Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

காதல் நதி 06

அன்று மதியம்போல ஷெட்டுக்கு வந்தான் மதன்.
“என்ன சங்கர், உன் ஆளைப் பார்க்கவே முடியலை?”
“தெரியலைடா.. ஊருக்குப் போறதா சொன்னா, வந்துட்டாளா என்னன்னு தெரியலை. உன்கிட்ட ஏதும் சொன்னாளா?”
“எனக்கென்ன தெரியும்.. நான்தான் அவளோட போன் நம்பர் கொடுத்தேனே, பேசிக் கேட்க வேண்டியதுதானே? போன் போடுறதுக்கே கூச்சப்படுற நீயெல்லாம் எப்படி அவகிட்ட காதலை சொல்லப்போறியோ தெரியலை”. அலுத்துக்கொண்டான் மதன்.
“இந்த வாரம் சொல்லப்போறேன் பார்.”
“அதுக்கப்புறம் அந்த தரகருக்கு உங்க வீட்டுக் காபி கிடைக்காதுன்னு சொல்லு.”
தரகருக்காக உச் கொட்டினான் மதன்.
“மச்சான் உனக்கு ஒண்ணு தெரியுமா? வர்ற சனிக்கிழமை அவளுக்கு பிறந்தநாளாம்!”
“அப்படியா, உனக்கு எப்படித் தெரியும்?”
“ஃபேஸ்புக்ல வந்துச்சி. அதான் சொன்னேன். அதனால ஒண்ணும் பிரயோஜனமில்லை போலிருக்கே!”
“ஏண்டா?” செல்போனை நோண்டியபடியே சாதாரணமாகக் கேட்டான் சங்கர்.
“என்ன நோண்டா? எவ்வளவு அருமையான நியூஸை சொல்லியிருக்கேன்.. துள்ளிக் குதிச்சி, இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்தி, அவளை எப்படி இம்ப்ரெஸ் பண்ணலாம்னு யோசிக்கிறதை விட்டுட்டு, க்ராஸ் கேள்வி கேட்டுட்டு இருக்கே! நீயெல்லாம் லவ் பண்ணப் போறதை நினைச்சா பாவமாத்தான் இருக்கு.”
அப்போது, சங்கரின் செல்போன் அலறியது.
“ஆங்.. சொல்லு மித்ரா.
“உனக்கு எப்படித் தெரியும் என்னோட பிறந்தநாளு?”
“எப்படியோ தெரியும். அட்வான்ஸா விஷ் பண்ணா, தேங்க்ஸ் சொல்லாம இதென்ன கேள்வி?”
பேசிக்கொண்டே மதனைப் பார்த்து சிரித்தான் சங்கர்.
“அட்ரா சக்கை! டெக்ஸ்ட் அனுப்பியே விஷ் பண்ணியாச்சா? எப்படியோ தெரியும்னா என்ன அர்த்தம்? ஏன்.. நான் சொன்னேன்னு சொல்லக்கூடாதா?” என்ற மதன் சங்கரை எரித்துவிடுவதைப் போல பார்த்தான்.
அவனிடம் போனைப் பிடுங்கி காதில் வைத்தான்.
“மித்ரா, உனக்குக் கிடைச்ச இந்த அட்வான்ஸ் வாழ்த்துக்கு உபயதாரர் நான்தான். இதுக்கு நீ தேங்க் பண்ணலைன்னாலும் பரவால்ல. நண்பர்களுக்குள்ள அது முக்கியமும் இல்லை. சனிக்கிழைமை நம்ம மீட்டு, ட்ரீட்டு எங்கேன்னு மட்டும் சொல்லு. அது போதும் என் செல்லம்.”
“ஸாரி மதன்.. என் பர்’டே அன்னிக்கு நாம மீட் பண்ண முடியாதே. எனக்கு முக்கியமான ஒரு வேலை இருக்கு. மறுநாள் சன்டே நாம கொண்டாடுறோம். அதுவும் என் வீட்டுல சரியா? நீ மெனுவை மட்டும் யோசிச்சு வை. அவன்கிட்டயும் சொல்லிடு. சரியா..பை!” – என்றுவிட்டு போனை வைத்தாள் மித்ரா.
நண்பர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.
“பிஸியா இருக்கா போல! இருந்தாலும் துணிச்சல்தான் இல்ல? அவ வீட்ல வச்சே ட்ரீட்டாம்!” -என்று ஆரம்பித்து, அவள் சொன்னதை அப்படியே சங்கரிடம் சொன்னான் மதன்.
“ட்ரீட்டுக்குதானே ஆசைப்பட்டாய் என் ‘மண்ணு’ மதா? போ.. போயி உன் மெனுவை ரெடி பண்ணு.”
என்றபடி தன் வேலையில் மூழ்கினான் சங்கர்.
***
வசுமதிக்கு உறக்கம் வரவில்லை. அப்பாவின் காதலைப் பற்றி அறிந்து கொள்ளாமல், அவள் தலையே வெடித்து விடும்போல் இருந்தது. ரமணியைப் பார்த்தே ஆகவேண்டும் என்ற ஆவல் அதிகரித்துக்கொண்டே வந்தது. ரமணியை தான் எப்படி அழைப்பது? அம்மா என்று அழைக்கலாமா.. சித்தி? இல்லை பெரியம்மாவா? அப்பாவிடம் கேட்க வேண்டும். அன்று, துரைப்பாண்டி அத்தான் ரமணி டாபிக்கை எடுத்ததும் பதற்றமடைந்த விதமும் அவரது அப்பா முன்னால் அதைப்பற்றிப் பேசப் பயந்ததும் வியப்பாக இருந்தது. அவளது சிந்தனை துரைப்பாண்டியை நோக்கிச் சென்றது. பார்ப்பதற்கு ரௌடி போலத் தெரியும் கரடு முரடான ஆசாமி. யாரையும் பயமுறுத்தும் உடற்கட்டு. அவனுக்கும் ஒரு கைகூடாத காதல். காதலை முறிப்பதற்கென்றே சில மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வாத்தியார் மாமாவை மாதிரி. அந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, அவர்கள் வீட்டு மாடியில் நடந்த சச்சரவு ஞாபகத்துக்கு வந்தது. வசுமதிக்கு துரைப்பாண்டியின் மேல் ஒரு பச்சாத்தாபம் பிறந்தது. மறுநாள், காலை உணவுக்குப் பிறகு அவர்கள் ஊருக்குக் கிளம்பிவிட்டார்கள். கடைசிவரை ரமணி பற்றிய ரகசியம் தெரியாமல் ஏமாந்து போனாள் வசுமதி.
அவளுக்கு காதல் என்ற வார்த்தையின் மேல் பெரிய ஈர்ப்பு ஒன்றுமில்லை. இதுவரை யார் மீதும் அப்படியொரு உணர்வு வந்ததும் இல்லை. ஒருமுறை, அவள் அலுவலகத்தில் வேலை செய்த ஒரு பெண், காதலுக்காக வேலையை விட்டதுகூட அவளுக்கு முட்டாள்தனமாகத்தான் பட்டது.
‘அப்படி என்ன இருக்குமோ அந்தக் காதலில். அது அதுக்கான வயசு வந்தால், அந்தந்த விஷயம் தானா நடக்கப் போகுது. அதுக்குள்ள இதுகளுக்கு என்ன அவசரம்?’ என்பதுதான் அவளது எண்ணம். ஆனால் சமீபத்திய நிகழ்வுகள், அவளுக்கு காதல் என்ற வார்த்தையின் மீதான ஆர்வத்தை அதிகரித்தது. துரைப்பாண்டி விரும்பிய பெண்ணைக் கண்டுபிடித்து, அவனோடு சேர்த்து வைக்கவேண்டும் போல் இருந்தது. அப்படியே அந்த வாத்தியார் மாமாவின் சட்டையைப் பிடித்து ‘ரமணியம்மா எங்கே?’ என்று கேட்கவேண்டும் போல் இருந்தது. கனவில் அப்படிக் கேட்டவாறே தூங்கிப் போனாள் வசுமதி.
**
அப்போதுதான் பஜாரிலிருந்து வந்திருந்த சரவணன், முகத்தைக் கழுவிவிட்டு ஹாலுக்கு வந்தார்.
சூடாக காபியை கலந்து கொண்டு வந்து அவரிடம் நீட்டியபடி தானும் அருகில் அமர்ந்தாள் மலர்.
“ஒரு குட் நியூஸ். சுரேஷ் மகளுக்கு கல்யாணமாம்!”
“ஐ! எப்பவாம்?” முகம் மலர சிரித்தாள் மலர்.
“ரெண்டு நாள்ல சென்னைக்கு வர்றாப்லயாம். வந்தாத் தெரியப்போவுது.”
“என்னங்க இது? ஃப்ரெண்டு பொண்ணுக்கு கல்யாணம். போன்ல பேசியிருக்கீங்க..
பையன் என்ன பண்றான்? எந்த ஊரு? எங்க வச்சி, எப்ப கல்யாணம்? எதுவுமே கேக்கலையா? என்ன ஃப்ரெண்டு நீங்க?”
“கொஞ்சம் மூச்சு வாங்கிக்கோயேன். இந்தா தண்ணி குடி.”
தண்ணீர் கூஜாவை காட்டி சிரித்தார் சரவணன். மலர் முறைத்தாள்.
“பின்ன என்ன? எப்படியும் பத்திரிகை வைக்க வரப்போறான். வீட்டுக்காரியோடத்தான் வர்றானாம். வந்ததும் எவ்வளவு பேசணுமோ பேசி விவரத்தைத் தெரிஞ்சிக்கோயேன். போன்லயே எல்லாத்தையும் கேட்க முடியுமா?” டிவியைப் போட்டு, யுட்யூபில் பழைய பாடல்களைத் தேடினார் சரவணன். முகத்தை நொடித்துக்கொண்டு சமையலறைக்குள் நுழைந்தாள் மலர்.
‘அத்தை மகனே அத்தானே உன் அழகை கண்டு நான் பித்தானேன்..’
டிவியில் எம்ஜிஆரைப் பார்த்து காதலுடன் பாடிக்கொண்டிருந்தார் சரோஜாதேவி. கண்களை மூடியபடி அதில் லயித்துக் கேட்டுக் கொண்டிருந்தார் சரவணன்.
“எனக்கும் ஒண்ணு கேட்கணுமே.” என்றபடி தன்னுடைய அறையிலிருந்து வெளியே வந்தாள் வசுமதி.
அன்று சனிக்கிழமை. மாதத்தில் இரண்டு சனிக்கிழமை வசுமதிக்கு விடுமுறையாதலால், அவளும் வீட்டில் இருந்தாள்.
கண்களை திறந்து மகளைப் பார்த்தார் சரவணன்.
“உனக்கு என்ன கேட்கணும்?”
“உங்க கிராமத்துக் காதலைப் பற்றி சொல்லுங்களேன். ரமணி அவங்களைப் பத்திச் சொல்லுங்க.”
***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!