Skip to content
Post Views: 2,759
பூவிடைப் பனித்துளிகள்
அத்தியாயம் 10
பெங்களூர் ஐ.வி செல்லும் வாரம் மிகவும் கோலாகலத்துடன் இருந்தது. மாணவர்கள் வகுப்புகள் நடக்கவே அனுமதிக்கவில்லை. அப்படி இப்படி என்று ஒருவழியாக சேலத்தில் இருந்து முதல் தின இரவு கல்லூரியில் இருந்து சொகுசுப் பேருந்தில் பயணமானார்கள்.
Advertisement
ஆட்டம் பாட்டம் என அனைவரும் ஆர்ப்பரித்த வண்ணம் பயணப்பட, பரணி வாகாக திவ்யாவும் அவள் தோழிகளும் அமர்ந்திருந்த இருக்கைக்கு பக்காவாட்டு இருக்கையைத் தனதாக்கியிருந்தான். அவ்வப்போது அவளைப் பார்ப்பதும், மையமாகச் சிரிப்பதும் என்று இனிமையான பயணத்தை எதிர் நோக்கியிருந்தவனுக்கு திவ்யாவின் முகத்தில் தெரிந்த விலகல் தன்மை கொஞ்சம் போல வாட்டியது.
எப்போதும் சிரித்த முகமும், இயல்பான புன்னகையுமாக பட்டாம்பூச்சியாய் வலம் வருபவள் முகத்தில் கொஞ்சம் சோபை இருக்கவில்லை. முகம் சற்றே வெளிறிப் போய், கண்களில் ஒளி இழந்து காணப்பட்டது.
உண்மையிலேயே திவ்யா தன் வீட்டை நினைத்து வருந்திக் கொண்டுதானிருந்தாள். எல்லாரும் மகிழ்வுடன் கழிக்கும் இந்த பயணத்தில் தனக்கு மட்டும் இத்தனை மன உளைச்சலும், ஆற்றாமையும் தேவை தானா என்று விம்மியது அவள் இதயம்.
Advertisement
“பாப்பா, அக்கா மாசமா இருக்காடா. ஜாக்கிரதையா இருக்க சொல்லி டாக்டர் சொல்லியிருக்காங்க” என்று மூன்று மாதம் முன்பு விடுமுறைக்குச் சென்றபோது மிகவும் மகிழ்ச்சியுடன் செய்தியை பகிர்ந்து கொண்டார் திவ்யபாரதியின் அன்னை மஞ்சுளா.
Advertisement
தந்தையுடன் சென்று அவரது பெரிய பாப்பாவான, அக்கா செளமியாவின் வீட்டிற்குச் சென்று உறவாடி விட்டு வந்தாள். “அம்மா அக்கா கொஞ்சம் இளைச்சாப்ல இருக்காம்மா. முகம் டல்லா இருக்கும்மா” என்று அக்காவைப் பார்த்துவிட்டு வந்த தினம் தன் அன்னையிடம் புலம்பவும் செய்தாள் திவ்யா.
“இப்போ ரெண்டு மாசம் தானே ஆகுது. அதனால நிக்காம வாந்தி இருக்கும். கொஞ்ச நாள் போனா சரியாகிடும் திவி” என்று அன்னை சமாதானம் செய்திருந்தார்.
ஆனால் அப்படி நல்லவிதமாக அக்கா பிள்ளையைச் சுமக்கவில்லை. மூன்றாம் மாதமேயான கரு தானாக கலைந்து விட்டிருந்தது. வீட்டினர் முகத்தில் கிஞ்சித்தும் நிம்மதியில்லை.
Advertisement
“இருந்திருந்து, ரெண்டு வருஷம் கழிச்சு இப்போ தான் உண்டானா, அது இப்படியா போகணும்?” என்று அன்னை மஞ்சுளா ஆற்றாமையில் புலம்ப,
“அட, விடு கழுத! பெரிய பாப்பாளுக்கு இப்போ என்ன வயசா ஆகிடுச்சு? கல்யாணம் ஆகி ரெண்டு வருசம் தானே ஆகியிருக்கு. அதெல்லாம் ஆரோக்கியமா நல்லபடியா அடுத்து சாமி குடுப்பாரு” என்று அன்னையுடன் சேர்த்து, தன்னையுமே சமாதானம் செய்தார் தந்தை ரகுராமன்.
கருகலைப்பு நடந்து முடித்து அக்கா செளமியா, தாய்வீட்டில் சீராட வந்திருக்க, திவ்யாவும் அக்காவைப் பார்க்கவென வீட்டிற்கு வந்திருந்தாள். அக்காவின் முகம் வெகுவாக வாட்டமடித்திருந்தது. பிள்ளையைத் தொலைத்த கவலை என்று வீட்டினர் எண்ணியிருக்க, அப்படியில்லை என அக்காவின் பேச்சுகள் காட்டிக் கொடுத்தன.
“ம்மா, அவங்க வீட்டில எனக்கு ட்ரீட்மெண்ட் பார்க்கணும்னு சொல்லறாங்கம்மா. ஐ.யு.ஐ, ஐ.வி.எஃப் மாதிரி பார்க்க நினைக்கறாங்க.” என்று தும்பைப் பூவாய் வெளிறிப் போன முகத்தில், வறண்ட உதடுகளை நாவினால் ஈரப்படுத்திக் கொண்டு செளமியா சொல்ல, வீடே அதிர்ந்து தான் போனது.
“எதுக்குடி ட்ரீர்மெண்ட் அது இதுன்னு. இப்போ தானே அபார்ஷன் பண்ணியிருக்கு. இந்த புள்ளைய தொலச்சு இன்னும் ரெண்டு மாசம் கூட முழுசா முடியலை, அதுக்குள்ள ஆஸ்பத்திரி போலாம்னு எப்படி சொல்லறாங்க. உன் உடம்பு என்னத்துக்கு ஆகறது?” என்று பரிதவிப்பில் அந்த தாயுள்ளம் பட்டாசாக வெடித்தது.
“மொதல்ல பாப்பா உடம்பு சரியாகட்டும். ரெண்டு மூணு மாசம் போவட்டும். அப்பறமா ஆஸ்பத்திரி பேச்சை எடுக்கலாம்.” என்று திவ்யாவின் வீட்டினர் அப்போதைக்கு அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டனர்.
ஆனால், மூன்று மாதம் முடியும் முன்னரே திரும்ப கண்ணீருடன் வீட்டிற்கு வந்து நின்றுவிட்டாள் செளமியா. “ம்மா, ஃபர்டிலிட்டி க்ளீனிக் போலாம்னு கம்பல் பண்ணறாங்கம்மா. எனக்கும் எப்படி தள்ளிப் போடறதுன்னே தெரியலை. நானும் ஆன வரைக்கும் ஒத்திப்போட முயற்சி பண்ணிட்டேன்.” என்று அழுதாள்.
“உன் மாமியார்காரி சொல்லறதை விடு. மாப்பிள்ளை என்ன முடிவு சொல்லறாரு.” என்று மஞ்சுளா கேட்க,
“அவரும் ஹாஸ்பிடல் போய் பார்க்கலாம்னு விருப்பப் படறாரும்மா. அவருக்கு முப்பது வயசு ஆகப் போகுன்னு பயமா இருக்கு. எனக்கும் இருபத்தி ஏழு ஆச்சுதுன்னு சொல்லி பயப்படுத்தறாரு. எதுக்கும் ஒரு தடவை போய் பார்த்துட்டு வரலாம்மா” என்று அழுகைனூடே சொல்லியிருந்தாள்.
செளமியா மருத்துவமனை போவது என்று தீர்மானமாக வந்திருப்பது போலத்தான் தோன்றியது. கிருஷ்ணகிரியில் அந்த பிரபலமான மகளீர் மருத்துவமனையில் செக்கப் செய்யப்போக, அவர்கள், “லேப்ராஸ்கோப்பி செய்யணும். அப்போ தான் தெளிவா சொல்ல முடியும்” என பரிந்துரைத்தனர்.
“சரி விடுங்க. லேப்ராஸ்கோப்பி தானே. அது சின்ன ஆபரேஷன் தான்” என்று தேற்றினார் ரகுராமன்.
கருத்தரிப்பு மருத்துவத்திற்கு காப்பீடு இல்லாமல் போக, பெரிய மகளுக்கு ஆகப்போகும் மருத்துவச் செலவுகள் முழுவதையும் தானே ஏற்றுக் கொண்டார் ரகுராமன்.
லேப்ராஸ்கோப்பி செய்த பின்னர் தான் அந்த மகளீர் மருத்துவமனையில் அடுத்தடுத்த குண்டுகளை தலையில் சர்வ சாதாரணமாகத் தூக்கி வீசினர்.
“கருக்குழாயில அடைப்பிருக்குங்க. ஐ.யு.ஐ முறை கூட இவங்களுக்கு பண்ண முடியாது. குழந்தை வேணும்னா நிச்சயமா ஐ.வி.எஃப் தான் செய்யணும்.” என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். அதன் பின்பு தான் உண்மையான பிரச்சனைகளே துவங்கின.
“இப்போ வரைக்கும் நாலு லட்சம் செலவாகியிருக்கும்மா. மொதல்ல முட்டை எடுக்க ஊசி, மருந்து மாத்தரை, அதுக்கு ஸ்கேன்னு ஒரு ஒன்னரை. மொத தடவை எடுத்த முட்டை நிறையா இல்லைன்னு, இன்னொரு தடவை அதே செலவு, இப்போ கருப்பைக்குள்ள முட்டைய வைக்க தனியா ஐம்பதுன்னு நாலு அஞ்சு லட்சம் சுலுவா செலவாகிடுச்சு” என்று ஒரு மதியம் தன் இளைய மகளிடம் புலம்பினார் ரகுராமன்.
“அப்படியும், குழந்தை உண்டாகியிருந்தா கூட, ஆனது ஆகட்டும் செலவு போகட்டும்னு நினைக்கலாம். அதுக்கும் வழியில்லாம, வயித்தில வச்ச கருவும் வளராமல போயிடுச்சு” என்று கவலையுடன் பேசினார் மஞ்சுளா.
கருவும் வளரவில்லை, கையிருப்பு பணம் கரைந்தும் போயிருந்தது. மீண்டும் இன்னொரு முறை ஐ.வி.எஃப் செய்ய அக்காவும், அவள் வீட்டினரும் ஆர்வம் காட்டுகின்றனர் தான். “எப்படியாச்சும் குழந்தை கிடைச்சுடணும்” என்ற கவலை செளமியாவுக்கு. “வாரிசு இல்லாம போயிடுமோ?” என்ற பயம், அக்கா வீட்டினருக்கு. திரும்பவும் நாலு லட்சம் செலவு ஆகுமே, அதற்கு என்ன செய்ய என்ற அதிர்ச்சி திவ்யாவின் பெற்றோருக்கு. இப்படி வீடே பணக்கவலையிலும் மனக்கஷ்டத்திலும் முழ்கியிருக்கும் போது தான் திவ்யாவின் கல்லுரியில் அந்த வருடம் பெங்களூர் செல்வதாக ஏற்பாடானது.
“நான் இந்த ஐ.வி போலப்பா. என்னால வேற எதுக்கு உங்களுக்கு வீணா ஐஞ்சாயிரம் செலவு” என்று தந்தையின் தோளில் சாய்ந்து கொண்டே கூறினாள்.
“இல்லைடா பாப்பா. இதெல்லாம் வாழ்க்கையில வர்ற சின்ன சின்ன சந்தோஷம். ஐஞ்சாயிரம்லாம் பெரிய காசு இல்ல பாப்பா. எவ்வளவோ செலவு செய்யறோம். இதில கூட்டி குறைச்சு எதுவும் இங்க நிறையப் போறதில்லைடா பாப்பா. நீ இதெல்லாம் போட்டு மனசுல குழப்பிக்காம நிம்மதியா போயிட்டு வா” என்றவரிடம்,
“எனக்கு எப்படியும் நல்ல சம்பளத்தில வேலை கிடைச்சிடும்பா. அக்கா செலவுக்காக வாங்கின கடனை சீக்கிரம் அடைச்சுடலாம். பேங்க்ல இருக்க அம்மாவோட நகையெல்லாம் மீட்டுடலாம்” என்றாள் தந்தைக்கு தெம்பூட்டும் விதமாக.
இதோ இப்போதும், இரண்டாம் முறை ஐ.வி.எஃபிற்காக, அறிந்தவர் தெரிந்தவர் என கடன்பட்டு, அக்காவின் மருத்துவ செலவிற்கு நான்கு லட்சம் வரை பணம் பிரட்டியுள்ளார் தந்தை ரகுராமன். திவ்யாவின் வீட்டுப் பொருளாதார நிலை இப்படியிருக்க, அவளுக்கு சுற்றுலா வருவது கூட பிடித்தம் இல்லை. “ஆமா, சும்மா போய் ஊர் சுத்தறதுக்கு எதுக்கு வீணா காசு செலவு பண்ணிட்டு” என்ற மனநிலை தான். ஆனாலும் தோழிகளின் வற்புறுத்தல் காரணமாகவே ஒப்புக் கொண்டாள்.
நான்காம் ஆண்டு துவங்கிவிட்டிடுந்தது. இது ஏழாம் செமஸ்டர். இன்னும் ஒரு செமஸ்டர் தான் மீதம். இன்னமும் தனக்கு வேலை கிடைக்கவில்லையே என்ற கவலை வேறு போகுமிடமெல்லாம் தலை மேல் கத்தி போல் ஒரு நெருடலைக் கொடுத்திருந்தது.
“வழக்கமா மூணாவது வருஷ முடிவுல இல்லைன்னா நாலாவது வருஷ தொடக்கத்தில காலேஜுக்கு ப்லேஸ்மென்ட் கம்பெனிஸ் வந்துடும். இந்த வருஷம் கொஞ்சம் டிலே ஆகுது. பட் ஃபைனல் செம்ல கண்டிப்பா கம்பெனீஸ் வந்துடும்.” என்று கல்லூரியில் பேராசிரியர்கள் நம்பிக்கையூட்டும் விதமாக சொல்லியிருக்க, அது சற்றே ஆறுதல் அளித்தது.
இருப்பினும், மிகவும் மகிழ்ச்சியாக, ஆர்ப்பாட்டமாக ஊர் சுற்றும் நிலைமை அவளுக்கு இருக்கவில்லை. அதனால் பெங்களூர் ஐ.வியில அவ்வப்போது மற்ற மாணவர்களுடன் சேர்ந்து அளவாக கும்மாளம் போட்டு பொழுதைக் கழித்தாள்.
அதிலும், இவர்களுடன் பரணியும் வருகிறான் என்ற செய்தி கேள்விப்பட்ட பொழுது திவ்யாவின் மனம் நெகிழ்ந்து போனது நிஜம்.
அவனின் நினைவுகள் தந்த சுகம் சில நிமிடங்கள் மட்டுமே உயிர்ப்புடன் இருந்தது. அதன் பின் மீண்டும் அவளது கவலைகள் சூழ்ந்து கொண்டன. சொகுசுப் பேருந்தில் இவள் அமர்ந்திருந்த இருக்கைக்கு பக்கவாட்டு இருக்கையில் அமர்ந்திருந்த பரணி, அவ்வப்போது சாதாரணமாகப் பார்ப்பதைப் போல இவளை நிறைய தடவை ஏறிட்டுவிட்டான்.
இரு இருக்கைகளுக்கும் இடைவெளியில் மாணவர்கள் நடனமாட துவங்கியிருக்க, அவர்களைப் பார்வையிடும் சாக்கில் மூழ்வதும் இவள் பக்கம் திரும்பி அமர்ந்தும் கொண்டான். “நீ ஆடலையா?” என்று இவள் கண்களைச் சந்தித்த வேளையில் உதட்டசைவால் வினவ, திவ்யா இல்லை என்று தலையசைத்தாள்.
‘ஏன் ஆடமாட்டேங்கறா? என்னாலையா? நான் பார்ப்பேன்னு கூச்சப்படறாளா? என்னால ஏன் உன் எஞ்சாயிமெண்ட்டை கம்மி பண்ணிக்கற திவி?’ என்றெல்லாம் சிரிப்புடன் தனக்குள் எண்ணிக் கொண்டான்.
நள்ளிரவு வரை நீடித்த ஆட்டமும் பாட்டமும் மெல்ல மெல்ல அடங்கி, அவரவர் இருக்கையில் சென்று அமரவும் தான் பரணியால் திரும்ப திவ்யாவை தடங்கல்கள் இல்லாமல் பார்க்க முடிந்தது.
‘அதுக்குள்ள தூங்கிட்டியா? எப்படி அவ ஃப்ரெண்டு தோளில தலை சாய்ச்சு படுத்திருக்கா. அந்த இடத்தில நான் இருந்தா எப்படி இருக்கும்? அவ தலையை என் தோளில சாய்ச்சுகிட்டு, அவளை என் தோளோட சேர்த்து அணைச்சுகிட்டு, நிம்மதியா நானும் தூங்கியிருப்பேன்.’ என்று ரம்மியமான கற்பனையில் அமிழ்ந்து உறங்கிப் போனான்.
பெங்களரில் சுற்றிய மூன்று தினங்களுமே இதே கனவுகளும் கற்பனைகளும் தான். கபன் பார்க் சென்ற பொழுது, ‘அவ கையை இலகுவா பிடிச்சுகிட்டு, கதை பேசிகிட்டே இந்த பார்க்கை சுத்தி வந்தா எப்படி இருக்கும்?’ என்று ஒவ்வொரு இடமாக சுற்றும் போதும், மனதளவில் அவள் கை கோர்த்துக் கொள்வான்.
‘இவ மேல எனக்கு இவ்வளோ காதலா? இவ சந்தோஷமா இருந்தாலே என் மனசில ஒரு நிம்மதி படருதே! இவ முகம் கொஞ்சம் சுணங்கினாலும் நான் ஏன் பதைபதைக்கணும். உடனே அவ பிரச்சனைய தீர்த்து வைக்கணும்னு மனசு பரபரங்குது’ என்றெல்லாம் எண்ணி காதல் நோயில் சிதையத் துவங்கினான் பரணி.
திவ்யாவிற்கு பரணியின் பார்வைகள் தெரிந்திருந்தன தான். ஆனால், அவன் கண் வழி கடந்திய மின்சாரத் தாக்குதல்களை அவளது பிரச்சனைகளும் மனக்குழப்பங்களும் உரிஞ்சிக் கொண்டிருந்தன. அதனால் அவனது முயற்சிகள் எதையும் சட்டை செய்யாமல், ஐ.வி முடிந்ததும் வரவிருந்த கேம்பஸ் இண்டர்வியூவை பற்றிய சிந்தையே அவள் மனதை நிரப்பியிருந்தது.
பெங்களூரில் ஊர் சுற்றி முடித்து, ஆகாது போகாது வஸ்துக்களை பைகளில் நிரப்பிக் கொண்ட மாணவர்கள், ஒரு வழியாக திரும்ப சேலம் செல்ல பேருந்தில் ஏறியிருந்தனர். பயணம் துவங்கிய சிறிது நேரத்திற்கெல்லாம், அசதியில் அனைவரும் சோர்ந்து அவரவர் இருக்கையில் அமர்ந்துவிட்டனர்.
பேருந்தின் நீல ஒளியின் தாக்கத்தில் கண்கள் சொருகியிருக்க, அவள் இருக்கையில் அமர்ந்திருந்த திவ்யாவை எழுப்பினான் சக்தி.
“திவ்யா, திவ்யா” என்று அவள் பெயர் சொல்லி அழைக்கவும், தூக்கம் கலையப் பெற்ற திவ்யா, “என்ன சக்திவேல்?” என்று வினவினாள்.
“ஒரு செகண்ட் பின்னாடி சீட் வர்றியா?” என்று சற்றே தயக்கமாக வினவினான் சக்திவேல்.
“பின்னாடி சீட்டுக்கா? எதுக்கு?”
“அது, அதுவந்து… பரணி சார் உங்கிட்ட ஏதோ பேசணுமாம்!” என்று சக்திவேல் சொல்லவும், கண்களைக் குறுக்கிக் கொண்டு அவனைச் சந்தேகமாகப் பார்த்த திவ்யா, எழுந்து வர மாட்டாள் என்றே சக்தி முதலில் நினைத்தான்.
ஆனால் அவ்வாறு இல்லாமல், “ம்ம்” என்று திவ்யா எழவும், சற்றே படபடப்பான சக்தி, “கதவுக்கு பின்னாடி லாஸ்ட் சீட்” என்று சொல்லிவிட்டு முன்னால் செல்ல, திவ்யா அவனைப் பின் தொடர்ந்தாள். விழுந்துவிடாமல் இருக்க, கம்பிகளைப் பற்றிக் கொண்டு செல்ல, கடந்து சென்ற இருக்கைகளில் நிறைய பேர் ஆழ்ந்த உறக்கத்தில் தான் இருந்தனர் என்று கண்டு கொண்டாள்.
“ம்க்கும். பேசறதுக்கு நல்ல வாகான நேரம் தான்” என்று முணுமுணுத்து, சக்திவேல் நின்ற இருக்கையின் அருகே செல்ல, அங்கே பரணி அமர்ந்திருந்தான். இவளை கண்டதும் எழுந்து காலியாக இருந்த பக்கத்து இருக்கையைக் கை காட்டினான்.
சக்தி, முன்னால் தன் இருக்கையில் அமர்ந்து கொண்டான். விழித்திருந்த ஒன்றிரண்டு மாணவர்களும், தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு மீண்டும் அமைதியாயினர். இவர்கள் என்ன பேசுவார்களோ என்றெல்லாம் திவ்யாவிற்கு கவலை ஏற்படாதது தான் ஆச்சர்யமாக இருந்தது. அந்த கவலை பரணிக்கு நிறையவே இருந்தது.
‘எவனாவது எந்திரிச்சு ஏதாவது கேட்டு வைப்பானோ? நாளைக்கு காலேஜ்ல யார்கிட்ட போட்டுக்கொடுக்க போறானுகளோ?’ என்ற எண்ணமும், அத்தோடு, ‘எனக்கு பிரச்சனையில்ல, இந்த மாச கடைசில எப்படியும் வெளிய போயிடுவேன். எவன் என்ன சொன்னா என்ன? என்ன நினைச்சா எனகென்ன? ஆனா, இவ எப்படி சமாளிப்பா? இப்போ சொல்லறதுக்கு பதிலா, அவள் காலேஜ் முடியவும் மெதுவா சொல்லிக்கலாமா?’ என்று பலவாரான யோசனைகள்.
“ஏதோ பேசணும்னு சொன்னீங்க?” என்று திவ்யா தான் முதலில் பேசினாள். நீல ஒளியில் அவள் வைத்திருந்த ஒற்றை ஸ்டோன் பொட்டு மின்னி மின்னி மறைய, என்ன கேட்டாள் என்பது மறந்து போய், அவள் புருவ மத்தியில் பரணியின் கவனம் குவிந்து போயிற்று.
“சார்…” என்று அவள் மீண்டுமாய் கேட்க, சற்றே திடுக்கிடலுடன் நிமிர்ந்தவன், “உன் பொட்டு… கலர்” என்று சம்பந்தமில்லாமல் உளறினான். அவன் தடுமாற்றம் காணவும் திவ்யாவின் உதட்டில் சின்னதாக சிரிப்பு நெளிந்தது. “என்ன விஷயம் சார்?” என்றாள், குரலில் சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டு.
“அது வந்து, நான் சொல்ல வர்றது பத்தி உனக்கே புரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன்.” என்று எதையுமே சொல்லாமல், அவளுக்கே புரிந்திருக்கும் என்ற பாவனையில் பேசலானான்.
திவ்யாவிற்கு உள்ளூர சற்றே எரிச்சல் தான். ‘பிடிச்சிருக்கு, லவ் பண்றேன் என்பதைக் கூட அவன் வாய்மொழியாகச் சொல்ல மாட்டாமல், உனக்கே புரியும் என்று சொல்வது என்ன வகையான ப்ரபோசல்’ என்று தோன்றியது. ஆனாலும், அவன் தடுமாற்றமும், வெட்கம் கலந்த சிரிப்பும், விரல்களால் பின்னந்தலையைக் கோதிக் கொள்வதும், புருவத்தை நீவுவதுமாக அவன் படபடப்பைக் காட்டியதும் என எல்லாமே திவ்யாவிற்குத் தெளிவாகப் புரிந்தது.
அதைவிடவும், இதையெல்லாம் பார்க்கும்போது, அவள் மனதில் என்ன விதமான எண்ணங்கள் தோன்றுகின்றன என்பதையும் தெளிவாக ஆராய்ந்தாள். அப்போதைக்கு பரணியின் இந்த செய்கைகள் அவளுக்குள் ஒரு சிரிப்பைக் கொடுத்தாலும், பரணியின் கண்பார்வைகள் நிகழ்த்திய ரசாயன மாற்றங்களை அவள் மனம் உணர்ந்திருந்தாலும், காதலிக்கும் மனநிலையில், அந்த பொறுப்புகளையும் தோளில் சுமந்து கொண்டு வலம் வர அவள் தயாராயில்லை.
error: Content is protected !!