Skip to content
Post Views: 4,070
அத்தியாயம் 17
கந்துக்குருவின் கைபேசி ஒலி எழுப்பியதில் அமைதி ஆனார்கள் அஞ்சுவும் மஞ்சுவும்.
Advertisement
திரையில் செல்லம்மா என்ற பெயர் ஒளிரவும், குரு திரும்பி பாட்டி எங்கே என்று தான் பார்த்தான்.
அவர் தான் அருணாவின் பேச்சை கேட்டு தூங்க சென்றிருந்தாரே.
Advertisement
Advertisement
‘’எல்லோரும் ஆட்டுவிக்கும் பொம்பலாட்ட பொம்மை நான்தான் போல’ என்று தன்னை நினைத்தே நொந்து போனான் குரு.
“சொல்லு செல்லம்மா, என்ன இந்த நேரத்துல தூங்காம எனக்கு கால் பண்ணியிருக்க?”
Advertisement
“இப்ப தான் பாட்டி கால் பண்ணி சுருக்கமா விஷயத்தை சொன்னாங்க. சமாளிக்க முடியுதா?”
“தெரியலை.. நான் பார்த்துகிறேன் செல்லம்மா. நீ போய் தூங்கு”
“யாரு? யாருகிட்ட பேசிகிட்டு இருக்க?” என்றார் அஞ்சு.
“இந்த நேரத்துல யாரது செல்லம்மா?” என்றார் மஞ்சு.
அருணாவிற்கு அவர்கள் பேசுவது தெளிவாக கேட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு இருவருடைய குரலையும் கேட்டதும் இதழ்கள் தானாக சிரிப்பில் விரிந்தது.
“எல்லாத்தையும் சொல்லிட்டீங்க போலயே?”
“எத்தனை நாளைக்கு மறைக்கிறது. நம்ம என்ன தப்பா செய்றோம், அதான் எல்லாத்தையும் சொல்லிட்டேன்” என்றான் மெதுவாக.
“கதக்களி ஆடுறாங்களா, பரத நாட்டியமா? இரண்டும் சேர்த்தா?“
“செல்லம்மா.. உன்னை வச்சிக்கிட்டு.. “ என்று சிரிக்க தொடங்கினான்.
பின் அன்னைகள் முறைக்கவும் அசடு வழிந்துகொண்டே, ”அப்புறம் பேசுறேன் செல்லம்மா” என்றான்.
“ஆண்களின் வெட்கம் எப்பவுமே அழகு, இல்ல?” என்றார் வடிவேலு ஆனந்தனிடம் தன் மகனை ரசித்து கொண்டே.
“அடுத்து என்ன நடக்கும்னு நானே டென்ஷன்ல இருக்கேன் … நீங்க வேற”
“இப்படி ஒரு தங்கச்சி, இப்படி ஒரு பொண்டாட்டி, அப்புறம் எதுக்கு சும்மா டென்ஷன்? நம்ம சொல்றதை கேக்கவா போறாங்க..விடுங்க மச்சான்”
“அப்ப எப்பவும் போல வேடிக்கை பார்க்க சொல்றீங்க.. அப்படி தானே?”
“அதை விடுங்க.. டீ கடைன்னு சொன்னப்ப எனக்கும் அதிர்ச்சியா தான் இருந்ததது. இதோ இப்ப இந்த நிமிஷம் அருணா கூட பேசும் பொழுது குரு முகத்துல ஒரு பிரகாசம் தெரிஞ்சுது. கவனிச்சீங்களா? அதுவே சொல்லிடுச்சு, இப்ப அவங்க மகிழ்ச்சியா வாழறாங்கன்னு”
“அப்ப இவங்க இரண்டு பேரையும் எப்படி சமாளிக்கிறது?”
“இத்தனை வருசமா நம்மளால செய்ய முடியாத விஷயத்தை இப்ப மட்டும் செய்ய முடியுமா? பேசாம வேடிக்கை பாருங்க”
“யாரு குரு, அருணாவா? கொடு நான் பேசுறேன்” என்றார் ஆனந்தன் குருவிடம்.
“அருணா தான் அப்ப செல்லம்மாவா?” என்றார் மஞ்சு.
“நீ யாருன்னு நினைச்ச?” என்று அஞ்சு முறைக்கவும், மஞ்சு அமைதியாகிவிட்டார்.
“அருணா, மாமா உன்கூட பேசனுமாம். ஸ்பீக்கர்ல போடறேன்”
“ஹலோ..அருணாம்மா..”
“அப்பா… எப்படி இருக்கீங்க அப்பா?” குரல் கரகரத்தது.
“நான் இருக்கேண்டா.. நீ நல்லா இருக்கியாடா? அப்பாவை மறந்துட்ட இல்ல?”
“அம்மாடி.. அருணா…” என்றார் மஞ்சுளா. கழுத்தளவு கோவம் இருந்தாலும் அதையும் விட அதிகமாக பாசம் இருக்கிறதே!
“அம்மா…” என்றாள் அருணாவும் சிறு விசும்பலுடன்.
“ராஜாத்தி… நான் உன் மாமியார் ஆகிறதுக்கு முன்னாடியே நீ என் அண்ணா பொண்ணு. ஆசை ஆசையா உன்ன மருமகள் ஆக்கிக்கிட்டேன். இந்த அத்தையையும் மறந்துட்ட இல்ல“ என்றார் அஞ்சனா.
“நீயும் குருவோட வந்திருக்கலாம் இல்ல அருணாம்மா, பார்க்கனும் போல இருக்கு” என்றார் வடிவேலு.
அருணாவின் குரலை கேட்டு அனைவரும் உணர்ச்சி வசத்தில் இருந்தார்கள்.
“நீங்க இப்படி ஜேம்ஸ் பாண்ட் வேலையை எல்லாம் பார்த்து குருவை லாக் பண்ணுவீங்கன்னு தெரியாது இல்ல மாமா” என்றாள் அருணா சிரித்துக்கொண்டே.
“தெரிஞ்சா.. அவனையும் அனுப்பி இருக்க மாட்ட, அப்படித்தானே” என்றார் மஞ்சுளா.
“தாய் அறியாத சூலா, சரியா சொல்லிட்டீங்களே ம்மா..”
“ஏன்டி.. ஏன்.. இப்படி எங்களை வதைக்கிற?” என்றார் மஞ்சு கண்ணை கசக்கிக்கொண்டு.
“அருணாம்மா, நீ போனதும் உங்க அம்மாவுக்கு உன்னை நினச்சு உடம்புக்கு முடியுமா போச்சுடா. இரண்டு நாள் மருத்துவமனையில் இருந்துட்டு தான் வந்தா. உன் மேல ரொம்ப பாசம் வச்சிருக்கா டா. சில சமயம் படுத்துவாங்க தான் அத்தையும் அம்மாவும். ஆனாலும் அதிகமா பாசம் வச்சிருக்காங்க டா” என்றார் ஆனந்தன்.
“அப்பா, உங்க மாப்பிள்ளைக்கு இன்னும் கொஞ்சம் ட்ரைனிங் கொடுத்து அனுப்புங்க. எப்படி மனைவி என்ன செய்தாலும் விட்டு கொடுக்காம இருக்கனும்ன்னு”
“பார்த்தியா அஞ்சு, இவ திருந்தவே மாட்டா. உங்க அண்ணா அவர் மகளை நான் தான் விரட்டி விட்டுட்டேன்னு என்கூட இப்பவரைக்கும் பேசுறதே இல்ல. இவ எப்படி சொல்றா பாரு”
இது அருணாவிற்கு புது தகவல்.
“ஏன் ப்பா? அம்மா கூட ஏன் பேசாம இருக்கீங்க?”
“நீ ஒன்னும் எங்களுக்கு பஞ்சாயத்து பண்ண வேண்டியது இல்ல. இப்ப நீங்க இழுத்து விட்ருக்க பஞ்சாயத்துக்கு வா முதல்ல” என்று இடைபுகுந்தார் மஞ்சுளா.
“அருமை பெருமையா வளர்த்த என் பையனை டீ ஆத்த விட்டிருக்க நீ” என்றார் அஞ்சனா மாமியாராக மாறி.
குரு இப்பொழுது அமைதியாக சென்று அவன் தந்தையின் அருகில் அமர்ந்துவிட்டான்.
“அவருக்கு பிடிச்ச வேலைய அவர் செய்றார். இதுல நீங்க கோவப்படவோ வருத்தப்படவோ என்ன இருக்கு?“
“வீட்ல ஆசையா டீ போடுவான். அருமையா போடுவான் தான். அதுக்காக அதை தொழிலா பார்க்க முடியுமா ?”
“இப்ப எட்டு மாசமா அதை தான் செய்றோம். நல்லா தான் போகுது தொழில்”
“லூசா அருணா நீ.. எங்க மேல கோவமா போனதுல கூட ஒரு நியாயம் இருக்குன்னு வச்சிக்கலாம். ஆனா அதுக்குன்னு இப்படி டீ கடை வைக்கிறது எல்லாம் சரியே இல்ல“ என்றார் மஞ்சு.
“நிஜமா உங்க ஆதங்கம் எனக்கு புரியல. புரிஞ்சுக்கவும் எனக்கு விருப்பம் இல்லை. எங்களுக்கு பிடிச்சிருக்கு, நாங்க செய்றோம். அவ்வளவு தான்”
“இப்படி பேசுனா என்ன செய்ய முடியும் அருணா? உன் சுயநலத்துக்காக என் புள்ளயையும் சேர்த்து கஷ்டப்படுத்துற, அவ்வளவு தான் நான் சொல்ல முடியும்” என்றார் அஞ்சனா ஆதங்கமாக.
“உங்க புள்ள தான், இஷ்டபட்டு செய்ற வேலை கஷ்டமா இருக்காதுன்னு எனக்கு சொல்லி கொடுத்தாரு. என்ன குரு.. அப்படி தானே..?” என்று அஞ்சனாவிடம் ஆரம்பித்து குருவிடம் முடித்தாள்.
“ஆங்.. ஆமா அருணா“
“என்னடா ஆமா, இப்ப நீங்க உடனே கிளம்பி இங்க வாங்க. எங்களுக்கு தெரிஞ்சவங்க கிட்ட சொல்லி நல்ல வேலைக்கு ஏற்பாடு பண்ணி தர்றோம் “ என்றார் அஞ்சனா.
“நாங்க வேலை வேணும்னு கேக்கவே இல்லையே” என்றாள் அருணா.
“இங்க பாரு குரு, இதுக்கு மேல சொல்ல ஒன்னும் இல்லை. நாலு பேரு உங்க பையன் என்ன பண்றான்னு கேட்டா டீ கடை வச்சிருக்கான்னு சொல்லவா முடியும்?”
“நல்லா கேளு அஞ்சு. எந்த மூஞ்சிய வச்சிக்கிட்டு நம்ம பதில் சொல்றது?”
“கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க” என்று ஆரம்பித்தான் குரு.
என்ன புரிஞ்சிக்கனும் நாங்க என்று அஞ்சுவும் மஞ்சுவும் வரிந்து கட்டிக்கொண்டு வந்தார்கள்.
“இங்க பாருங்க அத்தை.. பாருங்க அம்மா.. நாங்க நிஜமாவே ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கோம். பல மாதங்களுக்கு அப்புறம் நிம்மதியா இருக்கோம். பிடிச்சு தான் இந்த வேலையே அவர் தேர்ந்தெடுத்தார். உங்ககிட்ட எல்லாம் சொல்லிட்டு இப்படி செய்றது என்ன? நினைக்க கூட முடியாதுன்னு தான் சொல்லாம செய்றோம். நாங்க தான் தூரமா இருக்கோம் இல்ல, யார் வந்து பார்த்து உங்ககிட்ட கேக்க போறாங்க? சொல்லுங்க?” என்றாள் அருணா.
“ரொம்ப புத்திசாலித்தனமா பேசுறதா நினைப்பா டி உனக்கு.. இப்பவே எல்லார்கிட்டயும் நீங்க வெளிநாடு போய் இருக்கீங்கன்னு சொல்லி வச்சிருக்கோம்” என்றார் மஞ்சுளா.
“நல்லதா போச்சு. இப்பவும் அதையே சொல்லுங்க”
“அதானே.. அருணா சொல்றதும் சரி தானே” என்றார் வடிவேலு இப்பொழுது.
அஞ்சனா முறைக்கவும், “நீங்களே சொல்லுங்க மச்சான்” என்றார் ஆனந்தனை பார்த்து.
“விடுங்க இரண்டுபேரும், ரொம்ப நாளைக்கு அப்புறம் இப்ப தான் பிள்ளைங்க எங்க இருக்காங்கன்னு தெரிஞ்சிருக்கு. திரும்ப அவங்கக்கிட்ட மல்லுக்கு நிக்காதீங்க” என்றார் ஆனந்தன் சற்று கண்டிப்பாக.
“என்ன பன்றாங்க அப்படின்னு தெரிஞ்சு சந்தோஷ படற மாதிரியா இருக்காங்க?”
“அம்மா நீங்க சந்தோஷமா இருக்கணும்னு, எங்க சந்தோசத்தை நாங்க இனிமேலும் விட்டு கொடுக்க முடியாது” என்றாள் அருணா.
“சொந்தமா தொழில்தான் செய்யணும்னா நல்ல தொழில் எதாவது யோசிங்க. நீங்க கொடுத்துட்டு போன காசு இன்னும் அப்படியே தான் இருக்கு” என்றார் மஞ்சு கெஞ்சுதலாக.
“ஆமாம் குரு, அதுக்கு மேல செலவு வந்தாலும் நாங்க ஏற்பாடு செய்து தர்றோம். ஒரு சாப்ட்வேர் கம்பெனி கூட ஆரம்பிக்கலாமே?” என்றார் அஞ்சு.
“திரும்ப உங்க எண்ணத்தை எங்க மேலே திணிக்காதீங்க ப்ளீஸ்” என்றாள் அருணா சலிப்பாக.
“கொஞ்சம் விட்டு பிடிக்கலாம் பொறுமையா இருங்க” என்றார் வடிவேலு.
“ஏற்கனவே விட்டதே பிடிக்க முடியல..” என்றார் அஞ்சனா.
“உங்களால் இனி எங்களை நிச்சயம் உங்க கைக்குள்ள பிடிக்க முடியாது“ என்றாள் அருணாவும் காரமாக.
“கொஞ்ச காலம் பொறுங்க, திரும்ப பேசலாம், எல்லாம் உடனே உடனே நடக்காது” என்று ஆனந்தன் தான் வெகுவாக பேசி தங்கையையும் மனைவியையும் சமாதானம் செய்தார்.
“அப்பாடா” என்று இருந்தது குருவிற்கு.
“சரி.. நேரமாச்சு.. எல்லோரும் போய் தூங்குங்க. நாளைக்கு குரு கிளம்பனும்” என்றாள் அருணாளினி.
“அருணா, எனக்கு உன்னை பார்க்கணும் போல இருக்கு. வீடியோ கால் வர்றீயாடா?” என்றார் ஆனந்தன்.
அருணாவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
“அதான் பேசி பேசி எல்லாரையும் உன் தாளத்துக்கு ஆட வச்சிட்டியே. ஆசையா பார்க்கணும்னு கேக்றார். அதுக்கு கூட மனசு வரலேல உனக்கு.. பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்பது சரியாய் இல்ல இருக்கு” என்றார் மஞ்சு ஆதங்கமாக.
“நீங்க இரண்டு பேரும் சந்தோசமா இருங்க ராஜாத்தி. எங்க அண்ணா முகத்தை பார்க்க முடியல. நீங்க போன நாள்ல இருந்து அந்த மனுஷன் முகத்தில சிரிப்பே இல்லை தெரியுமா? உன்னை பார்க்க தவமிருக்காரு எங்க அண்ணா” என்றார் அஞ்சனாவும் ஆத்தமாட்டாமல்.
“அப்பா..” என்றாள் அருணா அழுகை குரலில்.
“நீங்க வீடியோ கால்ன்னு சொன்னதும் என் மனசெல்லாம் பதறுது அப்பா.. மனசு மட்டும் இல்ல.. என் வயிறெல்லாம் பதறுதே அப்பா..” என்று தேம்பி தேம்பி அழத்தொடங்கினாள்.
அதுவரை அமைதியாக இருந்த குரு, “செல்லம்மா.. என் செல்லம் இல்ல… அழாதடா.. ஒன்னும் இல்ல.. அழுதாடாம்மா” என்று கலங்கிவிட்டான்.
ஆனந்தனும் மகளின் வேதனை கண்டு கலங்கிப்போனார்.
அந்த நொடிகள் மிகவும் கனத்தது அனைவருக்கும்.
“குரு.. அத்தை சொல்ற மாதிரி நான் ரொம்ப சுயநலவாதி ஆகிட்டேன் இல்ல?” என்றாள் குருவிடம் தேம்பி கொண்டே.
“என் செல்லம்மா மனசு ரொம்ப அன்பானது. உன்னை நீயே வருத்திக்காதே. அமைதியா இரும்மா..”
அருணாவின் அழுகை மஞ்சுளாவின் பெற்ற மனதை கலங்கடித்தது.
“நீ வீடியோ கால் எல்லாம் வர வேண்டாம். அழாத ராஜாத்தி.. அத்தை உன்னை பார்க்கணும்னு நினைச்சு பேசிட்டேன். பரவாயில்லை, நாங்க வந்து உன்னை பார்க்கிறோம். அழுகாதா ராஜாத்தி” என்றார் அஞ்சனாவும்.
“முதல முகத்தை கழுவு போ.. தண்ணீ குடிச்சிட்டு பேசு செல்லம்மா” என்றான் குரு.
இரண்டு நிமிடங்களில் அருணா சற்று தன்னை தேற்றிக்கொண்டு வந்தாள்.
“சாரி அப்பா.. நீங்க எல்லோரும் என் மேல பாசம் வச்சிருக்கீங்கன்னு எனக்கு தெரியும். ஒரு மகளா உங்க பாசத்தை நான் உணர்றேன். அதே மாதிரி ஒரு மகளா என்னோட செயல் நியாயம் இல்லாததா கூட இருக்கலாம். அதுக்காக என்னை மன்னிச்சிடுங்க”
“ஆனா என் மகளுக்கு அம்மவா நான் செய்றது சரின்னு தான் எனக்கு தோணுது. அம்மாவும் அத்தையும் மனரீதியா என்னை ரொம்பவே கஷ்டப்படுத்தினாங்க. அந்த மன உளைச்சல் என் மகள் இழப்பிற்கு காரணம்ன்னு எனக்குள்ளே ஆழமான எண்ணம் விழுந்திடுச்சு. என்னால் அதில் இருந்து வெளியே வர முடியலை. நீங்களும் எனக்கு அந்த நேரத்துல துணையா நிக்கலை. இப்படி பல கோபம் எனக்குள்ளே. அங்க பக்கத்திலே இருந்தா மனக்கசப்பு வளர்ந்துட்டே தானே போகும். அதான் இந்த பிரிவுக்கு முதல் காரணம்.
ஒரு அம்மாவா எனக்குள்ள இருக்க இந்த நெருப்பு அனையர வரை என்னால அங்கே வர முடியாது அப்பா..”
“புரியுது டா.. நீ வருத்தபடாத.. இந்த அப்பாவை மன்னிச்சிடுடா..” என்றார் ஆனந்தன்.
“இல்ல அப்பா.. மன்னிப்பு எல்லாம் கேக்காதீங்க ப்ளீஸ்..” என்றாள் அருணா.
“எங்களுக்கு கொஞ்சம் இடைவெளி கொடுங்க… எங்க காயங்கள் ஒரு நாள் ஆறும். அப்ப நாங்க உங்களை தேடி வந்துடுவோம்” என்றான் குரு.
“போன்லயாவது பேசுங்க இரண்டுபேரும்” என்றார் வடிவேலு.
“வேண்டாம் அப்பா.. இந்த போன்ல தான் பல பிரச்சனைகள் வந்துச்சு. வாரத்துக்கு ஒரு தடவை பேசுவோம், போதும்” என்றான் குரு.
“டேய்.. டேய்.. அப்ப நீ தான் நந்தனுக்கு வாரத்திற்கு ஒரு முறை பேசலாம்ன்னு ஐடியா கொடுத்ததா?”என்றார் அஞ்சனா இடை புகுந்து.
“அப்ப எல்லாம் கூட்டு கலவாணிக தானா.. ரித்துவும் உங்க கூட காண்டக்ட்ல இருக்காளா?” என்றார் மஞ்சுளா.
“எப்படி இவ்வளவு நேரம் அருணா பேசுனா.. ஒன்னும் மாட்டிக்கலை… நான் கடைசியா ஒரு லைன் பேசுனேன். இப்படி கேட்ச் பிடிச்சிட்டீங்க?” என்றான் குரு அப்பாவியாக.
அந்த பக்கம் அருணா கலகலவென சிரிக்க தொடங்கினாள்.
மகளின் சிரிப்பை கேட்டதும் தான் ஆனந்தனுக்கு கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது.
“அத்தை நாங்க யார்கிட்டயும் பேசுறது இல்லை. சின்னவங்க மூணு பேரும் மெயில் அனுப்பி இருந்தாங்க. அதான் மெயில்ல மட்டும் தொடர்பு வச்சிகிட்டோம். ஆனா அவங்களுக்கு நாங்க எங்க இருக்கோம் என்ன செய்றோம்னு எதுவும் தெரியாது. அவங்களை எதுவும் சொல்லாதீங்க”
“இனிமே, குரு சொன்ன மாதிரி மாசத்துக்கு ஒரு முறை போன்ல பேசிப்போம். வருஷத்துக்கு ஒரு முறை நேர்ல சந்திப்போம். இன்னும் கொஞ்ச நேரத்துல விடியவே போகுது. கொஞ்ச நேரமாச்சு எல்லாரும் தூங்குங்க” என்றாள் அருணா.
“நீ சொன்னா சரி தான். நீ தானே எங்க எல்லோருக்கும் பெரிய மனுஷி” என்று ஆரம்பித்தார் மஞ்சுளா.
“அய்யோ திரும்ப முதல்ல இருந்தா“ என்று அலறிவிட்டார் வடிவேலு.
“நீ வா அஞ்சு நம்ம போய் கொஞ்சம் படுப்போம். நம்ம இரண்டு பேரும் எல்லாருக்கும் இளப்பமா போய்ட்டோம்” என்று கூறி அஞ்சுவை அழைத்து கொண்டு பாட்டி சொன்ன அறைக்குள் சென்று விட்டார் மஞ்சுளா.
ஆண்கள் மூவரும் ஹாலில் படுத்து கொண்டனர்.
‘என் மனசெல்லாம் பதறுது அப்பா.. மனசு மட்டும் இல்ல.. என் வயிறெல்லாம் பதறுதே அப்பா..’ என்று அருணா கூறியது காதுகளில் கேட்டுக்கொண்டே இருந்தது ஆனந்தனுக்கு.
அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது.
குரு அமைதியாக எழுந்து அவர் காலடியில் அமர்ந்துகொண்டு, “மனசை வ்ருத்திக்காதீங்க மாமா.. நான் அருணாவை பார்த்துகிறேன்“ என்றான்.
“என் பொண்ணு ரொம்ப கஷ்டப்படுறாளாப்பா..” என்றார் தந்தையாக.
“இல்லைன்னு சொல்ல முடியாது மாமா.. ஆனாலும் முன்னைக்கு இப்ப பரவாயில்ல”
இவர்கள் பேசுவதை கேட்டு வடிவேலுவும் எழுந்து அமர்ந்துகொண்டார்.
“எனக்குக்கூட.. அப்ப அப்ப கை எல்லாம் சிலிர்த்துப்போகும் மாமா.. என் பொண்ணை இந்த கையில தான் வாங்கினேன் மாமா.. எவ்வளவு மென்மையா இருந்தா தெரியுமா மாமா? ஆனால் சில்லிட்டு போய் இருந்தா மாமா.. “குருவின் கண்களும் கரை உடைந்தது.
“குரு ..” என்று மகனை கட்டி பிடித்துக்கொண்டார் வடிவேலு.
“இந்த அம்மா அப்பா வேண்டாம்னு போய்ட்டாளா ப்பா என் பொண்ணு” என்று தேம்பினான்.
“காயம் ஆறிடுச்சுன்னு நினைக்க முடியமால் இன்னும் பச்சை ரணமா இருக்கு மாமா” என்றான் மெதுவாக.
வடிவேலு தான் முதலில் சுதாரித்து, “நீங்க அங்கேயே இருங்க குரு. இங்க உங்க அம்மாவும் அத்தையும் உங்க உணர்வுகளை புரிஞ்சிக்க மாட்டாங்க. நீங்க நிம்மதியா இருந்தாலே போதும். ஆனா என்ன வேணும்னாலும் தயங்காம எங்க கிட்ட கேட்கனும். நாங்க துணையா நிப்போம் டா.. நம்ம பாப்பா நம்ம கிட்ட வந்திடுவா தம்பி. சீக்கிரம் வந்திடுவா. கலங்காதீங்க இரண்டு பேரும்” என்று மகனுக்கு ஆறுதல் சொன்னார்.
“காலைல ஆக்ட்டிங் டிரைவர் ஏற்பாடு பண்ணிட்டு கிளம்புங்க. நைட் எல்லாம் தூங்கல. நீங்க இரண்டு பேரும் கார் ஓட்ட வேண்டாம்” என்றான் குரு
சரி என்றார்கள் உடனே.
“நீ எப்ப கிளம்பனும்?”
“பத்து மணிக்கு வீட்ல இருந்து புறப்படணும். பாட்டியை கூட்டிட்டு போக தான் வந்தேன். எங்களுக்கு நிறைய உதவி செய்திருக்காங்க”
“சரி தம்பி, கொஞ்சம் படுப்போம் எல்லாரும். நீ புறப்படறப்பவே நாங்களும் புறப்படறோம்”
அப்பாவிற்கும் மாமாவிற்கும் இடையில் அமைதியாக படுத்துகொண்டான் குரு. எப்பொழுது தன் செல்லம்மாவிடம் செல்வோம் என்றிருந்தது அவன் மனது.
error: Content is protected !!