Skip to content
Post Views: 4,366
நிறம் பாராத காதல்
அத்தியாயம்.23(2)
“உனக்காக நாங்க பார்த்த மாப்பிளை இவரு தான்” என்று வைதேகியின் தாத்தா செண்முகம் சொன்னதும், வேதநாயகியின் தங்கச்சி முறையில் இருக்கும் விக்ரமனின் அம்மா ஆண்டாள் மற்றும் விக்ரம் ஆகிய இருவரும் வீட்டுக்குள் நுழைந்தவர்களை தொடர்ந்து ரங்காராவின் பிள்ளை திருநங்கை பவானியும் வந்து இருந்தார்.
விக்ரமை அங்கே பார்த்த வைதேகிக்கு தன் தாத்தா பாட்டியை விக்ரமுக்கு எப்படி தெரியும் என்ற சந்தேகத்தைத் தாண்டி இங்கே நடக்கும் விஷயங்களுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்ற ரீதியில் மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு சுவற்றில் சாய்ந்தபடி நின்றிருந்த ரணதீரனை பார்த்துத் தான் கோபம் எழுந்தது.
Advertisement
“சம்மந்தி இங்கே என்ன நடக்குது!?” என்று கீதா வேதநாயகியை கேட்க,” எனக்கும் ஒன்னும் புரியல. ரணதீரனுக்கு வைதேகியை கல்யாணம் பண்ணலாமுன்னு நம்ப ஆசைப்பட்டோம். ஆனால் வைதேகியோட தாத்தாவும் பாட்டியும் விக்ரமை வைதேகிக்கு மாப்பிள்ளையா அழைச்சிட்டு வருவாங்கன்னு நான் நினைத்தே பார்க்கவில்லை” என்ற வேதநாயகியின் வார்த்தையில் வலிகள் நிறைந்திருந்தது.
“அக்கா எப்படி இருக்கீங்க? மாயா, மாறா எல்லாரும் நல்லா இருக்கீங்களா? சம்பந்தி நீங்க எப்படி இருக்கீங்க?”என்று வேதநாயகியின் குடும்பத்தை நலன் விசாரித்த விக்ரமனின் அம்மா ஆண்டாள்
கடைசியாக வைதேகியின் அருகே
சென்றவர் அவளை மேலிருந்து கீழ் வரை கண்களால் அளந்து பார்த்தார்.
“நீதான் சித்ராவா! உன்னை விக்ரம் போட்டோல காட்டி, கல்யாணம்னு பண்ணா அவன் உன்ன தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு அடம் பிடிச்சான். ஆனா போட்டோல பார்க்கிறதை விட நீ நேர்ல ரொம்ப அழகா இருக்க!” என்று அவர் பேசும் எந்த வார்த்தையும் வைதேகியின் காதில் விழாத பட்சத்தில் அவளின் விழிகள் ரணதீரனிடமிருந்து நகராமல் நின்றது.
Advertisement
“மாமா…இந்த விக்ரம் ஏன் வைதேகியை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறான்? நம்ம ராணா ஏன் வாயைத் திறக்காமல் ஓரமா நிக்கிறான்? நீங்கப் போய் வைதேகிக்கும் ராணாவுக்கும் தான் கல்யாணம் நடக்கணும்ன்னு சொல்லுங்க மாமா” என்று மாயா தன் கணவன் மாறனின் காதைக் கடிக்க,
“நீ கொஞ்சம் அமைதியா இரு மாயா. இது வைதேகியோட வாழ்க்கை. அவளே எல்லா முடிவையும் எடுக்கட்டும்” என்ற மாறனுக்கும் ரணதீரனின் மீது கோபம் எழுந்தது.
Advertisement
இயல்பாகத் திருமண பேச்சை எடுத்தாலே பெண்களுக்கு ஏற்படக்கூடிய எந்தப் பூரிப்பும் வைதேகியின் முகத்தில் காணாத அவளின் பாட்டி,”அம்மாடி சித்ரா…நேத்து விக்ரம் மாப்பிள்ளையும் அவங்க அம்மாவும் என்னைக் கோவில்ல சந்திச்சு உன்னைப் பொண்ணு கேட்டாங்க.
எனக்கும் உன் தாத்தாவுக்கும் விக்ரமை ரொம்ப பிடிச்சு போச்சு.
அடுத்த முகூர்த்தத்திலேயே உனக்கும் விக்ரமுக்கும் கல்யாணத்தை முடிச்சு வச்சுட்டா நம்ம பரம்பரை சொத்தெல்லாம் உனக்கும் உன் புருஷனுக்கும் வந்து சேர்ந்திடும்”
என்ற வள்ளிக்கு எப்படியாவது தன் பேத்திக்கு நல்ல முறையில் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்று எண்ணம் மட்டுமே இருந்தது.
“ஆமா சித்ரா… இனிமே நீ என் அப்பாவை நினைத்துப் பயபுட வேண்டாம். இனி அந்த ஆளு உன்னை ஒண்ணுமே பண்ண முடியாதப்படி அவருக்கு நான் வணங்கும் அர்த்தநாரீஸ்வரர் தண்டனை கொடுத்துட்டாரு” என்று பவானி சொன்னதும், அவர் பேச்சில் மறைந்திருக்கும் உண்மையைப் புரிந்து கொள்ள முடியாமல் பவானியை கேள்வியாகப் பார்த்தாள் வைதேகி.
“என்னமா அப்படி பாக்குற! இந்த வீட்டுக்கு வந்து உன்னை மிரட்டிட்டு போன அதே நாளில் ரங்காராவ் கிணத்தடில வழுக்கி விழுந்து பின் தலைல அடிபட்டுக் கோமாக்கு போனவனோட மூளை செயலிழந்திடுச்சு” என்று வைதேகியின் தாத்தா சொன்னதும், அவனுக்கு அந்தத் தண்டனை தேவை தான் என்று அனைவரும் நினைத்துக் கொண்டார்கள்.
Advertisement
“இனி டாக்டர் அவனைக் காப்பாற்ற முடியாதுன்னு சொல்லிட்டாங்க. இங்கே வருவதற்க்கு முன்னாடி தான் ரங்காராவ் உடல் உறுப்புகளைத் தானம் கொடுத்துடுங்கன்னு பவானி ஹாஸ்பிடல்ல கையெழுத்து போட்டுட்டு வந்து இருக்கின்றாள்” என்றார் செண்முகம்.
“பரவாயில்ல…அவன் உயிரோடு இருக்கும்போது பண்ண கேடுகெட்ட செயலில் வைதேகி அவள் அம்மா அப்பாவை இழந்து ரொம்பவே கஷ்டத்தை அனுபவிச்சுட்டாள். ஆனா இப்போ அந்த ஆளு இறந்த பிறகாவது அந்த ஆளால நாலு பேரு நல்லா இருக்கட்டும். உடல் தானம் நல்ல விஷயம் தான்” என்று கீதா சொல்ல,
இனி ரங்காராவின் தொல்லை வைதேகிக்கு இல்லை என்ற நிம்மதி அனைவருக்கும் இருக்கத்தான்
செய்தது.
“சித்ரா… உன் வாழ்க்கையில் நீ பட்ட கஷ்டத்தை எல்லாம் மறக்கும் விதமாக இனி உனக்குச் சந்தோஷம் மட்டுமே கிடைக்கணும்.இதையெல்லாம் மனசுல வச்சிக்கிட்டு தான் நாங்களும் விக்ரம் மாப்பிள்ளைக்கு உன்னைக் கல்யாணம் பண்ணி வைக்கலாமுன்னு முடிவு பண்ணி இருக்கிறோம்” என்று செண்முகம் சொன்னதும், விக்ரமின் முகத்தில் அளவில்லாத சந்தோஷம் பெருகியது.
“அம்மா…இன்னைக்கு எங்க பேத்தி எங்களுக்கு நல்லபடியா திரும்பக் கிடைக்க காரணமே நீங்கத் தான். அதனால நீங்களே முன்ன நின்னு இந்தக் கல்யாணத்தை முடிச்சு கொடுக்கணும்” என்று வள்ளி வேதநாயகியின் கரங்களைப் பிடித்துக் கொண்டு உரிமையாகக் கேட்டதும், வேதநாயகிக்கு தர்ம சங்கடமாக
போனது.
யாரோ யாரிடமும் பேசுங்கள். யாருக்கோ யாருடனோ இங்கே திருமணம் நடக்க போகிறது. என்றபடி ரணதீரன் எதையும் கண்டுகொள்ளாமல் நின்றிருந்தவன் மீது வைதேகிக்கு சொல்ல முடியாத அளவிற்கு கோபம் எழுந்தது.
வந்த கணத்திலிருந்து விக்ரமை ஏறெடுத்துக் கூடப் பார்க்காத வைதேகியின் பார்வை ரணதீரன் மீது மட்டுமே பதிந்திருந்ததை கவனித்த விக்ரமனுக்கு உள்ளுக்குள் பொறாமை எழத் தான் செய்தது.
“அக்கா…பெரியவங்க சொன்ன மாதிரி நீங்களே என் பையன் கல்யாணத்தை முன்ன நின்னு நடத்திக் கொடுங்க” என்று ஆண்டாள் வேதநாயகியிடம் பொறுப்பை ஒப்படைக்க,
“என்னங்க! வந்ததுல இருந்து நீங்களே கல்யாணம் கச்சேரின்னு பேசிக்கிட்டு இருக்கீங்க. கல்யாண பொண்ணு வைதேகி தானே! முதல்ல வைதேகிக்கு விக்ரமை பிடிச்சிருக்கான்னு கேளுங்க” என்ற கீதாவின் கேள்வியில் ஆண்டாளுக்கு கோபம் எழுந்தது.
“என்ன சம்மந்தி பேசுறீங்க நீங்க? என் மகனுக்கு என்ன குறைச்சல்?அவனை யாருக்காவது பிடிக்காமல் இருக்குமா? இங்க பாருங்க! வைதேகி நிறத்துக்கும், அழகுக்கும் விக்ரமைத் தாண்டி இந்த ஊருல வேற எந்த மாப்பிள்ளை இருக்காங்க சொல்லுங்க கேட்போம்” என்ற ஆண்டாள் ஒரு கணம் ரணதீரனை பார்த்தார்.
“என்னதான் கோடிஸ்வரன் வீட்டு பையனா இருந்தாலும் என் மகனுக்கு இருக்குற நிறமும் கலையான முகமும் பாதி பணக்கார பசங்களுக்கு இருக்கவே இருக்காது”என்ற ஆண்டாளுக்கு ரணதீரனை கண்டாலே ஆகாது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.
இதுவரை எத்தனையோ பொது இடங்களில் ரணதீரனின் நிறத்தை வைத்து அவனை மட்டம் தட்டி மகிழ்ச்சி அடையும் கீழ் தனமான குணம் கொண்ட ஆண்டாளின் குணங்கள் அவ்வப்போது விக்ரமனிடமும் தோன்றியதால் தான் இதுவரை ரணதீரனும் விக்ரமனிடம் அன்பாகப் பேசிப் பழகமாட்டான்.
அனைவரின் முன்னிலையிலும் ரணதீரனின் மனதை புண்படுத்தும் விதமாக ஆண்டாள் பேசிய வார்த்தைகளைக் கேட்டு ரணதீரனுக்கு கோபம் எழுந்தாலும் சபை நாகரீகம் கருதி அமைதியாக நின்றவனை பார்த்து,
“ஹா ராணா…நீ இங்கதான் இருக்கியா? நீயே சொல்லு! வைதேகியின் அழகுக்கும் நிறத்துக்கும் விக்ரமை கல்யாணம் பண்ணா தானே நல்லா இருக்கும்?” என்று கிண்டலாகக் கேட்டதும், ரணதீரனின் பதிலுக்காக வைதேகி காத்திருந்தாள்.
வைதேகியின் விழிகளைப் பார்க்காதவன், “ஆமா… அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடந்தால் தான் சரியா இருக்கும்”என்ற ரணதீரன் அங்கே நிற்காமல் நேராகத் தன் பங்களாவிற்கு சென்றவனை ஏமாற்றாமாகப் பார்த்தாள் வைதேகி.
“சரி நேரம் ஆகுது… நேரத்தோட நம்ம வீட்டுக்குக் கிளம்பலாம். இன்னைக்கு உனக்குப் பிறந்தநாள் வேற, நம்ம வீட்ல உனக்காகப் பெரிய விருந்தே ஏற்பாடு பண்ணனும்னு உன் தாத்தா சொல்லிக்கிட்டு இருந்தாரு.
ஆனா நான் தான் விக்ரமுக்கும் உனக்கும் நடக்க இருக்கிற நிச்சயத்தை விமர்சையா பண்ணிக்கலாம், இப்போதைக்கு பிறந்தநாள் அதுவுமா கோவிலுக்குப் போயிட்டு வரலாம் என்று சொன்னேன்
என வள்ளி தெரிவித்ததும்,
“அதெல்லாம் நாங்க காலையிலேயே
போயி வைதேகி பேர்ல சிறப்புப் பூஜை பண்ணிட்டு வந்துட்டோம்”
என சின்ன சங்கடத்துடனே
சொன்னார் கீதா.
“ஓ அப்படியா… ரொம்ப சந்தோஷம். சரி சித்ரா கிளம்புமா நேரம் ஆகுது” என்று தாத்தா வைதேகியை அழைக்க.
“எங்க அழைச்சிட்டு போறீங்க?”
என்று மாயா கடுப்பாகக் கேட்டாள்.
“என்ன அக்கா கேள்வி இது?
அதான் ரங்காராவ் ஹாஸ்பிடல்ல உயிருக்குப் போராடிக்கிட்டு இருக்காரே! இனி அவரால வைதேகிக்கு எந்தப் பிரச்சனையும் வராது. அதனால தான் தாத்தாவும் பாட்டியும் வைதேகியை அவங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போறாங்க. அங்க போனதும் கூடிய சீக்கிரம் எனக்கும் வைதேகிக்கும் நடக்க இருக்கிற நிச்சயத்துக்கு முறைப்படி நானும் அம்மாவும் உங்களை வந்து அழைக்கிறோம். இவங்க எல்லாம் சொன்ன மாதிரி வேதநாயகி பெரியம்மா தான் எங்க ரெண்டு பேர் கல்யாணத்தையும் முன்ன நின்னு நடத்தி வைக்கனும்” என்ற விக்ரமனின் பார்வை வைதேகியின் மீது படிந்து இருந்தது.
“டேய் மவனே…அண்ணன் எப்போ போவான் திண்ணை எப்ப காலி ஆகும்னு சொல்ற மாதிரி இந்தப் படுபாவி விக்ரம் நம்ம ஆசையில எல்லாம் கல்லைத் தூக்கி போடறானே!” என்ற கீதாவும் மனதார ரணதீரனுக்கும் வைதேகிக்கும் திருமணம் நடக்க வேண்டும் என்று ஆசை கொண்டார்.
“மாமா… நீங்க என்ன அவங்க வாய பாத்துக்கிட்டு நிக்கிறீங்க. நம்ம வைதேகி ராணாவை காதலிக்கிறான்னு சொல்லுங்க மாமா” என்று மாயா சொல்ல,
“வைதேகி தானே ராணாவை காதலிக்கிறாள்! உன் தம்பியும் காதலிக்கிறதா இருந்தா இந்நேரம் இவங்களையெல்லாம் கழுத்த புடிச்சு வெளியல்ல துரத்தி இருப்பானே” என்று மாறன் சொல்ல, அதே எண்ணம்தான் வைதேகியின் மனதிலும் ஓடிக்கொண்டு இருந்தது.
“அம்மாடி சித்ரா… நீ என்னம்மா அமைதியா இருக்க! போய் ரெடியாகு கிளம்பலாம்” என்று வள்ளி அவளைத் தன்னுடன் அழைத்ததும். ‘நீ போகாதே வைதேகி’ என்று வேதநாயகியின் குடும்பத்தில் இருக்கும் யாரேனும் ஒருவர் சொல்வார்கள் என்று காத்திருந்தாள் வைதேகி.
“ஆமா… நீ என்னமோ கனடா போறதுக்காக முயற்சி பண்றேன்னு கேள்விப்பட்டேனே! என் பையனைக் கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் நீ கன்னடாக்கு எல்லாம் போகக் கூடாது. அதே மாதிரி நீ ஏதோ இந்தப் பைத்தியங்களுக்கு எல்லாம் வைத்தியம் பாத்துகிட்டு இருக்கியாமே! இனி அந்த வேலைக்கும் நீ போகத் தேவையில்லை” என்ற ஆண்டாளின் பேச்சில் அகங்காரம் தெரிந்தது.
இங்கே நடக்கும் கூத்தை எல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாமல்,”ஆமாமா… நீ அங்கெல்லாம் போகத் தேவையில்ல வைதேகி. விக்ரம் வீட்டிலேயே ரெண்டு பைத்தியம் இருக்கும், அவங்களுக்கே வைத்தியம் பாரு” என்ற கீதாவை கடுப்பாக முறைத்தான் விக்ரம்.
“அம்மாடி நேரம் ஆகுது கிளம்புமா” என்று மீண்டும் வள்ளி அழைக்க,”அத்த நான் கிளம்பணுமா?” என்று வேதநாயகியை பார்த்துக் கேட்டாள் வைதேகி.
வைதேகியை பார்த்த கணத்திலிருந்து தன் வீட்டிற்கு அவள்தான் மருமகளாக வர வேண்டும் என்ற எண்ணத்தை இதயத்தில் சுமந்து கொண்டிருக்கும் வேதநாயகிக்கு வைதேகியிடம் என்ன பதில் சொல்வது என்றே தெரியாமல் போக, “அண்ணா நான் கிளம்பணுமா?” என்று மாறனை பார்த்தும் கேட்டாள் வைதேகி.
“இங்க பார் வைதேகி… உன்னை நான் இந்த வீட்டுக்கு அழைச்சிட்டு வரும்போது என் சொந்த தங்கச்சியா எண்ணி தான் அழைத்து வந்தேன். அதனால நீ இந்த வீட்டை விட்டுப் போறதும் போகாததும் உன்னுடைய இஷ்டம். நானா உன்னை இங்கிருந்து என்னைக்குமே போனு ஒரு வார்த்தை கூடச் சொல்லமாட்டேன்”என்று தெளிவாகச் சொன்னான் மாறன்.
“அண்ணி…நீங்கக் கூட என்னைப் போகாதன்னு சொல்ல மாட்டிங்களா!?” என்று மாயாவை பார்த்து வைதேகி கேட்டதும்,”மாமா சொன்னதை தான் நானும் சொல்லுறேன். நாங்களா உன்னை இங்க இருந்து போன்னு சொல்லவே மாட்டோம்”என்று மாயா சொல்ல,
“அப்போ நானா போனாலும் நீங்கக் கவலைப்பட மாட்டீங்க அப்படித்தானே!?” என்று வைதேகி கேக்கும் கேள்விக்கு அங்கே யாருடமும் பதில் இல்லாமல் போனது.
“அப்போ உங்க எல்லோருக்கும் நான் இங்க இருக்கறதும் இல்லாததும் ஒன்னு தானா!? ” என்று வைதேகி கேட்க,”என்ன வைதேகி நீ…
ஏன் தேவையில்லாததை எல்லாம் பேசுற! நம்ம கிளம்பலாம் வா” என்ற விக்ரம் சட்டென்று வைதேகியின் கையைப் பிடித்த்தான்.
விக்ரமின் செய்கையில் முகம் மாறிய வைதேகி,”ஒழுங்கா என் மேல இருந்து கையை எடுத்துடுங்க. நீங்க மட்டும் என் சம்மதம் இல்லாமல் என் கையைப் பிடித்தது அவருக்குத் தெரிஞ்சிதுனு வையுங்க. அப்புறம் இந்த வீட்டு வேட்டை நாய்களுக்கு உங்க தொடைக்கறி தான் விருந்தாக மாறும்” என்ற வைதேகியின் வார்த்தையைக்கேட்டு அனைவரின்
முகமும் மாறியது.
“ஏய் என்ன சொல்ற நீ?… நான் தானே உன்னைக் கல்யாணம் பண்ணிக்க போறேன். ஏன் உன் கைப்பிடிக்க எனக்கு உரிமை இல்லையா!” என்ற விக்ரமனின் கோவமான குரலில் அவன் கையைத் வேகமாகத் தட்டி விட்ட வைதேகி,
“உங்களை நான் கல்யாணம் பண்ணிக்க போறதா யாரு சொன்னாங்க?” என்றவளின் கேள்வியில் வேதநாயகியின் குடும்பத்தில் இருக்கும் அனைவரின் முகத்திலும் எல்லையில்லா மகிழ்ச்சி தோன்றியது.
“அம்மாடி சித்ரா… என்னமா சொல்லுற? ஏன் உனக்கு விக்ரமை பிடிக்கலையா?”என்று வள்ளி கேட்டதும்,”எனக்கு வேறொருவரை பிடிச்சி இருக்கு பாட்டி” என்றாள் வைதேகி.
“என்ன! வேற ஒருவனையா! யாரு அவன்”என்று விக்ரம் கோவமாகக் கேட்டதும்,
“அதெல்லாம் உங்களுக்குத் தேவை இல்லாத விஷயம்” என்ற வைதேகி,
தன் கால் வலியைக்கூட பொருட்படுத்தாமல் வேதநாயகி வீட்டின் எதிரே உள்ள ரணதீரனின் வீட்டு வாசல் கதவைத் தட்டும் சத்தம் கேட்டு ரணதீரன் கதவைத் திறந்தான்.
இந்தச் சமயத்தில் இவள் ஏன் தன் எதிரே நிற்கிறாள் என்று புரியாத ரணதீரன்,
“என்ன வேணும் உனக்கு? “என்று கோபமாகக் கேட்க,
அவனைவிட அதிகமான கோபத்துடன் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்த வைதேகியின் செயலில் அங்குள்ள அனைவருமே பேய் அறைந்ததை போல அவளைப் பார்த்து இருந்தார்கள்.
error: Content is protected !!