Skip to content
Post Views: 3,722
அத்தியாயம் 19.2
காலை நாலுமணிக்கு எல்லாம் சரியாக புறப்பட்டு விட்டார்கள்.
Advertisement
அருணா அவள் கையாலே பின்னிய ஸ்வெட்டரும் குல்லாவும் தன் அப்பாவுக்கும் மாமாவுக்கும் கொடுத்திருந்தாள்.
“அருணாம்மா.. இங்கே எப்பவுமே இப்படி தான் குளிருமா?” என்று கேட்டார் வடிவேலு.
Advertisement
Advertisement
“அப்படி இல்ல மாமா.. இங்கே குளிர் காலத்துல குளிரும் அதிகமா இருக்கும், வெய்யில் காலத்துல வெய்யிலும் அதிகமா இருக்கும்.
உத்தரகண்ட் இரண்டு முக்கிய பகுதிகளாகப் பிரிக்கப்படுது: கர்வால் மற்றும் குமாவோன். கர்வால் மாநிலத்தின் மேற்குப் பகுதியில் உள்ளது, அதே நேரத்தில் குமாவோன் கிழக்குப் பகுதியில் உள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் அதன் தனித்துவமான கலாச்சாரம், வரலாறு மற்றும் நிலப்பரப்பு உள்ளது.
Advertisement
ஹல்த்வானி உத்தரகண்டின் குமாவோன் பகுதியில் அமைந்துள்ளது.
இது மலை அடிவாரத்தில் இருக்கிற ஊர். வெய்யில் காலத்துல நம்மூரு போல வெய்யில் பின்னி எடுத்துடும்.நம்ம பாட்டிய எல்லாம் கூட்டிட்டு வரணும்னா வெய்யில் காலத்துல வரனும் மாமா”
“கண்டிப்பா கூட்டிட்டு வரணும் அருணா, எங்க அம்மா தான் உன்னயும் குருவையும் பார்க்கணும்னு சொல்லிட்டே இருக்காங்க”
“உன் பாடு நீ பரவால்ல மச்சான்.. ஒரு விதத்துல புண்ணியம் பண்ணிருக்க?” என்றார் ஆனந்தன் இடை புகுந்து.
“நிஜமாவாய்யா சொல்ற?”
“ஆமா மச்சான்.. நீ செண்டை மேளம் மாதிரி..”
“அப்படின்னா என்னய்யா?”
“அந்த காலத்துல எல்லாம் தண்டோலா போடுவாங்க பார்த்திருக்கியா? ஒருத்தன் மேளத்தை கழுத்துல போட்டுக்கிட்டு அடிச்சிட்டே செய்தி சொல்லுவான் இல்ல?”
“ஆமா..அதுக்கு?”
“அந்த மாதிரி உனக்கு ஒரு பக்கம் மட்டும் தான் அடி, உங்க அம்மா அவ்வளவு சாந்தமானவங்க. ஆனா நான் மிருதங்கம் மாதிரி..”
வடிவேலு அவரை முறைத்து பார்க்கவும்,
“இல்லைன்னு சொல்ல முடியுமா? எங்க அம்மா ஒரு பக்கம்.. என் பொண்டாட்டி ஒரு பக்கம்னு என் நிலைமை எப்பவுமே மத்தளத்துக்கு இரண்டு பக்கம் இடி கதை தான்”
“விடு மச்சான் … எல்லாம் அவனவன் தலையெழுத்து..”
இவர்கள் இருவரும் காரின் பின்புறம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். கோலு வடிவேலுவின் தோளில் சாய்ந்து தூங்கி விட்டிருந்தான்.
“அப்பா நானும் இவரும் மூனு பக்கம் அடி வாங்கிட்டு இருந்தோமே அப்பா.. பாரு பாட்டி, அம்மா அத்தைன்னு… அப்பா நாங்க எந்த மேளம்?” என்றாள் அருணா.
ஆனந்தன் திரு திரு என்று வடிவேலுவை பார்த்து முழித்தார்.
“பழசை பேசாதன்னு சொல்லி இருக்கேன் இல்ல செல்லம்மா” என்றான் குரு சற்று கண்டிப்புடன்.
“வேணும்னு பேசல, சில சமயம் என்னையும் மீறி அதுவா வந்துடுது” என்றாள் அருணா பதிலுக்கு.
“இது உனக்கு தேவையாய்யா? நமக்கு இத்தனை வருசமா பேசவே வாய்ப்பு கிடைச்சதில்லை. புதுசா வாய்ப்பு கிடைக்கவும், உவமை எல்லாம் தேவையா?” என்றார் கிசுகிசுப்பாக.
பின் சற்று நேரம் அமைதியாக சென்றது பயணம்.
“ஆமா குரு, எப்படி நீங்க இரண்டு பேரும் இவ்வளவு சீக்கிரம் இந்த ஊர்காரங்க மாதிரியே மாறிட்டிங்களே.. எப்படி? நீங்க பேசுறதுகூட இந்த ஊர்காரங்க மாதிரியே இருக்கு” என்றார் வடிவேலு பேச்சை வளர்க்க எண்ணி.
“கட்டாயம் தான் காரணம் … இங்க இந்த ஊர்ல வாழணும்னா இந்த மாற்றம் அவசியம். தண்ணிக்குள்ள விழுந்தா, தட்டி தடுமாறி நீச்சல் கத்துகிற மாதிரி தான். ஆனா இங்கே நாங்க தெரிஞ்சே தானே விழுந்தோம். அதனால ஆர்வமாவே எல்லாம் கத்துக்கிட்டோம்”
“அதுவும் சரி தான்..”
“என்னய்யா சரி.. உன்ன எல்லாம் ஒரு வருஷம் என்ன? ஒன்பது வருஷம் இந்த ஊர்ல விட்டாலும் ஹிந்தி கத்துக்குவீயா?”
“ஆமா .. எங்களுக்கு வராது.. இவர் ஒரே வாரத்துல பேசி கிழிச்சிடுவாரு”
“மொழி தெரியலைனாலும் எங்க வேணும்னாலும் இருக்கலாம் அப்பா.. அடிப்படையா ஒன்னு இருந்தா மட்டும் போதும். என்னன்னு சொல்லுங்க பார்ப்போம் ” என்றாள் அருணா.
“பணம் இருந்தா போதும்னு சொல்றீயா?”
“பணமும் தேவை தான். ஆனால் உலகத்துல அனைவருக்கும் புரியற ஒரே விஷயம் அப்பா.. அதை வைச்சு சமாளிச்சிடலாம்”
“செய்கை மொழியா?” என்றார் வடிவேலு.
“அன்பு.. அன்பின் மொழி” என்றாள் அருணா.
உண்மை தானே.. எத்தனை அன்பு இங்குள்ளவர்கள் இவர்களிடம் காட்டுகிறார்கள்.
“இன்னிக்கு எங்கே எல்லாம் போக போறோம்”
“அல்மோரால நிறைய இடங்கள் இருக்கு மாமா.. அவசர அவசரமா பார்த்தா ஆறு ஏழு இடங்கள் பார்க்க முடியும். நிதானமா பார்க்கணும்னா மூணு நாள் ஆகும். நாங்க இங்கே தானே இருக்கோம். ஒவ்வொரு முறை வரும் போதும் கொஞ்சம் கொஞ்சமா பார்க்கலாம். இன்னிக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு பாப்போம்.”
“நீங்க எப்படி சொன்னாலும் சரி தான்”
“பார்த்தியா எப்படி நிதானமா யோசிக்கிறா என் பொண்ணு, என் சம்சாரத்தையும் உன் சம்சாரத்தையும் கூட்டிட்டு வந்தா, ஒரே நாள்ல மூச்சு திணற திணற, எல்லா இடத்தையும் பார்த்துட்டு தான் விடுவாங்க”
“ஆனா ஒன்னு உண்மை மச்சான். நீ குறை சொல்ற மாதிரி தான் இருக்கு.. குறை சொல்ற மாதிரியாவது உனக்கு உன் சம்சாரத்தை பத்தி பேசிக்கிட்டே இருக்கனும். உனக்கு அவங்க மேல ரொம்ப தான்யா லவ்வு” என்றார் வடிவேலு சிரித்துக்கொண்டே.
“சரியா சொன்னீங்க மாமா.. எங்க அப்பாவுக்கு அம்மா இல்லாம இருக்க முடியாது“ என்றாள் அருணாவும் சிரித்துக்கொண்டே.
முதலில் நந்தா தேவி கோவிலுக்கு சென்றார்கள். கோலு எழுந்து ஆசையாக இருவருடனும் பேசிக்கொண்டே வந்தான்.
நந்தா தேவி கோயில் இப்பகுதியின் மிக முக்கியமான கோயிலாகும்.
மாதா நந்தா தேவி குமாவோனி மக்களின் மகளாக வணங்கப்படுகிறார். நந்தா தேவி தங்கள் கிராமங்களை இயற்கை பேரழிவுகளிலிருந்து பாதுகாத்து, செழிப்பைக் கொண்டு வந்து, நல்ல ஆரோக்கியத்தை அருளுவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
கோவிலும் கோவிலை சுற்றி உள்ள இயற்கை அழகையும் காண காண தெவிட்டவில்லை.
காலை ஆறு மணிக்கு எல்லாம் அங்கே சென்று வணங்கி பிறகு அமைதியான மனதோடு அங்கிருந்து கிளம்பினார்கள்.
“நீங்க இரண்டு பேரும் இங்கே எல்லாம் அடிக்கடி வருவீர்களா?”
“செவ்வாய் கிழமை ஏதாவது ஒரு இடத்துக்கு வருவோம் அப்பா.. ஆனா ட்ரெயின் இல்லனா பஸ்ல வருவோம்”
“அடுத்து எங்க போக போறோம் சொல்லு கோலு?” என்றான் குரு கோலுவிடம்.
அடுத்து செல்லப்போகும் இடம் கோலுவிற்கு மிகவும் பிடித்த இடம்.
“சித்தப்பா.. எங்க போறோம் சொல்லு..”
“மாமா எங்க போறோம் சொல்லு..” என்று சந்தோசத்தில் ஆர்ப்பரித்தான்.
“கோலுக்கு பிடிச்ச இடம்.. சரியா?” என்று கேட்டார் வடிவேலு.
“ஆமா மாமா .. கோலு கோவில்… நம்ம அடுத்து சித்தாய் கோலு கோவிலுக்கு தான் போறோம்..”
“நிஜமாவா கோலுன்னு ஒரு கோவில் இருக்கா?” என்றார் ஆனந்தன் ஆச்சர்யமாக.
“என் பெயரும் அந்த கோவில்ல இருக்க பகவான் பெயரும் ஒன்னு.. கோல்ஜ்யு..
அந்த கோவில் பக்வான் அருளால் தான் நான் எங்க அம்மாக்கு வந்தேன். நான் கஹானி சொல்றேன்” என்றான் கோலு மகிழ்ச்சியாக.
“டேய் உன் தமிழ்ல வரலாறு எல்லாம் கேக்க முடியாதுடா. நீயே சொல்லும்மா அருணா…”
கோலுவிற்கு இந்த கதை சொல்லுவது மிகவும் இஷ்டம். அவன் முகம் வாடவும்.., ”நீ ஹிந்தில சொல்லு கோலு.. அதையே நான் தமிழ்ல சொல்லறேன்.. நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து சொல்லுவோம்” என்றாள் அருணா கோலுவிடம்.
அதே போல கோலு ஹிந்தியில் கூற அருணா அதை தமிழில் கூறினாள் .
சித்தாய் கோலு தேவ்தா கோயில் என்பது கோலு தேவ்தாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புனிதமான கோயிலாகும், அவர் பிரபலமாக கோல்ஜ்யு தேவ்தா என்று அழைக்கப்படுகிறார். இந்த கோயில் 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.கோலு தேவ்தா நீதியின் கடவுள் என்று போற்றப்படுகிறார் .
அவர் கௌர் பைரவ் வடிவத்தில் இருக்கும் சிவனின் அவதாரம் என்று நம்பப்படுகிறது .
கோலு தேவ்தாவை பற்றிய மிகவும் பிரபலமான கதை இது.
கோலு தேவ்தா, ராஜா ஜால் ராய் மற்றும் ராணி கலிங்கா ஆகியோரின் மகனாக பிறந்தவர். கலிங்காவை திருமணம் செய்வதற்கு முன் அவருக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். அவர்கள் கலிங்கா மீது பொறாமை கொண்டனர்.
அதனால், கலிங்காவிற்கு தெரியாமல், குழந்தை பிறந்ததும், அவர்கள் குழந்தை கோலு தேவ்தாவை அவரது தொட்டிலில் இருந்து எடுத்து ஒரு துணியில் சுற்றினர். பின்னர் அவர் மூழ்கிவிடுவார் என்று நம்பி ஒரு ஆற்றில் வீசினர். தொட்டிலில் ஒரு கல்லை வைத்து, இது தான் உன் குழந்தை. எங்களுக்கு எதுவும் தெரியாது என்று பாசாங்கு செய்தனர். இருப்பினும், கோலு தேவ்தா இறக்க விதிக்கப்படவில்லை. அவர் ஆற்றில் மிதப்பதைக் கண்ட ஒரு மீனவர் அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று தனது சொந்த மகனாக வளர்த்தார்.
சிறுவன் வளர்ந்ததும் இறைவனின் அருளால் அவனுக்கு ஒரு கனவு தோன்றி தனது பிறப்பின் ரகசியம் தெரிந்து விட்டது. ஒரு மரக் குதிரையை ஆற்றுக்கு அழைத்துச் சென்று தண்ணீர் பருக வைத்தான். அதை பார்த்த ராணிகள் அவனை விசாரித்தபோது, பெண்கள் கல்லைப் பெற்றெடுக்க முடிந்தால், மரக் குதிரைகள் தண்ணீர் குடிக்கலாம் என்று அவன் பதிலளித்தான். இதைக் கேள்விப்பட்ட மன்னர், அங்கே வந்தார். நடந்தவற்றை அறிந்து, குற்றவாளிகளான ராணிகளைத் தண்டித்து, சிறுவனுக்கு முடிசூட்டினார், பின்னர் அவர் கோலு தேவதா என்று அறியப்பட்டார்.
கோலு தேவ்தா சிறந்த மன்னராக ஆட்சி செய்து வந்தார்.
கோலு தேவதா தனது குதிரையில் நீண்ட தூரம் பயணம் செய்து தனது ராஜ்ஜிய மக்களைச் சந்திப்பார், அவரது நீதிமன்றம் கோலு தர்பார் என்று அழைக்கப்படும். கோலு தேவதா மக்களின் பிரச்சினைகளைக் கேட்டு அவர்களுக்கு எல்லா வகையிலும் உதவுவார். எந்த ஒரு வழக்கும் கோலு தர்பார் சென்றால் நிச்சயம் சரியான நியாயம் கிடைக்கும் என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
கோலு தேவதா இன்றும் தனது வெள்ளைக் குதிரையில் சுற்றிப் பயணிப்பதாக நம்பப்படுகிறது. பல குடும்பங்களுக்கு அவர் குல தெய்வமாக திகழ்கிறார்.
நம்ம பக்கம் அய்யனார் கருப்ப சாமி மாதிரி இவரும் வெள்ளை குதிரையில் இருப்பாரு. இந்த கோவிலில்லும் அவர் வெள்ளை குதிரையில் தான் காட்சி அளிப்பார்.
குடும்ப பிரச்சனைகள் தொடர்பான வழக்குகளோ, சட்ட வழக்குகள் தொடர்பான எந்தவொரு பிரச்சினையோ ஒரு வெள்ளை காகிதத்தில் எழுதி கோவிலில் ஒரு மணியுடன் கட்டுவதன் மூலம் தீர்க்கப்படும் அல்லது நிறைவேற்றப்படும் என்று உள்ளூர்வாசிகள் நம்புகிறார்கள். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் தங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக கோலு தேவ்தாவின் இந்த கோவிலுக்கு வருகிறார்கள்.
நீங்களே அங்க வந்து பாருங்க.. எவ்வளவு மணி அங்கே தொங்குதுன்னு.. சிலர் காகிதத்தோடே சேர்த்து மணியையும் கட்டி விடுவாங்க. சிலர் தங்கள் பிரச்சனைக்கு தீர்வு கிடைச்சப்புறம் வந்து கட்டுவாங்க.
சுவாரசியமாக கதையை கேட்டுக்கொண்டே கோவிலுக்கு வந்து சேர்ந்தனர்.
அருணா கூறியதை போலவே கோவிலில் எந்த பக்கம் திரும்பினாலும் மணிகள் தொங்கிக் கொண்டிருந்தது.
பிறகு இவர்களும் தங்கள் கோரிக்கைகளை எழுதி அங்கே கட்டினார்கள்.
நாங்க கோரிக்கை நிறைவேறியதும் திரும்ப வந்து இங்கே மணியை கட்டிக்கிறோம் என்று கூறினார்கள்.
அங்கே காலையில் பிரசாதமாக கோவிலில் அல்வாவும் பூரியும் வழங்கப்பட்டது.
அத்தனை சுவையாக இருந்தது..வயிறு நிறைய அந்த பிரசாதத்தையே காலை உணவாக முடித்துக்கொண்டு அங்கே இருந்து கிளம்பினார்கள்.
ஒவ்வொரு கோவில்களுக்கும் ஒரு சக்தி இருக்கும். இவர்கள் தங்கள் கோரிக்கையை கோலுஜியிடம் ஒப்படைத்ததும் மனசு லேசானதை போல உணர்ந்தார்கள்.
“ஆமா, என்னைய்யா உன் வழக்கு பெரிய வழக்கா இருக்கும் போலவே. பக்கம் பக்கமா எழுதிட்டு இருந்த?”
“நீ பேசுவய்யா.. ஏன் பேசமாட்ட.. உன் தங்கச்சிய கல்யாணம் பண்ணி.. நா படற கஷ்டம் எனக்கு தானே தெரியும்”
“உனக்கெல்லாம் பொண்ணு கிடைச்சதே பெரிய விஷயம்.. இதுல உனக்கு குறை வேறயா?”
“ஆமா..நீ என்ன எழுதின.. சீக்கிரமா முடிச்சிட்டியே?”
“நான் எல்லாம் நச்சுனு நாலு வரியில எதுனாலும் சொல்லி முடிச்சிடுவேன்.”
“நாலு வரிக்கு மேல பேச உனக்கு இதுவரை வாய்ப்பு கிடைச்சதில்லைனு சொல்லு. மேய்க்கிறது எருமை, இதுல ஒரு பெருமை”
“யோவ்.. யாருய்யா எருமை?”
“அப்பா நீங்களும் மாமாவும் இப்படி கலகலப்பா பேசறதை பார்க்க அவ்வளவு ஆச்சர்யமா இருக்கு.. ஆசையாவும் இருக்கு..” என்றான் குரு சிரித்துக்கொண்டே.
பிறகு அங்கே இருந்து ஆர்மி மியூசியம் சென்றனர். மதியம் உணவை முடித்து கொண்டு கசர் தேவி கோவில் சென்றனர். மாலையில் சூரிய அஸ்தமனம் அங்கே உள்ள வியூ பாயிண்ட்டில் பார்த்துவிட்டு இரவு வீடு திரும்பினார்கள்.
ஊருக்கு எடுத்து செல்ல நிறைய பலகாரங்கள் எடுத்து வைத்திருந்தாள் அருணா. அவள் கைகளால் பின்னிய ஷால் பாட்டிகளுக்கும், அம்மாக்களுக்கும், தாத்தாவுக்கு ஸ்வெட்டர், சிறியவர்களுக்கு உடைகள் என்று எல்லாம் எடுத்து வைத்தாள்.
கை நிறைய பைகளும், மனம் நிறைய மகிழ்ச்சியுமாக கிளம்பினார்கள் அப்பாக்கள் இருவரும்.
error: Content is protected !!