Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என் செல்ல சீமாட்டி

என் செல்ல சீமாட்டி 8

அத்தியாயம் 8

பாட்டி கூறியிருந்ததை போல இருவரும் ஷேர் ஆட்டோவில் ஏறினார்கள். இருவரும் வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தனர்.



Advertisement

“என்ன அருணா? இந்த ஊர் இப்படி இருக்கு?”

“எப்படி இருக்கு?”

Advertisement

Advertisement

“நீ சொன்னதை எல்லாம் வச்சு நான் ஹல்த்வானி ஒரு கிராமம் மாதிரி இருக்கும். அங்கே போய் என்ன செய்றது? ஆர்கானிக் பார்மிங் மாதிரி எல்லாம் யோசிச்சு வச்சிருந்தேன். இப்ப பார்த்தா இந்த ஊர் பெரிய டவுன் போல இல்ல இருக்கு.”

“அது உன் தயாரிப்பு அப்படி” என்றாள் அருணா கடுப்பாக.

Advertisement

“ஏன் அருணா, சாதாரணமா தானே கேட்டேன்”

“இல்ல, என்ன ஏதுன்னு தெரியாம, நீயா இப்படி தான்னு நினைச்சு அதுக்கு ஒரு வழியையும் யோசிச்சு வச்சிருக்க பாரு. அதை சொன்னேன். நம்ம மம்மீஸ் நியாபகம் வந்துடுச்சு. இப்ப நாம இங்க அமைதியா முதலில் சுற்றத்தை உள்வாங்குவோம். பிறகு என்ன ஏதுன்னு யோசிக்கலாம். சரியா?”

“ம்ம்ம்… சரி.. சரி..” 

உத்தரகண்டில் உள்ள முக்கிய நகரங்களில் ஹல்த்வானியும் ஒன்று. இது பிரபலமான மலைவாச ஸ்தலங்களுக்கு அருகாமையில் உள்ளது. அதனால் பல சுற்றுலா பயணிகள் இங்கே வந்து தங்குவது உண்டு. சீசன் டைம்மில் இந்நகரம் எப்பொழுதையும்விட மிகவும் பரபரப்பாக இருக்கும். மேலும் இது ஒரு முக்கிய வர்த்தக மையமாகவும் அறியப்படுகிறது. இங்கே பெரிய காய்கறி சந்தை மிகவும் பிரசித்தம். சப்ஜி மண்டி என்பார்கள் அதனை. இந்த ஊர் எப்படி இருக்கும் என்றால், கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் திண்டுக்கல் போலன்னு சொல்லலாம்.

மதியம் பாட்டி வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். ஆரவாரமாக வரவேற்றார் கம்லா பாட்டி. இவர்களுக்கென பாட்டி ஒரு அறையை ஒதுக்கி கொடுத்திருந்தார். இருவரும் களைப்பு தீர குளித்து பாட்டியின் கைப்பக்குவத்தில் பாலக் கிச்சடியும், லஸ்ஸியும் என்று மதிய உணவையும் முடித்தனர்.

(பாட்டியுடனான சம்பாஷணைகள் ஹிந்தியில் தான்)

பின் பாட்டி அவர் வீட்டினை இருவருக்கும் சுற்றி காண்பித்தார். கீழே மேலே என்று இரண்டு அடுக்குகள் கொண்ட அழகான வீடு. வீட்டிற்கு முன்புறம் அழகான சிறிய தோட்டம் இருந்தது. கீழ் பகுதியில் முதலில் ஒரு சிறிய வரவேற்பறை, அதன் வலது பக்கம் பாட்டியின் அறையும் விருந்தினர் அறையும் என இரண்டு அறைகள். இடது பக்கம் சற்று விசாலமான அடுப்படி, அதனை ஒட்டி  மிகவும் அழகான பூஜை அறை.

“மேல் பகுதியும் இதை போலவே இருக்கும். மகள் குடும்பத்திற்கு” என்றார் பாட்டி.

பாட்டியுடன் துணைக்கு ருக்மணி என்ற பெண் இருந்தார். காலையில் பத்து மணி போல வருபவர் மாலை ஏழு மணிக்கு தான் அவர் வீட்டிற்கு செல்லுவார். கணவரை இழந்து மூன்று பெண் குழந்தைகளுக்கு தாய். 

“கொஞ்ச நேரம் இரண்டு பேரும் ஓய்வெடுங்கள்” என்று கூறிவிட்டு பாட்டி  தனதறைக்கு சென்றுவிட்டார்.

“அருணா, பாட்டி ரொம்ப நல்லவங்க இல்ல?”

“ஆமா குரு, எனக்கும் அவங்களை ரொம்ப பிடிக்கும்”

“ஆனாலும் எத்தனை நாளைக்கு இங்க இருக்க முடியும்” கவலையாக கேட்டான்.

“வந்து ஒரு நாள் கூட ஆகலை. சும்மா நொய் நொய்ன்னு பேசாம கொஞ்ச நேரம் படுங்க” என்றுவிட்டு கட்டிலில் ஒருபுறம் சென்று படுத்துவிட்டாள்.

பத்தே நிமிடத்தில் தூங்கியும் போனாள். தூக்கத்திலும் மிகவும் சோர்வாக இருந்தது அவள் முகம்.

குழந்தை பிறந்து ஒரு மாதம் தானே ஆகிறது. உடல் இன்னும் பலவீனமாக தானே இருக்கும் என்று அமைதியாக அவளருகில் சற்று நேரம் படுத்துகொண்டான்.

அரை மணி நேரத்திற்கு பிறகு மெல்ல எழுந்து வெளியே வந்தான். அங்கே வரவேற்பறையில் அழகான ஊஞ்சல் இருந்தது. அதன் சங்கிலி கொஞ்சும் கிளிகளும் ஆடும் மயில்களும் என அழகிய வேலைப்பாட்டுடன் அமைந்திருந்தது. அதை அருகில் சென்று பார்த்துக்கொண்டிருந்தான்.

“என்ன குரு, தூக்கம் வரலையா?” என்று வந்தார் பாட்டி.

“இல்ல பாட்டி, நீங்க தூங்கலையா?”

“எனக்கு மதியம் சரியா இருபது நிமிடம் தூக்கம் தான். டீ  குடிக்கிறியா?”

“கொஞ்ச நேரம் ஆகட்டும் பாட்டி.. நீங்க உட்காருங்க”

பாட்டி அந்த ஊஞ்சலில் ஏறி உட்கார்ந்துகொண்டார். பக்கத்திலே நீளிருக்கை இருந்தது. அதில் குரு அமர்ந்துகொண்டான்.

“இந்த ஊஞ்சல் ரொம்ப அழகா இருக்கு பாட்டி.”

“நான் ஆசை பட்டு வாங்கினது. என் முதல் மாத சம்பளத்தில். புருஷனை இழந்தவ, ஒய்யாரமா  ஊஞ்சல் ஆடலாமான்னு..” எங்க மாமியார் திட்டுவாங்க.

“அந்த காலத்துல இது எல்லாம் பெரிய விஷயம் இல்லையா பாட்டி?”

“அப்ப எனக்கு இருபது வயதிருக்கும். பதினைஞ்சு வயதுல கல்யாணம். பதினேழு வயதில் அவர் இறந்துட்டார். நான் இரண்டு மாதம் கர்ப்பம்.

அப்புறம் எங்க மாமியார் தான் என்னை படிக்க வச்சு வேலைக்கு போக சொன்னது. என் மகளையும் அவங்க தான் வளர்க்க உதவி செஞ்சாங்க.

ஆனா, இந்த ஊஞ்சல் மட்டும் அவங்களுக்கு பிடிக்காது”

“அவங்களுக்கு பிடிக்கலைன்னு நீங்க அப்ப இதுல ஆட மாட்டிங்களா பாட்டி?”

“ஹா..ஹா. ஹா..நல்லா கேட்ட போ… உங்களுக்கு பிடிக்காட்டி நீங்க உட்காராதீங்கன்னு சொல்லிட்டு, வேணும்னே வேகமா ஆடுவேன்

அவங்களே, ‘நான் ஒன்னு சொல்லல, மெதுவா ஆடு, விழுந்துடாதான்னு’ சொல்லிட்டு போய்டுவாங்க. அவங்க ரொம்ப நல்லவங்க, என்னை உருவாக்கினவங்க அவங்கதான்” என்றார் பாட்டி  உணர்ச்சிகரமாக.

குரு அமைதியாக கேட்டுக்கொண்டான்.

“என் கதையை விடு, அதை எல்லாம் பேசினா நான் பேசிக்கிட்டே இருப்பேன். உங்க கதையை சொல்லு” என்றார் பாட்டி அமர்த்தலாக.

“எங்க கதையா?”

“எதுக்கு அருணா வாடகைக்கு வீடு கேட்டா? எதுக்காக இங்க வந்திருக்கீங்க?” என்று நேரடியாகவே கேட்டார்.

குருவிற்கு சந்தேகமாக இருந்தது. ’இந்த பாட்டி எல்லாம் தெரிஞ்சு கேக்றாங்களா? இல்ல தெரிஞ்சுக்க கேக்றாங்களா?’ என்று.

குரு யோசனையாக இருப்பதை பார்த்துவிட்டு  “சொல்ல விருப்பம் இல்லனா சொல்ல வேண்டாம்” என்றார் பாட்டி. 

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல பாட்டி” என்றான் பதற்றமாக.

“ஏதோ ஒரு நம்பிக்கை என் மேல வந்ததால தானே இங்கே வந்திருக்கீங்க?எங்கிட்ட சொல்ற அளவு விஷயத்தை சொல்லு. நான் என்ன உதவ முடியும்ன்னு சொல்றேன்” என்றார்.

‘விவேக்குக்கு ஒரு படத்துல தண்ணீர்ல கண்டம்ன்னு ஒரு காமெடி வரும். அது மாதிரி எனக்கு பெண்கள் கிட்ட கண்டம் போல’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டான்.

பிறகு அவனுக்கும் பாட்டியிடம் உண்மையை மறைத்து இங்கே தங்குவது தவறாக படவும் பாட்டியிடம் உண்மையை கூறத் தொடங்கினான்.

“ஓரளவுக்கு எங்க நிலைமை உங்களுக்கு தெரியும் பாட்டி. குழந்தை இறந்தது அருணா மனசை ரொம்ப பாதித்திடுச்சு. எங்க வாழ்க்கை முறை, பெரிய கனவுகள், வீடு, கார், லோன், வேலை, ஸ்ட்ரெஸ், இப்படி நிறைய. அதற்கான ஓட்டம், ஓடியே ஆகனும்னு கட்டாய படுத்தின அம்மாக்கள். இது எல்லாம் தான் குழந்தையை இழக்க காரணம்ன்னு அருணா நினைக்கிறா”

இப்பொழுது பாட்டி அமைதியாக குரு சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தார்.

அதனால,எல்லாத்தையும் விட்டுட்டு தூரமா போகலாம்னு அருணா நினைச்சா. சரி எங்கயாவது போகலாம்னு யோசிச்சிட்டு இருந்தோம்.

”நாங்க படிக்க வைக்கலானா நீங்க எப்படி வந்திருக்க முடியும், நீங்க எதுக்கும்   லாயக்கு இல்லன்னு அம்மாங்க  சொல்லி காட்டுனாங்க, மேலும் அவங்க சொல்ற மாதிரி நாங்க நடக்கணும்னு எங்களை கட்டாய படுத்தினாங்க. அதனால  எல்லாத்தையும் வித்து செட்டில் பண்ணிட்டு வந்த காசையும் வீட்ல கொடுத்திட்டு இங்க கிளம்பி வந்துட்டோம்” என்றான் சுருக்கமாக.

“வேலையை என்ன பண்ணுனீங்க? மொத்த காசும் கொடுத்துட்டீங்களா?”

என்று கேட்டார் பாட்டி.

“வேலையை விட்டுட்டோம் பாட்டி, நாலு லட்சம் மட்டும் கையில் வச்சிருக்கோம். அத வச்சு தான் எதாவது பண்ணனும்”

“கஷ்டமான சூழல் தான், சரி, அருணா எதுவும் வேணாம்னு நினைச்சா, அதுவும்  சரி. நீ இதுக்கு எப்படி சம்மதிச்ச?”

“நான், தேவையான நேரத்துல பேசி இருக்கனும். அவள் உடல் நிலையில் அக்கறையா இருந்திருக்கனும். எங்க அம்மாவும் அவங்க அம்மாவும் சேர்ந்து படுத்தின அப்ப, திடமா அவகூட நின்னிருந்துக்கணும். அவள் யாரும் இல்லன்னு நினைக்கிற நிலைமையை கொடுத்திருக்கேன்னு என் மேல எனக்கு குற்ற உணர்ச்சி பாட்டி. அருணா ரொம்ப நல்ல பொண்ணு பாட்டி. ரொம்ப எளிமையான பொண்ணு. அவளுக்கு அன்பான அழகான குடும்பம் மட்டும் தான் கனவு பாட்டி. இனிமே எப்பவும் அவகூட துணையா நிக்கனும்னு ஆசை படுறேன். அதான் நானும் இதுக்கு ஒத்துக்கிட்டேன்”

“எல்லாம் சரி, சந்தோசம். இங்க என்ன பண்ணலாம்னு இருக்கீங்க? வேலை கிடைக்கிற வரை இங்கே தங்கலாம்னு யோசனையா?”

“இல்ல பாட்டி. அவ படிப்பை உபயோகிக்க வேணாம்னு சொல்றா”

“முட்டாள்தனமா இருக்கு நீங்க யோசிக்கிறது. அப்பா அம்மா  பிள்ளைங்க நல்லதுக்கு எதாவது சொல்லுவாங்க தான். அவங்க சொல்ற முறை வேணா  தப்பா இருக்கலாம், ஆனா எந்த அப்பா அம்மாவும் பிள்ளைகளுக்கு கெட்டது நினைக்க மாட்டாங்க. உங்களை அவங்க அதிகாரம் செய்ய நினைக்கிறது தப்பு தான். அதுக்காக நீங்க வேண்டாம் நீங்க கொடுத்த படிப்பு வேண்டாம்னு சொல்ல  கூடாது, அது தப்பு” என்றார் காட்டமாக.

“அது அப்படி இல்ல பாட்டி..அது வந்து..”

“உன் பொண்டாட்டியை பார்த்துக்க நினைக்கிறது நல்ல விஷயம் தான். ஆனா அவ தப்பா யோசிக்கும் போது எடுத்து சொல்லணும். எல்லாத்துக்கும் தலையை ஆட்டக்கூடாது”

“பாட்டி”

“நீ விடு, அருணா எழுந்திரிக்கவும் நான் பேசிக்கிறேன்”

“பாட்டி, உங்க கிட்ட அவளே மெதுவா எல்லா விஷயமும் சொல்றதா தான்  சொன்னா”

பாட்டி பதில் கூறாமல், மெதுவாக ஊஞ்சல் ஆடத் தொடங்கினார்.

“போச்சு.. போச்சு.. அருணா வந்து என் மண்டையை உடைக்க போறா. இந்த பாட்டி நைசா பேசி எல்லா விஷயத்தையும் போட்டு வாங்கிடுச்சே” என்று நொந்து போனான் குரு.

“இந்த பாட்டி என்ன, எங்க அம்மா அத்தை எல்லாரையும் மிஞ்சிடும் போலவே. நான் சொர்ணம் பாட்டி மாதிரி நினைச்சு எல்லாத்தையும் உளறிட்டேனே? இவங்க நல்லவங்களா கெட்டவங்களா?” என்று முழித்துக்கொண்டு மனைவி கேட்டால் எப்படி சமாளிப்பது என்று அமர்ந்திருந்தான்.

நன்றாக தூங்கி எழவும், சற்று தெம்பாக இருந்தது அருணாவிற்கு. முகம் கழுவி வெளியே வந்தாள் பெண்.

கடுப்பான முகத்துடன் பாட்டி ஊஞ்சலிலும், திருட்டு முழியுடன் கணவன் அவர் அருகிலும் அமர்ந்திருப்பதை பார்த்ததும்,

“நம்ம நல்லவன் புருஷன் எல்லாத்தையும் சொல்லிட்டான் போலயே” என்று மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டு, “நீங்க இரண்டு பேரும் தூங்கலையா, நான் நல்லா தூங்கிட்டேன். டீ குடிச்சிட்டீங்களா?” என்று சாதாரணமாக கேட்டுக்கொண்டே குருவின் அருகில் வந்து அமர்ந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!