Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மெய்யெனக் கொள்வாய்

மெய்யெனக் கொள்வாய் – 10.1

அத்தியாயம் – 10

சத்யாவிற்கு இப்படி எல்லாம் காமாட்சி நினைத்து இருக்கிறார் என்று தெரியாது. எப்போதும் போல் அவரின் படபட பேச்சு தானே என்று அதை எளிதாகவே எடுத்துக் கொண்டாள். அதனால் மகிழ்ச்சியோடே கணவன் வீட்டிற்கு செல்லத் தயாரானாள்.

வெள்ளிக்கிழமை பிறந்த வீட்டில் இருந்து கிளம்பக் கூடாது என்பதால், வியாழன் அன்று தான் சத்யாவை விட்டு வர நாள் பார்த்து இருந்தனர். காலையில் கிளம்பி மதிய உணவிற்கு அங்கே செல்வது போல புறப்பட்டனர்.

சத்யா சந்திரன் வீட்டிற்கு வரும்போது எல்லோருமே இருந்தனர். எல்லோரும் என்றால் வீட்டுப் பெண்கள், மாப்பிள்ளைகள் அனைவருமே வந்திருந்தனர். கூடவே அவர்கள் குடும்பப் பெரியவர் அந்த பெரியப்பாவும் இருந்தார். சத்யாவிற்கு சிறு யோசனை வந்தாலும், ஏதாவது வேலை என்று வந்திருப்பார். சத்யா வருவது தெரிந்து பார்த்துவிட்டுப் போவார் என எண்ணினாள்.



Advertisement

மற்றபடி வீட்டுப் பெண்களை மாமியார் தான் வரவழைத்திருப்பார். அவருக்குத் தான் தும்மினால் கூட பெண்கள் வரவேண்டுமே. அதனால் வந்திருப்பார்கள் என்று நினைத்தாள்.

சத்யா அவள் பெற்றவரோடு உள்ளே வந்ததும், “நல்லா இருக்கீங்களா மாமா” என்று பெரியவரை விசாரித்தபடி தான் வந்தாள். அவள் பெற்றோரும் “வணக்கம் பெரிய சம்பந்தி” என்றபடி தான் வந்தனர்.

“விசாரிக்கிறது எல்லாம் இருக்கட்டும். முதலில்“ என்று காமாட்சி ஆரம்பிக்க, பெரியவர் தான் “இப்போவே ஆரம்பிக்கணுமா? அவளோ தொலைவுலர்ந்து வந்திருக்காங்க. பிள்ளைத்தாய்ச்சி பொண்ணு. முதலில் தாகத்துக்கு கொடுத்துட்டு, வயிறு நிறைய வை. பின்னாடி பேசிக்கலாம்” என்றார்.

Advertisement

சத்யாவிற்கு சுருக்கென்று இருக்க, அவள் பெற்றோரோ திடுக்கிட்டு நின்றனர். 

Advertisement

“என்னங்க சமபந்தி விஷயம்?” எனக் கேட்க, பெரியவர் மீண்டும் “ஐயா, முதலில் சாப்பிட்டு வாங்க. உங்க மக இருக்கிற நிலைக்கு நேரத்துக்கு சாப்பிடணும். வயித்திலே இருக்கிற சிசு காத்துக் கிடக்கக் கூடாது” என்றார்.

சத்யாவிற்கும் என்னவோ சரியில்லை என்று தோன்றினாலும், ரொம்பவே பசித்ததால், தன் பெற்றோரைப் பார்த்தாள். அவர்களும் வந்து அமர, அமுதா, அகிலா தான் பரிமாறினார்கள். மாமியார் வந்து பரிமாறனும் என்று எதிர்பார்க்கவில்லை தான். ஆனால் சம்பந்தி என்ற முறையில் என்ன வேண்டும் என்று கேட்கவோ, இந்த இந்த பதார்த்தங்களை போடு எனத் தன் மகளுக்குச் சொல்லவோ இல்லை. சொல்லப் போனால், யார் வீடோ என்பது போல கூடத்திலே அமர்ந்து இருந்தார்.

மூவரும் சாப்பிட்டு எழுந்து வரவும், சத்யாவிற்கு ரெஸ்ட் ரூம் சென்று வர வேண்டும் போலிருக்க, மேலே தன் கணவன் அறைக்குச் செல்ல படி ஏற வந்தாள்.

Advertisement

அப்போது காமாட்சி “இந்தா. முதல்ல இங்க வா. பெரியவர் கிட்டேப் பேசி முடிச்சிட்டு என் மவன் ரூமுக்குப் போகலாம்” என்றார்.

சத்யாவிற்கு “இப்போ களைப்பா இருக்கு, மாமா இங்க தானே இருப்பாங்க. கொஞ்சம் கழிச்சு வந்து பேசறேன்” என்றாள். அப்போதும் அவளுக்கு அவர் பஞ்சயாத்துப் பேச வந்திருப்பார் என்ற எண்ணம் இல்லை. 

என்ன பெற்றவர்கள் வீட்டில் நடந்ததை மாமா கிட்டே புகார் சொல்லக் கூப்பிடுவாங்க. அவர் பெரியவங்க கொஞ்சம் பார்த்தப் பேசுமான்னு சொல்லுவார். அதைப் பொறுமையாகக் கேட்டுக் கொள்ளலாம் என்று மட்டும் தான் நினைத்தாள்.

“இந்தா பார்த்துக்கங்க. உங்க பொண்ணு பெரியவங்களுக்கு என்ன மரியாதை கொடுக்கிறான்னு” என்று காமாட்சி சத்யாவின் பெற்றோரிடம் கேட்க, சத்யாவைச் சேர்ந்தவர்கள்  திகைத்தனர்.

பெரியவரே மீண்டும் “காமாட்சி, தொட்டதுக்கும் குத்தம் சொல்லிட்டு இருக்காத. இன்னும் விஷயம் என்னனு கூட அவங்களுக்குத் தெரியலை. அதுக்குள்ளே மருமக பேசற எல்லாத்துக்கும்  காரணம் தேடிட்டு இருக்க. நீ மொத அமைதியா உக்காரு. பின்னாடி அந்தப் பொண்ணப் பேசலாம்” என்றார்.

சத்யா ஒரு முறை எல்லாரையும் பார்த்துவிட்டு, அமுதாவிடம் “எனக்கு அவசரமா பாத்ரூம் போகணும். இந்த வீட்டிலே போகலாமா இல்லை பக்கத்து வீட்டு அக்கா கிட்டே கேட்டு அங்கே போயிட்டு வரட்டுமா” என்றாள். 

அமுதா பதறிப் போய் “அண்ணி, என்ன இப்படி எல்லாம் பேசறீங்க? அம்மாக்கு ஏதோ கோபம். எப்போதும் போல் அதைப் பெரிசுப் பண்ணிக்கிட்டு இருக்காகங்க. நீங்க மேலே போய் கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துட்டு வாங்க.“ என்றாள்.

“நான் மேலே போகலை. இப்போ பின்னாடி மட்டும் போயிட்டு வரேன்” என்று கூறிவிட்டுச் சென்றாள்.

சத்யா உள்ளேச் செல்லவும், அமுதா அவள் அன்னையிடம் “அம்மா, நீ பிரச்சினையப் பெரிசாக்கிட்டு இருக்க. அண்ணா வந்த பிறகு பேசிக்கலாம். இப்போ சாதாரணமா பேசி அவங்க கூட இருங்க. பெரியப்பா நீங்களாவது சொல்லுங்க” எனக் கேட்டாள்.

“நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன். கேக்க மாட்டிக்கா உங்கம்மா. இன்னிக்கு எது நடந்தாலும் அதை அவ தான் பொறுப்பேத்துக்கணும்” என்று விட்டார் பெரியப்பா.

சத்யா வெளியே கூடத்திற்கு வரவும், தன் பெற்றவர்களோடு நின்று கொண்டாள். அதிக நேரம் நிற்க முடியாது என்று எண்ணியவளாக, தரையில் உட்காரப் போனாள். அகிலா தான் சட்டென்று ஒரு நாற்காலி எடுத்து அவள் அருகில் வைத்தாள். சிறு நன்றியோடு அவளைப் பார்த்தபடி சத்யா அதில் அமர்ந்தாள்.

பெரியப்பா தான் பேச்சை ஆரம்பித்தார். “அம்மாடி மருமகளே, நான் தான் இங்கே இருக்கும்போதே சொன்னேனே. நாடகக்காரங்க பழக்கமெல்லம் வேணாம்னு. அப்புறம் ஏன் அவங்களை வீட்டுக்குக் கூட்டி வச்சு பேசிட்டு இருக்க. நமமூட்டு சனங்களுக்கு டிவிலே வர எல்லாத்தையும் பார்க்கணும். அதைப் பத்தி புறணி பேசணும். ஆனா நம்ம வீட்டில அவங்க சம்பந்தபட்ட எந்த சமாச்சாரமும் வந்துடக்கூடாது. இது தெரிஞ்சி தானே உன்னை அன்னைக்கே சூதானமா இருந்துக்கோன்னு சொன்னேன்.” என்றார்.

பெரியவர் காமாட்சிக்காக வந்ததாகக் கூறிக் கொண்டாலும், உண்மையில் சத்யாவிற்கு தான் ஆதரவாக இருந்தார். அவரைப் பொருத்தவரை சத்யாவின் செயல்களில் எந்த தவறும் இல்லை. காமாட்சி தான் இல்லாத பூதத்தை நினைத்துப் பயப்படுகிறார்.

பெரியப்பாவின் பேச்சைப் புரிந்துக் கொண்டவளாக “மாமா, இந்த வீட்டிற்கு நான் யாரையும் கூப்பிடலையே மாமா. என்னைப் பெத்தவங்க வீட்டிற்கு யார் வரணும், போகணும்னு நான் கூட தலையிட முடியாது. அப்புறம் என் மாமியார் அங்கே வந்து நாட்டாமை பண்ணுவாங்களா?” எனக் கேட்டாள் சத்யா.

பெரியவர் பேசுமுன் காமாட்சி, “உன் அப்பனாத்தா வீட்டிற்கு வரவங்க எல்லாரையும் நான் கேட்டேனா என்ன? உன்னைப் பார்க்க வந்தவங்களத் தான் பேசினேன். அதுவும் அவங்க பேசினதுக்குத் தான் பேசினேனே தவிர, சும்மா யாரையும் பேசலையே. அதுக்கு நீ எப்படிப் பதில் பேசின? அதையும் அவங்க கிட்டேச் சொல்லு” எனப் பெரியவரைக் காண்பித்தார்.  

“சரி. நீங்களும், நானும் பதிலுக்குப் பதில் பேசறது புதுசா என்ன? அதுக்கு இப்போ ஏன் பெரிய மாமாவக் கூப்பிட்டு வச்சு பேச்சு வார்த்தை நடத்திக்கிட்டு இருக்கீங்க?”

“எனக்கு நீ திரும்பி நடிக்கப் போவேனு தோணிக்கிட்டே இருக்கு. அப்படி போனா, ஊர் பூரா உன்னைப் பார்க்கும், ஏசும். இதுக்கு முன்னாடி எப்படியோ, இப்போ நீ காமாட்சி மருமக. உன்னைப் பத்தி ஊர் பேசறது எனக்குப் பிடிக்கலை”

சத்யாவின் அப்பா, “சம்மந்திம்மா, என் பொண்ணு நடிக்கப் போனது டிவிலே இல்லை. பரதநாட்டியம், பாட்டுக் கச்சேரி மாதிரி மேடை போட்டு நடக்கிற நாடகத்தில் தான் நடிச்சா. இந்த ஊர் பக்கம் எல்லாம் திருவிழாக்கு நாடகம் போடுவீங்க இல்ல அந்த மாதிரி தான். அதில் என்ன உங்களுக்குப் பிரச்சினை?” எனக் கேட்டார்.

“ஏங்க, பொண்ணப் பார்த்து முடிவு பண்ணும் போதே சும்மா பொழுது போக்கத் தான் நடிச்சுட்டு இருக்கா. கல்யாணத்துக்குப் பிறகு விட்டுடுவான்னு தானே சொன்னீங்க? இப்போ மாத்திப் பேசிட்டு இருக்கீங்க?”

“இப்போவும் சொல்றேன். அவ கிட்டே சொன்னாக் கேட்டுப்பா. ஆனால் நீங்க அவ செய்யற வேலையைக் குறைவாப் பேசினா, அந்தக் காரியத்தைச் செய்யாம விடமாட்டா. இப்போதைக்கு இப்படியே விட்டுடறது நல்லது.” என்றார் சத்யாவின் தந்தை.

“அப்படி என்ன அதிசயமா பொண்ணை வளர்த்து இருக்கீங்கன்னு கேக்கறேன். இவ்ளோ பேசறேன். ஒரு வார்த்தை இனிமேல் நான் நடிக்க மாட்டேன். அது சம்பந்தப்பட்ட யார் கூடவும் பேச்சு வார்த்தை வச்சுக்க மாட்டேன்னு சொல்லறளா இல்லை நீங்க தான் உங்க பொண்ணுக்கு அப்படிச் சொல்லுன்னு எடுத்துச் சொல்றீங்களா? எதை நம்பி உங்க பொண்ண, என் பையன் கூட வாழ விடறது?”

சத்யாவின் தந்தை ஆடிப்போய் விட்டார். இது என்ன பொண்ணு வாழ்க்கையே கேள்விக்குறி ஆகிறதே என்று பதறிவிட்டார்.

சத்யாவின் தந்தை ஈஸ்வரன், “சம்பந்தி அம்மா, உங்க பேச்சுக்கள் சரியில்லை. என் பொண்ணைப் பத்தி எந்த விஷயமும் மறைக்கலை. நீங்க பேசறதைப் பார்த்தா, என் பொண்ணு என்னவோ தப்பான வேலைப் பார்த்த மாதிரி எல்லோருக்கும் தோண ஆரம்பிச்சிடும். கொஞ்சம் வார்த்தைகளைப் பார்த்துப் பேசுங்க” என்றார்.

சந்திரனின் பெரியப்பா “காமாட்சி, நீ கல்யாணம் பேசப் போகும் முன்னே எந்த யோசனையும் இல்லாம, உன் பையன் அழகு, படிப்பு, வேலைக்கு ஏத்த மாதிரி இருக்கணும்னு முக்கியம் கொடுத்து சத்யா பொண்ண கட்டி வச்ச. பட்டணத்தில் படிச்சு, வளர்ந்த பொண்ணு அது பழக்கத்துக்குத் தான் இருக்கும். உனக்கு அந்த வளர்ப்பு சரியாப்படலைனா, இங்ஙன சுத்தி நம்ம சொந்தத்தில் பார்த்துக்கணும். அதை விட்டுட்டு கூட்டிட்டு வந்து அந்தப் பிள்ளைய அசிங்கப்படுத்தக் கூடாது. சத்யா தப்பா எதுவும் செய்யலை. உன் வீட்டுக்கு வந்த விருந்தாளிகளை ஏடா கூடமா பேசினா நீ சும்மாயிருப்பயா? அதுவும் அவ அப்பா வீட்டில் இருக்கப்ப சண்டை போட்டிருக்க. அதோட சும்மா இல்லாம, ஒண்ணும் இல்லாத இந்த விஷயத்துக்கு, நம்ம நாட்டை உசிரா மதிச்சு போராடிட்டு இருக்க உன் மவன் கிட்டேயும் சொல்லியிருக்க. இதுக்கு மேலேயும் நீ இம்புட்டு செய்யறது நல்லா இல்லை சொல்லிட்டேன்.” என்றார்.

இதைக் கேட்டதும் சத்யா “மாமா, சந்துரு கிட்டே சொல்லிட்டாங்களா? சந்துரு பேசினாரா? என் கிட்டே பேசவே இல்லையே? நான் உண்டாகியிருக்கிற விஷயத்தைக் கூட நாங்க இன்னும் பேசிக்கலை.” என கண் கலங்கக் கூறும்போது அங்கிருந்த எல்லோருக்குமே வேதனையானது.

ஆனால் காமாட்சியோ “பாருங்க பாருங்க, புருஷன் பேரச் சொல்லிப் பேசிட்டு இருக்கா?” என்று அதற்கும் பேசினார்.

தற்போது பெரியவர் காமாட்சியை நன்றாக முறைக்கவே செய்தார்.

பின் “சந்திரனுக்கு உன்னைப் பற்றித் தெரியும்மா. அவனும் ஒரு தடவை தான் போனில் பேசினான். இவங்க உன் வீட்டுக்கு வரும்போது வாங்கிட்டு வந்தது எல்லாமே அவன் தான் சொல்லி அனுப்பினான்.  பத்து நாள் முன்னாடி அங்கிருந்து ஒரு பையன் லீவுக்கு வந்தான். அவன் கிட்டே ஒரு லெட்டர் கொடுத்து விட்டு உன்னை ஜாக்கிரதையாப் பார்த்துக்கச் சொல்லியும், உனக்குப் பிடிச்சத்தை எல்லாம் எழுதிக் கொடுத்து, அதை வாங்கி கொடுக்கச் சொல்லியும்  எழுதியிருந்தான். உன்னைப் பார்த்துட்டு வந்ததும் காமாட்சி தான் அவசரமாப் பேசணும்னு பொய் சொல்லி அவன் கிட்டே பேசியிருக்கா. இதைப் பற்றி சொல்லப் போனதும் திட்டிட்டு ஃபோனை வச்சுட்டான். அதுக்குப் பிறகு அவன் ஃபோன் பண்ணவே இல்லை.” என்றார் .

காமாட்சி விடாமல் “இது எல்லாம் இருக்கட்டும். இப்போ அவ என்ன சொல்றா? கேளுங்க. இல்லாட்டா இப்படியே அவ பெத்தவங்களைக் கூட்டிட்டுப் போகச் சொல்லுங்க. என் மவன் நேரில் வரும்போது இரண்டில ஒண்ணு முடிவு பண்ணிடனும்.” என்றார்.

இத்தனையிலும் சத்யாவின் மாமனார் லோகநாதன் எதுவுமே பேசாமல் இருந்தார். அது எல்லோருக்குமே கோபத்தைக் கொடுத்தது. சந்திரனின் சகோதரிகள் கூட எவ்வளவோ தங்கள் அன்னையிடம் பேசியும் எந்த பிரயோஜனமும் இல்லாமல் கையைப்பிசைந்தனர். எல்லோருக்குமே எரிச்சலாக வந்தது. ட்டு மாப்பிள்ளைகள் மச்சான் இல்லாத இடத்தில் என்ன பேசுவது என்று அமைதியாக இருந்தனர். சந்திரனின் பெரியப்பா மட்டுமே காமாட்சியிடம் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!