Skip to content
Post Views: 2,615
꧁☆☬ லயம் – 2 ☬☆꧂
எப்போதும் போல ஞாயிறு உதித்தாலும் ஞாயிறு அன்று மட்டும் விடிகாலை பொழுது பலருக்கும் பத்து மணிக்கே மேல் தானே. எழுவேனோ, உறக்கம் கலைவேனோ, சோம்பல் முறிப்பேனோ, பல் தேய்த்து குளிப்பேனோ, பகல் உணவு மறப்பேனோ பல பைங்கிளிகளும் ராகம் இசைக்கும் அபார்ட்மெண்ட் அது.
Advertisement
வேலை பார்க்கும் பெண்கள் மட்டுமே தங்கும் விடுதி. சிலர் தனித்து வீடு எடுத்தும், பலர் கூட்டாக சேர்ந்தும் என சொகுசாக இரவில் மட்டுமே வந்து துயில் கொள்ளும் சின்னங்சிறு கூடுகள் அவை. பாதுகாப்பும், அனைத்து வசதிகளும் செய்து கொடுத்து இருப்பதால் பணம் அதிகமாக இருப்பினும் பெண்ணை பெற்ற அம்மாக்கள் விரும்பி வந்து விட்டு செல்லும் வேடந்தாங்கல் மல்லிகை அபார்ட்மெண்ட்ஸ். கீழே மெஸ் வசதியும் உண்டு. விரும்பினால் அறையிலேயே சமைத்தும் உண்ணலாம்.
Advertisement
அங்கே தான் உச்சி பொழுதில் வந்து உதித்து கொண்டிருந்தாலும், தகிக்கும் உன்னை கண் திறந்து பார்ப்பேனோ என நம் செல்ல சீமாட்டி உறங்கி கொண்டிருந்தாள். இரவு ஒரு மணிக்கு வேலை விட்டு வந்தவள் அசதியாக ஓய்ந்து போய் இன்னும் ஓய்வில் இருந்தாள்.
Advertisement
” யப்பா யப்பா யப்பா தொப்ப கணேசா, எனக்கு அப்பா அம்மா நீதான் கணேசா…..” ரிங்க் டோன் கேட்டதில், மெல்ல எட்டி டேபிள் ஓரத்தில் வைத்திருந்த போனை எடுத்து ஆன் செய்து காதில் வைத்து கொண்டே,
Advertisement
” பிள்ளையார்பட்டி ஹீரோ நீதான்பா கணேசா..” உற்சாகமாய் இணைந்து பாடியபடி ” ஹலோ..,” குரல் கேட்டதும்,
” குட் மார்னிங்பா, இந்தா போய் சாப்பிட போறேன் ..,” என்று பேச ஆரம்பிக்க.
” அடியே கழுதை, இன்னுமா தூங்கிட்டு இருக்க, எந்திருடி, மணி பன்னெண்டு ஆச்சு..,” செல்லமாய் ஓர் குரல் அதட்டல் போட
” ப்ப்பா..,” என்றாள் மீண்டும்.
” வந்தேன்னு வை, அடி வாங்குவ …, கண்ணை முழிச்சு பாருடி .., ” மீண்டும் கேட்ட குரலில்,
போர்த்திருந்த போர்வையை மெல்ல விளக்கி விட்டு, திறப்பேனா என அழிச்சிட்டியம் செய்த கண்ணை, கை கொண்டு மெல்ல தேய்த்து, போனை பார்த்தவள் ” அப்பாக்கு வச்ச ரிங் டோன் தானே இது. அம்மா பேசுறாங்க., ” என்றபடியே மீண்டும் காதில் வைத்து,
” என்னம்மா., அப்பா போன்ல நீ பேசுற., ” முழுதாய் தூக்கம் போகாத கண்ணில் முனகி கொண்டே பேச ஆரம்பித்தாள்.
” ஏண்டி., நான் கால் பண்ண எடுக்க மாட்டேன்னு தானே உங்கப்பா போன்ல பேசுறேன், நேத்து நைட்டும் இவ்ளோ நேரம் செண்டு வந்துருக்க,, அப்படி என்ன வேலையோ .., ” வரிசையாய் அர்ச்சனை தொடங்க.
” ம்மா., சண்டே அன்னைக்கு தானே தூங்குறேன்., என் செல்லம்ல., திட்டாம பேசும்மா., ” சிணுங்கி கொண்டே பேசிய மகளின் குரலில்.
” பொழுதுக்கும் வேலை பார்க்குறேன்னு சுத்த வேண்டியது., அப்புறம் நல்லா தூங்க வேண்டியது., வாரம் ஒரு நாள் இங்கே வந்துட்டு போகலாம் தானே சுபா., ” மகளை பார்த்து ஒரு மாதம் கடந்த நிலையில் அவளை பார்க்க முடியாமல் தவிக்கும் வேதனையில் அவர் பேச.
” டோன்ட் ஒர்ரிமா., நெஸ்ட் வீக் இந்த கன்னி அந்த கண்ணியொடு தான் இருப்பா.,”என்றாள் சிரித்த கொண்டே .
” என்னமோ போடி.., வயசு பொண்ணை தனியே அனுப்பிட்டு வயத்துல நெருப்பை கட்டிக்கிட்டு சுத்துறேன் ..,” சலிப்பாய் அலுத்து கொள்ள.
” அச்சோ.., வேணும்னா ஒன்னு பண்ணும்மா., அந்த நெருப்புல முடிஞ்சா ரெண்டு தோசை சுட்டு குடு., எனக்கும் பசி தீரும் .., ” என்றபடியே எழுந்து நின்றாள். முட்டிக்கு கீழே இருந்த த்ரீ போர்த் பேண்ட், டீ சர்ட்டில், காற்றில் அலைபாய்ந்த கூந்தலை அடக்கி ரப்பர் பேன்ட் போட்டபடியே ஒரு கையில் போனையும், மறு கையில் பிரசையும் எடுத்தபடியே தாயிடம் வம்பளக்க ஆரம்பித்தாள்.
அவள் பேசி கொண்டிருக்க நாம் அவர்களை பற்றி பார்த்து விடுவோம்., கணேசன், அங்கயர்கண்ணி தம்பதியரின் செல்ல இளைய மகள். சுபாவை விட மூன்று வயது பெரியவன் சிவகுமார் பெங்களுரில் வேலை பார்த்து கொண்டிருக்கிறான். மகள் திருமணம் முடித்த பின் தான், அவனுக்கு மணம் முடிக்க முடிவு செய்துள்ளதால் காற்று வாக்கில் பார்க்கும் பெண்ணை எல்லாம் சைட் அடிக்கும் கல்லூளிமங்கன். எம்பி எம்பி படித்து MBA வரை அவனும் படித்து முடித்து விட்டான்.
பிரபல துணிக்கடை ஒன்றில் கல்லாவில் அமர்ந்து, காசை வாங்கி கொட்டும் பணியில் இருப்பதால் கணேசனோடு, மகளுக்கு பிடித்த குட்டி தொப்பையும் சேர்ந்தே இருந்தது. அங்கயர்கண்ணி கணித ஆசிரியராய் வேலை பார்த்தவர். வயது முதிர்வு காரணமாக வேலைக்கு முழுக்கு போட்டுவிட்டு இப்போது வீட்டில் தான் உள்ளார். நடுத்தர வர்க்கத்திற்கும், பணக்கார குடும்பத்திற்கும் நடுவே இருப்பவர்கள். அன்பும் கண்டிப்பும் இணைந்தே பிள்ளைகளை வளர்ப்பவர். பிள்ளைகள் இருவரும் வெவ்வேறு ஊரில் இருக்க தனிமையில் தவிக்கும் தாய் மனம் அவர்களை எண்ணி ஏங்கி தவிக்கிறது.
BSC பட்டதாரியான சுபா தன் தோழமையோடு அவள் பணி செய்யும் இடத்திற்கு அருகிலேயே பிஜி ரூம் எடுத்து தங்கி இருக்கிறாள். கண்டவுடன் மனதை கொள்ளை கொள்ளும் அழகியாய் மகள் இருக்க தனித்து இருக்கும் அவளை எண்ணி தாய் மனம் இன்னும் தவிக்கிறது. அவரோடு சலசலத்தபடியே டீயை போட்டு குடித்தாள்.
“என்னடி சாப்பிட போற, “
” இத்து போன இட்லியும், தேங்காய் சட்னியும் தான் இருக்கும். மெஸ்ல வேற என்ன கொடுக்க போறான்., எதுவும் எனக்கு பிடிக்கல.., “
” சீக்கிரம் போனா எல்லாம் கிடைக்கும் ., நீ இம்புட்டு நேரம் செண்டு போனா என்னடி கிடைக்கும்?”
” ஆத்தி திருப்பி புளியமரம் ஏற ஆரம்பிக்கிறாங்க.., ” வாய்க்குள் முனகி கொண்டே
” அம்மா…….என ராகம் போட ஆரம்பிக்க
” பாடிக்கிட்டே திரியாம ஒழுங்கா குளிச்சு முடிச்சி, சீக்கிரம் சாப்பிடு…ஏற்கனவே லேட்டாச்சு…..” திட்டியபடி போனை அவளின் தாய் வைக்க சொல்ல, அதுவரை அப்பாவியாய் தன்னை பாவமாய் பார்த்து கொண்டிருக்கும் ஜீவனிடம்
” ஏன் எழுப்பல. பாரு அம்மாட்ட திட்டு வாங்கிட்டு இருக்கேன். “
” என்னமோ நான் எந்திரினு சொன்ன உடனே கேக்குற மாதிரி. போவியா, எனக்கு வேற வேலை இல்லையா..,” நக்கல் பார்வை பார்த்தது அவள் அலாரம் செட் செய்து வைத்த கடிகாரம்.
“இரு, குளிச்சிட்டு வந்து உன்னை வச்சிக்கிறேன். ரொம்ப பசிக்குது. கனவுல கூட கஷ்டப்பட்டு சமைச்ச பிரியாணியை சாப்பிட முடியுதா. இன்னைக்கும் நூடுல்ஸ் தான் வேற வழி இல்லை..,” புலம்பி கொண்டே வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.
லேட்டாய் சென்றால் மீத இட்லி மட்டுமே கிடைக்கும் என்பதால் அவசர சமையலுக்கு என சிறிய அளவில் சமைக்க மட்டும் பொருளை வாங்கி வைத்திருப்பாள். இவளின் வேலை நேரம் முன்ன பின்ன என மாற்றம் கொண்டே இருக்கும் என்பதால் இந்த ஏற்பாடு. அனைத்து சமையலும் தாயின் கைங்கரியத்தில் அத்துப்படி. வித விதமாய் சமைத்து சாப்பிட விருப்பம் கொள்பவள் நேரமின்மையால் துரித சமையலை மட்டுமே டக்கென செய்து சாப்பிட முடிகிறது என்பதில் அவளுக்கும் சுணக்கமே. தனியே தங்கி வேலை பார்த்தால் இந்த கஷ்டங்கள் எல்லாம் பட்டு தானே ஆக வேண்டி உள்ளது. அவள் வேலையும் அப்படி. என்ன செய்ய…..
” அச்சோ. மதியம் மால் வர்றதா வேற இந்த ரோஸ் கிட்ட சொல்லிட்டேன். போச்சு போச்சு அவளும் கத்த போறா. ” அடித்து பிடித்து கிளம்பி ரெடியாகி வந்தவள்.
பார்க்கிங் ஏரியாவில் வெயிட் செய்து கொண்டிருந்தவளுக்கு ஸ்கூட்டியை சுபா பார்க் செய்யும் வரை கூட பொறுமை இல்லை. பார்த்த மாத்திரத்தில் ஓடி வந்து, ” ஒரு மணிக்கு வர சொன்னா.., ரெண்டு மணிக்கு ஆடி அசைந்து வாடி .., ” கத்தியபடி கண்ணை உருட்டி, விரித்து முறைக்க.
“ஹே.. ரோசு ரோசு
ரோசு அழகான ரோசு நீ..,
ஹே பாஸு பாஸு பாஸு
எனக்கேத்த பீஸு நீ..,” கண்ணை அடித்தபடி அவளை பார்த்து பாட.
” செருப்பு பிய்ய போகுது பாரு. ஏண்டி சண்டே அன்னைக்கு மட்டும் இப்படி சோம்பேறியா இருக்க. “
” சண்டே அன்னைக்கு சண்டையா.. ஆவ்வ்.. பாவம்டி நான்.. ” அவள் கன்னத்தை பிடித்து கொஞ்ச.
“மத்த நாள் எல்லாம் எந்திரிச்சி ஓட தெரியுது. கொஞ்சம் லேட்டானா அந்த கத்து கத்துவ.., ” எகிறியவளிடம்,
” அச்சோ.. செல்லம், கோபிக்காம வாடி.. சாப்பிட்ட நூடுல்ஸ் உன்கிட்ட பேசியே செரிச்சிரும் போல .. கம் கம்.. லெட்ஸ் கோ.. ” கையை பிடித்து இழுத்து சென்றவள் ஒவ்வொரு தளமாய் ஏறி இறங்கி அங்கொன்றும், இங்கொன்றும் வாங்கி, பில் போட்டு நிமிர்கையில் மணி ஐந்தை தொட்டு விட்டது.
” ஓய். இதுக்கு மேல நம்மால முடியாது. KFC சிக்கனை வெளுக்கமா போனா, சிக்குனு ஒடம்பு மாறிடும். கொஞ்சம் டக்குனு திரும்பு.. ஓடி போயிட்டு கப்புனு சாப்புட்டு ஓடி வந்திருவோம்.. ” பேசியபடி இடத்தை பார்த்து அமர்ந்தவள் ஆர்டர் கொடுத்து வந்ததும்.
“ஹே ஆசை நூறு வகை….,
வாழ்வில் நூறு சுவை வா…..
போதும் போதும் என சிக்கன்
போதை சேர்ந்து வர வா..,”
லாலிபாப் சிக்கனை கையில் வைத்து கடித்து கொண்டே மெதுவே பாட.
“அடியே! நீ பாடி பாடியே என்னை இளைக்க வச்சது பத்தாதா. அந்த சிக்கனையும் கடிச்சு இளைக்க வச்சிட்டியே. எலும்பையாவது கீழ வச்சிட்டு பாடி தொலை..”
” என்னை மாறி பாட முடியலன்னு உனக்கு பொறாமை..”
“ஆமா, இவங்க பெரிய ஸ்ரேயா கோசல். பாடிட்டே எல்லாம் பண்ணுவாங்க.” தங்களை தாங்களே வாரி கொண்டே பல கதைகளையும் பேசியபடியே உண்டனர்.
பாடல் தான் அவளின் உயிர். எத்தனை கஷ்டமான சூழ்நிலை வந்தாலும் இலகுவாய் தன்னை மாற்றி கொள்ள கையில் எடுக்கும் அஸ்திரம் பாடலே. குடும்பத்தை பிரிந்து வந்து தனிமையாய் தன்னை உணர வைக்காமல், சந்தோசமாக அவளை வழிநடத்தும் ஒரே தோழன் பாடல்களே. நேரம் கிடைக்கும் போதெல்லாம் பாட ஆரம்பித்து விடுவாள். கர்நாடக இசையை முறையாய் கற்றவள். விளக்கேற்றும் போது அவள் பாடும் பாடலை கேட்கவே விடியலில் தினமும் சாமி கும்பிடும் பழக்கத்தையே வீட்டில் உருவாக்கினர். இங்கு வந்து அதை செய்ய முடியாமல் தவிக்கிறாள்.
இவர்கள் வெளுத்து முடித்து, வெளியே வர சூர்யாவும் வெளுக்க ஆரம்பித்தார் வானில்.
“என்னடி அதுக்குள்ள நேரம் ஓடி போச்சு. நான் இன்னும் தொவைக்கவே இல்லை. எங்கம்மாக்கு தெரிஞ்சா இதுக்கும் சேர்த்து துவைக்கும்.”
இவர்கள் பின்னே அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தவன், இவர்கள் சம்பாசனையில் ஏற்கனவே சிரிப்பை கட்டுப்படுத்தி கொண்டு அடக்க மாட்டாமல் தான் இருந்தான். சுவாரசியமாக பேசி கொண்டிருந்ததில் அவனை இவர்கள் கவனிக்கவே இல்லை. பின்னாலே எழுந்து வந்தவன் மெல்ல நெருங்கி வந்து ” பீரியா தான் இருக்கேன். நான் வேணா வந்து தொவைச்சு தரட்டா..,” என்றான் மெல்ல.
“எவன்டா எங்களையே வம்புக்கு இழுக்கிறது , மவனே, உன்னை அடிச்சு துவைச்சு கிளிப் போட்டு காயவைக்கல நான்… ” என சட்டென கூறியபடி திரும்பி பார்த்து அதிர்ந்து விழி விரித்து நின்றாள்.
error: Content is protected !!