Skip to content
Post Views: 3,968
மார்கழி – 6
பையை மாட்டிக்கொண்டு வாசல் நிலைப்படியில் நிற்கும் மகனை உக்கிரத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார் வீட்டுத்தலைவர் மாறன்.
வருவாயா மாட்டாயா? என்ற கேள்வி தாங்கி தயங்கி விழித்து நிற்கும் மனைவியை திரும்பிப் பார்த்து முறைத்துக்கொண்டிருந்தான் அறிவழகன்.
“உன் நல்லதுக்குத்தான் சொல்றோம் அறிவு. கொஞ்சம் பொறுக்கலாமே.” மேகலா தான் வேறு வழியின்றி சமாதானக்கொடி வீசிக்கொண்டிருந்தார்.
Advertisement
“நாளைக்கு காலேஜுக்கு போகணும்.” நின்று பதில் சொல்ல பிடிக்கவில்லையென்றாலும் மேகலாவின் முகத்திற்காக நின்றான் அறிவழகன்.
“அப்படி போய் தான் ஆகணும்னா நீ முதல்ல போ. ரெண்டு நாள் கழிச்சி திரும்ப வா எல்லாரும் சேர்ந்து போகலாம். அதுவரைக்கும் மருமக பொண்ணு இங்க இருக்கட்டும்.” என்று இயலணியை பார்த்துக்கொண்டே சொன்னார் மாறன்.
“எல்லாத்தையும் உங்க இஷ்டத்துக்கு வளைக்க பாக்காதீங்க. நான் இப்போவே கிளம்பணும்.” வீம்புக்கென்று தான் நின்றான் அறிவழகன். நான் சொன்னதை நீங்கள் நம்பவில்லை இப்போது நீங்கள் சொல்வதை நான் கேட்க வேண்டுமா என்ற கடுப்பு தானே ஒழிய இயலணியை உடன் அழைத்துச் சென்று உடனே குடும்பம் செய்யும் எண்ணமெல்லாம் அவனுக்கு இருக்கவில்லை.
Advertisement
“ரெண்டு நாள் பொறுக்க முடியாதளவுக்கு ராவோட ராவா பொம்புளை புள்ளையை கூட்டிட்டி கிளம்பனும்னு அப்படி என்ன அவசரம்?” என்ற வார்த்தையை தகப்பன் விட்டுவிட, அதற்கு மேல் அங்கு நிற்பதே அவமானம் என்ற எண்ணம் மகனிடம். இறுதியாக ஒருமுறை இயலணியை பார்த்தான் அறிவழகன்.
Advertisement
ஏற்கனவே குழம்பித் தவித்து இருந்தவள் மாமனாரின் அனுசரணையான பார்வையில் அடங்கி கணவனின் பொசுங்கும் பார்வையில் நடுக்கம் கொண்டாள். காலை நிலவரப்படி அவன் எங்கு அழைத்தாலும் சென்றிருப்பாளோ என்னவோ, சூரியன் அடங்கி நிலவின் குளிர் இறங்கும் வேளையில் தன் உணர்வுகளின் சுயபரிசோதனையே அச்சம் கொள்ள வைத்திருந்தது. விருப்பம், நேசம், காதல் அதன்தொட்டு பிடித்தவனுடன் திருமணம் என்று காரணங்கள் ஆயிரம் சொல்லி தன்னைத் தானே சாமாளித்துக்கொண்டவளின் மனப்பிதற்றலுக்கு அச்சுறுத்தலாய் உதித்தது அவள் மனசாட்சியின் கேள்விகள்.
இப்படியான காதல் தேவையா என்றால் இது காதலா என்று திருப்பிக் கேட்கிறது மனது. குறுகிய காலத்தில் புள்ளியாய் துவங்கிய சலனத்தை காதல் என்று அர்த்தம் செய்து அதனை பிடித்துக்கொண்டு இத்தனை தூரம் வந்தவளது காதலை புரட்டிப்பார்த்தால் இதுதான் என்று சொல்லும்படியான காரணங்கள் எதுவுமில்லை. காரணங்களின்றி பிடித்தம் வரலாம் ஆனால் அந்த பிடித்தம் இருக்கிறதா இல்லையா என்பதே சந்தேகமெனும் நிலை எனில் பற்றுக்கோல் எதுவுமின்றி நிராதரவாக நிற்கும் எண்ணம்தான் பெண்ணிடம். அதனால் துணிந்து கணவனிடம் செல்ல முரண்டியது மனம். ஆனால் கணவனுக்கு அந்த கவலைகள் இல்லை. பிடிக்கவில்லை என்ற தெளிவு நிரம்ப இருந்தது. திருமணம் ஒருமுறை தான் என்ற நிலைப்பாடும் அழுத்தமாய் இருக்க, அவளை விட்டுச்செல்ல வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவனாய் மனைவியைப் பார்த்தான். ம்கூம் அவள் நகர்வதாய் இல்லை என்றதில் கடுப்பானவன்,
“என்னமோ இப்போதான் புதுசா என்னோட தனியா இருக்கப்போறவ மாதிரி மூஞ்சை பாத்துட்டு நிக்குற. வா.” என்றதில் குடும்பத்தினர் முகங்கள் அதிருப்தியில் சுருங்கியது.
Advertisement
“அறிவு, என்ன பேசுற நீ?”
“என்ன? என்ன சொல்லிட்டேன் இப்போ? ஊருக்கு தெரியாம மறைச்சி வச்சி ஒழுக்கங்கெட்டு போய் குடும்பம் பண்ணிட்டதா அவங்க தப்பா பேசினாங்கன்னா இல்லைனு என் பையன் அப்படியில்லைனு அடிச்சி பேசி மறுத்திருக்குனும். அதை விட்டுட்டு நீங்களே கல்யாணம் பண்ணி வச்சி அது உண்மைதாங்குற மாதிரி ஊருக்கே வெளிச்சம் போட்டு காட்டிட்டீங்க. அதையே நான் வாய் வார்த்தையா சொன்னா கசக்குதோ? உங்களை பொறுத்த வரைக்கும் நாங்கதான் ஏற்கனவே வாழ ஆரம்பிச்சிட்டோமே. இதுக்கப்புறம் எதுக்கு இந்த சடங்கு சம்பிரதாயம், நல்ல நாள் அதுஇதுனு கண்ணை துடைச்சிட்டு இருக்கீங்க. எல்லாம் முடிஞ்சிச்சு.” என்று பொரிந்தவன் இயலணி கை பிடித்து இழுத்துக்கொண்டு வெளியேறினான்.
திகைப்புடன் இயலணி அவன் இழுப்புக்குச் செல்ல, அறிவழகனின் பேச்சில் அதிர்ந்து நின்றிருந்தனர் அவன் வீட்டினர். முதன்முறை அறிவழகனின் குரல் உயர்ந்த அதிர்வு அச்சாய் மனதில் ஏறியது. என்றும் எதற்கும் எதிர்த்து குரல் உயர்த்தியது இல்லை அவன். தணிவாய் வேண்டுபவன், தன்மையாய் தன் பக்க யோசனைகளை வைப்பவன். அவன் மீது குற்றம் சுமத்தி கலவரம் நடந்த போதுகூட தன்பக்கத்தை முன்வைக்க மன்றலுடன் இறைஞ்சவே செய்தான். அப்படிப்பட்டவன் இன்று அந்தரங்கத்தை உடைத்துப் பேச பெற்றவர்கள் மனது பிசைந்தது.
“அண்ணன் என்ன இப்படி பேசிட்டு போகுது?” என்று தாமரை மெளனத்தை உடைக்க, கணவனை குற்றம்சாட்டும் பார்வை பார்த்தார் மேகலா.
“என்ன என்னை பாக்குற? நாலு எழுத்து சொல்லித்தர இடத்துல இருக்கறவன் மேல பொம்பளை புள்ளையை வச்சி ஒரு சொல் வருதுன்னா அது எவ்வளவு பெரிய தலையிறக்கம். குடும்பத்துக்குள்ள தானேனு அப்படியே விட்டா நாளைக்கு ஊரு முன்னாடி பழி சொல்லாகி அவன் மரியாதையே கேள்விக்குறி ஆகிடும். எல்லாத்தையும் யோசிச்சு தான் கல்யாணம் பேசுனேன். போக போக சரியாகிடுவான். அந்த பொண்ணுகிட்ட நம்ம முறைப்படி என்ன செய்யணுமே அதை செய்ய சொல்லு.” மகனின் பேச்சில் மனம் சுருக்கென்றாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் நகர்ந்தார் மாறன்.
சோர்ந்து அமர்ந்த மேகலா நெற்றியை தேய்த்துக்கொண்டே போனை எடுக்க,
“அவங்ககிட்ட போன் இல்லை. எதுனாலும் அண்ணன் மூலமா தான் சொல்லணும்.” என்றாள் தாமரை.
“ஆளாளுக்கு அவங்களுக்கு சரிங்குறதை பண்ணிட்டு நம்மை உயிரை எடுக்குறாங்க.” புலம்பிக்கொண்டே மகனின் எண்ணிற்கு அழைக்க முழு அழைப்பு சென்று நின்றது.
“போன் எடுக்கலை. கோவமா இருப்பானோ?”
“இப்போதான கிளம்புச்சு. ஊரு பஸ் ஸ்டாண்டுல தான் நின்னுட்டு இருக்குமாக்கும் அதான் எடுக்கல.” என்றதும் மேகலாவின் பார்வை தன்னால் கடிகாரத்திற்கு சென்றது.
“கடைசி பஸ் இனிமேதான வரும்? ஆட்டோவுக்கு வேணும்னா சொல்லி அனுப்புவோமா?” மகன் பேருந்து கிடைக்காமல் நிற்பானோ என்று தவிப்பு தாயிடம்.
“பஸ் வர நேரம்தான். பத்து நிமிஷம் பொறுத்து போன் போட்டுப் பாரு, எடுக்கலைன்னா ஆட்டோ அனுப்புவோம்.” என்ற மகளின் யோசனையை ஏற்றவராய் போனை கீழே வைத்தவர், “யாருக்குனு பாக்கடி நானு.” என்று தலைப்பிடித்து அமர்ந்தார்.
“உன் தங்க வளையல் அவங்ககிட்ட இருக்கு’ம்மா.” என்ற மகளை மேகலா பட்டென்று ஏறிட்டு முறைக்க, “ம்ச்… அவங்களால தான் இவ்ளோ பிரச்சனைங்கும் போது எப்படி உரிமையா உறவு கொண்டாட தோணும். அண்ணின்னு வரமாட்டேங்குதுமா.”
“வரலைனாலும் வர வச்சிக்கோ தாமரை. இதே மாதிரி உன் வீட்லையும் போய் பேசிட்டு இருந்தீன்னா எப்படி அறிவை உங்க வீட்ல மதிப்பாங்க? நாளைக்கு அவங்க ரெண்டு பேரும்தான் முறை செஞ்சு உன்கூட கடைசி வரைக்கும் பொறந்த வீட்டு சொந்தமா நிப்பாங்க பாத்துக்கோ.”
“சரி சரி மாத்திக்குறேன். நீ அண்ணனுக்கு போன் போட்டு பேசு.” மீண்டும் அறிவழகனுக்கு அழைப்பு சென்றது.
“இப்போதான் பஸ் ஏறினேன். காலையில கூப்பிடுறேன், நீ போய் தூங்கு.” என்று அவன் அழைப்பை துண்டிக்கப்போக,
“டேய் இருடா. என்னை பேச விடு கொஞ்சம்.” மேகலா படபடக்கவும் மறுபுறம் அமைதி.
“இயல்கிட்ட போனை குடு.”
“அவ தூங்குறா.” நொடி நேரம் கழித்து வந்தது பதில்.
“அதுக்குள்ளயா?” சந்தேகமும் உறுத்தலுமாய் ஏதோ நெருடியது மேகலாவுக்கு.
“என்ன சொல்லணுமோ என்கிட்ட சொல்லு.” மகனின் குரலில் தெரிந்த இறுக்கம் மேகலாவை அதற்கு மேல் யோசிக்க விடவில்லை. மறுநாள் வீடு சென்றதும் பால் காய்ச்சி இனிப்பு செய்து வழிபட சொல்ல, அசிரத்தையாய் கேட்டுக்கொண்டான் அறிவழகன்.
“ம் கொட்ட கூட கஷ்டமா உனக்கு. காதுல வாங்குறியா இல்லையா… எல்லாம் ஒழுங்கா செய்ய சொல்லு அவளை.” மகனை கண்டுகொண்டவர் குரல் உயர்த்த, அது சுகிக்கவில்லை மகனுக்கு.
“சரி போனை வைக்கவா?” என்றதிலே அவனின் ஆர்வமின்மை தெரிய, அவனை அப்படியே விடமுடியாதவராய்,
“சாமி கும்பிட்டு ஒரு போட்டோ எடுத்து அனுப்பு எனக்கு.” என்று சொல்ல எரிச்சல் வந்தது அறிவழகனுக்கு.
“எதுக்கு ஒரு போட்டோ பேசாம கேமரா ஒன்னு வாங்கி மாட்டி எல்லாத்தையும் மொத்தமா போட்டுக் காட்டவா? ஏன்மா நீயும் படுத்துற. போனை வையி.” என்று வைத்துவிட்டான் அறிவழகன். மகனின் எரிச்சலில் தானும் எரிச்சல் கொண்டவர் போனை பட்டென்று வைக்க,
“நீயும் மாமியார் கெத்து காட்டுறமா.” என்றாள் தாமரை. அவள் தலையில் லேசாக கொட்டு வைத்து எழுந்தவர், “சீக்கிரம் வீட்டுக்கு கிளம்புற வழியைப் பாரு. இல்லைனா உன் மாமியார் பஞ்சாயத்து கூட்ட ரெடியா நிப்பாங்க.” என்றுவிட்டு நகர்ந்தார்.
மேகலாவிடம் பேசிவிட்டு போனின் நுனியால் நெற்றியை தேய்த்தபடி அறிவழகன் நிமிர்ந்து அமர, இரண்டு வரிசைகள் முன்னே கட்டியிருக்கும் புடவையின் முந்தானையை தோள் சுற்றி போர்த்திய வண்ணம் ஜன்னலோர இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருக்கும் இயலணி கருத்தில் பதிந்தாள். வெளியே இருள் வெறிச்சென்று இருக்க, உள்ளும் ஓய்ந்த நிலைதான். வீட்டிலிருந்து கோபத்தில் உடனே கிளம்பி இருந்தாலும் இயலணியின் பாதுகாப்பு குறித்தும் ஒரு ஓரமாய் யோசனை இருந்தது. பொங்கலுக்கு ஊருக்கு வரும் போது கூட ஊருக்கு அதிகாலையில் வரும் முதல் பேருந்தை கணக்கிட்டு கிளம்பியிருந்தான். இப்போதும் இரவு நேர பயணத்தை தேர்ந்தெடுத்து இத்தனை நாள் மறைத்து வைத்ததை போல் இன்னும் கொஞ்ச நாள் வைத்துக்கொள்ளலாம் என்றெண்ணத்தில் அவளை முன்னே விட்டு இவன் பின்னே அமர்ந்துகொண்டான்.
சிறிது நேரத்தில் அவர்கள் ஊருக்கு சற்று தொலைவில் இருக்கும் பெரிய பேருந்து நிலையத்திலிருந்து அவன் வேலை பார்க்கும் ஊருக்கான பேருந்தில் ஏறி அமர்ந்தார்கள். இப்போதும் அவள் முன்னே அவன் பின்னே. அவளிடம் ஒரு பார்வை பதித்தபடி அலைபேசியை நோண்டிக்கொண்டு இருந்தான் அறிவழகன். வழி நெடுக ஒருவித அலைப்புறுதலுடன் அறிவழகனை திரும்பித் திரும்பி பார்த்தபடி வந்தாள் இயலணி. அவள் பார்வையை உணர்ந்தாலும் கண்டுகொள்ளாதவனாய் அலைபேசியில் மூழ்கிவிட்டான். அப்படி இப்படியாய் இரண்டு மணிநேர பயணத்திற்கு பின் நள்ளிரவில் சென்று இறங்கினர்.
கோவில்களுக்கு பெயர் போன குடந்தை அவர்களை அன்புடன் வரவேற்றது. பேருந்து நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்தில் இருந்த தன் வண்டியை எடுத்து வந்தவன் ஓரமாய் நின்று கொண்டிருந்த இயலணி முன் நிறுத்த, புடவையை நன்றாக இழுத்துவிட்டப்படி பின்னால் ஏறிக்கொண்டாள். ஒரு வார்த்தை பேசவில்லை அவன். காற்றை கிழித்துக்கொண்டு அந்த இருட்டில் வண்டியை பறக்க விட்டான். அவன் வேகத்திற்கு ஏதுவாக புறவழிச்சாலையில் இருந்தது அவன் வேலை பார்க்கும் பொறியியல் கல்லூரி. வீடும் அதன் அருகினில், ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்குள். இரண்டுமே நகரை விட்டு சற்று தொலைவில் இருப்பதால் மக்கள் நடமாட்டம் அளவாகவே இருக்கும். அதன்தொட்டு தான் வேந்தனும் இவன் வீட்டில் இயலணியை அழைத்து வந்துவிட்டது.
மூன்று மாதங்கள் கழித்து வெளிக்காற்றை சுவாசித்து சுகித்து அனுபவித்தபடி பொங்கல் விடுமுறைக்கு அறிவழகனுடன் புறப்பட்ட அந்த நாள் ஏதோ கனவு போல் தோன்ற, அதே ஆள் அரவமற்ற சாலை திரும்பி வரும்போது கிலி பரப்பியது பெண்ணினுள். அவன் வேகம் ஒருபுறமென்றால் அவளின் உணர்வுகள் ஒருபுறம் குற்றம் சுமத்தி கூத்தாடியது. அந்த குளிரில் உடல் வேறு நடுங்க, பிடிமானக் கம்பியை இறுக பிடித்துக்கொண்டாள்.
மேடு பள்ளங்கள் இல்லாத சாலையில் சுமூகமாக வீடு வந்து சேர்ந்தனர். இயலணி கதவைத் திறக்க, வண்டியை வராண்டாவில் நிறுத்தியவன் முன்னே வைத்திருந்த பையை எடுத்துக்கொண்டு மாடியேறினான். பின்னோடு இயலணியும். கீழ் வீட்டில் இவனைப் போன்றே வீடு எடுத்து தங்கியிருந்த ஆடவர்கள் இருவர் சமீபமாக காலி செய்திருக்க, இயலணியை பத்திரமாக யாருக்கும் தெரியாமல் தங்க வைப்பது அத்தனை கடினமானதாக இல்லை. விவசாய நிலங்களே அதிகமிருக்கும் அந்த கிராமத்தினில் கல்லூரி மற்றும் இதர கடைகளின் பொருட்டு இப்போது தான் வீடுகள் அங்கொன்றுமாய் இங்கொன்றுமாய் எழுந்து நிற்கிறது. அப்படியொரு கட்டிடத்தில் இவன் இருப்பதால் அக்கம்பக்கத்தினர் என்று யாரும் பழக்கமில்லை.
வீட்டுக்கதவினைத் திறந்து பொத்தானை அழுத்தி விளக்கொளிரச் செய்தவன் இயலணியை ஒரு பார்வை பார்த்துவிட்டு அறைக்குள் சென்றான். கதவடைத்த இயலணி அவன் வரட்டும் என்று ஹாலிலேயே கைகளை பிசைந்தபடி நிற்க, அவன் வருவது போல் தெரியவில்லை.
‘என்ன பண்றாங்க இன்னும்?’ இவள் வந்த பிற்பாடு அறிவழகனின் படுக்கை கூடத்திற்கு மாறியிருக்க, உடை மாற்றி வந்துவிடுவான் என்று கால்களை மாற்றி மாற்றி வைத்து நின்றாள். சில நொடிகளில் அறையில் எரிந்த விளக்கு அணைக்கப்பட, இதோ வந்துவிடுவான் என்று பார்த்தால் வரவில்லை. என்னாச்சு என்ற குழப்பத்தோடு கழிப்பறை செல்லவேண்டிய உந்துதல் வர, தயக்கத்துடன் அறைக்குச் சென்றது கால்கள்.
கீழே விரித்திருந்த பாயின் ஒரு ஓரத்தில் கைகளை தலைக்கு கொடுத்தபடி படுத்திருந்தான் அறிவழகன்.
அதிர்ந்து, ‘என்ன இங்க படுத்திருக்காங்க?’ சங்கடத்துடன் பார்த்தவள், கழிப்பறை கதவையும் அவனையும் மாறி மாறி பார்த்தாள்.
“கரெண்ட் பில்லுக்கு காசு கொடுக்குறீன்னா ஹால் லைட் விடிய விடிய எரிஞ்சிட்டே இருக்கட்டும்.”
“இல்லை இதோ…” என்று வேகமாக கூடத்திற்கு சென்று விளக்கை அணைத்து வந்தவள் இருட்டில் தடுமாறினாலும் நேரே கழிவறை புகுந்துகொண்டாள்.
அவளை பார்த்துவிட்டு பெருமூச்சுடன் திரும்பிப் படுத்தான் அறிவு. சில நொடிகளில் வெளியே வந்தவள் இருட்டிற்கு கண்களை பழக்கி ஓரமாய் இருந்த தலையணையை எடுத்துக்கொண்டு தட்டுத்தடுமாறி கூடத்திற்கு நகரப்போக, அவன் கால் தடுக்கிவிட்டது. தள்ளாடினாலும் நிலையாய் நின்றவள், “சாரி இருட்டுல தெரியல.”
“பேய் உலாத்துற நேரத்துல அதுக்கு போட்டியா எதுக்கு இப்படியும் அப்படியுமா உலா போயிட்டு இருக்க?” எரிச்சல் மிகுதியில் ஒலித்தது அவன் கேள்வி.
“இல்லை ஹால்ல படுக்கலாம்னு…”
“ஓஹோ! குடும்பமே கூடியிருக்கும் போது என் வாழ்க்கையில கும்மியடிப்பாளாம்… யாரும் இல்லாதப்போ நல்லவ வேஷம் போட்டு நகர்ந்து போவாளாம். நல்லா இருக்குமா உன் நடிப்பு.” ஒருக்களித்து படுத்திருந்தவன் நன்றாக திரும்பிப்படுத்து கால் மேல் கால் போட்டு நக்கல் பேச, அந்த இருட்டில் அவன் முகம் தெரியாவிட்டாலும் அவன் விடும் வார்த்தைகள் கொண்டே அவனை உணர முடிந்தது இயலணியால்.
“சாரி.” அந்த நேரம் வேறு எதைச் சொல்லவும் தோன்றவில்லை இயலணிக்கு. தேவையின்றி அவன் வாழ்க்கையை சிதைத்துவிட்டோம் என்ற எண்ணம் அவளுக்கே வந்துவிட்ட பின் தணிந்து போகவே உந்தியது மனம்.
“உன் சாரியோட சேர்த்து இந்த சேரியையும் தூக்கி போட்டுட்டு வந்தீன்னா வசதியா இருக்கும்.” என்று அவள் புடவையை சுட்டிக்காட்டி சொல்ல, அதிர்ந்துவிட்டாள் பெண்.
“என்ன?”
“என்ன என்ன? காது அவுட்டா? திரும்ப சொல்லவா?”
“ப்ளீஸ் இப்படியெல்லாம் பேசாதீங்க.”
“எனக்கும் இப்படி பேச ஆசையில்லைதான். ஆனா நீ ஆசைப்பட்ட தானே? என்னோட ஆசை தான் காத்தோட போச்சு, அட்லீஸ்ட் உன் ஆசையாவது நிறைவேத்துவோம் வா.” எனும் போதே அவன் குரலில் தொனித்த மாற்றத்தை ஆராய முற்படும் முன் அவள் கைப்பிடித்து இழுத்திருந்தான் அறிவழகன். பிடிமானமின்றி அவன் மேல் விழுந்தாள் இயலணி. இதயம் படபடவென அடித்துக்கொள்ள நேற்று அவன் தொடுகையை எதிர்நோக்கி இருந்தபோது வந்த சிறு சிலிர்ப்பும் எதிர்பார்ப்பும் இன்று துளியும் இல்லை. மாறாக பயம் ஒன்றே பிரதானப்பட, கண்களை இறுக மூடி அவன் நெஞ்சில் கரம் வைத்து நிமிர்ந்தவள் இறைஞ்சலாக பார்த்தாள்.
“ப்ளீஸ்ங்க… நாந்தான் தப்பு. நீங்க எப்போவுமே தப்பாகிடாதீங்க.” பலகீனமாக அவள் குரல் வெகு அருகினில் ஒலிக்க அவளை பக்கவாட்டில் தள்ளிவிட்டவன் கண்களை இறுக மூடித் திறந்து தலையணை எடுத்துக்கொண்டு கூடத்திற்கு சென்றுவிட்டான்.
செல்லும் அவனையே குற்றவுணர்வுடன் பார்த்திருந்தாள் இயலணி. தன் மேலிருக்கும் கோவத்தில் இப்படி நடந்துகொள்கிறான் என்பதை புரிந்து கொள்ள முடிந்தவளால் அவனின் மனப்போராட்டத்தை அறியமுடியவில்லை.
எப்படியேனும் அவளை காயப்படுத்திவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அவன் செய்ய முயலும் யாவும் அவனையே வெட்கம் கொள்ளச் செய்பவையாய் இருந்தன. மனைவி என்ற சொல்லே வெறுப்பை சுரக்க, முதலிரவில் கூட பிடிவாதமாய், அழுத்தமாய் நெருங்க முயன்றவனால் சிறு சிறு தொடுகைக்கு மேல் முன்னேற முடியவில்லை. இப்போதும் அந்த எண்ணமில்லை. அவளை கலவரப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் துவங்கிய பேச்சும் செயலும் கண்ணியத்தை மீற, தன்னையே நொந்துகொண்டான் அறிவழகன். அவளை எப்படியாவது காயப்படுத்திவிட வேண்டும் என்ற வேகத்திற்கு தீனி போட அவன் சிந்தை ஒத்துழைக்காத காரணத்தினால் அவளை காயப்படுத்தும் வழியறியாது திணறிப் போனான் கணவனானவன்.
error: Content is protected !!