Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

3 பேர் 2 காதல் 1 கனவு

3..2..1 Episode 7. தடுமாறிய பெண்களின் பாதுகாப்பு

நாட்கள் வேகமாக ஓடின. சட்டம், பொருளாதாரம், வரலாறு, புவியியல் என அனைத்திலும் மாணவ மாணவியர் அனைவருமே ஓரளவு தேர்ந்திருந்தார்கள்.

“சார், இந்திய வரலாறு முடியவே போகுது. இன்னைக்கு ஒருநாள் கொஞ்சம் ஃபன் செய்யலாமா சார். ஒரேடியாக பாடம் கவனிக்கிறது கடுப்பாயிருக்குது”, மாணவன் ஒருவன் சலிப்புடன் கூற, கதிர் சிறிதுநேரம் யோசித்தான். பின் புன்முறுவல் பூத்தவாறு, “சரி, நான் ஒரு விளையாட்டைச் சொல்றேன். அது உங்க இண்டெர்வியூக்கு உதவியாக இருக்கும்”, கதிர் கூறினான்.

“அப்போ! இந்த தேர்வைத் தாண்டி உங்களால யோசிக்கவே முடியாதுல்ல!”, மாணவன் கூற, மீண்டும் புன்னகைத்தான் கதிர்.

“எல்லாரும் இப்போ இரண்டு துண்டுசீட்டுகளை எடுங்க. உங்க பெயர்களை ஒரு சீட்டிலும், உங்களுக்குப் பிடிச்ச தலைப்ப ஒரு சீட்டிலும் எழுதுங்க. இங்க வச்சிருக்கிற இரண்டு பாக்ஸ்லயும் அதைத் தனித்தனியாகப் போடுங்க. இந்த பாக்ஸ்லயிருந்து ஒரு பெயரை நான் எடுப்பேன். அவங்க அடுத்த பாக்ஸ்லயிருந்து ஒரு சீட்டை எடுத்து, அதிலுள்ள தலைப்பில் ஒரு நிமிஷம் பேசணும்! சரியா?”, கதிர் கூற அனைவரும் சீட்டுகளைக் கிழித்து எழுதத் தொடங்கினார்கள்.



Advertisement

இரண்டு பாக்ஸ்களும் நிறைய, கதிர் ஒவ்வொரு சீட்டாக எடுக்க, அவர்கள் வந்து ஒவ்வொரு தலைப்பாக பேசத் தொடங்கினார்கள்.

“குற்றங்களும் தண்டனைகளும்”, என்ற தலைப்பில் மிருணாளினி பேச, வகுப்பில் அனைவருக்குமே புல்லரித்தது. கதிர் அவளுக்குக் கைகுடுத்து உற்சாகப் படுத்தினான்.

அடுத்து கார்த்தியின் பெயர் வர, அவள் எடுத்த சீட்டில் “பெண்களின் பாதுகாப்பு” என்ற தலைப்பிருந்தது. கார்த்தியின் தாரா – நாதிரா பேச்சைக் கேட்டிருந்த அனைவரும், அவளது உரைக்காக ஆர்வமாகக் காத்திருந்தார்கள்.

Advertisement

அனைவரின் முன்னால் நின்றதும் கார்த்திக்கு வியர்த்து வழிந்தது. கைகள் நடுங்கத் தொடங்கின. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பேசத் தொடங்கினாள்.

Advertisement

“பெண்களோட பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தோட கடமை.. வெளியூர்களுக்குத் தனியாகச் செல்லும் பெண்கள்…” அதற்கு மேல் வார்த்தைகள் வராது தொண்டை அடைத்துக் கொண்டது. கைகளுடன் சேர்ந்து மொத்த உடம்பும் நடுங்கத் தொடங்கியது. மூளை சிந்திப்பதை நிறுத்தியது. கண்கள் குளமாகத் தொடங்கியது.

“கார்த்திகேயினி! போய் உங்க இடத்தில உட்காருங்க. பேசவரலன்னா, என்னால பேச முடியாதுன்னு சொல்ல வேண்டியதுதானே. அதை விட்டுட்டு வகுப்போட மொத்த நேரத்தையும் வீணடிக்குறீங்க..”, கதிர் எரிச்சலோடு கூற, அழுதுகொண்டே கார்த்தி தன் இருக்கையில் வந்தமர்ந்தாள். அவள் கண்களிலிருந்து அருவி போல நீர் வழிந்து கொண்டிருந்தது.

“நான் சொல்றத எல்லோரும் கவனமாகக் கேளுங்க. கோர்வையாகப் பேசறதுங்கறது மிருணாளினி மாதிரியானவங்கக்கிட்ட மட்டும் இருக்கிற தனித்திறன் இல்லை. எல்லாராலும் கோர்வையாகப் பேச முடியும். மனப்பாடம் செஞ்சு பேசுனா, கோர்வையாக இருக்கும். ஆனால் இயல்பாக இருக்காது. ரசிக்கும்படியாக இருக்காது. எந்த ஒரு தலைப்பை எடுத்தாலும், அதுல ஒரு நாலு பாயிண்ட் மட்டும் முதல்ல எடுத்துக்கங்க. வரிசையாக ஒவ்வொரு பாயிண்ட்டாக உங்களுக்குத் தோணுறத இயல்பா பேசும்போது கோர்வையாக வந்திடும். அதவிட்டுட்டு ஒரு தலைப்ப முழுசா பேசணும்னு நினைச்சால், வார்த்தைகள் சரியாக வராது! உங்க பாணி உங்களுக்குத் தான் தெரியும். அதை கையிலெடுத்து பேசுங்க. ரசிக்கும்படியாக இருக்கும். சரி, நீங்க ப்ரேக் எடுக்கலாம்”, கூறிவிட்டு வகுப்பை விட்டு கதிர் வெளியேற, கார்த்தியை நோக்கி ஓடிவந்தாள் மிருணாளினி.

Advertisement

“நான் அன்னிக்கே சொன்னேன்ல. வரலாறு மட்டுமே தேர்வுல முழுசா வராதுன்னு! இன்னிக்கு என்னாச்சு? அல்வா மாதிரியான தலைப்பு. ஆனால் பெண்களோட பாதுகாப்பு உன்னால தடுமாறிப் போச்சே!”, நக்கலாக மிருணாளினி கூறினாள்.

“பெண்களோட தடுமாற்றுத்துல மற்ற பெண்களுக்கு எவ்வளவு ஆனந்தம்!”, சேது குறுக்கிட்டபடியே தொடர்ந்தான். “மிருணாளினி! நீ கார்த்தியைப் பத்தி கவலைப்படுறதை விட்டுட்டு… போய் நிம்மதியாத் தூங்கு. இப்படியே யோசிச்சுக்கிட்டிருந்தன்னா, உனக்கு நிஜமாகவே பைத்தியம்தான் பிடிக்கப் போது!” சேது கூறுவதைக் காதில் கேட்காதது போல மிருணாளினி வெளியேறினாள்.

”நானும் கவனிச்சிட்டுதான் இருக்குறேன் கார்த்தி. இந்த கதிர் சார்  எல்லார்கிட்டயும் நல்லாத்தான் நடந்துக்கறாரு. உன்கிட்ட மட்டும் ஏன் இப்படி கடுகடுன்னு நடக்கிறார். நீ தாரா கதைய அவ்வளவு அழகாக சொன்ன போதும், அந்த மனுஷன் ஒரு வார்த்தைகூடப் பாராட்டல. இன்னிக்கு நீ கொஞ்சம் திணறியதும், அவருக்கு அவ்வளவு கோபம் வருது. நீ கவலைப்படாத கார்த்தி. அவர் சொல்றதயெல்லாம் காதில போட்டுக்காத”, வசந்தி கூற, வாடிய முகத்துடன் கேட்டுக்கொண்டிருந்தாள் கார்த்தி.

பின், தவிப்புகளை ஒரு ஓரமாகத் தள்ளிவிட்டு, “வசந்தி, நான் லைப்ரரி போய் இந்த புத்தகங்களைக் கொடுத்துட்டு வேற புத்தகங்கள் வாங்கிட்டு வந்துடுறேன். நீ சேதுகூடப் போய் மதிய உணவு சாப்பிட்டுக்கோ. எனக்குப் பசிக்கல. நான் நேராக க்ளாஸ்க்கு வந்துடறேன்!”, கார்த்தி கூறிவிட்டு, வேகவேகமாக லைப்ரரிக்குச் செல்ல எழுந்தாள்.

“பைத்தியம் பிடிச்சிருக்குதா உனக்கு? இப்போ எதுக்கு யார்மேலயோ உள்ள கோபத்தைச் சாப்பட்டு மேலே காட்டுற. உடம்ப கெடுத்துக்காத கார்த்தி. மதியம் ஏதோ ஐ.ஏ.எஸ். அதிகாரி நம்மக் கூட பேச வர்றாராம். அவர் முன்னாடி நீ மயங்கிவிழப் போற!”, வசந்தி கடுப்பாய்க் கூற, “ப்ளீஸ்டீ.. எனக்கு சுத்தமாப் பசிக்கல. இன்னிக்கு ஒருநாள் சேதுக்கூட போடீ”, கார்த்தி கெஞ்ச, வேறு வழியில்லாமல் அவளை விட்டுவிட்டு அன்று சேதுவுடன் சாப்பிடச் சென்றாள் வசந்தி.

லைப்ரரியில் புத்தகங்களை மாற்ற கார்த்தி நிற்க, கதிர் உள்ளே நுழைவதைக் கவனித்தாள். அப்படியே ஓடிவிடலாமா என ஒரு நொடி நினைத்தாள்.

பின் பல்லைக்கடித்துக்கொண்டு, “அண்ணா. சீக்கிரம் மாத்திக் குடுங்க. நேரமாகுது”, கார்த்தி கூற, நூலகர் விறுவிறுவென்று கார்த்தியின் பக்கம் வந்தார்.

“ஏம்மா! நீ உண்மையாவே தினமும் இவ்வளவு புத்தகங்களைப் படிக்கிறியா? இல்ல, எடுத்துட்டுப் போய் அப்படியே திரும்ப கொண்டுவந்து எனக்கு வேலை வைக்கிறியா?”, சிரித்தபடியே நூலகர் கூற, கதிர் இருவர் அருகிலும் வந்தான்.

“இவ்வளவு புத்தகங்களை இப்படி தினமும் படிச்சால், தேர்வுல  நிச்சயமாக வெற்றி பெற முடியாது. மூளை நல்லா குழம்பிடும். என்ன புத்தகங்கள் படிக்கணும்னு தேர்வு செஞ்சு, திரும்ப திரும்ப அதையே படிக்கணும்! இங்க யாரு நிறைய புத்தகங்கள் படிக்குறாங்கன்னு போட்டி நடத்தல!”, கதிர் நக்கலாகக் கூற, கார்த்திக்கு அவனைக் கண்டு எரிச்சலாக இருந்தது. ஏன் தன்னிடம் எப்போதும் இப்படி விஷத்தைக் கக்குகிறான் எனக் கோபமாக வந்தது. எடுக்க நினைத்த புத்தகங்களை அப்படியே விட்டுட்டு, விறுவிறுவென வகுப்பறையை நோக்கி நடந்தாள்.

அனைவரும் மதிய உணவருந்த வெளியே சென்றதால், வகுப்பறைக்கு வெளியே குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தாள். தனது மொபைல் ஃபோனை எடுத்துப் பார்க்கவும் அதில் ஒரு மிஸ்டு கால் இருந்தது. வழக்கமாக மாலையில் அழைக்கும் தந்தை, அன்று காலை வகுப்பு நேரத்தில் அழைத்திருந்தார். என்னவாக இருக்கும் என்று யோசித்தவாறே கணேசனுக்குக் கால் செய்தாள்.

“கார்த்தி வகுப்பு நேரத்துல தொல்லை செஞ்சுட்டேனாம்மா?”, கணேசன் வாஞ்சையோடு கேட்க, “அதெல்லாம் ஒன்னுமில்லப்பா. நீங்க முதல்ல விஷயத்தைச் சொல்லுங்க!”, கார்த்தி பதற்றத்தோடு கேட்டாள்.

தயங்கியபடியே கணேசன் தொடர்ந்தார். “அது வந்து… கார்த்திம்மா. ஒரு நல்ல வரன் வந்துருக்கும்மா.. பையன் டாக்டராம். தங்கமான குடும்பம். கோயம்புத்தூர்ல சொந்தமாக கிளினிக்கும், பக்கத்துலயே வீடும் வச்சிருக்காராம். நீ சரின்னு சொல்லிட்டா, உடனே முடிச்சிலாம்டா. அப்பாவுக்கும் வயசாகுதுல்ல”, கணேசன் கூறி முடிக்க, கதிர் மேலிருந்த கோபம் பன்மடங்காகி கணேசன் மேல் பாய்ந்தது.

“கல்யாணத்தப் பத்தி என்கிட்ட பேசாதீங்கன்னு எத்தனை தடவைப்பா சொல்றது. ஏன் எல்லாரும் என்னைய இப்படிச் சித்ரவதை செய்றீங்க. இனி ஒருதடவை இப்படி பேசுனீங்கன்னா, தேர்வு முடியுற வரைக்கும் உங்க ஃபோன்காலை நான் எடுக்கமாட்டேன். உங்களுக்கு வயசாகுதுன்னா, நீங்களே அந்த டாக்டரைக் கட்டிக்கோங்க. உங்களுக்கு இலவசமா மருத்துவம் பார்ப்பார். என்னை ஆளவிடுங்க!”, தலைக்கேறிய கோபத்தின் உச்சியில் கார்த்தி பேசிக்கொண்டு அழைப்பைத் துண்டிக்க, அவள் பேசுவதைக் கேட்டுக்கொண்டே வகுப்பறையின் பக்கம் வந்த சேதுவும், வசந்தியும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

கதிரையும், உடன் வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியையும் கண்டதும் அனைவரும் வகுப்புக்குள் நுழைந்தார்கள்.

பேச்சாளரைப் போலத் தெரிந்த அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பேசத் தொடங்கினார். “எல்லாருக்கும் வணக்கம். உங்களை எல்லாம் இப்படிப் பாக்கும்போது, என்னோட அகாடெமி நினைவுகள் ஞாபகத்துக்கு வருது..”, தனது நினைவுகளை விவரிக்க, அனைவரும் தங்கள் நிலையுடன் ஒப்பிட்டுக் கொண்டார்கள்.

ஒருநாள் அந்த ஆபீஸர் போல் தானும் அகாடெமியில் உரையாற்றுவது போல கனவு காணத் தொடங்கினார்கள்.

“ரிவிஷன் தான் இந்த தேர்வோட சாவி. என்ன புத்தகங்கள் படிக்குறீங்கன்னு முதல்ல தேர்வு செஞ்சிட்டு அதையே திரும்பத் திரும்ப படிங்க. குறைஞ்சது நீங்க படிச்சத மூன்று முறை ரிவைஸ் செய்யலேன்னா, அது படிக்காததுக்குச் சமம். புத்தகம் மட்டுமில்ல, நீங்க எழுதுற நோட்ஸ்சையும் மூன்று தடவை ரிவைஸ் செஞ்சுருக்கணும்!”, அந்த ஆபிஸர் கூறியது கார்த்திக்கு சுருக்கென்றது. தான் எவ்வளவு தவறாகப் படித்துக் கொண்டிருக்கிறோம் என்பது விளங்கியது. இதைத் தானே கதிர் லைப்ரரியில் சொன்னான், என்று சட்டென அவனது எண்ணம் தோன்ற, கூடவே சேர்ந்து வெறுப்புணர்ச்சியும் வர, அந்த எண்ணத்தைத் தவிர்த்து, ஆபிஸரின் உரைக்கு மீண்டும் வந்தாள்.

“சார் ! ஒரு சந்தேகம்!”, மிருணாளினி கைதூக்க, “தாராளமாகக் கேளுங்க!”, என்று அந்த ஆபீசர் கூறினார்.

“செய்தித்தாள் குறிப்புகளை எப்படி மூனு தடவை ரிவைஸ் பண்றது?”, மிருணாளினி கேட்க, “நல்ல கேள்வி. வளவளன்னு நோட்ஸ் எடுக்கவே கூடாது. ஒரு மாசத்தோட நியூஸ்பேப்பர் நோட்ஸை ஒரு பக்கத்துல முடிக்கணும். 12 மாசத்துக்குச் சரியாக 12 பக்கங்கள். இதை மூனு தடவை ரிவைஸ் செய்யலாமே. அப்படி உங்களால சுருக்கமாக நியூஸ்பேப்பர் நோட்ஸை எடுக்க முடியலேன்னா, நீங்க நோட்ஸ் எடுக்கவே வேண்டாம். ஏன்னா நீங்க எடுக்கற நோட்ஸை உங்களாலேயே படிக்க முடியாதே!”, ஆபீசர் கூற, “நன்றி சார் ” என்று கூறி மிருணாளினி அமர்ந்தாள்.

ஆபீசர் மேலும் தொடர்ந்தார். “நீங்க எந்த புத்தகம் படிச்சாலும், நியூஸ்பேப்பர் படிச்சாலும், செய்திக்காக மட்டும் படிக்காமல், அதிலேயிருந்து தேர்வுக்கு என்ன கேள்விகள் வரலாம்னு யோசிங்க. அப்போதான், உங்க மூளை, இந்த போட்டித்தேர்வுக்கு ஏற்றபடி சிந்திக்கத் தொடங்கும். ஒவ்வொரு வருஷ கேள்வித்தாளையும் எடுத்து, ஏன் இந்த கேள்வியைக் கேட்டிருக்காங்கன்னு யோசிங்க. உங்களுக்கு உதவுற மாதிரி, கடந்த பத்து வருஷ யூ.பி.எஸ்.சி. ப்ரிலிமினரி எக்ஸாம் கேள்விகளைத் தொகுத்து, யூ.பி.எஸ்.சி. ஏன் இந்த கேள்வியக் கேட்டிருக்காங்க, பதில்களை எப்படி அணுகணும்னு தெளிவா என்னோட புத்தகத்துல விளக்கியிருக்கேன். வாங்கிப் படிங்க. என்னோட அந்த புத்தகத்தோட விலை ரூ.3500..”, ஆபிசர் கூற, அனைவரும் ஒருவரை ஒருவர் பெருமூச்சோடுப் பார்த்துக் கொண்டார்கள்.

“என்ன இப்படி பார்த்துக்கிறீங்க. எல்லாருக்கும் என்னால இலவசமாகக் கொடுக்க முடியாதுல்ல. அதனாலதான் இந்த சனிக்கிழமை நடக்குற முதல் மாதிரித் தேர்வுல யாரு முதல் மதிப்பெண் வாங்குறாங்களோ, அவங்களுக்கு இலவசமாகத் தந்திடுறேன்! நான் இந்த அகாடெமிக்கு பல வருஷங்களா வர்றேன். நாலு வருஷத்துக்கு முன்னாடி, இந்த புத்தகத்தைக் கதிர் வாங்கினான். அடுத்த வாரத்துல இண்டெர்வியூக்குப் போகப் போறான். உனக்கு என்னோட வாழ்த்துக்கள்பா. விட்டால், நான் பேசிக்கிட்டே இருப்பேன். இன்னைக்கு முடிச்சுக்கலாம்!”, ஆபிசர் கூறி உரையை நிறைவு செய்தார்.

கதிர் உடனே எழுந்து, “சார்க்கு நன்றியுரை ஆற்ற மாணவி ஒருவரை மேடைக்கு அழைக்கிறேன்!”, எனக் கூறினான்.

அவன் மிருணாளினியை அழைக்கப் போகிறான் என அனைவரும் நினைக்க, மிருணாளினியும் எழுவதற்கு ஆயத்தமாக, அவன் சட்டென “கார்த்திகேயனி ப்ளீஸ் வாங்க!“ என்று கூறி கார்த்தியை மேடைக்கு அழைத்தான்.

யாருமே இதை எதிர்பார்க்கவில்லை. தன்னை அவமானப்படுத்தவே அவன் அழைக்கிறான் என்று கார்த்தி மனதுள் நினைத்தவாறே மேடையேறினாள். ஆபிசர் பேசிய நான்கு விஷயங்களைக் குறித்துக் கொண்டு, அதைப் பற்றி மேடையில் பேசி ஆபீஸருக்கு நன்றி தெரிவித்தாள்.

“கார்த்திகேயினி. அழகாப் பேசினம்மா. நான் பேசியத இவ்வளவு ஆழமாக உள்வாங்குனது எனக்கே ஆச்சரியமாயிருக்குது. உனக்கும் என்னோட வாழ்த்துக்கள்மா”, ஆபீசர் அன்போடு விடைபெற்றார்.

“இந்த சனிக்கிழமை தேர்வுல முதல் மார்க் வாங்க படிக்க ஆரம்பிங்க. நம்ம மூணு பேர்ல யார் முதல் மார்க் வாங்குனாலும் சரி. புத்தகத்தை மாத்தி மாத்தி படிச்சிக்கலாம். மிருணாளினி மட்டும் முதல் மார்க் வாங்கிட்டா, நாம தொலைஞ்சோம்!”, சேது பயந்தபடியே கூற, வசந்தியும், கார்த்தியும் சிரித்துக் கொண்டார்கள்.

“கார்த்தி, உன்னைப் புரிஞ்சுக்கவே முடியலடி, ஒருநாள் கலக்குற. இன்னொரு நாள் சொதப்புற. எந்த நேரத்தில நீ என்ன பண்ணுவேன்னோ, உன் மனசுக்குள்ள என்ன ஓடுதுன்னோ, அந்த ஆண்டவனுக்கே விளங்காது போ!”, வசந்தி சலிப்போடு கூற, கார்த்தி தனது வழக்கமான புன்னகையை உதிர்த்தாள்.

மனதின் சாவியைத் தொலைத்தவர்களால், மனதை எப்படி கட்டுப்படுத்த முடியும்? அலைபாய்வது தானே மனதின் குணாதிசயம்?

 

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!