Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

மெய்யறிவாயோ மெல்லினாமே 23

அத்தியாயம் 23

இரவின் நிசப்தமும், தென்றலின் வருடலும் அவனது காயம்பட்ட மனதிற்கு ஆறுதலாய் இருந்தது போலும். முன்பு கத்தியது போல இல்லாமல் தற்பொழுது நிதானமாக பேச ஆரம்பித்தான்.



Advertisement

“என்னால, அவளைக் கஷ்டப்படுத்த முடியாதுண்ணா. என்னை மாதிரி ஒருத்தன் அவளுக்கு வேண்டாம். என்னால பிஸிகள் லைஃப்க்குள்ள போக முடியும்னு துளியும் நம்பிக்கையில்லை. அவளுக்கு நான் வேண்டாம்” என்றவன் கண்களில் இதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் பட்டென வெளிவந்தது.

அதனைப் புறங்கையால் துடைத்துக் கொண்டவன் கைப்பிடிச் சுவற்றில் கைவைத்து தூரத்தில் வரிவடிவமாகத் தெரிந்த மலை முகடுகளை வெறித்தான்.

Advertisement

சுதனுக்கும், வாசுவின் உணர்வுகள் புரிந்தது தான் என்றாலும் ‘தொடர்ந்து கடந்த காலத்தின் கசப்பில் மூழ்கிக் கிடந்தால், அவனது வாழ்க்கை என்னாவது?’ என்று யோசித்தவன் பக்கவாட்டில் திரும்பி

Advertisement

“உனக்கு நடந்தது ஜஸ்ட் ஆக்ஸிடென்ட் வாசு. இதையே இன்னும் நினைச்சுட்டு உன் லைப்பை” அடுத்து பேசும் முன்பே இடையிட்டான் வாசுதேவன்.

“ஜஸ்ட் ஆக்சிடென்ட்டா? ஆக்சிடென்ட்ட வேடிக்கை பார்க்கிறவங்களுக்கும், காதுல கேட்கிறவங்களுக்கும் வேணும்னா ‘ஜஸ்ட்’ ஆக்சிடென்ட்டா இருக்கலாம். ஆனால் எந்த ஆக்சிடண்ட்டையும் கோ த்ரு பண்றவங்க பெரிய வேதனையைக் கடந்து வரனும். அதுவும் அப்யூஸ் நடக்கிற எந்த உயிருக்கும் அது வாழ்க்கை முழுசும் அனுபவிக்கிற தீராத வலி” என்றவன் சுதனின் பதிலை எதிர்பார்க்காது கண்களை இறுக மூடிக் கொண்டான்.

Advertisement

கடந்த கால மோசமான நிகழ்வுகளின் எஞ்சிய வலிகள் மனதினுள் புயலாக சுழன்றியடிக்க,அந்த சுழற்சியில் சிக்கிய அவனது காதல் மட்டும் ஊசலாடும் தீபமாக முனுக்கென்ற ஒளியுடன் உயிர்த்தேயிருந்து.

வாசுவின் வார்த்தைகள் சுதனை என்னவோ செய்தது “சாரி டா வாசு. நான் அதை மீன் பண்ணி சொல்ல வரல…” என்றபடி அவனது தோள் தொட்டான்.

சுதனின் தொடுதலில் கண்களைத் திறந்தவன் “ம்ம் புரியுது அண்ணா…” என்றவன் கண்களில் சூழ்ந்திருந்த கண்ணீரைத் தோள் பட்டையில் அழுத்தித் துடைத்துக் கொண்டே மாடிக் கதவின் பக்கம் திரும்பினான்.

அங்கே, மின் விளக்கின் வெளிச்சத்தில் கற்சிலையாய் நின்றிருந்தாள் அவனது ராட்சசி. அவளது முகத்தில் இன்னதென்று சொல்ல முடியா வேதனைத் தாண்டவமாடியது. நிலவொளியில் காரிகையின் கண்களில் தேங்கி நின்ற கண்ணீர் ஜொலித்தது. அதுவே கூறியது இவன் பேசியதைக் கேட்டு விட்டாள் என்று.

கண்களை இறுக மூடித் திறந்தவன் முகத்தில் எவ்வித உணர்வுகளையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் மங்கையை பார்த்தான்.

வாசுவின் பார்வையைத் தொடர்ந்து சுதனின் பார்வையும் கதவின் பக்கம் திரும்ப, அங்கே நின்றிருந்தவளைக் கண்டதும் முதலில் அதிர்ந்தவன் பின் சுதாரித்து அங்கிருந்து நகர்ந்தான்.

இங்கு நவியோ, கண்களில் தேங்கி நின்ற கண்ணீரைத் துடைக்க கூட இல்லாமல் வாசுவைப் பார்த்தது பார்த்தபடி நின்றாள். தனிமையைத் தேடி தான் மாடிக்கு வந்தாள். எதற்சையாக சுதனும், வாசுவும் பேசிக் கொள்வது கேட்க நேர்ந்தது.

குழந்தை தன் தொலைந்த பொம்மையை கண்டுப் பிடித்த மகிழ்ச்சியில் ஆழ்ந்தாலும் அதன்பிறகு அது உடைந்திருப்பதை அறிந்து அழுவது போல, முதலில் அவனது பேச்சில் மகிழ்ந்தவள் அதற்கு பிறகான அவனது பேச்சில் துடித்து போனாள்.

ஏன் என்னை ஏற்க மறுக்கிறான். ஏன் என் காதலை புரிந்தும் புரியாமல் நடிக்கிறான்? ஏன் என்னை வெறுப்பது போல் பாசாங்கு செய்கிறான்? இப்படி எத்தனையோ ஏன்’களுக்கு பதில் தெரியாமல் தவித்து கிடந்தாள்.

இன்று அத்தனைக்கும் பதில் கிடைத்தது தான் என்றாலும் அதனை நினைத்து முற்றும் முழுதாக மகிழ முடியவில்லை அவளால். அவனது குரலில் தெரிந்த வலியும் வேதனையும் இவளது உள்ளத்தை வலிக்க செய்தது. கண்களை  கலங்க செய்தது. பேச்சற்ற மடந்தையாய் நிற்க செய்தது.

இங்கு, பாவையின் கண்ணீரில் காற்றில் கரையும் கற்பூரம் போல வாசுவின் மொத்த உறுதியும் கரைந்து போனது. அக்கணம் அவனை சூழ்ந்திருந்த ஏதோ ஓர் சக்தி விலகி நின்றது. சற்று முன் ‘அவளுக்கு நான் வேண்டாம்…’ என்றவனின் கூற்று மாயமாய் மறைந்து போனது.

மேகத்தின் பிடியிலிருந்து வெளிவரும் நிலவினைப் போல ஆடவனின் காதலும் மெல்ல எட்டிப் பார்த்தது. இதற்கு மேலும் அவளது அழுகையை வெறுமனே பார்த்துக் கொண்டு நிற்பானா என்ன? எதைப் பற்றியும் யோசிக்காது பாவையை நோக்கி வேகமாக நடந்தான். எத்தனை வேகத்தில் பெண்ணை நெருங்கினானோ அதே வேகத்தில் மாயோளை இழுத்தணைத்துக் கொண்டான் இறுக்கமாக.

ஆடவனது திடீரணைப்பில் முதலில் அதிர்ந்தவள், பின் சுற்றம் உணர்ந்து அவனது நெஞ்சில் கைவைத்து அழுத்தி தள்ள “வீணா பிளீஸ்” என்றான். அதற்கு மேல் தடுப்பாளா? இல்லை தடுக்க தான் அவளது காதல் மனம் விடுமா? அவனது அணைப்பில் அடங்கி நின்றாள்.

நொடிகள் நிமிடங்களாக கரைய, காரிகையை விட்டு பிரிந்தவன் அவளது கண்களில் வழிந்த கண்ணீரை அழுத்தித் துடைத்து விட்டு அவளைப் பார்த்தான். செவ்விதழ்களுக்கு போட்டியாக அவளது நுனி மூக்கும், செவியும், சிவந்திருந்தது. ஆப்பிள் போல சிவந்திருந்த தக்காளி கன்னங்களை தாங்கி பிடித்தவன் “கொஞ்சம் நான் சொல்றதை பொறுமையா கேளு டா…” என்றான்.

அதற்கு, பதில் சொல்லாமல் ஈரம் சுமந்த விழிகளை  விரித்து பார்த்தாள். அவ்விழிகள் ‘இதற்கு மேலும் எதுவும் சொல்லி விடாதே’ என்ற செய்தியை தாங்கி நின்றது.

நுண்ணிடையாளின் விழிகள் கூறிய செய்தி  புரிந்தது தான் என்றாலும் இதற்கு மேலும் அவளைக் காயப்படுத்தும் எண்ணமில்லை வாசுவிற்கு.

நீண்ட நெடிய பெருமூச்சுடன் காரிகையை  விட்டு விலகியவன் கைப்பிடி சுவற்றில் சாய்ந்து,இருள் சூழ்ந்த வானை பார்த்தபடி “அப்பான்னா உனக்கு முதல்ல என்ன ஞாபகம் வரும்…” எனக் கேட்டான். அவனது கேள்வியை அவள் உள்வாங்கி கொண்டு பதில் சொல்லும் முன்னமே “பாதுகாப்பும், பாசமும் தானே. ஆனால் எனக்கு என்ன ஞாபகம் வரும் தெரியுமா? பயம் தான்…” என்றவன் கண்களை இறுக மூடிக் கொண்டான். அன்றைய நாளின் மிச்சங்கள் இன்றும் கண்களுக்குள் விழுந்தன.

நொடி நேர அமைதிக்கு பிறகு கண்களை திறந்தவன் “எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்தே அம்மா கூட வளர்ந்தேன். அவங்களோட பாசம் மொத்தமும் எனக்கே எனக்குன்னு கிடைச்சதாலோ என்னவோ அப்பான்னு ஒருத்தரை தேடினதே இல்லை. அவரோட பாசத்துக்கோ, பாதுகாப்பிற்கோ ஏங்கினதில்லை. போட்டோல மட்டுமே பார்த்தவரை நேர்ல பார்க்கணும்னு ஆசைப்பட்டதில்லை.”

“ஆனால் அவரை நேர்ல பார்த்த நிமிசம் அதெல்லாம் தோணுச்சு. சின்ன வயசுல இருந்தே அப்பா பாசம்ன்னா என்னன்னு தெரியாத எனக்கு, அப்பா பாசத்தை உணரவும், அனுபவிக்கவும் ஆசை வந்தது. மனசுல இருக்கிற ஆசையோடு அவர்கிட்ட போனேன்.  ஆனால் அவரு என்னை அவரோட பையனா பார்க்கல” என்றவன் தன் கடந்த கால வலிகளை   கூற ஆரம்பித்தான்.

*****

அதே நேரம் இங்கு மாடியிலிருந்து கீழிறங்கி வந்தான் சுதன். அவனது கண்கள் தன்னாலேயே மனைவியைத் தேடியது. அறைக்குள் அவளில்லை என்றதும் நேராக வாசலுக்கு தான் வந்தான்.

மங்கிய மஞ்சள் நிற வெளிச்சத்தில்

கண்களில் கண்ணீரோடு நின்றிருந்தாள் அவனது மனைவி. மணவாட்டியின் கண்ணீரைக் கண்டதும் வேகமாக அவளை நோக்கி நடந்தான்.

“இதயா என்னடா? என்னாச்சு?…” அவளது கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து கொண்டே கேட்க, கலங்கிய விழிகளோடு கணவனை நிமிர்ந்து பார்த்தவள் ஜானகியிடம் பேசிய அனைத்தையும் கூறினாள்.

  ‘இது என்னடா புது பிரச்சனை…’ என்பது போல் பார்த்தான் சுதன்.

ஜானகிக்கு வாசுவைப் பற்றி தெரியும் என்று தான் இவனுமே நினைத்திருந்தான். ஆனால் அவனைப் பற்றி  அவருக்கும் ஒன்றும் தெரியவில்லை என்பது சுதனுக்கும் அதிர்ச்சி தான்.

“தப்பு இதயா, முதல்லயே அவங்களுக்கு சொல்லியிருக்கணும்…” தென்றலவள் கலைத்து விட்ட கேசத்தை கோதிக் கொண்டே கூறினான்.

“அத்தைக்கு தெரிஞ்சா கஷ்டப்படுவாங்க தான் சொல்லல, அதுவுமில்லாமல் வாசுவும் சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டான். எனக்கும் அவன் சொல்றது சரின்னு தான் பட்டுச்சு.அதான் அவங்ககிட்ட சொல்லல” என்றவளின் குரல் நலிந்து ஒலித்தது.

ஜானகியின் நிலைக் குழைந்த தோற்றம் அவளது கண்ணுக்குள்ளேயே நின்றது. முன்பே இதனைப் பற்றி பெரியவளிடம் கூறியிருந்தால் இத்தனை வேதனைகளை கடந்திருக்க வேண்டியதில்லையோ என்ற எண்ணம் எழாமலில்லை.

ஆனால் அன்றைய சூழ்நிலையில் ஜானகியிடம் இதனைப் பற்றி கூறி இருந்தால் நம்பிருக்க மாட்டார்.  அதுவும் வாசு,மறுக்க மறுக்க கட்டிப் பிடித்தார், முத்தம் கொடுத்தார் என்றால் சுந்தரத்தை போல ‘அவர்,அவனோட அப்பா,இத்தனை நாள் அவரு வராம இருந்ததுக்கு கோபமா தடுப்பானா இருக்கும் மா’ என்பதை போன்ற பதில் தான் வந்திருக்குமே தவிர, சரியான முறையில் புரிந்திருக்க மாட்டார் என்பதே உண்மை.

“அவங்களுக்கு எல்லாமே தெரிஞ்சுடுச்சா? இல்லை வாசு பேசினதை வைச்சு கெஸ்ல கேட்டாங்களா?” என்றவனின் குரலில் தன் நினைவிலிருந்து வெளி வந்தவள்  அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“முழுசா தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லைன்னு தான் நினைக்கிறேன். ஏன்னா வாசுவைத் தவிர வேற யாருக்கும் இதை பத்தி முழுசா தெரியாது.அவன் சொன்னா மட்டும் தான் உண்டு” என்ற அதே நேரத்தில் அங்கே வாசு பேசிய அனைத்தையும்  கேட்டிருந்தார் ஜானகி.

****

விசுவிசுவென வீசிக் கொண்டிருந்த காற்று கோதையின் முந்தானையைக் கொடி போல காற்றில் பறக்க விட்டுக்  கொண்டிருந்தது.  அதனைப் பிடிக்கக் கூட மறந்தவளாக அவனையே பார்த்தது பார்த்தபடி நின்றாள். அவளது மனம் அவனுக்காக தவித்துக் கொண்டிருந்தது. அந்த தவிப்பு அவளது கண்களிலும் முகத்திலும் பிரதிபலித்து கொண்டிருந்தது.

இங்கு வாசுவோ அவளைத் திரும்பியும் பாராது பேசிக் கொண்டிருந்தான். “என் இதயாவை துடிக்க வைச்சவனை இந்த கையால தான் கொன்னேன். வெறி தீர அவனோட உயிர் நாடியை குத்தி கிழிச்சேன். அவனை உருத் தெரியாம அழிக்க நினைச்சு தான் பள்ளத்துல காரை விட்டேன். அப்ப, அந்த நிமிசம் என் அம்மா முகம் ஞாபகம் வந்தது. எனக்காகவே படிச்சு, எனக்காகவே வேலைக்கு போயி, எனக்காகவே வாழ்ந்துட்டிருக்க என் அம்மா  நான் இல்லைன்னா என்ன ஆவாங்கன்னு யோசிச்சேன்.  உடனே காருல இருந்து வெளிய குதிச்சுட்டேன்” என்றவன் அன்றைய நாளின் மிச்சத்தை இன்றைக்கும் உணர்ந்தது போல் கண்களை இறுக மூடிக் கொண்டான்.

நொடிகள் மெளனமாக கரைய அடிவயிற்றிலிருந்து கிளம்பி பெருமூச்சுடன் கண்களை திறந்தவன் “கோமாக்கு அப்பறம் என்னோட கவனம் முழுக்க முழுக்க இதயா நல்லாகி வரணும் தான் இருந்தது. இதயாவை கவுன்சிலிங் கூட்டிட்டு போனேன். அவ, நான் நினைச்சதை விட ஸ்பீடா கியூராகிட்டு வந்தா, அந்த சமயத்துல  தான் சுதனை பார்க்க ஈரோடு வந்தோம்.  அப்ப தான் நான் உன்னை பார்த்தேன்…” எனக் கூறியவனின் முகம் கனிந்தது.

 “முதல்ல உன்னை பார்க்கும் போது பெருசா எந்த எண்ணமும் எனக்கு வரல. ஆனால்  உன்னோட விடாத பார்வை  என்னை ஆம்பளையா உணர வைச்சது. உன்னை நேசிக்கவும் வைச்சது…” என்றவன் முகத்தில் ரசனையான புன்னகை.

“எப்ப என்னோட காதலை  உணர ஆரம்பிச்சானோ அப்பவே என்னோட கடந்த காலம் என்னைத் துரத்த ஆரம்பிச்சுடுச்சு. அதுல இருந்து தப்பிக்க முடியாம இப்ப வரைக்கும் ஓடிட்டு இருக்கேன். இனியும் அதுல இருந்து வெளிய வர முடியும்னு நம்பிக்கையில்லை. அது மட்டுமில்ல என்னால உனக்கு ஒரு நல்ல கணவனா இருக்க முடியும்னு தோணலை…”

“உனக்குன்னு ஒரு கனவு இருக்கும்.ஏக்கம் இருக்கும்.

குழந்தை குடும்பம்னு வாழ ஆசை இருக்கும். ஆனால்  இதையெல்லாம்  என்னால  ஃபுல் ஃபில் பண்ண முடியாதுன்னு தான் உன்னை விட்டு தள்ளி தள்ளி போனேன். நான் நேசிச்ச  பொண்ணு வலியோட வாழறதுக்கு நான் காரணமா இருக்க கூடாது தான் நீயா வரும் போதெல்லாம் உன்னைவிட்டு விலகி போனேன்…” என்றவன் அவளைத் திரும்பி பார்த்தான்.

 “இதான் நான்…” கைகள் இரண்டையும் விரித்து  கூறியவன் அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே

“இப்ப சொல்லு நான் உனக்கு வேணுமா?  என்னை மாதிரி ஒருத்தனை நீ கல்யாணம் பண்ணிக்கணுமா?” எனக் கேட்க,  பேச்சற்று நின்றாள் பாவை.

அது கூட நிமிடம் மட்டுமே அடுத்த நிமிடம் ஓடி சென்று ஆடவனை அணைக்க துடித்த மனதினை அடக்க முடியாமல் அ

வனை நோக்கி வேகமாக நடக்க, அங்கே படிக்கட்டில் யாரோ உருண்டு விழும் சத்தம் கேட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!