Skip to content
Post Views: 2,721
பூவிடைப் பனித்துளிகள்
அத்தியாயம் 15
Advertisement
‘இது பெங்களூர்ல இருக்கும்போதே அவ்வளோ குடைச்சல் கொடுத்து, நான் எழுதின கோடிங்ல தப்பு கண்டுபிடிச்சு என்னை மாட்டிவிட பார்த்துச்சு. இப்போ கிளம்பி நேர்ல வரப்போகுது. இங்க வந்து என்னலாம் செய்ய காத்திருக்கோ?’ என்று உள்ளூர நிறைய எரிச்சல் பட்டாலும், அடிமனதில் இத்தனை வருடம் கழித்து திவ்யாவை தான் காணப்போகிறோம் என்ற உவகை உண்டாயிற்று பரணிக்கு.
அவன் ஆழ்மனதில் அவள் மேல் இன்னமும் கொண்டிருந்த காதலை மூளை கண்டு கொண்டதன் காரணமாகவே அவள் மீது ஆத்திரம் எழுகிறது என்பது புரியவும், அவள் வந்ததும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நிறைய யோசிக்கலானான் பரணி.
***
Advertisement
இரண்டு மாதங்கள் கழித்து,
Advertisement
ஜனவரி 2020,
வெர்மாண்ட் மாகாணம் புத்தாண்டிற்காக வெள்ளை பட்டாடை அணிந்து அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. பெங்களூரில் இருந்து வெர்மாண்ட் மாகாணத்தின் பர்லிங்டன் நகருக்கு 24 மணித்துகள் கடந்து வந்து சேர்ந்திருந்தாள் திவ்யா.
பர்லிங்டன் விமான நிலையத்தில் இருந்து அவளை அழைத்துச் செல்ல வந்துவிடுவர் என்று சொல்லப்பட்டிருந்ததால், விமான நிலையத்திலேயே காத்திருந்தாள்.
Advertisement
வெர்மாண்ட் பற்றி வேண்டுமான அளவு கூகுளில் தேடிப் பார்த்து தெரிந்து கொண்டிருந்த வகையில், ‘பயங்கர குளிர் இருக்கும். நீ விண்டர்ல போற. ஃப்ரிட்ஜ்ல கூட இல்ல பிரீசர்ல உட்கார்ந்து வேலை பார்க்கற மாதிரி தான் இருக்கப் போகுது. அங்க ஆடம் சீசன் (autumn) தான் அழகா இருக்குமாம்.’ என்பது புலனாயிற்று.
அமெரிக்கா செல்கிறோம் என்ற ஆர்வமெல்லாம், அந்த பனிப்பிரதேசத்தில் காலடி எடுத்து வைத்த சில நிமிடத்திலேயே மெல்ல பின்வாங்கியிருந்தது. “யப்பா! என்னா குளிரு குளிருது! இங்க எப்படிடா வாழறீங்க?” என்னும் அளவிக்கு குளிர் ஊசியாய் தாக்கியது.
மதிய நேரத்திலேயே விமான நிலையத்தில் இரண்டடி உயரத்திற்கு பனிப்பொழிவு இருந்தது. இத்தனைக்கும் பனியை வழித்து ஓரம் தள்ளிவிடும் இயந்திரம் ஜரூராக வேலை பார்த்துக் கொண்டே இருந்தது.
‘பளீர் வானமா இருக்கும்னு பார்த்தா, இங்க வானமே தெரியலையே! ஒரே மேகமூட்டமாவும், பனிப்பொழிவுமாவும்ல இருக்கு! பெங்களூர் குளிரே வெடவெடன்னு நடுங்க வச்சுடும். இதில இந்தூர் குளிரை எப்படி சமாளிக்க போறேனோ’ என்று எண்ணினாள்.
யு.எஸ் செல்வதாக முடிவான இந்த இரண்டு மாதத்தில் அவளுக்கு தலைக்கு மேல் அத்தனை வேலைகள் காத்திருந்தன. வாங்க வேண்டிய பொருட்கள், பெட்டி கட்ட வேண்டிய வகையறா, டிக்கெட் கன்ஃபர்மேஷன், முடிக்க வேண்டிய பெண்டிங் வேலைகள் என சகலத்தையும் திறமையாக செய்து கொண்டே இருந்தபோதும், மனதின் மூலையில் பரணியைப் பார்க்கப் போகிறோம் என்ற நினைப்பும் கண்ணில் விழுந்த தூசியாய் உறுத்தியது.
‘இந்த ஆறு மாசத்தில ஆபீஸ் சம்பந்தமா தேவையானதை மட்டும் தான் பேசியிருக்கோம். அதைத் தவிர பர்சனலா எந்த ஒரு விஷயமும் பேசலை. இன்ஃபேக்ட், என் பர்த் டே செப்டம்பர்ல வந்துச்சு. அதுக்கு கூட அவன் விஷ் பண்ணலை. ஆபீஸ்ல முன்னபின்ன தெரியாத ஆளுங்க கூட சாட்ல விஷ் பண்ணாங்க. இவன் ஒரு கர்டஸிக்கு கூட விஷ் பண்ணலை’ என்று நினைக்கவும், அவன் தன் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லையே என்ற சோகமும், இப்படியாவது அவனாக முதலில் அவளிடம் பேசுவான் என்ற அவளது எதிர்பார்ப்பும் பொய்த்துப் போனதை எண்ணுகையில் இப்போதும் வலித்தது அவளுக்கு.
‘ஆமா, அதே கர்டஸி உனக்கு இருந்துச்சா? அவனுக்கு அக்டோபர்ல பர்த்டே வந்துச்சே! அதுக்கு நீ விஷ் பண்ணியா? இல்லைல?’ என்று குத்தியது மனசாட்சி.
‘ஆமா, அவன் விஷ் பண்ணாதப்போ! நான் மட்டும் ஏன் சொல்லணும். ஒரு வேளை நான் விஷ் பண்ணி அதுக்கு அவன் ஒரு தேங்க்யூ கூட சொல்லாம போயிட்டா, அது இன்னமும் கஷ்டமால இருக்கும்.’ என்ற பயம் தான் அவளுக்கு அதிகம் இருந்தது.
‘பரம விரோதிக மாதிரி ரெண்டு பேருமே நேரடியா பேசிக்காம கண்டுக்காம போயிடறோம். இப்போ அவன் கூடவே வேலை பார்க்கணும். கடவுளே!’ என்ற நினைப்பு அவளுக்கு அதீத சங்கடத்தைக் கொடுத்தது.
‘சாதாரணமா ஹாய், பாய் அளவில இருந்தா கூட பரவாயில்ல. கில்டி கான்சியஸ் இல்லாம இருக்கும். எப்படி அவன் கூட ஒரே வீட்டில இருக்கப் போறேனோ?’ என்ற பெருங்கவலை சூழ்ந்தது.
ஆம், அலுவலகத்தின் கெஸ்ட் ஹவுஸ், பைன் ஃபீல்டஸில் உள்ளது. நான்கு படுக்கை அறை வசதி கொண்ட அந்த வீட்டில் தான் இவர்கள் கம்பெனியின் அலுவலர்கள் தங்குவதாம்.
“அங்க இப்போதைக்கு நாலு பேர் இருக்காங்க. நம்ம டீம் பரணி, வருண், அப்பறம் யஷ்வந்த்னு ஒரு நார்த் இந்தியன். நம்ம கம்பெனி தான் வேற ப்ராஜெக்ட், இவங்களாம் இருக்காங்க” என்று முன்னரே சொல்லியிருந்தார் குமரேசன்.
“லேடீஸ் யாரும் இல்லையா சார்?” என்று அவள் கவலையாக கேட்கவுமே, “இருக்காங்க இருக்காங்க. நாபி-ஜூன்னு ஒரு கொரியன் பொண்ணு இருக்காங்க. சோ, உங்களுக்கு வீட்டில ஒரு துணை கிடைக்கும். கம்பெனில நிறைய லேடீஸ் வொர்க் பண்ணறாங்க. சோ, எந்த பிராப்ளமும் இருக்காது திவ்யா. பயப்படாதீங்க” என்று தெரியப்படுத்தியிருந்தார்.
“சரி சரி, கொரியனோ, ஆப்ரிக்கனோ, பொண்ணுன்னு ஒருந்தங்க இருந்தா போதும். அதுவுமில்லாம, வருண் ரொம்பவே ஹெல்ப்ஃபுல்லா நிறைய டீடெயில்ஸ் சொல்லி, ஃப்ரெண்டிலியா பேசினான். சோ, சமாளிச்சுடலாம். மேக்சிமன் ஒரு வருஷம் தானே! பார்த்துக்கலாம்” என்று மனதை திடப்படுத்திக் கொண்டிருந்தாள்.
பெங்களூரில் விமானம் ஏற்றிவிட்டு வழியனுப்ப, மொத்த குடும்பமும் வந்திருந்தது, செளமி அக்காவும், அத்தானும் கூட வந்திருந்தனர். தினேஷ், அக்கா வீட்டினர், பெற்றோருடன் சேர்த்து பரிமளாவையும் பார்த்ததில் அப்படியொரு மகிழ்ச்சி திவ்யாவிற்கு.
இங்கே விமான நிலையத்தில் இறங்கி, வாட்ஸ்ஸப்பில் வருணுக்கு தகவல் தெரிவித்துவிட்டு, அவன் வருகைக்காக காத்திருந்தாள். ‘ஒருவேளை பிக்கப் பண்ண பரணியும் வருவானோ? வந்தாலும் வருவான்’ என்றது ஒரு மனம், மறுபக்கமோ, ‘ஆமா, இருக்கற வேலையை விட்டுட்டு, என்னை பிக்கப் பண்ண அவன் வந்துட்டாலும்… ம்ம்கும்’ என்று சடைந்து கொண்டது மூளை.
‘இப்ப அவன் வரணும்னு நினைக்கறியா? இல்ல, வரக்கூடாதுன்னு நினைக்கறியா?’ என்ற கேள்விக்கு அவளிடம் பதிலே இல்லை. அந்த குழப்பம் தெளிவிக்க எந்த முயற்சியும் செய்யப்படவில்லை.
இதெல்லாம் யோசித்தவண்ணம் திவ்யா காத்திருக்க, சிறிது நேரத்தில் வருண் அவளை அழைத்துச் செல்ல வந்திருந்தான். திவ்யாவின் பார்வை சுற்றி சுழன்று பரணி வந்திருக்கிறானா என்று ஆராய்ச்சியில் மூழ்கி, அவன் இல்லை என்பது தெளிவான பின்னர் மறவாமல் சோர்ந்து போயிற்று. ‘வரமாட்டான்னு தெரிஞ்சும் ஏன் வருவானோன்னு எக்ஸ்பெக்ட் பண்ணற? முட்டாள்! முட்டாள்!’ என்று கடிந்து கொண்டு, வருணுடன் காரில் ஏறிக் கொண்டாள்.
வருண் பேசிய ஆங்கிலத்தில் பெரும் அளவு தெலுங்கு வாடை வீசியது. “என் ரூம்மேட் கூட ஆந்திரா தான் வருண்” என்று சொல்லவும், அவனுக்கு, ‘மனவாடு’ என்று புது பிரியம் சேர்ந்து கொண்டது போலும். அவன் கேட்டுக் கொண்டபடிக்கு, அம்பிகா அப்பளம் டிப்போவில் இருந்து, மிளகாய் துவையல், ஆவக்காய் ஊறுகாய், பருப்பு பொடி என நிறைய அள்ளிக் கொண்டு வந்திருந்தாள்.
“அன்னி பிக்ல்ஸ் மீக்கோசமே” என்று இவளுக்குத் தெரிந்த அரை குறை தெலுங்கில் இவள் பேச, வருண் பரமானந்தம் அடைந்தான்.
“மீக்கு தெலுகு மாட்லாடாட்டம் தெலுசா?”
“நாக்கு கொஞ்சம் தெலுசு. செப்பேனுகாதா, நா ரூம்மேட் ஆந்தராவாடு.”
“நூ பாக தெலுகு மாட்லாடுதாரு” என்று வருண் மகிழ்ந்து போனான்.
இருவரும் இலகுவாக அளவளாவிக் கொண்டே காரில் பயணித்தனர். “நம்ம ஆஃபிஸ் சவுத் பர்லிங்டன்ல இருக்கு. போறவழி தான், காட்டறேன். ஆபீஸ்ல இருந்து கெஸ்ட் ஹவுஸ்க்கு ஒரு தர்ட்டி மினிட் ட்ரைவ் தான். நம்ம ஆபீஸ்ல இருந்து கேப் வந்துரும். சோ, ட்ராவல் பிரச்சனையில்ல.”
“ஆனா, செம குளிர் வருண். ஜன்னி வந்துரும் போல குளிருது.” என்றாள் காரினுள் இருந்த ஹீட்டரை இன்னமும் அதிகப்படுத்தியவாறு.
“அது பழகிடும் திவி. பெருசா தெரியாது. கார், ஆபீஸ், வீடுன்னு ஃபுல்லாவே ஹீட்டர்ஸ் இருக்கு. சோ, வெளிய போறப்போ மட்டும் தான் குளிரும். மேனேஜ் பண்ணிக்கோ” என்று இயல்பாக திவி என்று உரிமையாய் அழைக்கத் துவங்கியிருந்தான். ஒரு வேளை தெலுங்கில் பேசியதால் உண்டான நெருக்கமாக இருக்குமோ என்னவோ.
‘டேய் எனக்கு தெரிஞ்ச நாலு வார்த்தையும் நான் ஏற்கனவே பேசிட்டேன்டா. இதுக்கு அப்பறம் நீ என்ன கேட்டாலும், லு லு சேர்த்து தெலுங்கை கொலை பண்ண ட்ரை பண்ணுவேன் பார்த்துக்க. உன் தாய்மொழி மேல பற்றிருந்தா, இத்தோட எங்கிட்ட தெலுங்கு பேசறதை நிறுத்திக்க’ என்று நினைத்துக் கொண்டு ஆங்கிலத்தில் பேசத் துவங்கியிருந்தாள்.
“தேங்க்யூ ஃபார் பிக்கிங் மீ வருண். சாடர்டே அதுவுமா உங்க தூக்கத்தை ஸ்பாயில் பண்ணிட்டேன் இல்ல.”
“சே, நோ நோ, ஃபீல் ஃப்ரீ” என்று சிரிப்புடன் பதிலளித்தான் வருண். அவனிடம் பரணி பற்றி கேட்க வாய் துறுதுறுத்தது. இருந்தாலும் அடக்கிக் கொண்டாள்.
அரை மணி நேரப் பயணத்தில் ஊரின் மற்ற விஷயங்களைப் பற்றி சொல்லிக் கொண்டே வண்டி ஓட்டினான் வருண். “நாம இருக்கற ஊர் பேரு ரிச்மண்ட், ஒரு சின்ன வில்லேஜ் மாதிரி தான் இருக்கும். ரொம்ப அழகான ஊர்.”
“ஆனா, அதிகம் ஆளுங்க நடமாட்டம் இருக்காது போலவே வருண்?” என்று அவளையும் மீறி அவள் ஆழ்மனதில் ஊடுருவியிருந்த பயம் அவளை அவ்வாறு பேசவைத்திருந்தது.
“ஆமா, இங்க நம்ம இந்தியாவ விட பாபுலேஷன் ரொம்ப கம்மில. சோ, ஆளுங்க அவ்வளோ இருக்க மாட்டாங்க. இன்ஃபாக்ட், நம்ம கெஸ்ட் ஹவுஸ் இருக்க ஏரியால மொத்தமே நாலு வீடு தான்.”
“நாலு தானா?” என்றாள் திவ்யா ஆச்சர்யமாக.
“ஆமா, நம்ம ஸ்டிரீட் பேர், க்ரேஸ்டோன் டிரவ். ஒரு சின்ன மலை மாதிரி இருக்கும். கடைசி வீடு நம்ம கெஸ்ட் ஹவுஸ். அதுக்கு முன்னால கொஞ்ச கொஞ்ச டிஸ்டன்ஸ்ல மூணு வீடு இருக்கு” என்று அவற்றையெல்லாம் காட்டிக் கொண்டே வந்தான்.
கார் ஒரு சிறிய வளைவில் திரும்பி, சிறிய மலை போன்ற சாலையில் மெல்ல ஏறியது. வருண் சொன்னதைப் போல, அந்த வீதியில் இவர்களது கெஸ்ட் ஹவுஸையும் சேர்த்து மொத்தம் நான்கே வீடுகள் தாம். அவையும் கூட ஐம்பது அறுவது அடி தூரத்தில் தான் இருந்தன.
‘கத்தி கூப்பாடு போட்டாலும் கூட பக்கத்தில யாருக்கும் கேட்காது போலவே’ என்ற எண்ணம் தான் அந்த வீதியைப் பார்த்ததும் அவளுக்குத் தோன்றியது.
“கொஞ்சம் லோன்லியா இருக்க மாதிரி தான் இருக்கும். ஆனா ரொம்ப பீஸ்ஃபுல்லா இருக்கும். நமக்கு இந்தியால எங்க திரும்பினாலும் மனுஷங்களை பார்த்து பழகிட்டு, இங்க யாருமே இல்லாத மாதிரி ஒரு எண்ணம் தோணும். கொஞ்ச நாள்ல பழகிடும் திவ்யா. டோன்ட் வர்ரி. இதான் நம்ம கெஸ்ட் ஹவுஸ். வெல்கம்” என்று திவ்யாவின் முகத்தில் படிந்த கவலையை உணர்ந்து ஆறுதலாய் பேசியிருந்தான் வருண்.
‘உரலுக்குள்ள தலைய விட்டாச்சு. இனி குத்துது, குடையுதுன்னா சொல்ல முடியும்? சமாளிப்போம்’ என்று மனதை திடப்படுத்திக் கொண்ட திவ்யா, நிறைய சஞ்சலத்துடன் காரிலிருந்து இறங்கினாள். வீடு, முதல் மாடியுடன் விஸ்தாரமாக, பெரிய பங்களா அமைப்பில் இருந்தது. சுற்றிலும் நிறைய புல்தரை இருக்க வேண்டும், ஆனால் இப்போது அவை முற்றிலும் பனியில் மூடியிருந்தது.
வீட்டின் கூரையிலும் வெண்பனி படர்ந்திருக்க, சினிமாவில் காணும் வெண்மாளிகை போன்றே இருந்தது. வீட்டின் பின்னால், நிறைய மொட்டை மரங்கள். தன் இலைகளெல்லாம் உதிர்ந்து, பனியில் சொருகி வைக்கப்பட்டிருக்கும் குச்சிகளைப் போல தோற்றமளிக்க, கார் சப்தம் கேட்டு வீட்டின் பக்க வாட்டில் கையில் பனி தள்ளும் கம்பியுடன் வெளிப்பட்டான் ஒருவன்.
“ஹாய், வெல்கம் ஹோம். ஐம் யஷ்வந்த்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவன், வருணுடன் சேர்ந்து அவளது பெட்டிகளை உள்ளே எடுத்துச் செல்ல உதவினான்.
“இங்க வீடுக எல்லாமே பெருசா தான் இருக்கும். வீட்டோட க்ரவுண்ட் ஃப்ளோர்ல, கிச்சன், ஹால், டைனிங் இருக்கும். மாடில தான் பெட் ரூம்ஸ்” என்று சொல்லிக் கொண்டே, படியில் பெட்டிகளை எடுத்துச் சென்றான்.
“மாடியில நாலு பெட் ரூம் இருக்கு. ஆளுக்கு ஒரு ரூம்ல இருப்போம். இப்போ நீ வந்திருக்கனால, நான் பரணி ரூமுக்கு ஷிஃப்ட் ஆகறேன். நீ என் ரூம்ல தங்கிக்குவ. ஓகே?” என வினவினான் வருண்.
“தேங்க்யூ” என்று மனதார கூறினாள் திவ்யா. பெட்டிகளை அவள் அறையில் அடுக்கி வைத்துவிட்டு, யஷ்வந்த், “லன்ச் ரெடியா இருக்கு. நீ ஃப்ரெஷ் ஆகிட்டு சாப்பிட வா. ஜெட் லாக்ல தூக்கம் பயங்கரமா வரும். பட் கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணிகிட்டா பெட்டர். இல்லைன்னா டைமிங் செட் ஆகறது ரொம்ப கஷ்டம்.” என்று அறிவுரை வழங்கிவிட்டு சென்றான்.
வருணும், யஷ்வந்தும் சென்றதும், திவ்யா கட்டிலில் தொப்பென விழுந்தாள். கண்ணைக் கட்டிக் கொண்டு தூக்கம் சுழன்றது. அப்படியே உறங்கியும் போனாள்.
தலையை யாரோ டொம் டொம்மென தட்டுவது போல உணர்ந்து மனமில்லாமல் கண்விழித்தவளுக்கு எங்கே இருக்கிறோம் என்பதே சில நொடிகளுக்குப் பின்னர் தான் புரிந்தது. தட்டியது மண்டையை அல்ல, கதவை என்பதும் உணர, மெல்ல எழுந்து கதவைத் திறந்தாள்.
வெளியே அந்த சின்ன பெண் நின்று கொண்டிருந்தாள். மிஞ்சிப் போனால் பதினேழு வயது தான் இருக்கும். அழகாய், குட்டியாய், பால் நிறத்தில், மிளிரும் திராட்சை கண்களுடன் கையில் உணவு தட்டைப் பிடித்திருந்தாள்.
“ஹாய் ஐம் நாபி-ஜூன்.” என்றவள், தலையை வெகுவாக குனிந்து வணக்கம் வைக்கவும் தான், இவள் சின்ன பெண் அல்ல, இந்த வீட்டிலிருக்கும் கொரியன் பெண் என்பது புரிந்தது.
“யுவர் டின்னர்” என்றவள் தட்டை திவ்யா முன் நீட்ட, திகைப்பில் இருந்து மீண்ட திவ்யா, “தேங்க்யூ… ஐம் திவ்யா” என்று கைகளை நீட்டினாள்.
“ப்ளீஸ் கம் இன்” என்று அறைக்குள் அழைத்தாள். “யூ ஈட். ஐ கம் லேட்டர். சீ யூ” என்று மரியாதையாக தெரிவித்த நாபி, திரும்பவும் விடைபெறுகையில் உடம்பை பாதி வளைத்து வணக்கம் வைத்து திரும்பச் சென்றிருந்தாள்.
‘சே, கொரியன் சீரியல்ல காட்டினது உண்மை தான் போல இருக்கே. இந்த கொரியன் பொண்ணுக அழகா பொம்மை மாதிரி இருக்காங்க. அதே மாதிரி ரொம்ப மரியாதையாவும் நடந்துக்கறாங்க’ என்று கொரியன் ட்ராமா பார்த்த தன் பேரறிவை எண்ணி பாராட்டிக் கொண்டே உணவை ஏறிட்டாள்.
தட்டில் மூன்று சப்பாத்தியும், குருமா என்பது போல ஒரு கிண்ணத்தில் ஒரு வஸ்துவும் இருந்தது. ‘இதென்ன வரட்டிக்கு பக்கத்தில தண்ணீல மிளகாய் பொடி கலக்கின மாதிரி’ என்று எண்ணியவள், பசி காரணமாக ஒரு வரட்டியை அதாவது சப்பாத்தியை உண்டாள் தான். முழுவதுமாக உள்ளே தள்ள சிரமமாக இருந்தது.
கையுடன் கொண்டு வந்திருந்த ஊறுகாயை வைத்து சாப்பிட்டு முடிக்கலாம் என்று தட்டுடன் கீழே இறங்கிச் செல்ல, கிச்சன் ஐலாண்டில் ஒரு இருக்கையில் பரணி அமர்ந்திருந்தான். இவளைப் பார்க்கவும் கண்கள் மட்டும் லேசாக விரித்தவன், “ஓ, வந்தாச்சா?” என்று மட்டுமாக முணுமுணுத்தான்.
‘இதென்ன வகை வரவேற்பு?’ என்று திவ்யா நினைத்த போதும், பார்த்ததும் முகத்தை திருப்பிக் கொண்டு எழுந்து போய்விடுவானோ என்ற அவளது பயம் நீர்த்துவிட்டிருந்தது. முதல் சந்திப்பு தானே கடினமானது. அதன் பின்னர் பழகிவிடும் அல்லவா? என்ற எண்ணம் அவளுக்கு.
error: Content is protected !!