Skip to content
Post Views: 972
விழிகள் 7
தனஞ்ஜெயன் முழுதாக பத்து நிமிடம் எதையும் உணர முடியாது அதிர்ச்சியில் அப்படியே அமர்ந்திருந்தான்.
Advertisement
அப்பொழுது அங்கே வந்த கார்த்திக் “டேய் மாப்பிள என்னடா பேய்யறைஞ்ச மாதிரி உக்காந்துருக்க என்னாச்சு?” என கேட்டான்..
அதில் அதிர்ச்சி தெளிந்தவன் அல்லியை தேட, அவள் இல்லை..
Advertisement
Advertisement
இவன் சிலையாக அமர்ந்திருக்கும் பொழுதே கீழே சென்று விட்டாள். அதைக் கூட உணர முடியாது அமர்ந்திருக்கிறான்..
“மாமா அல்லி என்ன பார்த்து இப்படி பேசிட்டா மாமா” என தனஞ்செயன் அல்லி திட்டியதை சொல்ல கார்த்திக் அதிர்ந்து போனான்..
Advertisement
அடுத்த நொடி “அடச்ச இது ஒரு பிரச்சனையா மாப்பிள இதுக்குபோயா கப்பல் கவுந்த மாதிரி உக்காந்துருக்க” என கேலியாக கேட்க..
மாமா என்றான் அவன் பாவமாக..
“மாப்பிள என்னய்யா இப்புடி பச்சபிள்ளையா இருக்குற. உன் அக்காளுங்கள கல்யாணம் கட்டி இங்க அஞ்சு பேரு படுற பாட்ட பாத்துகிட்டு தானே இருக்க. உங்க அக்காளுங்க எங்கள கிழிக்காத கிழியா. அது கூட கம்பேர் பண்ணும் போது இதெல்லாம் ஒண்ணுமே இல்ல. சும்மா தங்கச்சி உன்னை ஏதோ கொஞ்சிட்டு போயிருக்கு.” என கார்த்திக் சாதாரணமாக சொன்னான்.
“மாமா அல்லி அக்காங்க மாதிரி எல்லாம் இல்ல மாமா, அவ ரொம்ப சாதுதானே. அதான் இப்படி நடக்கவும் பயந்துட்டேன்.”
“கல்யாணம் ஆகிட்டாலே பொண்ணுங்க எல்லாம் மாறிடுவாங்க மாப்பிள்ளை. தங்கச்சி ரொம்ப பயந்து சுபாவம்ங்கிறதால தான் உன்னை இதோட விட்டு வச்சிருக்கு. அதுகூட ஏதோ தூக்க கலக்கத்துல பேசியிருக்கும். அதைப்போய் பெருசா எடுத்துட்டு இருக்க” என கார்த்திக் சொல்ல, தனஞ்ஜெயனும் அப்படித்தானோ என எண்ணி சமாதானம் அடைந்தான்..
“உன்கிட்ட சொல்றதுக்கு என்ன, நான் எல்லாம் கல்யாணமான அன்னைக்கே உங்க அக்கா கிட்ட நல்லா அடி வாங்கி இருக்கேன்” என சுற்றிலும் பார்த்தவாரு பாவமாக சொல்ல, தனஞ்ஜெயன் தன் அக்காள் கணவனை பரிதாபமாக பார்த்தான்..
“ச்ச பாவம் மாமா நீங்க..”
“என்ன பண்றது பேய்க்கு வாக்கப்பட்டா இப்படித்தான்” என சலிக்க, தனஞ்ஜெயன் முறைத்தான்.. என்னவென்றாலும் உடன் பிறந்த சகோதரி அல்லவா.
“கண்டதெல்லாம் யோசிக்காம கீழ போலாம் வா” என அழைத்துசென்றான்.
அங்கோ புன்னகை முகமாய் நெற்றியில் தீட்டியிருக்கும் திருநீர் குங்குமத்துடன் தலையில் புதிய மல்லிச்சரம் சூட்டி, அனைவருக்கும் டீ கொடுத்து கொண்டிருந்தாள் அல்லி.
“பரவாயில்ல மருமகளே உனக்கு இதெல்லாம் தெரிஞ்சிருக்கு. ஆறு மணிக்குள்ள நீயாவே போய் விளக்கேத்தி சாமி கும்பிட்டு இருக்க. இப்ப இந்த காலத்துல யாரு இதெல்லாம் செய்கிறா” என ஒரு வயதான பெண்மணி சொல்ல,
அல்லி சிரிப்புடன் தலை குனிந்து, “இதெல்லாம் எனக்கு பழக்கம் தான் அம்மாச்சி” என மென்குரலில் கூறினாள்.
அதைக்கேட்ட தனஞ்ஜெயன், “ம்ம்ம் இதுதான் நம்ம அல்லியோட உண்மையான குணம்.. அப்போ ஏதோ தூக்கத்துல பேசிட்டா போல” என அவன் நினைக்கும் போதே, அவனைக் கண்ட அல்லி,
“அத்தான் வாங்கத்தான் உங்களுக்கு டீ எடுத்துட்டு வரவா” என மென்மையாக கேட்டாள்.
அனைவரின் முன்னிலையிலும் அல்லி அத்தான் என அழைத்ததை நினைத்து வெட்கம் கொண்டான் அந்த ஆண் மகன்..
இதுவரை அவனை யாரும் உறவு முறையில் கூட அத்தான் என அழைக்கவில்லை. இவள் தான் முதல் முதலில் அழைக்கிறாள். அதுவும் கொண்டவளின் அழைப்பு, அவனின் மனதிற்கு இன்பச்சாரலாக வீசியது.
ஆனால் அனைவரின் மத்தியில் அழைத்ததும் எல்லார் பார்வையும் அவர்கள் மேல் பதிவதால் ஆடவன் சிறு வெட்கம் கொண்டான்..
“அவனுக்கு டீயில ஏலக்காய் சுக்கு எல்லாம் தட்டபோட்டு கொதிக்க விடுமா, அதான் என் மகனுக்கு பிடிக்கும்” என தன் வெண்கலக் குரலில் சத்தமாக சுந்தராம்பாள் கூற, அல்லி பவ்யமாக தலையசைத்து சென்றாள்..
அப்பொழுது விஜயா “அம்மா மலருக்கு என்ன மாதிரியே பூச்செடி வளர்கிறதெல்லாம் ரொம்ப பிடிக்குமாம். நான் அவளுக்கு நம்ம வீட்டு மாடி தோட்டத்தை காமிச்சுட்டு வரேன்.” என மலரை அழைத்து கொண்டு செல்ல, ஒருவன் பாவமாக முழித்து கொண்டிருந்தான்.
அது யார் என்று சொல்லவும் வேண்டுமா?
அல்லிராணியை கட்டிய மகாராஜன் தான். இரவின் தனிமையில் அவளை கூட்டிக் கொண்டு செல்லலாம் என அவன் நினைத்திருக்க, விஜயாவோ அதில் ஒரு கூடை மண்ணை போட்டு மூடி இருந்தார்.
******************************
ஞானசுந்தரம் ஏதோ யோசனையில் அமர்ந்திருக்க, அவரின் அருகில் வந்த சுந்தராம்பாள், “என்னாச்சு அண்ணா ஏதோ யோசிச்சுகிட்டே இருக்கீங்க என்ன விஷயம்?” என கேட்டார்.
“இல்லம்மா, புது மருமகள பார்க்க எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கு. ஆனா எங்கன்னு ஞாபகம் வரல. பொண்ணு வேற மதுரைன்னு சொல்ற, அதான் ஏதோ மனச போட்டு உருத்திக்கிட்டு இருக்கு. எல்லாம் விசாரிச்சு தானே பொண்ணு எடுத்த” என கேட்டார்.
“அதெல்லாம் விசாரிக்காமயா இருப்பேன். நம்ம கடைசி மாப்பிள்ளையும் மூத்த மாப்பிள்ளையும் தான் மதுரைக்கே போயி, பொண்ணு வீடு அவுக சொந்த பந்தம் எல்லாத்தையும் விசாரிச்சிட்டு வந்தாங்க. நீங்க சும்மா மனச போட்டு குழப்பிக்காதீங்க” என சுந்தராம்பாள் தன் அண்ணனிடம் சொல்ல, பக்கத்தில் இருந்த ஈஸ்வரியோ திருத்திருவென முழித்துக் கொண்டிருந்தார்..
“ஹக்கும் நல்லா விசாரிச்ச போ, எவன் வேண்டாதவனோ அவன் வீட்டு பொண்ணதான் நீ சம்மந்தம் பண்ணியிருக்க. அது மட்டும் தெரிஞ்சா அண்ணனும் தங்கச்சியும் என்ன ஆட்டம் ஆட போறாங்களோ” என உள்ளுக்குள் புலம்பி கொண்டிருந்தார்..
“நாம மொதல்ல இங்கிருந்து கிளம்புவோம். இல்லன்னா நம்ம மூஞ்சியே எதாவது காட்டி கொடுத்துடும். இந்த நித்யா வேற எப்ப வரான்னு தெரியல, இங்க எப்போ என்ன நடக்க போகுதுன்னு தெரியல” என உள்ளுக்குள் பயந்தவாறு அங்கிருந்து நகர்ந்தார் ஈஸ்வரி..
மாடியில் நிறைய ரோஜா செடிகள் மல்லி முல்லை கொடிகள் ஏன் சில காய்கறி செடிகள் கூட இருந்தன.
கீழே வீட்டின் முன்பக்கம் பெரிய அளவிலான தோட்டத்திலும் மரம் செடி கொடி என அதிகம் இருந்தாலும். மலருக்கு மாடிதோட்டம் மிகவும் பிடித்து போனது..
பன்னீர் ரோஜாக்களை வருடி அதன் வாசனை ஆழ்ந்து சுவாசித்து கொண்டிருந்தாள். அப்போது,
“எங்க வீடு உனக்கு புடிச்சிருக்கா மலர்” என விஜயா பேச்சை ஆரம்பித்தாள்.
விஜயா பார்வையும் சரியில்லை, பேசும் முறையும் சரி இல்லை என அல்லிக்கு புரிந்ததால் எதுவும் பேசாது, சிரிப்புடன் தலையை மட்டும் ஆட்டினாள்.
“எப்படி பிடிக்காம போகும். இந்த மாதிரி பெரிய பங்களா எல்லாம் நீ படத்துல தான் பாத்துருப்ப” என நக்கல் செய்தாள்.
“எங்கம்மா உன்ன என் தம்பிக்கு கட்டி வைக்காம இருந்திருந்தா இந்த மாதிரி பங்களால எல்லாம் உன்னால கனவுல தான் வாழ முடியும்.”
“இருக்குற இடத்தை தெரிஞ்சு எல்லாத்தையும் புரிஞ்சு நடந்துக்கணும் மலரு, கீழ இருந்து கோபுரத்துல உக்காந்துட்டோம்னு சும்மா ஆடக்கூடாது. இருக்கிற இடம் தெரியாம இருந்துட்டு போயிடனும். நீங்க மாச சம்பளம் வாங்குறவங்க. ஆனா நாங்க மாசத்துக்கு ஐம்பது பேருக்கு சம்பளம் கொடுக்கிறவங்க. புரிஞ்சு நடந்துக்க” என விஜயா ரோஜா செடியை பார்த்தவாரு நக்கலாக சொல்ல, அல்லியின் முகம் செந்தணலாக மாறிக் கொண்டிருந்தது.
“நீ பேசுடி பேசி முடி அப்பொறம் இருக்கு உனக்கு” என நினைத்தவாறு வேகமாக திரும்ப, பக்கத்தில் உள்ள கொடியின் கிளை அவளின் கண்ணில் பட்டு கண் கலங்கியது. அதனை பார்த்த விஜயாவோ தான் சொன்னதற்குத்தான் அழுகிறாள். இவளை இப்படியே மிரட்டி தனக்கு கீழ் அடக்கி வைக்க வேண்டும் என மேலும் பேசினாள்.
“இந்த வீட்டுல எங்கம்மா பேச்சுக்கு யாரும் மறுவார்த்தை பேச மாட்டாங்க. அதுபோல நீயும் நடந்துகிட்டா நல்லபடியா பொழைக்கலாம். இல்ல..” என இழுத்த விஜயாவோ பதில் பேசாது, கரத்தில் வருடிய ரோஜாவை சட்டென கிள்ளி தூக்கி எறிந்தாள்.
அதாவது இவர்கள் சொல்வதைக் கேட்கவில்லை என்றால் இவளையும் தூக்கி எறிந்து விடுவார்களாம், அதனை மறைமுகமாக சொல்கிறாள்.
விஜயா ஆரம்பத்தில் அல்லியின் முகத்தை பார்த்து பேசினாலும், அதற்கு அடுத்து எல்லாம் செடியை பார்த்து பேசியதால் அவளின் முகபாவனையை கவனிக்கவில்லை..
ஆனால் மாடிக்கு ஏதோ வேலையாக வந்த ஈஸ்வரி அல்லியின் முகத்தில் இருக்கும் கோபத்தை கண்டு, வேகமாக அவர்களிடம் வரும் நேரம்,
அல்லி தன் புடவையின் முந்தானையை உதறி இடுப்பில் சொருகிவிட்டு, அங்கிருந்த ஒரு பூந்தொட்டியை தூக்குவதை கண்டு அவரின் உயிரே போய்விட்டது..
விஜயா என ஈஸ்வரி கத்த, அவள் திரும்பினாள்..
அப்பொழுது சரியாக அல்லி தூக்கியெறிந்த தொட்டி காலில் விழுந்து விட்டது..
ஆஆ என அவள் அலற, ஈஸ்வரி வேகமாக அவளின் காலை பார்த்தார் வீங்கி விட்டது.. ஆனால் பெரிதான அடிப்போல் தெரியவில்லை…
ஆஆ வலிக்குது.. என விஜயா அலற, ஈஸ்வரி அவளை தூக்கினார்..
“சரி சரி வா கீழே போயிடலாம். தொட்டி தவறி கீழே விழுந்துருச்சு போல, வா போகலாம்” என சொன்னவர். அல்லியையும் முறைப்பாக ஒரு பார்வை பார்க்க,
அவளும் “அச்சோ அண்ணி என்னாச்சு” என மறுபக்க கரத்தைப் பிடித்துக் கொண்டாள். இவரும் கை தாங்கலாக கீழே அழைத்து செல்ல அனைவரும் பதட்டத்துடன் என்னவென கேட்டனர்..
“மாடி மேல, சைடுல உள்ள தொட்டி விஜயா காலுல விழுந்துடுச்சு. வேற ஒன்னும் இல்ல, எதுக்கும் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிட்டு வாங்க” என ஈஸ்வரி சொன்னார்..
“இப்ப என்னத்துக்குடி நீ மாடிக்கு போன. எந்த வேலையாவது உருப்படியா செயிறியா, ஏதாவது ஒன்ன இழுத்துகிட்டு வர,” என திட்டியவாறு அவளின் காலை பரிசோதித்த சுந்தராம்பாள், “மாப்பிள்ளை கிளம்புங்க ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிட்டு வந்துடலாம்” என சொல்ல தனஞ்ஜெயனும் உடன் கிளம்பினான்..
“டேய் மாப்ள நீ இரு, கல்யாணம் ஆகி ஒரு நாள் தான் ஆகியிருக்கு. அதுக்குள்ள ஆஸ்பத்திரிக்கு எல்லாம் வரவேண்டாம். நாங்க போயிட்டு வந்துடறோம்” என விஜயாவின் கணவர் அவனை தடுத்துவிட்டார். அவர்கள் மூவரும் மட்டும் சென்றார்கள்..
வீட்டில் இவ்வளவு கலவரம் நடந்து கொண்டிருக்க, கலவரத்திற்கு முக்கிய காரணமானவளோ, கிச்சனில் நின்று லட்டுக்களை மொக்கிக் கொண்டிருந்தாள்..
அதைக் கண்டு கோபமான ஈஸ்வரி, யார் கவனத்தையும் கவறாது அல்லியின் அருகே போனவர், “எதுக்கு விஜயா மேல தொட்டியை தூக்கி போட்ட உயிருக்கு ஏதாவது ஆகியிருந்தா என்ன பண்ண முடியும்.” என பல்லை கடித்து கொண்டு கோபமாக கேட்டார்..
“அவ பேசுற பேச்சுக்கு, அவ வாய கிழிச்சு தச்சுவிட்டு இருக்கணும்.. ஏதோ நான் நல்ல மூடுல இருந்ததுனால காலோட போச்சு” என தோளை குலுக்கி அலட்சியமாக சொல்ல, ஈஸ்வரி அதிர்ந்து போனார்.
“என்ன பெரியம்மா அப்படியே குறுகுறுன்னு பாத்துட்டு இருக்கீங்க” என புருவம் உயர்த்தி கேட்க, ஈஸ்வரி அவளின் அழைப்பில் சற்று நேரம் மௌனித்து போனார்..
“எதுக்கு நீங்க எல்லாம் இப்படி பண்ணிட்டிருக்கீங்க. அதான் ஏழு வருஷத்துக்கு முன்னாடியே எல்லாம் முடிஞ்சிருச்சு இல்ல. இப்ப எதுக்கு மறுபடியும் இந்த வீட்டுக்கு வந்து பிரச்சினை பண்ணிக்கிட்டு இருக்கீங்க. இப்ப நான் மட்டும் நீங்க எல்லாம் யாருன்னு போய் சொன்னா இங்க என்ன நடக்கும் தெரியுமா” என கோபமாக கேட்டார்..
“நீங்க சொல்றதா இருந்தா என்ன பாத்த அப்பவே சொல்லி இருப்பீங்க” என அல்லி அலட்சியமாக சொல்ல, ஈஸ்வரி அதிர்ச்சியும் ஆச்சரியமுமாய் பார்த்தார்.
“என்ன பாக்குறீங்க நிச்சயதப்பையே உங்களுக்கு எங்களையெல்லாம் தெரியும்னு, உங்க முழிய பாத்தே புரிஞ்சிருச்சு,” என அல்லி கண் சிமிட்ட ஈஸ்வரி அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்.
“நான் உண்மையை சொல்லி இருந்தா, என்ன பண்ணி இருப்ப, இந்த கல்யாண நின்னு இருக்கும் தானே”
“நீங்க உண்மைய சொல்லியிருந்தா கூட கண்டிப்பா கல்யாணம் நடந்திருக்கும். மண்டபத்தை சுத்தி எங்க அண்ணே ஆளுங்களை இறக்கி வச்சிருந்துச்சு. கல்யாணத்தை நீங்க நிப்பாட்டினா மாப்பிள்ளைய தூக்கி, தாலி கட்ட வைக்கிறதுக்கு எல்லா ஏற்பாடும் செஞ்சுருந்தோம்” என அல்லி திமிராக சொல்ல, ஈஸ்வரி பிரம்மை பிடித்தது போல் நின்றார்..
அவரின் செவிக்குள், நித்யா சொன்னது எல்லாம் மீன்டுமொருமுறை ஒலித்து கொண்டிருந்தது. “யோசிக்காம இவ்வளவு தூரம் இறங்கியிருக்க மாட்டாங்க.. உண்மை தெரிஞ்சாலும் அவங்க இந்த கல்யாணம் நிக்க விட மாட்டாங்க, எப்படியாவது நடத்திடுவாங்க” என அவள் எவ்வளவு உறுதியாக சொன்னாள், என நினைத்து பார்த்தார்.
“ஏழு வருஷம் முன்னாடி நடந்ததுக்கும் உங்களோட இழப்புகளுக்கும் நாங்க மட்டுமே காரணம் கிடையாது. உங்க வீட்டுக்காரரும் நாத்தனாரும் தான் முக்கிய காரணம். அது உங்க மனசாட்சிக்கே தெரியும்” என அல்லி அழுத்தமாக சொல்லிவிட்டு செல்ல. ஈஸ்வரி கலங்கும் விழிகளுடன் இறுகிய முகமுமாய் நின்றிருந்தார்.
error: Content is protected !!