Skip to content
Post Views: 2,840
“வேண்டாம் ஷ்யாம்” என்றார் சித்தாராவின் அம்மா. “சாருவுக்கு நாமளே கூட வேறே நல்ல மாப்பிள்ளை பார்ப்போம். நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருங்க”
“இல்ல அத்தை அது சரியா வராது” அவன் சொல்வதற்குள் உள்ளே புகுந்தார் அவள் அப்பா.
“எல்லாம் சரியா வரும். எனக்கு தெரிஞ்ச வரைக்கும் சந்தியா அருமையான பொண்ணு. உன்னையும், குழந்தையையும் ரொம்ப நல்லா பார்த்துப்பா. வீட்டுக்கு பெரியவனா நான் சொல்றேன் அந்தக் குடும்பம் வேண்டாம் ஷ்யாம். அந்த குடும்பத்தினாலே ஒரு தடவை நம்ம மானம் மரியாதை எல்லாம் போனது போதும்”
“அவங்க குடும்பத்தினாலேதான் நம்ம மானம் மரியாதை தப்பிச்சது.” அவனது கண்களில் கோபத் தாண்டவம். “அந்த இக்கட்டான சூழ்நிலையிலும், அவங்க துக்கத்திலும் கூட அவங்க மூணு பேரும் என்னோட நின்னாங்க. அதுக்காக அவங்களுக்கு என்ன வேணும்னாலும் செய்யலாம். தனா அம்மா இப்போ படுத்த படுக்கையா இருக்காங்க. அவங்கதான் என்கிட்டே ஒரு நாள் கேட்டாங்க “நீயே சாருவை கல்யாணம் பண்ணிக்கிறியாபான்னு”. நான் உடனே சரின்னு வாக்கு கொடுத்திட்டேன். அதை எந்த நிலையிலும் என்னாலே மீற முடியாது” படபடவென வந்து விழுந்தன அவனது வார்த்தைகள்.
Advertisement
“ஆமாம் ஒரு தடவை அந்த கேடு கெட்ட குடும்பத்திலே விழுந்து பட்டது போதாதுன்னு மறுபடியும் வாக்கு கொடுத்தியாக்கும்?” என்றார் அவள் அப்பா. என் மீதிருந்த கோபத்தை அப்படி வெளிப்படுத்திக் கொண்டாரா அவர் என புரியவில்லை.
“ப்ளீஸ் மாமா” இவனது குரலில் அத்தனை சூடு “தனா குடும்பத்தை பத்தி தப்பா பேசாதீங்க. அதுக்கு அப்புறம் நான் உங்களை மரியாதை இல்லாம பேசிடப் போறேன்”
“ஓ! அப்போ என்னை விட அவங்கதான் முக்கியம் அப்படிதானே”
Advertisement
“கண்டிப்பா. அதிலே சந்தேகமே வேண்டாம் உங்களுக்கு. உங்க எல்லாரையும் விட எனக்கு அவங்கதான் முக்கியம்” தகித்தன அவனது வார்த்தைகள்.
Advertisement
“அப்போ எதுக்குடா என் வீட்டிலே வந்து உட்கார்ந்திருக்கே அவங்க வீட்டிலேயே போய் கிட போ” பதிலுக்கு பாய்ந்தார் மாமா.
சித்தாராவும் அவளது அம்மாவும் பதற எழுந்தே விட்டான் ஷ்யாம் “நான் வரேன் அத்தை”
“இருடா” என்றார் அவன் மாமா “நீ பாட்டுக்கு போயிடுவே உன் பிள்ளையை நாங்க காப்பாத்தி டெலிவரி பார்த்து உன் கையிலே கொடுக்கணுமா? இவளையும் உன்னோட கூட்டிட்டு போ. அப்புறம் நீயாச்சு அவளாச்சு”
Advertisement
“அப்பா ஏன்பா? சந்தியா இங்கே இருக்கட்டும்” சித்தாரா பதற.
“நீ அவளுக்கு ஒரு டாக்டரா என்ன செய்யணுமோ அதை செய் போதும்” அவள் அப்பா சொல்ல
“நீ போய் அஞ்சு நிமிஷத்திலே உன் பொருள் எல்லாம் எடுத்திட்டு வா” என்னிடம் சொன்னான் ஷ்யாம்.
“இல்ல ஷ்யாம் நான் எங்க வீட்டிலே போய் கொஞ்ச நாள் இருக்கேன். நான் எங்கே இருக்கணும்னு நான்தான் முடிவு பண்ணணும்.” நான் சொல்லி முடிப்பதற்குள் எனது கரம் பிடித்து கிட்டத்தட்ட இழுத்துக்கொண்டு அவனது வீடு நோக்கி நடந்தான் ஷ்யாம்.
எல்லாரும் ஒரு சிறு அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டே நின்றனர்.
“ஷ்யாம் ஏன் இப்படி பிஹேவ் பண்றீங்க? கையை விடுங்க” நான் சொல்ல அதை காதில் வாங்குவதாகவே இல்லை அவன். விறுவிறுவென நடந்தான் அவன்.
அவனுடன் ஓடினேன் நான். அவன் எனது கையை பிடித்திருந்த அழுத்தத்தில் அவனது கோபம் நன்றாகவே தெரிந்தது.
“ஷ்யாம் என்னை விடுங்க. ப்ளீஸ் என்னாலே ஓட முடியலை. விழுந்துடுவேன்”
சட்டென குறைந்தது அவனது நடையின் வேகம். அதற்குள் அவன் வீட்டு கேட்டின் அருகில் நாங்கள் வந்திருக்க கேட்டை திறந்துக்கொண்டே சொன்னான் அவன்.
“உன் வயத்திலே இருக்குறது என் குழந்தை. அது வெளியே வர வரைக்கும் எந்த முடிவையும் எடுக்க உனக்கு அதிகாரம் இல்லை .புரிஞ்சதா?. பேசாம உள்ளே வா”
“இப்படி எல்லாம் செய்யறதுனாலே குழந்தையை நான் உங்ககிட்டே குடுப்பேன்னு நினைக்காதீங்க ஷ்யாம். அது நடக்க போறதில்லை”
“அதையும் பார்த்துடுவோம். நீ பிரச்சனை பண்ணா அப்புறம் உனக்கும் சித்துவுக்கும்தான் பிரச்சனை வரும் சொல்லிட்டேன்” சொன்னவன் அவனது வீட்டுக்குள் சென்ற பிறகே எனது கையை விடுவித்தான்.
“நீங்க இப்படி என்னை இழுத்திட்டு வந்திட்டா நான் இங்கேயே இருப்பேன்னு நீங்க நினைக்கறீங்களா?’ நான் கேட்க
“போறதா இருந்தா போடி. என் பிள்ளையை எப்படி காப்பாதிக்கறது, அதை எப்படி உன்கிட்டேர்ந்து வாங்கிக்கறதுன்னு எனக்குத் தெரியும்” எனது கண்களுக்குள் பார்த்து சொல்லிவிட்டு பியானோவின் முன்னால் சென்று அமர்ந்திருந்தான் ஷ்யாம்.
நான் இரண்டடி கூட நடந்திருக்க மாட்டேன் அவள் வீட்டில் இருந்த எனது பொருட்களுடன் அங்கே வந்து நின்றாள் சித்தாரா. அதற்குள் இசையை ஆள ஆரம்பித்திருந்தான் அவன்.
உட்காரு என எனக்கு சைகை காட்டிவிட்டு அவளும் அமர்ந்தாள். அவனது இசை வழக்கம் போல் என்னை அடக்கி ஆள ஆரம்பித்திருந்தது.
அரை மணி நேரம் கழித்து என் முன்னால் வந்து நின்றான் ஷ்யாம். எனது மனமும் ஏன் அவன் மனமுமே கூட ஒரு நிலைக்கு வந்தது போல் இருந்தது.
“உனக்கும் எனக்கும் நடுவிலே ஆயிரம் பிரச்சனை இருக்கட்டும். ஆனா அது எல்லாத்தையும் விட முக்கியம் குழந்தை நல்லபடியா பிறக்கணும் அப்படிங்கிறது. அதுக்கு நீ தனியா இருக்குறது நல்லது இல்லைன்னு உனக்கே தெரியும். கொஞ்சம் புரிஞ்சு நடந்துக்கோ” சொல்லிவிட்டு அகன்றான் அவன்.
சித்தாராவும் அதையே அமோதித்தாள். “குழந்தை அப்படிங்கிறது மட்டும் யோசி சந்தியா” என்றாள் அவள்.
“நீ தனியா இருக்குறது நல்லது இல்லைதான் சந்தியா. நேத்து மயக்கம் போட்டா மாதிரி திடீர்னு மயக்கம் போட்டா என்ன செய்வே? எனக்கும் நீ இங்கே இருக்கிறது ரொம்ப நல்லதுதான். நானும் உன்னை தினமும் வந்து பார்த்துப்பேன். உன் ஸ்கூல்லேயும் லீவ் சொல்லிடு. இங்கேயே இரு. குழந்தை பிறந்ததும் மத்த பிரச்சனைகளை பார்த்துக்கலாம். குழந்தைக்காகவாவது அவன் உன்னை நல்லா பார்த்துப்பான். எனக்கு எல்லாத்துக்கும் மேலே உன் ஆரோக்கியம் ரொம்ப முக்கியம்” என்றாள் என் மீது பாசம் வைத்த எனது பைத்தியக்கார தோழி.
குழந்தை விஷயத்தில் நானும் எந்த ஒரு அலட்சிய போக்கையும் எடுக்க விரும்பவில்லை. சிங்கப்பூரில் நடந்த அந்த இரண்டு சம்பவங்களும் எனக்கு இந்த விஷ்யத்தில் கொஞ்சம் பயத்தை ஊட்டியிருந்தன. அதனாலேயே இங்கேயே இருக்க முடிவு செய்திருந்தேன்.
ஷாயமின் வீட்டில் அவனைத்தவிர யாருமில்லை. வேலைக்காரர்கள் கூட அமர்த்திக் கொள்ளவில்லை அவன். முன்பிருந்த ஒன்றிரண்டு வேலைக்காரர்களையும் அவனது முதல் திருமண சம்பவங்களுக்கு பிறகு நிறுத்தியிருந்தான். எனக்காக அவனே சமைத்தான்.
“நான் ஏதாவது ஹெல்ப் பண்ணவா ஷ்யாம்?”
“அதெல்லாம் ஒண்ணும் வேணாம் தாயே, நீ போய் உட்காரு”
“இல்ல நீங்க எனக்காக தனியா கஷ்டப் படறீங்களே அதான் கேட்டேன்”
“ஹலோ மேடம். நான் உங்களுக்காக கஷ்டப்படலை. என் குழந்தைக்காக கஷ்டப்படறேன். குழந்தை பிறந்து அது என் கைக்கு வந்ததும் நான் உங்க பக்கம் திரும்பக் கூட மாட்டேன். ஞாபகம் வெச்சுக்கோங்க”
இவனிடம் போய் கரிசனமாக கேட்டேனே என்றிருந்தது எனக்கு.
“இப்போ உனக்கு எப்போ என்னென்ன சாப்பிட தோணுதோ சொல்லு, என் குழந்தை என்னென்ன கேக்குது சொல்லு எல்லாம் செஞ்சு தரேன்” அவன் சொல்ல பதில் பேசாமல் அங்கிருந்து வந்திருந்தேன் நான்.
எனக்கென அவனது பெரிய படுக்கை அறையை தயார் செய்து கொடுத்திருந்தான் ஷ்யாம். அன்று இரவு உணவை முடித்துக்கொண்டு நான் கதவை சாத்திகொண்டு படுத்துக்கொள்ள சில நிமிடங்களில் வந்து கதவை தட்டினான் அவன்.
“என்னாச்சு ஷ்யாம்?”
“எதுக்கு இப்போ கதவு சாத்தினே நீ?”
“ஏன் ஷ்யாம் அதிலே என்ன பிரச்சனை?”
“நீ உள்ளே திடீர்னு மயக்கம் போட்டா கூட எனக்கு தெரியாது. பேசாம கதவை திறந்து வெச்சிட்டு படு” ஆணையிட்டு விட்டு அவன் திரும்ப
“அப்படியெல்லாம் உங்க பையனுக்கு எதுவும் ஆகிடாது. ரொம்ப கவலைப் படாதீங்க” நான் என்னை மறந்து சொல்லிவிட
“பையனா. அதுவும் சொல்லிட்டாளா சித்தாரா?” அத்தனை ஆர்வம் அவன் கண்களில்.
நாக்கை கடித்துக்கொண்டேன் நான். என்ன குழந்தை என்று சொல்வது சட்டப்படி குற்றம். என்னுடைய கெஞ்சல் தாங்காமல்தான் சொல்லி இருந்தாள் அவள். நான் ஷ்யாமுக்கு பதில் சொல்லவில்லை.
“எனக்கு தூக்கம் வருது ஷ்யாம். குட் நைட்” சொல்லிவிட்டு படுத்துக்கொண்டேன் நான். எனது அறைக்கு எதிரில் இருந்த சோபாவில் படுத்துக்கொண்டான் அவன்.
நாட்கள் இப்படியே நகர்ந்தன. தனது குழந்தைக்காக என்னை கண்களுக்குள் வைத்துத்தான் தாங்கிக்கொண்டான் ஷ்யாம். விதம் விதமாக சமைத்துக் கொடுத்தான். அலுவலக வேலைகளை முடிந்த வரை வீட்டில் வைத்தே பார்த்துக்கொண்டான்
நான் குளிக்க சென்றால் கூட வெளியில் வரும் வரை அந்த சோபாவிலேயே காத்திருப்பான்.
“நீ விழுந்து வெச்சேன்னா என்ன செய்ய?” என்பான். “அப்புறம் என் பையனுக்குதான் கஷ்டம்”
“ஏன் உன் மகனின் அம்மாவுக்கு கஷ்டம் வந்தால் உனக்கு கவலை இல்லையா?” கேட்டுக்கொள்ளவில்லை நான்.
தினமும் இரண்டு மூன்று முறை எனது அறைக்குள் வந்து எனதருகே நின்றுக்கொண்டு “என்னடா கண்ணா என்ன பண்றே?” என்பான். குழந்தையுடன் எதாவது பேசிக்கொண்டே இருப்பான்.
நாட்கள் செல்லச் செல்ல அவனது குரலுக்கு குழந்தை அசைந்து கொடுக்கவும் செய்தது.
குழந்தை என்பதற்கு மேலாக என்னிடம் தேவை இல்லாமல் ஒற்றை வார்த்தை பேச மாட்டான். என்னை, நான் செய்த அந்த செயலை அவனால் மன்னிக்கவே முடியவில்லை என்று புரிந்தது எனக்கு.
எங்களுக்கிடையே ஒரு மௌனத்திரை திரை விழுந்து கிடந்தது. இருந்தாலும் இசை மட்டும் எங்கள் இருவருக்கும் இடையில் தூது சொல்லிக்கொண்டே இருந்தது.
அவனது மௌனங்களும் எப்போதாவது அவனும் அறியாமல் வெளிப்பட்டுவிடும் சூடான வார்த்தைகளும் என்னை தளர்த்தி விடும் நேரத்தில், உறக்கம் வராத இரவுகளில், அங்கிருக்கும் வயலினில் விளையாடும் எனது விரல்கள். அந்த இசையின் மொழியை புரிந்து கொள்வான் அவன்.
என்னை மனதிலிருந்து ஒதுக்கிய போதிலும் அவனால் எனது இசையை வெறுத்து ஒதுக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. அடுத்த சில நிமிடங்கள் கழித்து அவனது பியானோ இசை எனது செவிகளை வருடும். அது என்னைத் தாலாட்டி உறங்க வைக்கும்.
இதனிடையே அவ்வப்போது அவன் தனாவுடன் பேசிக்கொண்டிருந்த போதிலும் இதுவரை அவர்கள் திருமண பேச்சும் வந்ததாக தெரியவில்லை எனக்கு.
இப்படியே மூன்று மாதங்கள் கழிந்திருந்த நிலையில் எனது ஒன்பதாவது மாத தொடக்கத்தில் இருக்கிறேன் என்று எனது வயிறு என்னை பார்ப்பவர்களுக்கெல்லாம் பறைசாற்றிக் கொண்டிருந்தது..
பாதங்களில் அவ்வப்போது வீக்கங்கள், வேகமாக பேசினால் கூட சின்னச்சின்ன மூச்சு திணறல்கள் என உடல் சில நேரங்களில் ஒத்துழையாமை இயக்கம் நடத்திக்கொண்டிருந்தது.
அதே நேரத்தில். வெளியே வந்து இசை கற்றுக் கொள்வானா அல்லது நடனக் கலைஞன் ஆவானா என நான் எண்ணும் அளவுக்கு எனது மகனின் விளையாட்டு இன்னமும் அதிகமாகியிருந்தது
அன்று நான் சித்தாராவிடம் ஸ்கேன் பரிசோதனைக்கு செல்ல வேண்டிய தினம்.
இதுவரை எனது பரிசோதனைகள் எதற்குமே ஷ்யாமை நான் அழைத்தது இல்லை. அழைத்தாலும் வருவானா தெரியவில்லை. சித்தாராவின் சொந்த கிளினிக்கில் யாருமில்லாத நேரங்களில் எனக்கு அவளே பரிசோதனை செய்து பார்த்து விடுவாள்.
யார் கண்ணிலாவது பட்டு ஏதாவது செய்திகள் பரவுவதை தவிர்க்கவே இந்த ஏற்பாடு. நான் திரும்பி வந்த பிறகு அவன் குழந்தையை பற்றி ஆயிரம் கேள்விகள் கேட்பது வேறு விஷயம்.
இன்று சித்தாராவுக்கு என்ன தோன்றியதோ “இன்னைக்கு ஈவினிங் ஷ்யாமையும் கூட்டிட்டு வா ஸ்கேனுக்கு” என்றாள்.
அன்று மதியம் அவன் தனது ஸ்டுடியோவுக்கு கிளம்பிக்கொண்டிருந்தான். காலையிலிருந்தே அவனது அலுவலகத்திலிருந்து ஏதேதோ அழைப்புகள். கொஞ்சம் கோபத்தின் பிடியில்தான் இருந்தான் அவன்.
“ஷ்யாம் ஈவினிங் நான் ஸ்கேன் போகணும். நீங்களும் வரீங்களா?” அவனிடம் கேட்டேன் நான்.
“நானா?” என்றான் யோசனையுடன். “எதுக்கு?’
“குழந்தையை ஸ்கேன்லே பார்க்கலாம் ஷ்யாம்”
அதன் பிறகு ஒரு நொடி கூட யோசிக்கவில்லை அவன். “கண்டிப்பா வரேன். இன்னைக்கு படத்தோட சவுண்ட் எடிட்டிங் இருக்கு முடிச்சிட்டு வரேன்” என்றான் அவன்.
“ரீ ரெக்கார்டிங்கா? நானும் வரேன் ஷ்யாம். பண்ணி ரொம்ப நாள் ஆச்சு” கேட்டிருக்கக் கூடாது நான் ஆனாலும் ஆர்வம் தாங்காமல் கேட்டும் விட்டேன்.
“ஸ்டுடியோக்கா? நீ எப்படி? யாரவது பார்த்தா என்ன ஆகும். அதுவும் நிறைமாசம். ஏதாவது எங்கேயாவது நியூஸ் கசிஞ்சா தேவை இல்லாத பிரச்சனைகள் என் நிம்மதியை கெடுக்கறதுதான் உன் எண்ணமா?. எப்போடா குழந்தை பிறக்கும் நீ அதை என்கிட்டே கொடுத்திட்டு எப்போடா என்னை விட்டு போவேன்னு இருக்கு” படீரென வெடித்துவிட்டான் அவன்.
கடைசி வார்த்தைகள் ஏனோ என்னை உலுக்கியே போட்டன. கண்களை தொட்டன சில சொட்டு கண்ணீர்.
‘ஒரு வேளை அதுதான் நடக்கபோகிறதோ. அதுவும் சீக்கிரமாக?’ ஒரு வித அழுத்தம் எனக்குள்ளே. எதுவும் பேசாமல் வயிற்றை ஒரு கையால் தாங்கிக் கொண்டு போய் அமர்ந்து கொண்டேன் நான்
அப்போது வந்தது அந்த அழைப்பு. அழைத்தவன் தனா. கைப்பேசியின் ஸ்பீக்கரை உயிர்ப்பித்து பேசிக்கொண்டிருந்தான் ஷ்யாம்.
“சொல்லு தனா எப்படிடா இருக்கே?” பரிவுடன் கேட்டான் ஷ்யாம்.
“நல்லா இருக்கேன்டா. நாளைக்கு மத்தியானம் ஒரு மணிக்கு நானும் சாருவும் சென்னையிலே இருப்போம். ஸ்டே உங்க வீட்டிலேதான்”
‘சென்னை வரியா என்னடா திடீர்னு?” என் முகம் பார்த்தபடியே கேட்டான் ஷ்யாம்
“உங்க ரெண்டு பேர் கல்யாணம் பத்தி கொஞ்சம் நேரிலே பேசணும்டா. அதான் வரேன்”
“ஓ..” கொஞ்சம் இறங்கியது அவன் ஸ்ருதி. “அம்மா எங்கே தனியா இருந்துக்குவாங்களா?”
“எங்க மாமா குடும்பம் வந்திருக்காங்க இங்கே. அவங்க கொஞ்ச நாள் பார்த்துக்குவாங்க. சரி நாளைக்கு பார்க்கலாம். வைக்கறேன்”
அழைப்பை முடித்துவிட்டு மெல்ல மெல்ல நிமிர்ந்து என் முகம் பார்த்தான் ஷ்யாம். அவனது முகம் மொத்தமாக வாடியிருந்தது. இப்போது இந்த அழைப்பை எதிர் பார்க்கவில்லையோ என்று தோன்றியது.
மெல்ல எனதருகில் வந்தான். அவன் என்னிடம் ஏதோ சொல்ல தயங்குவது போல் எனக்குத் தோன்றியது.
“ஆல் தி வெரி பெஸ்ட் ஷ்யாம். கல்யாணம் வருது போலிருக்கே. இந்த வாழ்க்கை உங்களுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா அமையும் பாருங்க” மெல்ல எழுந்து இதழ்களில் புன்னகையை ஓட விட்டுக்கொண்டே அவன் கைப்பற்றி குலுக்கினேன் நான்.
“சாரி பாப்பா” என்றான் மெதுவாக. நீண்ட நாட்களுக்கு பிறகு அவனது பாப்பா மீண்டிருந்தது.
“ஏதோ டென்ஷன்லே பேசிட்டேன். உன்னை நான் அவ்வளவு ஹார்ஷா பேசியிருக்கக் கூடாது அதுவும் குழந்தையை சுமக்குற இந்த நேரத்திலே நான் அப்படி பேசியிருக்கவே கூடாது. ரொம்ப சாரிம்மா”
“அதனாலே ஒண்ணுமில்லை ஷ்யாம் விடுங்க.” புன்னகைத்தேன் நான். “எப்படியும் நான் ஒரு நாள் இந்த வீட்டை விட்டு போய்தானே ஆகணும். சொல்லபோனா நாளைக்கே நான் எங்க வீட்டுக்கு கிளம்பித்தானே ஆகணும்”
இப்படி ஒரு வார்த்தையை எதிரே பார்க்கவில்லை என்பதைப் போல் ஒரு பேரதிர்ச்சி அவன் முகத்தில்.
“உங்க வீட்டுக்கா? எதுக்கு?”
“அவங்க வரும் போது நான் எப்படி ஷ்யாம் இங்கே இருக்க முடியும்?”
“அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்? அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்” அவசரமாக சொன்னான் அவன்.
“அது சரியா வராது ஷ்யாம்” நான் சொல்ல
சில நொடிகள் அப்படியே கண்களை மூடிக்கொண்டு நின்றவனுக்கு என்ன தோன்றியது என்று புரியவில்லை. நான் நாளை இங்கிருந்து கிளம்பி விடுவேன் எனும் எண்ணம் அவனை உலுக்கியதா தெரியவில்லை.
“அதெல்லாம் அப்புறம் யோசிப்போம். இப்போ ஸ்டூடியோலே யாரும் இல்லை. வா. கொஞ்சம் எடிட்டிங் வேலை இருக்கு முடிச்சிட்டு, அப்படியே ஈவின்ங் ஹாஸ்பிடல் போயிட்டு வரலாம்” என்றான் கண்திறந்து.
பழைய ஷ்யாமை பார்த்த மகிழ்ச்சி ஆரவராம் எனக்குள்ளே.
தொடரும்
error: Content is protected !!