Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

தூது செ(சொ) ல்லாயோ மெல்லிசையே

தூது செ(சொ)ல்லாயோ மெல்லிசையே 11_ 01

 என் இதழ் கிழித்து விளையாடத் துடிக்கும் முள் காடாய் நீ!

ஒரே ஒரு முறை முத்தக்கவிதை எழுதத் துடிக்கும் மலர் இதழாய்  நான்.!

காதல்! இந்தக் காதல் நம்மை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது. காதலின் வேகத்தில் நாம் கண்மூடித்தனமாக முடிவுகள் எடுக்கும் போது நம்மை சுற்றி இருப்பவர்கள் எந்த அளவுக்கு பாதிக்கப் படுவார்கள் என்பதை மறந்தும் போகிறோமோ?

நான் இன்று செய்து வைத்திருப்பதும் அதே வேலைதான். ஷ்யாம் தாலி கட்டிய அந்தப் பெண் ரஞ்சனா அன்று செய்து வைத்ததும் அதே போன்றதொரு கண் மூடித்தனமான ஒரு செயல்தான்.



Advertisement

இதில் ஒரு மிகப் பெரிய வருத்தம் என்னவெனில் இருவருமே நாங்கள் செய்து வைக்கும் செயலால் ஷ்யாம் எந்த அளவுக்கு பாதிக்கப் படுவான் என்பதை நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

உறங்கிக் கொண்டிருக்கிறானா அவன்? அப்படிதான் தோன்றியது எனக்கு. முகம் அளந்தேன் நான். அதிகாலை நேரம், கொஞ்சம் மேக மூட்டமும் இருந்தது எனும் படியால் விமானத்துள் வெளிச்சம் அதிகமில்லை.

‘அவன் கன்னத்தில் பட்டும் படாமலும் முத்தமிட்டு விலகி விடலாமா? யாரும் பார்த்துவிடுவார்களா?” மனம் பரபரத்தது.

Advertisement

அப்போது சட்டென சீட் பெல்ட்கள் அணிவதற்கான விளக்கு ஒளிர்ந்தது. டர்புலன்ஸ் காரணமாக லேசாக ஆட்டம் கண்டு கொண்டிருந்து விமானம்.

Advertisement

‘இட்ஸ் டைம் டு வேர் யுவர் சீட் பெல்ட்ஸ் லேடீஸ் அண்ட் ஜென்டில்மென்……. அன்டில் தி நெக்ஸ்ட் அன்னௌன்ஸ்மெண்ட் ப்ளீஸ் ஸ்டே ஆன் யுவர் சீட்ஸ் மை டியர் கேபின் ஸ்டாஃப்ஸ்…’

அடுத்த அறிவிப்பு வரும் வரை சீட் பெல்டுகளை அணிந்துக்கொண்டு இருக்கையிலேயே இருக்கும் படி விமானி அறிவிக்க சட்டென விழித்துக்கொண்டான் ஷ்யாம். எனக்குத்தான் வாய்ப்பு பறிபோனது.

பழைய நினைவுகளுடன் கண் மூடி சாய்ந்து கொண்டேன் நான்

Advertisement

அன்று ஷ்யாமின் திருமணம் முடிந்த மறுநாள் காலையில், நான் எனது அலுவலகத்திற்கு கிளம்பிக்கொண்டிருந்த நேரத்தில், அவனது திருமண செய்திகளை  பார்த்துவிடும் ஆசையில் தொலைக்காட்சியில் செய்தி அலைவரிசையை உயிர்ப்பித்த நேரத்தில் என்னைத் தாக்கிய அந்தப் பேரதிர்ச்சியில் ஆடிப்போனேன் நான்.

“ஷ்யாமின் மனைவி ரஞ்சனா தூக்கு போட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டாள்” எனும் செய்தி அது. அதுவும் அவர்களது முதலிரவு அறையில் “அய்யோ!” வாய்விட்டே அலறினேன் நான்.

“என்னமோ பெரிய சங்கீத ஞானின்னு சொன்னியே. அவன் எப்படிப்பட்ட வெறி பிடிச்ச மிருகமா இருந்திருந்தா அந்தப் பொண்ணு முதலிரவு ரூமிலேயே தற்கொலை பண்ணிக்கும்” இது செய்தியை பார்த்த எனது அம்மா சொன்ன கருத்து.

எனது அம்மா மட்டுமில்ல தமிழ்நாடே அப்படித்தான் நினைத்தது அவனைப் பற்றி. செய்தி சேனல்களில் இதை பற்றியே வளைத்து வளைத்து பேசினார்கள். எல்லா விரல்களும் அவனையே சுட்டின.

“கொலைக்காரன்” என்றே பேசினார்கள் அவனைப் பற்றி.

ஆனால் அந்த நேரத்திலும் ஒரு நொடி கூட அவனை தப்பாக நினைக்க முடியவில்லை என்னால்.

“ஷ்யாம் அப்படியில்லை” என்று  ஏதோ ஒன்று எனக்குள் சொல்லிக்கொண்டே இருந்தது. அதற்கு சித்தாரா அடிக்கடி அவனைப் பற்றி என்னுடன் பேசுவது கூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

அதன் பிறகு அவனுடன் நான் பழகிய நாட்களிலிருந்து இப்போது வரை  அவன் மீதான நம்பிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

தற்கொலை! அது நொடி நேர முட்டாள்தனம். நம்மை சுற்றி இருப்பவர்களை பற்றி நினைக்காமல், நமக்காகவே வாழ்பவர்களை பற்றி கவலைப் படாமல், நமது பிரச்சனைகளுக்கெல்லாம் அது ஒன்றே தீர்வு என்று நினைத்துக்கொண்டு, நாம்  மற்றவர்களுக்கு செய்யும் துரோகம் அது.

ஒரு ஆண் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம் என்று நினைக்கும் நாம்,  ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டால், அதுவும் தற்கொலை செய்து கொண்டது திருமணமான பெண் என்றால் அதற்கு காரணமாக நாம் கண்களை மூடிக் கொண்டு சுட்டுவது அவளுக்கு தாலி கட்டிய அந்த ஆணை மட்டுமே.

அப்படிப்பட்ட கொலைக்கார வன்மமான ஆண்கள் இந்த பூமியில் இல்லை என்று நான் சொன்னால் அது மிகப்பெரிய பொய். அவர்களை போன்ற வக்கிர மனம் படைத்தவர்கள்வர்கள் இந்த பூமியில் நிறைய பேர் இருக்கிறார்கள்தான்.

ஆனால் ஷ்யாமை போன்ற அப்பாவி ஆண்களும் நிறையவே இருக்கிறார்களே!  இது போன்ற சூழ்நிலைகளில் நாம் அவர்களை பற்றி யோசிப்பதே இல்லையே ஏன்? எனக்குள்ளே இந்த  ஆதங்கம் எப்போதுமே உண்டு.

நேற்று தாலி கட்டிய புது மனைவி, அதுவும் நண்பனின் தங்கை, காலை கண்விழிக்கும் போது பிணமாக தொங்கிக்கொண்டிருந்தால், அதுவும் முதலிரவு அறையில் தொங்கிக்கொண்டிருந்தால் எப்படி உணர்ந்திருப்பான் என்னவன். உயிர் வெடித்து சிதறியிருக்காதா அவனுக்கு?

அடுத்த நொடி எல்லார் பார்வையும் இவனையல்லவா குற்றம் சாட்டி இருக்கும். எல்லா உதடுகளும் இவனை அல்லவா வறுத்தெடுத்திருக்கும். முதலிரவு அறைக்குள் என்னனென்ன நடந்திருக்கும் என எத்தனை வக்கிர கற்பனைகள் எல்லா மனதிலும் ஓடியிருக்கும். அந்த சூழ்நிலையில் எத்தனை கூனிக் குறுகி போயிருப்பான் என்னவன்.

அவன் பக்கத்துக்கு வாதமென அவன் என்ன சொல்லி விட முடியும். சாட்சியென யாரை அழைத்துவிட முடியும். நினைத்து பார்க்கும் போதே எனக்கு இத்தனை வலிக்கிறதே. அவனுக்கு அன்று எப்படி இருந்திருக்கும்?

அவர்கள் குடும்பம் இருந்த அந்த சூழ்நிலையில் நான் உடனே சித்தாராவை தொடர்பு கொண்டு தொந்தரவு செய்யவும் விரும்பவில்லை.

அன்று மாலையில்தான், அவர்கள் வீட்டு வாசலில் இருந்த செய்தியாளர்கள் முன் ஷ்யாமுடன் வந்து நின்றான் தனா. கலைந்து, களைத்து துவண்டு போயிருந்த ஷ்யாமின் தோள்களை அணைத்தபடியே சொன்னான் அந்த நண்பன்.

 “ஷ்யாம் என்னோட நண்பன். அவன் கண்டிப்பா இதுக்கு காரணமா இருக்க முடியாது. இருக்க முடியாது என்ன? இருக்க மாட்டான். அவனாலே தப்பே செய்ய முடியாது. இழப்பு எங்களோடது. அதை நாங்க சரி செய்துப்போம். இப்போ நீங்க எல்லாரும் கலைந்து போகலாம்.”

எத்தனை பெரிய நம்பிக்கை அது. உடன் பிறந்த தங்கையையும் தாண்டி நண்பன் மீது தனா வைத்திருந்த அசைக்க முடியாத நம்பிக்கை அது. ஷ்யாமுக்கு எத்தனை பெரிய வரம் அது. இந்த நிமிடம் வரை ஷ்யாம் தனா தனா என தவிப்பதற்கு நிறையவே அர்த்தம் இருக்கிறதுதானே?.,

இத்தனை தூரம் தனா  பேசிய பிறகும் அவனை பற்றி தவறாக பேசுபவர்கள் பேசிக் கொண்டேதான் இருந்தார்கள். ஏன் இன்னமும் கூட பேசிக் கொண்டேதான் இருக்கிறார்கள். இத்தனை ஏன்? என் அம்மாவின் மனதை மாற்றவே நாங்கள் எத்தனை பாடு படவேண்டி இருந்தது.

இந்த மாபெரும் அடிக்கு பிறகு, அவன் மீது மறைமுகமாக விழுந்த அந்த அவப்பெயருக்கு பிறகு, சில நாட்களுக்கு ஷ்யாமுக்கு சினிமா வாய்ப்புகளுமே கூட குறைந்தன. இவனை ஒரு காமுகன் போலவே பார்த்த நபர்கள் நிறையவே.

அது போன்ற நேரங்களில் அவனது கோபம் கண் மண் தெரியாமல் வெளிப்படும். பார்ப்பவர்கள் மேலெல்லாம் கை நீட்டும் பழக்கமும் அப்போதுதான் வந்தது அவனுக்கு.

என்னை முதன் முதலாக பார்த்தபோது நான் கிணற்றில்  குதித்து விடுவேன் என சித்தாரா சொன்னபோது. “உயிர் அப்படிங்கிறது உங்களுக்கு எல்லாம் அத்தனை விளையாட்டா இருக்கில்ல?”  என என் மீது அவன் கை ஓங்கியதற்கான காரணமும் இந்தத் தற்கொலையே!

அதன் பிறகு நான் அவனை சந்தித்து நாங்கள் இருவரும் இசையமைக்க ஆரம்பித்த பிறகே சற்றே நிமிர்ந்தான் ஷ்யாம்.

‘ஷ்யாம் பத்தி எல்லாரும் என்னன்னமோ சொல்றாங்களே. நீங்க எப்படி அவர் கூட தைரியமா பழகுறீங்க?” என்னிடம் நேரடியாகவே கேட்டவர்கள் நிறைய உண்டு.

இந்த தற்கொலை சம்பவம் நடந்து முடிந்த சில நாட்களுக்கு பிறகு சித்தாராவை சந்தித்த போதுதான்  அவள் எல்லா விவரங்களையும் என்னிடம் சொன்னாள்.

“அந்தப் பொண்ணுக்கும் அவங்க மாமா பையனுக்கும் சின்ன வயசிலேயே கல்யாணம் பேசி வெச்சிருக்காங்க. அந்தப் பையனோட பெயரை கூட இவ கையிலே பச்சை குத்தியிருந்தா. ஆனா ரெண்டு வருஷம் முன்னாடி அந்தப் பையன் இறந்து போயிட்டான் பாவம். ஆனாலும் இவளாலே அவனை மறக்க முடியலை. இது எல்லா விஷயமும் எங்களுக்கு கல்யாணத்துக்கு முன்னைடியே தெரியும். ஷ்யாம் அவளை புரிஞ்சு நடந்துப்பான் அப்படிங்கிற நம்பிக்கையிலேதான் அவனுக்கு ரஞ்சனாவை பேசினாங்க. இவனும் கொஞ்சம் கூட யோசிக்காம சரின்னு சொன்னான். கல்யாணம் வரைக்கும் அவளும் எந்த ஒரு மறுப்புமே சொல்லலை. ஆனாலும் அவ மனசுக்குள்ளே நிறைய வலி இருந்திருக்கும் போலிருக்கு.” சொன்னவளின் குரலில் அப்படி ஒரு ஆதங்கம்.

“முதல் ராத்திரியிலே எனக்கு இது எதுவுமே பிடிக்கலைன்னு அழுதிருக்கா. எனக்கு பின்னாடி தங்கை இருக்கா. நான் கல்யாணம் பண்ணித்தான் ஆகணும்ன்னு உங்களை கல்யாணம் பண்ணிகிட்டேன்னு சொல்லி இருக்கா. நிஜமா எப்படி இருந்திருக்கும் அவனுக்கு?. எல்லாம் கொஞ்ச நாளிலே சரியாகும் அப்படிங்கிற நம்பிக்கையிலே அவளை சமாதான படுத்திட்டு அவளை அந்த ரூமிலே படுத்துக்க சொல்லிட்டு இவன் மொட்டை மாடியிலே போய் படுத்திருக்கான். முடிச்சுக்கிட்டா கதையை.”

அவள் பேசிக்கொண்டே போக நான் அசையா பொம்மை போல் அவளையே அதிர்ந்து பார்த்திருந்தேன்.

“அவ மனசு முழுக்க அந்தப் பையன் மேலே காதல். அவனையே நினைச்சிட்டு இருந்திருக்கா. அதுக்கு அப்புறம் அவ தங்கையை பத்தி நினைச்சு இருக்கா. ஆனா அவ ஷ்யாமை பத்தி ஒரு நிமஷம் கூட நினைக்கலை சந்தியா” குரல் முழுவதும் வருத்தம் அப்பிக்கிடக்க சொன்னாள் சித்தாரா.

“இது நடந்து ரெண்டு நாளிலேயே, அந்த அதிர்ச்சியிலேயே அவங்க அம்மாவுக்கு பக்க வாதம் வந்திடுச்சு.” பகீரென்றது எனக்கு. தற்கொலை எனும் ஒற்றை நிமிட செயல் ஒரு குடும்பத்தையே எப்படி சீரழிக்கிறது என்பதை நான் கண்கூடாக பார்த்தது அன்றுதான்.

“ஆனா ஒரு விஷயம் உண்மை. அவங்களோட மத்த சொந்க்காரங்க,  அப்புறம் ஊரிலே உலகத்திலே யார் என்ன பேசினாலும் தனா குடும்பத்திலே, அவங்க அம்மா உட்பட  எல்லாருமே இவன் பக்கம் நின்னாங்க சந்தியா. எல்லாரும் இவனை நம்பினாங்க. தனா தன்னோட துக்கத்தையும் மீறி இவனை தாங்கி பிடிச்சுகிட்டான்” சொன்னாள் சித்தாரா. ‘கொஞ்ச நாளிலே சேலத்தை விட்டுட்டு அவங்க எல்லாரும் மலேசியா கிளம்பறாங்களாம்”

இந்த சம்பவங்களை பற்றி  ஷ்யாம்  நேரடியாக என்னிடம் ஒரு நாள் கூட சொன்னதில்லை. ஆனால் அவனது ஆழ் மன வருத்தங்களை அவன் வாய்மொழி வழியே நான் கேட்கும் ஒரு நாளும் சென்ற இரண்டு மாதங்களுக்கு முன்னால் வந்தது.

எனது மகன் எனது வயிற்றில் குடி கொண்டு மூன்று மாதங்கள் கடந்திருந்த நிலையில் நான் சித்தாராவின் வீட்டில் இருந்த நாட்களில், ஒரு முறை ஷ்யாமுக்கு டைஃபாய்ட் ஜுரம் வந்து அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தான்.

சித்தாரவிடம் பிடிவாதம் பிடித்து அவனைப் பார்க்க அனுமதி வாங்கியிருந்தேன். அவன் நல்ல உறக்கத்தில் இருந்த நேரத்தில் அவனை சென்று பார்க்கவும் செய்தேன்.

“ஜுரத்திலே பாப்பா பாப்பான்னுதான் ஏதோ புலம்பறான். போய் பார்த்திட்டுவா” சொல்லித்தான்  அனுப்பி வைத்தாள் சித்தாரா.

கையில் ஊசியின் வழியே மருந்துகள் ஏறிக்கொண்டிருக்க கண் மூடிப் படுத்திருந்தவனை நான் பார்த்தபடியே நிற்க .

“லவ் பண்ணாதே பாப்பா” என்றான் திடீரென உறக்கத்திலும் இதுதானா? ஒரு பெருமூச்சு என்னிடம்.

நான் பேசாமல் அங்கே அமர சில நிமிடங்கள் கழித்து “மாடிக்கு போனேன். ரஞ்சனா செத்துட்டா.” என்றான் கலங்கும் குரலில் “நான் கொலைக்காரன் இல்லை” தளர்ந்தே போனது எனது உள்ளம்.

அவன் எதை சொல்கிறான் என புரிந்தது எனக்கு. எனது கரம் கொண்டு அவனது கேசம் வருடினேன் நான்.  மெல்ல அசைந்தவன் மறுபடியும் உறக்கத்தில் விழுந்தான்.

சில நிமிடங்கள் கழித்து “அம்மாவும் தனாவும் கேட்டாங்க பாவம் அவங்க ” என்றான் மறுபடியும்.

“என்னது ஷ்யாம்?” என்றேன் மெதுவாக. எனது குரல் அவனது செவி சேர்ந்ததோ என்னவோ?

“சாருவை கல்யாணம் பண்ணிக்க. சொன்னாங்க… எல்லாம் சரியாயிடும்….” அவன் கொஞ்சம் திணறலுடன் சொல்ல பகீரென்றது எனக்கு.

அவன் தனாவுக்கும், அவனது தாய்க்கும் வாக்கு கொடுத்திருக்கிறான் என்பது அப்போதுதான் புரிந்தது எனக்கு.. ஷ்யாம் எனது காதலை நிராகரித்தற்கான காரணம் எனக்கு சரியாகப் புரிந்தது.

அவர்கள் நம்பிக்கையின் அடுத்த கட்டமாகத்தான் அவர்கள் சாருவையும் இவனுக்கு தருவதற்கு முடிவு செய்திருக்க வேண்டுமென தோன்றியது.

“என் சங்கீதக்காரனை நம்புவதற்கு என்ன? அவனது ஒற்றை பார்வை போதாதா அவனது ஒழுக்கம் பற்றி எடுத்துரைக்க, அவனது ஒற்றை தொடுதல் போதாதா அவனது கண்ணியம் பற்றி சொல்ல, அவனுடன் ஒரு மணி நேரம் இருந்தால் போதாதா அவன் குணம் அறிந்துக்கொள்ள”

விமானத்தில் எனது அருகில் ஆழ்ந்த உறக்கத்துக்கு சென்று விட்டவனை ஒரு வித ரசிப்புடனும் பெருமையுடனும் பார்த்திருந்தேன் நான்.

“நான் கொலைக்காரன் இல்லை” அவன் அன்று உறக்கத்தில் சொன்ன வார்த்தைகளை இன்று நினைத்தாலும் எனக்கு சுள்ளென வலிக்கும்.

இத்தனை வலிகளை தாண்டி வந்தவனை மறுபடியும் இக்கட்டில் தள்ளி இருக்கிறேனோ நான்? ஆழ் மன உறுத்தல் அடங்கவில்லை எனக்கு.

“சாரி ஷ்யாம்.” சொல்லிக்கொண்டேன் வாய்விட்டு. ‘எல்லாம் சரியாகிடும் ஷ்யாம். சாருவோட உங்க வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா அமையும்.”

இந்த நிலையிலும் அவன் மீது எனக்கிருக்கும் காதல் இன்னும் நூறு மடங்காகி இருப்பதைப்போலவே தோன்றியது.

“ஒரு முறை ஒரே ஒரு முறை அவனை முத்தமிட தவித்தது எனதுள்ளம்”

அவன் பக்கம் சற்றே சாய்ந்து அவன் உறங்கிக் கொண்டிருக்கிறான் என்பதை உறுதி செய்து கொண்டு அவன் கன்னத்தில் சட்டென இதழ் பதித்து விலகி சரியாக அமர்ந்துக்கொண்டேன்.

“இது போதும். இந்த நான்கு நாட்களில் எனக்கு கிடைத்த மகிழ்ச்சிகளின் முத்தாய்ப்பு இது”

மணிக்கு முந்நூறு கிலோமீட்டர் வேகத்தில் துடித்தது எனது இதயம். சில நொடிகளில் என்னை சரி படுத்திக்கொண்டு அவன் பக்கம் பார்க்க இன்னமும் உறக்கத்திலேயே இருந்தான் அவன்.

அடுத்த சில மணி நேரங்களில் விமானம் சென்னையில் தரையிறங்கி இருந்தது. நான் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியும் விமான நிலையத்துக்கு வந்து எங்களுக்காக காத்திருந்தாள் சித்தாரா.

“ஹாய் ஷ்யாம். ட்ரிப் நல்லபடியா முடிஞ்சதா?” அவள் மிக சாதரணமாகத்தான் கேட்டாள். ஆனால் அவளைப் பார்வையாலேயே எரித்தான் ஷ்யாம்

“இன்னும் கொஞ்ச நாளிலே உன் டாக்டர் லைசென்சையே கேன்சல் பண்றேனா இல்லையானு மட்டும் பாரு” அவள் முகத்துக்கு நேரே விரல் நீட்டி சொல்லிவிட்டு

‘ஷ்யாம்..” என நான் அழைப்பதை காதில் கூட வாங்கிக்கொள்ளாமல் தனது பெட்டியை இழுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான் ஷ்யாம்.

அடுத்து நாங்கள் எதிர்ப்பார்த்ததுதான் நடந்தது.

அடுத்த இரண்டாம் மணி நேரத்தில் சித்தாராவின் வீட்டில் அவளது தாய் தந்தை இருவரும் அருகருகே அமர்ந்திருக்க அவர்கள் வீட்டு டைனிங் டேபிளில் கூடியிருந்தது பஞ்சாயத்து. இந்த விஷயத்தை யாரிடமும் மறைத்து வைக்கக் கூடிய நிலை இனி இல்லை என்பது புரிந்திருந்தது எனக்கு.

அவளது அம்மா அப்பா இருவருக்கும் நடந்த விஷயங்களை புரிய வைத்திருந்தாள் சித்தாரா. அவர்களுக்கு நான் செய்தது புரியவே சில நிமிடங்கள் ஆனது.

அதன் பிறகு அவர்கள் முகத்தில் அதிர்ச்சியும் கவலையும் ஒன்று சேரந்து நின்றன. என்னை சற்றே வினோதமாகக் கூடப் பார்த்தார்கள்.

அவள் தந்தையின் முகத்தில் கொஞ்சம் கோபம்,  கூட குடி கொண்டது. ஆனால் அதை அவர் வெளிப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை என்று தோன்றியது. என் முகத்தை அவர் பார்க்கவேயில்லை.

“என்ன சந்தியா நீ?” என்றார்  அவள் அம்மா. “நீ இப்படி எல்லாம் செய்வேன்னு கண்டிப்பா நினைக்கலை. தப்பில்லையாம்மா இது?”.

“தப்பா சரியான்னு எல்லாம் நான் வாதாட விரும்பலைமா. எனக்கு இந்த குழந்தை வேணும்னு தோணிச்சு. இது நான் மனசார எடுத்த முடிவு. அதுக்கு நான் வருத்தப்படலை. இப்பவும் யாரையும் தொந்தரவு பண்ணாம  இந்த குழந்தையை நான் மட்டும் வளர்க்குற எண்ணத்தில்தான் இருக்கேன்.” எனது குரலில் உறுதி இருந்தது.

 “இதெல்லாம் எப்படிம்மா சரியா வரும்” கேட்டார் அவர்.

“என் குழந்தை வளர்ந்ததும் பாருங்க எப்படி சரியா வரும்னு” சொன்னேன் நான்.

கோபத்தின் உச்சியை தொட்டுவிட்ட பாவத்தில் .கைகளை டேபிளின் மீது ஊன்றிக்கொண்டு நெற்றியில் இரண்டு ஆள்காட்டி விரல்களையும் அழுத்திக்கொண்டு கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தான் ஷ்யாம்.

“சரி ஷ்யாம்” துவங்கினார் அவனது மாமா சித்தாராவின் தந்தை. ‘எப்போ உனக்கும் சந்தியாக்கும் கல்யாணம் வெச்சுக்கலாம் சொல்லு”

“இல்லப்பா அதெல்லாம் வேண்டாம். நான் அதெல்லாம் எதிர்ப்பார்க்கலை. நான் அவசரமாக பதில் சொல்ல

“நீ கொஞ்ச நேரம் பேசாம இரு சந்தியா” கோபமாகவே சொன்னார் சந்தியாவின் அம்மா.

“நீ பதில் சொல்லு ஷ்யாம்” இது அவள் அப்பா. மெல்ல நிமிர்ந்தான் ஷ்யாம்.

‘கல்யாணம் எனக்கும் சாருவுக்கும்” என்றான் அழுத்தமாக.

“சாரு யாரு?” அவர் புரியாமல் கேட்க

“ரஞ்சனா தங்கை” சொன்னான் முகத்தில் இருந்த இறுக்க பாவத்தில் கொஞ்சம் கூட மாற்றம் இல்லாமல்.

சித்தாரா, அம்மா, அப்பா என மூவரும் முகத்திலும் பேரதிர்ச்சி

“இது என்னடா புதுக் கதை?” அவளது அப்பா அதிர்ச்சி விலகாத குரலில் கேட்டார். “யார் முடிவு பண்ணாங்க இதை?”

“என் கல்யாணத்தை வேறே யார் முடிவு பண்ணணும்? நான்தான் பண்ணேன்.” என்றான் அவர் முகத்தை நேராக பார்த்து. அதற்கு மேல் அவரால் எதுவும் பேச முடியவில்லை.

“ஷ்யாம் தப்போ ரைட்டோ இப்போ சந்தியா வயத்திலே உன் குழந்தை இருக்கு. அதுக்கு ஒரு பதில் நீ சொல்லித்தான் ஆகணும்” சித்தாராவின் அம்மா சொல்ல

“சொல்றேன் உங்க பொண்ணு பண்ண வேலைக்கும் சேர்த்து நான் பதில் சொல்றேன்” என்றான் சூடாக. “ரெண்டு பேரும் சேர்ந்து எனக்கு துரோகம் பண்ணி இருக்காங்க.”

“ஷ்யாம் சித்தாரா மேலே எந்த தப்பும் இல்லை. எல்லா தப்புக்கும் நான்தான் காரணம் நீங்க இவங்க மேலே எல்லாம் ஏன் கோபப்..” நான் முடிப்பதற்குள்

“நீ வாயை மூடு” வெடித்தான் அவன். அவனது தொனியில் மொத்த உடலும் குலுங்கியது எனக்கு.

அவள் அம்மாவின் பக்கம் திரும்பியவன்

“என் குழந்தையை நான் அப்படி எல்லாம் விட மாட்டேன் அத்தை” என்றான் “அது பிறந்ததும் நான் என்னோட கூட்டிட்டு போய் வளர்க்கப் போறேன்” என்றான்.

“டேய்… என்னடா அநியாயம். குழந்தையையும் அம்மாவையும் பிரிக்க போறியா?” இது அவளது அம்மா.

“நீங்க கவலைப்படாதீங்கமா. அதெல்லாம் அவராலே முடியாது. எவ்வளவு தூரம் போறார்ன்னுதான் பார்ப்போமே” நான் சொல்ல என் பக்கம் திரும்பி அவன் பார்த்த நெருப்பு பார்வையில் சற்றே மிரண்டுதான் போனேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!