Skip to content
Post Views: 4,406
நிறம் பாராத காதல்
அத்தியாயம்..20
வைதேகியை தன் அம்மாவின் அறையில் உள்ள கட்டிலில் அமர வைத்த ரணதீரன், அதே கட்டிலில் மாறனின் பெண் குழந்தை மயிழினி அழகாக உறங்குவதை பார்த்துச் சிரித்தவன் குழந்தையின் நெற்றியில் இதழ் பதித்து, “இங்கே என்ன நடந்தாலும் நீ பயப்பட கூடாது. உன் ஆசைப்படி சீக்கிரமா நீ கனடா போக நான் ஏற்பாடு பண்றேன்” என்று வைதேகிக்கு தைரியம் தந்தவனாக அங்கிருந்து வெளியே செல்ல முயன்றவனின் கரங்களைப் பயத்துடன் பற்றிக் கொண்டாள் வைதேகி
தன் கையைப் பிடித்து இருக்கும் பெண்ணின் எண்ண ஓட்டத்தை அறிந்தவனாய்,” நான்தான் சொல்றேனே! பயப்படாத. என்னைத் தாண்டி உன்னை இங்க இங்கிருந்து யாராலும் அழைச்சிட்டு போக முடியாது” என்றவன் அவள் தோள்களை நட்புடன் தட்டிக் கொடுத்தபடி அந்த அறையிலிருந்து வெளியே சென்றவனை கண்களில் கண்ணீருடன் பார்த்திருந்தாள் வைதேகி.
Advertisement
மூன்று வேட்டை நாய்களின் நடுவே அசையாமல் நின்றிருந்த ரங்காராவுக்கு தன்னை சுற்றி இருந்த வேட்டை நாய்களைப் பார்த்துப் பயம் எழுந்தது என்னமோ உண்மைதான்.
வைதேகியை பத்திரமாகத் தன் அம்மாவின் அறையில் இருக்கச் செய்த ரணதீரன் வீட்டின் மத்தியில் உள்ள சாய்வு நாற்காலையில் வந்து திடமாக அமர்ந்தவனை அங்கு இருந்தவர்கள் அனைவரும் கேள்வியாகப் பார்த்தார்கள்.
“என்ன மாமா கம்பெனில உங்களுக்கு வேலை இல்லையா? ஏன் இன்னும் கம்பெனிக்குக் கிளம்பாம இருக்கீங்க? அக்கா ரொம்ப பசிக்குது சாப்பாடு எடுத்துட்டு வந்து வைக்கச் சொல்லுங்க.வைதேகியை டாக்டர் ரெஸ்ட் எடுக்கச் சொல்லி இருக்காரு. அவளுக்கு மருந்து வேற கொடுக்கணும். அம்மா நீங்கச் சாப்டீங்களா? அத்தை நீங்க நாடகம் எல்லாம் பார்த்தாச்சா? ” என்று ரணதீரன் சாதாரணமாக அனைவரிடம் பேசுபவனை ரங்காராவை தொடங்கி போலீஸ் ஆபீஸர் விக்ரம் வரை கடுப்பாகத்தான் முறைத்துக் கொண்டு இருந்தார்கள்.
Advertisement
“யோவ் போலீஸ்காரரே…உன்ன நான் இங்கே வேடிக்கை பார்க்கவா அழிச்சிட்டு வந்தேன்? எங்க வீட்டுப் பொண்ண வீட்டுக்குள்ள மறைச்சு வச்சுக்கிட்டு அவன் என்னமோ ஹீரோ மாதிரி பேசிக்கிட்டு இருக்கான் நீ வேடிக்கை பார்த்துகிட்டு இருக்க! போயா போய் என் வீட்டு பொண்ண என் கூட அனுப்பி வைக்க ஏற்பாடு பண்ணு” என்ற ரங்காராவ் அசையாமல் நின்றபடி வாய் வார்த்தையால் கர்ஜித்து கொண்டு இருந்தான்
Advertisement
“மாப்புள்ள…அப்போ வைதேகியை கட்டாயக் கல்யாணம் பண்ண முயற்சி பண்ணது இந்தக் கிழவன் தானா? வைதேகி அம்மா அப்பாவை சாவடிச்சது கூட இந்தப் பழம் தானா?” என்று கீதா கேட்க, “ஆமா… எல்லாமே அந்தப் பக்கி பையன் தான்” என்றான் ரணதீரன்.
“பெரியம்மா…அப்போ இங்க இருக்குற எல்லோருக்கும் வைதேகி யாருன்னு உண்மை தெரிஞ்சிருக்கு தானே! தெரிஞ்சும் நீங்க ஏன் அவங்கள அவங்க வீட்டுக்கு அனுப்பி வைக்க முயற்சி பண்ணல?” என்று காவல்துறை அதிகாரியாக இருக்கும் விக்ரம் கேட்டதும், ரணதீரன் கிண்டலாகச் சிரித்தவன், “என்ன போலீஸ் ஆபீஸர் நீங்க? படிச்சு தான் இந்த உத்தியோகத்துக்கு வந்தீங்களா? இல்ல பணம் கொடுத்துப் போஸ்ட் வாங்குனிங்களா?” என்று ரணதீரன் கேட்டதும் கீதா சத்தமாகச் சிரித்து விட்டார்.
“மைண்ட் யுவர் வேர்ட்ஸ். நான் ஒரு போலீஸ்” என்று விக்ரம் சொல்ல, “அதெல்லாம் தெரியுது, ஆனா ஒரு போலீசா இருந்து எப்படி பேசணும்னு உங்களுக்குத் தெரியலையே” என்ற ரணதீரன் தன் இருக்கையிலிருந்து எழுந்தவன் அடிமேல் அடி வைத்து ரங்காராவை நெருங்கி வந்தான்.
Advertisement
“டேய்… உனக்கும் எங்க குடும்பத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.ஒழுங்கு மரியாதையா சித்ராவை எங்க கூட அனுப்பி வச்சிடு” என்று ரங்காராவ் சொல்ல, மீண்டும் தன் கை விரலை ரணதீரன் சுண்டிய வேதத்தில் வேட்டை நாயில் ஒரு நாய் ரங்காராவின் காலைக் கடித்ததும், அவன் வலியில் துடித்துக் கீழே விழுந்தவனை பார்த்து அடியாட்கள் ரணதீரனை அடிப்பதற்காகக் கையை ஓங்க, மீதம் இருக்கும் இரண்டு நாய்களும் அடியாட்களை கடித்துக் கொதர ஆரம்பித்தது.
“இங்க பாருங்க…பிரச்சனை பண்ணாம வைதேகியை அவங்க கூட அனுப்பி வைங்க. மீதி விஷயத்தை அப்புறம் பேசிக்கலாம். இப்போ இவங்க கோர்ட்டு கேஸ்ன்னு போனா உங்களுக்குத் தான் பிரச்சனை “என்ற விக்ரமின் மனதில் வேறொரு திட்டம் இருந்தது.
“மிஸ்டர் விக்ரம்…வைதேகி மேஜர்.அவங்க எங்க இருக்கணும்னு அவங்க தான் முடிவு பண்ணனும். இவரு ஜஸ்ட் சொந்தக்காரன் அவ்வளவுதான். இவர் ஒன்னும் வைதேகிக்கு கார்டியன் இல்லயே” என்ற ரணதீரனின் வார்த்தையைக் கேட்டு விக்ரம் அமைதியாக இருந்தவன் மனதில் எப்படியாவது வைதேகியை இந்த வீட்டிலிருந்து அழைத்துச் செல்ல
வேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் இருந்தது.
நாய் கடித்ததில் வலியால் அலறிக் கொண்டிருந்த ரங்காராவ், “சரி…அவளுக்கு நான் கார்டியன் இல்லனா கூட நான் அவளுக்குச் சொந்தக்காரன். அந்த உரிமையில் அவ என் வீட்டில் இருக்கலாம். ஆனால் எந்த உரிமையில் அவள் உங்க வீட்டுல இருக்க முடியும்?” என்று கேட்டான்.
ரங்காராவின் கேள்வியில் உள்ள நோக்கத்தைப் புரிந்து கொண்ட மாறன், “வைதேகியை என் மச்சான் தான் கல்யாணம் பண்ணிக்க போறான். அந்த உரிமையில் தான் வைதேகி இந்த வீட்டில் இருக்கிறாள்” என்று சொன்னதும் ரங்காராவ் தலையில் இடி இறங்கியதை போல உணர்ந்தவன்,
“என்ன! இவன் சித்ராவை கல்யாணம் பண்ணிக்க போறானா?” என்றவன் கேள்வியில் ஏமாற்றமும் கோபமும் நிறைந்திருந்தது.
“ஆமா…அடுத்த வாரம் ரணதீரனுக்கும் வைதேகிக்கும் கல்யாணம் நடக்கப்போகுது. அந்த உரிமையில் தான் வைதேகி எங்க வீட்ல இருக்கிறாள். அதனால நீங்க எல்லாம் வந்த வழியே கிளம்புங்க” என்று மாறன் சொல்ல, “இல்ல… நான் நம்ப மாட்டேன். வைதேகியே வந்து எனக்கு இங்க இருக்க விருப்பம்னு சொல்லட்டும் நான் கிளம்புறேன்” என்ற விக்ரமை சந்தேகமாகப் பார்த்தான் ரணதிரன்.
“இப்போ உங்களுக்கு என்ன பிரச்சனை! வைதேகியே வந்து எங்க வீட்ல இருக்க அவங்களுக்கு விருப்பம்னு சொன்னா நீங்க உங்க வண்டிய கிளப்பிக்கிட்டு போய்கிட்டே இருப்பீங்க தானே” என்று ரணதீரன் கேட்க, “ம்”என்ற ரீதியில் தலை அசைத்தான் விக்ரம்.
“அக்கா…வைதேகியை அழைச்சிட்டு வாங்க” என்று தன் அக்கா மாயாவிடம் ரணதீரன் சொல்லும் தருணம் வைதேகி கால்களைத் தாங்கியபடி வேதநாயகியின் அறையிலிருந்து வெளியே வந்தவள் ஒரு கணம் சுற்றி இருக்கும் அனைவரையும் பார்த்தவளின் கண்கள் இறுதியாக ரணதீரனின் விழிகளை சந்தித்தது.
வைதேகியின் அச்சத்தை உணர்ந்த ரணதீரன்,”நான் இருக்கேன் பயப்படாத” என்ற ரீதியில் அவன் கண்களை மூடித் திறந்த அடுத்த நொடி,”நான் இங்கதான் இருப்பேன். எனக்கு இங்கே இருக்க தான் பிடிச்சிருக்கு. தயவுசெய்து நீங்க இங்கிருந்து கிளம்பிடுங்க” என்று வைதேகி சொன்னதும், ரங்காராவை விட விக்ரமிற்கு கோபம் அதிகரித்து.
“அதான் சொல்லிட்டாங்களே கிளம்புங்க” என்ற ரணதீரன் தன் கரங்களை வாசலை நோக்கிக் காட்டியதும், “டேய் என்ன? கோடீஸ்வர பொண்ணு இவளை வளைச்சு போட்டு இவ கழுத்துல தாலி கட்டினா சொத்து எல்லாம் உனக்கு வரும்னு திட்டம் போடுறியா?” என்ற ரங்காராவ் வலியில் அல்லோல பட்டவனாய் ஆதங்கத்தில் கத்தியவனை பார்த்து ஏளனமாகச் சிரித்தான் ரணதீரன்.
“பணத்துக்காகச் சோறு போட்டவங்க கழுத்த அறுக்குற பழக்கம் எங்களுக்கு இல்ல. நீ எங்களைப் பற்றி என்ன வேணாலும் நெனச்சுக்கோ. அதனால எங்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்ல. ஆனா வைதேகியோட அம்மா அப்பாவைச் சாகடித்த குற்றத்திற்காகவும், வைதேகியை வழுக்கட்டாயமாகக் கல்யாணம் பண்ண வற்புறுத்தி அவளைக் கொடுமைப் படுத்தியதற்காகவும் உன் மேல சீக்கிரமா வழக்கு தொடுத்து உன்ன கோர்ட்ல நிக்க வச்சு,உனக்குக் கிட்டத்தட்ட மரணத் தண்டனையே வாங்கி கொடுக்க என்னால முடியும்.அதையும் நான் சீக்கிரம் செய்யத் தான் போறேன்” என்ற ரணதீரனின் அர்த்தமான வார்த்தைகளைக் கேட்டு வைதேகிக்கு மேலும் மேலும் ரணதீரன் மீது அன்பும் நட்பும் வளர்ந்ததை விட அதிகமாகவே அவனுடன் அவள்
இருக்கும் நேரம் பாதுகாப்பாக உணர்ந்தாள்.
“ஏய்…உன்னால என்னை ஒன்னும் பண்ண முடியாது”என்ற ரங்காரவை பார்த்து,”இந்த நொடி நான் நெனச்சா கூட என் மூணு வேட்டை நாய்ங்களுக்கும் உன்னைக் கூறு போட்டு பங்குப் பிரித்துக் கொடுக்க என்னால முடியும். ஆனா எதுவா இருந்தாலும் சட்ட ரீதியா உன்ன சந்திக்கனும்னு நான் முடிவு பண்ணிட்டேன்.மறுபடியும் சொல்றேன் ஒழுங்கு மரியாதையா உன் அன்னக்கைங்களோடு சேர்ந்து நீயும் இங்கிருந்து கிளம்பி போய்கிட்டே இரு. இல்ல என்னுடைய இன்னொரு முகத்தை நீ பார்க்க வேண்டியது வரும்” என்ற ரணதீரனின் கோபமான முகத்தையும் அவன் கண்களில் தெரிந்த ஆவேசத்தையும் கண்ட ரங்காராவ் தன்னுடைய கோபத்தை காட்ட இது சரியான தருணம் இல்லை என்று எண்ணியவன் நாய் கடியோடு தன் ஆட்களுடன் ரணதீரனின் வீட்டிலிருந்து வெளியேறினான்.
அவ்வளவு சாதாரணமாக ரங்காராவ் தன்னை விட்டு விடமாட்டான் என்ற உண்மையை அறிந்த வைதேகி ரங்காராவை நினைத்து மேலும் பயம் எழுந்த நிலையில் அவள் கண்களில் கண்ணீர் பெருகி இருக்க, அவளுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக மாயா வைதேகியை ஆதரவாகக் கட்டிக்கொண்டு நின்றிருந்தாள்.
“பெரியம்மா…சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. ரங்காராவ் பக்கத்து ஊர்ல பெரிய கை.அவரை மீறி நம்மனால ஒன்னும் பண்ண முடியாது.அவர் சொல்ற மாதிரி வைதேகியை அவங்க கூட அனுப்பி வைங்க. மத்தபடி எதுவா இருந்தாலும் சட்டப்படி நம்ப பேசிக்கலாம்” என்ற விக்ரமைப் பார்த்துத் தலையில் அடித்துக் கொண்டான் மாறன்.
“என்ன மச்சான் நீ…வைதேகி அவ வாழ்க்கைய காப்பாத்திக்கறதுக்காக அந்த ஊர்ல இருந்து தப்பிச்சு இப்போதான் இங்க வந்து நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்துகிட்டு இருக்காள். அதுவும் இல்லாம தன்னுடைய அம்மா அப்பாவைச் சாவடித்த ஒருவனை நம்பி இந்தப் பொண்ணு மறுபடியும் அங்க எப்படி போவாள். கொஞ்சம் கூட யோசிக்காம பேசுறீங்க” என்று மாறன் விக்ரமை கேள்வி கேட்க, “மாமா…மிஸ்டர் விக்ரமுக்கு வைதேகி ரங்காராவ் கூடப் போகணும் என்ற எண்ணம் இல்லை. வைதேகி இந்த வீட்டை விட்டுப் போகணும் என்ற எண்ணம் மட்டும்தான் இருக்கு” என்ற ரணதீரன் விக்ரமின் மனதை அறிந்திருந்தான்.
“என்ன சொல்றீங்க…எனக்கு அப்படி எந்த எண்ணமும் இல்ல.அவரு கேஸ் கொடுத்ததனால நான் சட்டப்படி வைதேகியோட சொந்தக்காரங்கக்கிட்ட அவங்கள அனுப்பி வைங்கன்னு சொன்னேன். அவ்வளவுதான், மத்தபடி வைதேகி இந்த வீட்ல இருக்கிறதால எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை” என்ற விக்ரமைப் பார்த்து வேடிக்கையாக சிரித்தான் ரணதீரன்.
“நான் தெரியாம தான் கேட்கிறேன்! வைதேகிக்கு அவங்ககூட போக விருப்பம் இருக்கா இல்லையான்னு அவளைக் கேட்காமல் அவளை அவங்க கூட அனுப்பி வைக்கலாம்ன்னு நீயா எப்படி சொல்லுவ?” என்று மாயாவும் பொறுமை இழந்தவளாக கேட்டாள்.
“அது… அது வந்து… அது வைதேகி ரங்காராவை உயிர் போற அளவுக்குத் தலையில அடிச்சிட்டு அந்த வீட்டுல இருந்து தப்பிச்சு வந்ததா அவர் கம்ப்ளைன்ட் கொடுத்தாரு. அதுக்காகத் தான் நான் வைதேகியை மறுபடியும் அவர் கூடி அனுப்பி வைக்க சொன்னேன்” என்று விக்ரம் சூழ்நிலையைச் சமாளிக்கும் விதமாக பேசியவனைப் பார்த்து மேலும் சிரித்தான் ரணதீரன்.
“ஒரு பொண்ணு ஒரு ஆள உயிர் போற அளவுக்கு அடிக்கிறான்னா அவன்னால அவளுக்கு என்ன பிரச்சனைன்னு நீ கேட்பியா! இல்ல பிரச்சனை கொடுத்தவன் கிட்டயே அந்தப் பொண்ணை மீண்டும் அனுப்பி வைப்பியா? இதுதான் நீ படிச்ச லட்சணமா? ” என்று ரணதீரன் கேட்டதும் விக்ரமிற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தான்.
“இங்க பாரு விக்ரம்… நீ இந்த வீட்டு பிள்ளையா இல்லாம காவல்துறை அதிகாரியா வந்ததால நாங்களும் உன் உத்தியோகத்திற்கு மதிப்பு கொடுத்துத் தான் ஆகணும். அதனால தான் சொல்றேன் வைதேகிக்கு இங்க இருக்க விருப்பம் இருக்கிற பட்சத்துல யார் வந்து கூப்பிட்டாலும் வைதேகியை நாங்க அனுப்பி வைக்கமாட்டோம்” என்றும் மாறன் உறுதியாகச் சொன்னான்.
வைதேகியை வைத்த கண் இமைக்காமல் விக்ரம் பார்த்துக் கொண்டு இருக்க, “வைதேகி நீ போயி ரெஸ்ட் எடு” என்று ரணதீரன் சொன்னதும் அவளும் தயக்கத்துடன் வேதநாயகியின் அறைக்குள் சென்றவளை விக்ரம் அதே ஏக்கத்துடனும் தவிப்புடனும் பார்த்தவன் மனதில் எப்படியாவது தன் காதலை வைதேகியிடம் தெரியப்படுத்தி அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எண்ணியப்படி வேதநாயகியின் வீட்டிலிருந்து வெளியேறினான்.
ரங்காராவும் விக்ரமனும் ரணதீரன் வீட்டிலிருந்து வெளியேறி இருக்க, இதனால் வரை வைதேகி தான் இந்த வீட்டின் மருமகளாக வரப்போகிறாள் என்று கற்பனையில் கட்டி வைத்த கோட்டை அவர் கண் முன்னே இடிந்து தரைமட்டமானதை நினைத்து வேதநாயகி மனம் உடைந்த நிலையில் அதே இடத்தில் சிலையென அமர்ந்து இருந்தார்.
“அம்மா… இப்போ ஏன் நீங்க வருத்தப்படுறீங்க. பாவம் வைதேகி. அவளுடைய அம்மா அப்பா இறந்ததற்கு காரணமே அவள் மாமா என்ற உண்மை தெரியாமல் இந்தியாவுக்கு வந்து அந்த ஆளுகிட்ட படாத கஷ்டப்பட்டு இன்னைக்கு நம்ம வீட்ல தான் பாதுகாப்பா இருக்கிறாள்.இனி நம்ப தான் எப்படியாவது அவளைக் கனடாவுக்கு அனுப்பி வைக்கனும். அதனால நீங்க இதெல்லாம் நினைச்சு கவலைப்படாம மருந்து மாத்திரையைப் போட்டுக்கிட்டு நிம்மதியா இருங்க. அக்கா சாப்பாட்டை என்கிட்ட கொடு” என்ற ரணதீரன் மேசைமேல் இருந்த உணவை எடுத்துக்கொண்டு வைதேகி இருக்கும் தன் அம்மாவின் அறைக்குள் நுழைந்தான்.
தன் ஆசையெல்லாம் ஒரு நொடியில் அழிந்து போன கவலையில் அமர்ந்திருந்த வேதநாயகியின் அருகே வந்து நின்ற மாறன், “அத்தை… எனக்குத் தெரியும் நீங்க என் மேல ரொம்ப கோவமா இருப்பீங்கன்னு. என்னை மன்னிச்சிடுங்க அத்தை” என்று மாறன் மன்னிப்பு கேட்டான்.
“அய்யய்யோ… என்ன மாப்பிள்ளை நீங்க! நான் நல்லா இருக்கணும்னு தானே நீங்கப் பொய் சொன்னீங்க. ஆனா என்ன ஒன்னு நீங்கச் சொன்னது பொய்யின்னு தெரியாம நான் தான் ரொம்ப ஆசையை வளர்த்துக்கிட்டேன்” என்ற வேதநாயகியின் கண்களில் கண்ணீர் வடிந்தது.
“அத்தை…நான் சொல்றேன்னு மறுபடியும் நீங்கத் தப்பா நினைக்காதீங்க. எனக்குச் தெரிஞ்சு கண்டிப்பா வைதேகிக்கும் ரணதீரனுக்கும் கல்யாணம் நடக்கும்” என்று மாறன் சொல்ல, அவன் வார்த்தையை வேதநாயகியின் மனம் மகிழ்ச்சி அடைந்தாலும் அவரால் மீண்டும் ஏமாற முடியாது என்ற பட்சத்தில், “இல்ல மாப்புள்ள, எனக்கு அந்த நம்பிக்கை இல்லை” என்றார் வேதநாயகி.
“அத்த…நான் சொல்றத கேளுங்க. இப்பதான் நம்ம ராணா வைதேகிக்கிட்ட நட்பா பேசிப் பழகுறான். நீங்களே யோசிச்சு பாருங்க! இதுவரை அவன் யார்கிட்டயும் இப்படி பேசியோ சிரிச்சோ நம்ம பார்த்ததே இல்ல. ஆனா இப்போ மச்சான் வைதேகி கிட்ட சகஜமா பேசறான். அதனால தான் சொல்றேன்! நீங்க எதையும் யோசிக்காதீங்க.கண்டிப்பா வைதேகி தான் இந்த வீட்டுக்கு மருமகளா வருவாள். நீங்கக் கூட வைதேகிக்கும் ரணதீரனுக்கும் தான் திருமணம் நடக்கும் என்று ஜோசியக்காரர் சொன்னாருன்னு தானே சொன்னீங்க” என்று மாறன் சொல்ல, ஒரு கணம் யோசித்த வேதநாயகி தன் கண்ணீரைத் துடித்துக் கொண்டார்.
“ஆனா மாப்புள… வைதேகியை கனடாவுக்கு அனுப்பி வைக்கணும்னு ரணதீரன் சொன்னானே!” என்று வேதநாயகி கேட்க,
“அத்த…இன்னும் அதுக்கு நாள் இருக்கு. கண்டிப்பா அவங்க ரெண்டு பேரும் நட்பாகப் பேசி பழகினால் ஒருத்தர் மேல ஒருத்தர் வைத்திருக்கும் அன்புக்கு பேர் தான் காதலுன்னு புரிஞ்சிப்பாங்க அத்த. நீங்க வேணா பாருங்க கண்டிப்பா வைதேகிக்கும் ரணதீரனுக்கும் கல்யாணம் நடக்கும்” என்ற மாறனின் வார்த்தையை மீண்டும் நம்பினார் வேதநாயகி.
“சரி மாப்புள்ள… நீங்க என்ன சொன்னாலும் அது நம்ம குடும்பத்தோட நல்லதுக்கு தான். ஆனா எனக்கு மனசு சரியில்ல. நானும் சம்மந்தியும் கோவிலுக்குப் போயிட்டு வரோம்” என்று வேதநாயகி சொல்ல,
“சம்மந்தி… என்னை மன்னிச்சிடுங்க. நானும் இவங்கக்கூட சேர்ந்து உங்ககிட்ட பொய் சொல்லிட்டேன்” என்ற கீதா தன் சம்மந்தியிடம் மன்னிப்பு கேட்டார்.
“ஏன் நீங்கப் பெரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்க, நீங்க எல்லாம் சொன்னது பொய்யா இருந்தாலும் என் உயிரைக் காப்பாத்த தானே பொய் சொன்னீங்க. பரவாயில்ல! மாப்பிள்ளை சொன்ன மாதிரி வைதேகி நம்ம வீட்டுக்கு மருமகளா வரணும்னு நானும் கடவுளை வேண்டுகிறேன் . வாங்க கோவிலுக்கு போயிட்டு வரலாம்” என்ற வேதநாயகி டிரைவருடன் கீதாவை அழைத்துக் கொண்டு கோவிலுக்குக் கிளம்பினார்
“மாமா…அம்மாவுக்கு வைதேகி யாருன்னு தெரிஞ்சா பெரிய பிரச்சனை நடக்கும்ன்னு நினைத்தேன். நல்லவேளை அம்மா நிதர்சனமான உண்மையை ஏத்துக்கிட்டாங்க” என்று மாயா சொல்ல,
” இல்ல மாயா… கண்டிப்பா வைதேகிக்கும் ரணதீரனுக்கும் கல்யாணம் நடக்கும்ன்னு என் உள் மனசு சொல்லுது” என்ற மாறனின் வார்த்தை உண்மையாக வேண்டும் என்று மாயாவும் எண்ணினாள்.
இதே தருணம் வேதநாயகியின் அறையில் காலில் கட்டுடன் அமர்ந்திருந்த வைதேகி அழுதப்படி ஒரு வாய் கூடச் சாப்பிடாமல் இருந்தவளை பார்த்து, “ஏய்…உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா? சாப்பிட்டு மாத்திரை போடணும். உனக்குப் பிபீ வேற அதிகமா இருக்குன்னு டாக்டர் சொல்லி இருக்காரு. சும்மா சும்மா மயக்கம் போட்டு விழுந்தினா உன்னைத் தூக்குறதுக்கு நான் என்ன உன் வீட்டு வேலைக்காரனா!?” என்று ரணதீரன் சற்று கோபமாகப் பேசியதும் அவனை முறைத்து பார்த்தாள் வைதேகி.
“இந்த முறைப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல. இப்ப நீ சாப்பிடுறியா இல்ல மயிழினி பாப்பாக்கு ஊட்டி விடுற மாதிரி உன்னையும் தலையில நாலு குட்டு வச்சி ஊட்டி விடணுமா?” என்று ரணதீரன் கேட்க,
“நீங்க ஒன்னும் என்னைக் குட்டலாம் வேண்டாம். நீங்கப் பாசமா ஊட்டி விட்டாலே நான் சாப்பிடுவேன். ஏன்னா எங்க அப்பா என்னைத் திட்டாம கொஞ்சி கொஞ்சி தான் ஊட்டி விடுவாரு” என்ற வைதேகி முகத்தைத் கோவமாகத் திருப்பிக்கொண்டு அமர்ந்து இருந்தாள்.
“இப்ப என்ன? நானும் உன்னைக் கொஞ்சி கொஞ்சி ஊட்டி விடணுமா!? ஆனா அதெல்லாம் எனக்கு செய்யத் தெரியாது. வேணும்னா ஊட்டி விடுறேன்” என்றவன் சற்றும் தாமதிக்காமல் தானே வைதேகிக்கு உணவை ஊட்டி விட்டவன் மனதில் வைதேகியின் மீது நல்ல அபிப்பிராயம் மட்டுமே இருக்க…
வைதேகி மட்டும் தன்னிடம் கூட ஒப்புக்கொள்ளத் தயங்கும் ஒரு உணர்வை அவனிடம் உணரத் தொடங்கினாள்.
வைதேகிக்கு ரணதீரனின் ஒவ்வொரு வார்த்தையும், அவன் பார்வையின் மென்மையும் அவள் மனதுக்குள் ஓர் நுட்பமான அசைவினை ஏற்படுத்தியது.
நண்பனாக ஆரம்பித்த அந்த உறவு, இப்போது பசுமை மழையில் பூக்கும் மௌன மலராக மாறிக்கொண்டிருந்தது.
error: Content is protected !!