Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

"என் வாழ்வில் அர்த்தமாய் நீ

என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 8

 என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 8

  அன்று காலையே பிரியாணி, மீன், சிக்கன் வறுவல், அல்வா என்று எல்லாவற்றையும் தயார் செய்தாள் பிரவீனா.

“ஏதாவது ஹெல்ப் பண்ணவா அண்ணி” என்று வந்தாள் ஆர்த்தி.

“வேணாம் ஆர்த்தி, விருந்தே உங்களுக்கு தான். நீங்க ரெஸ்ட் எடுங்க…”



Advertisement

“அந்த பாத்திரத்தையாவது நான் கழுவி வைக்கிறேன் அண்ணி..”

“வேணாம் ஆர்த்தி, நான் வீட்லதான் இருக்கேன். எல்லா வேலையும் நான் பார்த்துக்கிறேன். இன்னைக்கு நீங்க ஃப்ரீயா இருங்க..” என்றவள் சமைத்ததை டேபிளில் அடிக்கி, புது தம்பதிகளை அமர வைத்து பரிமாறினாள்.

அப்போதுதான் உள்ளே வந்த அவர்களின் பெரியம்மா தமயந்தி

Advertisement

“என்ன விருந்தா தம்பி குடும்பத்துக்கு” என்று கேட்க.

Advertisement

“ஆமா பெரியம்மா, எனக்கு இன்னைக்கு லீவு தான். அதுதான், அவங்களுக்கு விருந்து வச்சேன்” என்றவள் மேலே எதுவும் பேசாமல் உள்ளே சென்று விட்டாள். இவர் ஒரு மாதிரி கொஞ்சம் முகத்தில் அடித்தது போல் பேசுவார் என்பதால் தள்ளி நின்றாள்.

“எல்லா வேலையும் அண்ணி தான் பார்த்தாங்க பெரிய அத்தை. குடுங்க அண்ணி நான் ஹெல்ப் பண்றேன்னு சொல்லும் போது கூட, என்னை விடல.. இன்னைக்கு எல்லாமே அண்ணி தான் பார்த்தாங்க. உண்மையாவே பிரியாணி நல்லா இருக்கு” என்று ஆர்த்தி சொல்ல,

“இனி அவ உன்னை அனுசரிக்க தான் வேணும் ஆர்த்தி. நம்ம பிரவீ என்ன தான் வேலைக்கு போனாலும், தனியா நின்னாலும்.. ஆம்பள துணை இல்ல தானே. அரசனத்து போய் நிக்கிறா.. இனி அவளுக்கு, அவ தம்பி தான் எல்லாம் பாக்கணும். ஒரு குடும்பத்தை இன்னொரு குடும்பம் தாங்குவது பெரிய விஷயம் ஆர்த்தி. நம்ம பிரேம் அவன் அக்கா குடும்பத்தை பொறுப்பு எடுத்து இருக்கான். அப்பா இல்லாத பிள்ளைக்கு எவ்வளவு நாளைக்கு பிரவீ தாங்க முடியும். நீங்களும் கூட இருந்தா தானே ஆச்சு..” என்று குதர்க்கமாக சொல்ல,

Advertisement

“இதுவரைக்கும் அக்கா, என்னைய எந்த இடத்திலும் எதிர்பார்க்கல பெரியம்மா. அவங்களே தான் எல்லாம் பார்த்துப்பாங்க.. நாங்க சும்மா கூட இருக்கம் அவ்வளவுதான்” உண்மையாக சொன்னான் பிரேம்.

“ஆனாலும், உங்க வீட்ல தான பிரேம் இருக்கா.. இதுவே வெளிய போனா? வீட்டு வாடகை, கரண்ட், தண்ணி, மளிகை, பிள்ளை செலவு எவ்வளவு வரும்? அதையும் விட சொந்த பந்தம் அனுசரிக்கணும்ல்ல.. அக்கா வீடுன்னு கட்டிக் கொடுத்தாங்க..இவ மாமியார் வீடு கிட்ட கூட வரல. அந்த நேரம் நீ தானே பிரேம் கை கொடுத்த.. இனி காலத்துக்கும் நீங்க தான் பாக்கணும். அது பெரிய விஷயம் தான…”

அறையில் இருந்த பிரவீனாவுக்கு வெளியே பேசுவது தெளிவாக கேட்டது.

“பெத்தவங்க இருக்க வரைக்கும் சரி.. நாளைக்கு உன் குடும்பம் பெருசானா கொஞ்சம் சிக்கல் வரத்தான் செய்யும். ஆனா, ஆர்த்தி ரொம்ப நல்ல பொண்ணு.. பிரவீனாவும் பெருசா சண்டை போடுற ஆள் கிடையாது ஒத்து போயிடும்” பொதுவாக முடித்துக் கொண்டார்.

“எம் மகன் அப்படி எல்லாம் கூட பிறந்தவளை விட்டு விட மாட்டான் அக்கா. ஆர்த்தியும் நல்ல பொண்ணு தான். அவங்க நல்லாத்தான் பாத்துப்பாங்க” என்று மகேஷ் சொல்ல,

பிரவீணா முகம் வலியில் சுருங்கியது. அப்போ இது என் பிறந்த வீடு கிடையாத? என் தம்பி வீடு தானா, அவர்களின் தயவில் தான் நான் இருக்கேனா? அவனுக்கு மூத்தவள் நான்.. சொந்த காலில் நிற்கிறேன். என்னை யார் பார்த்துக் கொள்ள வேண்டும். என் பிள்ளையை நானே பார்த்துக் கொள்வேனே.. தம்பி, அவன் மனைவி.. அவர்களை எல்லாம் சார்ந்து நான் ஏன் இருக்க வேண்டும்.

 அம்மா கூட இது அவள் பிறந்த வீடு என்று சொல்லாமல் மகன் பார்த்துக் கொள்வான் என்று சொல்கிறார். அப்போ இது என் பிறந்த வீடு கிடையாது என் தம்பி வீடு. ஒரு மாதிரி மனதுக்கு கஷ்டமாக இருந்தது. நேத்து திருமணம் முடித்து வந்த பெண் ஆர்த்தி. இது அவள் வீடு, இத்தனை வருடம் பிறந்து வளர்ந்த எனக்கு?…

அந்த வாரத்தில் ஒரு நாள் ஆதிரன் பள்ளியின் தாளாளரை பார்ப்பதற்காக அறைக்கு வெளியே நின்றிருந்தாள் பிரவீனா.

“என்ன பிரவீனா இங்க நிக்கிறிங்க…” மான்ஸியை பள்ளியில் விட வந்த மித்ரன் பார்த்து கேட்டான்.

இப்பொழுதெல்லாம் மேடம் சொல்லி அழைப்பதில்லை. அவள் மேல் ஒரு பெரிய மரியாதை வந்தபின், முன்னிருந்த கேலி, கிண்டல் கூட கிடையாது. மெதுவாக, அவளின் நட்பு வட்டத்துக்குள் நுழைந்தான். சாய் ஶ்ரீ அளவுக்கு இல்லாவிடிலும், ஓரளவுக்கு மரியாதையாக பழக ஆரம்பித்தாள் பிரவீனா.

“ஒன்னும் இல்ல சார். நேத்து ஆதிரனை, அவங்க மிஸ் அடிச்சி இருப்பாங்க போல.. ஸ்கூல் விட்டு வந்ததுல இருந்து, ஸ்கூலுக்கு போக மாட்டேன்னு ஒரே அழுகை.. ரொம்பவும் அடிச்சு மிரட்ட வேணான்னு சொல்ல வந்தேன் சார்”

“பிள்ளை சேட்டை பண்ணுனா லேசான கண்டிப்பு இருக்கட்டுமே பிரவீனா” என்றான் மித்ரன்.

“நீங்க சொல்றது சரிதான் சார். ஆனா, அது சேட்டை பண்ணா.. இவங்க அடிச்சது சேட்டை பண்ணதுக்கு கிடையாது. சாப்பிட லேட் பண்ணான்னு.. பொதுவாவே அத்து கொஞ்சம் மெதுவா சாப்பிடுற டைப் தான். வீட்ல இருக்கும் போது நான் ஊட்டி விடுவேன், ஸ்கூல்ல தான் அவன் தனியா சாப்பிடறது. மெதுவாத்தான் சாப்பிடுவான். சின்ன குழந்தை தானே, சாப்பிட லேட் பண்ணிட்டான்னு அடிச்சிருப்பாங்க போல…”

“சின்ன குழந்தைகள் மெதுவாதான் சாப்பிடும். அதுக்காக அடிக்கிறது தப்புதான் பிரவீனா. வாங்க, நானும் பார்த்து சொல்றேன்…”

“ஐயோ! நீங்க எதுக்கு சார். சின்ன விஷயம் தான். நான் பார்த்து பேசுறேன்..” தடுத்தாள் பிரவீ,

“கரஸ்பாண்டன் எங்க மாமாவோட பிரண்டு தான். நீங்க வெயிட் பண்ணா, இன்னும் ஒரு மணி நேரம் வெயிட் பண்ணனும். நான் சொல்றேன். வாங்க..” என்று மித்ரனே உள்ளே அழைத்து சென்றான்.

புவனேந்திரன் நண்பரான மதன்குமாருக்கு மித்ரனை நன்றாக தெரியும். அப்படி இருக்க, அவன் ஒரு பெண்ணோடு வந்ததும் ஆச்சரியமாக பார்த்தார்.

தன்னுடன் வேலை பார்க்கும் பெண் என்று அவளை அறிமுகம் செய்து ஆதிரனையும் அறிமுகம் செய்து, கொஞ்சம் கவனம் எடுத்து பார்த்து கொள்ள சொன்னான்.

அன்று இருவரும் சேர்ந்தே தான் அலுவலகம் வந்தார்கள். அதை பிரவீனா உணரவில்லை. அவளுக்கு அவன் செய்ததே பெரிய உதவி. ஆனால், மித்ரன் உணர்ந்தான். இதற்கு முன் பலமுறை பிள்ளைகளை பள்ளியில் விட வந்தாலும் பிரவீனா, அவள் வழியில் ஒதுங்கி செல்வாளே தவிர, ஒன்றாக வேலை பார்ப்பவர்கள் என்று அவனோடு சேர்ந்து எல்லாம் இருக்க மாட்டாள். இன்று நம்பிக்கையோடு அவனிடம் பழகுகிறாள். இது பெரிய விஷயம்.

அந்த வார இறுதியில் குலதெய்வம் கோயிலுக்கு போய் பொங்கல் வைக்க வேண்டும் என்று மகேஸ்வரி சொல்ல, பெரிய தலைவலி தான் பிரவீனாவுக்கு.. அவள் இந்த மாதிரி கூட்டம் கும்பலோடு சேர்ந்து நிற்க மாட்டாள். எப்படியும் யாரேனும் ஒருவர் அவளை சங்கடப்படுத்தி விடுவார்கள்.. இல்லை அவளாக சங்கடப்பட்டு ஒதுங்கும் இடமும் வந்து விடும். அதனாலே முடிந்த அளவு சொந்தம், விசேஷம் எதையும் தவிர்த்து விடுவாள். வேலைக்கு போவது, பிள்ளையை பார்ப்பது, வீட்டில் இருப்பது என்று தன் வட்டத்தை மிக சுருக்கிக் கொண்டாலும், இது அவள் வீட்டு விசேஷமாக இருக்க சில விஷயங்களை தவிர்க்க முடியாமல் போனது.

 இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு மகேஸ்வரியின் தாய் வழி ஊருக்கு சென்றார்கள். அங்கு தான் ப்ரீத்தி மாமியார் வீடும்.. எல்லாம் சொந்தம் தானே, பிரவீனாவுக்கு தாய் மாமன் வீடு. அவளும் ஓரளவுக்கு சகஜமாக இருந்தாள்.

 ஊருக்கு வந்ததும் குளித்துக் கிளம்பி கோவிலில் பொங்கல் வைக்க சென்றுவிட்டார்கள். பொங்கல் வைத்து முடித்ததும் சேவல் அறுப்பதால் உணவெல்லாம் கோவிலில் தான். ஆதிரனுக்கு பசி எடுக்கத் தொடங்கியது.

பொங்கல் பொங்கினால் தான் சாப்பாடு செய்ய ஆரம்பிப்பார்கள். இங்கு என்ன கிடைக்கும் என்பது போல் சுற்றுமுற்றும் பிரவீனா பார்க்க, பக்கத்தில் எங்கும் கடை இருப்பதாக தெரியவில்லை. பிரீத்தியின் கணவன் ஸ்ரீதர் கையில் பார்சலுடன் வந்த பின் தான் பிரவீனாவுக்கு கொஞ்சம் நிம்மதி. பிள்ளை பசி தாங்காதே..

 பிரவீனா மகனை அழைத்துக் கொண்டு தங்கை அருகில் வர,

“என்ன பிரவீ?..”

“ஸ்ரீதர் மாமா சாப்பாடு வாங்கி வந்து இருக்காங்களா ப்ரீத்தி?..” என்றதும், பிரீத்தி கணவனை பார்க்க,

அவன், ஐயோ! என்று தலையில் அடுத்து கொண்டான். அவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உண்டு. அவன் பிள்ளை, மனைவிக்கு மட்டும் ஐந்து இட்லி வாங்கி வந்திருந்தான். தன் பிள்ளையை நினைத்தவன், உண்மையில் ஆதிரனை மறந்து விட்டான்.

“நிஜமா சாரி பிரவீ.. நான் யோசிக்கவே இல்லை. ஆனா, யோசிச்சு இருக்கணும். அஞ்சு வயசு பிள்ளை எப்படி பசி தாங்கும்…” என்று மிகவும் சங்கட பட்டான்.

பிரவீ பெரிதாக எடுத்து கொள்ள வில்லை. தன் பிள்ளைக்கு அவர்கள் பார்க்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லையே?..

“அதனால என்ன மாமா. பையில பிஸ்கெட் இருக்கு, நான் கொடுக்குறேன். இனி சாப்பாட்டு வேலை ஆரம்பிச்சுடுவாங்க..” என்று நகர,

“பிரவீ பிளீஸ். எனக்கு கஷ்டமா இருக்கு. கால் மணி நேரம் தான், பைக்கல போயிட்டு வந்துடுவேன்..” என்று ஶ்ரீதர் சொல்ல,

“அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல மாமா. ஸ்நாக்ஸ் வச்சு இருக்கேன். நான் சமாளிச்சுப்பேன். நீங்க வேலையை பாருங்க..” என்றவள், சித்தி கையில் இருக்கும் இட்லியை மகன் பார்ப்பது தெரிந்தும், தனியே தூக்கி கொண்டு வந்து விட்டாள்.

“இன்னும் கொஞ்ச நேரம் தான் பட்டு. அம்மாச்சி பொங்கல் வச்சதும், அம்மா எடுத்துட்டு வந்து ஊட்டி விடுறேன். என் தங்க குட்டிக்கு பொங்கல் தான பிடிக்கும். அதுதான் இனிப்பா இருக்கும். இட்லி ரொம்ப காரம்..” என்று பிள்ளையை சரிகட்டி வைத்து இருந்தாள்.

சொந்த ஊர் என்பதால் நிறைய சொந்தங்கள் வந்திருக்க.. ஒரு ஓரமாக பிள்ளையை வைத்து கொண்டு அமர்ந்து விட்டாள். ஒன்றாக கலந்து நின்றால் அவளின் கல்யாண வாழ்க்கை தான் அலசப்படும். வேற என்ன?.. அவளுக்கு மீண்டும் ஒரு கல்யாணம் செய்வது பற்றி தான் பேச்சு இருக்கும்.

 பிரவீனாக்கு மகன் மட்டும் போதும்.. பெரிதாக இரண்டாம் திருமணத்தில் உடன்பாடு இல்லை. என் மகன் என் மகனாகவே இருக்கட்டும். அவ்வளவு தான்!..

பொங்கல் வைத்து இறக்கிய பின், சேவல் அறுக்கும் வேலை தொடங்க.. அங்கிருக்கும் கல்லில் மகனை அமர வைத்தவள் .

“அம்மா போய் உனக்கு பொங்கல் கொண்டு வாரேன்..” என்று அங்கு அடுக்கி இருந்த இலையை எடுத்து கழுவி, பொங்கல் பானையை நோக்கி நகர்ந்தாள்.

அப்போது தான் இறக்கி இருப்பார்கள் போல.. சூடாக சாப்பிட்டால் இன்னும் நன்றாக இருக்கும். கையில் கரண்டியை எடுத்து, மூடி இருக்கும் பொங்கல் பாத்திரத்தை திறக்க போக,

“என்ன பண்ற பிரவீ..” வந்தார் ஆர்த்தி அம்மா.

“தம்பிக்கு பசிக்கும் போல அத்தை. சின்ன பையன் பசி தாங்க மாட்டான். கொஞ்சம் பொங்கல் மட்டும் எடுத்துகிறேன்..”

“இன்னும் பூஜை முடியல பிரவீனா. பூஜை பண்ணாம எப்படி தர முடியும்..”

“பூஜை தொடங்க சொல்லுங்க அத்தை. தம்பி அப்பவே பசிக்குது சொன்னான்..”

“யாராவது பெரியவங்க தான் பூஜைக்கு கொடுக்கணும். உங்க அம்மா, உங்க அத்தையை வர சொல்லு..” என்றதும் புரிந்து கொண்டு நகர்ந்து விட்டாள்.

மகேஸ்வரியை தேடி போய் “அம்மா கொஞ்சம் பொங்கல் எடுத்து தாங்க.. தம்பிக்கு பசிக்குது…” என்றதும்,

“ சேவல் அறுக்கணும் பிரவீ. அத்தையை எடுத்து தர சொல்லு..” என்றார்.

“அத்தை கொஞ்சம் பொங்கல் இலையில கொடுங்க தம்பிக்கு..”

“ பூஜை பண்ணனும்.. பொண்ணு மாப்பிள்ளை தான் முன்னாடி நிக்கனும். எங்க உன் தம்பியை இங்கே? அவனை வர சொல்லு..” என்றதும்,

நகர்ந்து விட்டாள் பிரவீனா. தம்பி எங்கே என்று பார்க்க, அவனை காணவே இல்லை. அவளாக திரும்ப போய் எடுத்தால் எதுவும் சொல்வார்களோ என்ற எண்ணமும் இருக்க, மீண்டும் மகன் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள்.

மகன் பாவமாக தாயை பார்க்க, இனி முடியாது என்று எழுந்து விட்டாள்.

“அத்து செருப்பு போடு, அம்மா கடைக்கு கூட்டிட்டு போறேன்..” என்றதும் பிள்ளை எழுந்து கொண்டது.

மெல்ல நடந்து கோவிலை விட்டு வெளியே வந்தவர்கள், கடை தென்படுமா என்று பார்க்க ஆரம்பித்தாள். ஊரை விட்டு தள்ளி இருக்கும் கோவில் அது… கோவிலில் வேற வேற ஆட்களும் இருக்க, கடை எவ்வளவு தூரம் என்று விசாரித்தாள். ரொம்ப தூரம் என்றால் நடந்து செல்ல மாட்டான்.

“சின்ன பெட்டி கடைன்னா முக்குல தான் இருக்கு.. பேக்கரி, ஹோட்டல் வேணும்ன்னா மெயின் ரோடு தான் போகணும். அது அரை மணி நேரம் ஆகும்..” என்று ஒருவர் சொல்ல,

பிரவீனா முடிவு செய்து கொண்டாள். தன் சிரமம் பார்க்காமல் பிள்ளையை தூக்கி கொண்டு கூட சென்று விட வேண்டும். பதினொரு மணியாக போகுது. பிள்ளை அமைதியாக இருப்பதே பெரிது என்று நினைத்தவள், மகனை தூக்கி கொண்டு நடக்க,

  “ஏம்மா!.. இந்த கோயிலை சுத்தி ஆளுக பொங்கல் வைக்கிறதும், கிடா வெட்டுறதுமா இருக்காங்க. சாமி சோறு சாப்பிட்டாம நடையை கட்டுறவ..” என்றார் ஒரு அம்மா.

“சாமி சோறு எங்களுக்கு கொடுத்து வைக்கலம்மா..” என்றவள், மகனை தோளில் போட்டு, சேலை முந்தியை எடுத்து மகனுக்கு போர்த்தி விட்டாள். நல்ல வெயில்… வேகமாக நடையை எட்டி போட,

 “இந்தாம்மா நில்லு.. எங்க வீட்டு வேலை எல்லாம் முடிஞ்சுருச்சு.. சாப்பாடு நான் கொண்டு வாரேன். இந்த வெளியிலுல பிள்ளையை தூக்கி எம்புட்டு தூரம் நடப்ப..”

“அது பரவாயில்லை அம்மா. இன்னும் உச்சி வேளை பூஜை ஆரம்பிக்கல.. நீங்க பூஜைக்கு கொடுங்க. நான் பார்த்துப்பேன்” என்றதும்,

“அட நில்லும்மா.. வயித்து பிள்ளைகாரிக்கும், கை பிள்ளைகாரிக்கும் சாப்பாட்டுக்கு சாங்கியம் பார்க்க கூடாது. உம் பிள்ளை பசியோடு இருக்கு, சாமி சோறு நான் தாரேன். யார் கொடுத்தா என்ன?.. கோவில் எல்லையில வச்சது தான். பூஜை பண்ணனும்ன்னு அவசியம் இல்லை. சாமி எற்கும்…” என்றவர், வாழ இலையில் பொங்கல், சாப்பாடு என்று எல்லாம் எடுத்து வந்து தர, மகனை இடுப்பில் வைத்து வாங்கி கொண்டாள்.

அங்கிருக்கும் ஒரு மரத்தடியில் அமர்ந்து பிள்ளைக்கு ஊட்டி விட, “என்ன பிரவீ.. கொஞ்ச நேரம் காத்திருக்க கூடாதா?.. சாமி காரியம் முன்ன, பின்ன தான் ஆகும். அடுத்த ஆளுக கிட்ட சாப்பாடு வாங்கி, எங்களை அசிங்க படுத்துற…” என்றார் மகேஸ்வரி.

“அம்மா பிளீஸ், எதுவும் சொல்லாத.. கோவில்ல கொடுத்தது தான, எம் மகன் பசியில இருக்கான்”

“வெளி இடத்துல நம்ம சௌகரியம் பார்க்க கூடாது பிரவீ.. கொஞ்சம் அப்படி, இப்படி தான் இருக்கும். புதுசா கல்யாணம் ஆனவங்க, சாமிக்கு வச்சுட்டு அப்புறம் சாப்பிட நினைச்சது என்னை தப்பு?.. பத்து நிமிசம் ஆகுமா”

“நீங்க சொன்னதும் தப்பு கிடையாது. அன்னதானத்துல சாப்பிடறதும் தப்பு கிடையாது” முடித்து கொண்டு மகனோடு சாப்பிட தொடங்கி விட்டாள். அங்கு எதிலும் கலந்து கொள்ள வில்லை. தனியாக மகனோடு சென்று சாமியை பார்த்தாள்.

முன்பும் இந்த கோவிலுக்கு ஒரு முறை வந்திருக்கிறாள். அப்போது இளங்கோ இருந்தான். பிரவீ, கோவிலுக்கு உள்ளே எல்லாம் வர வில்லை. சாமியை பார்க்க தான் வந்தது. அப்போது மாசமாக இருந்தாள்.

 “கிடவெட்டு நடக்குது. வயித்துல பிள்ளையை வச்சுகிட்டு போக கூடாது.நீ வீட்டுக்கு போ பிரவீ.. சாப்பாடு நான் கொண்டு வாரேன்..” என்று திலகா அத்தை சொன்னதும்,

கணவனை பார்த்தவள், “மாமா, நீங்க மட்டுமாவது போய் சாமி கும்பிட்டு வாங்க. கோவில் வரைக்கும் வந்து, சாமி பார்க்காம போக கூடாது”

“வேணாம் பிரவீ.. நீயில்லாம நான் மட்டும் போக வேணாம். பிள்ளை நல்லபடியா பிறக்கட்டும். அப்புறம் குடும்பமா வந்து சாமியை பார்ப்போம்..” என்றான்.

அன்று கோவில் எல்லையை கூட தொடாமல், திரும்பி சென்றவர்கள் தான். இன்று தான் சாமியை பார்க்கிறாள். தன்னை அறியாமலே கண் கலங்கியது. குடும்பமாக வந்து சாமியை பார்ப்போம் என்றவன், இன்று சாமியோடு சாமியாக கலந்து விட்டான். புருசன், பிள்ளையோடு வர நினைத்தவள். இன்று ஒத்தையில் வந்திருக்கிறாள்.

  பிரவீனாவுக்கு எந்த வேண்டுதலும் இல்லை. சாமியை இரு கை கொண்டு வணங்கவும் இல்லை. கண்ணீர் பொங்கும் விழிகளோடு பார்த்து மட்டுமே நின்றாள்.

“எத்தனை கஷ்டத்தையும் கொடு. ஆனால், உயிரோடு மட்டும் விட்டு விடு ஆண்டவா… எங்களை குடும்பமாக வாழ வை..”என்று அழுது, கடவுளிடம் தவம் கிடந்தது நினைவு வந்தது.

“உங்க கிட்ட கேக்குறதுக்கு என் கிட்ட எந்த வேண்டுதலும் இல்லை. எல்லாத்தையும் இழந்தவ நான்.. நீங்க மட்டும் தான் கதின்னு நின்ன போதும் என்னை கை விட்டீங்க.. இதுக்கு மேல எனக்கொரு கஷ்டத்தை உங்களால கொடுக்கவே முடியாது. என்னை காப்பதுன்னு நான் வந்து நிக்கவே மாட்டேன். என் உயிரை எடுக்க நினைத்தாலும், எடுத்துக்கோங்க. என் புருசன் உயிரையே தூக்கி கொடுத்துட்டு நிக்கிறேன். என் உயிர் எனக்கு பெருசில்ல.” என்று மனதில் நினைத்தவள், மகன் கை பிடிக்க,

  பிள்ளை இரு கை கூப்பி வேண்டி நின்றது. அவன் தாத்தா சொல்லி கொடுத்த பழக்கம்.

“அத்து நீ சாமிகிட்ட என்னடா வேண்டிகிற.. அவ்வளவு பெரிய மனுசனா நீ..” என்று தாய் கேட்டதும்..

“ம்ம்ம்.. எங்க அம்மாவா காப்பாத்துங்கன்னு சாமி கிட்ட கேட்டேன்..” என்று பிள்ளை சொன்னதும், கன்னம் தாண்டி கண்ணீர் வழிந்தது.

“உனக்காகவாது, கடவுள் கொஞ்சம் கருணை காட்டி இருக்கலாம் பட்டு..” என்றவள், பிள்ளையை தூக்கி கொண்டாள்.

இன்னும் மூன்று நாட்களுக்கு அங்கு தான். மதிய உறக்கம் காணாமல் பிள்ளை சிணுங்க,

“அத்தை தம்பிக்கு தூக்கம் வருது. எங்க தூங்க வைக்க..” என்று அத்தை திலகாவிடம் கேட்க.

“உள்ள ரூம்ல கட்டில் இருக்கும். அங்க தூங்க வை பிரவீ.. நீயும் கூட உறங்கு..” என்று நகர,

பிள்ளையோடு சென்று படுத்து கொண்டாள். அடுத்தடுத்து மக்கள் உறங்க ஆயத்தமாக.. ஶ்ரீதருக்கு அறையில் பிரவீனா படுத்திருப்பதே தெரியாது. கைலி மாற்ற உள்ளே வந்தவன், அவள் உறங்குவதை கண்டு சங்கடப்பட்டு பட்டு வெளியே வர,

 “என்னங்க..” என்று வந்தாள் பிரீத்தி.

“என் கைலி எடுத்து கொடு பிரீத்தி..” என்று கணவன் நிக்க,

“உள்ள போய் தூங்க வேண்டிய தான. ஏன் வெளிய நிக்குறீங்க..” என்றவள் அறைக்கு செல்ல,

அங்கு பிரவீனா மகனோடு படுத்திருப்பதை கண்டு, தன் அம்மாவிடம் சென்றாள்.

“அம்மா…”

“என்னடி”

“அங்க ரூம்ல அக்கா உறங்குறா.. அவர் வெளிய நிக்குறாரு..” என்றதும், அங்கே வந்தார் மகேஸ்வரி.

சின்ன மகளும், மருமகனும் அறைக்கு வெளியே நிக்க, உள்ளே தாயும், மகனும் நல்ல உறக்கத்தில்.. வேகமாக உள்ளே வந்தவர்,

“பிரவீ.. அடியே எழுந்திரு..” என்று முதுகில் தட்டி எழுப்ப,

“அத்த, ஏன் பிரவிய எழுப்புறீங்க..” என்று ஶ்ரீதர் சொல்லும் போதே எழுந்து கொண்டாள் பிரவீனா.

“என்னம்மா…” தூக்க கலக்கத்தில் புரியாமல் கேட்க.

“கொஞ்சமாவது உனக்கு அறிவு இருக்கா.. புருசன், பொண்டாட்டி இருக்குற ரூம்முகுள்ள நீ எதுக்கு வந்து படுத்து இருக்க.. அவங்க எங்க போய் உறங்குவாங்க. நீ எங்களோட வந்து படுத்தா ஆகாதா.. ஹால்ல தான் அவ்வளவு இடம் இருக்கே.. வா, வந்து வெளிய தூங்கு..” என்று அதட்ட,

நன்றாக விழித்து கொண்ட பிரவீனா எழுந்து நின்றாள். அவள் அப்படியெல்லாம் நினைக்கவே இல்லையே…

“உன் தங்கச்சியும், தங்கச்சி புருசனும் இருப்பாங்கன்னு தெரிய வேணாம்.. இங்க எதுக்கு வந்த நீ.. வெளி இடத்துக்கு வந்தா, கொஞ்சம் அனுசரிச்சு தான் இருக்கணும்..” என்று மகேஷ் சொல்லும் போதே, பிள்ளையை தூக்கி கொண்டாள் பிரவீனா.

புருசன், பொண்டாட்டி தான் உறங்குவார்கள் என்று அவளுக்கு என்ன தெரியும். பிள்ளையை தூக்கும் போது கண் கலங்கியது. அப்போது தான் உள்ளே வந்த திலகா,

“என்ன எழுந்துட்ட பிரவீ.. பிள்ளையை ஏன் தூக்குற..” என்றதும்,

“அவ எங்களோட வந்து படுக்கட்டும் மதினி..” என்று மகேஸ்வரி சொல்ல,

“ஏன்? குட்டி பையன் தரையில படுக்க வைக்க வசதி படாது. அத்தோட பிரவீ ஆபரேசன் பண்ண உடம்பு, தரையில முதுகு வலிக்கும்..”

“அப்ப சின்ன மகளும், மருமகனும் எங்க உறங்க போவாங்க.. இது அவங்க உறங்கட்டும்..” என்று சொல்ல,

என்ன என்று அதிர்ந்தவர். மகனை பார்த்து என்னடா இது என்றார்.

“எனக்கும் ஒன்னும் தெரியலமா. கைலி எடுக்க தான் பிரித்தியை வர சொன்னேன்..” என்றான் மகன்.

“என்ன மகேஷ் பேசுற.. கோவிலுக்கு வந்த சொந்தம் வீடு முழுக்க இருக்கு.. உம் மகளும், மருமகனுக்கும் தனி ரூம் தான் அவசியமா? அதுவும் படுத்து இருக்குற பிள்ளையை எழுப்பி வெளிய போக சொல்ற.. அவங்க வீட்டுல அவங்க புருசன், பொண்டாட்டியா தனியா தான இருக்காங்க. பொதுவில் அனுசரிக்க உம் சின்ன மகளுக்கு தெரியாது. புதுசாவா கல்யாணம் முடிச்சு இருக்காங்க.. இது அவ வீடு, வந்த எல்லாரையும் அவ தான் பார்க்கணும். ஆளுக்கு மொத ரூம்முக்கு வந்து நிக்கிற..” என்று மருமகளை சத்தம் போட்டவர்,

 “பிரவீ.. இவங்க கொஞ்சமும் கூறு இல்லாத மனுசங்க.. நீ போய் தூங்கு..” என்று அத்தை சொன்னதும்,

“வேணாம் அத்தை. தனியா இருக்கேன் எங்க படுத்தா என்ன?.. எப்பவும் வீட்டுக்கு விருந்தாளி வந்தா, அவங்க சௌகரியத்தை தான் ஃபர்ஸ்ட் பார்ப்போம். அப்படி நினைச்சு தான் என்னை படுக்க சொல்றீங்ன்னு வந்தேன். மற்றபடி புருசன், பொண்டாட்டி உறங்குற இடத்துல எனக்கு என்ன வேலை?…”என்றவள், பிள்ளையோடு நகர,

“யார் என்ன சொன்னா என்ன? சின்ன பிள்ளையை தரையில போடாத..”என்றாலும் எதையும் கேட்க வில்லை பிரவீனா.

தான் கொண்டு வந்திருந்த நாலு சேலையும் மொத்தமாக மடித்து, பிள்ளையை ஒரு ஓரமாக படுக்க வைத்தவள், தானும் உடலை குறுக்கி படுத்து கொண்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!