Skip to content
Post Views: 3,154
பூவிடைப் பனித்துளிகள்
அத்தியாயம் 6
அடுத்து வந்த வாரங்களில், திவ்யா இவனிடம் நடந்து கொள்ளும் முறைகள் வெகுவாக மாறிப் போயின. காரிடரில் நடக்கும் சமயம், தனியாக எதிரெதிராக சந்தித்தால் கூட, கவனிக்காதவள் போல எங்கேயோ பார்த்துக் கொண்டு சென்றுவிடுவாள். மற்ற மாணவர்கள் யாரேனும் உடன் இருந்தால் அவர்கள் இவனைக் கடக்கையில், “குட்மார்னிங் சார்! குட் நூன் சார்!” என்று மரியாதை நிமித்தம் சொல்லுவார்கள். அவர்களுடன் சேர்ந்து இவளும் சொல்ல வேண்டிய நிர்பந்தம் இருக்கும் தான். ஆனாலும் வாயே திறக்காமல் வணக்கம் சொன்னது போல பாவனை காட்டுவாள்.
Advertisement
இவன் முகத்தை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை என்று சபதம் மேற்கொண்டவள் போல நடந்து கொள்வாள்.
வகுப்புக்குள் இவன் நுழையும் போதும், சிற்சில சமயங்களில் எழுந்து நிற்க மாட்டாள், மேஜையின் அடியில் எதையோ தேடுவதைப் போல பாவனை செய்வாள். அதற்குள் வகுப்பினுள் நுழைந்துவிடும் இவன், எழுந்து நிற்கும் மற்ற மாணவர்களிடம், “ப்ளீஸ் சிட்!” என்று சொல்லிவிட்டிருப்பான். இவள் அப்படியே இருக்கையில் அமர்ந்து கொள்வாள்.
பாடம் எடுக்கையில் இவன் முகத்தைப் பார்க்கவே மாட்டாள். ஒன்று கரும்பலகையில் அவள் கவனம் குவிந்திருக்கும், அல்லது நோட்டில் ஏதாவது எழுதிக் கொண்டிருப்பாள்.
Advertisement
அன்றும் அப்படித்தான். அன்று ஓணம் பண்டிகை காரணமாக, கல்லூரியில் நிறைய மாணவர்கள் வேஷ்டி சட்டையிலும், மாணவிகள் ஓணம் புடவையிலும் வந்திருந்தனர். நிறைய ஆசிரியர்களும் பட்டு வேட்டி, ஓணம் புடவை என்று அமர்க்களமாக வந்திருந்தனர்.
Advertisement
பரணியுமே ஒரு காட்டன் வேட்டியும், அடர் பச்சை வண்ண சட்டையும் அணிந்திருந்தான். அணியும்போது, ‘எதுக்குடா இந்த கோமாளித்தனம்?’ என்று தோன்றினாலும், ‘சரி! பண்டிகை நாள் தானே? எல்லா ஸ்டாஃபும் கலர்ஃபுல்லா வருவாங்க. நாம மட்டும் ஏன் யூஸ்வலா போகணும்?’ என்று எண்ணிக் கொண்டான்.
காலை முதல் வகுப்பு முடிந்து இன்டர்வெல் மணி அடித்திருக்க, வராண்டாவில் மாணவ, மாணவியர் குவிந்திருந்தனர். ஆளாளுக்கு கைப்பேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்க, இவனைக் கண்டதும் சில மாணவர்கள் பயத்துடன் கைப்பேசியை முதுகின் பின்னால் மறைத்துக் கொண்டனர்.
இதையெல்லாம் பார்த்தும் பார்க்காதவன் போல சிரிப்புடன் வராண்டாவில் நடந்து சென்றான் பரணி. “பரணி சாருக்கு வேஷ்டி, சட்டை செமையா இருக்குல்லடா? அவர் வி கட் பாடிக்கு செம லுக்கா இருக்கு.” என்று இவன் காதுபடவே சில மாணவர்கள் பேசினர்.
Advertisement
இதையெல்லாம் சிரிப்புடன் கடந்து சென்று கொண்டிருந்த பரணியின் கண்கள், தூரத்தில் தன் தோழிகளுடன் சிரித்தபடி நடந்து வந்து கொண்டிருந்த திவ்யாவின் மீது குவிந்தது.
திவ்யாவை முதல் முறையாக புடவையில் அன்று தான் பரணி பார்க்கிறான். அடர் பச்சை வண்ண ரவிக்கை அணிந்து, தலைமுடியை தளரப் பின்னி, அதில் மல்லிகை சரம் சூடிக் கொண்டு, காதுகளில் பெரிய ஜிமிக்கி ரகசியம் பேசியபடி அசைந்தாட, காரிடரில் அவள் தோழிகளுடன் எதிரில் நடந்து வந்தாள்.
காலை வெயில் அந்த வராண்டா முழுவதையும் தன் பொன் ஒளியில் நிரப்பியிருக்க, கல்லூரிப் பெண்களுக்கே உரிய கூச்சத்துடன், புடவையை நொடிக்கு பத்து தடவை சரி செய்து, இழுத்துக் கொண்டு தன்னை நோக்கி நடந்து வந்த திவ்யாவைக் கண்டு பரணி சொக்கிப் போனது அந்த நொடிதான்.
“குட்மார்னிங் சார்!” என்று வணக்கம் வைத்த மற்ற மாணவிகளுக்கு பதில் முகமன் சொல்லக்கூட மறந்தவனாக, திவ்யாவின் முகத்திலேயே கண்களைப் பதித்திருந்தான்.
“வேஷ்டி, சட்டையில ஸ்மார்டா இருக்கீங்க சார்.” என்று ஒரு வாய் துடுக்கான மாணவி பரணியிடம் கூற, அவன் வெட்கத்துடன் தலையைக் கவிழ்த்து சின்ன சிரிப்புடன் வாழ்த்தை ஏற்றுக் கொண்டான். அந்த கூட்டத்தில் நின்றிருந்த திவ்யா ஏதேனும் சொல்வாளோ என்ற பரிதவிப்பில் படபடத்த உள்ளத்துடன் பரணி சில நொடிகள் அவள் முகத்தை ஏறிட்டான்.
வழக்கம் போல, திவ்யா அவனை ஏறெடுத்தும் பார்க்க மாட்டாள் என்றுதான் பரணி எண்ணினான். ஆனால் அவனைக் கடக்கும் சமயம், இடது காதோர முடியைக் கோதுவது போல பாவனை செய்தவள், அடிக்கண்களால் பரணியின் முகத்தை ஏறிட்டாள்.
அவளையும் மீறி அவள் உதட்டோரத்தில் ஒரு சிறு புன்னகை உதயமாகியிருந்தது. முழுவதுமாக பற்கள் தெரிய ஆழ்ந்த வகையான சிரிப்பு அல்ல அது. இடது உதட்டின் ஓரம் மட்டும் லேசாக நெளிந்து ஒரு பக்கமாக குவிய, ‘ரசித்தது அவள் மட்டுமல்ல. நானும் தான்.’ என்று சொல்லாமல் சொல்லிவிட்டது அவள் புன்னகை. அவள் புன்னகையின் அர்த்தம் அவன் மனம் புரிந்து கொண்டது தான் ஆச்சரியம். இந்த பார்வை பரிமாற்றம் நொடிப் பொழுது தான் என்ற போதும், அவள் விழிகள் பரணியின் கண்களை எதிர்திசை காந்தம் போல பலமாக ஈர்த்துக் கொண்டன.
பதிலுக்கு அவன் உதடுகள் லேசாக விரிய, சின்ன ஒரு தலையசைப்பும், மற்றவருக்குப் புரிந்திடாத ஒரு பதில் சிரிப்பும் என கண்களாலேயே தன் ரசனையை அவள் உணரச் செய்திருந்தான் பரணி. அவன் மெச்சுதல் பார்வை உணர்ந்து திவ்யா தலையைத் தாழ்த்திக் கொண்டாள். விழிகளின் சிரிப்பை ஆமோதித்து, காதுமடல் கூந்தலை ஒதுக்கி, ஜிமிக்கியை அசைத்து தன் போக்கில் தோழிகளுடன் நடந்திருந்தாள்.
அவள் வதனத்தில் தன்னிலை மறந்து ஒரு நொடி ஸ்தம்பித்துப் போன பரணி, மற்ற மாணவிகளின் முகமனை ஏற்று சுதாரிப்புடன் தலையசைத்த போதும், அவன் கண்கள் என்னவோ திவ்யாவின் விழி வீச்சில் சிக்கி சின்னாபின்னமாகி இருந்தன. அவள் காது ஜிமிக்கியாக தான் மாறி, அந்த காதுமடல் அருகே குனிந்து அந்த முத்து ஜிமிக்கி போலவே தானும் அவள் கன்னத்தை உரசி, ‘இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க திவ்வி!’ என்று மற்றவர் கேட்டுவிடா வண்ணம் ரகசியம் பேச மாட்டோமா என்ற ஆசை எழுந்தது.
அதைவிடவும், தன் மெச்சுதல் பார்வையை அவள் புரிந்து கொண்ட விதமும், அதை உணர்ந்து அவள் தலை கவிழ்த்து சிரித்த பாங்கும் அவன் மனதில் பசை போட்டு ஒட்டிக் கொண்டன.
‘இன்னொரு முறை பார்க்க மாட்டியா திவி? திவி என்னைப் பாரேன்… நான் பேசுறது உனக்கு எப்படி புரிஞ்சது திவி?’ என்றெல்லாம் கேட்டு தன்னிலை மறந்து பிதற்றியது அவன் உள்ளம்.
தன் மனம் சென்ற திக்கை எண்ணி தானே வெட்கப்பட்டவன், வேகமாக அந்த இடத்தை விட்டு அகன்றான். தன் மேஜைக்கு சென்று அங்கே வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பாட்டிலிலிருந்து நீரை சட்டை நனையக் குடித்த பின்புதான் அவன் நெஞ்சின் படபடப்பு வெகுவாக அடங்கியது.
‘டேய், நீ இப்ப ஸ்டூடெண்ட் இல்ல, ஒரு டீச்சர். கொஞ்சம் பொறுப்பா நடந்துக்கோடா. இப்படிலாம் அப்பட்டமா சைட் அடிக்கறது தப்புடா. அதுவும் அவ உன் ஸ்டூடெண்ட்டா. பிஹேவ் யுவர்செல்ஃப்!’ என்று நூறாவது முறையாக தனக்குத் தானே எச்சரித்துக் கொண்டான்.
அதே நேரம் அவன் மனமோ, ‘திவி… திவி…’ என்று அரற்றிக் கொண்டே, பூனைக்குட்டி போல மீண்டும் திவ்யாவின் குடை ஜிமிக்கியில் சென்று பத்திரமாக சுருண்டு படுத்துக் கொண்டது.
‘அச்சோ! இன்னிக்கு நாலாவது ஹவர் தர்ட் இயர் டி.பி.எம்.எஸ் இருக்கு, அவ க்ளாஸுக்கு போகணுமா? அவளையே பார்த்துட்டு ஏதாவது லூசுத்தனமா பேசிடப் போறேன். இந்த சக்திவேல்கிட்ட அன்னைக்கு உளறினது தப்பா போச்சு. கொஞ்சம் பிசகினாலும் அவன் கண்டுபிடிச்சுடுவான். டேய் பரணி, ஸ்டெடிடா… ஸ்டெடி!’ என்று மனதை தேற்றிக்கொண்டு நாலாவது ஹவர் திவ்யாவின் வகுப்பிற்குச் சென்றான்.
உள்ளே நுழைந்தபோதே அவன் மனம் அவள் எங்கே எங்கே என்று தேடத் துவங்கியது. வழக்கம் போலவே வேண்டா வெறுப்பாக மற்ற மாணவர்களுடன் எழுந்து நின்ற போதிலும், அவள் கண்கள் அவனை சில நொடி பார்த்தது என்னவோ உண்மை. அவன் விழிகளும் தன்னை தீண்டுகின்றன என்ற உணர்வு எழவும், சட்டென முகத்தின் பாவனையை மாற்றிக் கொண்டிருந்தாள்.
அவனோ திவ்யாவை கண்களாலேயே அளந்தான். அவன் இருந்த திசையைப் பாராமல், எங்கோ பார்த்துக் கொண்டிருந்த அவள் விழிகள், ஒரு முறையேனும் அவன் பக்கம் திரும்பாதா என்று பெரும் ஏக்கம் உண்டாயிற்று.
“சிட்! சிட்! இன்னைக்கு ஒரு முக்கியமான டாபிக் பார்க்கப் போறோம்.” என்று பரணி பேச்சைத் துவங்கும் முன்னர்,
“சார், நம்ம க்ளாஸ் நயன்தாராஸ், திரிஷாஸ் எல்லாம் ஓணம் சாரி கட்டிட்டு வந்திருக்காங்க. அதைப் பத்தி நீங்க ஒரு கமெண்டும் சொல்லலையே சார்?” என்று ஒரு குசும்புக்கார மாணவன் கேட்டிருந்தான்.
பரணி மற்ற ஆசிரியர்களைப் போல் இல்லை. தங்களது சூப்பர் சீனியர் மாணவன் என்பதால், மாணவர்கள் எப்பொழுதும் உரிமையாக அவனிடம் பேசுவது வழக்கம் தான். ஆனால் அன்று அந்த மாணவன் கேட்டது பரணிக்கு சிரிப்புக்கு பதில் லேசான படபடப்பைக் கொடுத்திருந்தது.
‘ஐய்யோ! இவன் வேற நிலைமை தெரியாம வாயக் கிண்டுறானே! எதாச்சும் உளறி தொலைச்சிடப் போறேன்.’ என்று நினைத்த பரணி, “ஆல் ஆர் லுக்கிங் குட்! வெரி நைஸ்! ஹேப்பி ஓணம்பா! சரி, இப்போ க்ளாஸை கவனிங்க.” என்று சிரித்து சமாளித்தான்.
ஆனாலும் அந்த மாணவன் விடவில்லை. “சார், கடைசிக்கு நம்ம தெரு திரிஷா எப்படி இருக்கான்னாவது சொல்லுங்க சார். நீங்க தான் நம்ம க்ளாஸ் கேர்ள்ஸோட கனவு கண்ணன். எல்லாரோட ட்ரீம் பாய். நீங்க அழகா இருக்குன்னு ஒரு வார்த்தை சொன்னா, தெரு திரிஷா பிறவிப் பயனை அடைஞ்சிடும் சார்.” என்று ஓட்டத் துவங்க,
அந்த மாணவியோ, ‘டேய், கொன்னுருவேன்.’ என்பது போல சைகை காட்டினாள். தன்னைப் பற்றி அந்த மாணவன் இப்படிச் சொல்லவும் சற்றே வெட்கம் ததும்ப, பரணி தலையைக் கவிழ்ந்து சின்ன சிரிப்பை வெளியிட்டான்.
“டேய், சார் வெட்கப்படுறாருடா.” என்று ஒருவன் சொல்ல,
“சாருக்கு இப்போ கல்யாண வயசு தான் வந்துருச்சுடா. டேட் பண்ணவா? சாட் பண்ணவா?” என்று இன்னொரு மாணவன் பரணியைப் பார்த்து கோலமாவு கோகிலா ஸ்டைலில் பாடத் துவங்க,
“டேய் போதும்டா… நிறுத்துங்கடா…” என்று இன்னமும் வெட்கத்துடன் தலையைக் குனிந்து கொண்டான் பரணி.
இதைக் கண்டு மற்றவர்கள் சிரிக்க, தவறாமல் பரணியின் கண்கள் திவ்யாவின் முகத்தை ஏறிட்டன. காரிடரில் கடத்திய அதே இதழோரப் புன்னகை ததும்பியது அவள் முகத்தில். என்னதான் நேராக பரணியைப் பார்க்கவில்லை என்ற போதும், தலை குனிந்து சிரித்த திவ்யாவின் புன்னகை அவன் மனதின் எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்திருந்தன.
‘அவ முன்னால நிக்கறேன்
அந்த கண்ணால சொக்கறேன்
நான் தன்னால சிக்குறேன்…’ என்ற பாடலின் மீத வரிகள் அவனுக்குள் ஓடத் துவங்கின. அவன் மனதின் ஓசை திவ்யாவிற்கு கேட்டிருக்கும் என்று, நிச்சயமாக பரணியால் அந்த நொடி சொல்ல முடிந்தது. அவன் மனதில் ஓடிய பாடலின் வரிகளை உணர்ந்து அவள் இன்னமும் சின்ன வெட்கத்துடன் தலை கவிழ்ந்து கொண்டாள்.
பரணியின் நெஞ்சம் திடும் திடுமென வந்து தொண்டையில் மோதிக் கொண்டிருக்க, அவன் நிலைமை உணராத அந்த மாணவர்கள் ஏகத்துக்கும் கலாய்க்கத் துவங்கியிருந்தனர்.
“இந்த ஓணம் வந்தாலும் வந்துச்சு, காலையில இருந்து இதுக அலப்பறை தாங்கல சார். அவ அவளுக பூ வச்சுக்கறது என்ன? பொட்டு வச்சுக்கறது என்ன?” என்று ஒரு மாணவன் கவுண்டமணி போலவே சொல்ல, எல்லா மாணவர்களும் கொல்லென நகைத்தனர். சிரிப்பொலி எழவும் பரணியின் கண்கள் தன்னிச்சையாக திவ்யாவின் முகத்தில் சென்று சேர்ந்தன.
பேசிய அந்த மாணவனைப் பார்த்து மனதார நகைத்த திவ்யா இயல்பாகத் திரும்ப, அவள் கண்கள் பரணியின் விழிகளை இம்முறை சந்தித்தன. இரு நயனங்களும் முடிச்சிட்டுக் கொண்டது போல, ஒரு சில நொடிகள் தங்களுக்குள்ளாகவே பேசிக் கொண்டன. அவன் கண்களைப் பார்த்து சிரித்த திவ்யாவின் விழிகளில் இருந்து பரணியின் பார்வை விலகவேயில்லை.
அவனுள் தோன்றிய அந்த மின்னல் பரிமாற்றம் பற்றி மற்றவர்கள் அறியவுமில்லை. திவ்யா சட்டெனச் சுதாரித்து முதலில் தன் பார்வையை விலக்கிக் கொண்டு தலையைக் குனிந்து கொண்டாள். அவள் விழிகள் விலகவும், பரணியின் மூச்சு தடைபட்டு சற்றே இடைவெளி விட்டு வெளிப்பட்டது. மூச்சு முட்டுவது போலவும், நெஞ்சம் அடைப்பது போலவும் ஒரு உணர்வு.
‘காதல் என்றால் இதுவா? அவள் கண்கள் இப்போது தன்னிடம் பேசியதா? அவள் கண்கள் பேசியது என் மனதிற்குத் தெரிகிறதே! என் மனதின் வார்த்தைகள் புரிந்து அவள் எப்படி சிரித்தாள்? ஏன் சிரித்தாள்? அவளுக்கும் என் போல் தான் இதயம் வேகமாகத் துடிக்கிறதா? அதை மறைக்கத் தான் தலையைக் கவிழ்த்துக் கொண்டாளா? என் மனம் புரிந்திருக்குமா?’ என்று பரணியின் மனதில் அந்த நொடி இடியாப்பச் சிக்கல் போல் ஏகப்பட்ட குழப்பம்.
error: Content is protected !!