Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

பூவிடைப் பனித்துளிகள்

poovidai panithuligal 14 by Aruna Kathir

பூவிடைப் பனித்துளிகள்

அத்தியாயம் 14



Advertisement

அன்றைய தினம் தினேஷிடமும், பரிமளாவிடமும் பரணியின் செய்கையை பற்றி புலம்பினாள். அவளால் செய்ய முடிந்தது அது மட்டுமே. “அவன் இருக்க கம்பெனியில வேலைக்கு சேர்றதா வேணாமான்னு அப்படி யோசிச்ச? அவன் மெசேஜ் பண்ணலைன்னா நிம்மதின்னு வேலை செய்ய வேண்டியது தானே! இப்போ ஏன் மருகற?” என்று தினேஷ் திட்டினான்.

பரிமளாவோ, “ஒரு வெல்கம் சொல்லியிருக்கலாம் தான். சரி, அவன் ஏதாவது வேலையா இருந்திருக்கலாம். இல்ல, அவன் வெல்கம் சொல்லி நீ தேங்க்யூ சொல்லாம அவாய்ட் பண்ணியிருந்தா அப்போ அவனுக்கு ரொம்ப இன்சல்டிங்கா ஃபீல் ஆகிடுமேன்னு பயந்து அனுப்பாம இருந்திருக்கலாம். எப்பவும் உன் பாயிண்ட் மட்டுமே யோசிக்காத திவி. அவங்க சைடும் ஒரு எண்ணம் இருக்கும். அதையும் யோசிக்க பழகு” என்று சமாதானப்படுத்தினாள்.

இருவரின் பேச்சையும் மனதினுள் ஆராய்ந்த திவ்யாவிற்கு, ‘ஒருவேளை பரி சொல்வது போல, எங்கே நான் திரும்ப நன்றி சொல்ல மாட்டேனோ என்ற ஐயம் ஏற்பட்டிருக்குமோ?’ என்று தோன்றியது. அந்த ஐயத்தை களைந்து கொள்ளும் பொருட்டு, அடுத்த தினம், அவன் பர்சனல் மெசஞ்சரில் அவளாகவே, ‘குட் மார்னிங்’ என்ற செய்தியைத் தட்டியிருந்தாள்.

Advertisement

‘நானா மெசேஜ் பண்ணா வழியறேன்னு நினைச்சுக்குவானோ? என்னவோ நினைச்சுக்கட்டும். இவனைப் பத்தியே யோசிச்சுட்டு இருந்தா என்னால நிம்மதியா வேலை பார்க்க முடியாது. அதனால, டீம்ல இருக்க மெம்பர்னு ஹாய் பாய் அளவிலயாவது பேச்சு இருக்கணும். இப்படி எல்லார் முன்னாடியும் அவாய்ட் பண்ண வேண்டாம்னு சொல்லிடணும்’ என்று முடிவெடுத்திருந்தாள்.

Advertisement

மாலை வரையிலும், வேலையில் ஒரு கண்ணும், பரணியின் பெயர் பக்கம் இருக்கும் க்ரே வட்டம், எப்போது பச்சையாக மாறும் என்ற எண்ணமும் ஒருங்கே கொண்டு வேலை செய்தாள். முன்தினம் கொடுத்த சற்றே சவாலான டிஃபெக்டை திவ்யா சரி செய்திருக்க, “வெரி குட் திவ்யா. இது கொஞ்சம் க்ரிட்டிகல் எரர் தான். ஆனா ஒரே நாள்ல முடிப்பீங்கன்னு நான் எக்ஸ்பெக்டே பண்ணல” என்று பாராட்டிய குமரேசன், அதே செய்தியை குழுவிலும் பகிர்ந்திருந்தார்.

அதற்கும் மற்ற அனைவரும் பாரட்டிவிட்டிருந்தனர். மாலையில் ஆன்லைன் வந்த வருணும், “குட் ஜாப் திவ்யா” என்று செய்தி தெரிவித்துவிட்டான். பரணி ஆன்லைன் வந்து அரை மணிக்கும் மேலே ஆகியிருந்தது. ஆனால், அவளுக்கு வழக்கம் போல் தன் மெளனத்தையே பரிசளித்திருந்தான்.

அத்தோடு போகாமல் அவளது தனிப்பட்ட காலை வணக்கத்திற்கும் எந்த மறுமொழியும் சொல்லாததோடு, ‘தனியா ஏதோ மெசேஜ் அனுப்பியிருந்தீங்களே, என்ன விஷயம்?’ என்று பொதுவாக குழுவில் கேட்டு வைத்திருந்தான்.

Advertisement

திவ்யாவிற்கு அதைப் படிக்கவும் தூக்கிவாரிப் போட்டது. ‘ஐய்யோ, தனியா இவனுக்கு குட்மார்னிங் அனுப்பினதுக்கு அங்க ரிப்ளை பண்ணாம, க்ரூப்ல என்ன அனுப்பிச்சீங்கன்னு கேட்டிருக்கான். எல்லாரும் என்னை என்ன நினைப்பாங்க? ரிப்ளை பண்ண இஷ்டம் இல்லைன்னா, அத்தோட விட வேண்டியது தானே? எதுக்கு என்னை அசிங்கப்படுத்தணும்?’ என்று ஆத்திரம் எழுந்தது.

அவனின் கை ஓங்க விடக் கூடாது என்ற எண்ணமும், தன்னைத் தாழ்த்தப் பார்க்கிறானே என்ற கவலையும் ஒன்று கூட, ‘சாரி சார். ஒரு டவுட் கேட்க தான் மெசேஜ் பண்ணேன். மொதல்ல விஷ் பண்ணிடலாமேன்னு குட்மார்னிங் சொன்னேன். வேற ஒண்ணுமில்லை’ என்று சமாளிப்பாக குழுவில் பதில் தட்டினாள். ஆனாலும் இதையெல்லாம் அடிக்கும் முன்னர், பின்னங்கழுத்து ஏ.சி குளிரையும் தாண்டி வியர்த்து விட்டிருந்தது.

அவளது பதிலைக் கண்டவன் அமைதியாக கடந்து விடுவானென்று திவ்யா எதிர்பார்க்கவில்லை தான். ‘உங்களுக்கு என்ன டவுட்னாலும் டி.எல் குமரேசன் சார்கிட்ட கேட்டு க்ளியர் பண்ணிக்கோங்க. நானும் இங்க உங்களை மாதிரி சீனியர் ரிசோர்ஸ் தான்’ என்று பதிலளித்தான்.

திவ்யாவிடம் இந்த சால்ஜாப்பு எல்லாம் என்றும் பலித்தமாகாது. பல வருடங்களாக கழுவுகின்ற மீனில் நழுவும் மீனாக பதில் சொல்லிப் பழகியவள் என்பதால், ‘ஓ, சாரி சார். நீங்க சீனியர் ரிசோர்ஸ்ன்னு தெரிஞ்சு தான் உங்ககிட்ட கேட்கலாம்னு நினைச்சேன். என்ன டவுட்னாலும் கேளுங்க க்ளியர் பண்ணுவாருன்னு டி.எல் தான் சார் சொன்னாரு.’ என்று சொன்னவளின் பதிலில், அமெரிக்காவில் தன் மடிக்கணினி முன்பு அமர்ந்திருந்த பரணி சத்தமாகச் சிரித்தான்.

“நீ இன்னும் மாறவே இல்லல! உன்னை லேசா ஒரு குத்து குத்திட்டா அடுத்தவங்களை குறைஞ்சது பத்து குத்தாவது திரும்ப குத்திடணும். இல்லன்னா மனசே ஆறாதே!” என்று முணுமுணுத்தவன், அவள் மறுமொழிக்கு பதில் மொழி சொடுக்கினான்.

‘பத்து நிமிஷத்தில உங்க டவுட்டை க்ளியர் பண்ண ஆள் இருக்கறப்போ, பத்தாயிரம் மையில் தள்ளி உட்கார்ந்திருக்க என்கிட்ட கேட்க என்னங்க அவசியம். நீங்க என்ன டவுட் வந்தாலும் குமரேசன் கிட்டயே கேட்டுக்கோங்க.’ என்று தட்டினான்.

இதற்கு நீண்ட நேரமாக திவ்யா ஏதோ எழுதுவதும், அழிப்பதுமாகவே இருக்க, அவனுக்கு வேறு வேலைகளை இருந்த காரணத்தினால் அதில் மூழ்கிப் போனான்.

திவ்யாவிற்கு இங்கே பரணியின் மேல் அவ்வளவு கோபம் எழுந்திருந்தது. ‘என்ன நினைச்சுகிட்டு இப்படி பேசறான் இவன்? ஆமா, இவனை கொஞ்சம் பிடிச்சது. அப்பப்போ சைட் அடிச்சேன் தான். ஆனா அதுக்கு மேல, இவன் லவ் பண்ணறேன்னு வந்து நின்னப்போ, ரொம்ப டீசண்டா சாரி சொல்லிட்டு நகர்ந்துட்டேன்ல. என்னமோ நான் இவனை வருஷகணக்கா லவ் பண்ணி ஏமாத்திட்ட மாதிரி இவ்வளோ ஃபீல் பண்ணறான்.

சரி, இவ்வளோ வருஷம் கழிச்சு, மீட் பண்ணறோமேன்னு ஹாய், நல்லா இருக்கியாங்கற அளவுக்கு மெயிண்டெயின் பண்ணிக்கலாம்னு பார்த்தா, என்னமோ இவன் மேல நான் விழுந்து விழுந்து பேசற மாதிரி என்ன ஒரு சீன்? அதும் வந்த ரெண்டாவது நாள்ல இவன் இப்படி பேசி வச்சா, மத்தவங்க என்னை பத்தி என்ன நினைப்பாங்க?’ என்று பொருமியவளுக்கு கொஞ்சமும் ஆத்திரம் அடங்கவில்லை.

அந்த ஆத்திரத்துடன் கணினியை மேய்ந்து கொண்டிருந்தவளுக்கு அல்வா போல அந்த விஷயம் மாட்டியது. அவளுக்கு அலாட் செய்யப்பட்டிருந்த பத்து பனிரெண்டு டிஃபெக்டுகளில் ஒரு டிஃபெக்டில், ‘பரணிதரன்’ என்று இருக்க அதை எடுத்து நோட்டம் விட்டாள்.

அந்த குறையை பரணி இந்தியாவில் இருந்த சமயம் செய்து முடித்திருப்பான் போலும், ஆறு மாதங்களுக்கு முன்னர் என்று தேதியில் காட்டியது. சாதாரண, ‘பிரையாரிட்டி 4’ வகை குறை தான்.

மெல்ல களைந்தால் போதுமானது என்பதால் இத்தனை நாட்களும் கிடப்பிலேயே இருந்தது. பி1, பி2 டெஃபெக்ஸ்க்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். பி4 எல்லாம் மெல்ல சாவகாசமாக பார்த்துக் கொள்ளலாம் வகையறா தான்.

இவன் பெயர் போட்டிருந்த காரணத்தினால் அதில் தப்பு கண்டுபிடிக்கலாம் என்று ஆராய்ந்தவளுக்கு, ‘இவன் என்ன குடுத்திருக்கற க்ளையண்ட் ரிக்வெஸ்டுக்கு சம்பந்தமில்லாம என்னவோ பண்ணி வச்சிருக்கான்’ என்று உதயமாயிற்று.

‘மாட்டுனியா பம்பரகட்ட மண்டையா!’ என்று குதூகலத்துடன், அந்த குறையின் அடி ஆழம் வரையிலும் சென்று நோண்டினாள். பரணி தன்னைச் தவறாக சித்தரிக்க நினைத்ததை மனதில் கொணர்ந்து நிறுத்தியவள், அடுத்த வினாடியே குமரேசனை அழைத்து அருகே அமர்த்திக் கொண்டாள்.

“ஸார், இந்த பி4 டிஃபெக்டை ரெக்டிஃபை பண்ண எடுத்தேன். இதோட டாகுமெண்ட் படிச்சா, இது பி4 மாதிரி இல்ல சார். இந்த கோடிங்க பாருங்க. இங்க டச் பண்ணா, நிறைய பி1, பி2 டிஃபெக்ட்ஸ் அஃபெக்ட் ஆகும். சோ, இதை முன்னாடி பண்ணவங்க, பி4ன்னு சும்மா போட்டு டிஃபெக்டை க்ளோஸ் பண்ணிட்டாங்க போல” என்று அப்பாவியாய் மொழிந்தாள்.

குமரேசனும் தன் பங்கிற்கு அந்த பி4 கோடிங்கை ஆராய்ந்துவிட்டு, திவ்யா சொல்வதை சரியென்று ஒப்புக் கொண்டார். “எதனால பரணி இந்த டிஃபெக்டை இப்படி பி4 ஆக மாத்தி க்ளோஸ் பண்ணியிருக்கான்னு தெரியலையே. நான் மெயில் பண்ணி கேட்டுக்கறேன்.” என்று யோசனையுடன் சொன்னவர், “வெல்டன் திவ்யா! கேரி ஆன் யுவர் வொர்க்” என்று அவளையும் பாராட்டிவிட்டே சென்றார்.

அவர் சென்ற பிறகு, திவ்யாவிற்கு நிம்மதி ஏற்பட்டிருக்குமா என்றால் உண்மையில் அப்படித் தோன்றவில்லை. ‘என்னடீ அவனை மாட்டிவிட்டுட்டியே! பாவம்ல’ என்றே மனம் கிடந்து அரற்ற துவங்க, அதன் சீண்டலை மூட்டை கட்டி மூலையில் போட்டுவிட்டு தன் வேலையைத் தொடர்ந்தாள்.

பரணியின் மீது தான் கண்டறிந்த தவறை சரி செய்யும் பணியும் அவளிடமே வந்து சேரும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அடுத்த தின மீட்டிங்கில் அப்படித் தான் முடிவானது. “பரணி இப்போ வேற பி1 டிஃபெக்ட்ஸ் நிறைய பார்த்துட்டு இருக்கான். சோ, இந்த பி4 டிஃபெக்ட்ஸ பி1 டிஃபெக்டா மாத்தி, இதில நீங்க வொர்க் பண்ண ஆரம்பிங்க திவ்யா. கஷ்டமான டிஃபெக்ட் தான். இதைத் தொட்டா நிறைய இடத்தில அடிவாங்கும். அதெல்லாம் ஒவ்வொன்னா ரெக்டிஃபை பண்ணனும்.”

“ஓகே சார்.” என்று சொல்லும்போதே திவ்யாவிற்கு குரல் உள்ளே சென்றிருந்தது. பின்னே, அவள் அலுவலகத்தில் சேர்ந்து இன்னமும் ஒரு வாரம் கூட முழுவதுமாக ஆகவில்லை. அதற்குள் க்ரிடிகல் டிஃபெக்டில் இறங்கினால் அதை முடிக்க பெரும்பாடு படவேண்டி இருக்கும்.

ஆயிரக்கணக்கான வரிகளைக் கொண்ட கோடிங்கில் மூழ்கிப் போய்விடுவாள். வேலை பளுவை விடவும், “என்ன டவுட்ஸ்னாலும் நீங்க தயங்காம பரணிகிட்ட கேட்கலாம். ஹி வில் கைட் யூ.” என்று கான்ஃபரன்ஸ் காலில், பரணி இருக்கையிலேயே சொல்லியிருந்தார் குமரேசன்.

இதற்கு மறுமொழியாக, ‘நான் பார்த்துக்கறேன், ஐ வில் ஹெல்ப் ஹர்’ என்று சம்பிரதாயமாக கூட பரணி சொல்லவில்லை. லேசாக தலையசைத்தானே தவிர, ‘உதவி செய்கிறேன்’ என்று சொல்லவும் இல்லை, திவ்யாவின் பக்கம் மறந்தும் கூட கண்களைத் திருப்பவில்லை.

‘கண்டிப்பா இவன் ஒரு துளி உதவி கூட பண்ணப் போறதில்லை’ என்பது பரணியின் செய்கையில் இருந்தே திவ்யா உணர்ந்திருந்தாள். அதிலும் பரணியின் அலட்சியமான முகத்தைப் பார்க்கையில், ‘ஆமா, இவன் ஹெல்ப் பண்ணலைன்னா என்ன இப்போ? இவனை நம்பியா நான் இந்த வேலையில சேர்ந்தேன். கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் நானே சமாளிச்சுக்குவேன்’ என்ற உறுதியும் உண்டாகியது.

மீட்டிங் முடியவும், தன் கணினியை உயிர்ப்பித்தவளுக்கு பரணியிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி காத்திருந்தது. சற்றே ஆர்வமாக அதை வாசித்தவளுக்கு பரணியின் மீது கடும் கோபமே எழுந்தது. அவன் செய்தியை டி.எல் குமரேசனிடம் காட்டிவிடலாம் என்னும் அளவிற்கு எரிச்சல் உண்டாகியிருந்தது.

அவன் அனுப்பியிருந்தது ஒரு படம். படத்தில் ஒரு யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொண்டிருந்தது.

“அதாவது, என் தலையில நானே மண்ண அள்ளி போட்டுகிட்டேனாம் டா, எவ்வளோ திமிரு பாரு! இவன் பண்ணின கோல்மாலை நான் காட்டிக்கொடுத்துட்டேன்ல அந்த ஆத்திரம்.” என்று அன்று தினேஷிடம் புலம்பினாள்.

“நீ சும்மா இருந்திருக்க மாட்டியே? நீ என்ன பண்ணி வச்ச? அதை சொல்லு?” என்றான் தினேஷ்.

“நான் ஏன் சும்மா இருக்கணும். நானும் பதிலுக்கு ஒரு பிக் அனுப்பினேன். அதும் நம்ம தளபதி ஸ்டைல்ல. ‘நீ விதைத்த வினையெல்லாம் உனை அறுக்க காத்திருக்கும்’ன்னு எப்படி எப்படி? சூப்பர்ல” என்று சொல்லும்போதே திவ்யாவிற்கு மட்டற்ற சிரிப்பு.

“செம… மியூசியத்தில வைக்க வேண்டிய மூளை தான்! எப்படித்தானோ போ!” என்று முடித்துக் கொண்டான் தினேஷ்.

திவ்யாவின் மனதில் இது பெரும் உவகை தான். “என்னை எல்லார் முன்னாடியும் டீம்ல அவமானப்படுத்த நினைச்சான்ல, இப்போ அவன் பண்ண வேலை சரியில்ல, பெரிய டிஃபெக்டை பி4 ஆக காமிச்சு க்ளோஸ் பண்ணியிருக்கான்னு அவன் மேல காண்டா இருப்பாரு குமரேசன் சார். என் பேரை நீ கெடுக்க நினைச்ச, ஆனா உன் பேர் இப்படி ஆகிப்போச்சே பரணி! இப்படி ஆகிப்போச்சே’ என்று குதூகலித்துக் கொண்டாள்.

ஆனால், இதையெல்லாம் சமாளிக்கத் தெரியாதவன் அல்ல பரணி என்று அவள் உணரவில்லை. அவன் குமரேசனிடம் கான் காலில் தனியாக இதற்கான உண்மை விளக்கம் சொல்லியிருந்தான். “சார், இது நாம ஏற்கனவே டிஸ்கஸ் பண்ணது தான். இதை தனி க்ளையண்ட் ரெக்வெஸ்டாவே போட்டு வாங்கி வேலை பார்க்கணும். பில்லிங் அதிகமாகும். என்ன பண்ணலாம்.” என்று குமரேசனிடம் பேசி, இதில் தன் தனிப்பட்ட தவறு எதுவும் இல்லை என்று நிரூபித்து, ப்ராஜெக்டின் மற்ற வேலைகள் தடைபடாமல் இருக்கவே தான் இதைச் செய்தேன் என்று சொல்லி, தன் பெயரைக் காப்பாறிக் கொண்டிருந்த விஷயம் திவ்யாவிற்குத் தெரியாது.

இப்படியாக, திவ்யாவும், பரணியும் கொஞ்சமும் ஒட்டாமல் ஒரே டீமில் வேலை பார்த்து வந்தனர். திவ்யா வேலைக்குச் சேர்ந்து சடுதியாக ஆறு மாதங்கள் கழிந்திருந்தது.

புது வேலையில் கிடைத்த சம்பள உயர்வை மனதில் கொண்டு, செளமியா அக்கா வீடு வாங்கும் பொருட்டு, இன்னமும் மூன்று லட்சம் தனிப்பட்ட கடன் வாங்கி தந்தைக்குக் கொடுத்திருந்தாள்.

“புது வேலையில முன்ன விட சம்பளம் அதிகம் தான்ப்பா. அதனால லோன் எக்ஸ்டென்ட் பண்ணியிருக்கேன். நீங்க உங்க சைட்ல எவ்வளோ முடியுதோ பிரட்டி அக்காவுக்கு குடுத்திடுங்க.”

“திவிமா, இப்படி கடன் மேல கடன் வாங்குறது நல்லாவா இருக்கு? நாளைக்கு உனக்குன்னு ஒரு கல்யாணம் காட்சி வைக்க, உன் செலவுகளுக்குன்னு சேமிப்பு கொஞ்சமாச்சும் இருக்கணும்ல டா.”

“பார்த்துக்கலாம்ப்பா. எனக்கு இப்போ தானே 24 ஆகுது. இப்பவே என் கல்யாணத்துக்கு என்ன அவசரம்? இன்னும் ஒரு ரெண்டு வருஷம் போட்டும்பா. அதுவுமில்லாம, இந்த கம்பெனில, ரெண்டு மூனு வருஷத்திலையே அமெரிக்கா போற வாய்ப்புகள் கிடைக்கும்பா, நான் வேலை செய்யறதும் யு.எஸ் ப்ராஜெக்ட் தான். சோ, அங்க போற சான்ஸ் கிடைச்சா, ஒரே வருஷத்தில என் கடனெல்லாம் அடைச்சிடுவேன்ப்பா” என்று திடமாக தந்தை ரகுராமனுக்கு தைரியமூட்டியிருந்தாள்.

“அமெரிக்கா விசா கிடைக்கறது கஷ்டமாச்சே திவிமா.”

“ஆமா பா, இப்போ லாட் சிஸ்டம் மாதிரி தான் கிடைக்குது. அதனால எங்க ப்ராஜெட்ல இருக்கறவங்களுக்கு இப்போவே லாட்ல போட்டு வச்சிருக்காங்க. கிடைச்சா எப்போ வேணுமோ அப்போ யூஸ் பண்ணிக்கலாம்னு.” என்று சமாதானப்படுத்தி தைரியமூட்டினாள்.

அவள் வாய் முகூர்த்தம் பலிப்பது போல, அமெரிக்கா செல்லும் வாய்ப்பு தானாகவே தேடி வந்தது.

அன்று அலுவலகம் சென்றதுமே, “கம் டு மீடிங் ரூம்மா” என்று குமரேசனிடம் இருந்து அழைப்பு.

“திவ்யபாரதி, நான் வர்ற ஜனவரில யு.எஸ் போறேன்னு உங்களுக்கு தெரியும் இல்லையா?”

“எஸ் ஸார்”

“அதில கொஞ்சம் காம்ப்ளிகேஷன்ஸ் ஆகிடுச்சு. பர்சனல் ரீசன்ஸ் தான்.” என்று சற்றே முகம் சுருக்கினார். அவர் மேலே தொடர திவ்யா காத்திருந்தாள். இரண்டாவது குழந்தை ஒரு வாரத்திற்கு முன்பு தான் பிறந்திருந்தது குமரேசனுக்கு.

“என் வைஃப் செகண்ட் பேபி டெலிவரி ஆகியிருக்கில்ல. கொஞ்சம் மெடிக்கல் காம்பிளிகேஷன்ஸ்னால இன்னும் ஆறு மாசத்துக்கு அவளால ட்ராவல் பண்ண முடியாது. தனியா விட்டுட்டு போகவும் எனக்கு நிம்மதியா இருக்காது. சோ, எனக்கு பதிலா உங்களை அனுப்பலாம்னு நினைக்கறேன். உங்களுக்கு ஓகேவா?” என்று திடுமென கேட்க, திவ்யா சற்றே தடுமாறினாள்.

அவர் கேட்டதுமே முந்திரி கொட்டைக்கு நான் தான் அக்கா என்று நிரூபிப்பது போல, ‘ம்ம்ம், இந்த வார்த்தை கேட்க ஒரு வருஷம் காத்திருந்தேன்’ என்று பாட்டு பாடத் தோன்றியது. ஆனால், அது போல் காட்டிக் கொள்ளாமல் மேம்போக்காக தனக்கு இதில் அப்படியான உடன்பாடு இல்லை என்பது போலவே காட்டிக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் வேறு.

“சார்… அது வந்து… நான் எப்படி சார்?” என்று சற்றே பவ்யமாக வினவினாள் தான்.

“நீங்க ஜாயின் பண்ணி ஆறு மாசம் தான் ஆகியிருக்கு. உங்களை விட, சிவதானு, சரினாலாம் சீனியர்ஸ் தான். அதனால உங்களுக்கு தயக்கம் வேண்டாம் திவ்யா. இது கவர்மெண்ட் ஆபீஸ் இல்ல, இங்க சீனியாரிட்டிலாம் ஒரு விஷயம் இல்லை. திறமைக்கு தான் இங்க அங்கீகாரம். ஆறு மாசத்தில இந்த புராகெட்டோட நிறைய பி1 டெஃபெக்ட்ஸ் நீங்க க்ளியர் பண்ணியிருக்கீங்க. அதனால, உங்களை ஆன்சைட் அனுப்பினா, வேலை ஃபாஸ்டா நடக்கும்.” என்று நிதானமாக விளக்கினார்.

எங்கே ரொம்பவும் பிலுக்கு காட்டினால், ‘சரிம்மா, நீ இவ்வளோ தயங்கறப்போ உன்னை அனுப்ப வேண்டாம். நான் மத்த பேர்கிட்ட கேட்கறேன்’ என்றே எங்கே மனம் மாறிவிடுவாரோ என்ற அச்சத்தில், அவர் மறுமுறை விளக்கம் கொடுக்கும் முன்னர், “எனக்கு ஓகே சார். இப்படி நல்ல ஆப்பர்சூனிட்டி அடிக்கடி வராது. தேங்க்ஸ் ஃபார் கன்சிடரிங் மீ சார்.” என்று புன்னகையுடன் கூறினாள்.

இவள் அமெரிக்கா செல்வது அன்றைய தினமே டீமில் மற்றவருக்குத் தெரிந்து போக, சிவதானுவும், சரீனாவும் வாழ்த்து தெரிவித்தனர். சிவதானுவுக்கு முழு மகிழ்ச்சி இல்லை என்பது அவன் விட்டேற்றியான வாழ்த்திலேயே தெரிந்து போனது. “ம்ம்ம், எல்லாத்துக்கும் கொடுப்பனை வேணும் போல, எஞ்சாய் எஞ்சாய்” என்று மேம்போக்காகவே வாழ்த்தினான்.

சரினாவுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருந்த காரணத்தினால், அவரால் எளிதில் வீட்டை மொத்தமாக கணவரின் மேற்பார்வையில் விட்டு எங்கேயும் செல்ல முடியாது என்ற நிர்பந்தம். அதனால் அவருக்கு அமெரிக்க வாய்ப்பு பரிபோனதில் அத்தனை வருத்தம் இருக்கவில்லை.

வீட்டில் பெற்றோரிடம் விஷயத்தைப் பகிர்ந்து கொண்டாள். தந்தை முழு மனதுடன் வாழ்த்தினார். “எனக்குத் தெரியும்டா. என் திவ்யா திறமைக்கு, நீ பெரிய பெரிய உயரத்துக்கு போவன்னு” என்று பெருமையாக பேசினார்.

“டீ, கல்யாணத்துக்கு பார்க்கலாம்னு நினைக்கற இந்த நேரத்தில, நீ யு.எஸ் போறேன்னு சொல்லற? எப்படிடீ?” என்று ஒரு தாயின் மனவருத்தம் மேலோங்க தயக்கம் காட்டினார் மஞ்சுளா.

“ம்மா, ஒரு வருஷம் தான்மா. வந்ததும் உன் ஆசைப்படியே கல்யாணம் பண்ணிக்கறேன். என்ன? ப்ளீஸ்மா. முழு மனசோட ஓகே சொல்லும்மா. அப்போ தான் எனக்கு நிம்மதியா இருக்கும்” என்று கொஞ்சி சம்மதம் வாங்கிவிட்டாள்.

“ஏ, சூப்பர்டீ. ஆறு மாசத்திலயே அப்ராட் சான்ஸ் கிடைக்கறதுலாம் வேற லெவல். நானும் தான் நாலு வருஷமா இதே கம்பெனில குப்பை கொட்டறேன். என்னை டெல்லிக்கு கூட யாரும் போக சான்ஸ் குடுத்ததில்ல. உங்களுக்கு பாருங்க, புது வேலை, அப்ராட் சான்ஸ், கலக்குங்க திவ்யபாரதி” என்று விளையாட்டாய் வாழ்த்து சொன்னான் தினேஷ்.

பரிமளாவும் அவள் அன்னை மஞ்சுளா போலவே சற்றே குறைபட்டுக் கொண்டாள். “உன்னை மிஸ் பண்ணுவேன்டீ திவி. பெங்களூர்ல இருந்தாலாவது லீவுக்கு வந்துருவ, டெய்லியும் ஃபோன்ல பேசிடுவ! இனி அப்படி இருக்காதுல்ல” என்று சோகராகம் வாசிக்க, திவ்யா பரியைத் தேற்றினாள்.

இப்படியாக, திவ்யாவின் குடும்பமும், நண்பர்களும், அலுவலகத்தில் உடன் வேலை செய்யும் சிவதானு மற்றும் சரீனாவும் அவள் யு.எஸ் செல்வதில் மகிழ்ந்து போயிருக்க, அங்கே அமெரிக்காவில் அமர்ந்திருந்த அந்த ஜீவன் நிம்மதியில்லாமல் தவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!