Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என் செல்ல சீமாட்டி

என் செல்ல சீமாட்டி 14

அத்தியாயம் 14 

“ஆச்சி..ஆச்சி.. “ என்று கூவிக்கொண்டே வீட்டினுள் நுழைந்தான் அபிநந்தன்.



Advertisement

சொர்ணம் பாட்டி,  “என்ன நந்து, சீக்கிரமா வந்துட்ட இன்னிக்கு?” என்று பேரனின் குரலை கேட்டு விரைந்து வந்தார்.

“ஆச்சி, இன்னிக்கு நடந்த கேம்பஸ் இன்டெர்வியூல நான் செலக்ட் ஆகிட்டேன், ஹே!” என்று கத்திகொண்டே பாட்டியை இரண்டு கைகளால் தூக்கிக்கொண்டு சுற்றினான்.

Advertisement

Advertisement

“நந்து, நந்து,  விடுப்பா.. தலை சுத்துதுப்பா..” என்று பாட்டி அவனிடம் கெஞ்சிதான் கீழே இறங்க வேண்டியதாகிற்று.

“ரொம்ப சந்தோசம் நந்து. காலையில இன்டெர்வியூ இருக்குன்னு சொல்லவே இல்லையே நீ?”

Advertisement

“உன் செல்ல மருமகள் வீட்ல இருந்தாங்களே. சொன்னா ஏதாவது தடங்கலா சொல்லுவாங்க. அதான் சொல்லாமலே போய்ட்டேன்”

“தப்பு நந்தா, அம்மாவை அப்படி சொல்ல கூடாது. சரி சந்தோசமான விஷயம் சொல்லி இருக்க, எதாவது ஸ்வீட் செஞ்சு தரேன். என்ன வேணும்ன்னு சொல்லு?”

“என் செல்ல ஆச்சி, உன் ஸ்பெஷல் பால்கோவா செஞ்சு தர்ரீயா?”

“சரி, கடையில போய் பாலும், கொஞ்சம் கோவாவும் வாங்கிட்டு வந்திடு.”

பாட்டி கூறிய பொருட்கள் எல்லாம் வாங்கி வந்து கொடுத்தான். பின் உடை மாற்றி கொண்டு வந்து, பாட்டிக்கு உதவியாக அவருடனே அடுப்படியில் நின்றுகொண்டான்.

முன்பெல்லாம் பாட்டி ஒற்றை ஆளாக நான்கு கிலோ பால்கோவாவை கூட கிளறிவிடுவார். இப்பொழுது வயோதிகம் காரணமாக முடிவதில்லை. பால்கோவா ஒரு கட்டத்தில் அடிபிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். பாட்டிக்கு  துணையாக நந்தன் கிளறுவான். நந்தனுக்கு எல்லாமே பாட்டிதான். குரு தாத்தாவின் செல்லம் என்றால், அபிநந்தன் பாட்டியின் செல்லம்.

“அண்ணாக்கும்  பால்கோவா ரொம்ப பிடிக்கும் இல்ல, ஆச்சி” என்றான் கிளறிக்கொண்டே.

“உனக்கு உங்க அண்ணன் நியாபகம் வந்துடுச்சுன்னு எனக்கு தெரியும். உனக்கு மைசூர்பாகு தான் பிடிக்கும். குருவுக்கு தான் பால்கோவா பிடிக்கும். நீ பால்கோவான்னு கேட்கும் போதே எனக்கு தெரிஞ்சுடுச்சு நந்தா. அவன் வரும்பொழுது அவனுக்கும் செஞ்சு கொடுப்போம் விடு. நம்ம பால்கோவா சாப்பிடயாவது சீக்கிரம் வரட்டும்” என்றார் சொர்ணம் பாட்டி பேரனின் கன்னங்களை வாஞ்சையாக தடவிக்கொண்டே.

“ஆமா, உங்க வீட்டுக்காரருக்கு பிடிச்ச ஸ்வீட் என்ன ஆச்சி?” என்றான் நந்தன் சூழலை இலகுவாக்க.

“உங்க தாத்தாக்கு நான் என்ன செஞ்சாலும் பிடிக்கும் நந்து” என்றார் பாட்டி. கூறும்பொழுதே அவரது முகம் விகசித்தது.

“ஆச்சி நீ எவ்வளவு அழகா இருக்க தெரியுமா? அதுவும் தாத்தாவை பத்தி பேசும்போது உன் முகம் அப்படியே டால் அடிக்குது”என்று பாட்டியின் கன்னத்தை  ஆசையாக கிள்ளி முத்தம் கொஞ்சினான் பேரன்.

“ஆமா, எந்த ஊர்ல வேலை கிடைச்சிருக்கு நந்து. தஞ்சாவூரிலேயா?”

“எவ்வளவு சீக்கிரம் கேட்டுட்ட போ. அய்யா லெவலே வேற. எனக்கு மும்பையில போஸ்டிங்”

“அவ்வளவு தூரமாவா? “

“நல்ல வேலை பாட்டி, பெரிய கம்பெனி, இந்த கம்பெனில ஒரு வருஷம் வேலை பார்த்தாலே நிறைய கத்துக்கலாமாம். எங்க காலேஜ்ல நாலு பேருக்கு தான் கிடைச்சிருக்கு ஆச்சி”

இவர்கள் பேசிக்கொண்டே, பால்கோவாவை கிளறி முடித்தனர்.

முதலில் சாமிக்கு வைத்து நைவேத்தியம் பண்ணிட்டு சாப்டிலாம், என்று கூறி  சாமிக்கு ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து, உடன் துளசி நீரும் வைத்து சாமிக்கு  நைவேத்தியம் செய்தார் பாட்டி. இருவரும் இறைவனை வணங்கிவிட்டு வெளியே வந்தனர். 

“நீ போய் உட்காரு நந்து, நான் உனக்கு எடுத்துட்டு வரேன்” என்ற பாட்டியை, “இரு ஆச்சி அபியும் வந்திடட்டும். சேர்ந்தே சாப்பிடலாம்” என்று கூறி  தங்கைக்காக காத்துக்கொண்டிருந்தான்.

அபி கல்லூரியில் இருந்து வரும்பொழுதே, “ஆச்சி… பால் கோவாவா.. என்ன ஸ்பெஷல் இன்னிக்கு. தெருமுனை வரை வாசனை வருது ஆச்சி..” என்று தான் உள் நுழைந்தாள்.

“உனக்கு நாய் மூக்கு அபி“என்றான் நந்தன்.

“உனக்கு பேய் மூக்கு“ என்று அண்ணனுக்கு பழிப்பு காட்டிவிட்டு, “சீக்கிரம் தாங்க ஆச்சி, வாசனையே பசியை கிளப்பிடுச்சு” என்றாள் சலுகையாக பாட்டியிடம்.

“போய் முதலில் கை கால் கழுவிட்டு வா. நான் எடுத்து வைக்கிறேன்”

 என்றார் பாட்டி.

 

பாட்டியை அமர சொல்லிவிட்டு, நந்து தானே சென்று மூன்று கிண்ணங்களில் பால்கோவாவை வைத்து கொண்டு வந்தான்.

“அபி, எனக்கு வேலை கிடைச்சிடுச்சு, அதுக்கு தான் பால்கோவா” என்று உற்சாகமாக சொல்லி தங்கையிடம் ஒரு கிண்ணத்தை நீட்டினான்.

“ஹே.. சூப்பர் அண்ணா. எந்த கம்பெனி.. எந்த ஊரு.. எவ்வளவு சம்பளம்..” என்றாள் படபடவென்று.

பேசிக்கொண்டே பால்கோவாவை உள்ளே தள்ளினர் அண்ணனும் தங்கையும்.

பாட்டிக்கு கந்தகுருவின் நினைவுதான் அதிகமாக இருந்தது. அவர் வளர்த்த பிள்ளையல்லவா. ஆனால் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. மானசீமாக  அவன் நலனுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டார்.

“ஆச்சி, எப்பவும் போல பால்கோவா சூப்பர். எனக்கும் சமைக்க சொல்லி தாங்க ஆச்சி”

“சொல்லி தரேன் பட்டு”

மாலை ஏழு மணிக்கு தான் அஞ்சனாவும் வடிவேலுவும் வந்தார்கள். அவர்கள் உடை மாற்றி வரவும், இருவருக்கும் பால்கோவா கொடுத்தார் சொர்ணம் பாட்டி.

“என்னம்மா விஷேசம், ரொம்ப நாள் ஆச்சே பால்கோவா சாப்பிட்டு“ என்று கூறிக்கொண்டே ஒரு கரண்டி எடுத்து வாயினுள் போட்டார். வழுக்கிக்கொண்டு உள்ளே சென்றது. 

“ஆஹ்ஹா…சூப்பர் அம்மா..”

அஞ்சனாவும் ரசித்து பால்கோவாவை காலி செய்தார்.

நந்தன், மெதுவாக தனக்கு வேலை கிடைத்திருக்கிறது என்று தெரிவித்தான்.

“சூப்பர் நந்து, இன்டெர்வியூன்னு சொல்லவே இல்ல. வாழ்த்துக்கள் டா” என்று மகனை தோளோடு அனைத்து கொண்டார் தந்தை.

“நம்ம தான் மேலே படிக்கிறதுன்னு முடிவு செய்திருக்கிறோமே நந்து. அப்புறம் எதுக்கு இன்டெர்வியூ அட்டென்ட் செய்த?” என்றார் அஞ்சனா.

“நீங்க முடிவு பண்ணிருந்தீங்கன்னு சொல்லுங்க”

“என்ன பேச்சு இது. மேலே மாஸ்டர்ஸ் படிக்கிறது நல்லதுன்னு சொன்னேனே. நான் நல்லா விசாரிச்சு தானே சொன்னேன்”

“நான் ஒன்னும் குழந்தை இல்ல அம்மா. எனக்கு எது நல்லதுன்னு எனக்கு தெரியும்.”

“பார்த்தீங்களா? எப்படி பேசுறான்னு?” என்று வடிவேலுவிடம் எகிறினார் அஞ்சனா.

பாட்டி எதுவும் பேசவில்லை. இப்பொழுது எல்லாம் சீக்கிரம் சோர்வாகி விடுகிறார். எப்பொழுதுமே மகன் மருமகள் விஷயங்களில் தலை இடமாட்டார். அன்றும் அவர் தன் அறையினுள் சென்று அமைதியாக படுத்துவிட்டார்.

“முதலில் அவனுக்கு வாழ்த்து சொல்லு அஞ்சுமா. இந்த காலத்துல வேலை கிடைக்கிறது சாதாரண விஷயம் இலை. மத்ததை அப்புறம் பேசு”

“எப்படி சொல்லுவாங்க ப்பா. அவங்க சொல்றதை தான் நம்ம செய்யணும். அப்படி நடக்காட்டி எல்லாரையும் ஒரு வழி பண்ணனும்”

“நான் அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்?”

“பெரியவனை கம்ப்யூட்டர் படிக்க சொன்னேன். படிச்சு நல்ல வேலை கிடைச்சுதா இல்லையா? நீயும் கம்ப்யூட்டர் படின்னு சொன்னேன். சிவில் தான் படிப்பேன்னு நின்ன. உன் அண்ணன் சப்போர்ட் பண்ணி அதுலே சேர்த்துவிட்டான். இப்ப மேலே படிச்சா, வெளி நாட்டு வேலை கிடைக்கும்னு சொல்றாங்க. படின்னு சொன்னா தப்பா? உன் நல்லதை யோசிச்சுதானே சொல்றேன்?”

“உங்க எண்ணங்களை திணிக்காதீங்க அம்மா. எனக்கு வெளி நாடு செல்ல விருப்பமா இல்லையான்னு கேட்டீங்களா? நான் காலேஜ் டாப்பர் தெரியுமா? இந்த வேலை எனக்கு ரொம்ப சிறப்பா இருக்கும்ன்னு எங்க காலேஜ் ப்ரோபஸ்ஸர் எல்லாம்  சொன்னாங்க. அவங்களை விட உங்களுக்கு தெரியுமா?”

“மேல படிச்சிட்டு வேலைக்கு சேர்ந்தா என்ன?”

“என்ன வேலை? எந்த கம்பனி? இது ஏதாவது கேட்டீங்களா? வழக்கம் போல எங்க தலையில தட்டி தட்டி உட்கார வைக்கணும். எனக்கு தான் எல்லாம் தெரியும், நான் சொல்றதை தான் கேக்கணும்னு நிக்க வேண்டியது. சை..”

“எல்லாம் உங்க பெரிய பையன் காமிச்ச வழி தான். பாருங்க சின்னவனும் மதிக்காம  எதிர்த்து பேசுறான். நாளைக்கு உங்க பொண்ணும் இப்படி தான் பேசுவா”

“அண்ணனை எதுக்கு இப்ப இழுக்குறீங்க. நான் இப்படி பேசுறேன்னா நீங்க பேச வைக்கிறீங்க. எங்க அண்ணன் எவ்வளவு நல்ல அண்ணா தெரியுமா? நாங்க அவனை எவ்வளவு மிஸ் செய்றோம்ன்னு தெரியுமா? உங்களால் தான், அண்ணா எங்ககூட இல்லை. அண்ணாவோட பேபியும் இல்ல “ சொல்லும் போதே நந்தனின் கண்கள் கலங்கி விட்டது.

“அம்மா பாவம் டா. நமக்காக தானே வேலைக்கு போறாங்க. அவங்களுக்கு ரெஸ்டே இல்லை. நாம தானே அவங்களை பார்த்துக்கணும்ன்னு சின்ன  வயசுல இருந்தே எங்களுக்கு அண்ணா சொல்லுவாரு தெரியுமா?” என்றாள் அபிநயா இப்பொழுது. 

“ஒரு தடவையாவது உங்களை எதிர்த்து அண்ணா பேசியிருக்குமா? அண்ணாக்கு கம்ப்யூட்டர் சுத்தமா பிடிக்காது. ஆனா நீங்க சொன்னீங்கன்னு படிச்சாரு. படிப்பு வேலை கல்யாணம் இப்படி எல்லாமே உங்களுக்கு பிடிச்சதை தான் அண்ணா மேலே திணிச்சீங்க. அப்புறமும் அத்தையும் நீங்களும் சேர்ந்து அவங்க இரண்டு பேரையும் படுத்தி வச்சீங்க. அவங்க வெறுத்து போய் சொல்லாம போகிற நிலைமைக்கு தள்ளிவிட்டுட்டு இப்ப எங்க அண்ணாவையே குறை சொல்றீங்க நீங்க?” என்று கொந்தளித்துவிட்டான் நந்தன்.

இவ்வளவு கோபத்தை அஞ்சனா எதிர்பார்க்கவில்லை. கணவரை திரும்பி பார்த்தார். அவரது ஆதரவு கிடைப்பதாக தெரியவில்லை.

“நான் வேலைக்கு தான் சேர போறேன். எங்க பீல்டுல மேலே படிக்கிறதுக்கு முன்னே ஒரு இரண்டு வருஷம் வேலை எக்ஸ்பீரியன்ஸ் இருந்தா நல்லதுன்னு எங்க சார் சொன்னாரு. இரண்டு வருஷம் வேலைக்கு போயிட்டு, அப்புறம் மேலே படிக்கலாம்ன்னு இருக்கேன்.”

அஞ்சனா அதற்கு  மேலே எதுவும் பேசவில்லை.

 

நந்தனின் வார்த்தைகள் அவருக்கும் குருவின் நியாபகத்தை தந்திருந்தது. நந்தன் சொல்லுவதை போல, குரு ஒரு நாளும் அஞ்சனாவின் வார்த்தைக்கு மறுப்பு கூறியதே இல்லை.

“அண்ணன் இருந்தா எனக்கு வேலை கிடைச்சது கேட்டு எவ்வளவு சந்தோஷபட்டிருக்கும், இல்ல அப்பா” என்று வடிவேலுவின் அருகில் அமர்ந்துகொண்டான்.

அபிநயா, “அண்ணாக்கு மெயில் அனுப்பலாம் நந்தா. பார்த்தா சந்தோசப்படுவாரு. பார்ப்பாரான்னு  தெரியலை. ஒரு முயற்சி செய்து பார்ப்போமே” என்றாள் தன்  சின்ன அண்ணனிடம் மெதுவாக.

‘சரி வா’, என்று தங்கையை அழைத்துக்கொண்டு அறைக்குள் சென்றான். அவர்கள் ஊருக்கு சென்றபின் இங்கே நடந்த அனைத்து விவரங்களையும் சேர்த்து மின்னஞ்சல் அனுப்பினார்கள். இவர்கள் நாக்பூர் சென்றதையும் குறிப்பிட்டு, அங்கே எடுத்த புகைப்படங்களையும் இணைத்து அனுப்பினார்கள்.

மின்னஞ்சலில் ரித்விகாவையும் இணைத்துக்கொண்டனர்.

“நந்தா, நீயும் மும்பை போய்ட்டா எனக்கு தான் போர்” என்றாள் அபிநயா.

“உனக்கு காலேஜ் இருக்கு இல்லடா, இல்லனா என்கூடவே கூட்டிட்டு போய்டுவேன். உனக்கு லீவ் விட்டதும் நீயும் ஆச்சியும் மும்பை வாங்க. நானும் உங்களை மிஸ் செய்வேன்”

“அம்மா, அனுப்ப மாட்டாங்க”

“ரித்துவுக்கு போன் போடு.  ஐடியா பண்ணி உன்னையும்  கூட்டிட்டு வந்துடுவா. நம்ம மும்பை சுத்தி பார்க்கலாம்”

“அதுவும் சரிதான், சரியான குட்டி வாலு”

அஞ்சனா  தன்  விருப்பமின்மையை  தெரியப்படுத்தியும் அபிநந்தன் பிடிவாதமாக மும்பைக்கு சென்று வேலையில் சேர்ந்துவிட்டான்.

———

“மஞ்சு, பிள்ளைகளுக்காக ஓடி ஓடி ஒரு பிரயோஜனுமும் இல்லை.”

“ஆமா  அஞ்சு, நம்ம நமக்காக என்ன செஞ்சுக்கிட்டோம். பசங்களுக்காக வாழ்ந்து ஒரு சுகதத்தையும் அனுபவிக்கல ?

“சரியா சொன்ன மஞ்சு”

“சரி, நந்து மும்பை ரீச் ஆயிட்டானா? கால் செய்தானா?”

“சும்மா அண்ணனுக்கு போன் போட்டு டார்சர் பண்ண மாதிரி எனக்கு பண்ணக்கூடாது. வாரத்துக்கு ஒரு தடவை பேசுனா போதும்னு சொல்லிட்டு போய்ட்டான் மஞ்சு”

“அடப்பாவி, நம்ம குரு ஒரு நாளும் அப்படி சொன்னதில்லைஇல்ல அஞ்சு”

“ஆமா மஞ்சு, எப்ப கூப்பிட்டாலும் பொறுமையா தான் பேசுவான்.”

“அதுக்குன்னு அப்படியே விடமுடியுமா? நல்லது சொல்றது நம்ம கடமை. நீ போனை போட்டு எல்லாம் சரியா இருக்கான்னு தெரிஞ்சுக்கோ. நானும் இரண்டு நாளைக்கு ஒரு தடவை பேசறேன்”

“சரி மஞ்சு, ரித்து எப்படி இருக்கா?”

“அவளுக்கு எப்பவுமே வாய் அதிகம்  தானே. காமர்ஸ் குரூப் தான் படிப்பேன் சேர்ந்திருக்கா. என்னத்த சொல்றது?”

“அருணான்னா எதிர்த்து பேசினாலும் கடைசியில நம்ம சொல்றதை கேட்டுப்பா இல்ல?”

“எல்லாத்துக்கும் சேர்த்து தான் மொத்தமா நம்ம முகத்துல கரிய பூசிட்டு  போய்ட்டாங்களே இரண்டுபேரும். அவங்களை பத்தி பேசாத அஞ்சு”

“விடு மஞ்சு”

“என்னத்தை சொல்றது அஞ்சு. வாழ்க்கையே ஒரே வெறுப்பா இருக்கு. சரி, வேலை இருக்கு அப்புறமா பேசலாம், வச்சிடு “ என்று அழைப்பை துண்டித்தார் மஞ்சுளா.

எதிர் எதிர் அணியாக செயல்பட்டு அருணாவையும் குருவையும் ஒருவழி செய்துவிட்டு இப்பொழுது இருவரும் கூட்டணி அமைத்து புலம்பி கொண்டிருக்கிறார்கள்.

என்னத்தை சொல்றது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!