Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

செல்லமான ஊடல் நீயே..

செல்லமான ஊடல் நீயே… 6.1

வெற்றிவேல் செழியன் தந்தை மணிமாறனும், கனிகாவின் தந்தை பிரகாஷூம் கல்லூரி காலம் முதல் நண்பர்கள்.

மணிமாறன் வசதி படைத்த குடும்பத்தை சேர்ந்தவர் எனில், பிரகாஷ் நடுத்தர வகுப்பிற்கும் சற்று கீழான வகுப்பை சேர்ந்தவர்.



Advertisement

தனது படிப்பை முன்னிருத்தி மெரிட்டில் மணிமாறன் படித்த அந்த பெரிய கல்லூரியில் இடம் வாங்கி வந்தவரை.. கிண்டல் கேலியிலிருந்து காத்தது மணிமாறனே.

அவர்களின் நட்புக்கு இடையே பணம் ஒரு போதும் தடையாய் இருந்ததே இல்லை.

Advertisement

Advertisement

படிப்போடு அவரவருக்கான வேலை என அமைந்த போதும்.. இருவரும் ஒன்றாகவே அறையெடுத்து தங்க.. இன்னும் அவர்களின் நட்பு பலமானது.

இருவருக்கும் திருமணம் முடிந்ததும், அடுத்து அடுத்து இருக்கும் இரு வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கிட, பெண்களும் மற்றவரை உடன்பிறப்பு போல எண்ணி பழக ஆரம்பித்தனர்.

Advertisement

வெற்றிவேல் செழியன் பிறந்த சில மாதத்தில், பிரகாஷின் மகன் கார்த்திக் பிறந்திட இரட்டை பிள்ளையாய் இரு வீட்டிலும் வலம் வந்தனர்.

சந்திராவிற்கு வெற்றி பிறந்த போதே.. ‘அடுத்து கர்ப்பமாக கூடாது..’ என டாக்டர்கள் சொல்லியிருக்க, ஒற்றை பிள்ளையாய் போனவனுக்கு கார்த்திக் நல்ல துணையாகி போனான்.

இருவருக்கும் ஆறு வயது முடியும் போது.. செந்தமிழ் கனிகாவை பெற்றெடுக்க, செந்தமிழின் உடல் நிலை கருதி, சந்திரா அவளை தாயாய் தாங்கிக்கொள்ள.. கனிகாவும் அவரோடு ஒன்றி போனாள் இயல்பாய்.

கனிகா அவளின் அண்ணனோடு ஏற்படும் அத்தனை சண்டையையும் தீர்த்து வைப்பது வெற்றிவேலாய் தான் இருக்கும். அதிலும் தீர்ப்பு கனிகாவிற்கு சாதகமாய் தான் வரும்.

அப்படி வராவிட்டால்.  அந்த குட்டி முகத்தை திருப்பிக்கொண்டு அவள் செய்யும் செயலில் மொத்தமாய் கவிழ்ந்து போவான் வெற்றி. 

சிலநேரம் அவளின் இத்தகைய செயலுக்காகவே.. கார்த்திக்குக்கு சப்போர்ட் செய்து விட்டு, பின் இவளை சமாதானம் செய்ய பின்னால் அலைந்ததும் உண்டு.

இருவீட்டிற்கும் ஒற்றை பெண்.. என்பதால் அவளின் சேட்டை அவளோடு வளர்ந்ததே அன்றி குறையவில்லை.

எல்லாம் நன்றாக சென்று கொண்டிருக்க, கார்த்திக் பத்து வயதை அடைந்திருந்த போது.. வெற்றிக்கு உடல் நலம் சரியில்லாததால், தான் மட்டும் சைக்கிளை எடுத்துக்கொண்டு போனவன் விபத்தில் சிக்கிவிட, 

இன்றைய நிலை போல தொலைதொடர்பு சாதனங்கள் இல்லாத நிலையில்.. அரிதான ரத்த வகை கொண்டவனை காப்பாற்ற முடியாமல் போனது.

அதுவரை உடன் இருந்த அண்ணனை இழந்த கனிகாவும், உற்ற நண்பனை இழந்து நின்ற வெற்றியும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாய் மாறி போயிருந்தனர்.

ஒரு வழியாக உற்ற நண்பனை இழந்த சோகத்தை கடந்து வரும் முன்.. வெற்றியின் தந்தை மாரடைப்பில் இறந்திட, மொத்தமாய் உடைந்து போனவனோடு சந்திரா அவரின் பூர்வீகம் செல்ல, இரு குடும்பங்களுக்கும் இடைவெளி உண்டானது.

பிரகாஷூம் மகன் இறந்த வீட்டில்.. இதுவரை வெற்றி மூலமாகவாவது கிடைத்த ஆறுதலின்றி, அவனின் நியாபகங்கள் பெற்றவர்களை படுத்த.. 

அதோடு வெற்றிவேலை பிரிந்த துயர் தாங்காது அந்த வீட்டை பார்த்து.. ஓயாமல் அழுத கனிகாவை சமாளிக்க வேண்டியே.. அவர்களும் அந்த வீட்டை காலி செய்திருக்க.. சந்திரா தான் கொஞ்சம் தேறிய பின் அனுப்பிய கடிதமும் அவர்களை வந்தடையவில்லை. 

வெற்றிவேல் செழியன் போலீஸ் ஆன பிறகு, பல்வேறு இடங்களில் பணி மாற்றம் பெற்று.. இங்கு வந்து இப்போது தான் ஒரு வருடம் ஆகி இருந்தது. 

இந்த நிலையில் பிரகாஷையும், செந்தமிழையும் சந்தித்ததே மகிழ்ச்சி எனில், அவர்களின் மகளை கண்டதும், ‘வெற்றிக்கு சரியான இணை இவளே..’ என்ற முடிவுக்கு வந்திருந்தார் சந்திரா.

கனிகாவின் வற்புறுத்தலில் வந்துவிட்ட போதும், பார்த்த அன்றே, ‘தான் சொல்ல வந்ததை எப்படி ஆரம்பிக்க..?’ என யோசித்த பிரகாஷூக்கு அந்த கஷ்டத்தை தராது, 

“அண்ணா, கனிய வெற்றிக்கு கல்யாணம் பண்ணி தர்றீங்களா..? 

உங்க பொண்ண கண்கலங்காம என்னோட மகளா வச்சு பார்த்துக்கறேன்..” என சந்திரா பட்டென கேட்டுவிட,

“சந்திரா, நாங்களும் அது விசயமா தான் பேச வந்தோம். ஆனா அதுல ஒரு சிக்கல்..” என இழுக்கவும், 

“என்ன அண்ணா.. என்ன விசயம்..? 

ஒரு வேளை கனிக்கு ஏற்கனவே மாப்பிள்ளை ஏதாவது பார்த்து முடிவு பண்ணிட்டீங்களா..?” என பதட்டத்தோடு கேட்டவரிடம்,

“ச்சே.. ச்சே.. அதெல்லாம் இல்லம்மா. அது வந்து.. அத எப்படி சொல்றதுன்னு தான். 

இல்ல, எப்படி கேட்கறதுன்னு தான் யோசனை..” என தயக்கமான பிரகாஷின் பேச்சில்,

“என்ன.. கேட்கணுமா..! என்ன அண்ணா கேட்கணும்..? தயங்காம கேளுங்க..” என சொன்னதும்,

“வெற்றிக்கு கல்யாணம் செய்யறதுல எதனால இஷ்டம் இல்ல..?” என்ற பிரகாஷின் ஒளிவு மறைவின்றிய கேள்விக்கு,

“என்னது..! கண்ணாக்கு கல்யாணத்துல இஷ்டமில்லையா..? 

என்ன அண்ணா விளையாடுறீங்களா..? யார் சொன்னா அப்படின்னு..? 

அவனே என்கிட்ட கல்யாணம் செய்ய ஓகே.. பொண்ணு பாருங்கன்னு சொல்லி கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகப்போகுது. 

இதுவரை சரியான இடம் அமையல. தரகர் வந்து முதல் நாள் பொண்ணப்பத்தி நல்ல விதமா பேசிட்டு போவாரூ. 

அடுத்த நாள் போன் பண்ணா.. அந்த பொண்ணு வேற யாரையோ கல்யாணம் பண்ணிடுச்சு.. இல்ல, வேற பக்கம் முடிவாகிடுச்சுன்னு சொல்வாரூ. 

சிலர் வந்துட்டு போறதோட சரி வரன் கொண்டுவர்றேன்னு… 

அடுத்து அந்த ஆளையே பார்க்க முடியல..! 

என்னால தான் அவனோட கல்யாணம் தள்ளி போயிட்டே இருக்கு. 

நாளைக்கே நா ஒரு பொண்ண காட்டி.. கட்டு தாலின்னு சொன்னாலும் கட்டுவான் என் புள்ள..” என பெருமையாய்  சொல்லிய சந்திராவிடம், 

கனிகா, “அத்தம்மா, மாமா உங்கள நல்லா ஏமாத்திட்டு இருக்காங்க..” என்றவள்,  

அவனின் நடவடிக்கைகளையும், அவனின் எச்சரிக்கையையும் சொல்ல,

“அட ப்ராடு பையலே.. அதான் விசயமா..? 

என்னடா.. எல்லாமே சரியா இருந்தும், எதுவுமே நடக்க மாட்டிங்குதேன்னு நினச்சேன். 

அவனுக்கு நா அம்மான்னு ஃப்ரூப் பண்ணல, நா மணிமாறன் பொண்டாட்டி சந்திரா இல்ல. 

இப்பவே அவன்கிட்ட இதப்பத்தி கேட்டு, அவன உண்டு இல்லன்னு ஆக்கிடுறேன்..” என வீம்பாக தனது போனை எடுத்தவரை தடுத்த கனிகா,

“காரியம் கெட்டுச்சு போங்க. அத்தம்மா.. மாமா ரொம்பவும் தெளிவா இருக்காரூ அவரோட கல்யாணத்த தடுக்கறதுல. 

இப்போ அவரு செஞ்ச அதே ஸ்டைல்ல தான் அவருக்கு ஆப்பு வைக்கனும். 

அதவிட்டுட்டு நீங்க கேட்க போய், அதான் விசயம் தெரிஞ்சிடுச்சே.. இனி கல்யாண பேச்சே எடுக்காதீங்கன்னு மாமா சொல்லிட்டா மொத்தமும் போச்சு..

அவர்கிட்ட இத பத்தி கேட்காம, அவரோட வீக் பாயிண்ட் எதுவோ அத வச்சு அவர வழிக்கு கொண்டு வந்திடலாம்..” என்ற கனியின் வார்த்தையும், சந்திராவின் யோசனை படிந்த முகத்தையும், பார்ப்பதை தவிர வேற வழியே இல்லாது போனது பிரகாஷூக்கும், செந்தமிழுக்கும்.

நீண்ட யோசனைக்கு பின் கனிகா, “அத்தம்மா, நீங்க வேணுமின்னா நெஞ்சுவலி வந்த மாதிரி ஆக்ட் பண்ணி அவர ஹாஸ்பிடல்ல வச்சு.. ‘இவ கழுத்துல தாலி கட்டு. இது தான் என்னோட கடைசி ஆசை’ ன்னு சொன்னா.. மாமா செய்வாங்க தானே..?” என விழிகள் பிரகாசிக்க கேட்டவளிடம்,

“யாரு.. அவனா..? அவன் நிச்சயம் அத கேட்க மாட்டான்டா. 

அவன் எனக்கு நெஞ்சு வலின்னு சொன்னா.. நேரா போய் டாக்டர்கிட்ட பேசிட்டு, புதுசா நாலு டாக்டர எங்கே இருந்தோ வர வச்சு.. என்னைய ஃபுல்லா செக் பண்ண வச்சிடுவான். 

நம்ம எத்தன டாக்டர கரெக்ட் பண்ணி.. நம்ம திட்டத்த விளக்கி.. பொய் சொல்ல வைக்க முடியும்..? 

அப்படியே நம்ம சொன்னாலும்.. அதுல யாராவது கண்ணாகிட்ட போட்டு கொடுத்துட்டா..?” என நிதர்சனத்தை சந்திரா சொல்லிட,

‘அப்ப என்ன செய்யலாம்..?’ என யோசித்தவளுக்கு சில நாட்களுக்கு முன்.. தான் ரத்தம் கொடுக்க போன போது பார்த்த கனிஷ்காவின் நியாபகம் எழ, 

“அத்தம்மா.. ஒரு சூப்பர் ஐடியா. உங்களுக்கு எதாவதுன்னா தானே.. மாமா இதெல்லாம் செய்வாங்க.

பேசாம எனக்கு பெரிய வியாதி. நா சீக்கிரமா மண்டைய போட்டுடுவேன். 

நா சாகறதுக்குள்ள எனக்கு கல்யாணம் செஞ்சு பார்க்க எங்க வீட்டுல ஆசை படறாங்கன்னு சொல்லுங்க..” எனவும்,

“கனி.. என்ன பேச்சு இது..? அதும் கோவில்ல இருந்துட்டு..” என அதிர்ந்து போன மூவரும் ஓரே நேரத்தில் சொல்ல, 

‘இவங்க பாசத்துல வழுக்கிடாம காப்பாத்து ஆண்டவா..!’ என மனதில் வேண்டுதல் வைத்தவள்,

“ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் செய்யலாமின்னு பெரியவங்களே சொல்லியிருக்காங்க. ஒரே ஒரு பொய் அதனால என்ன..?” என்ற கனியிடம்,

“அப்படி இல்லடா.. வாழ வேண்டிய பொண்ணு நீ. உனக்கு போய்.. வேணாம் டா. வேற வழிய யோசிக்கலாம்..” என சந்திரா உறுதியாக மறுத்திட,

“அத்தம்மா.. வெற்றி மாமா தான் எனக்குன்னு.. நா முடிவு செஞ்சு ரொம்ப நாளாச்சு..” என்றவள் அவனை சந்தித்ததை சொல்லி,

“டாடிய உங்ககிட்ட அத பேச தான் கூட்டிட்டு வந்தேன். என்ன ஆனாலும் மாமாவ விட முடியாது என்னால. 

சோ, நா டிசைட் பண்ணியாச்சு. இனி அதை சென்டிமென்ட்டா பேசி, சக்சஸ் பண்ண வேண்டியது உங்க பொறுப்பு..” என தீவிரமாய் சொல்லிய கனிகாவிடம்,

“சரிடா கனிமா.. நீ சொல்லற மாதிரி பேசினாலும் அவன் கேடி.. 

கிரிமினல்ஸ் கூட பழகி, அதே மாதிரியே இருக்கானே.. அவன நம்ப வைக்க முடியுமா..?

உன்னோட ஹெல்த் ரிப்போர்ட் கேட்டா, என்ன செய்ய..?” என சந்தேகத்தை கேட்ட சந்திராவிடம்,

“அதுக்கு நா ஏற்பாடு செய்யறேன். 

அவருக்கு நா, யாருன்னு தெரிஞ்சு.. எனக்கு இப்படி ஒரு பிரச்சனைன்னு தெரிஞ்சதும்.. 

சின்ன வயசுல, என்மேல வச்ச பாசம் இன்னும் என்மேல அவருக்கு இருந்தா.. கண்டிப்பா மாமா, மேல.. அதிகமா தோண்டி துருவாம என் கழுத்துல தாலி கட்டுவாரூ..

அவரோட பொண்டாட்டியா ஆகிட்டா போதும்.. அடுத்ததை அப்புறம் பார்த்துக்கலாம்..” என்றவள், 

‘சந்திராவிடமும் தனது தாய், தந்தையிடமும் எப்படி வெற்றி வந்தால் பேச வேண்டும்..’ என்பதற்கு பல முறை பாடம் சொல்லி கொடுக்க,

விருப்பமே இல்லாத போதும் கனியின் பிடிவாதத்திற்கும், மாறன் தனக்கு செய்த நன்றி கடனுக்கு ஈடாய் வெற்றியின் வாழ்க்கை வீணாக விடக்கூடாது என்ற பிரகாஷின் எண்ணத்தினாலும்.. மூவரும் ஒத்துக் கொள்வதை தவிர வேறு வழியில்லாமல் போக, அவர்கள் திட்டப்படி அனைத்தையும் நடத்தியும் முடித்து விட்டார்கள்.

இதில் கனிகா எதிர்பார்க்காத விசயம், தன்னை யார்..? என தெரிந்து, தனது உடல்நிலை பற்றி தெரிந்ததும், வெற்றிவேல் செழியன் கொண்ட வேதனையும்.. 

அதை தொடர்ந்து எவ்வளவு விரைவாக திருமணத்தை நடத்த முடியுமோ.. அவ்வளவு விரைவாக என்றாலும், எல்லா விதத்திலும் நிறைவான ஒரு திருமணத்தை நடத்தியதில் இருந்த பாசமும், அக்கரையும் தான்.

அதுவே அவளை குற்ற குறுகுறுப்பில் ஆழ்த்தினாலும், இயல்பான துடுக்கு தனத்தால் அதை ஓரம்கட்டி.. அதற்கு ஈடாக, நேசத்தோடு தனது வாழ்க்கையை துவங்க நினைத்த போது, அவனுக்கு தெரிந்து போன உண்மையால்.. இப்போது எப்படி இதை சரி செய்வது என்பதே.

பழைய நினைவுகள் கொடுத்த தாக்கத்தால், நீண்ட நேரம் கழித்து உறங்கியிருந்தாலும்.. எப்போது சரியான நேரத்திற்கு எழுந்து.. தனது அன்றாட பணியை செய்து பழக்கம் கொண்ட வெற்றிவேல் முதலில் கண் விழிக்க,

தன்னை பார்த்தவாரே உறங்கியது போல தன் புறம் முகம் வைத்து.. சிறு பிள்ளை போல வாயை லேசாக பிளந்த படி தூங்கும் கனியை பார்த்ததும், ஒரு நிமிடம் தனது கட்டுப்பாட்டை இழந்து.. அவளின் உதட்டருகே நெருங்கி சென்றவன், 

நொடியில் சுதாரித்து, ‘ச்சே.. அவ செஞ்ச வேலைக்கு..’ என நினைத்து வேகமாய் விலகியவன், 

அவள் மீதான கடுப்பில் திரும்பி.. குடிப்பதற்காக ஜக்கில் வைத்திருந்த நீரை எடுத்து அவளின் முகத்தில் ஊற்ற,

“மம்மீ..!!!! வீட்டுக்குள்ள மழை பெய்யுதூ…!!!” என கத்தியபடி விழித்து எழுந்து அமர்ந்தாள். 

சிறிது நேரம் சென்றே.. இருக்கும் சூழல் புரிய நிமிர்ந்து வெற்றியை பார்க்க, நமுட்டு சிரிப்போடு அவளையும் அவளின் திருதிருவென விழித்து பார்க்கும் அந்த விழியையும் பார்த்திருந்தவன், 

“ஹேவ் ஏ வொஸ்ட் டே ஃபார் யூ…!” எனச்சொல்லி இரு கண்ணையும் சிமிட்டிவிட்டு பாத்ரூமுக்குள் புகுந்தான்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!