3..2..1 Episode 11. சரோஜா… சாமான் நிக்காலோ!
நகர்கின்ற ஒவ்வொரு நொடியிலும், நூறாயிரம் கதைகள் பேசி, நித்தமும் நகைத்துக்கொண்டே மின்னிக்கொண்டிருக்கும் நட்சத்திரங்களைப் போல, தனது சோகங்களை யாரும் காணாதவாறு சாயம் பூசி, சிரித்து நடித்து, சரளமான ஒரு நடிகனாகவே சுற்றியுள்ள அனைவரையும் சந்தோஷப்படுத்தத் தொடங்கினான் சேது.
சிறுவயது முதலே விடுதியில் இருந்ததால், எல்லா அசௌகரியங்களுக்கும் பழகிப் போனான் அவன். யாரிடமும் பெரிதாக எதையும் எதிர்பார்க்காமல், வாழ்க்கையை அது சென்ற பாதையிலேயே எதிர்கொண்டு பயணித்துக்கொண்டிருந்தான். படிப்பதில் அவன் முனைப்போடு இருந்ததால், ஆசிரியர்களுக்கு அவனை மிகவும் பிடித்திருந்தது. நல்ல மதிப்பெண் பெற்று, இன்ஜினியரிங் படிப்பதற்காக சென்னையில் ஒரு கல்லூரியில் சேர்ந்தான்.
செமஸ்டர் பாடம், கலை நிகழ்ச்சிகள் என இரண்டு வருடங்கள் இயந்திரம் போலச் செல்ல, அவன் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோதுதான் எதிர்பாராத விதமாக அவளைக் கண்டான்.
தனது நண்பர்கள் இருவருடன் லேப் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, இரண்டாமாண்டு வகுப்பறையைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. வகுப்பறையில் மாணவ, மாணவிகள் ஏதோ பரீட்சை எழுதிக்கொண்டிருந்தார்கள். சேது அங்கிருந்து ஜன்னல் வழியே அந்த வகுப்புக்குள் எதேச்சையாகப் பார்க்க, ஜன்னல் அருகே வீற்றிருந்த அந்த குறும்புக்கார மாணவி, சேதுவின் கவனத்தைச் சட்டென ஈர்த்தாள்.
Advertisement
அனைவரும் மும்மரமாக பரீட்சை எழுதிக்கொண்டிருக்க, அவள் மட்டும் பரீட்சைத்தாளைச் சுருட்டி, பைனாக்குலர் போல மடக்கி, அனைவரையும் அதன் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். சுற்றி சுற்றி எல்லாப் பக்கங்களிலும் அவள் பார்வையைச் செலுத்திக்கொண்டே வர, மெதுவாக ஜன்னல் வழியே அவள் பார்க்கவும், அங்கே சேது அவளைப் பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது. உடனே தலையைக் குனிந்துகொண்டாள்.
சேது தனது நண்பர்களை லேப்பிற்குச் செல்லும்படி கூறிவிட்டு, அங்கேயே நின்று அவளைப் பார்க்கத் தொடங்கினான். சிறிதுநேரம் எழுதுவது போல பாவனை செய்த அவள், மெதுவாக ஜன்னல் வழியே மீண்டும் வெளியே பார்க்க, தன்னை அவன் கண்கொட்டாது பார்ப்பது தெரிந்ததும், தலையைத் தொங்கபோட்டுக் கொண்டாள். அவன் கையசைத்து அவளை வெளியே அழைக்க, நிரப்ப முடியாத பதில்களை நிரப்பாமல் விட்ட விடைத்தாளை ஆசிரியரிடம் கொடுத்துவிட்டு, தனது பையை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள்.
சேது அவளை பார்த்தபடியே நின்றுக்கொண்டிருக்க, அவன் அருகே அவள் தலை குனிந்தபடியே வந்தாள்.
Advertisement
“எக்ஸாம் ஹால்ல என்ன விளையாட்டு?” சிரித்தபடியே சேது கேட்டான். “படிச்ச கேள்வி எதுவுமே வரல… வந்த கேள்வி எதுவுமே புரியல… அதனாலதான் என்ன செய்யறதுன்னு தெரியாம …” அவள் மழுப்பினாள்.
Advertisement
“உன் பேர் என்ன?” சேது கேட்க, “சஹானா. நான் நல்லாத்தான் படிப்பேன். இன்னிக்கு தான் இப்படி ஆயிடுச்சு!” அவள் சங்கடத்துடனே சொன்னாள்.
“என் பெயர் சேது. திர்ட் இயர் மெக்கானிக்கல் டிபார்ட்மெண்ட். இப்போ எனக்கு லேப்புக்கு லேட் ஆகுது. நான் நோட்டு எதுவும் கொண்டு வரல. அதனால உன் நோட்டு ஒன்னு குடு!” அவன் அவசரமாக கேட்டான். அவள் பையிலிருந்து ஒரு நோட்டை அவனிடம் கொடுத்தாள்.
“சரி சரோஜா, நாளைக்கு நோட்டை என்னொட கிளாஸ்ல வந்து வாங்கிக்கோ. இப்போ நான் கிளம்புறேன்!” என்று கூறிக்கொண்டு நகர்ந்தான்.
Advertisement
“என் பேர் சரோஜா இல்ல. சஹானா!” அவள் அழுத்தமாக கூறினாள்.
“பார்க்க சரோஜாதேவி மாதிரி இருக்க… அதனால சரோஜான்னே கூப்பிடுறேன்!”, சேது புன்னகைத்தபடியே கூறினான்.
“சரி, அப்போ நான் உங்களை ‘சியான்னு’ கூப்பிடலாமா? உங்க பேர் சேதுதானே?”, சஹானா முறைத்தபடியே கூற, சேது சிரித்துக்கொண்டே லேப்பை நோக்கிச் சென்றான்.
அன்று கல்லூரியிலிருந்து விடுதிக்கு வந்து வெகு நேரமாகியும், சஹானாவின் முகம் சேதுவின் மனதை விட்டு நீங்கவே இல்லை. மீண்டும் மீண்டும் வந்து, ஒரு புதுவித இன்ப உணர்ச்சியை இதயத்துள் ஏற்படுத்தியது. அன்றைய இரவு, சோகத்தாலன்றி சந்தோஷத்தால் சேதுவை உறங்கவிடாது இம்சித்துக்கொண்டிருந்தது.
அவளது நோட்டு புத்தகத்தை புரட்டத் தொடங்கினான். எழுத்துக்கள் ஒவ்வொன்றும் குட்டையும் நெட்டையுமாக ஒரு வடிவமே இல்லாமல், சிறு குழந்தை கிறுக்குவது போல கிறுக்கப்பட்டிருந்தன. அந்த கோணலான, மானலான எழுத்துக்கள்கூட சேதுவை வெகுவாக கவர்ந்தன. ஒவ்வொரு பக்கமாக புரட்டிக்கொண்டே சென்றான். எழுத்துக்களுக்கு நடுவே பூக்கள், பறவைகள் என ஆங்காங்கே வரையப்பட்டிருந்தன. அவை, பாடத்தின் போது சஹானாவின் அதீத கவனத்தை பறைசாற்றியது. கடைசி பக்கத்தில் சில போன் நம்பர்களுடனும் கிறுக்கல்களுடனும் அந்த நோட்டு நிறையாது நிறைந்திருந்தது. அந்த நோட்டினை அணைத்தபடியே, நெடுநாள் ஏக்கங்கள் நிறைவேறிய மனநிறைவுடன், நிம்மதியான நித்திரைக்குள் தன்னை மறந்தபடியே சென்றான் சேது.
முந்தைய இரவின் களைப்புகள் ஏதுமின்றி, புதுவித புத்துணர்ச்சியுடன் அடுத்த நாளில் சேது வகுப்பை நோக்கி வர, அவனது வகுப்பு வாசலிலேயே சஹானா அவளது தோழியுடன் நின்று கொண்டிருந்தாள்.
“மெக்கானிக்கல் டிபார்ட்மெண்டுக்குள்ளே கம்ப்யூட்டர் சயின்ஸ் பொண்ணுங்க காலையிலேயே வந்திருக்கீங்கண்ணா, ஏதோ முக்கியமான விஷயமாகத்தான் இருக்கும். சொல்லுங்க!” சேது ஆவலோடு கேட்டான்.
“நேத்து கொடுத்த நோட்டை வாங்கத்தான் வந்தோம். சீக்கிரம் குடுங்க, கிளாசுக்கு நேரமாச்சு!” சஹானா பரபரப்போடு கூற, அவளது பேச்சைக் கேட்டு குபுக்கென்று சிரித்தான் சேது. அவன் எதற்காக இப்படிச் சிரிக்கிறான் என்று புரியாமல், சஹானாவும் அவளது தோழியும் திருதிருவென முழித்தார்கள்.
“சரோஜாவோட நோட்ட பார்த்தால் அவ்வளவு பெரிய படிப்பாளி மாதிரிலாம் தெரியலையே! ஒரு நோட்டுக்காகவா இப்படி காலையிலயே இங்கே நிற்கிறீங்க? நம்புற மாதிரி இல்லையே!” நக்கலாகச் சிரித்தபடியே சேது தனது பையை திறக்கத் தொடங்கினான்.
நோட்டிற்கு பதிலாக, ஒரு டைரி மில்க் சாக்லேட்டை எடுத்து சஹானாவிடம் நீட்ட அவள் குழம்பியவாறு தோழியை பார்த்தாள்.
“இன்னைக்கு நோட்டு எடுத்துட்டு வரல. அதுக்கு பதிலாக சாக்லேட் எடுத்துக்கோ!” சேது கூற, “பரவாயில்ல, எனக்கு நோட்டுதான் வேணும். நாளைக்கு வாங்கிக்கிறேன்,” சஹானா சங்கோஜத்தோடு மறுத்தாள்.
“நோட்டுக்கு பதிலாக இல்ல, உனக்காகத்தான் சாக்லேட் வாங்கினேன். எடுத்துக்கோ!” அவன் மீண்டும் வற்புறுத்தினான்.
“எதுக்கு சாக்லேட் தர்றீங்க? எங்க அப்பா போலீஸ். என்கிட்ட தேவையில்லாம வம்பு இழுத்திங்க, அவ்வளவுதான்!” என்று அவள் கறாராக கூற, “ஐயையோ! போலீசா? எனக்கு பயமா இருக்குதுபா! காப்பாத்துங்க!” சேது தன் வழக்கமான புன்னகையுடன் பரிகாசம் செய்தான்.
“அட நீ வேற! காமெடி பண்ணிக்கிட்டு… ஏன் சரோஜா? இன்னிக்கு எனக்குப் பிறந்தநாள்! இப்போ சாக்லேட் எடுத்துக்கோ!” அவன் கூற, அவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள் சஹானா. தயங்கியபடியே சாக்லேட்டை அவனிடம் இருந்து சஹானா வாங்க, “சும்மா சொன்னேன், பிறந்தநாள்லாம் இல்ல!” என்று சேது கண்ணடித்தான்.
“உனக்கு பிடிக்கலைன்னா விடுடி! எனக்குக் கொடு, நானாவது சாப்பிடறேன்!” சஹானாவின் தோழி அவள் காதுக்குள் முணுமுணுத்தாள். பின், சேதுவின் பக்கம் திரும்பி சாந்தமாக பேசத் தொடங்கினாள்.
“அண்ணா, இன்னிக்கு உங்க பிறந்தநாள் இல்லை. ஆனால், இவளோட பிறந்தநாள்! எல்லாருக்கும் காலையிலேயே கேசரி செஞ்சுகொண்டு வந்திருக்கிறா. உங்களுக்கும் ஒரு டிஃபன் பாக்ஸில் எடுத்துட்டு வந்திருக்கிறா. அதைக் கொடுத்துட்டுப் போகலாம்னுதான் வந்தோம். நீங்க அவ பிறந்தநாள்னு தெரியாமலேயே டைரி மில்க் கொடுக்குறீங்க! இவதான் வாங்காமல் சீன் போடுறா! நீங்க முதல்ல டிஃபன் பாக்ஸ்ஸ பிடிங்க! கிளாசுக்கு நேரம் ஆகுது, நாங்க கிளம்புறோம்!”, சஹானாவின் தோழி அவள் பையிலிருந்து டிபன் பாக்ஸை சேதுவிடம் திணித்துவிட்டு, சஹானாவை அழைத்துக்கொண்டு விறுவிறுவென்று நடக்கத் தொடங்கினாள்.
ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியுடன், அவர்கள் செல்வதையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான் சேது. அவன் மனமானது, டிபன் பாக்ஸில் இருந்த கேசரியின் இனிப்பை மிஞ்சிய தித்திப்பில் திளைத்துக் கொண்டிருந்தது.
தவிப்புடனும் தித்திப்புடனும் நாட்கள் நகர, கல்லூரியின் நான்காமாண்டு மற்றும் மூன்றாமாண்டு மாணவர்களைத் தங்கள் நிறுவனத்தில் வேலைக்கு அமர்த்த, இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்று, கேம்பஸ் இன்டர்வியூ நடத்த சேதுவின் கல்லூரிக்கு வந்திருந்தது.
நான்காமாண்டு மாணவ மாணவியர் மிகுந்த பரபரப்போடும், மூன்றாமாண்டு மாணவ மாணவியர் மிகுந்த ஆர்வத்தோடும் தயாராகிக் கொண்டிருந்தார்கள். கணினி நிறுவனம் என்பதால், மெக்கானிக்கல் பிரிவைச் சேர்ந்த சேது அவ்வளவாக ஆர்வமில்லாமல் இருந்தான்.
மூன்று சுற்றுகள் வரிசையாக நடப்பதாகவும், தேர்வாகும் நபர்கள் அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேறுவார்கள் என்றும் அறிவித்திருந்தார்கள்.
ஈடுபாடு பெரிதுமின்றி, மற்ற மாணவர்களுடன் சேது முதல் சுற்றில் பங்கேற்பதற்காக செல்லும்போது, அவனை நோக்கி சஹானா அவசர அவசரமாக வருவது தெரிய, குழம்பியபடியே சேது நின்றான்.
அவள் அவனைத் தனியாக அழைத்துச் சென்று, “நீங்க இந்த இன்டர்வியூல நிச்சயம் ஜெயிக்கணும்னு சாமிகிட்ட வேண்டிக்க கோயிலுக்குப் போயிட்டு வந்தேன். திருநீறு எடுத்துக்கோங்க!”, சஹானா தன் கையிலிருந்த திருநீறை அவனிடம் நீட்ட, தனக்காக யாரோ முதல்முறையாக கடவுளிடம் வேண்டியதை எண்ணி, நெகிழ்ந்து போனான் சேது. கண்கள் அவன் அனுமதியின்றி குளமாகி நிற்க, கண்ணீரை வெளியே வரவிடாமல் அடக்கிக்கொண்டு, “எனக்காக நீ பண்றது ரொம்ப சந்தோஷமாக இருக்குது… ஆனால் எனக்கு கடவுள் மேல பெருசா நம்பிக்கை இல்லை. அதனால் இது வேண்டாம். தப்பா எடுத்துக்காத… பட்… ரொம்ப தேங்க்ஸ்!”, தடுமாறியபடியே கூறினான்.
“கடவுள் மேல நம்பிக்கை இல்லையா? இப்படியெல்லாம் பேசாதீங்க! ரொம்ப தப்பு!”, அவள் கண்டிப்புடன் கூறியபடி, மீண்டும் திருநீறை நீட்ட, அவன் எடுக்க மறுத்தான்.
முதல் சுற்றுக்கான அறிவிப்பு வர, அவன் செல்ல தயாரானான். அவன் எதிர்பாராத அந்த நொடியில், அவன் நெற்றியில் அவளே திருநீறு பூசி விட்டாள்!
அவனது சப்தநாளங்களும் சங்கீதம் மீட்ட, சட்டென ஒரு மின்சாரம் அவன் உடல் முழுவதும் பாய்ந்து, இன்ப அலைகளை இசைக்கத் தொடங்கியது. புதுவித பரவசத்தோடு, முதல் சுற்றுக்குள் சேது நுழைய, நடப்பவற்றை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மூன்றாமாண்டு மாணவியான மஞ்சு, கோபத்துடன் சஹானாவை நோக்கி வந்தாள்.
“நான் மூணு வருஷமா சேதுகிட்ட எப்படி பேசுறதுன்னு தெரியாமல் இருக்க, நீ நடுவுல வந்து திருநீறை பூசி மயக்கப் பாக்குறியா? உன்னை வந்து கவனிச்சுக்கிறேன்!”, ஆத்திரத்தோடு மஞ்சு கூறிவிட்டு, முதல் சுற்றுக்குள் செல்ல, சஹானா செய்வதறியாது திணறி நின்றாள்.
முதல் சுற்றான ஆப்டிடியூட் டெஸ்டிங் தொடங்க, கிறுக்கு பிடித்த கடிகாரம் போல கணக்குகளை வேக வேகமாக போடத் தொடங்கினார்கள் மாணவ மாணவிகள்.
சேதுவிற்கு, கணக்கு என்பது கைவந்த கலை என்றாலும், சஹானாவின் அன்றைய செயல்கள் ஒரு புதுவித விசையை ஏற்படுத்தி, எப்படியாவது இந்த தேர்வை வெல்ல வேண்டும் என்ற முனைப்பை ஏற்படுத்தியது.
முனைப்புடனும் பொறுப்புடனும், சேது மிகுந்த ஆர்வத்தோடு, அவன் முன்னிருந்த விடுகதைகளை விடைகளால் விடுவித்து கொண்டிருந்தான்.
ஒரு மணிநேரம் நொடிநேரத்தில் ஓடிவிட, முதல் சுற்று முடிவடைந்தது. அடுத்த அரை மணி நேரத்தில் முடிவுகள் வர, ஆர்ப்பாட்டமில்லாமல் அடுத்த சுற்று தொடங்கியது.
அனைத்து டிபார்ட்மெண்ட் மாணவ மாணவிகள் ஐநூறுக்கும் மேல் முதல் சுற்றில் பங்கேற்க, நூற்றுக்கும் குறைவானவர்களே அடுத்த சுற்றுக்குத் தேர்வாகினார்கள்.
சேது முதல் சுற்றில் தேர்வாகி, அடுத்த சுற்றுக்குச் செல்ல, மஞ்சு தேர்ச்சி பெறாமல், முதல் சுற்றிலேயே வெளியேறினாள்.
தோல்வியுற்ற வேதனையோடும் வெறியோடும் சஹானாவை நோக்கி வந்தாள் மஞ்சு. “உன்னாலதான் தேர்வுல கவனம் செலுத்த முடியாம போச்சு! இப்போ சந்தோஷமா உனக்கு?”, என ஆத்திரத்தோடு கத்தினாள்.
“சாரிக்கா…! நான் உங்களை கஷ்டப்படுத்தனும்னு எதுவும் செய்யல…” தயங்கியபடியே கூறினாள் சஹானா.
“போதும்! நிறுத்து! இதுவரைக்கும் நீ என்ன செஞ்சியோ அதையெல்லாம் விட்டுத்தொலை! இப்போ நான் சொல்றத சேது வெளியே வந்ததும் ஒருவரி மாறாமல் அப்படியே சொல்லணும். அது மட்டுமில்ல! நீ சொன்னதும் சேது அதுக்கு பதில் என்ன சொல்றான்னு என்கிட்ட ஒன்னு விடாம சொல்லணும்! புரிஞ்சுதா?”, மிரட்டியபடி மஞ்சு கூற, மிரண்டபடியே சம்மதித்தாள் சஹானா.
இரண்டாம் சுற்றான குரூப் டிஸ்கஷன் முடிவுற்று.
மூன்றாம் சுற்றான நேர்காணலும் முடிவடைய, மூன்று சுற்றுகளையும் முடித்துவிட்டு சேது களைப்போடு வெளியே வந்தான். சஹானாவை கண்டதும், களைப்புகள் ஓடி ஆயிரம் வாட்ஸ் பல்பை போல அவன் முகம் ஒளிர்ந்தது. ஆனந்தத்துடன் அவளிடம் சென்றான்.
ஆனால், அவளது முகமோ வெகுவாக சோர்ந்திருந்தது. அவன் எதிர்பாராதபடி, மஞ்சு கூறிய வார்த்தைகளை வரி மாறாமல் சொல்லத் தொடங்கினாள் சஹானா: “அண்ணா! சேதுன்னா… உங்ககிட்ட பேசுறதுக்காக அண்ணி கேன்டீன்ல காத்துக்கிட்டிருக்காங்க. உடனே உங்களைக் கேன்டீனுக்கு வரச் சொன்னாங்க.”, தயங்கியபடியே சஹானா கூற, வெகுவாகக் குழம்பினான் சேது. அவன் குழப்பத்துடனே பதில் கூற, அவனது வார்த்தைகளால் தலையே சுற்றியது சஹானாவிற்கு! சேதுவின் வார்த்தைகளை எப்படி மஞ்சுவிடம் கூறுவது என
அவள் மேலும் குழம்பினாள். வேறு வழியில்லை என்று மனதில் முடிவு செய்தவளாக, மஞ்சுவை நோக்கிச் சென்றாள்.
மஞ்சு, அவளது தோழிகளுடன், சேதுவின் பதிலுக்காக ஆவலுடன் காத்திருந்தாள்.சஹானாவைக் கண்டதும், மஞ்சுவின் மனமும் முகமும் மலர்ந்தது.
தயக்கத்துடனே சேது கூறியதை அப்படியே வரிமாறாமல் சஹானா சொன்னதும், அனைவரும் அதிர்ச்சியில் வாயடைத்துப் போனார்கள்!
சேதுவின் வார்த்தைகளை ஜீரணிக்க, அவர்களுக்கு அவகாசம் தேவைப்பட்டது. அவனது வார்த்தைகளை நம்ப முடியாத மஞ்சுவின் தோழி, “நிஜமாகவே அப்படியா சொன்னான்?”, என்று சந்தேகத்தோடு மீண்டும் கேட்டாள்.
“சத்தியமாக! அதுதான் சொன்னார்க்கா…! நானும் இதைச் சுத்தமாக எதிர்ப்பார்க்கல!”, சங்கடத்துடன் பதிலளித்தாள் சஹானா.
சேதுவின் வார்த்தைகளை நினைத்து, மஞ்சுவிற்கு நெஞ்சே அடைத்துவிட்டது…!
***
