Skip to content
Post Views: 4,569
நிறம் பாராத காதல்
அத்தியாயம் 15
“டேய் ராணா… என்னடா என்னாச்சு?” என்று மாயா கேட்க, “வைதேகி நீ ஏன் இங்க வந்த” எனக் கேட்டான் மாறன்.
“அண்ணா… நேத்து நீங்கப் பொம்மியை பற்றிச் சொன்னப்போதே இவங்களுக்கு சரியான சிகிச்சை தேவைன்னு எனக்குத் தோணுச்சு, அதான் இவங்கள பார்த்து மேற்கொண்டு என்ன பண்ணலாம்னு உங்க மச்சான்கிட்ட பேச வந்தேன். ஆனா இவரு என்னமோ அதுக்குள்ள எப்பவும் போல என்கிட்ட முஞ்சை காட்டுறாரு” என்ற வைதேகி அலறிக்கொண்டு இருந்த பொம்மியை மேலும் நெருங்கிச் சென்றாள்.
Advertisement
“ஏய்…சொல்றேன் தானே, நீ பொம்மியை தொடாத” என்று ரணதீரன் மேலும் கோபத்துடன் கத்தியதும், “அண்ணா… உங்க மச்சானை இங்க இருந்து அழைச்சிட்டு போங்க, இல்லைனா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என்று வைதேகி சொன்னதும், “என்னடி என்ன பண்ணுவ!? ம்… என்ன பண்ணுவ?”என்று எகிறிகொண்டு வைதேகியை ரணதீரன் அடிப்பதை போல நெருங்கிச் சென்றான்.
“ஹலோ… ரொம்ப துள்ளாதீங்க, என் மேல நீங்கக் கைவச்சதுக்கு தான் அத்தைகிட்ட நல்லா வாங்கிக்கட்டிக்கிட்டீங்க அது உங்களுக்கு நினைவு இருக்கா?”என்றவள் தன்னை அடிப்பதை போல நெருங்கி வந்தவனை பார்த்துச் சட்டென்று வைதேகி தன் ஒற்றை கண்ணை அடித்தாள்.
“மாமா… இவளை இங்க இருந்து போகச் சொல்லுங்க”என்று மேலும் ரணதீரன் கத்தியதும்,”வைதேகி நீ வா நம்ம போகலாம், இவன் இப்படித்தான்” என்று மாயா சொல்ல, “அவரு அப்படினா நானும் இப்படி தான் அண்ணி.கண்ணுக்கு எதிர்ல ஓரு பொண்ணு அவ வாழ்க்கையை தொலைச்சிட்டு இருக்கும்போது இவருக்குப் பயந்துகிட்டு என்னால சும்மா இருக்க முடியாது” என்ற வைதேகி கண்கள் மூடிய நிலையில் அலறிக்கொண்டு இருந்த பொம்மியின் அருகே அமர்ந்து அவள் நாடியை பிடித்துப் பார்த்தாள்.
Advertisement
“மச்சான்… வைதேகி மனோதத்துவ மருத்துவர் தான். அவ நம்ம பொம்மியை பரிசோதித்துப் பார்த்தால் நல்லது தானே” என்று மாறன் சொல்ல, “மாமா… பொம்மிக்கு வெளிச்சமே ஆகாது, அங்க பாருங்க எப்படி கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு இ
Advertisement
ருக்காங்கன்னு நீங்களே பாருங்க” என்று ரணதீரன் புரியாமல் பேசிக்கொண்டு இருந்தான்.
“அவங்க கத்துனா இவங்கள அப்படியே விடக் கூடாது, இவங்களுக்கு சரியான முறையில கவுன்சிலிங் தேவை, இவங்கள மருத்துவமனையில சேர்த்து பார்த்துக்க உங்களுக்கு விருப்பம் இல்லைனா கூட இங்கேயே இவங்களுக்கு சரியான சிகிச்சை தரலாம்” என்ற வைதேகி பொறுமையாகவும் அக்கறையாகவும் பொம்மியை அரவணைக்கத் தொடங்கி இருந்தாள்.
“தம்பி… நீ கொஞ்சம் பொறுமையா இரு” என்று மாயாவும் ரணதீரனை சமாதானம் படுத்த, “அண்ணா…நான் இங்க இருக்க போற கொஞ்ச நாளில் பொம்மி அக்காவை நான் பார்த்துக்குறேன்” என்று வைதேகி சொன்னதும், “நீ யாரு இவங்களை பார்த்துக்க”என்று ரணதீரன் சீறினான்.
Advertisement
“இங்க பாருங்க அண்ணா… உங்க மச்சான்கிட்ட சொல்லி வையுங்க, மனநிலை பாதிக்கப்பட்ட நிலைமையில இருக்குற இவங்கள ஹாஸ்பிடல்ல சேர்க்கமல் இவரு வீட்டுக்குள்ள வச்சி இருக்குறது சட்டப்படி குற்றம். ஒரு வேளை இவங்களுக்கு நீங்க முன்னாடியே டிரீட்மென்ட் கொடுத்து இருந்தால் கண்டிப்பா இவங்க கல்யாணம் பண்ணி பிள்ளைக்குட்டியோடு கூட வாழ்ந்து இருக்க வாய்ப்பு இருந்து இருக்கும். உங்க மச்சான் பண்ற முட்டாள் தனத்தால இவங்க வாழ்க்கையை மேலும் கெடுத்துடாதீங்க” என்று வைதேகி கண்டிக்கும் விதமாகச் சொன்னதும், “ஏய் யாரை முட்டாள்ன்னு சொல்லுற” என்ற ரணதீரன் மீண்டும் வைதேகியை அடிக்க ஓங்கிக்கொண்டு வந்தவனின் கரங்களைத் தடுத்து பிடித்தாள் வைதேகி.
“கை இருக்குனு சும்மா நீட்டிகிட்டு இல்லாம, போய் உருப்படியா எதையாவது வரையுங்க போங்க” என்ற வைதேகி ரணதீரனின் கையைத் தட்டிவிட்டவள், “நீல வேணி… இனிமே பகல்ல வாசல் கதவை மூடி வைக்காதிங்க, சூரிய ஒளி வீட்டுக்குள்ள வரட்டும். பொம்மி அக்கா என்னைப் பாருங்க, இங்க பாருங்க என்னை” என்று வைதேகி கொஞ்சம் கொஞ்சமாகப் பொம்மியை மருத்துவ ரீதியில் அணுக தொடங்கினாள்.
“மச்சான்… கடவுளா பார்த்துத் தான் பொம்மிக்காக வைதேகியை இங்க அனுப்பி வச்சாருன்னு நினைச்சிக்கோ மச்சான், வைதேகி இங்க இருக்குற வரைக்கும் பொம்மியை அவ பார்த்துக்கட்டும். நீ கவலைப்படாம போய் உன் வேலையைப் பாரு” என்று மாறன் சொன்னதும், ரணதீரன் வைதேகியை முறைத்து பார்த்தவன், “பொம்மிக்கு எதாவது ஆகட்டும் அப்புறம் வச்சிக்கிறேன் உங்க தங்கச்சியை” என்ற ரணதீரன் கோவமாக அங்கிருந்து தன் பங்களாவிற்கு சென்றவனை பார்த்து மாறன் சத்தமாகச் சிரித்தான்.
“என்ன மாமா நீங்க! அவன் இவ்ளோ கோவமா பேசிட்டு போறான். நீங்க என்ன இப்படி சிரிக்கிறிங்க” என்று மாயா கேட்டதும், “ஏன் மாயா…நானே இவனுக்கு வைதேகி கூடக் கல்யாணம் பண்ணி வைக்கப் பிளான் பண்ணுறேன், ஆனா உன் தம்பி என்னடானா வைதேகியை அப்புறம் வச்சிக்கிறேன்னு போறான்” என்ற மாறனின் தோளில் கோவமாக அடித்த மாயா, “ஆனாலும் இந்த வைதேகி என் எதிரிலேயே என் தம்பியைத் திட்டுவது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு” என்றாள் சோகத்துடன்.
“உன் எதிர்ல இதுவரைக்கும் வைதேகியை உன் தம்பி ரெண்டு முறை அடிச்சிருக்கான், அப்போ அந்தப் பொண்ண பார்த்து உனக்குக் கஷ்டமா இல்லையா? உன் தம்பியை இரண்டு வார்த்தை வைதேகி பேசுனதுக்கு உனக்குக் கஷ்டமா இருக்கா? ஏன் தான் நீ இப்படி இருக்கியோ.சரி சரி உன் தம்பிக்கு ஏத்த பொண்ணு வைதேகி தான். அதனால அவங்க ரெண்டு பேருக்குள்ள நடக்குற சண்டையை நம்ம கண்டுக்கத் தேவையில்லை. இங்க பாரு குழந்தை தூங்கிட்டா வா நம்ம போகலாம்” என்ற மாறன் மாயாவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து செல்ல, வைதேகி அன்றைய தினம் மதிய நேரம்வரை பொம்மியின் வீட்டிலேயே நீலவேணியுடன் தங்கி இருந்தாள்.
ரணதீரன் கோவமாகத் தன் பங்களாவிற்கு சென்றவன் ஆள் உயர அலமாரியில் தேடி பிடித்து ஒரு ஓவியத்தை எடுத்து, அதைத் தூசி தட்டி மேசைமேல் வைத்தான்.
அந்த ஓவியத்தில் ரணதீரன் திருமண கோலத்தில் தலை குனிந்து நிற்பது போலவும், அவனைக் கண்டு சுற்றி இருக்கும் சிலர் நகைப்பதை போலவும்,
ஒரு பெண் மட்டும் ரணதீரனை பார்த்து அருவருப்பாக முகத்தைச் சுழிப்பதை போலவும் அந்த ஓவியம் இவனால் வரையப்பட்டு இருந்தது.
அந்த ஓவியத்தை மேலும் தூசி தட்டி, அதைத் தன் எதிரே வைத்துக் கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தவன்,
“என்ன தேவி மேடம்…இவன் கருப்பா அசிங்கமா இருக்கான்னு நீங்க இவனை அவமானப்படுத்திட்டு வேற எவனோ ஒரு அழகனை கல்யாணம் பண்ணி சந்தோசமா வாழ்ந்துகிட்டு இருப்பிங்கனு நினைச்சேன், ஆனா நீங்க என்ன மேடம் ஒரு சின்னக் கடையில பார்க்கப் பாவமா வேலை பார்த்துகிட்டு இருக்கீங்க, ச்சு… ச்சு… ரொம்ப நாள் கடந்து உங்கள பார்த்ததும் எனக்கே ரொம்ப பாவமா போச்சு மேடம்” என்ற ரணதீரன் மேசைமேல் இருந்த அந்த ஓவியத்தைப் பார்த்துப் பேசிக்கொண்டு இருந்தான்.
அந்த ஓவியத்திடம் அவன் பேசும் தருணம்,”டேய்… இவளைப் பார்த்து ஏன் பாவப்படுற, அவ என்னை எப்படி அசிங்கப்படுத்திட்டு போனான்னு உனக்குத் தெரியும் தானே” என்ற குரல் அவன் செவியில் ஒலித்தது.
கண்கள் மூடி அந்தக் குரலைக் கேட்டுச் சத்தமாகச் சிரித்தவன்,”அட நீ என்னப்பா, நீ அவமான பட்டதை நான் எப்படி மறப்பேன், ஆனா என்னதான் இருந்தாலும் அந்தப் பொண்ணு பெயர் என்ன? ஆங் தேவி… தேவியை பார்த்ததும் பாவமா போச்சுன்னு சொன்னேன் அவ்ளோ தான்” என்று ரணதீரன் மீண்டும் அந்த ஓவியத்தில் இருக்கும் ரணதீரனின் உருவத்தைப் பார்த்துப் பதில் சொன்னான்.
“நீ வேணும்னா அவளுக்குப் பாவம் பார்த்துக்கோ, எனக்கு இப்போ தான் நிம்மதியா இருக்கு, என்னை வேணான்னு சொல்லிருந்தா கூடப் பரவாயில்ல, ஆனா என்னைக் கேவலமா பேசுனா தானே, அதான் இன்னைக்கு அவளுக்கு இப்படியொரு நிலைமை” என்று மீண்டும் ஒரு குரல் ரணதீரன் காதில் மட்டும் ஒலித்தது.
“சரி சரி… இப்போ நீ சந்தோசமா இருக்கியா?, எனக்கு அது போதும். இந்த நல்ல செய்தியைச் சொல்லத் தான் அந்தக் குட்டி சாத்தான் வைதேகியை அழைச்சிட்டு நான் வேகமா வீட்டுக்கு வந்தேன்” என்ற ரணதீரன் மீண்டும் அந்த ஓவியத்தை அலமாரியில் வைத்துப் பத்திரப்படுத்திக் கொண்டான்.
“என்ன ராணா… வர வர அந்தப் பொண்ணு ரொம்ப ஆடுறாளே, என்ன விஷயம்?” என்று மீண்டும் ஒரு குரல் ரணதீரன் காதில் கேக்க, அவன் கடுப்பாகத் திரும்பிப் பார்த்தவன் எதிரே ரணதீரனின் ஆள் உயர ஓவியம் ஒன்று இருந்தது.
“ஒரு விஷயமும் இல்லை, அவளே எவன் வாழ்க்கையையோ கெடுத்துட்டு தான் இங்க வந்து தலை மறைவா தங்கி இருக்காள்.இதுல வேற அந்த மேடம் டாக்டருன்னு மாமா சொல்லுறாரு. இந்த மாதிரி டாக்டர் எல்லாம் சமுதாயத்துக்குச் சாபக்கேடு தான்” என்ற ரணதீரன் தன் எதிரே இருந்த அவன் உருவம் கொண்ட ஓவியத்தைப் பார்த்துத் தான் பேசிக்கொண்டு இருந்தான்.
“ஏன் ராணா… அந்தப் பொண்ண பார்க்க நல்ல பொண்ணு மாதிரி தானே இருக்கு, நீ ஏன் அந்தப் பொண்ணுக்கு என்ன பிரச்சனை, அவ ஏன் இங்க வந்து இருக்கானு நீ விசாரிக்கக் கூடாது” என்று மீண்டும் ஒரு குரல் ரணதீரன் காதில் கேக்க,
“எனக்குத் தேவையில்லாத வேலையை நான் பார்க்க மாட்டேன்னு உங்களுக்கு எல்லாம் தெரியாதா, அதுவும் இல்லாம எனக்கு அவளைப் பார்க்கவே பிடிக்கல, இதுல அவளோட வரலாற்றைத் தெரிந்து நான் என்ன போறேன்” என்ற ரணதீரன் இப்போது அவனைப் போலவே இருக்கும் வேற ஒரு ஓவியத்தைப் பார்த்துப் பதில் சொன்னான்.
“அப்போ உனக்கு அந்தப் பொண்ணை பிடிக்கல!? இதை நான் நம்பனும்?” என்று மீண்டும் ஒரு குரல் தூரத்திலிருந்து கேட்டதும் ரணதீரன் தலையைத் தூக்கி பார்க்க, அங்கே அந்திரத்தில் ரணதீரனின் உருவ ஓவியம் ஒன்று கிழிந்து கந்தலான நிலைமையில் தொங்கிக்கொண்டு இருந்தது.
“டேய்… அந்தப் பொண்ணை முதல் முறை பார்த்ததும், இவ தான் டா உன் பொஞ்சாதினு நீ சொன்னதால தான் இன்னைக்கு கிழிந்து கந்தலாக நீ மேல இருக்குற, மறுபடியும் இப்படியே பேசிகிட்டு இருந்தன்னு வையேன் உன்னைத் தூக்கி குப்பை கூடையில வீசிடுவேன்” என்று தலைக்கு மேல் தொங்கும் கிழிந்த ஓவியத்தைப் பார்த்து ரணதீரன் கண்டித்ததும், அவனைச் சுற்றி அந்த அறையில் இருக்கும் ரணதீரனை போலவே உருவம் கொண்ட நூற்று கணக்கான ஓவியங்களும் சத்தமாகச் சிரிக்கும் சிரிப்பின் ஒலி ரணதீரனின் காதில் மட்டும் ஒலித்தது.
“ம்… இப்படியே நம்ம சிரிச்சிகிட்டே இருக்கணும்னா இந்த மாதிரி அழகா இருக்குற ஆளுங்களை நம்பவே கூடாது” என்ற ரணதீரனின் கண்கள் தன் கணினிமூலம் தோட்டத்து வீட்டில் பொம்மியுடன் பேசிக்கொண்டு இருக்கும் வைதேகியை முறைத்து பார்த்துக் கொண்டு இருந்தது.
அன்றைய தினம் மதிய நேரம் கோவிலுக்குச் சென்று இருந்த வேதநாயகியும் கீதாவும் வீடு திரும்பியவர்களிடம் சற்று முன் நடந்த சம்பவங்களை மாயா சொல்ல, “என்ன மாயா சொல்லுற, வைதேகி டாக்டரா!?” என்று ஆச்சிரியமாகக் கேட்டார் வேதநாயகி.
“ஆமா அத்தை வைதேகி ஸைக்கார்ட்டிஸ்ட் டாக்டர் தான்” என்று மாறன் சொன்னதும், “ஆனா நீங்க இந்த விஷயத்தை என்கிட்ட சொல்லவே இல்லையே மாப்பிள்ளை” என்ற வேதநாயகியின் முகத்தில் பதற்றம் தெரிந்தது.
“வைதேகி படிப்பைப் பற்றிப் பேச வேண்டிய தேவை இல்லாம போனதால தான் சொல்லல அத்த. அதுவும் இல்லாம ரணதீரனை விட வைதேகி அதிகம் படித்து இருந்தால் நீங்க என்ன நினைப்பிங்கனு ஒரு தயக்கம் இருந்துச்சு” என்று சூழ்நிலையைச் சமாளிக்கும் விதமாகச் சொன்னான் மாறன்.
“ஏன் மாப்புள்ள…ஆண்களைவிடப் பெண்கள் நிறைய படிக்கக்கூடாதுன்னு எதாவது சட்டம் இருக்கா என்ன?பெண்களுக்குப் படிப்பு ரொம்ப முக்கியம். எனக்கு அதெல்லாம் பிரச்சனை இல்லை, ஆனா வைதேகிக்கு ராணாவை மனசார கல்யாணம் பண்ணிக்க விருப்பமான்னு மட்டும் நீங்க நல்லா விசாரிச்சுக்கோங்க” என்ற வேதநாயகியின் பயத்திலும் ஒரு அர்த்தம் இருக்க தான் செய்தது.
“அதெல்லாம் நான் விசாரிச்சிட்டேன் அத்தை. நீங்க வாங்க சாப்பிடலாம். மாயா நீ போய் வைதேகியை அழைச்சிட்டு வா” என்று மாறன் சொல்லும் தருணம் வைதேகி பொம்மியுடனும் நீலவேணியுடனும் வீட்டுக்குள் நுழைந்தவளை ஆச்சிரியமாகப் பார்த்தார் வேதநாயகி.
பொம்மியோ அச்சதுடன் வைதேகியின் கையைப் பிடித்துக்கொண்டு உள்ளே வர, “என்ன மாறா இது! இந்தப் பொம்மி பகல்ல நம்மள பார்த்தாலே கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணுவாளே, ஆனா இப்போ எப்படி வைதேகி கூட இவ்ளோ அமைதியா இருக்குறா!” என்று கீதா ஆச்சிரியத்துடன் கேக்க, “அக்கா… உள்ள வாங்க” என்ற வைதேகி பொம்மியை அழைத்து வந்து இருக்கையில் அமர வைத்தாள்.
“அத்த…இன்னையில இருந்து பொம்மி அக்கா இந்த வீட்டுல என்கூடவே இருக்கட்டுமா” என்று வைதேகி கேட்டதும்,
“பொம்மி எப்படி இவ்ளோ சீக்கிரமா உன்கூட பழகுனா!?” என்று ஆச்சிரியமாகக் கேட்டார் கீதா.
“பொம்மி அக்காவுக்கு இப்போ இருக்குற நிலைமையில நம்ம கூடப் பேசிப் பழகுனா கண்டிப்பா அவங்க சீக்கிரமா பழைய நிலைமைக்கு மாறிடுவாங்க, பொம்மி அக்கா இந்த மாதிரி இருந்தா ரணதீரன் சாருக்கு இவங்கள நினைச்சு கவலையா தானே இருக்கும். அதான் பொம்மி அக்காவைச் சீக்கிரமா குணமாக்கி அவங்க மனசுக்கு ஏற்ற மாதிரி இவங்களுக்கு ஒரு வாழ்க்கையை அமைத்துத் தரணும்னு நான் ஆசைப்படுறேன்” என்ற வைதேகியின் வார்த்தையைக் கேட்டு வேதநாயகியின் உள்ளம் மகிழ்ந்து இருந்தது.
“வைதேகி… பொம்மியை குணப்படுத்த இவளை மனநல காப்பகத்துல சேர்த்து விடலாம்ன்னு நான் ரணதீரன் கிட்ட எத்தனை முறையோ சொல்லி இருக்கேன், ஆனா அவன் தான் முடியவே முடியாதுன்னு அடம் பிடித்து இந்தப் பொண்ணை இத்தனை வருஷமா இங்கேயே வச்சி சொந்த குழந்தையைப் போலப் பார்த்துக்குறான். ஆனா இப்போ நீயும் அவனை மாதிரியே பொம்மியை அன்போடு பாத்துக்குறேன்னு சொல்லும்போது எனக்குச் சந்தோஷமா இருக்கு” என்று வேதநாயகி சொல்ல
“அத்த…அன்பா பார்த்துக்கிறது வேற, அவங்கள குணமாக்குறது வேற, நம்ம இப்போ பொம்மி அக்காவைக் குணமாக்கினால் தான் அவர்களுடைய எதிர்கால வாழ்க்கையை சீர்படுத்த முடியும்” என்றாள் வைதேகி.
பொம்மிமையைப் பற்றி வைதேகி பேசிக் கொண்டிருக்கும் வேளையில் ரணதீரன் வீட்டுக்குள் நுழைந்தவனுக்கும் பொம்மியை அந்த இடத்தில் பார்த்து ஆச்சரியம் கூடிப்போனது.
ரணதீரன், நீலவேணி, வேலு ஆகிய மூவரையும் தவிர்த்துப் பகலில் வேறு யாரையாவது கண்டுகொண்டால் கத்தி ஆர்ப்பாட்டம் செய்யும் பொம்மி இந்த நொடி அனைவரின் மத்தியிலும் பயம் கொள்ளாமல் நின்று இருப்பதை பார்த்து ரணதீரனுக்கு வைதேகியின் மருத்துவத்தின் மேல் சிறு நம்பிக்கை ஆரம்பித்தது.
இருப்பினும் எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் சாப்பிட அமர்ந்த ரணதீரனை வைதேகி கண்டுகொள்ளாமல் பொம்மியை தன் அருகே அமர வைத்துச் சொந்த சகோதரியைப் பேணி காப்பது போலச் சாப்பிட வைத்தாள்.
அன்றைய தினம் முழுவதும் பொம்மி வைதேகி உடனே இருக்க.மாலை நேரம், “அம்மா இன்னைக்கு அத்தைக்கு செக்கப் இருக்கு நானும் மாமாவும் அத்தையை ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டு போயிட்டு வரோம்” என்று மாயா தன் அம்மா வேதநாயகியிடம் சொன்னாள்.
“அண்ணா… அப்படியே இந்த வாரத்துல ஒரு நாள் உங்க ஹாஸ்பிட்டலுக்கு பொம்மி அக்காவை அழைச்சிட்டு போயி ஃபுல் செக்கப் பண்ணி எனக்கு ரிசல்ட் வாங்கி கொடுங்க” என்று வைதேகி கேட்க,
“கண்டிப்பா மா, அப்படியே பண்ணிடலாம்” என்ற மாறன் தன் அம்மா கீதா மற்றும் தன் மனைவி மாயாவை அழைத்துக் கொண்டு மருத்துவரைப் பார்க்கச் சென்றான்
நொடிக்கு 100 முறை வைதேகியை கடிந்து கொள்ளும் ரணதீரன் இனி பொம்மி விஷயத்தில் வைதேகியிடம் வீம்பு பார்க்கக் கூடாது என்று மனதிற்குள் எண்ணியவன் மேற்கொண்டு பொம்மியை பற்றி அவளிடம் வாதாடாமல் இருந்தான்.
மாறன் சென்றதும் வேதநாயகி அவர் அறைக்கு ஓய்வெடுக்க செல்ல, நீலவேணி, வைதேகி, பொம்மி என்று மூவரும் ஒன்றாக அமர்ந்து இருக்க, ரணதீரனும் குழந்தை மயிழினியும் விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.
“ராணா…கொஞ்சம் இங்க வாப்பா” என்று தன் அறையிலிருந்து வேதநாயகி அவர் மகனை அழைக்க,
“என்னம்மா கூப்பிட்டீங்களா?”
என்ற ரணதீரன் தன் அம்மாவின் அறைக்குள் சென்றான்.
“ராணா… இந்த ரூம்ல பாத்ரூம் ஹீட்டர் வேலை செய்யல, நம்ம வேலுகிட்ட சொல்லி என்னன்னு பார்க்கச் சொல்லு” என்று வேதநாயகி சொன்னதும்,
“அதுக்கு ஏன் வேலுவை கூப்பிடுறிங்க இருங்க நான் பார்க்குறேன்”என்றப்படி குளியல் அறையில் இருக்கும் ஹீட்டரை பழுது பார்க்க எண்ணி சுவிட்ச் போர்டில் கை வைத்த அடுத்த நொடி,
“அம்மா…”என்று கத்திய ரணதீரன் மின்சாரம் தாக்கியப்படி தூக்கி வீசப்பட்டு பேச்சு மூச்சு இல்லாமல் மயங்கி விழுந்தான்.
தன் மகனை அந்த நிலையில் பார்த்து,
“ராணா…..”என்ற வேதநாயகியின் அலறலை கேட்டு வைதேகி வேகமாக அறைக்குள் ஓடி வந்தவளின் கண் எதிரே தரையில் மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்தான் ரணதீரன்.
“ஐயோ அத்த… என்ன ஆச்சு இவருக்கு” என்று வைதேகி பதறியவள் ரணதீரனின் அருகே அமர்ந்து அவன் நாடியை பரிசோதிக்க, “ஐயோ வைதேகி… என் மகனுக்கு என்னாச்சு, சும்மா இருந்த என் மகனை நானே கூப்பிட்டு இந்த நிலைக்கு
ஆளாகிட்டேனே”என்று வேதநாயகி ஒரு பக்கம் கதறி அழுத்ததும்
சிபிஆர்ப்படி ரணதீரனின் மார்பு பகுதியை வைதேகி அழுத்திப் பார்க்க, மூச்சு பேச்சு இல்லாமல் அதே நிலைமையில் இருந்தவனின் தலையைத் தூக்கி தன் தேள் மேலே சாய்த்து அவன் வாயைத் திறந்து “head-tilt, chin-lift” முறையைப் பயன்படுத்தி வைதேகி அவள் வாயை ரணதீரன் வாயில் வைத்து, அவன் மூக்கை விரலால் மூடி அவள் வாயிலிருந்து மெதுவாக மூச்சை ஊதிய அடுத்த நொடி ரணதீரனின் மார்புப்பகுதி எழுச்சி அடைந்தது.
மீண்டும் வைதேகி அதே போல இரண்டு முறை அவள் மூச்சை கொடுத்து, பிறகு வேகமாக அவள் கரங்களைக் கொண்டு ரணதீரனின் மார்பு பகுதியை சிபிஆர் முறையில் அழுத்தியதும் அவன் இதய துடிப்பு சீராகி மெதுவாகக் கண்களைத் திறந்தவனின் கருமணிக்குள் தனக்கு மீண்டும் உயிர் கொடுத்த தன் இன்னோர் தாயாகத் தெரிந்தாள் சித்ரவைதேகி.
error: Content is protected !!