Skip to content
Post Views: 2,356
அத்தியாயம் 25
“நிஜமாவே பிடிச்சிருக்கா?” என்று அவன் கேட்க,
“இன்னமும் உனக்கு நம்பிக்கை இல்லையா பரணி?” என்ற போது திவ்யாவின் குரல் சற்றே உள்வாங்கியது.
அவள் பதட்டம் கண்டு தானும் பதறியவன், “இல்ல, இல்ல, இனிமே கேட்க மாட்டேன். என் திவில, ப்ளீஸ் கோச்சுக்காத” என்று கொஞ்சலுடன் கூறினான்.
Advertisement
“நிஜமாவே உன் திவியா?”
“ம்ம்ம், ஆமா” என்று சிரிப்புடன் அவளை இன்னமுமாய் தன்னுடன் அணைத்துக் கொண்டான்.
“இதென்ன திடீர்னு இன்னைக்கு ஒரே நாள்ல என் மேல இத்தனை லவ்ஸ்?” என்று விளையாட்டாக கேட்ட போதும், திவ்யாவின் மனதில் இந்த கேள்வி சின்ன குறுகுறுப்பை ஏற்படுத்தித்தான் இருந்தது.
Advertisement
“இன்னைக்கு ஒரே நாள்லையா, இல்லையே? காலேஜில இருந்து உன் மேல லவ்ஸ் தானே” என்று சொல்லிவிட்டு விளையாட்டாய் அவள் காது மடலைக் கடிக்க, அவனுடன் ஒட்டிக்கொண்டு இன்னமும் சிரித்த போதும்,
Advertisement
“இல்ல, ஒரே நாள்ல மொத்த லவ்வையும் கொட்டறியேன்னு கேட்டேன்” என்று விடாமல் கேட்டாள்.
“ஏ! அப்படியெல்லாம் இல்ல திவி. நீ இங்க வராம போயிருந்தாலும் ஒரு நாள் உன்னைத் தேடி நான் வந்திருப்பேன் தெரியுமா?”
“அப்படியா? நிஜம்மாவா?” என்று சின்ன சிணுங்கலாய் தான் கேட்டாள்.
Advertisement
“நிஜம்மா.” என்று அவள் கன்னத்தில் அழுத்தமாக உதடு பதித்து சொன்னவன் முத்தத்தில் இம்முறை காமம் இருக்கவில்லை. மாறாக அந்த அழுத்தத்தில் அவன் காதல் பொங்கி பெருகியது.
“கண்டிப்பா உன்னைத் தேடி வந்திருப்பேன். எனக்கு கல்யாணம் பண்ணிக்கணும்னு இப்போ வரைக்கும் ஐடியாவே இல்ல. ஏன், டேட் பண்ணனும்னு கூட தோணினதில்ல.”
“ஒருவேளை எனக்கு கல்யாணம் ஆகியிருந்தா? அப்போ என்ன பண்ணியிருப்ப?”
“உன் கல்யாணத்துக்கு அப்பறமும் உன்னை லவ் பண்ணியிருப்பேன். காதல்ல ஏதும்மா நல்ல காதல், கள்ள காதல்னு? எல்லாமே காதல் தானே” என்று பழைய பரணியாய குதூகலமாய் பேசிட, அவன் வயிற்றில் முட்டியால் குத்தினாள்.
“உண்மையா சொல்லு பரணி, என்னைத் தேடி வந்திருப்பியா?” என்று இம்முறை கூர்மையாக அவன் கண்களைப் பார்த்தவண்ணம் வினவினாள்.
“உண்மையா சொல்லணும்னா, நீ எங்க இருக்க, என்ன பண்ணறன்னு கண்டிப்பா விசாரிச்சிருப்பேன். ஒருவேளை கல்யாணம் ஆகியிருந்தா உன்னை டிஸ்டர்ப் பண்ணியிருக்க மாட்டேன். அதுவே இல்லைன்னா, உங்கிட்ட பேச ட்ரை பண்ணியிருப்பேன்” என்று அவள் மனதின் ஐயத்தைப் போக்கும் விதமாகவே சொல்லியிருந்தான்.
அப்போதும் திவ்யாவிற்கு மனது சமாதானம் ஆகவில்லை என்று புரியவும், “உன் கல்யாணம் பத்தி எனக்கு தெரியாம போக வாய்ப்பில்ல திவி. சக்திவேல் எப்போவாது பேசுவான். அவன் கூட நான் டச்ல தான் இருக்கேன். உன்னைப் பத்தி பேசாம இருந்ததே இல்ல அவன்.” என்று கூற,
“அப்படியா?” என்று ஆர்வமாக வினவினாள்.
“ம்ம்ம்” என்று தலையசைத்து ஆமோதித்தவன், “எப்போ பேசினாலும், உன்னைப் பத்தி ஒரு அப்டேட் சொல்லாம அவன் ஃபோனை வச்சதே இல்ல. நீ பெங்களூர்ல வேலை பார்க்கறது, கொஞ்ச நாளா வேலை தேடினதுன்னு ஆல் டீடெயில்ஸ் ஐ நோ” என்று பெருமையாக அவன் கூற,
அவனை கொஞ்சமாய் முறைத்தவள், “நிஜமாவே என்னைத் தேடி வந்திருப்பியா பரணி?” என்று திரும்பவும் அவள் கேள்விலேயே தொக்கி நிற்க, இம்முறை அவள் முகத்தை தன் பக்கம் திருப்பியவன், அவள் உதட்டில் மீண்டுமாய் தன் அழுத்தமான முத்தத்தைப் பதித்து, “வந்திருப்பேன் திவி.” என்று சொல்லிவிட்டு, “உங்கிட்ட திரும்ப பேச ட்ரை பண்ணியிருப்பேன்.” என்று உண்மையாக கூறினான்.
“ஆனா இவ்வளோ நாள் நீ” என்று அவள் மீண்டுமாய் துவங்க, “என்ன உனக்கு என் மேல இவ்வளோ டவுட்டு. அவ்வளோ அக்கறை இருக்க நீ ஒரு தடவையாவது பேச ட்ரை பண்ணியா சொல்லு?” என்று வினவ, திவ்யா கண்களை உருட்டிவிட்டு அமைதியானாள்.
அவள் முகம் சட்டென வாடித்தான் போனது. இவனை இத்தனை முறை கேள்வி கேட்கிறோமே தான் ஒரு தடவை கூட கல்லூரிக்குப் பின் அவனுடன் பேச முயற்சிக்கவில்லையே என்று மனம் சுட்டிக் காட்டவும் மெளனமானாள்.
“ஏ, அதுக்குள்ள முகத்தை ஏன் தூக்கி வச்சுக்கற? விடு! அதான் பார்த்து பார்த்தே என்னை கவுத்துட்டல்ல. அன்னைக்கு காலேஜ்லையும் இப்படி மென்னு முழுங்கற மாதிரி பார்த்து தான் தொபகடீர்னு விழுக வச்ச?” என்று நக்கல் ததும்ப பரணி சொல்லவும், அவன் பேசிய விதம் திவ்யாவிற்கும் சிரிப்பை வரவழைத்திருந்தது.
“போ” என்று வாய்மொழியாக சொல்லிக் கொண்டே அவன் நெஞ்சில் ஆதூரமாக சாய்ந்து கொண்டாள். இருவரும் கட்டிக் கொண்டபடிக்கே சிறிது நேரம் அமர்ந்திருக்க, சட்டென அவர்கள் அமர்ந்திருந்த சோஃபாவின் எதிரிலிருந்த கதவு திறந்து கொண்டது.
யஷ்வந்த் தான் பாத்ரூம் செல்வதற்காக தன்னறையில் இருந்து வெளிவந்திருந்தான். வந்தவன், சோஃபாவில் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்த இருவரையும் பார்த்து சற்றே திடுக்கிட்டு, “சா, சாரி… சாரி… பாத்ரூம்” என்று அவசரமாக சொல்லிவிட்டு, இவர்களைக் கடந்து மூலையில் இருந்த குளியலறை நோக்கி விரைய, இருவரும் எழுந்து ஓரடி தள்ளி நின்று கொண்டனர்.
யஷ்வந்த் சில நிமிடத்தில் மீண்டுமாய் வெளிப்படுவான் என்பதால் சற்றே கூச்சத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட போதும், திவ்யாவின் முகத்தில் கொஞ்சம் படபடப்பு தென்படவும், அவள் கைகளை பிடித்துக் கொண்டவன், “ரிலாக்ஸ். நான் பேசிக்கறேன். நீ ரூமுக்கு போய் தூங்கு.” என்று அவளை அனுப்பி வைக்கலானான்.
சற்றே தயக்கத்துடன் அவள் தன்னறை நோக்கி செல்லத் துவங்க, ஒரு நொடியில் அவளைத் திரும்ப தன்னுடன் இறுக்கமாக அணைத்து விடுவித்தவன், “எதைப் பத்தியும் யோசிக்காத! எல்லாமே நான் பார்த்துக்குவேன். குட் நைட்… நிம்மதியா தூங்கு” என்று சொல்லிட, அவன் வார்த்தைகள் அவளுக்கு அத்தனை தேவையாய் இருந்தன.
அவன் இப்போது யஷ்வந்தைப் பற்றி மட்டுமாக சொல்லவில்லை என்பதும், அவளது அனைத்துக் கவலைகளையும் சேர்த்து தான் சொல்கிறான் என்பதும் அவன் சொல்லாமலேயே புரிபட, அமைதியாய் புன்னகை சிந்திவிட்டு, “குட் நைட் பட்டு” என்று ஆத்மார்த்தமாய் சொல்லிய பின் தன் அறைக்குச் சென்றாள் திவ்யா.
அடுத்த தினம் காலை திவ்யா எழுந்து கொள்ளும்போதே முந்தைய இரவின் படபடப்பு காத்திருந்தது போல, அவள் தோளில் தொத்திக் கொண்டது. “யஷ் வேற பார்த்துட்டானே! என்ன சொல்லறது?” என்று ஒருபக்கம் திக்கென்று இருக்க, மறுபக்கமோ, “பார்த்தா இப்போ என்ன? நான் என்ன தப்பு பண்ணிட்டேன் இப்போ? இவனுக்கு எதுக்கு பயப்படணும்? நம்ம வீட்டு ஆளுங்க பார்த்திருந்தா கூட என்ன நினைப்பாங்களோ, என்ன சொல்லுவாங்களோன்னு பயப்படலாம்.” என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டு கீழே வந்தவளை, புன்னகையுடன் வரவேற்றது யஷ்வந்த் தான்.
“கம் கம். ஹேவ் யுவர் டீ” என்று சொல்லிக் கொண்டே அவளது தேநீர் கோப்பையை நீட்டிட, சற்றே சங்கடத்துடன் அவன் முகம் பார்க்காது கோப்பையை பெற்றுக் கொண்டாள். சோஃபாவில் அமர்ந்திருந்த பரணியைப் பார்வையால் ஏறிட, அவனோ, ‘ஒண்ணுமில்ல. டென்ஷன் ஆகாத’ என்று கண்களாலேயே அவளுக்கு தைரியமூட்டிடவும் தான் அவளுக்கு தெம்பாக இருந்தது.
யஷ்வந்த் ஒரு சின்ன சிரிப்புடனேயே அவளை ஏறிட்டபடிக்கு காலை உணவிற்கான ரொட்டியை சுட்டு தட்டுகளில் அடுக்கிக் கொண்டிருந்தான். தேநீர் கோப்பையுடன் பரணி அமர்ந்திருந்த சோஃபாவின் சமீபத்தை அடைந்தவள் யஷ்வந்தின் பொருட்டு பரணியின் அருகே அமராமல் எதிரில் அமர்ந்து கொள்ள,
“அரே யார்! உனக்கு எங்க தோணுதோ அங்க உட்கார்! இன்னும் சீன் போட்டுகிட்டு இருக்காத! பரணி எங்கிட்ட எல்லாமே சொல்லிட்டான்.” என்று மீண்டும் சிரிப்புடன் தன் வேலையை கவனிக்கலானான். நேற்றைய தினம் நாபியிடம் காட்டமாகப் பேசியிருந்த அனைவருக்குமே மனம் சஞ்சலப்பட்டு போயிருக்க, இன்றைய மனநிலை முற்றிலும் வேறானதாக இருந்தது.
சின்னதாய் சீட்டி அடித்தபடிக்கே வேலை செய்த யஷ்வந்த், படிகளில் இறங்கி வந்திருந்த வருணிடம் அதே குதூகலத்துடன் பேசினான். “ஹே வருண். மேன் யு நோ! நம்ம வீட்டில புதுசா ரெண்டு லவ் பேர்ட்ஸ் இருக்கு” என்று பூடகமாக சொல்ல, வருணுக்கு அவன் பரணி, திவ்யாவைப் பற்றி தான் பேசுகிறான் என்று சட்டெனப் புரிபடவில்லை.
“டேய் விண்டர் சீசன்ல பேர்ட்ஸ் வெளிய வராதுடா. நம்ம வீட்டுல கூடு கட்டியிருக்கோ என்னவோ! டோண்ட் டிஸ்டர்ப் இட். அதுவா ஸ்பிரிங்க் சீசன் வந்தா பறந்து போயிடும்” என்று தீவிரமாக மொழிய, அதைக் கேட்ட யஷ்வந்த் பலமாகவே சிரித்தான்.
திவ்யாவிற்குத் தான் கருக்கென்று இருந்தது. அன்று சூப்பர் மார்கெட் சென்றுவிட்டு வந்தபோது வருண் தன்னைக் காதலிப்பதாகச் சொன்னதை இன்னமும் பரணியிடம் கூட அவள் சொல்லவில்லை. எங்கே இப்போது வருணுக்கு பரணி பற்றிய விஷயம் தெரிந்தால் ஏதாவது ஏடாகூடமாகப் பேசிடுவானோ என்று அஞ்சினாள்.
‘இந்த யஷ்வந்த் வேற வாய வச்சுட்டு சும்மா இருக்க மாட்டேங்கறானே’ என்று மனதினுள் பொறுமத் துவங்க, அவள் நெற்றி சுருக்கமும், வருணை கண்டு பதட்டமாவதையும் அன்று நடந்த நிகழ்ச்சிகளையும் ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்திக் கொண்டு சட்டென சூழலை புரிந்து கொண்டான் பரணி. திவ்யாவின் பரிதவிப்பு அவனுக்கு சிரிப்பைத் தான் தருவித்தது.
வருண் யஷ்வந்தின் சிரிப்பு கண்டு, “ஏமி ரா! எந்துக்கு நவுதுன்னாவு?” என்று கேட்டுவிட்டு, அவன் பதிலுக்காக காத்திராமல் தன் கோப்பை தேநீரை எடுத்துக் கொண்டு வந்து பரணியின் பக்கம் அமர்ந்தான்.
“ஏ பாகல், நான் நம்ம வீட்டுல கூடு கட்டுன லவ் பேர்ட்ஸ் பத்தி சொல்லலை. நம்ம வீட்டில வாழற பேர்ட்ஸ் பத்தி பேசறேன்” என்று சொல்லிவிட்டு பரணியையும் திவ்யாவையும் பார்த்து கண்ஜாடை காட்ட, வருணுக்கு சட்டென விஷயம் புரிந்து போனது. குடித்துக் கொண்டிருந்த தேநீர் கோப்பையை நங்கென டீபாயின் மீது வைத்தவன், “யூ போத் லவ் ஈச் அதர்? ஃப்ரம் வென்?” என்று கண்களை சுருக்கிக் கொண்டு வினவ,
திவ்யா பதில் சொல்ல வாய் திறக்கும் முன்னர், “நாங்க காலேஜ் டேஸ்ல இருந்தே லவ் பண்ணறோம். கொஞ்ச நாள் நடுவுல பேசாம இருந்தோம். அகேன் வி காட் டுகெதர்” என்று சுருக்கமாய் முடித்துக் கொண்டான் பரணி. இவனுக்கு இவ்வளவு பதில் சொல்வதே போதுமானது என்ற அளவுகோல் அவன் பேச்சில் வெளிப்படையாகவே தென்பட்டது.
“காலேஜ் டேஸ்ல இருந்தா?” என்று வருண் குழப்பம் மேலோங்க திவ்யாவை ஏறிட, “டே, அவங்க ரெண்டு பேரும் ஒரே காலேஜ். பரணி ரெண்டு வருஷம் சீனியர்.” என்று யஷ்வந்த் இருவரையும் முந்திக்கொண்டு பதிலளித்தான். அவன் முகத்தின் புன்னகை மட்டும் மாறாமல் அப்படியே இருக்க, வருண் மற்ற மூவரையும் பதிலேதும் சொல்லாமல் பார்த்துவிட்டு, தன் கோப்பைத் தேநீருடன் தன் அறைக்குச் சென்றிருந்தான்.
வருணின் எண்ணவோட்டம் பரணிக்கும் திவ்யாவிற்கும் நன்றாகவே புரிந்தது. அதிலும் திவ்யாவிற்கு குற்ற உணர்வாக இருந்தது. ‘இந்த ஊருக்கு வந்ததுல இருந்து, ஏன் நான் இந்த கம்பெனியில சேர்ந்ததில இருந்தே எனக்கு வருண் தான் ரொம்ப ஹெல்ப்ஃபுல்லா நிறைய விஷயம் சொல்லிக் குடுத்திருக்கான். அவனுக்கு நான் அவனை ஏமாத்திட்ட ஃபீல் வந்திருக்கும் கண்டிப்பா’ என்ற எண்ணம் மனதை அழுத்த, பரணியை நோக்கினாள்.
தன்னிடத்தில் இருந்து எழுந்து வந்தனிடம், “அன்னைக்கு வருண்…” என்று திவ்யா சொல்லத் துவங்கும் முன்னரே, “எனக்கு தெரியும்” என்று மட்டுமாய் சொல்லி, அவளை சங்கடப்படுத்தாமல் அத்தோடு நிறுத்தியவன், “விடு, பேசிக்கலாம். வருண் சரியாகிடுவான். இதில உன் தப்பு எதுவுமில்ல சரியா” என்று இவளருகே வந்து ஆறுதலாய் கூறியவனை சற்றே ஆச்சர்யமாகவே பார்த்தாள்.
‘நான் சொல்லாமலேயே என் மனசோட எண்ணம் அவனுக்கு புரிபடுதே’ என்று வியப்பாக இருந்தது. உள்ளம் தெளிவு பெற்றவளாக திவ்யா தலையை அசைத்த பின்னரே அங்கிருந்து நகர்ந்தான் பரணி.
இருவரின் இந்த சம்பாஷனையைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல், ரொட்டி சுடுவதற்காகவே தான் பிறப்பெடுத்தோம் என்பது போல, “சாஜ்னாரே சாஜ்னாரே ப்யார் சே தேக்கு தோ தூ கபி?” என்று சத்தமாக பாடிக்கொண்டே தன் வேலையை கவனித்தான் யஷ்வந்த்.
அவரவர் சென்று குளித்து முடித்து, அலுவலகப் பணியில் அமரும் முன்னர், காலை உணவருந்த நால்வரும் கீழே வந்திருந்தனர். “டுடே ஐ மேட் கேரட் ஹல்வா ஃபார் அவர் லவ் பேர்ட்ஸ்” என்று பெருமையாக சொல்லிக் கொண்டே யஷ்வந்த், கெட்டிபட்டுப் போய் வாணலியில் இருந்து வரமாட்டேன் என்று பிடிவாதம் செய்த அந்த ஆரஞ்சு நிற வஸ்துவை வலுகட்டாயமாக கரண்டியில் சுரண்டி, அனைவர் தட்டிலும் டொங்க் டொங்க் என்று வைத்தான்.
வருண் எந்த முகபாவனையும் காட்டாது தட்டில் கவனமாக, யஷ்வந்த் தன் போக்கில் பேசிக் கொண்டிருந்தான். “என் மம்மி எப்பவுமே சொல்லுவாங்க. ஒரு நல்ல விஷயம் கேள்விபட்டா, அதை ஸ்வீட் சாப்பிட்டு கொண்டாடணும்னு. ஐ ஃபீல் சோ ஹேப்பி ஃபார் யூ கைஸ்.” என்று கூறியவனை மகிழ்ச்சியாக ஏறிட்டாள் திவ்யா.
இந்த ஒரு மாதமாகவே ரொம்பவும் அடிக்கடி கண்கலங்கிப் போகிறது தான். சட்டென உணர்ச்சிவசப்பட்டு விடுகிறாள். அதிலும், இந்தியாவில் கொரோனா பற்றிய செய்திகளோ, பிணங்களை தனித்தனியாக எரிக்க வழியில்லாமல், குழி தோண்டி கொத்து கொத்தாக எரிப்பது போன்ற செய்திகளைக் கேட்டாலே அடுத்த சில தினகளுக்கு எதிலுமே நாட்டம் இல்லாமல் போய்விடுகிறது. அவள் தந்தை ரகுராமனுக்கு சளி, காய்ச்சல் அதிகமாகியது என்று ஃபோன் வரவும் ரொம்பவும் பதறிப் போனாள்.
“என்னாச்சும்மா? நல்லா பார்த்துக்கம்மா. ஏம்மா திடீர்னு சளி பிடிச்சிருக்கு? மூச்சு விட கஷ்டப்படறாராம்மா?” என்று கேள்வியாய் கேட்டு வைத்தாள்.
“ஏ, சாதாரண சளி தான்டீ. வீடு க்ளீன் பண்ணா, உங்கப்பாவுக்கு தான் லேசா மூச்சடைக்குமே! அதான்டீ. வேற எதுவுமில்ல” என்று மஞ்சுளா கூறிய சமாதனங்களையும் மீறி அன்னையைத் திட்டினாள் திவ்யா.
“அவரை ஏம்மா வேலை வாங்கற? வீடு க்ளீன் பண்ணலைன்னா என்ன இப்போ?” என்று எரிந்துவிழுக, “ஏ, நானாடீ க்ளீன் பண்ண சொன்னேன். ஊரடங்கு போட்டதில இருந்து வீட்டுக்குள்ளயே தான் நானும் அப்பாவும் இருக்கோம். எவ்வளோ நேரம் தான் டீவியவே பார்க்கறதுன்னு அவரா தான் எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்யறாரு” என்று அங்கலாய்த்த போதும், மகளுக்கு ஆறுதல் சொல்லி தேற்றினார் மஞ்சுளா.
“சாதாரண சளி காய்ச்சல் தான். நீ பயப்படாத. நாங்க பத்திரமா தான் இருக்கோம். நீ அங்க என்ன பண்ணறியோன்னு நினைச்சா தான் கவலையா இருக்கு எங்களுக்கு” என்று மகளுக்கு புத்திமதி கூறினார்.
சின்ன உடல் உபாதைகளைக் கூட பெரியதாய் பூதாகரமாய் பார்க்கும் அதே நேரம் சிறுசிறு மகிழ்ச்சிகளையும் பெரியதாய் கொண்டாடத் தோன்றுகிறது. இந்த கொரோனா மனிதர்களுக்கு நிறைய வாழ்வியல் பாடங்களைப் புகட்டுவதற்காகவே வந்திருக்கிறது போலும். சட்டென உணர்ச்சிவசப்பட வைக்கிறது, மனதை இளக வைக்கிறது, அழுகை வரவழைக்கிறது.
இதையெல்லாம் எண்ணியவளுக்கு, ‘ஒரு வேளை ஒரே வீட்டில் ஒருவரை மற்றவர் பார்த்துக் கொண்டு வெளி உலகத் தொடர்பு இல்லாமல் போனதினால் தான் பரணியின் மீது சட்டென்று காதல் பெருக்கெடுக்கிறதோ?’ என்று சம்பந்தமில்லாமல் தோன்றிட, கவலையாய் பரணியை ஏறிட்டாள்.
error: Content is protected !!