Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நிறம் பாராத காதல்.

நிறம் பாராத காதல் 14

✨நிறம் பாராத காதல்✨

✨அத்தியாயம் 14

வைதேகி அவளாக முன் வந்து உரிமையாகப் பேசியவளை பார்த்த மாறன்,
“என்ன ராணா… ஏன் விடிந்ததும் என் தங்கச்சிகிட்ட வம்பு பண்ற” என்று கேட்டுக்கொண்டே தன் பெண் குழந்தையோடு அங்கே வந்தவனை ரணதீரன் முறைத்தான்.

“அண்ணா… இவரு தான் நேத்து என்கிட்ட நாளைக்கு நீ தான் டீப்போட்டு நம்ம வீட்டுல இருக்குற எல்லோருக்கும் தரணும்னு சொன்னாரு அண்ணா, நானும் சரின்னு டீப்போட்டேன், இப்போ என்னன்னா இந்த டீ மட்டும் இல்ல, நான் கொடுத்தா மஞ்ச பச்சத் தண்ணிக் கூட குடிக்க மாட்டேன்னு சொல்லுறாரு அண்ணா, உங்க மச்சானை என்னனு கேளுங்க அண்ணா” என்று வைதேகி வராத கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.



Advertisement

“மருமகளே… நீ கவலைப்படாத, நீ போட்ட டீயை நான் குடிக்கிறேன்”என்ற வேதநாயகி வைதேகி கையில் இருந்த ஒரு தேநீர் கோப்பையை எடுத்துக் கொள்ள,”என் தங்கச்சி போட்ட டீயை நானும் எடுத்துப்பேன்” என்றப்படி மாறனும் ஒரு கோப்பையை எடுத்துக்கொண்டான்.

“டேய் ராணா… நீயும் டீ எடுத்துக்கோ” என்று வேதநாயகி கட்டளையாகச் சொல்ல, “எடுத்துத் தொலைக்கிறேன்” என்ற ரணதீரன் தன் அம்மாவின் முன்னே பிரச்சனை பண்ணாமல் ஒரு கோப்பையை எடுத்துக் கொள்ள, “அத்த… எனக்கு” என்ற சிறுமியின் கையில் சிரித்த முகத்துடன் பால் கோப்பையைக் கொடுத்தாள் வைதேகி.

“வைதேகி டீ ரொம்ப அருமையா இருக்கு” என்று வேதயநாயகி சொல்ல, “ஆமா பாப்பா டீச்சூப்பர்” என்றான் மாறன்.

Advertisement

“ஏங்க… டீ நல்லா இருக்கா!?” என்று வைதேகி உரிமையாக ரணதீரனிடம் கேட்டதும், “இருக்கு…” என்று இரட்டை அர்த்தத்தில் அவளை முறைத்தபடி சொன்ன ரணதீரன் சிறுமி மயிழினியை தூக்கிக்கொண்டு ஒரு இருக்கையில் அமர்ந்துக் கொண்டான்.

Advertisement

“அத்த… இன்னைக்கு காலையில நான் டிபன் பண்ணட்டுமா?” என்று வைதேகி கேட்டதும், “உனக்குச் சமைக்க தெரியுமா வைதேகி?” என்று ஆச்சிரியமாகக் கேட்டுக்கொண்டே கீதா அங்கே வர, “ம்… தெரியும் அம்மா, இந்தாங்க நீங்களும் டீ எடுத்துக்கோங்க” என்று கீதாவிடம் ஒரு கோப்பையைக் கொடுத்தாள் வைதேகி.

“ஏன் அத்த!? உங்க தங்கச்சி பொண்ணுக்கு சமைக்க வருமான்னு கூடவா உங்களுக்குத் தெரியாது?” என்று ரணதீரன் வேண்டுமென்றே கேட்டதும், கீதா திருட்டு முழி முழிக்க, “ஏன் மச்சான்… உன் அக்காவுக்குச் சமைக்க தெரியுமா தெரியாதான்னு முதல்ல உனக்குத் தெரியுமா!?” என்று கேட்டான் மாறன்.

“இப்போ ஏன் நீங்க என்னை வம்பு பண்ணுறீங்க”என்று கேட்டுக்கொண்டே மாயாவும் அங்கே வந்தவள் ஒரு கோப்பை டீயை எடுத்துப் பருகியவள்,”வைதேகி டீ ரொம்ப நல்லா இருக்கு”என்றப்படி தன் தம்பியின் அருகே அமர்ந்து கொண்டாள்.

Advertisement

“நான் நல்லாவே சமைப்பேன், யாருக்கு என்ன பிடிக்கும்னு சொல்லுங்க, நானே இன்னைக்கு காலையில டிபன் பண்ணுறேன்” என்ற வைதேகியின் கையைப் பிடித்து வேதநாயகி அவர் அருகே அழைத்தவர், “அதெல்லாம் நீ இன்னோரு நாள் பண்ணலாம் வைதேகி, இப்போ நீ போய் முடியை உளறவை” என்று வேதநாயகி சொன்னதும், வைதேகியும் சிரித்த வண்ணமாகவே அவள் அறைக்குச் சென்றாள்.

“மாமா… இங்க என்ன நடக்குது, இவ என்ன திடிர்னு ரொம்ப உரிமையா பேசிக்கிட்டு இருக்காள், என்ன இதெல்லாம் உங்க வேலை தானா?” என்று மாறனை பார்த்துக் கோவமாகக் கேட்டான் ரணதீரன்.

“ஐயோ மச்சான் எனக்கும் வைதேகியின் இந்தத் திடீர் மாற்றத்துக்கும் எந்த வித சம்மதமும் இல்லை மச்சான்”என்ற மாறன் பவ்யமாக அமர்ந்து இருக்க ,”ஏன் மாப்புள்ள அப்போ அடுத்த வாரம் ரணதீரன் வைதேகி நிச்சியத்துக்கு நாள் குறிச்சிடலாமா?”என்று கேட்டார் வேதநாயகி .

“அதுக்கென்ன அத்தை கண்டிப்பா பண்ணிடலாம், ஏன் மச்சான் பண்ணிடலாம் தானே!”என்று மாறன் கேட்டதும், “நீங்கப் பண்ற வேலை எல்லாம் பார்த்தால் அம்மாவுக்கு இன்னும் பிரச்சனை அதிகமா தான் ஆகப்போகுது “என்ற ரணதீரன் சமயலறைக்குள் நுழைந்து அவன் அம்மா அவனுக்குக் கொடுத்த தண்டனையைச் செய்யத் தொடங்கி இருந்தான்.

வைதேகியும் அதே சமயம் கூந்தலை பின்னக்கொண்டு ஹாலுக்கு வந்தவளை பார்த்து, “ஏன் வைதேகி நான் நேத்து அனுப்பி வைத்த ரீல்ஸை நீ பார்க்கவே இல்லையா!? “என்று கீதா கேட்க, “என் போன் உடைஞ்சிடுது அம்மா” என்றாள் வைதேகி கவலையாக.

“போன் உடைஞ்சிடுதா! இல்ல யாராவது உடைச்சிட்டாங்களா?”என்று கீதா கேட்க,
“அதான் உடைஞ்சு போச்சுன்னு சொல்லுறாங்களே அத்தை, இன்னும் என்ன உங்களுக்குச் சந்தேகம்”என்று கேட்டுக்கொண்டே ரணதீரன் காலை உணவை மேசைமேல் கொண்டு வந்து வைத்தவன் கீதாவை கடுங்கோபத்துடன் முறைத்தான்.

“ஐயோ கீதா இந்த ரணதீரன்கிட்ட வாயைகொடுத்து காதைப் புண்ணாக்கி கொள்றதே உனக்கு வேலையா போச்சு” என்று எண்ணிய கீதா அதோடு வாயை மூடிக்கொள்ள, “பரவாயில்ல வைதேகி நீ இன்னைக்கு ராணா கூடப் போய் வேற போன் வாங்கிக்கோ, ராணா என் மருமகளுக்கு புது போன்
வாங்கிக்கொடு “என்றார் வேதநாயகி.

“புதுசெல்லாம் வேண்டாம் பழைய போனையே சரி பண்ணி யூஸ்
பண்ணட்டும் “என்று ரணதீரன் கடுப்பாகச் சொல்ல, “நான் சொல்றதை நீ கேளு ,ஒழுங்கா இன்னைக்கு வைதேகியை அழைச்சிட்டு போய் அவளுக்கு என்ன பிடிச்சி இருக்கோ அதெல்லாம் வாங்கிக்கொடு “என்று வேதநாயகி சொல்ல, ரணதீரனின் வெறுப்பை அதிகப்படியாகச் சம்பாரித்துக்கொண்டு இருந்த வைதேகிக்கு எப்படியாவது அவள் கனடா செல்வதற்குள் ரணதீரனிடம் நட்பாகப் பழக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

அனைவரும் காலை உணவைச் சாப்பிட்டு முடிக்க, “சம்மந்தி நம்ம ரெண்டு பேரும் கோவிலுக்குப் போக வேண்டிய வேலை இருக்கு அதனால ராணாவும் வைதேகியும் மட்டும் இன்னைக்கு வெளிய
போகட்டும் “என்று வேதநாயகி சொல்ல, “ரொம்ப நல்லது சம்மந்தி “என்று சந்தோஷமாகச் சொன்னார் கீதா.

“அம்மா இன்னைக்கும் நான் ஏன் இவங்கள வெளிய அழைச்சிட்டு போக்கணும்? “என்று ரணதீரன் வைதேகியை முறைத்தபடியே கேட்க ,”நான் தான் உன்னை ஐந்து நாளைக்கு வைதேகிக்கு தேவையானதை பண்ண சொன்னேனே, என்ன மறந்துட்டியா? அதுவும் இல்லாம நீ இன்னைக்கு வைதேகிக்கு புது துணி, போன் இன்னும் அவ என்னவெல்லாம் கேக்குறாளோ அதையெல்லாம் வாங்கிக்கொடு “என்று வேதநாயகி சொல்ல, “எல்லாம் என்
தலையெழுத்து” என்று புலம்பிக்கொண்டே அங்கிருந்து வெளியேறினான் ரணதீரன்.

“வைதேகி நீ ராணா கூடத் தனியா போறது உனக்கு ஒன்னும் பிரச்சனை  இல்லையே”என்று மாறன் கேட்டதும், “எனக்கு என்ன அண்ணா பிரச்சனை வரப்போகுது ,இனி என்னால உங்க மச்சானுக்கு தான் பிரச்சனை”என்று சிரித்துக்கொண்டே சொன்னாள் வைதேகி.

“மாமா நீங்கச் சொன்ன மாதிரி எதாவது நடந்துடும் போல “என்று மாயா கேட்டதும், “என்ன அண்ணி சொல்லுறீங்க, அப்படியென்ன அண்ணன்
சொன்னாரு” என்று வைதேகி கேட்க,” நீ என் தம்பியை லவ் பண்ண வாய்ப்பு இருக்குன்னு உன் அண்ணன் சொன்னாரு” என்றாள் மாயா சிரித்துக்கொண்டே.

“ஐயோ அண்ணா அப்படியெல்லாம் எதுவும் நடக்காது, எனக்கு இதுநாள் வரை ரணதீரன் சாரை பற்றித் தெரியாமல் இருந்தது, நேத்து நைட்டு நீங்க அவரைப் பற்றிச் சொன்னதும் அவருடன் நட்பாகப் பேசி அவரை இயல்பான மனநிலைக்கு மாற்றணும்னு நான் ஆசைப்படுறேன் அவ்வளவு தான், மற்றபடி காதல் எல்லாம் என் மனசுல இல்லை “என்று வைதேகி சொல்ல,” அப்படி காதல் இருந்தாலும் தப்பு
இல்லையே “என்று ஏக்கமாகச்
சொன்னாள் மாயா.

“அண்ணி என்ன சொல்றிங்க, என்னைக் கண்டாலே உங்க தம்பிக்குப் பிடிக்காது, யாரோ ஒரு மாப்பிளையை நான் ஏமாத்திட்டு தான் இங்க வந்து தலைமறைவா இருக்கேன்னு அவரு நினைக்கும்போது நான் எப்படி அவர் கூடக் காதல் கல்யாணம்னு நினைக்க
முடியும்” என்று வைதேகி கேட்டதும்,

“ஒரு நாள் என் தம்பியே உன்னைப் புரிஞ்சிகிட்டு உன்னைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னால் நீ அவனைக் கல்யாணம் பண்ணிப்பியா!?”என்று மாயா தன் ஆசையைக் கேட்க, “அப்படி நடக்கும்போது பார்த்துப்போம் ,இப்போ நான் மச்சான் கூட ஷாப்பிங் போயிட்டு வரேன் “என்றாள் வைதேகி கிண்டலுடன்.

வைதேகி ரணதீரனை மச்சான் என்று அழைத்ததும், “என்ன மச்சானா! அது சரி,
நீ ஒரு முடிவோட தான் இருக்க
போல” என்று சிரித்துக்கொண்டே மாறன் சொல்ல,
“ஆமா அண்ணா, உங்க மச்சானை இனி நான் வேற விதமாகத் தான் டீல் பண்ண போறேன்” என்ற வைதேகி இன்று தனியாக ரணதீரனுடன் செல்ல முடிவெடுத்து இருந்தாள்.

காலை நேரம் ரணதீரன் ஜீப்பில் வைதேகிக்காக காத்துஇருக்க, எந்த வித ஒப்பனையும் இல்லாமல் இயற்கை அழகை சுமந்தபடி பெண்ணவள் வண்டியில் ஏறி அமர்ந்தவளை கைகள் அசைத்து வேதநாயகி வழி அனுப்பி வைத்தார்.

கருப்பு ஆடையில், கண்ணில் கருப்பு நிற கண்ணாடி அணிந்து, கருப்பு நிற ஜீப்பில் வைதேகியை ரணதீரன் அழைத்துக்கொண்டு அதே ஊரில் இருக்கும் கடைக்குச் சென்றுக்கொண்டு இருக்க,

“ஆமா நீங்க ஏன் உங்களைச் சுற்றி வெறும் கருப்பு நிறமாகவே இருக்கணும்னு ஆசைப்படுறீங்க?”என்று வைதேகி கேட்டதும் அவள் கேள்விக்குப் பதில் சொல்லாமல் கோவமான முகத்துடனே வண்டியை விரட்டினான் ரணதீரன்.

“மச்சான் உங்களைத் தான் கேக்குறேன், ஏன் உங்களுக்குக் கருப்பு நிறத்தை இவ்வளவு பிடித்து இருக்கு? “என்று வைதேகி இயல்பாகக் கேட்டதும்,

“ஏய் என்ன சொன்ன மச்சானா!?”என்று கேட்டவன் சட்டென்று தன் ஜீப்பை பாதி வழியிலேயே நிறுத்தி,”ஏய் யாரை நீ மச்சான்னு சொன்ன? “என்று பற்களைக்கடித்து கொண்டு கேட்டான்.

“உங்களைத் தான் மச்சான்னு சொன்னேன், நீங்க மாறன் அண்ணனுக்கு மச்சான் என்றால் எனக்கும் மச்சான் தானே “

“ஏய்…உனக்கு முதல்ல என் மாறன் மாமாவே அண்ணன் இல்லை, அப்புறம் நான் எங்க இருந்து மச்சானாக முடியும் “

“அதெல்லாம் மனசு இருந்தால் நீங்க எனக்கு மச்சானாக மாறலாம், சரி அதை விடுங்க நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க. உங்களுக்கு ஏன் கருப்பு நிறத்தை மட்டும் இவ்வளவு பிடித்து
இருக்கு? “

“நீ கேட்டா! நான் சொல்லனுமா? , அதெல்லாம் சொல்ல முடியாது ,அப்புறம் என்னைக் கேள்விகேக்குற உரிமை உனக்கில்லை புரியுதா”என்றவன் வேகமாகத் தன் வண்டியைக் கடையை நோக்கி விரட்டினான்.

“இருந்தாலும் இவருக்கு ரொம்ப தான் கோவம் வருது, இவரு எதாவது நம்மகிட்ட பேசினால் தானே இவர் மனசுல என்ன இருக்குதுனு நமக்குத் தெரிய வரும்” என்று எண்ணியபடியே வைதேகி வண்டியில் அமர்ந்து இருந்தவள் நடவடிக்கையைப் பார்த்து ரணதீரனுக்கு மேலும் அவள்மேல் கோவம் தான் எழுந்தது.

சில நிமிட பயணத்தில் ரணதீரன் தன் வண்டியை ஒரு கடை வாசல் முன் நிறுத்தியவன், “இங்க பாரு, ஊர் பேர் தெரியாத உனக்கெல்லாம் என்னால பல லட்சம் செலவு பண்ணி எந்தப் பொருளையும் வாங்கி தர முடியாது, நான் இங்கேயே இருக்கேன் உள்ள போய் எதாவது போனை வாங்கிட்டு வா”என்றவன் தன் பாக்கெட்டில் இருந்த கிரெடிட் கார்டை எடுத்து வைதேகி கையில் கொடுத்தான்.

“என்ன நீங்கக் கார்டை கொடுத்தா போதுமா! இதோட பின் நம்பர் யார் சொல்லுவாங்க” என்று வைதேகி கேட்க, அவளை ஒரு கணம் சந்தேகமாகப் பார்த்தவன் ,”உன்னை நம்பியேயெல்லாம் என்பின் நம்பரை சொல்ல முடியாது. நீ போனை வாங்கிட்டு என்னைக் கூப்பிடு நான் வந்து காசைக் கட்டிக்கிறேன் “என்ற ரணதீரன் ஜீப்பில் அமர்ந்து இருக்க, வைதேகி மட்டும் அங்குள்ள கடைக்குள் நுமைந்தாள்.

“வாங்க மேடம் என்ன வேணும்?” என்று பெண்ணொருவர் வைதேகியை அணுகி அவள் கேட்டதை போல மலிவான விலையில் ஒரு கைப்பேசியை எடுத்துக் கொடுக்க,

“இந்தப் போனை பில் போடக் கொடுங்க”என்ற வைதேகி கையசைத்து ஜீப்பில் அமர்ந்திருந்த ரணதீரனை அழைத்ததும் அவன் கடைக்குள் நுழைந்தவன், “என்ன
வாங்கிட்டியா” என்றப்படி பணத்தை கட்டியவன் புது போனை வாங்கி வைதேகியிடம் கொடுத்தான்.

அந்தக் கடையில் ரணதீரனை பார்த்த பணிப்பெண், “தீரன்…..”என்று அவனை அழைத்ததும், அந்தப் பெண்ணைப் பார்த்தவனின் கண்கள் கோவத்தில் சிவப்பாக மாற, அந்தப் பெண்ணோ பார்ப்பதற்கு மெல்லிய தேகத்தில் வயிற்று பிள்ளையாகக் கழுத்தில் மஞ்சள் கயிறை மட்டும் அணிந்துக்கொண்டு பாவமாக இருந்தவளை கண்டு ரணதீரன் வேகமாக அந்தக் கடையிலிருந்து வெளியேறினான்.

ரணதீரனின் திடீர் முக மாற்றத்தைக் கவனித்த வைதேகி,”உங்களுக்கு ராணா சாரை தெரியமா?”என்று கேட்டதும்,

“ம் தெரியும்.ஆமா நீங்க யாரு
அவருக்கு?”என்று அந்தப் பெண் கேட்டதும், “நான்…மாறன் அண்ணன் தங்கச்சி “என்று வைதேகி சொன்னாள்.

“ஓ…தீரனை நீங்கத் தான் கல்யாணம் பண்ணிக்க போறிங்களா?”என்று அந்தப் பெண் கேட்க, வைதேகி பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தவள் கரங்களைப் பற்றிய அந்தப் பெண்ணின் கண்கள் கலங்கி இருந்தது.

“என்னங்க என்னாச்சு ஏன் அழுகுறீங்க?” என்று வைதேகி அந்தப் பெண்ணைப் பார்த்துப் புரியாமல் கேட்டதும்,

“என் பெயர் தேவி. போன வருஷம் ரணதீரனுக்கும் எனக்கும் தான் கல்யாணம் பேசி முடிச்சாங்க, கல்யாணத்துக்கு தேதி குறித்ததும் தீரன் என்கிட்ட அவரைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதமான்னு கேட்டாரு, நானும் சம்மதம்னு சொன்னேன், கல்யாணம் இன்னும் ஒரு வாரத்துல நடக்க இருக்கும்போது என் கூடப் படிச்ச பசங்கெல்லாம் தீரன் போட்டோவைப் பார்த்து ரொம்ப மோசமா கமெண்ட் பண்ணாங்க,

அவங்க பேச்சையெல்லாம் கேட்டு நான் இவரைக் கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லைனு சொல்லிட்டேன்” என்ற பெண் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டவள்,

“சொன்னதோடு மட்டுமில்லாம இவரை ரொம்பவே அசிங்கப்படுத்தி பேசிட்டேன், அப்புறம் நான் வேற ஒருவரை கல்யாணம் பண்ணிக்கிட்டு நாங்க நல்லா தான் வாழ்ந்தோம். ஆனா என் புருஷனுக்கு போன மாசம் ஒரு பெரிய விபத்து நடந்து அவரு படுத்த படுக்கையா இருக்காரு, என் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைச்சா கூட நான் அவரைப் பார்த்துப்பேன், ஆனா எனக்கு இதே ஊருல நெல்சன் ஐயா பெயருல இயங்குற கம்பெனியைத் தவிர்த்து வேற எங்கேயும் நிறைய சம்பளத்துக்கு வேலை கிடைக்காது, பக்கத்து ஊருக்கு வேலைக்குப் போனால் என் புருஷனை கவனிச்சிக்க ஆள் இருக்காது, இதெல்லாம் யோசித்து தான் போன வாரம் தீரன்கிட்ட வேலை கேட்கலாம்னு அவரைத் தேடி போனேன். ஆனா அவரு என்னைப் பார்க்க முடியாதுனு சொல்லிட்டாரு , உங்களைத் தயவு செய்து கேட்குறேன், தீரன்கிட்ட சொல்லி எனக்கு ஒரு வேலை போட்டுத் தரச் சொல்லுங்க, உங்களுக்குப் புண்ணியமா போகும் “என்று அந்தப் பெண் கைகளைக் கூப்பி வைதேகியிடம் உதவி கேட்டாள்.

“ஏங்க என்ன பண்றீங்க கையைக் கீழ போடுங்க, நீங்க நாளைக்கு மாறன் அண்ணன் கம்பெனிக்குப் போங்க. நான் உங்களுக்காக அண்ணன்கிட்ட பேசுறேன், உங்க கணவனையும் வயற்றில் இருக்கும் குழந்தையையும் பார்த்துக்கோங்க” என்றபடி வைதேகி அந்தக் கடையிலிருந்து வெளியேறியவள் ரணதீரன் ஜீப்பில் சோகமாகவே ஏறி அமர்ந்தாள்.

“சீக்கிரம் வரத் தெரியாதா, உனக்குச் சேவை பண்றதை தவிர எனக்கு வேற வேலையே இல்லையேன்னு நினைச்சியா” என்று வைதேகியிடம் சிடுசிடுத்த ரணதீரன் அதே கோபத்துடன் வண்டியை மீண்டும் தன் வீட்டை நோக்கி விரட்டினான்.

இயல்பாகவே கோவமான முகத்துக்குச் சொந்தகாரனாக இருக்கும் ரணதீரன் அந்தக் கடையில் தேவி என்ற பெண்ணைப் பார்த்து மேலும் கோவமடைந்தவன் அதீத வேகத்துடன் வண்டியை விரட்ட,”ஏங்க பொறுமையா போங்க” என்ற வைதேகியை பார்த்து முறைத்தப்படி இன்னும் வேகமாக அவன் ஜீப்பை விரட்டியவன் அடுத்த சில நிமிடங்களில் தன் பங்களாவை சென்று அடைந்து இருந்தான்.

ஜீப்பிலிருந்து வைதேகி இறங்கியதும்
“அம்மாக்கிட்ட எதையும் உளறி வைக்காத”என்ற ரணதீரன் வேகமாகத் தன்னுடைய பங்களாவிற்குள் நுழைந்தவன் கதவை அடித்து மூடிக்கொண்டான்.

“எப்பா இவருக்கு ஏன் இவ்ளோ கோவம் வருது” என்று எண்ணிய வைதேகி ஜீப்பிலிருந்து இறங்கியவள் ரணதீரனின் பங்களாவிற்கு பின்னே இருக்கும் தோட்டத்து வீட்டைப் பார்க்க ஆசைக்கொண்டு பொறுமையாக அங்கே சென்றவளை, “அக்கா இங்க வராதீங்க..”என்று கைகள் அசைத்துச் சொன்னாள் நீல வேணி.

“ஏன் வரக் கூடாது!?” என்று கேட்டுக்கொண்டே வைதேகி தோட்டத்து வீட்டை நெருங்க, “ஐயோ அக்கா… உங்கள இங்க பார்த்தா ரணதீரன் அண்ணன் கோவப்படுவாரு நீங்கப் போங்க” என்று நீல வேணி எச்சரிக்க,

“அவர் எதுக்கு தான் கோவப்பட மாட்டாரு, சரி அது இருக்கட்டும், பொம்மி அக்காவை நான் பார்க்கலாமா?” என்று கேட்ட வைதேகி சட்டென்று அந்த வீட்டின் கதவைத் திறந்த வேகத்தில் சூரிய ஒளி வீட்டின் உள்ளே படற, பொம்மி வெளிச்சத்தை பார்த்ததும் சத்தம் போட்டு அலறியவளின் குரலைக் கேட்டு ரணதீரன் அவன் பங்களாவிலிருந்து வேகமாக ஓடி வர, மாயா மாறனும் கூடக் கையில் குழந்தையுடன் தோட்டத்து வீட்டை நோக்கி ஓடி வந்தார்கள்.

“ஏய்… உன்னை யாரு இங்க வரச் சொன்னாங்க?என்ன பண்ண பொம்மியை” என ரணதீரன் கோவமாகக் கேட்டதும், பொம்மி கண்களை மூடி வெளிச்சத்தைக் கண்டு பயத்துடன் மேலும் அலறியவளின் அருகே அமர்ந்து வைதேகி பொம்மியை சமாதானம் செய்ய முயன்ற தருணம், கோபமாக வைதேகியின் கையைப் பிடித்து இழுத்த ரணதீரன்,

“மாமா இவளோட ஆட்டத்துக்கு ஒரு அளவே இல்லையா? இவளுக்கு என்ன தெரியும்னு என் பொம்மியை பார்க்க இவ இங்க வந்து இருக்காள்? “என்று அவன் கோபமாகக் கேட்டதும், அதே கோபத்துடன் அவன் கையைத் தட்டி விட்ட வைதேகி,

“யூப்பெட்டர் ஷுட் யுவர் மௌத். நான் ஒரு சைக்கார்ட்டிஸ்ட் டாக்டர், உங்களைவிட இவங்களுக்கு என்ன வேணும்னு எனக்கு நல்லாவே தெரியும்” என்ற வைதேகியின் வார்த்தையைக் கேட்டு ரணதீரன் அசையாமல் அதே இடத்தில் சிலையென நின்று விட்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!