Skip to content
Post Views: 2,888
பூவிடைப் பனித்துளிகள்
அத்தியாயம் 7
இன்னமும் வகுப்பில் சிரிப்பலை நிரம்பியிருக்க, பரணி மீண்டும் திவ்யாவின் முகத்தில் கண்களைப் பதித்தான். தன் விழிகள் செய்த தவறை திவ்யாவின் மூளை அதற்குள் உணர்ந்து, அவளுக்கு சுட்டிக் காட்டிவிட்டது போலும். அதன் பின்னர் திவ்யா பரணியின் முகமிருக்கும் திசையில் கூடத் திரும்பவில்லை.
பரணியும் தான் எங்கே இருக்கிறோம் என்று புரிந்து, தலையைச் சிலுப்பிக் கொண்டு பாடம் நடத்தத் துவங்கினான். பாடம் நடத்தும் சாக்கில் அவன் கண்கள் எல்லா மாணவர்களிடம் சென்று சென்று மீண்டு, தேவைக்கு அதிகமாக சில நொடிகள் திவ்யாவின் முகத்தில் இலயிக்கும்.
Advertisement
திவ்யாவிற்கும் பரணி தன்னைப் பார்த்த சமயம் என்னவோ போலத்தான் இருந்தது. அவன் கண்களைப் பார்த்த சமயம், அதில் தெரிந்த எதுவோ ஒன்று அவளை கொக்கி போட்டு நிறுத்தியிருந்தது உண்மை.
‘அவ முன்னால நிக்கறேன்
அந்த கண்ணால சொக்கறேன்
Advertisement
நான் தன்னால சிக்குறேன்…’ என்று அவன் தன்னைப் பார்த்து எண்ணுகிறான் என்ற அளவிற்கு, அவன் மனதை அவன் விழிகள் உணர்த்தின. அவன் ஒரு வார்த்தை கூட பேசாமலேயே அவன் உள்ளம் தனக்குப் புரிவது கண்டு, திவ்யாவிற்கு பயம் தொற்றிக் கொண்டது. மனதில் படபடப்பு உண்டானது. அவளுக்குப் புரிந்து போனது என்று அவனும் கண்டு கொண்டான். அதுதான் உண்மையில் அதிக பயத்தைத் தோற்றுவித்தது.
Advertisement
தன் கள்ளத்தனத்தை மறைக்க பெரும்பாடுபட்ட திவ்யா, வம்பாக மனதில் வேறு விஷயங்களைப் பற்றி எண்ணலானாள். வீடு, அப்பா, அம்மா, போன வருடம் திருமணம் முடித்த அக்கா செளமியா, அவள் குடும்பம் என மனதை நொடியில் மாற்றியிருந்தாள். சில நொடி சஞ்சலம் தான்.
‘இவனுடன் சேர்ந்தா நாம் சிரிக்கிறோம்? இவன் மனதில் நினைத்தது எனக்கு ஏன் புரியவேண்டும்? இது என்ன பைத்தியக்காரத் தனம்?’ என்ற எண்ணம் தோன்ற, விருப்பமில்லாமல் தன் பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள்.
பாடம் எடுக்கும் சாக்கில் பரணி பலமுறை அவள் பக்கமாக இன்று அடிக்கடி திரும்புவது போன்றே அவளுக்கும் தோன்றியது. அவன் பார்க்கும் வேளைகளில் எல்லாம், ‘எதுக்கு இத்தனை தடவை இன்னைக்கு பார்க்கிறான்?’ என்று மனதில் யோசனை சென்றது.
Advertisement
இதையெல்லாம் விட பெரும் வியப்பாக, ‘அவனைப் பார், அவன் கண்களைப் பார். அவன் விழிகளுடன் உன் விழிகளைக் கோர்த்துக் கொள்.’ என்று அபத்தமாக அவள் மனம் சொல்லவும், திவ்யா சுதாரித்தாள். வீணாக மனதினுள் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்த மனசாட்சியின் கை, கால்களைக் கட்டி மூலையில் போட்ட திவ்யா, ‘ஒழுங்கா க்ளாஸை கவனி திவு.’ என்று திடமாக சொல்லிக் கொண்டு, அவன் இருந்த பக்கமே பார்க்காமல் மனதைக் கட்டுக்குள் கொண்டு வந்தாள்.
ஒரு முக்கியமான பகுதியைப் பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தான் பரணி. “ஸ்டூடெண்ட்ஸ், இந்த பார்ட் நல்லா கவனிங்க. உங்களுக்கு கேம்பஸ் இண்டர்வியூல இந்த டேட்டாபேஸ் மெயிண்டனஸ் கேள்விகள் தான் நிறைய கேட்பாங்க. ப்ளீஸ் பே அட்டென்ஷன்.” என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
அனைவரின் கவனமும் அவன் பேசும் வார்த்தைகளில் குவிந்திருக்க, வழக்கம் போல திவ்யா மட்டும் தன் நோட்டில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள்.
அவள் தன்னை கவனிக்கவில்லை என்று உணர்ந்த பரணி, “லாஸ்ட் பென்ச் கேர்ள்ஸ், ஆர் யூ லிசனிங்?” என்று வினவ, திவ்யாவைத் தவிர அவள் அருகில் அமர்ந்திருந்த நர்மதாவும் கீர்த்தனாவும், “எஸ் ஸார்!” என்று பதிலளித்தனர். திவ்யா மையமாக தலையை அசைத்தாளே தவிர அவனைப் பார்க்கவுமில்லை, அவன் கேள்விக்கு வாய் திறந்து பதில் சொல்லவும் இல்லை. அவள் தன்னைப் பார்க்காதது கண்டு என்ன காரணத்தினாலோ பரணிக்கு சட்டென்று ஆத்திரம் உண்டாயிற்று.
“திவ்யபாரதி… கவனிக்கிறீங்களா, இல்லையா?” என்று அவளை மட்டுமாக பெயர் சொல்லி அழைத்தான் பரணி. ஒரு நொடி திடுக்கிட்ட திவ்யா எழுந்து நின்று, “ஐம் லிசனிங் சார்.” என்றாள். அவள் அவனிடம் பதில் சொன்ன போதும், அவள் கண்கள் இம்முறையும் அவனைப் பார்க்கவில்லை. அவன் பின்னால் இருந்த கரும்பலகையில் தான் லயித்திருந்தன.
தன்னை அவமானப்படுத்த வேண்டும் என்றே அவள் நடந்து கொள்வதைப் போல தோன்றிவிட்டது பரணிக்கு. அதிலும் அவளை நேருக்கு நேர் கேள்வி கேட்கும் போதும், தன்னைப் பாராமல் எங்கோ பார்த்துக் கொண்டு அவள் பதிலளித்த விதம், அவனைப் கோபப் படுத்தியது.
“என்ன லிசன் பண்ற? நான் பாட்ல இங்க கத்திக்கிட்டு இருக்கேன், நீ உன் நோட்ல ஏதோ கிறுக்கிட்டு இருக்க?” என்றான் ஆத்திரத்துடன். பரணி எப்போதும் அகங்காரமாக பேசுபவன் அல்ல. அதிலும் பாடம் நடத்தும்போது மிகவும் நட்பாக, எல்லாருக்கும் புரியும்படி ஆங்கிலத்தில் சில தடவை, தமிழில் ஒரு தடவை என்று நிஜ உலக எடுத்துக்காட்டுகள் சொல்லி அழகாய் நடத்துவான்.
அவன் இன்று கத்தத் துவங்கவும், அதுவரையிலும் இருந்த மகிழ்ச்சியான மனநிலை சட்டென மாறிவிட, கொஞ்சம் போல சலசலத்த மாணவர்களும் கப்சிப்பென்று ஆகிப் போயினர்.
திவ்யாவிற்கு இவன் எதற்காக கோபம் கொள்கிறான் என்றே புரியவில்லை. ‘நான் ஆன்சர் பண்ணாலே புடிக்கல தானே உனக்கு? நான் க்ளாஸ்ல என்ன பண்ணா என்ன? நீ நடத்துறதை எல்லாருமா கவனிக்கிறாங்க? ஃபர்ஸ்ட் பெஞ்சில உக்காந்து அந்த முட்ட கண்ணு சதீஷ் தூங்கி வழியுறான். அவனை எல்லாம் ஒரு வார்த்த சொல்லறதில்ல. திட்டணும்னு தோனினாலே என்னை எந்திரிச்சு நிக்க வைக்கறது.’ என்று மனதினுள் கறுவிக் கொண்ட திவ்யா,
“நான் கிறுக்கிட்டு இல்ல சார், நோட்ஸ் எடுத்துட்டு இருந்தேன்.” என்றாள் நிதானமாக.
இம்முறையும் அவன் தோள் வரை அவள் விழிகள் சென்றதே அன்றி அவன் முகத்தை, அவன் கண்களைச் சந்திக்கவில்லை. உண்மையில் சொல்லப் போனால் அவன் கண்களைக் காண பயமாக இருந்தது அவளுக்கு. மற்ற நாட்களில் வேண்டுமென்றே அவனை விழி உயர்த்திப் பார்க்கமாட்டாள். ஆனால் இன்று அவள் முயன்ற போதும் அவளால் அவன் கண்களைச் சந்திக்க இயலவில்லை.
அவன் முகம் பார்த்தாலே அவள் தலை தன்னிச்சையாக கவிழ்ந்து கொண்டது. பரணிக்கு, திவ்யா தன்னைப் பார்க்கவில்லை என்ற கோபமே பிரதானமாக எழுந்தது.
“என்ன திமிராவே பதில் சொல்லற? ம்ம்ம், என் க்ளாஸ்ல இருக்க பிடிக்கலைன்னா வெளிய போயிடு.” என்றான் ஆத்திரமாக.
பரணியின் இந்த செய்கை அந்த மாணவர்களுக்குப் புதிது. மாணவர்கள் என்ன தவறு செய்தாலும் சற்றே நக்கலாக கண்டிப்பான் தான். வெகு சில நேரம் மட்டும், அதுவும் கூட ஆண் பிள்ளைகளிடம் மட்டும் தன் கோவத்தைக் காட்டுவான்.
‘டேய் தம்பிகளா கவனிங்கடா…’ என்று சற்றே எரிச்சலுடன் சொல்லுவானே அன்றி, ஒரு பெண் பிள்ளையையும் மனம் வருந்தச் செய்ய மாட்டான்.
இதைப் பற்றி ஆண்பிள்ளைகள் அவ்வப்போது செல்லமாக சண்டையிட்டால் கூட, ‘டேய், பொண்ணுக ரொம்ப சென்சிடிவ்டா. எல்லா விஷயத்தையும் பர்ஸ்னலா எடுத்துக்குவாங்க. படிக்கலைன்னு திட்டினா கூட, சாருக்கு என்னைப் பிடிக்கலை அதனால திட்றாருன்னு நினைப்பாங்க. இப்போ உங்களை டேய், வாடா, போடா, கவனிடான்னு உரிமையா சொல்ற மாதிரி, அடியேய், இங்க வாடி, கவனிடின்னு சொல்ல முடியாது. சோ, உங்களைத் தான் திட்டமுடியும். அவங்களை எதுவும் சொல்ல முடியாது, சொல்லவும் கூடாதுடா.’ என்று எடுத்துச் சொல்லி தன்மையாகப் பேசும் பரணி,
இன்று ஒரு பெண்ணை, அதுவும் நன்றாகப் படிக்கும் மாணவி திவ்யாவை, தன் வகுப்பை கவனிக்கவில்லை என்று திட்டுகிறானே என்று எல்லாருக்குமே ஆச்சரியம்.
‘சாருக்கு என்னமோ ஆகிடுச்சு இன்னைக்கு.’ என்று மனதினுள் நினைத்த மற்ற மாணவர்கள் வெகுவாக அமைதி காத்தனர். திவ்யாவிற்கு பரணியின் கோவத்திற்கான உண்மையான காரணம் தெள்ளத் தெளிவாகப் புலப்பட்டது.
‘ஓ, சாருக்கு நான் அவர் முகம் பார்த்து பதில் சொல்லலைன்னு இவ்வளோ கோவம் வருதோ? உன் மூஞ்சி பார்க்கற மாதிரி இருந்தா பார்க்க மாட்டேனா மூஞ்சூறு மண்டையா? நல்லா டென்ஷன் ஆகு. நீ என்ன பண்ணாலும் உன் முகத்தை, உன் கண்ணை நான் பார்த்து பதில் சொல்லவே மாட்டேன்.’ என்று தீர்மானம் எடுத்துக் கொண்டவள்,
‘உன் கண்ணு என்னை என்னவோ பண்ணுது, அதான் பார்க்கமாட்டேன்.’ என்று மனசாட்சி சொன்ன உண்மையைத் தூக்கி உலையில் போட்டாள்.
வழக்கம் போல அமைதியாக அவன் தோள் பட்டையில் கண்களைப் பதித்து நின்றாள் திவ்யபாரதி.
திவ்யா வேறு ஏதேனும் பதில் சொல்வாள் என்றும், கடைசியில் அவனைப் பார்த்து சிரிக்காவிடினும், முகத்தையாவது பார்க்கமாட்டாளா என்று ஏங்கியது அவன் உள்ளம். ஒப்புக்காக வேணும், ‘சாரி சார்’ என்றாவது கூறுவாள் என்றும் பெரிதும் எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தான் பரணி. அந்த ஏமாற்றம் அவன் கோபத்தை பன்மடங்கு தூண்டியிருந்தது.
“என் க்ளாஸ் கவனிக்க இஷ்டம் இல்லைன்னா, இப்போவே வெளிய போயிடு. கெட் அவுட் ஆஃப் மை க்ளாஸ்.” என்று கையில் பிடித்திருந்த சாக்பீஸை ஆத்திரமாக தரையில் தூக்கி வீசினான்.
இம்முறையும் திவ்யா, அவள் கண்களை அவன் முகத்தில் பாவாமல் பத்திரமாக அவன் தோளிலேயே நிலை நிறுத்தியவள், “நான் கவனிச்சுட்டு தான் சார் இருக்கேன்.” என்று மட்டும் பதிலளித்தாள். மறந்தும் கூட அவள் வாயிலிருந்து, ‘சாரி சார்’ என்ற வார்த்தை வரவில்லை.
இம்முறை அவள் பேச்சும் அவன் கோவமும், மற்ற மாணவர்களுக்கும் கொஞ்சம் புரியத் துவங்கியது. வீம்புக்காக பரணி திவ்யாவை திட்டிக் கொண்டிருக்கிறான் என்றும், அவள் எப்பொழுதும் வகுப்பை கவனிக்காமல் இருக்கமாட்டாள் என்றும் தெரிந்திருந்த காரணத்தினால், மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அமைதி காத்தனர்.
திவ்யாவின் வலது பக்கம் அமர்ந்திருந்த நர்மதா, சற்றே தலையைத் தாழ்த்திக் கொண்டு, “ஏ, சாரி சொல்லுடி. அவர் அதைத் தான் எதிர்பார்க்கிறார்.” என்று திவ்யாவிற்கு கேட்கும் வண்ணம் முணுமுணுத்தாள்.
நர்மதாவின் பேச்சு திவ்யாவிற்கு கேட்கத்தான் செய்தது. பரணியின் உள்மனதின் கூத்தும் அவளுக்குப் புரிந்தது. ‘இப்போ என்ன, நான் உன்னைப் பார்க்கணும் அவ்வளோ தானே? என்னால என்னை கண்ட்ரோல் பண்ணிட்டு உன்னைப் பார்க்க முடியும். ஆனால் உன்னால என் பார்வையைத் தாங்க முடியுமானு பார்க்கிறேன்.’ என்று மனதினுள் சூளுரைத்த திவ்யா, தன் விழிகளை உயர்த்தி பரணியை வைத்த கண் வாங்காமல் ஏறிட்டாள்.
‘ம்ம்ம், நான் பார்க்கிறேன்ல? தைரியமிருந்தா இத்தனை ஸ்டூடெண்ட்ஸ் முன்னாடி என் கண்ணைப் பாரேன்…’ என்று சவால் விடுவது போலிருந்தது அவள் பார்வை. அவள் விழிகளின் தாக்குதலால் பரணி சில நிமிடம் செயலிழந்து தான் போனான்.
‘என்னடி இப்படி பார்க்குற? ஏய், கண்ணை அந்த பக்கம் திருப்புடி. கண்ணுல என்ன கரெண்ட் கம்பம் வச்சிருக்கியா? பார்த்த உடனே கனெக்ட் ஆகுது.’ என்று அவனுள் சட்டென உண்டான படபடப்பு, அவன் நெற்றியில் வியர்வைத் துளிகளைப் பூக்கச் செய்தன. அதைவிடவும், அவன் விழிகள் அவன் சொல் பேச்சு கேளாமல் அவள் முகம், தலைமுடி, காது ஜிமிக்கி, கை வளையல், கழுத்தில் அணிந்திருந்த மெல்லிய சங்கிலி என ஒவ்வொன்றாகத் தேடிக் கொண்டே தொலைந்து போகத் துவங்கியிருந்தது. இத்தனை மாணவர்கள் மத்தியில் அசிங்கமாக போய்விடக் கூடாதே என்ற கவலை அவனைப் பிடித்துக் கொள்ள, அவள் விழி வீசும் வாள்களில் இருந்து தன்னைக் காத்துக்கொள்ள எண்ணினான்.
“என்ன? ம்ம்ம்? ரொம்ப ப்ரில்லியண்ட்டுன்னு நினைப்பா உனக்கு? உன் அறிவாளித்தனத்தை எல்லாம் வேற யார்கிட்டயாவது காட்டு. ஐ செட் கெட் அவுட் ஆஃப் மை க்ளாஸ்.” என்று சத்தமாக பற்களை நறநறத்தபடி கத்தினான் பரணி.
தான் ஏன் அப்படி நடந்து கொள்கிறோம் என்று அவனுக்குமே தெரியவில்லை. அந்த நிமிடம், தன்னை மூச்சு முட்டச் செய்து மூழ்கடிக்கும் அவள் கண்களின் சுழற்சியில் இருந்து தப்பித்துக் கொள்ள, அவளை வெளியே அனுப்புவது ஒன்றே மார்க்கமாக தோன்றியது.
“ஏ, சாரி சொல்லுடி எரும!” என்று இம்முறை நர்மதா பலமாகவே கூறினாள். முன் இருக்கை மாணவிகள் சிலர் திரும்பி திவ்யாவின் முகத்தையும் பரணியின் முகத்தையும், இறகு பந்து விளையாட்டு போலப் பார்வையிடத் துவங்க, திவ்யா பதில் பேசாமல் தன் இருக்கையில் இருந்து வெளியே வந்தாள்.
அவனைக் கடக்கும் சமயம் கூட நிமிர்ந்து பரணியின் முகத்தைப் பார்க்கவில்லை, மன்னிப்பும் கோரவில்லை. வகுப்பை விட்டு வெளியே சென்றுவிட்டாள்.
அவள் சென்று சில நிமிடங்கள் ஆகிவிட்ட பின்னர் மற்ற மாணவர்களிடம் சின்ன சலசலப்பு. திவ்யா மன்னிப்பு கோரிவிடுவாள் என்றே எதிர்பார்த்திருந்த பலரும், அவள் எதுவும் சொல்லாமல் வெளியேற கொஞ்சம் சப்பென்று உணர்ந்தனர். கடைசியில் திவ்யா, பரணியின் பேச்சிற்கு இரண்டு சொட்டு கண்ணீராவது சிந்தியிருந்தால் அவர்களது மனம் குளிர்ந்திருக்கும். அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ட்ராமா கிடைத்திருக்கும்.
ஏன், பரணியுமே பாவம் என்று நினைத்திருப்பான். அவள் அவன் முகம் பார்க்காமல் நின்ற திமிர் அவனை ரொம்பவும் குடைந்தது என்றால், அவள் அவனைப் பார்த்தபோது தோன்றிய பதட்டமும் பரிதவிப்பும் இன்னமும் அதிகம். எத்தனை தரம் அவள் முகத்தை மாறி மாறி நோட்டம் விட்டுவிட்டான். ஆனால் அப்போது தோன்றாத எண்ணங்கள், அவள் கண்கள் அவனுடன் கலந்த அந்த நொடி மின்சார தாக்குதலாய் அவன் மனதில் இறங்கியது.
‘இதெல்லாம் எனக்கு மட்டும் தான் தோன்றுகிறதா? இல்லை, அவளுக்குமா? அதனால் தான் என்னைப் பார்க்காமல் இருந்து உன் மனதை மறைக்க நினைக்கிறாயா? உன் விழிகள் என்னுடன் பேசுவது உன் அறிவுக்கு புரிந்து அதற்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டாயா?’ என்று சிறுபிள்ளைத் தனமான கோபம் எழுந்தது திவ்யாவின் மேல்.
அவள் வெளியேவேணும் நிற்பாள் என்று பெரிதும் எதிர்பார்த்து ஏக்கம் கொண்ட பரணி, ஜன்னல் வழியாக வெளியே பார்க்க, அங்கே திவ்யாவைக் காணாது தவித்தான்.
‘தப்பு பண்ணிட்டோமே! எதுக்கு அவளை வெளியே போக சொன்னேன்? பசங்க முன்னாடி எவ்வளோ அவமானமா இருந்திருக்கும் அவளுக்கு?’ என்று மனம் கிடந்து அடித்துக் கொண்டது.
error: Content is protected !!