Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorizedஇதமாய் நான் வரவா

இதமாய் நான் வரவா – 3 (2)

இதம் – 3 (2)

அதன் பின் மாமியார் அங்கையிடம் சாதாரணமாக பேசினால் கூட தன்னை கண்டு பொருமுகிறார்கள் என்றே நினைத்த வசந்தி அதை கணவனிடமும் சொல்லிவிட்டாள். அதற்கு ஏற்றவாறே சிவகாமியின் அன்றைய பேச்சும் அமைந்தது தான் தவறாகி போனது‌.

வீட்டினுள் சோர்வாக வந்த அங்கையை கண்டவர் அவளின் கரத்தில் இருக்கும் பையை பார்த்துவிட்டு…

“கோயிலுக்கு போயிட்டு வரியா அங்கை… ம்ம் நீயும் வாரம் வாரம் அம்மனுக்கு விளக்கு போட்டுன்னு தான் இருக்க என்ன செய்ய… ஆண்டவன் ஆசைப்பட்டவங்களுக்கு எங்க கொடுக்குறான்” என்றவரின் பேச்சில் உணவு மேஜையில் சாப்பிட்டு கொண்டிருந்த சுயம்புவின் கரம் அப்படியே நிற்க… எதிரில் இருக்கும் மனைவியை பார்த்திட அவளோ கண்களில் கண்ணீரை தேக்கியபடி உள் சென்றுவிட்டாள்.



Advertisement

“ஏம்மா உனக்கு என் பொண்டாட்டி மாசமா இருக்கிறது புடிக்கலன்னா சொல்லிட்டு நாங்க இப்பவே வீட்டை விட்டு போயிடுறோம்” என்று கத்தியவன் கிளம்பிவிட தாயும் மகளும் தான் புரியாது முழித்தனர்.

அதை இருவரும் அப்போது பெரிதாக கண்டுக் கொள்ளவில்லை. ஆனால் அதன் பின் வசந்தியின் நடவடிக்கை அப்படியே மாறிப்போனது. என் புருஷனை மட்டும் தான் கவனிப்பேன் என்றபடி செய்கைகள் இருக்க..‌. இதை கண்டு முத்துவேலும் என்னவென்று விசாரிக்க…

“மாசமா இருக்கிற பொண்ணு எம்புட்டு வேலை செய்யும்… அதுதான் புருசனை மட்டும் கவனிக்க சொல்லிட்டேன்” என்ற சிவகாமியின் பேச்சும் நியாயமாய் பட… அதன்பின் அவரும் பெரிதாய் அதனை கண்டுக்கொள்ளவில்லை.

Advertisement

எப்படியும் குழந்தை பிறந்தால் சரியாகிவிடுவாள் என்று சிவகாமி நினைத்துக் கொண்டு விட்டுவிட்டார். அதுவும் இல்லாது சில நாள்களாக தெளிவு இல்லாத முகத்தோடு சுத்தும் மகளை விசாரிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருக்க… அங்கையே தாய் வீடு வந்து சேர்ந்தாள்… அதுவும் எப்படி அழுது சிவந்து…  கண்ணெல்லாம் வீங்கியபடி வந்தவளை கண்டு பெற்றவளின் உள்ளம் பதறியது.

Advertisement

“அடியாத்தே என்னடி ஆச்சு உனக்கு..‌ எதுக்கு இப்படி மூஞ்சு முகரையெல்லாம் வீங்கி போய் வந்திருக்க” என்று பதறியபடி சிவகாமி கேட்க… அவளோ ஓவென அன்னையை கட்டிக் கொண்டு அழுதாள்‌.

“என்னாச்சுன்னு சொல்லு அங்கை… எதுக்குடி இப்படி மூச்சு புடிச்சுன்னு அழுவுற… எனக்கு பயந்து வருது..‌. என்னன்னு வாய தொறந்து சொல்லுடி”

“நான் மோசம் போயிட்டேன்மா… குடியை மட்டும் தான் பழகி இருக்காருன்னு நினைச்சா சீட்டு ஆட்டம் வேற பழகி தொலைச்சு இருக்காரே…”

Advertisement

“என்னடி சொல்ற கொஞ்சம் விளங்குற மாதிரி சொல்லேன்டி” என்றவருக்கு படபடப்பாக வர…

“அது வந்து அவரு தான்மா கொஞ்சா நாளா குடிச்சிட்டு திரிஞ்சாரு..‌. சரி நானும் எப்பவோ ஒரு நாளு தானேன்னு கேட்காம விட்டுபுட்டேன்… இது இப்போ தெனமும் தொடருது..‌. அது மட்டும் இல்லாம கொஞ்ச நாளாவே தொழில் தொடங்கனும் உன் நகையை கொடுன்னு கேட்டாரு… நானும் கொடுத்துப்புட்டேன்…”

“அவரு கூடவே சுத்துவாரே அந்த முனுசாமி அண்ணேன் வந்து சொல்லி தான் நகையை எல்லாம் சீட்டு ஆட்டத்துல தோத்துப்புட்டாருன்னு தெரியுது… இன்னும் என்னென்ன வுட்டு தொலைச்சாரோ தெரியலையே” என்று கதறியவளின் முதுகிலே மொத்தினார் சிவகாமி.

“புருஷன் என்ன செய்றான்னு கூட தெரிஞ்சுக்காம அப்படி என்னத்தடி பொலப்பை நடத்துன பாவி மவளே… ஒரு பவுனா ரெண்டு பவுனா… இருபது பவுனுடி… அவன் மொத நாளு குடிச்சிட்டு வந்த போதே அவனை விளாசியிருந்தா இந்த தைரியம் அவனுக்கு வந்திருக்குமாடி… பாவி மவளே” என்று அழுதவர் கையோடு கணவனுக்கும் மகனுக்கும் போனில் அழைத்து சொல்லிவிட்டவர் அறியவில்லை அதுவே தன் கணவனுக்கு எமனாக போகிறது என்று!

ஆம் வேகமாக வந்த முத்துவேலின் கார் விபத்துக்கு உள்ளாகி சம்பவ இடத்திலே உயிரை துறந்தார். இதில் பெரிதும் நொந்து போனது அங்கை தான்… மாமனாரின் இறப்பு விநாயகத்தையும் ஒரு உலுக்கு உலுக்கிட அவரும் குடி… சூதாட்டம் என்றில்லாது அமைதியாகி போனார்.

அங்கைக்கு தன்னால் தான் தன் தந்தை இறந்தாரோ என்ற குற்றவுணர்வு அவரை வாட்டிட அதில் மயங்கி விழுந்தவரை மருத்துவமனையில் சேர்த்த போது தான் தெரிந்தது அவர் கருவுற்று இருப்பதே.‌‌ ஓரளவு அனைவரும் இறப்பு துக்கத்தில் இருந்து மீண்டு இருக்க மீண்டும் ஆரம்பித்தது விநாயகத்தின் ஆட்டம்.

கருவுற்ற மகிழ்ச்சியான விடயத்தை கொண்டாட கூட அங்கைக்கு தோன்றவில்லை. ஓய்ந்து போனவரை கொஞ்சம் தெம்பாக்கியது சிவகாமியின் வரவு மட்டுமே. கருவுற்ற மகளை பார்த்து கொள்ள அவளின் வீட்டிற்கு சென்றவர் மருமகனிடம்  கெடுக்கு பிடிகளை போட கொஞ்சம் அடக்கி வாசித்தார் விநாயகம்.

நாட்களும் யாருக்கும் நில்லாது சுழன்றிட வசந்தியும் மகனை ஈன்றெடுத்தாள். முதல் குழந்தையே ஆண் குழந்தையை பெற்றெடுத்ததும் அவருக்கு அத்தனை ஆனந்தம். சுயம்புவிற்கு ரெக்கை இல்லாத குறை தான். அவரும் மகனின் வரவை பெரிதாய் கொண்டாடினார்.

அங்கையும் தன் வாழ்வு இப்படி தான் என்ற நிதர்சனத்தை ஏற்றுக் கொண்டவர் கணவனிடம் குடியை விட்டுவிட கெஞ்ச… அவரோ இரவானால் ஒன்றும் பகலானால் ஒன்றும் சொல்ல மனதே விட்டுப்போனது அங்கைக்கு.

உமையாளுக்கு பத்து வயது இருக்கும் போதே சிவாகமியையும் காலன் தூக்கி கொண்டு சென்றுவிட்டார். இதில் பெரிதும் இடிந்து போனது  அங்கை தான். ஆனால் இறப்பதற்கு முன்பு சிவகாமி சொல்லி சென்ற கடைசி வார்த்தைகள் தான் இப்போது அவரின் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

‘இங்காரு அங்கை உன் அண்ணிக்காரி உன் அண்ணனோடு உன்னை அண்டை விடலனா கூட நீயி வுட்டுடாத… எப்படியும் உன் அண்ணன் சொந்தம் உன்னை விட்டு போகாது… அதுக்கு நான் எல்லாம் பண்ணிட்டேன்’ என்று ஒரு இக்கை வைத்தே இறந்துவிட அது என்னவென்று அறியாது…

அகத்தியனை தன் மகளுக்கு முடிக்க விரும்புவதை தான் அவ்வாறு கூறியிருப்பாரோ… இதை தன் அண்ணனிடமும் அவர் கூறியிருப்பார் என்று அவராகவே ஒரு யுகத்தை‌ வைத்து தான் தைரியமாக சுயம்புவிடம் பேச சென்றார். ஆனால் அப்பேச்சு தடைப்பட்டு விட பிறகு பேசிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து பெரு மூச்சு விட்டவர் நிமிர்ந்திட…

தள்ளாடியபடியே நடந்து வந்தார் விநாயகம்… அவரை தோளில் தாங்கியபடி அகத்தியன்… அதுவும் முழு போதையோடு… இருவரையும் கண்ட உமையாளின் கண்களில் நெருப்பு பறந்தது…

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!