23.2 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
Post Views:1,813
ஷோபா குமரனின்
உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் – 23.2
.
சூரியன் விழிக்கும் வரை காத்திருக்கும் பொறுமை பறவைகளுக்கு இருப்பதில்லை. அதனால் தானே, ‘வாய்ப்புக்கு முந்திக்கொள்’ என்பதை “முதலில் விழித்தெழும் பறவைக்கு இரை கிட்டும்.” என்கின்றனர். இன்றும் அதைப் பொய்யாக்காது காகம் கரைய ஆரம்பித்தது.
Advertisement
மகளும் தகப்பனும் அருவியின் அருகில் நின்றிருக்க மார்பில் அமர்ந்திருந்த மகள், “ப்பா.. ப்பா” என மழலையில் அவன் முகம் தட்டி அழைத்தாள். அருவியின் ஈரச் சாரல் கௌதமனின் நெஞ்சை நனைத்தது. மகள் முகத்தில் அடித்தாள். இம்முறை வலித்தது. “என்ன மா?” எனக் கேட்க நினைத்தவனால் ஏனோ வாயைத் திறக்க முடியாது போனது. மகளைப் பார்க்க எத்தனிக்க இமை பாரமாக கனத்தது. ஈரக் குளிர் காற்றால் உடல் குளிர ஆரம்பித்தது. “ப்பா” என மகள் சிணுங்க ஆரம்பித்தாள். சட்டென கௌதமன் கண் திறந்தான். மகள் அவன் மார்பு மீது அமர்ந்திருந்தாள். அருவி இல்லை… மகள் அருவியால் தன்னை நனைத்திருந்தாள்.
Advertisement
“பா பேபி உச்சா உச்சா” என அவன் முகத்தில் அடிக்க, குளிரின் காரணம் புரிந்து எழுந்து அமர்ந்தான். மகளும் ஈரமாக இருந்தாள்.
“அந்த சங்கீதா நைட் குளிப்பாட்டி உனக்கு டையப்பர் போடலியா? என்னத்த பார்த்துக்கிறாளோ?” எனச் சலித்துக் கொண்டே மகளின் உடையை விலக்கி குளியலறைக்குள் தூக்கிச் சென்றான்.
கல்லூரி செல்லும் வேளை மகளைப் பார்த்துக் கொள்ளவென முழு நேரப் பணியாளாய் சங்கீதாவை நியமித்திருந்தனர். காலை நேரங்களில் டையப்பர் இல்லாது சுற்றும் குழந்தை சில சமயங்களில் இப்படி விடியலில் உடையை ஈரமாக்கிக் கொள்வாள்.
அப்பாவும் மகளுமாகக் கிளம்பி கீழே நடுக்கூடம் வந்த வேளை நன்கு விடிந்திருந்தது. அன்னையைப் பார்த்தவன், “காபி ஆச்சாமா? நைட் நல்லா தூங்கினிங்களா?” என அன்னையை விசாரித்துக் கொண்டே அமர்ந்தான். “தூக்கத்துக்கு ஒரு குறையும் இல்ல. காபியும் ஆச்சு கௌதமா. இரு உனக்கு எடுத்துட்டு வர சொல்றேன்” என வைஷாலி எழுந்தார். மகளுக்கும் தகப்பனுக்கும் அவரவருக்கான பானம் வந்து சேர்ந்தது.
காலை நேரப் பாலை அப்பாவின் மடியில் இருந்தே குடித்து முடித்தாள் யாழினியாள். அப்பா முன்தினச் செய்தித் தாளை வாசிக்க, அதில் இருக்கும் ஆங்கில எழுத்து ‘சி’ஐ தேடிப்பிடித்து அப்பாவிடம் காட்டிக் கொண்டிருந்தாள் யாழி. இது அவர்களது வழக்கம்.
தினமும் ஏதேனும் ஓர் எழுத்தை மகள் காட்ட வேண்டும். இவன் அதில் நிறம் தீட்டுவான். மகள் கைக்கொட்டி மகிழ்வாள். “வெரி குட் பேபி” என்பான். அதன் பலனாய் எச்சில் முத்தங்களைத் தகப்பனுக்குப் பரிசாகக் கொடுப்பாள். அதில் கௌதமன் குளிர்ந்து போவான். இன்றும் ஒரே பத்தியில் மகள் பல ‘சி’களை எளிதில் கண்டுபிடித்திருக்க, “யூ ஆர் தி பெஸ்ட், பேபி. அப்பா லவ்ஸ் யூ” என மகளை அள்ளி வாரி வயிற்றில் குறுகுறுப்பூட்டினான். தகப்பன் தலை முடியை கொத்தாக பிடித்து ‘கக்கபிக்க’ என யாழி சிரித்துக் கொண்டிருந்தாள். காலை நேரங்களில் குருவிகளின் கீச்கீச் மட்டுமா மனதில் இதம் பரப்பும்? கௌதமனின் காலை வேளையை மகள் இனிமையாக்கிக் கொண்டிருந்தாள்.
வைஷாலியின் கரத்தில் அன்றைய நாளிதழ் இருந்தாலும் பார்வை முழுவதும் மகன் மீதும் அவன் மடி மீது இருக்கும் சின்னவள் மீதும் படிந்திருந்தது. முன்போல் மகன் வீட்டில் இருக்கும் வேளைகளில் அன்னையைச் சுற்றி வருவதில்லை. “லவ் யூ மாம். யூ ஆர் தி பெஸ்ட்” என பனிக்கட்டியாய் தன்னை குளிர்விப்பதில்லை. யாழி அவன் நேரத்தை முழுவதுமாக விழுங்கி இருந்தாள். ‘லவ் யூ’கள் திசை மாறியிருந்தன.
எங்கு விளையாடிக் கொண்டிருந்தாலும் கௌதமன் வீட்டில் இருந்தால் பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை ஓடிச் சென்று அவன் கன்னத்தில் முத்தம் வைத்து, “அப்பா” எனக் கொஞ்சி செல்வாள். அவனும் அப்படித் தான், மகள் என வந்துவிட்டால் உலகம் இரண்டாம் பட்சமாகி விடுகிறது. இதை இப்படியே வளர விடுவதா இல்லை இப்பொழுதே கிள்ளிவிட வேண்டுமா என்பதே ஷாலினியின் இன்றைய குழப்பம். குழப்பத்தை யாரிடமும் கூற இயலாது என்பதால் இன்றுவரை அவர் பார்வையாளர் மட்டுமே.
வைஷாலியோடு கணவன் இருந்திருந்தால் வேதாளம் அவர் தலையில் வேதம் ஓதியிருக்காதோ என்னவோ. அவரின் திரை தொழில் முடங்கி இருக்க வாசுதேவனுக்கு ஒரு கையை இழந்த உணர்வு. திருமண மண்டபம், அங்காடி, ஸ்டுடியோ என மாத வருமானங்கள் வசதி வாய்ப்பைக் கொடுத்தாலும், அவர் உழைப்பு முடங்கிப் போனது… போனது தானே. அந்த வருத்தம் தீர, ஒன்று முடங்கிய படம் வெளிவர வேண்டும், அல்லது அடுத்த படம் எடுக்க வேண்டும். இன்றைய நிலையில் இரண்டுமே முடியாது. சின்ன பட்ஜெட்டில் படம் தயாரிக்கலாம் என்றால்… மனைவிக்கு அதில் உடன்பாடு இல்லை. அதனால், பைத்தியம் பிடிக்காது இருக்க, இருக்கும் வருமானத்தைப் பெருக்கும் முயற்சியில் தன் நேரத்தைச் செலவிடுகிறார் மனிதன்.
இவை அனைத்தும் வைஷாலிக்கு தெரிகிறது. ஆனால், கணவன் மகன் எனத் தன்னையே சுற்றி வந்த உலகம் அவர் கையை விட்டு நழுவியிருக்க, அதை வைஷாலியால் சுத்தமாகக் கையாள முடியவில்லை.
“எல்லாம் இந்தக் குட்டி பிசாசு உண்டான நேரமும்… பொறந்த நேரமும் சரி இல்ல. அதுதான் நீ இப்படி ஆகிட்ட” என்ற அண்ணனின் கூற்றை அன்று வைஷாலி மறுத்திருந்தாலும், அந்த வார்த்தைகள் வைஷாலிக்குள் மெல்ல மெல்ல இறங்கி ஆழமாக வேர் பிடித்திருந்தது இந்த இரண்டு வருடங்களில். மகனின் முந்தைய மன நிலையும் உடல் நிலையும் வசதியாக வைஷாலிக்கு மறந்து போனது.
முன் போல் மகன் வெளியில் தங்குவதில்லை. நேரத்திற்கு வந்து விடுகிறான். எங்குச் சென்றாலும், உடலைக் கெடுக்கும் வஸ்துக்களின் அருகில் செல்வதில்லை. பொறுப்பாகப் படிக்கிறான். கல்லூரியிலும் புகார் என ஒருவரும் அழைப்பதில்லை. பெண்கள் விஷயத்தில் கவலையே கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதில்லை. இவை மட்டும் ஏன் ஒரு தாயாகத் தனக்குப் போதவில்லை என வைஷாலியால் தன்னை நினைத்தே வருத்தம் தோன்றுகிறது. இதற்கு முடிவு தான் என்ன?
“ஹாய் கௌதம், ஹாய் ஆண்ட்டி” என்ற தாக்ஷாயினியின் குரலுக்கு மொத்தக் குடும்பமும் திரும்பியது. “தாச்சா” என யாழி துள்ளிக் குதித்து ஓட, ஆசையாகக் குட்டி மகளைத் தூக்கி, “என் செல்லக் குட்டி குளிச்சு குட் கேளா ரெடியாகிட்டீங்களா?” எனக் கேட்டுக் கொண்டே கன்னத்தில் முத்தம் வைத்தாள்.
“அப்பால அப்பா? உச்சா போயி குள்சி… குட்டா பேபி பால் குல்சி.” என மழலையில் யாழி கதைத்தது புரியவில்லை என்றாலும், “அப்படியா யாழி?” எனக் கதை கேட்டாள் பெரியவள்.
“வா மா தாக்ஷா” என வைஷாலியும், “வா தாக்ஷா” என கௌதமனும் ஒன்று சேர வரவேற்க, புன்னகையோடே உள்ளே நுழைந்தாள் தாக்ஷாயினி. இப்பொழுதெல்லாம் இவள் மகிழுந்து வந்தால், ஒருவரிடமும் கேட்காதே கேட்டை திறந்திடுவார் காவலாளி. ‘கௌதமன் ஐயாவ கட்டிக்கப் போற பொண்ணு’ என அரசல் புரசலாகப் பேச்சுக்கள் அடிப்பட ஆரம்பித்தாலும், அது உண்மை தான் என்பது போல், “இவங்க எப்போ வந்தாலும் கேட்ட திறந்திடு” என வைஷாலியே கூறிய பின் மகிழுந்திற்கான பெரிய வாயிலைத் திறக்காது இருப்பாரா காவலாளி?
“பேசிட்டு இருங்க ஒரு நிமிஷம்” எனத் தன் அறையை நோக்கி கௌதமன் செல்லவும் பெண்கள் இருவரும் தனித்து விடப்பட்டனர்.
“என்ன தாக்ஷா மா, காலையில இந்த பக்கம்?” என வைஷாலி பேச்சை ஆரம்பிக்க, அவரோடு அமர்ந்து கொண்டாள் தாக்ஷா.
தாக்ஷா, “களஞ்சியம் காலேஜ் கேன்டீன் கான்ட்ராக்ட்ட இந்த வருஷம் நாங்க எடுத்திருக்கோம் ஆன்ட்டி. இன்னைக்கு அது விஷயமா பேப்பர்ஸ் சைன் பண்ண அங்க போறேன். கோவில் போயிட்டு போகலாம்ன்னு பிளான். அதுதான் கௌதமோட கோவில் போயிட்டு, அப்படியே காலேஜ்ல டிராப் பண்ணலாம்ன்னு வந்தேன்”
வைஷாலி, “வாழ்த்துகள் தாக்ஷா.” என்றவர், “இது அவனுக்குத் தெரியுமா?” எனச் சிரிக்க, “இனி தான் கேக்கணும்” என்றாள்.தான் கேட்டு கௌதமன் இல்லை எனக் கூற மாட்டான் என எண்ணினாள் பெண்.
கௌதமன், “காபி கொண்டு வரச் சொல்லவா?” எனக் கேட்டுக் கொண்டே வந்தான்.
“இல்ல கௌதம்” என மறுத்தாள் தாக்ஷாயினி.
“மா… பேபிக்கு பசிக்கும், சாப்பிடுவோமா?” எனக் கௌதமன் கேட்கவும் நேரம் பார்த்தவர், “நேரம் ஆகிடுச்சா? எடுத்து வைக்க சொல்றேன்” என எழுந்து சென்றுவிட, “வா சாப்பிடலாம்” என தாக்ஷாவின் அருகில் வந்தான்.
“வேண்டாம் கௌதம்.”
“பேபி, பாட்டிக்கு ஹெல்ப் பண்ணுங்க” என மகளை அனுப்பியவன், “மேடத்துக்கு பசிக்கலியா?” என தாக்ஷாவை இன்னும் நெருங்கினான்.
“அம்மாவும் பொண்ணும் போனதும் தைரியத்த பாரேன்” என அவள் சிரிக்க, “ஹ ஹ ஹா” என வாய் விட்டே சிரித்தான் கௌதமன்.
“அம்மா ஒண்ணும் கேக்க மாட்டாங்க. என் பொண்ணு நம்ம மானத்த வாங்கிடுவா. சரி… சாப்பிடுற நேரம் வரதா பிளான் இருந்தா சாப்பிடாம வரணும்ன்னு தெரியாதா? நீ சாப்பிட்டிருந்தாலும் பரவால, என் கூட உக்காந்து கொஞ்சமா சாப்பிடு” என தாக்ஷாவின் கரம் பற்றி உணவு மேசையை நோக்கி அழைத்துச் சென்றான்.
“ப்பா… நானுக்கு சூக்கு” என ஓடிவந்த யாழி, தன் இரு கரங்களையும் தகப்பனை நோக்கித் தூக்கினாள்.
“என் மாமியார் தேவல” என தாக்ஷாவின் புலம்பல் கௌதமன் காதில் விழ, “அத கல்யாணத்துக்கு அப்பறம் சொல்லு” எனச் சிரித்தான்.
“க்கும்… உன் பொண்ண விட்டு கொடுப்பியாக்கும்” என அலுத்துக் கொண்டாலும், “எனக்கும் நீ மட்டும் தான் இம்பார்ட்டென்ட் கௌதம்” என அவனுக்கு நினைவு படுத்தினாள்.
“என்னைச் சுத்தி இருக்க என் குடும்பத்துக்கு தனிதனியா அன்பையும் இடத்தையும் கொடுக்குற அளவுக்கு என் மனசில இடம் இருக்கு தாக்ஷா. நீ எனக்கு ஸ்பெஷல்ன்னு கல்யாணம் ஆகட்டும், நீயே புரிஞ்சுப்ப” என்றவன் ஒற்றைக் கையில் மகளை ஏந்தியிருந்தவன் மறு கையில் தாக்ஷாவையும் பிடித்திருந்தான்.
பார்த்துக் கொண்டே வந்த வைஷாலிக்கு மனம் ஏதோ செய்தது. மகன் தனக்கு இல்லையோ என இலேசாக வலித்தது.
“உக்காரு” என தாக்ஷாவிற்கு நாற்காலியைக் காட்டியவனும் அமர்ந்தான்.
அனைத்தையும் பார்த்திருந்த வைஷாலியை பார்த்த கௌதமன், “மா பசிக்கலியா? வாங்க” என அழைத்தான்.
“உன் பொண்ணு இருக்கும் போது உனக்கு நான் எல்லாம் கண்ணுல படுறேனா?” என்றதைக் கௌதமன் கவனித்தானோ இல்லையோ, தாக்ஷா நன்றாகவே கவனித்தாள்.
தாக்ஷா கேட்க நினைத்ததை, “கேட்டியா மா… என்ன சொல்றான் என் பையன்?” என வைஷாலி ஆரம்பித்து வைத்தார்.
“என்ன?” என்றவனின் பார்வை இருவரையும் தழுவி மேசையின் மேல் அமர்ந்திருந்த மகளிடம் நிலைத்தது.
“அன்னைக்கு சொன்னேனே, கேன்டீன் கான்ட்ராக்ட் பத்தி? இன்னைக்கு சைன் பண்ணனும். கோவில் போயிட்டு அப்படியே உன் காலேஜ் போலாம்ன்னு பிளான். சேந்து போலாம் என்னோட வாயேன்” எனக் கௌதமன் முகம் பார்க்க, அவனோ யோசனையோடே, “இன்னைக்கா?” என்றான்.
“ஏன் டா இன்னைக்கு என்ன?” என அன்னை வினவ, “இன்னைக்குத் தான மா பேபிய டே கேர்ல சேர்க்க போறேன்” என்றான்.
“இன்னொரு நாள் போனா ஆகாதா?”
“இல்ல தாக்ஷா ஆல்ரடி அப்பாயின்ட்மென்ட் வாங்கிட்டேன். அதுக்கு தான் சீக்கிரம் கிளம்பி இருக்கேன். முதல் நாள், சோ… ரெண்டு மணி நேரம் அங்க இருக்க மாதிரி வரச் சொல்லி இருக்காங்க. கூடவே வீட்டுக்குக் கூட்டி வந்து விட்டுட்டு லேட்டா தான் காலேஜ் போறதா பிளான். சாரி தாக்ஷா… முன்னமே சொல்லி இருந்தா நானும் வேற நாள் அப்பாயின்ட்மென்ட் போட்டிருப்பேன்.”
“ஓஹ்… இட்ஸ் ஓக்கே” என அவள் முடித்துக் கொண்டாலும், தான் இவனுக்கு முக்கியமே இல்லையோ? என மனம் சுணங்கியது.
“ஒன்ஸ் அகெயின், பெஸ்ட் விஷ்சஸ் தாக்ஷா…” என மனமார்ந்து வாழ்த்தியவனிடம் “தேங்க்ஸ்” என்றாள்.
“இவனும் இவன் பொண்ணும்” என்ற முணுமுணுப்பு ஒருவரின் வாயிலிருந்து மெல்லிய சத்தமாக வந்தது, மற்ற ஒருவரின் உள்ளுக்குள் சத்தமாக அலறியது.
அன்றைய உணவு மேசையில், “சாப்பி அப்பா” என அந்த குட்டி கை அப்பாவிற்கு ஊட்டுவதும், “தேங்கஸ் டா பேபி. நீங்களும் சாப்பிடுங்க. பிளே ஸ்கூல் போகலாம்… ஜாலியா புது ஃப்ரெஸ்சோட விளையாடலாம்” என மகளுக்கு அப்பா ஊட்டுவதும் பார்க்க உயிருள்ள ஓவியமாக நம் கண்களுக்குத் தெரிந்தாலும், மற்ற இருவருக்கும் எப்படியோ?