வந்திருந்த உறவுக் கூட்டம் பாதிக்கும் மேல் குறைந்திருந்தது. மாப்பிள்ளை வீட்டாரும் சென்றிருக்க… நெருங்கிய சொந்தம் மட்டுமே நிறைந்திருந்தனர். எப்படியாவது தன் மனதில் இருப்பதை அண்ணனிடம் கேட்டு விட வேண்டும் என்று அவரின் அருகில் வந்தார் அங்கை.
“ஏய் வசந்தி என்னடி அந்த ஒன்னுமில்லாதவ கழுத்துல என்னைக்கும் இல்லாம இன்னைக்கு மினுமினுக்குது” என்று இடித்த தாய் வள்ளியை பார்த்து யார் என்பதாக கேட்க… அங்கையை கை காட்டினார் அவர்.
அப்போது தான் வசந்தியும் கவனித்தார். அவரின் கழுத்தில் இருக்கும் ஒற்றை பவுன் சைனும்… அவர் அணிந்திருந்த பட்டு சேலையும்… என்னவோ உறுத்தியது… இதில் தயங்கி தயங்கி தன் கணவனிடம் அவள் பேச நினைப்பதும்… ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று கணக்கு போட்டவர் கண்டு கொண்டார்.
Advertisement
எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று யோசித்த அங்கை எதர்த்தமாகவே ஆரம்பித்தார்.
“என்ன அண்ணா நம்ம மீனாவை பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரங்கன்னு நம்ம சொந்த பந்தம் யாரையும் கூப்பிடலய” என்றவளின் பார்வை வசந்தி உறவினர்களின் மீது நிலைத்திருக்க… அங்கு வந்துவிட்டார் வசந்தி.
“இப்போ என்ன சொல்ல வர அங்கை… உங்க சொந்த பந்தத்தை கூப்பிடலன்னு சொல்றியா… இல்ல எங்க உறவுக்காரங்களே நிறைஞ்சு இருக்கிறாங்கன்னு சொல்றியா… என்ன அர்த்தத்துல சொல்ற…”
Advertisement
“அய்யோ அண்ணி நான் அப்படி சொல்லல… சும்மா பொதுவா கேட்டேன்… என்ன தான் அங்காளி பங்காளிங்க கூட தகராரு இருந்தாலும்… உறவுன்னு அவங்களை மதிச்சு கூப்பிட்டதானே நாள பின்ன நமக்கு பிரச்சினைன்னா வந்து நிப்பாங்க…”
Advertisement
“அப்போ ஒரு பிரச்சினைன்னா என் சொந்த பந்தம் வந்து நிக்காது… வெறும் கறி சோத்துக்கு மட்டும் தான் எங்க வூட்டு ஆளுங்க வருவாங்க… அப்படியா” என்றிட பதறி தான் போனார் அங்கை...
“அய்யோ என்ன அண்ணி நான் அப்படி சொல்லவே இல்லை…” என்று கையை பிசைந்தார் அங்கை. அவர் எதர்த்தமாக பேச அதையை பிடித்து கொண்டார் வசந்தி. அவருக்கு அங்கை பேச நினைத்தது பேச கூடாது அவ்வளவே. இதை அறியாத அங்கையோ படபடப்பில் தத்தளித்தார்.
“அண்ணே நியாச்சும் அண்ணிக்கிட்ட சொல்லு நான் போய் அப்படி பேசுவனா” என்றிட மனைவியை ஒரு நொடி பார்த்தவர்…
“இனி இந்த மாதிரி பேசாத அங்கை” என்று அவருக்கும் ஒரு கொட்டு வைக்க…
“என்ன அண்ணே நீயும் நான் அப்படி தான் சொன்னேன்ங்கிற மாதிரி பேசுற… அப்போ நீயும் அப்படிதான் நினைக்குறியா” என்ற அங்கைக்கு கண்கள் கலங்கியது… தான் பேச வந்தது வேறு… ஆனால் இங்கு விடயமே வேறாக மாறியிருக்க... கேட்க வந்ததை கேட்க கூட தோன்றாது திரும்பியவரை அழைத்த சுயம்பு…
“இந்தா அங்கை இதை வைச்சுக்கோ” என்று ஆயிர ரூபாய் தாள்களை நீட்டியதும் மேலும் கண்கள் கலங்கி போனது…
“வேணாம்ண்ணே” என்றவருக்கு மனதெங்கும் ஆற்றாமை… ‘தான் என்ன எடுபடி வேலை செய்ய வந்த வேலைக்காரியா… பணத்தை எடுத்து நீட்டுகிறான்’ என்று நொந்தவராக திரும்பி சென்றார். அத்தனை வேலைகளை இழுத்து போட்டு செய்தவரை ‘ஒரு வாய் சாப்பிட்டு போ’ என்று அழைக்க தான் ஆளில்லை…
சுயம்பு வீட்டில் இருந்து வந்ததில் இருந்தே அங்கையின் முகம் தெளிவாக இல்லை. அன்னையின் முகத்தையே தான் மகள்கள் இருவரும் பார்த்திருந்தனர்.
“அம்மா என்னம்மா ஆச்சு… ஏன் ஒரு மாதிரி இருக்க… என்ன தான் நடந்துச்சு சொல்லேன்” என்ற விசாலட்சிக்கு முறைப்பே பதிலாய் கிடைத்தது. தாயையே பார்த்திருந்த உமையாளோ வாயை திறக்கவில்லை. இதில் தந்தை வேறு இரவில் இருந்து வீடு வராதது உறுத்தியிருக்க அதை தாயிடம் சொல்ல மனம் வரவில்லை.
அங்கையின் நினைப்பதெல்லாம் பெற்றவர்கள் மீது தான் இருந்தது. அவரின் பார்வையும் பெற்றவர்கள் புகைபடத்தின் மீதே நிலைத்திருக்க… என்னவோ இன்று பெற்றவர்களை அதிகம் தேடியது அவர் உள்ளம்.
‘தன் கணவன் மட்டும் சரியானவனாய் இருந்திருந்தால்... தன்னுடைய பெற்றோர்கள் உயிரோடு இருந்திருப்பார்களோ’ என்று தோன்றிட நினைக்காதே மனமே என்றாலும் அவரின் மனம் கடந்த காலத்தை அசைப்போட்டது
**********
முத்துவேல் மற்றும் சிவகாமியின் ஒரே புதல்வி தான் அங்கையற்கரசி. பெரும் பணக்காரர்கள் தான். தோட்டம்… துறவு… என நிலபுலன்களே பல ஏக்கர் இருக்கும்… அனைத்திற்கும் ஒற்றை ஆண் வாரிசு அங்கை யின் அண்ணன் சுயம்புலிங்கம். இருவருக்கும் மூன்று வருட இடைவெளி தான் எனினும் அங்கைக்கு அண்ணன் மீது அதிக பாசம் மற்றும் மரியாதை.
இருபத்தைந்து வயது அங்கைக்கு பெற்றோர் பார்த்த மணவாளன் தான் விநாயகம். தாய் இல்லாதவன்… தந்தை மட்டுமே… படிப்பு அவ்வளவு இல்லை… ஆனால் சொத்து பத்து எக்கச்சக்கம். அந்த ஒரு தகுதியே இவனுக்கு பெண்ணை கொடுக்க அங்கை வீட்டார் சம்மதித்து விட்டனர்.
அது மட்டுமின்றி ஒற்றை ஆண்வாரிசு எந்த பிக்கல் பிடுங்கலும் இருக்காது… ஒரே ஊர் மகளும் தங்களை விட்டு தூர செல்லமாட்டாள் என்று நம்பி அவனுக்கு பெண்ணை கொடுத்தனர்.
உண்மையில் விநாயகம் அத்தனை பாசமானவர்… கைப்பிடித்தவளை கண்ணாக பார்த்துக் கொள்ள பெற்றோருக்கு மனமெல்லாம் அத்தனை பூரிப்பு… ஆனால் என்னவோ ஒரு வருடமாகியும் அங்கைக்கு கரு தங்கவில்லை.
இதில் அனைவருக்கும் வருத்தம் தான் எனினும் அவர்களுக்கு காலம் இருக்கிறதே என்று மனதை தேற்றிக்கொண்டனர்… இது ஒருபக்கம் என்றால் மறுபக்கம் சுயம்புவிற்கு வரன்கள் வந்து கொண்டிருந்தது.
பெண்ணிற்கு நல்லது நடக்கவில்லை என்று மகனை விட்டுவிட முடியாது அல்லவா… மகனுக்கு ஏற்ற வரன்களை அலச ஆரம்பித்தார் சிவாகமி. அவ்வறாக சிவகாமியால் சலித்து தேர்ந்தெடுக்கப்பட்ட வரன் தான் வசந்தி.
அவளுமே திருமணம் முடித்து வந்த கையோடு மாமனார்… மாமியார்… நாத்தனார்… என் அனைவருக்கும் ஏற்ற வகையில் நடக்க சுயம்புவிற்கு பரம திருப்தி.
கல்யாணம் ஆண மூன்று மாதத்திலே வசந்தி கருத்தரிக்க சுயம்புவுக்கு அவ்வளவு சந்தோஷம். இதனை வீட்டில் தெரிவிக்க அனைவருக்கும் அத்தனை ஆனந்தம். ஏன் அங்கை கூட தன் அண்ணனுக்கு வாரிசு வரப்போகிறது என்று மனம் முழுதும் மகிழ்ச்சியே.
ஆனால் வசந்திக்கு தான் அவள் மகிழ்ச்சி பிடிக்கவில்லை. அங்கையின் முகத்தில் சிறு ஏக்கத்தை கண்டிருந்தால் கூட அவள் மனம் சந்தோஷபட்டிருக்குமோ என்னவோ…
ஏதோ அங்கை மனதில் ஒன்றை வைத்து நேரில் வேறு பேசுவதாகவே எண்ணிக் கொண்டாள். ஆனால் அங்கைக்கு தனக்கு இன்னும் காலம் இருக்கிறதே என்று நம்பினாள்.
அதை புரிந்து கொள்ளாத வசந்தியோ அங்கைக்கு தன் மீது உள்ளுக்குள் பொறாமை என்று நினைத்து கொள்ள அந்த எண்ணம் அவரின் மனதில் விருட்சமாக பரவியது…