Skip to content
Post Views: 2,482
காதல் தேச சட்டங்களின் நீதிபதியாய் நீ!
காதலால் காதலுக்கே துரோகியான குற்றவாளியாய் நான்!
நான் ஆறு மாதங்கள் முன்பு “மலரே மௌனமா” அவனுடன்தான் பாடுவேன் என்று மேடையில் சொன்னதுதான் ஊரறிந்த விஷயமாயிற்றே.
என்னதான் நண்பனின் மீது நிறையவே நம்பிக்கை இருந்தாலும்., எங்கே அவனது தங்கையின் வாழ்வில் நான் குறுக்கே வந்து விடுவேனோ எனும் எண்ணம் தனாவை வருத்திக் கொண்டிருந்ததோ என்னவோ, எனது வார்த்தைகளில் தனாவின் முகத்திலும் நிறையவே மலர்ச்சி.
Advertisement
ஷ்யாமும் தனாவும் இரண்டு சைக்கிள்களையும் தள்ளிக்கொண்டு ஒரே குடைக்குள் நடக்க, நானும் சாருவும் ஒரு குடைக்குள் நடக்க வேண்டிய கட்டாயம். இங்கேதான் எனக்கு பிரச்சனை. துவங்கியது
அவளுடைய நடையின் வேகம் சற்றே அதிகமாக இருக்க, அவளுடன் அந்தக் குடைக்குள், அவள் வேகத்தில் நடக்க, என்னால் இயலவேயில்லை.
“கொஞ்ச மெதுவா நடக்கலாம் சாரு. இங்கே மேடும் பள்ளமுமா இருக்கு, பாதை சரியில்லை பாருங்க” இரண்டொரு முறை சொல்லவும் செய்தேன் நான்.
Advertisement
சொன்னவுடன் வேகம் குறையும் அவளது நடை இரண்டொரு நிமிடத்தில் மறுபடியும் வேகமாகிவிடும். அவ்வப்போது என்னைத் திரும்பிப் பார்த்துக் கொண்டேதான் நடந்து கொண்டிருந்தான் ஷ்யாம்.
Advertisement
அவனது பாதி கவனம் என் மீதுதான் இருந்தது. இருந்தாலும் தனாவுடன் பேசும் சுவாரஸ்யத்தில் எங்களை விட்டு ஐந்தாறு அடிகள் முன்னே சென்றிருந்தான் அவன்.
மழையின் வேகமும் அதிகரித்திருக்க, காற்றுமே சற்று பலமாக வீச ஆரம்பித்திருக்க, சாரு அவற்றை ரசித்துகொண்டே நடந்து கொண்டிருக்க, எனக்கு அவற்றை ரசிக்கும் மனநிலை இப்போது கண்டிப்பாக இல்லை. என் காதுகளுக்குள் சித்தாரா ஆணையிட்டுக்கொண்டே இருந்தாள்
“கவனமா நட. எங்கேயாவது விழுந்து வைக்காதே”
Advertisement
நான் கவனமாகத்தான் நடந்தேன். ஆனாலும் காற்றும். மழையும் அவள் நடையின் வேகமும் என்னைப புரட்டிப் போட, எனது கால் சற்றே இடற எப்படி விழுந்தேன் என்றே தெரியாமல் கீழே விழுந்திருந்தேன் நான்.
தலை முதல் கால் வரை எனக்கு அதிர்வலைகள் பரவி ஓய்ந்து, என்ன நடந்தது என்று நான் புரிந்து நிமிர்வதற்குள் என்னருகில் வந்து நின்றிருந்தான் ஷ்யாம்.
நல்ல வேளையாக நான் விழுந்ததில் எனது வயிறு தரை மீது மோதவில்லை. நான் விழுந்த வேகத்திலும் கைகளை ஊன்றி, சமாளித்திருந்தேன். எனது முட்டுகள் இரண்டும் மட்டுமே தரையில் உராய்ந்திருந்தன. நான் அணிந்திருந்த சல்வார் எனது வலது முட்டியின் அருகே சற்றே கிழிந்து லேசான ரத்தம் வழிந்துக்கொண்டிருந்தது.
“அய்யோ பாப்பா. என்னாச்சு பாப்பா” பதறித்தான் போனான் ஷ்யாம்.
எனக்கு அவன் கை கொடுக்க மெல்ல எழுந்து நின்றேன். எனது தலைக்கு மேலே அவனது குடை மழையிலிருந்து என்னைக் காத்துக்கொண்டிருந்தது. எழுந்து நின்றவுடன்தான் என்ன நடந்தது என்பதை எனது அறிவு முழுவதுமாக உணர்ந்தது போலும். இதயம் அசுர வேகத்தில் துடிக்க ஆரம்பித்தது எனக்கு.
“என் குழந்தைக்கு எதுவும் தவறாக நடந்திருக்காதுதானே?” நினைக்கும் போதே உயிர் நடுங்குவது போல் இருந்தது. வயிற்றுக்குள் ஏதேதோ மாற்றங்கள் நிகழ்வது போலே ஒரு உணர்வு. அது எனது மனப்பிரமையா என்பதும் தெரியவில்லை எனக்கு
“சாரிடா கண்ணா. சாரிடா கண்ணா. பத்திரமா இருந்துக்கோடா கண்ணா” எனது வயிற்றுக்குள் இருப்பவனிடம் கெஞ்சினேன் நான்.
இப்போது வயிற்றுக்குள் எந்த அசைவும் இல்லை. பய பூகம்பங்கள் உதயமாகின எனக்குள்ளே.
“இந்தா இதைக் குடி முதல்லே” தனது கைப்பையிலிருந்து தண்ணீரை எடுத்து என்னிடம் நீட்டினான் ஷ்யாம். அவன் முகத்தை பார்த்துக்கொண்டே பருகினேன் நான்.
அவன் கரத்தை இறுக்கமாக பற்றிக்கொண்டு விட வேண்டும் போல் இருந்தது. அவள் தோள் சாய்ந்து எனது மனதின் பயத்தை எல்லாம் அவன் தோள்கள் மீதே கொட்டி விட வேண்டும் போல் இருந்தது. கண்ணீர் வெளியே வரவா வரவா என பயமுறுத்திக் கொண்டிருந்தது.
“குழந்தைக்கு ஏதும் ஆகியிருக்காது இல்ல?” அவனிடம் கேட்டுக்கொள்ள வேண்டும் போல் இருந்தது.
“ஒண்ணுமில்லை பாப்பா, ஒண்ணுமில்லை ரிலாக்ஸ்” என் முகத்தில் இருந்த தளர்வை பார்த்து சட்டென சொல்லிவிட்டவன் அவர்கள் இருவரின் இருப்பை அப்போதுதான் உணர்ந்தவனாக “ரிலாக்ஸ் சந்தியா “ என முடித்தான்.
நான் எனது கண்ணீரையும், உணர்வுகளையும் கட்டுப் படுத்திக்கொண்டு நின்றிருந்தேன்.
இங்கே யாரிடம், என் நிலையை என்னவென்று விளக்கி விட முடியும் என்னால். சித்தாரா மட்டும் இங்கே இருந்திருந்தால் என்னைத் திட்டித் தீர்த்திருப்பாள். அது மட்டும் நன்றாக புரிந்தது எனக்கு.
அங்கே உட்கார கூட இடம் தென்படவில்லை. ஒரு மரத்தின் நிழலில் சற்றே ஒதுங்கினோம் என்றாலும், மழை பொழிந்துக்கொண்டிருந்தது. அதற்கும் மேலாக காற்று எங்களை சுழற்றிக் கொண்டிருந்தது
“தனா இங்கே டாக்சி ஏதாவது வருமா பாரேன். இவங்க ரெண்டு பேரையும் அனுப்பிட்டு நாம நடந்து போவோம்” என்றவன் எனது வலது காலிலிருந்து ரத்தம் வழிந்துக் கொண்டிருந்ததை கவனித்திருந்தான்
அடுத்த நொடி அவனது பேக் பேக்கில் இருந்த சின்ன முதலுதவி பெட்டியிலிருந்து கொஞ்சம் பஞ்சையும், ஒரு பேன்ட் எய்டையும் எடுத்திருந்தான்.
தனா டாக்சியை தேடி அகன்றிருக்க, சாரு எங்கள் இருவரையும் பார்த்துக்கொண்டிருக்க, நான் அவன் கையிலிருந்து பஞ்சை வாங்கிக்கொண்டு அந்த ரத்தத்தை துடைக்கக் முயன்றேன்.
ஆனால் என்னால் தைரியமாக குனிய முடியவில்லை. ஏற்கனவே உள்ளுக்குள் என்ன நிகழ்ந்திருக்குமோ எனும் பயம் என்னை உலுக்கிகொண்டிருக்க எனது உள்ளுணர்வு என்னை குனிய விடவில்லை.
நான் அவஸ்தைப்படுவதைப் பார்த்தவன், ஒரு நொடி அவளைப்பார்த்து விட்டு, குடையை என் கையில் கொடுத்துவிட்டு பஞ்சை வாங்கிக்கொண்டு என் முன்னே, மண்டியிட்டு அந்த ரத்தத்தை துடைக்கலானான்.
“அய்யோ வேண்டாம் ஷ்யாம். நான் துடைச்சுக்கறேன்” நான் பதற, அவன் கையிலிருந்த அந்த பேன்ட் எய்டை வாங்கி, என் முன்னே மண்டியிட்டு எனக்கு ஒட்டி விட்டாள் சாரு. அவள் மனவோட்டத்தை என்னால் சத்தியமாக படிக்க முடியவில்லை.
அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி எழுந்து கொள்ள என் மனதிற்குள் அதை விட பெரிய கவலை சுழன்று கொண்டிருந்தது.
‘எனது வயிற்றுக்குள் அசைவுகள் இல்லை!!!’
இப்போதுதான் ஐந்து மாதங்கள் முடிந்து ஆறாவது மாதம் என்றாலும், அடிக்கடி அசைவுகள் தெரிந்து விடாது என்றாலும் எனது மகன் ஒரு நாளுக்கு ஏழெட்டு முறையாவது அசைந்து விடுவான்.
‘அதுவும் இன்று சில நிமிடங்கள் முன்னாள் வரை படு ஆனந்தமாக விளையாடிக்கொண்டிருந்தானே. இப்போது ஏனிந்த திடீர் மௌனம்?’ எனக்குள்ளே பய முரசுகள் கொட்டின.
அதற்குள் தனா எங்கிருந்தோ டாக்சியை அழைத்துக்கொண்டு வந்திருக்க,
“கேட் கிட்டே போயிட்டு ரெண்டு பேரும் ஜூஸ் ஏதாவது குடிங்க.’ என்றபடியே சில சிங்கப்பூர் டாலர்களை தனது பர்சிலிருந்து எடுத்து எனது, கையில் திணித்தான் ஷ்யாம்.
‘என்கிட்டே இருக்கு ஷ்யாம்”
“பரவாயில்லை இருக்கட்டும். நாங்க அரை மணி நேரத்திலே வந்திடுவோம். பத்திரம்” என்றவன் சாருவின் பக்கம் திரும்பி “டேக் கேர்மா. பத்திரமா போங்க, நாங்க வந்திடுவோம்” என்றான்.
நேரம் மாலை நான்கு மணியை தாண்டிக்கொண்டிருந்தது.
டாக்சி மேடு பள்ளங்களில் ஏறி ஏறி இறங்கிக்கொண்டிருந்தது. பய அலைகள் எனது வயிற்றுக்குள்ளிருந்து மேலுழும்பி மேலுழும்பி இறங்கிக் கொண்டிருந்தன.
“எனக்குள்ளே எந்தவொரு அசைவுமில்லை. அடிவயிற்றில் வலி பிறப்பது போல் ஒரு உணர்வு.
“இறைவா. என் மீது இரக்கம் கொள். ஒற்றை அசைவையாவது காட்டி விடு” மனதிற்குள் மன்றாடிக் கொண்டிருந்தேன் நான்.
சில நிமடங்களில் வாயிலை அடைந்திருந்தோம். அங்கே இருந்த அந்த சின்ன உணவகத்தில் நாங்கள் மழைக்காக ஒதுங்கி நின்றோம். கூட்டம் இல்லை அங்கே. எனக்கு எதையும் உண்ண மனமில்லை. எனது வயிற்றின் மீதே எனது கரம் குடி கொண்டிருந்தது. சாரு மட்டும் ஒரு குளிர் பானத்தை வாங்கி குடிக்கலானாள்.
சற்று நேரத்தில் அவர்கள் இருவரும் வந்து சேர,
“ஏதாவது சாப்பிடீங்களா?” முதல் கேள்வியாக கேட்டான் ஷ்யாம்.
“எனக்கு பசியில்லை ஷ்யாம். எதுவும் வேண்டாம்” என மறுத்தவளை கட்டாயப்படுத்தி பழச்சாற்றை பருக வைத்தான் அவன். அடுத்த சில நிமிடங்களில் விசைப் படகில் ஏறியிருந்தோம் நாங்கள்.
சாருவும், தனாவும் அருகருகே அமர்ந்துக்கொள்ள, எனதருகில் வந்து அமர்ந்துக்கொண்டான் ஷ்யாம். எங்களை விட்டு இரண்டு வரிசைகள் முன்னால் அமர்ந்திருந்தனர் அவர்கள் இருவரும்.
“எப்படிடா இருக்கு? உனக்கு உடம்புக்கு ஒண்ணுமில்லை தானே?” என்றான் வருடும் குரலில்.
“இல்லை” என தலையசைத்தேன் நான்.
வேறென்ன சொல்ல அவனிடம். காற்றின் வேகத்தில் படகு சற்றே ஆட்டம் கண்டுக்கொண்டிருந்தது. தலை சுற்றிக்கொண்டு வந்தது எனக்கு. வயிற்றில் இன்னமும் அசைவுகள் இல்லை.
அப்போது பக்கத்து இருக்கையில் இருந்த குழந்தை ஒன்று சட்டென ஷ்யாமின் கையில் தாவியிருந்தது. கொள்ளை அழகுக் குழந்தை அது. என் முகத்திலும் ஒரு சிறு மென்னகை.
அதே நேரத்தில் “இறைவா எனது வயிற்றிலும் கொஞ்சம் அசைவுகளை காட்டு” கெஞ்சல் எனக்குள்ளே.
அதனுடன் விளையாடிக் கொண்டிருந்தவனுக்குள் என்ன ஓடியதோ எனது பக்கம் திரும்பினான்.
“எனக்கு குழந்தைன்னா ரொம்பப் பிடிக்கும் பாப்பா” என்றான் மெதுவாக “ஆனா..”
“ஆனா?” நான் அவனை கேள்வியாக பார்க்க
“ஒண்ணுமில்லை விடு பாப்பா” அவன் குழந்தையுடன் விளையாட ஆரம்பிக்க
“இல்ல பரவாயில்ல, எதுவா இருந்தாலும் சொல்லுங்க.” என்றேன் நான்.
“இல்ல பாப்பா. காலையில் வந்த கனவு என்னமோ என்னை டிஸ்ட்ரப் பண்ணிட்டே இருக்கு. சாருக்கு குழந்தை வேண்டாமாம் பாப்பா.” அவன் தயங்கும் குரலில் சொல்ல நான் அவனை குழப்பமாக பார்த்தேன்.
“பிறந்ததிலிருந்தே அவளாலே பேச முடியாது இல்லையா. அதனாலே அவளை மாதிரியே குழந்தை பிறந்திடுமோன்னு அவளுக்கு பயம்.” தொடர்ந்தான் அவன். “அதனாலே கல்யாணமானாலும் குழந்தை வேண்டாம் அப்படிங்கிறது அவள் கண்டிஷன். அவ வாழ்க்கையிலே நிறைய கஷ்டப்பட்டிருக்கா. அவ குழந்தையும் அதே மாதிரி கஷ்டப்படக் கூடாதுன்னு நினைக்குறா. அதனாலே நானும் சரின்னு சொல்லிட்டேன். சரி விடு இது மாதிரி ஒரு குழந்தையை தத்து எடுத்துக்க வேண்டியதுதான்” சொல்லியே விட்டவன்
”உன்னை முதல்லே பார்த்ததிலிருந்தே மனசிலே இருக்குற எல்லா விஷயத்தையும் உன்கிட்டே ஷேர் பண்ணியே பழகிட்டேன் பாப்பா. அதான் ஒரு வேகத்திலே இதையும் உன்கிட்டே சொல்லிட்டேன். இதை நீ வேறே யார்கிட்டேயும் டிஸ்கஸ் பண்ணாதே. நாட் ஈவன் சித்தாரா. ப்ளீஸ் பாப்பா” என்றான் சற்றே தழைந்த குரலில்
error: Content is protected !!