Skip to content
Post Views: 6,996
“டேய் என்னாச்சு” என்றான் ராஜா பாதி வழியில் நின்றிருந்த செந்திலை பார்த்து.
Advertisement
“நீ கொஞ்சம் வா” என்ற செந்தில் கனகத்தை பார்த்து “தங்கச்சி இருமா ஒரு அஞ்சு நிமிஷம் வந்துடுறோம்” என்று நண்பனைத் தனியே அழைத்துச் சென்றான்.
Advertisement
Advertisement
“என்னாடா… வீடு என்னாச்சு” என்றான் ராஜகுமாரன்.
Advertisement
“சொல்றேன் வாடா” என்றவன் கொஞ்சம் தள்ளிச் சென்று “ஏண்டா ராத்திரில சட்டுன்னு வீடு வேணும்னா என்ன பண்ண, ராத்திரில யாரும் குடுக்க மாட்டாங்கடா”.
“நம்ம மாரி சித்தப்பா கிட்ட கேட்டேன் அவருதான் அவர் மகனுக்கு ஒரு வீடு கட்டியிருந்தார் அந்தப் பய இந்த ஊர்லலாம் நான் இருக்க மாட்டேன்னு பொண்டாட்டியை கூட்டிட்டு திருச்சிக்கு போய்ட்டான், அந்த வீடு பூட்டித்தான் கிடக்கு கொடுக்குறேன் சொன்னாரு ஆனா அவரும் ராத்திரில வீட்டுக்குக் குடிவர கூடாது நாளைக்கு காலைல வந்து சாவி வாங்கிக்கோங்கன்னு சொல்றாரு” என்க.
பின் கழுத்தை அழுத்தமாகக் கோதிக்கொண்டே மனைவியைத் திரும்பிப் பார்த்தான், ஒரே நாளில் ஓய்ந்து போய் நின்றிருந்தாள் அவளுக்குத் தலை சாய்க்க ஒரு இடம் இப்பொழுது அவசியம் என்ன செய்ய என்று அவன் யோசித்து நிற்க.
“இங்கபாரு மாப்ள இப்போ யோசிக்க நேரமில்லை, வீட்டில அம்மாவும் சரோவும் உங்களுக்காகக் காத்திட்டு இருக்காங்க” என்றான் செந்தில்.
ராஜா மறுத்துப் பேசவர “அந்தப் பிள்ளையைப் பாருடா, மொதல்ல வந்து சாப்புடுங்க அப்பறம் பேசலாம், எனக்கு இப்படியொரு நெலம வந்தா நீ செய்யமாட்டியா வா மாப்ள யோசிக்காத நம்ம வீடுடா” என்றவன் “தங்கச்சி கனகம் நீங்கப் பின்னாடியே வாங்க நம்ம வீட்டுக்குத்தான்” என்றவன் நண்பனைக் கண்டிப்பான பார்வை பார்த்து முன் சென்றான்.
“வா” என்றான் ராஜா மீண்டும் வண்டியில் ஏறிக்கொண்டாள்.
செல்வத்தின் வீட்டின் முன் வண்டியை நிறுத்த வாயிலிலே நின்றிருந்தனர் செல்வத்தின் தாய் யசோதாவும் அவன் மனைவி சரோஜாவும் “வாங்கண்ணா” என்றவள் கனகத்தின் கையிலிருந்த பையை வாங்கிக்கொண்டு “வாங்க” என்று கனகத்தை கைப்பிடித்து உள்ளே அழைத்துச்சென்றாள்.
“வாய்யா ராஜா” என்ற யசோதா “நம்ம வீட்டுக்கு வாரத்துக்கு எதுக்கு உனக்கு இம்புட்டு யோசனை” என்றவர் “எப்புடி இருக்கத்தா” என்றார் கனகத்திடம்.
“நல்லா இருக்கேன்” என்றாள்.
“சரோ பிள்ளைக்கு என்ன வேணும்னு பாரு” என்றவர் “நீயும் போயா” என்றார் ராஜகுமாரனிடம்.
சரோஜா கனகத்திடம் “குளிக்கிறீங்களா அக்கா, கொஞ்சம் தெம்பா இருக்கும்’ என்க அவளுக்கும் அதுதான் தோன்றியது, ஒரே அறை தான் அந்த வீட்டில் அந்த ரூமில் அவர்களின் பையைக் கொண்டுவந்து வைத்தான் செந்தில்.
“துணி எடுத்துக்கோங்க” என்றாள் சரோஜா, கனகம் தேவையானதை எடுத்துக்கொள்ளப் பின்கட்டிற்கு அழைத்துச்சென்றாள், குழாய் வசதி ஒன்றும் இல்லை வெளியில் மட்டுமே பைப் இருந்தது.
பெரிய தொட்டியில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்தது அதிலிருந்து வாளியில் ஊற்றிக் குளியலறையில் வைத்தாள் சரோ “நானே செய்றேன்” என்றாள் கனகம்.
“அட இதுல என்ன இருக்கு நீங்கக் குளிங்க” என்ற சரோ அங்கேயே படியில் அமர்ந்துகொண்டாள், கனகம் அதிகம் நேரம் எடுக்கவில்லை வேகமாக வந்துவிட்டாள், அவளைத் தொடர்ந்து ராஜாவும் குளித்துவந்தான்.
அலுவலகம் விட்டு வந்தவன் ஒரு வாய் தண்ணீர் கூட இதுவரை குடிக்கவில்லையே அதை எதையுமே யோசிக்கும் நிலையில் கனகமும் இல்லை, அனைவரும் ஒன்றாக அமர இட்லியும் மீன் குழம்பும் வைத்துக் கொடுத்தார் யசோதா.
யாரும் எதுவும் பேசவில்லை அமைதியாக உண்டனர் கனகத்திற்கு காலையிலிருந்து சாப்பிடாமல் இருந்தது என்னவோ போலிருந்தது உண்ண முடியவில்லை.
“ராத்தரில தூக்கம் வராது மெல்லமா சாப்ட்ரு” என்று அவளைக் கட்டாயப்படுத்தி மூன்று இட்லி உண்ண வைத்தார் யசோதா, விவரங்கள் எல்லாம் அவர்களுக்கும் தெரியும் என்றாலும் அதைப் பற்றி ஒன்றுமே அவர்கள் கேட்டுக்கொள்ளவில்லை.
“மாப்பிள நீயும் தங்கச்சியும் ரூம்ல படுத்துக்கோங்க” என்றான் செந்தில்.
“டேய் சும்மா இரு” என்ற ராஜா “பாய் இருந்தா கொண்டா நாம அப்படியே வெளில திண்ணைல படுத்துக்கலாம்” என்று வெளியில் சென்றுவிட்டான், உள்ளே கனகமும் சரோஜாவும் படுத்துக்கொள்ள, வாயிற்பக்கம் யசோதா படுத்துக்கொண்டார்.
கனகம் உடனே உறங்கிவிட்டாள், அப்படியொரு சோர்வு அவளுக்கு உடலிலும் மனதிலும், உறக்கம் வருவேனா என்றது ராஜகுமாரனுக்கு என்னவென்னவோ யோசனைகள், சரியா… தவறா… அவர் அப்படி சொன்னதும் வந்தது தவறா… இல்லை வந்ததுதான் சரியா.
மனைவி வந்து குடும்பத்தைப் பிரித்துவிட்டாள் என்பார்களா? அன்னையிடமிருந்து காப்பாற்றி கொண்டுவந்து ஊர் வாயில் விழ வைத்துவிட்டேனா, அவளிடம் சம்மதம் கேட்டகவேயில்லயே அவளுக்கு இதில் சம்மதமா இல்லையா என்ன நினைக்கிறாள் ஒன்றுமே தெரியவில்லையே என்ன செய்கிறேன் நான் என்று யோசனைகள் ஓட எழுந்து அமர்ந்துவிட்டான்.
“என்னடா” என்று செந்திலும் எழுந்து அமர “ஒண்ணுமில்ல நீ படு கொஞ்சம் நடந்துட்டு வரேன்” என்றவன் அப்படியே மெல்ல நடக்கத்தொடங்கினான்.
செந்தில் அவனைப் பின்தொடரவில்லை என்றாலும் உறங்கவும் இல்லை அப்படியே சுவற்றில் சாய்ந்து அமர்ந்துகொண்டான், நடு இரவில் திரும்பிவந்தவன் பார்க்கச் செந்தில் சுவற்றில் சாய்ந்து அப்படியே உறங்கிக்கொண்டிருந்தான்.
நட்பு எத்தனை இடங்களில் இடர்களில் தோள் கொடுக்கிறது எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல்… செந்திலின் தோளில் தட்டினான் ராஜா சட்டென்று அவன் விழித்துப் பார்க்க “படுடா” என்றவன் இவனும் ஒரு ஓரமாகப் படுத்துக்கொண்டான்.
காலை ஏதோ சத்தம் கேட்டு மெல்ல விழிகள் திறந்தாள் கனகம், ராஜகுமாரன் உடை மாற்றிக்கொண்டிருந்தான், அவள் சட்டென்று எழுந்து அமர.
“இன்னைக்கு வேலைக்கு லீவ் சொல்லிட்டேன், நீ குளிச்சு ரெடியா இரு நாங்க கடைக்குப் போயிட்டு வரோம்” என்று சொல்லிச்சென்றான் அவள் ஒன்றும் புரியாமல் அமர்ந்திருந்தாள் சிலநொடிகள்.
சரோஜா வந்து “அக்கா டீச்சாப்பிடுறீங்களா” என்க.
அவளைத் திரும்பிப் பார்த்தவள் “கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன் தப்பா எடுத்துக்காதீங்க, நானே வந்து செய்றேனே” என்றாள் சங்கடத்தோடு.
“அச்சோ என்ன நீங்க இதுக்கெல்லாம் போய் இப்படி பேசிகிட்டு இப்போகூட தூங்கட்டும்ன்னு விட்டுருப்பேன், ஒன்பது பத்து நல்ல நேரமாம் அப்போ வீட்டில பால் காய்ச்சலாம் சொன்னாங்க மாமா”.
“அதான் மாமாவும் அண்ணாவும் மீன்சுருட்டி போயிருக்காங்க சாமான் வாங்க, நீங்க வாங்க அவங்க வரதுக்குள்ள நாம ரெடி ஆயிடலாம், நீங்கப் பல் தேய்ங்க நான் குடிக்க கொண்டுவரேன்” என்று சென்றாள்.
வீடு பால் காய்ச்ச தேவையான பொருட்கள் வாங்க செந்திலும் ராஜாவும் காலை ஆறுமணிக்கே மீன்சுருட்டி சென்றனர், தெரிந்தவர்மூலம் கொஞ்சம் அவசரம் என்று கூறி கடையை ஏழரைக்கு திறக்க வைத்தனர்.
மண்ணெண்ணெய் அடுப்பு ஒன்று, பால் காய்ச்ச பாத்திரம், சாமி படம், விளக்கு என்று சில பொருட்கள் அதோடு பால், பழம் பூ என்று சிலதும், மண்ணெண்ணெய் செந்திலின் வீட்டில் இருக்கிறது தற்போதைய தேவைக்கு அது போதும்.
காலை ஆறுமணிக்கே அழைத்துவிட்டார் பழனிச்சாமி மருமகனுக்கு என்னவாயிற்று என்று, இரவெல்லாம் உறக்கமில்லை இருவருக்கும்.
“எங்கன்னு சொல்லுங்க மாப்ள நாங்க வரோம்” என்றார் மனிதர் விலாசம் சொல்லிவிட்டான் அவன், கனகசபையும் அழைத்துக் கேட்டுக்கொண்டார், தயக்கம்தான் என்றாலும் செவ்வந்தியும் அழைத்துவிட்டாள் ஏழுமணிக்கு.
“கனகம் எப்படி இருக்கா” என்றாள் எடுத்ததும்.
“நல்லா இருக்கா அண்ணி, வீடு பால் காய்ச்சுறோம் நீங்களும் வாங்க” என்றான் அவளிடம்.
“நான் எப்படி” என்றாள் அவள் தயக்கமாக.
“உங்க மாமனார் வருவாரு அவரோட வாங்க” என்றான், என்ன செய்ய என்று தெரியவில்லை, கணவனுக்கு உணவைக் கட்டிவைத்தவள் அவன் சாப்பிட வரக் காத்திருந்தாள்.
வந்தவனிடம் மிகுந்த பயத்தோடு அவள் கேட்க “அதான் அப்பா போறாருல்ல நீ எதுக்கு? அம்மாவை எதிர்த்துக்கிட்டு ஒன்னும் செய்யத் தேவையில்லை, உன் தங்கச்சிக்கு மரியாதையே தெரியல” என்றான் முகத்தில் அடித்ததுபோல அமைதியாகிவிட்டாள் செவ்வந்தி.
தலைக்குக் குளித்துத் தளர பின்னலிட்டு பச்சை வண்ண புடவை உடுத்தி நின்றிருந்தாள் கனகம், யசோதா மல்லிப்பூவை அவளுக்கும் மருமகளுக்கும் வைத்துவிட்டார்.
“இங்க பாருத்தா இதெல்லாம் எல்லா வீட்டுலயும் நடக்குறதுதான் வீட்டுக்கு வீடு வாசற்படிதான், தோ என் மறுமவ நாலுநாள் அத்த அத்தம்பா மூணு நாள் சொத்த சொத்தம்பா” என்க.
“அத்த” என்று சிணுங்கினாள் சரோஜா.
“இதெல்லாம் மனசுல வெச்சுக்காத அதுபாட்டுக்கு ஓடிடும் ஒரு பேரணையோ பேத்தியையோ பெத்துக்குடு விலகி இருக்குற எல்லாரும் வந்து ஒட்டிருவாங்க, பிள்ளைங்கதானே பல இடத்திலேயும் உறவைப் பிடிச்சு வெக்குது, வாழவேண்டிய வயசு உங்க வாழ்க்கையை பாருங்க மத்ததெல்லாம் தன்னால நடக்கும்” என்றார் அவர்.
ஒன்பது மணிக்கு முன்பே வந்துவிட்டனர் செந்திலும் ராஜாவும், இங்குச் சமைக்க வேண்டாம் என்று கூறியிருந்தான் ராஜா, எப்படியும் மாமனார் மாமியார் அப்பா எல்லோரும் வருவார்கள் அனைவருக்கும் இவர்களை ஏன் கஷ்டப்படுத்த வேண்டும்.
“நம்ம அய்யர் கடைல ஒரு பத்து பேருக்குச் சாப்பாடு சொல்லிடலாம்” என்று காலைலே சொல்லியிருந்தான், அதன்படி மீன்சுருட்டி போகும்போதே ஹோட்டலில் நிறுத்தி ஒன்பதரைக்கு குடுத்தனுப்ப சொல்லிச் சொல்லிச்சென்றனர்.
வந்தவன் மனைவியைப் பார்த்தான் கொஞ்சம் முகம் தெளிந்திருந்தது அவளை நெருங்கியவன் “இப்போ பரவாயில்லையா” என்றான் அவளைப் பார்த்துக்கொண்டே.
“ஹ்ம்ம்” என்றாள்.
“அத்தையும் மாமாவும் வருவாங்க அப்பாவும் வருவாரு, அண்ணியையும் வரச் சொல்லியிருக்கேன் அவங்களால வர முடியுமா தெரியல, அவனோட குணம் இன்னைக்கு எப்படி இருக்கோ அப்படித்தான் முடிவெடுப்பான்” என்றான் அண்ணனை நினைத்து.
மனைவி கண்ணுக்கு நிறைவாக நின்றிருந்தாள், இப்படி ஆசை பட்டுக் கட்டிக்கிட்டவ கூட நிம்மதியா வாழ விட மாட்டறீங்களே என்று புலம்பிக்கொண்டான்.
நொடி நேரம் தயங்கியவன் அவளை அப்படியே இறுக்கமாக அணைத்துக்கொண்டான், கனகம் அதை நிச்சயம் எதிர்ப்பார்க்கவில்லை அவனை அதிர்ந்து பார்த்தாள்.
“சாரி” என்றவன் அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தம் வைத்து “எல்லாத்தயும் நான் பாத்துக்குறேன் இனிமே இப்படி அழாதடி என்னமோ பண்ணுது மனசை” என்றான்.
“என் மேல கோவம் இல்லையா” என்றாள் தளும்பும் விழிகளோடு.
“ஹும்ஹூம்… எதுக்கு கோவப்படணும் அப்போ ஏதோ… என்னனெம்மோ யோசனை பேசிட்டேன், இனி வாழப் போற இந்த வாழ்க்கையோட ஆதாரமே நீதான் உன்கிட்ட கோவிச்சிக்கிட்டு எங்க போக நான்” என்றான் குரல் என்னமோ கலங்கி வந்தது.
அவன் மார்பில் முகம் புதைத்து அவனை இறுக்கமாகக் கட்டிக்கொண்டாள் அவனின் சண்டைக்கோழி, நெஞ்சத்தை நனைத்தது அவளின் கண்ணீர் துளி நேற்று போல் அல்ல இன்று அவள் மனம் நிறைந்ததின் வெளிப்பாடு அது அவனும் தன்னுள் அவளைப் புதைத்துக்கொண்டான்.
காதல் என்ற சொல்லில் காதலே இல்லை என்பேன்
வாழும் வாழ்கை இதில் காதலாய் வாழ்வோம் என்பேன்
சொந்தங்கள் யாவும் ஆனாயே
சோகங்கள் ஆற்றி விட்டாயே
அடைக்காக்கும் தாய்குருவி
சிறகாகி நீ அணைக்க
முட்டை கூட்டின் ஓடு உடைத்து
முட்டிமோதும் குஞ்சை போல
தினமும் புதிதாய் நான்
பிறப்பேனே
வெளியே செந்திலின் குரல் கேட்க “புடவையைச் சரி பண்ணிக்கோ” என்று அறையை விட்டு வெளியேறினான், ஏனோ இத்தனை நேரம் உள்ளுக்குள் குடைந்துகொண்டிருந்த உணர்வொன்று அப்படியே காற்றோடு கரைந்து போனது, மனது லேசானது கனகாம்பரத்திற்கு.
இமை தட்டி விழிநீரை கட்டுப்படுத்தினாள் “அக்கா வாங்க போகலாம்” என்று சரோஜா வந்து அழைக்க அவளுடன் நடந்துவிட்டாள்.
“யாருக்குடா வீடு கேட்ட நம்ம ராக்காயி மகனுக்கா, என்ன ராசா உன் கல்யாண பந்தியிலே சாப்பிட்ட சாம்பார் வாசம் இன்னும் கைல இருந்து போகல அதுக்குள்ளே நீ கட்டினவள கூட்டிட்டு வந்து நிக்குற தனிக்குடித்தனத்துக்கு” என்றார் வீட்டின் வாயிலில் நின்றுகொண்டே மாரியப்பன்.
“கறி விருந்துகூட இன்னும் முடியலையேப்பா இந்த ஞாயித்து கிழமைதானே” என்றார் யசோதாவை பார்த்துக்கொண்டே.
என்ன சொல்ல என்று தெரியாமல் அனைவரும் தயங்கி நின்றனர், எதிர் பார்த்தான் ராஜகுமாரன் இந்தப் பேச்சுக்களை இதோடு முடியாது தொட்டு தொட்டு தொடர்கதையாக ஊருக்குள் பரவும், தன்னையும்விட மனைவி அதிகம் அரைப்படுவாள் ஊர் வாயில்.
ஆழ்ந்த மூச்சை விட்டுக்கொண்டவன் “கல்யாணம் முடியாம தனிக்குடித்தனம் போக முடியாதே சித்தப்பா அதான் கட்டிக்கிட்டதும் பொண்டாட்டிய கூட்டிட்டு வந்துட்டேன்” என்றான்.
“இந்தக் காலத்து பிள்ளைங்களுக்கு எல்லாத்துலயும் அவசரம் பெத்தவங்க அருமை புரியறதில்ல” என்றார் தன் மகனையும் மனதில் வைத்து.
“நல்ல நேரத்துல பால் காய்ச்சி வாழ ஆரம்பிக்கட்டும் நல்ல வார்த்தை சொல்லிச் சாவியை பிள்ளை கைல கொடுங்க மச்சினரே” என்றார் யசோதா.
நேற்றே சொல்லியிருந்தததால் காலையே வீட்டைக் கழுகி விட்டிருந்தனர், வெளியில் சாணம் தாளித்து கோலமிட்டு முடித்தாள் சரோஜா.
“உள்ள போமா” என்றார் யசோதா.
கனகம் கணவனைத் திரும்பிப் பார்த்தாள் அவனும் அருகில் வந்து நிற்க இருவருமாக உள் நுழைந்தனர், யசோதா வேகமாகச் சாமி படம் வைத்து அனைத்தையும் எடுத்துவைக்க சரோஜா அடுப்படியில் கனகத்திற்கு உதவினாள்.
அடுப்பிற்கு மஞ்சள் குங்குமம் வைத்துப் பால் பாத்திரத்திற்கும் பொட்டு வைத்துப் பாலை எடுக்கப் பழனிச்சாமியும் செல்லியம்மாவும் வந்துநின்றனர், வெளியே கணவன் பேச்சுக்குரல் கேட்டு எட்டிப்பார்த்தவள் தாய் தந்தையை பார்த்து “வாங்கம்மா வாங்கப்பா” என்க.
இருவருமே அவள் புறம் திரும்பவில்லை கனகத்திற்கு மனம் துவண்டது, பின்னிலே வந்த மாமனாரை பார்த்தவள் “வாங்கமாமா” என்க.
“ஹ்ம்ம் ஹ்ம்ம்” என்றார் அவரும் ஏதோ வேண்டா வெறுப்பாக, சட்டென்று விழியில் நீர் நிறைந்தது அவளுக்கு, அவளையேதான் பார்த்திருந்தான் ராஜா வீடு தேடி வந்தவர்களிடம் முகம் காண்பிக்க முடியாமல் அமைதியாக நின்றவன்.
“கனகம்” என்றான் அழுத்தமாக, அவள் நிமிர்ந்து அவனைப் பார்க்க “போ” என்றான், அழாதே என்றது அவன் விழிகள் அவளிடம், சேலை தலைப்பால் முகத்தைத் துடைத்துக்கொண்டவள் அடுப்படிக்குள் நுழைந்தாள்.
சிறிய வீடுதான் முன்னில் ஒரு வரவேற்பறை ஒருபக்கம் படுக்கையறை அடுப்படி, அதன் நேரே ஒரு சிறிய அறை அதற்க்கு கதவு இல்லாமல் இருந்தது பின்பக்கம் குளியலறை அவ்வளவே வீடு, போதுமே அவர்களுக்கு.
பால் காய்ச்சும்போது உள்ளுக்குள் பதட்டம் கனகத்திற்கு கணவனுடன் தனியே வாழ வந்துவிட்டாள் அனைத்தும் நன்றாக நடக்கவேண்டுமே பால் பொங்கிவழிவதில் கூடத் திசையைப் பொறுத்து நல்லது கெட்டது மாறுமே… கிழக்குப்பக்கம் பொங்கி வழிந்ததும் அப்படியொரு ஆசுவாசம் அவளிடம்.
செல்லியம்மா தள்ளியே நின்றார், யசோதா அழைத்தும் “பரவாயில்ல” என்று அவர் நிற்க, ராஜகுமாரனுக்கு அப்படியொரு கோபம் பின் எதற்க்காக வந்தார்கள் என்று.
“எல்லாம் நல்ல சகுனம்தான் மனசை போட்டுக் குழப்பிக்காத” என்றார் யசோதா, பாலை அனைவருக்கும் கொடுத்துமுடிக்க உணவு வந்திருந்தது வரிசையாக அமரவைத்து காலைஉணவை கணவனும் மனைவியும் பரிமாறினார்.
கேசரி இட்லி பொங்கல் சாம்பார் சட்னி வடை என்று இருந்தது, செந்திலும் சரோஜாவும் பரிமாறுகிறோம் என்க.
“எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்க நாங்கதான் செய்வோம்” என்றுவிட்டான் ராஜகுமாரன், அனைவரும் உண்டபிறகு இவர்களை அமரச் சொல்ல “இல்ல கொஞ்சம் நேரம் ஆகட்டும்” என்றுவிட்டான்.
அவனுக்கு அபோழுது சாப்பிட விருப்பமில்லை மனைவியுடன் தனியே இருக்க வேண்டும் அவனுக்கு, கனகசபை உணவு முடிந்த உடனே புறப்படத் தயாரானார்.
“கட்டில் பீரோ எல்லாம் இருக்கே கொண்டுவரவா” என்றார் மகனிடம்.
“ஏன் மொத்தமா அனுப்பிடலாம்னு நினைசீங்களா” என்றான் தந்தையிடம்.
“நீயாதானே வந்த” என்றார் அவர்.
“உங்க பொண்டாட்டிதானே போகசொன்னாங்க அப்பறமும் அங்கேயே இருக்க நான் என்ன மானம் கெட்டவனா, அப்புறம் என் பொண்டாட்டி முன்ன எனக்கு என்ன மரியாதை” என்றான் மகன்.
இதுவரை இப்படி எல்லாம் அவன் பேசியதில்லை மகனை அவர் ஆச்சரியமாகப் பார்க்க “வந்ததும் அவகிட்ட முகம் காமிக்கிறீங்க, உங்க மனைவியை அவ பேசிட்டான்னு உங்களுக்கு இவ்ளோ கோவம் வருது அதுக்கு காரணமும் அம்மாதானே”.
“அவ அப்பாவைத் தப்பா காமிக்குற மாதிரி ஒரு பேச்சு வந்தா அவ பேசக்கூடாதா, அங்க அம்மாவை ஏன் இப்படி செய்றன்னு கேட்டீங்களா இங்க வந்து அவ கிட்ட முகம் காமிக்கிறீங்க”.
“என்னப்பா இதெல்லாம் நான் இனிமே அங்க வரவே வேண்டாம்னு முடிவு பண்ணிடீங்கன்னா உங்க இஷ்டம் போல இருங்க இல்ல பிள்ளை வேணும்னா கனகாம்பரமும் சேர்ந்து தான் ராஜகுமாரன் அதை மறந்துடாதீங்க” என்றான் மகன் தீர்க்கமாக.
தந்தை ஒருவிதமாகத் தடுமாறினார் ஒன்றும் பேசாமல் வீட்டை நோக்கி நடந்துவிட்டார், மற்றவர்களிடமிருந்து தள்ளிவைத்தே பேசினார் இருவரும் ஆகையால் மகனும் தந்தையும் ஏதோ பேசிக்கொள்கிறார்கள் என்றுதான் அனைவருக்கும் சிந்தனை.
“சரி நாங்களும் கிளம்புறோம், பால் காய்ச்சி விளக்கு வெச்சிருக்கு உடனே வீட்டைப் பூட்ட வேண்டாம் ரெண்டு பேரும் சாப்பிட்டு கொஞ்சம் நேரம் இருந்திட்டு அங்க வந்திடுங்க, சமைக்க இங்க ஒண்ணுமில்லயே அங்கேயே சாப்பிட்டுக்கலாம் நாங்க போய் வேலையைப் பாக்குறோம்” என்றார் யசோதா.
“இல்லம்மா வாங்கிக்கலாம்” என்றான் ராஜா.
“வரீங்க அவ்ளோதான், நாளைல இருந்து உன் பொண்டாட்டி கையால சாப்பிட்டுக்கோ” என்றவர் மகனோடும் மருமகளோடும் கிளம்பிவிட்டார்.
“மாப்ள சாப்பிட வந்திடுங்க மத்ததை அப்போ பேசிக்கலாம், வந்துடு கனகம்” என்று செந்திலும் கிளம்பிவிட்டான்.
“நாங்களும் போயிட்டு வரோம் மாப்ள” என்ற மாமியார் மாமனாரை பார்த்தவன் “அதுக்குள்ள என்ன அவசரம் மாமா கொஞ்சம் உக்காருங்க பேசணும்” என்றான் தீவிரமாக.
error: Content is protected !!