்றார். இதே எண்ணம்தான் அனைவரின் மனதிலும்.
ஹேரி அவர்களை நெருங்கி வந்து கை குவித்ததும் செல்லத்துரை தானாக எழுந்து நின்று கை குவித்தார்.
“வணக்கம் அங்கிள், வணக்கம் ஆன்ட்டி” என்றவன் அப்பத்தாவை ஆச்சரியமாக பார்த்து “வணக்கம் பியூட்டி. மது பேபி சொன்னது உண்மைதான். நீங்க என் பேபி மாதிரிதான் இருக்கீங்க . மச்சம் மட்டும் தான் மிஸ்ஸிங்” என்றான்.
பதில் வணக்கம் சொல்லிய அப்பத்தாவும் மீனாட்சியும் பார்த்தியை பார்த்தனர். மீனாட்சி தமிழ் லிட்ரச்சர். அவன் பேசிய ஆங்கில உச்சரிப்பு அவருக்கும் பாதி புரிந்தும் புரியாத நிலை. அவன் விளக்கியதும் வாயெல்லாம் பல்லான அப்பத்தா “ஹா ஹா ஹரி உன் பேபிதான் என்ன மாதிரி பொறந்திருக்கா தம்பி . அட சாட்சாத் பெருமாள் பேருப்பா உனக்கு” என்று ஹேரியை ஹரியாக்கி கன்னத்தில் போட்டு கொண்டார். பெருமாள் கோயில் எந்த பக்கம் என்று கூட தெரியாதவர் இன்று பேசியதை பார்த்து செல்லத்துரை முறைத்தார்.
செல்லத்துரை பார்ப்பது விவசாயமாக இருந்தாலும் இங்கிலிஷ் லிட்ரச்சர் படித்தவர். ஆகையால் அவன் பேசுவது அவருக்கு புரிந்தது. நம்மூர் கவர்ன்மெண்ட் ஆபீஸ் ஆங்கிலத்தில் நன்றாகவே பேசுவார். திருப்பி அவனுக்கு வணக்கம் சொன்னவர் அவனை உள்ளே வருமாறு அழைத்து சென்றார்.
ஹேரியை சோஃபாவில் அமரவைத்து எதிரில் இருக்கும் சோஃபாவில் அமர்ந்தார் செல்லத்துரை. வருண் செல்லத்துரையின் பக்கத்தில் அமர்ந்து கால்மேல் கால் போட்டு கொண்டு ஹேரியை ஆராய்ந்து கொண்டிருந்தான். அப்பத்தா ஹேரியின் பக்கத்தில் உள்ள ஒற்றை சோஃபாவில் அமர்ந்திருந்தார். அதற்கு அருகில் மீனாட்சியும் பார்த்தியும் நின்று கொண்டார்கள். உள்ளே வந்தவன் முதலில் பார்த்தது ஹாலில் மாட்ட பட்டிருக்கும் மதுவின் போட்டோக்களைத்தான்.
பிறகு வந்த வேலை நியாபகம் வந்ததும் செல்ல துரையின் கண்களை நேராக பார்த்து “ஹலோ அங்கிள், நா ஹேரி ரிச்சர்ட் ஃபிரம் ஆஸ்திரேலியா. உங்க பொண்ணு மதுவ நான் விரும்பறேன். அவள எனக்கு கல்யாணம் பண்ணி கொடுங்க” என்று பார்த்தியிடம் கேட்டு தெரிந்து கொண்ட படி முறையாக பெண் கேட்டான்.
அவனின் நேரடியான கேள்வியில் சிறிது தயங்கிய செல்லத்துரை “இல்ல மிஸ்டர் ஹேரி. என் பொண்ண உங்களுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கறதுல எனக்கு விருப்பம் இல்ல” என்று ஆங்கிலத்திலேயே பதில் சொன்னார்.
“ஏன் அங்கிள்”
“ஏன்னா என்ன சொல்றது. எங்க பழக்க வழக்கம், கல்ச்சர் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்”
“உங்க பழக்க வழக்கம், நீங்கல்லாம் சொல்லி குடுத்தீங்கன்னா பழகிக்கறேன். அப்புறம் உங்க கல்ச்சர் பத்தி எனக்கு தெரியாம இருக்கலாம். ஆனா உங்க பொண்ணு மதுவ பத்தி எனக்கு நல்லா தெரியுமே”
“எங்களை விட எங்க பொண்ண பத்தி உங்களுக்கு தெரியுமா?”
“ம்ம் நல்லா தெரியும். அவ எப்ப சிரிப்பா, எப்ப அழுவா, எப்ப கோவப்படுவா, எப்ப கண்ண சுருக்குவா, எப்ப உதட்ட சுழிப்பா இது எல்லாம் தெரியும். ஆனா உங்களுக்குத்தான் உங்க பொண்ண பத்தி சரியா தெரியல. தெரிஞ்சிருந்தா இவ்ளோ நாள் எல்லோரையும் கடந்து போனவ, இப்ப மட்டும் ஒருத்தன பிடிக்குதுன்னு சொல்றாளேன்னு யோசிச்சு என்ன கூப்பிட்டு பேசிருப்பிங்க”
சிறிது நேரம் அமைதியாக இருந்த செல்லதுரை
“எதுக்கு அனாவசிய பேச்சு. அவ சின்ன பொண்ணு. கண்ணுக்கு கவர்ச்சியா தெரியறது பாத்து முடிவெடுப்பா. நீங்க இன்னைக்கு என் பொண்ண பிடிக்குதுன்னு சொல்விங்க. நாளைக்கு வேற பொண்ண பிடிக்குதுன்னு என் பொண்ண வேண்டாம்ன்னு சொல்லிட்டு போயிடுவீங்க. எந்த நம்பிக்கையில உங்களுக்கு என் பொண்ண கல்யாணம் பண்ணி கொடுக்கறது”
“ஓ, எந்த நம்பிக்கையில இவர உங்க பொண்ணுக்கு மாப்பிள்ளையா தேர்ந்தெடுத்துருக்கீங்க. இவரு கடைசி வரைக்கும் வேற பொண்ணு பின்னாடி போகாம இருப்பாரா” என்று கையை காட்டி கேட்டான். அதற்கு கோவமாக பதில் சொல்ல வந்த வருணை அமர்த்திவிட்டு செல்லத்துரை “இவன் வளந்தது வேணா அமெரிக்காவில இருக்கலாம். ஆனா எங்க அக்கா பையன். எங்க பழக்க வழக்கம் தெரிஞ்ச பையன்”
“ஓ அப்படியா, அவருக்கு எத்தன கேர்ள் பிரண்டுனு கேட்டீங்களா”
அதற்கு வருண் “ஏன் கேர்ள் பிரண்ட் இருக்கறது தப்பா. ஆஸ்திரேலியால பிறந்த உங்களுக்கு இது கூட தெரியாதா”
“அது எனக்கு தெரியும். ஆனா அங்கிளுக்கு தெரியணும்ல்ல. அது யாரு லீமா தான. அவ கூட ஒரு வருஷம். அப்புறம் சுசானா கூட சிக்ஸ் மந்த் லிவிங் டுகெதர். இந்த விஷயெமெல்லாம் உன் அங்கிள்ட்ட சொல்லிட்டியா”
வருணுக்கு வேர்க்க ஆரம்பித்து விட்டது. புள்ளி விவரமாக ஹேரி சொல்வான் என்று எதிர் பார்க்கவில்லை. செல்லத்துரையின் முகத்திலும் இருட்டடித்து விட்டது.
“இது சும்மா எக்ஸாம்பிள் தான் அங்கிள். அவரோட கேர்ள் பிரண்ட் கணக்கு அவருக்கே தெரியாது”
வருண் ஹேரியிடம் பாய்ந்தான்
“ஏய் என்ன சும்மா கதை விடற. நீ விடற கதையெல்லாம் இங்க யாரும் நம்ப மாட்டாங்க. நான் ஒரு டாக்டர், பணக்காரன்னு தெரிஞ்சிக்கிட்டு என்ன ப்ளாக் மெயில் பண்றியா”
ஹேரி அசையக்கூடவில்லை. அப்படியே கூலாக அமர்ந்துகொண்டு
“ஓ நீ டாக்டர்ல. இப்பதான் நியாபகம் வருது. நர்ஸ் கனிமொழி நியாபகம் இருக்கா. லவ் பண்றேன்னு சொல்லி ஏமாத்தினியே ஒன் இயர் முன்னாடி. அவகூட சூசைட் அட்டெம்ப்ட் பண்ணாளே. அவ இன்னைக்கு உன்மேல கம்பளைண்ட் பைல் பண்ணிட்டா. அநேகமா நீ ஊருக்கு போகும்போது உன் வேலையும் இருக்காது. உன்னையும் தூக்கி உள்ள போட்டாலும் போடலாம்” என்றவனை “டேய்” என்று அடிக்க பாய்ந்தான் வருண்.
ஆனால் என்ன நடந்ததென்றே தெரியவில்லை. வருணின் கழுத்தை இறுக்கி பிடித்திருந்தான் ஹேரி.
எல்லோரும் அதிர்ந்து எழுந்து நிற்கும்போதே வருணிடம் “எப்படி எப்படி என் பேபி கிட்டயே தப்பா பேசுவியா நீ. அவளை பத்தி உன் எண்ணத்துல நினைச்சின்னா கூட உன்ன அமெரிக்கால காலம் முழுக்க ஜெய்ல்ல இருக்க மாதிரி ஏற்பாடு பண்ணிடுவேன். என் பேபியோட சொந்தக்காரன்கிறதால தான் நீ இவ்ளோ நேரம் முழுசா நிக்கிற” என்று ஹேரி அதிராமல் அமைதியாக மிரட்டி கொண்டிருக்கும் போதே பார்த்தி வந்து அவன் கைகளை வருணின் கழுத்திலிருந்து பிரித்தெடுக்க முயற்சி பண்ணினான். அவனால் எடுக்க முடியவில்லை.
“விடுங்க ஹேரி. அவனுக்கு ஏதாவது ஆகிட போகுது” என்று பார்த்தி சொல்லவும்தான் கைகளை எடுத்தான். கழுத்தை பிடித்து இருமி கொண்டே யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் உள்ளே அவனின் அறைக்கு சென்றுவிட்டான் வருண்.
(வருவாள்…)
error: Content is protected !!