Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நிறம் பாராத காதல்.

நிறம் பாராத காதல் 25 2

✨நிறம் பாராத காதல்✨

✨அத்தியாயம் – 25(2)

அழகி தான் வைதேகி என்ற உண்மை அறிந்த பிறகு ரணதீரனால் அவனின் உணர்வுகளை விவரிக்க வார்த்தை இல்லாமல் போனதால் இனியும் தாமதிக்க எண்ணம் இல்லாமல் வைதேகியின் நெற்றியில் குங்குமத்தை வைத்தான்.

அவனின் இத்தகைய செயலில் வைதேகியின் இதயத்துடிப்பு இயல்பைவிட வேகமாய் துடித்தது.



Advertisement

காதல் எவ்வளவு விசித்திரமானது!
அழகி என்ற பெயரில் அவன் பார்த்து ரசித்த வைதேகியை அந்த இயற்கையே இன்று அவனிடம் சேர்த்து வைத்தது.

தெப்பக்குளத்தின் அருகே நின்று இருந்த வைதேகியை இமைக்காமல் பார்த்து ரசித்தவன்,”நீ ரொம்ப அழகா இருக்க வைதேகி” என்றான்.

படிக்கட்டிலிருந்து அவனை நோக்கி நடந்து வந்தவள்,”என்னிடம் அப்படி என்ன ரொம்ப அழகா இருக்கு தீரா?” என்று புருவம் உயர்த்தி அவனைக் கேள்வி கேட்டாள்.

Advertisement

“தனித்தனியா எனக்குச் சொல்லத் தெரியல! ஆனா உன்னோட கூந்தல், உன்னோட அடர்ந்த புருவம், அளவேடுத்து ஒட்டியது போல உன் கண் இமைகள், எப்படிப்பட்ட வீரணையும் வீழ்த்திடும் உன் விழிகள், கூர்மையான நாசி, எனக்கு மீண்டும் உயிர் கொடுத்த உன் சிவப்பான இதழ்கள்,பொம்மை மாதிரி மெல்லிய இடை, இப்படி எல்லாமே உனக்கு அழகு தான்” என்றவனின் வார்த்தையில் வைதேகியின் வதனத்தில் நாணம் குடியேறியது.

Advertisement

“தீரா…நீங்க என்னை ரொம்ப தான் புகழுறீங்க! ஆனா இப்போ எதெல்லாம் நீங்க எனக்கு அழகா இருக்குனு சொல்றிங்களோ! அதெல்லாம் காலப்போக்கில் மாறிடும் தீரா” என்ற வைதேகியை கேள்வியாகப் பார்த்தான் ரணதீரன்.

“ஆமா தீரா… எனக்கு வயசாகும்போது கூந்தல் உதிர்ந்திடும், இந்தக் கண்ணுக்கு மூக்கு கண்ணாடி போட வேண்டியது வரும், அப்புறம் ரொம்ப முக்கியம் இந்த மெல்லிடை எல்லாம் உங்க குழந்தையை நான் சுமந்து பெத்து எடுத்ததும் காணாமல் போய்விடும். அதனால் பாதியில் நம்மளை விட்டுப் போகும் எதுவும் நிரந்தரமான அழகு இல்லை” என்ற வைதேகியின் வார்த்தையில் உள்ள உண்மையை உணர்ந்தான் ரணதீரன்.

“ஆனா எது நிரந்தரம் தெரியுமா?” என்றவள் சட்டென்று அவன் இதயத்தில் தலை வைத்து, “நம்ம எண்ணங்கள் தான் அழகு. யார் எப்படி மாறினாலும் நம்மளோட எண்ணங்கள் மட்டும் நல்லதா இருந்தால் போதும் தீரா” என்றவளை ரணதீரனும் அன்பாகக் கட்டிக்கொண்டான்.

Advertisement

இருவரும் சுற்றம் மறந்து இயற்கை காட்சியினை ரசித்த வண்ணமாகத் தெப்பக்குளத்தின் படிக்கட்டில் அமர்ந்து இருந்தார்கள்.

“இருந்தாலும் இதெல்லாம் கனவு மாதிரி தான் இருக்கு” என்றான் ரணதீரன்.

“சில கனவுகள் நினைவானால் நல்லா தான் இருக்கு!” என்று கண்கள் சிமிட்டினாள் வைதேகி.

“ஆனால் என்னோட கனவு கூட நினைவாகும்னு நான் நினைக்கவே இல்லை! அழகியை நான் மீண்டும் சந்தித்து என்மீது எந்தத் தவறும் இல்லை என்று சொல்ல நினைத்தேன். ஆனா அந்த அழகியே என் வைதேகியா வந்து என்னை உயிருக்கு உயிராகக் காதலிப்பாள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை” என்றான்.

“எதிர்பாராத ஆச்சிரியங்கள் நிறைந்தது தானே வாழ்கை” என்றவள் அவன் கரங்களில் தன் முகம் புதைத்துச் சிரித்துக்கொண்டாள்.

அவளது அருகாமையில், ரணதீரனின் இதயம் மெழுகாய் உருகியது.
அவன் விழிகளில்க்கூட புன்னகை
மிதந்து, “நீ எப்போ என்னைக் கல்யாணம் பண்ணிக்கப்போற?” என்றான்,
குழந்தைமுகமாக.

அவனின் கேள்வி வைதேகிக்கு ஆச்சரியத்தை அளிக்க,
“நம்ம கல்யாணம் ரொம்ப
சீக்கிரமா நடக்கக் கூடாது. நாளைய மறுநாள் நடந்தால் போதும்” என்றாள் கண்களைச் சிமிட்டி.

அவளது மூக்கை பிடித்து, சத்தமாகச் சிரித்தவன்,
“அதுவரை நான் காத்திருக்க மாட்டேன்.
இன்னிக்கே வீட்டுக்குப் போய்,
பெரியவுங்க சம்மதத்தோடு நாளைக்கே நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்!”
என்று உறுதியாய் சொன்னான்.

“தீரா! உண்மையாகவே நாளைக்கு நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா!?” என்ற
வைதேகியின் கேள்விக்கு “சத்தியமா பண்ணிக்கலாம்” என்றான்.

“நம்ம கல்யாணம் நடக்கணும் என்றால் நீங்க எனக்கு ஒரு சத்தியம் பண்ணி கொடுக்கணும்” என்றாள் வைதேகி.

“என்ன சத்தியம்!?” என்று புரியாமல் கேட்டான்.

“நம்ம திருமணத்திற்கு பிறகு, ஏன்!? நாம் வாழும் இறுதி மூச்சு வரை நம் காதலை நீங்கள் சந்தேகப்படக் கூடாது” என்றாள்.

“நீ என்ன சொல்ற!? நான் ஏன் சந்தேகப்பட போறேன்?” என்று கேட்டான் ரணதீரன்.

“ஏன் எதுக்குன்னு எனக்குச் சொல்லத் தெரியல தீரா! ஆனா இந்தக் கோவிலுக்கு வர வரைக்கும் நீங்க என் காதலை ஏற்றுக்கொள்ளவே இல்லை. உங்கள் மனதில் என்மீது காதல் இருக்குனு எனக்குத் தெரியும். ஆனால் நீங்கள் ஏன் அதை வெளிப்படையாக ஒத்துக்கவே இல்லை?” என்று கேட்டாள் வைதேகி.

அவள் கேள்விக்கு விடைக்கொடுக்க அவன் தயங்கினான்.

“எனக்குத் தெரியும். என்னுடைய நிறமும், நீங்கெல்லாம் அழகுன்னு சொல்ற இந்த நிரந்தரம் இல்லாத வேஷமும் தான் உங்க காதலை என்னிடம் சொல்லத் தயங்கியது” என்ற வைதேகியின் வார்த்தையைக் கேட்டு ரணதீரன் தலை குனிந்தான்.

“ஆனால் எனக்கு இந்த நிறத்திலோ இல்லை அழகிலோ எந்த உடன்பாடும் இல்லை தீரா. நல்ல எண்ணம் தான் எனக்கு முக்கியம். நான் என் தீரனின் உயர்ந்த குணத்தை தான் காதலிக்கிறேன். நீங்களும் என் மனசை காதலித்தால் மட்டுமே நம்ம திருமணம் பண்ணிக்கலாம்,

அதைத் தவிர்த்து இப்பொழுது திருமணத்தைச் செய்து கொண்டு, நம் எதிர்கால வாழ்க்கையில் அழகையோ நிறத்தையோ வைத்து நமக்குள் பிரச்சனை வரக் கூடாது. அந்த ஒரு வாக்குறுதியை மட்டும் நீங்கள் எனக்குக் கொடுத்தால் நீங்கள் சொன்ன மாதிரி நாளைக்கு இல்ல! இதோ இந்த நொடியே நீங்க என் கழுத்துல மாங்கல்யத்தை கட்டினால் கூட நான் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கிறேன்” என்று தன் மனதில் உள்ள எண்ணங்களை வெளிப்படையாக உரைத்தாள் வைதேகி.

அவள் வார்த்தைகளில் உள்ள எதார்த்தத்தை மனதார உணர்ந்த ரணதீரன் வைதேகியின் கரங்களை நம்பிக்கையோடு பற்றிக்கொண்டான்.

“வைதேகி! என் நிறமும் அழகும் உனக்கு முக்கியம் இல்லை. உனக்குத் தேவை என் காதல் மட்டும் தான். அந்தக் காதலை நாம் வாழும் கடைசி மூச்சி வரை உனக்கு அள்ளிகொடுக்க நான் காத்து இருக்கிறேன்” என்று ரணதீரன் வாக்குறுதி கொடுத்ததும், காதலாக அவன் கரங்களில் தன் இதழ்களைப் பதித்தாள் வைதேகி.

இருவரும் பசியை மறந்து காதலுடன் பேசிக்கொண்டு இருந்த தருணம் ரணதீரனின் கைபேசிக்கு அவன் மாமன் மாறனிடமிருந்து அழைப்பு வந்தது.

“ஹலோ மாமா” என்ற ரணதீரனிடம், “மச்சான் இன்னுமா கோவில்ல இருக்கீங்க? சீக்கிரமா வீட்டுக்கு வாங்க மச்சான்” என்றான் மாறன்.

“நாங்க கோவிலில் இருக்குறது உங்களுக்கு எப்படி தெரியும்?” என்ற ரணதீரன் கேள்விக்கு, “நாங்க இப்போ வைதேகியின் தாத்தா வீட்டில் தான் இருக்கோம்” என்றான் மாறன்.

“என்ன மாமா சொல்றிங்க! நீங்க ஏன் இங்க வந்திங்க” என்று ரணதீரன் கேட்டதும், “வைதேகியை உனக்குப் பொண்ணு கேக்க தான் வந்தோம் மச்சான். நீ சும்மா போன்லயே கேள்வி கேக்காம சீக்கிரமா கிளம்பி இங்க வா” என்ற மாறன் கைபேசி இணைப்பைத் துண்டித்தான்.

“என்ன தீரா! யாரு போன்ல?” என்ற வைதேகியிடம் மாறன் சொன்னதை ரணதீரன் தெரிவித்ததும், வைதேகியின் முகத்தில் வெக்கம் குடிகொண்டது.

“என்ன நீ! எனக்கே தெரியாம என் அம்மாவும் என் மாமாவும் உன்னைப் பொண்ணு கேக்க உன் தாத்தா வீட்டுக்கு வந்து இருக்காங்கன்னு சொல்லுறேன்!நீ என்னடானா ஆச்சிரியப்படாம வெக்கப்படுற?” என்று கேட்டான் ரணதீரன்.

“பின்ன வெக்கப்படாம என்ன பண்ணுவாங்க! நானே என் காதலை சொன்னதால உங்களுக்குத் தான் எந்தப் பீலிங்ஸும் என் மேல வரல. எனக்காவது எதாவது வரட்டுமே” என்று உதட்டைச் சுழித்தாள் வைதேகி.

“எனக்கு! ஆமா எனக்கு இதெல்லாம் வராது தான். ஆனா உன்கிட்ட இருந்து சீக்கிரமா கத்துக்குறேன்” என்று அசடு வழிந்த ரணதீரனின் பதிலில் மேலும் அவனை முறைத்தாள் வைதேகி.

“ஏன் முறைக்கிற, சில விஷயத்துல ஆண்கள் பெண்களிடம் கத்துக்குறது தப்பு இல்லையே” என்று ரணதீரன் கேட்டதும்,
“நான் நடத்துற பாடத்தை ஒழுங்கா கத்துக்காட்டி நான் பனிஷ்மென்ட்
தருவேன் பரவாயில்லையா!”என்று புருவம் உயர்த்தி கேட்டாள் வைதேகி.

“அதெல்லாம் நான் ஒழுங்காவே கத்துப்பேன், இப்போ வா வீட்டுக்குப் போகலாம்” என்ற ரணதீரனுடன் மீண்டும் அம்மனை வணங்கியப்படி தன் தாத்தா வீட்டுக்குச் சென்றாள் வைதேகி.

ரணதீரனும் வைதேகியும் ஜோடியாக வீட்டுக்குள் நுழைந்தவர்களை, இவர்களுக்கு முன்னதாகவே அங்கே வீற்றிருந்த ரணதீரனின் குடும்பம் மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள்.

“என்ன மச்சான் உன் முகத்துல ஏதோ புது கலை தெரியுதே!” என்று ரணதீரனை பார்த்து மாறன் கேட்டதும், “என்ன மாப்புள மருதாணி மெட்டி யூஸ் பண்றிங்களா?” என்று கீதா கேட்க,
“அத்த! அது மருதாணி இல்லை
முல்தானி மெட்டி”என்றாள் மாயா.

“அம்மா…ஏதோ கொஞ்ச நாளா என் மச்சான் அமைதியா இருக்கான்னு மறுபடியும் அவனைச் சொரிஞ்சி விடாதீங்க” என்று மாறன் தன் அம்மா காதைக் கடித்தான்.

“என்ன அம்மா! என்கிட்ட சொல்லாம நீங்க எல்லாம் எப்போ இங்க வந்திங்க?” என்று ரணதீரன் வேதநாயகியிடம் கேக்க,
“எப்போ வந்தோம்னு கேக்காத ராணா,
ஏன் வந்தோம்னு கேளு”என்றாள் மாயா.

“தம்பி! எங்க பேத்தி சித்ராவை உங்களுக்குப் பொண்ணு கேட்டுத் தான் உங்க அம்மா,அத்தை,அக்கா, மாமான்னு எல்லோரும் வந்து இருக்காங்க” என்று வைதேகியின் தாத்தா செண்முகம் சொன்னதும், “எங்க பேத்தியை உங்களுக்குப் பிடித்து இருக்கு தானே! ” என்று கேட்டார் வள்ளி.

வைதேகியின் பாட்டி கேட்ட கேள்விக்கு ரணதீரன் என்ன பதில் சொல்லப் போகிறான் என்று வேதநாயகி உள்ளுக்குள் பயந்து இருக்க, “அத்தை! உங்க பையனுக்கு என்னை விடவே வேற ஒரு பெண்ணைத் தான் ரொம்ப பிடிக்குதாம். பேசாம நீங்க அவளையே உங்க மகனுக்குக் கல்யாணம் பண்ணி வையுங்கள்” என்றாள் வைதேகி.

வைதேகியின் வார்த்தையைக் கேட்டு அங்குள்ள அனைவருக்கும் நெஞ்சில் தீயை அள்ளிப் போட்டதை போல உணர்ந்தார்கள்.

“என்ன சொல்லுற வைதேகி, அவன் அன்னைக்கு மயக்கத்துல ஏதோ ஒரு பொண்ணு பேரைச் சொன்னானே!அவளைப் பற்றியா நீ சொல்லுற!?” என்று பொறுமையாகக் கேட்டாள் மாயா.

“ஆமா அண்ணி” என்ற வைதேகி, “தீரா! இத்தனை வருஷம் நீங்க எந்தப் பெண்ணை மறக்க முடியாமல் இருந்திங்களோ அந்தப் பெண்ணையே கல்யாணம் பண்ணிக்கோங்க” என்ற வைதேகி வராத கண்ணீரை துடைத்துக்கொண்டு சோபாவில் சென்று
அமர்ந்துக்கொண்டாள்.

“என்ன? வேற பொண்ணா! டேய் ராணா என்னடா இதெல்லாம்? வைதேகி என்ன சொல்லிக்கிட்டு இருக்காள்? இங்க பாரு ராணா! இந்த ஜென்மத்துல எனக்கு மருமகளுன்னு ஒருத்தி வந்தா அது என் வைதேகியா மட்டும் தான் இருக்கனும்” என்ற வேதநாயகியின் கோவத்தை பார்த்து வைதேகி சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தாள்.

“மச்சான்! என்ன நீ? உன்னை நேசிக்கிற என் தங்கச்சியை விட்டுட்டு வேற யாரையோ ஏன் நீ கல்யாணம் பண்ணனும்?” என்ற மாறனும் உண்மை தெரியமால் ரணதீரனை வசைப்படினான்.

“இங்க பாரு தம்பி! நீ மட்டும் வைதேகியை தவிர்த்து வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டா, அப்புறம் நான் உன் பொண்டாட்டி கழுத்துல நீ கட்டப் போற தாலிக்கு நாத்தனார் முடிச்சு போடவே மாட்டேன்” என்று கோவமாகச் சொன்னாள் மாயா.

“ஆமா ஆமா நான் கூட நீங்க வைதேகியை தவிர்த்து வேற யாரையாவது கல்யாணம் பண்ணினா! என் இன்ஸ்டா ஸ்டேட்டஸ்ல உங்க போட்டோஸ் போடவே மாட்டேன்”என்று கீதாவும் சொல்ல ரணதீரனின் கோவப்பார்வை வைதேகி மீது பதிந்தது.

“மாமா… எனக்கு வைதேகி அத்த தான் வேணும், இல்லாட்டி நானு உன் பேச்சு கா” என்று தன் வலது கைக்கட்டைவிரலை வாயில் வைத்து ரணதீரன் முன்னே காட்டிய சிறுமி மயிழினியும், ஓடிச் சென்று வைதேகி மடியில் அமர்ந்துக்கொள்ள, வைதேகியின் விழிகள் ஆனந்த கண்ணீரால் நிரம்பியது.

“முடிஞ்சுதா! எல்லோரும் பேசி முடிச்சிட்டீங்களா? இப்போ நான் பேசலாமா” என்ற ரணதீரன், வேகமாக வைதேகியின் அருகே சென்றவன் அவளை உரிமையாகத் தன் வசம் அணைத்து,

“நான் சின்ன வயசுல ஆசைப்பட்ட அந்த அழகியே இந்தப் பேரழகி சித்ரவைதேகி தான்” என்ற ரணதீரனின் வார்த்தையில் வைதேகி அனைவரையும் பார்த்து அழகாய் சிரித்துக்கொண்டாள்.

“என்ன! என்ன ராணா சொல்ற நீ!?” என்று மாயா புரியாமல் கேட்க, தன் பதினெட்டு வயதில் ரணதீரன் அழகியைச் சந்தித்த நிகழ்வைச் சொல்லத் தொடங்கியவன், சற்று முன் கோவிலில் வைதேகி தான் அழகி என்ற உண்மையை அறிந்துகொண்டதையும் சொல்லி முடித்தான்.

“என்ன ராணா சொல்லுற! இதெல்லாம் என்னால நம்பவே முடியலையே” என்று மாயா சொல்ல, “அண்ணி! உங்க தம்பி எஎன்னோட பதிமுன்று வயதிலேயே என்னை மறைந்து இருந்து சைட் அடிச்சு இருக்காரு” என்ற வைதேகி, அவள் பெட்டியில் இருந்த வைதேகியின் சிறு வயது புகைப்படங்களை எடுத்து அனைவரிடத்திலும் காட்டினாள்.

சிறு வயதில் ரணதீரனை ஈர்த்த அழகியின் புகைப்படங்களைப் பார்த்த ரணதீரனுக்கும் மகிழ்ச்சி ஏற்பட்ட தருணம், “ஓ! அப்போ என் மச்சானுக்கும் என் தங்கச்சிக்கும் தான் பொருத்தமுன்னு அந்த இறைவன் அன்னைக்கே முடிவு பண்ணிட்டானா!” என்று மகிழ்ச்சியுடன் சொன்னான் மாறன்.

“என்னமா சித்ரா நீ! நான் கூட ராணா தம்பிக்கு வேற யாரையோ பிடித்து இருக்குனு நீ சொன்னதும் ஒரு நிமிஷம் பயந்தே போயிட்டேன்” என்று வள்ளி சொன்னதும், “நான் அப்படி சொல்ல வேற ஒரு காரணம் இருந்துச்சு பாட்டி” என்றாள் வைதேகி.

“என்ன மா! வேற என்ன காரணத்துக்காக இப்படி எங்ககிட்ட பொய் சொன்ன?” என்று கீதா கேட்டதும், “ம்… அன்னைக்கு அந்த விக்ரம் கூடத் தீரா என்னைப் போகச் சொல்லும்போது நீங்க யாருமே என்னை ஒரு வார்த்தைக்கூட எங்களை விட்டுப் போகாதன்னு சொல்லவே இல்லை, அதான் இப்போ உங்க வாயாலயே வைதேகி தான் எங்க வீட்டு மருமகன்னு சொல்ல வைக்க இப்படியொரு பொய்யைச் சொன்னேன்” என்று இல்லாத சட்டை காலரை தூக்கி விட்ட வைதேகியின் செயலைப் பார்த்து அங்குள்ள அனைவருமே சத்தமாகச் சிரித்துக்கொண்டார்கள்.

“அப்புறம் என்ன! அப்போ சீக்கிரமா ராணா மாப்புளைக்கும் வைதேகிக்கும் நல்ல நாள் பார்த்து ஊரைக்கூட்டி நம்ம மண்டபத்துலேயே கல்யாணத்தை வச்சிடலாம்” என்ற கீதாவும் வைதேகியை அவர் சொந்த பொண்ணாகத் தான் பார்த்தார்.

“என்ன ராணா! அடுத்த முகூர்த்தத்துல உங்க கல்யாணத்தை முடிச்சிடலாம் தானே”என்று வேதநாயகி கேட்க,

“இப்போவே உங்க எதிர்ல தாலியை கட்ட சொன்னாலும் நான் வைதேகியை கல்யாணம் பணிக்கத் தயாரா தான் இருக்கேன்” என்ற ரணதீரனின் தெளிவான பேச்சைகேட்டு அனைவருக்குமே சந்தோசமாகத் தான் இருந்தது.

“அத்தை! எனக்கு ஒரு ஆசை இருக்கு!நான் சொல்லலாமா?”என்று வைதேகி கேக்க,”என்ன வைதேகி உங்க கல்யாணத்தை கனடால பண்ணனும்னு உனக்கு ஆசையா?” என்று கேட்டார் கீதா.

“ஏன் அத்த! கல்யாணத்தை காரணம்காட்டி நீங்கக் கனடா போகலாம்னு பிளான் பண்ணுறிங்களா?” என்று ரணதீரன் கேட்டதும், “டேய் ராணா சும்மா இரு” என்று தன் மகனை அடக்கினார் வேதநாயகி.

“என்னமா உனக்கு என்ன ஆசை?” என்று வைதேகியை மாறன் கேட்டதும், “தயவு செய்து எங்க கல்யாணத்தை மண்டபத்தில் செய்யாமல்,நீங்க நடத்துற முதியோர் இல்லத்தில் எங்க கல்யாணம் நடக்க ஏற்பாடு பண்ணுங்க” என்ற வைதேகியின் ஆசையைக்கேட்டு அவளின் தாய் தந்தையினரை அங்குள்ள முதியவர்களின்
வடிவில் பார்க்க வேண்டும் என எண்ணுகிறாள் என்று அனைவரும் புரிந்துகொண்டார்கள்.

வைதேகியின் உணர்வுக்கு மதிப்புக்கொடுத்து ஒரு வாரத்தில் வர இருக்கும் முகூர்த்தத்தில் அழகி சித்ரவைதேகி மற்றும் ரணதீரன் ஆகிய இருவருக்கும் திருமணம் நடக்க ஏற்பாடு செய்தார்கள்.

இந்த இடைப்பட்ட ஒரு வாரக் காலத்தில் வைதேகி ரணதீரன் இடையே காதல் உணர்வுகள் அலைக்கடலெனப் பெருகியது.

விடிந்தால் இருவருக்கும் திருமணம் என்ற நிலையில் ரணதீரனை அழைத்துக்கொண்டு அவனின் பங்களாவிற்குள் நுழைந்த வைதேகி அவனின் ஓவிய நண்பர்களை உற்று பார்த்தாள்.

“என்ன வைதேகி! ஏன் அந்த ஓவியங்களை எல்லாம் அப்படி பாக்குற?” என்ற ரணதீரனிடம் நல்ல மாற்றத்தை உணர்ந்தவள், “தீரா! இந்த ஓவியங்களில் எல்லாம் என்னோட உருவத்தையும் சேர்த்து வரைய்யுறிங்களா?” என்று கேட்டாள்.

“ஓ! ஓவியத்துல கூட நான் உன்னைப் பிரிந்து தனியா இருக்கக்கூடாதுனு நினைக்கிறியா?” என்ற ரணதீரன், அவள் ஆசைப்படியே அங்குள்ள ரணதீரனின் உருவம் கொண்ட அணைத்து ஓவியங்களிலும் வைதேகியின் உருவத்தை அழகாக வரைந்தான்.

“வாவ்! ரொம்ப அழகா இருக்கு தீரா. ஆனா இந்தக் கோவக்கார ரணதீரன் ஓவியத்துக்கு மட்டும் நானே என்னை வரைந்து கொள்கிறேன்” என்ற வைதேகி, தீமா என்று ரணதீரனால் அழைக்கப்படும் அவனின் 18வயதின் உருவம் கொண்ட ஓவியத்தின் அருகே வைதேகி தன் சிறுவயது அழகியின் உருவத்தை வரைந்தாள்.

ரணதீரனின் அறை முழுவதும் உள்ள அவனின் ஓவியங்கள் அனைத்திலும் வைதேகியின் உருவமும் இடம் பெற்ற நிலையில், ஜோடியாக இருக்கும் அனைத்து ஓவியங்களையும் பார்த்து ரணதீரனும் மகிழ்ச்சி அடைந்தான்.

ஒரு வழியாகக் கொஞ்சம் கொஞ்சமாக ரணதீரனின் தாழ்வு மனப்பான்மையை அவனிடமிருந்து விரட்டிய வைதேகி, அவள் ஆசைப்படியே முதியோர் இல்லத்தில் பெரியவர்களின் முன்னிலையில் ராணதீரனின் அருகே அமர்ந்து அவன் அணிவித்த மாங்கல்யத்தை தன் கழுத்தில் பெற்றுக்கொண்டதும், இருவீட்டாரின் ஆசிர்வாதத்தோடு சேர்ந்து முதியோர் இல்லத்தில் இருக்கும் அணைத்து பெரியவர்களின் ஆசியும் மணமக்களை வந்து சேர்ந்தது.

இனி தன் மகனுக்குத் திருமணமே நடக்காது என்று கவலைகொண்ட வேதநாயகிக்கு தன் மகனை மனகோலத்தில் பார்த்த காட்சியே பேரின்பமாக இருந்தது.

மணமக்கள் இருவரும் ஜோடியாக நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு இருக்கும் வேளையில், “சித்ரா இந்தாம்மா உனக்குச் சேர வேண்டிய சொத்துப் பத்திரம்” என்று சில ஆவணங்களை வைதேகியின் கையில் ஒப்படைத்தார் அவளின் தாத்தா சென்முகம்.

ஆவணங்களைப் பெற்றுக்கொண்ட வைதேகி,”தீரா!” என்று ரணதீரனை அழைத்ததுமே,

“எங்க கையெழுத்து போடாம்ன்னு மட்டும் சொல்லுங்க பொண்டாட்டி நான் போடத் தயாரா இருக்கேன்,
சீக்கிரமா உங்க ஆசைப்படியே பெரிய மனநல மருத்துவமனை உங்க அம்மா அப்பா, அதாவது என் மாமனார் மாமியார் பெயரிலேயே கட்டிடலாம்” என்ற ராணதீரனின் வார்த்தைகளைக் கேட்டுத் தன் மனம் அறிந்த மணவாளன் இவன் என்று பெருமிதம் கொண்ட வைதேகி சுற்றி இருப்பவர்களை மறந்து சட்டென்று எம்பி அவனின் கன்னத்தில் தன் இதழ் அச்சாரத்தை மனைவி என்ற உரிமையோடு பதித்து இருந்தவளை காதலாக கட்டிக்கொண்டான் ரணதீரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!