Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

"என் வாழ்வில் அர்த்தமாய் நீ

என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 10

என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 10

  முதல் இரண்டு நாட்கள் தனியாக தூங்க இருந்த பயம். அடுத்தடுத்த நாட்களில் குறைந்தது. தனியாக இருக்கிறோம் என்ற உணர்வு மட்டுமே தூக்கத்தை தொலை தூரம் விரட்டியது. மற்றபடி சமாளித்து கொண்டு ஓட ஆரம்பித்தாள்.

 அன்று காலை மாம்பழ வண்ணத்தில் சாப்ட் சில்க் சேலை அணிந்து வந்தவளை ரசனையாக பார்த்தான் மித்ரன்.

“ஹே! பிரவீ சூப்பரா இருக்க. என்ன விசேஷம்?..” என்று சாய் கேட்க.



Advertisement

“உனக்காக தான். இன்னைக்கு சித்ராபௌர்ணமி.. அப்போ வைக்கிற பொங்கல் உனக்கு பிடிக்குமே. அதுதான் விசேஷம்..” லேசான சிரிப்போடு பிரவீனா.

“எனக்காக கொண்டு வந்தீயா பிரவீ..” ஆர்வமாக கேட்டாள்.

“வேற யாருக்காம். பௌர்ணமி பொங்கல் எல்லாம் நைட் வைக்கணும். நீ ஆசைபட்டன்னு தான் காலையில சாமி கும்பிட்டு வச்சு வந்தேன்..” என்று கொண்டு வந்ததை கொடுக்க, சாப்பிட்டு பார்த்தவள்,

Advertisement

“வெரி டேஸ்டி பிரவீ. உன்னால மட்டும் தான் எவ்வளவு டேஸ்டியா செய்ய முடியும். உன்னை அடிச்சு ஆளே இல்ல போ..” என்று சப்பு குட்டி சாப்பிட்டாள்.

Advertisement

மித்ரன் எதையும் கண்டு கொள்ளாதது போல இருக்க.. அவனை பார்த்த சாய்.

“சார் இந்தாங்க.. நம்ம பிரவீனா வச்சு கொண்டு வந்த பொங்கல். ரொம்ப நல்லா இருக்கு.. சாப்பிட்டு பாருங்க..” என்று கொடுக்க,

‘வேணாம் சாய் ஶ்ரீ. நீங்க மேடத்தோட ப்ரெண்ட். உங்களுக்கு ஸ்பெஷல்லா கொண்டு வந்திருப்பாங்க.. நீங்க நல்லா என்ஜாய் பண்ணுங்க” லேசான சடவு அவன் குரலில்…

Advertisement

“ஐயோ! மித்ரன் சார். உங்களுக்கும் தனியா கொண்டு வந்தேன். சாப்பிட்டு பாருங்க” என்று பிரவீனா கொடுக்க,

மித்ரன் முகம் ரகசிய புன்னகை சிந்தியது. அவள் நட்பு வட்டத்துக்குள் தான் நுழைந்து விட்டோம் என்று..

மித்ரனும் சாப்பிட்டு பார்த்து, “பிரவீனா, உண்மையா சொல்றேன். இவ்வளவு டேஸ்ட்டா ஒரு பொங்கல், நான் என் வாழ்க்கையில சாப்பிடாதே இல்லை..” என்று மனம் திறந்து பாராட்ட,

பிரவீனா முகம் மலர்ந்தது. அதை மித்ரன் கண்கள் அவனையும் மீறி படம் பிடிக்க, கண்டு கொண்டான் ரஞ்சன்.

“இப்படி டேஸ்டியா சமைச்சு சாப்பிட்டு தான். நீ அமுல் பேபி மாதிரி இருக்க பிரவீ..” என்றாள் சாய் ஸ்ரீ.

 “ஏய் சாப்பாடு ஒன்னும் காரணம் கிடையாது. கல்யாணம் ஆகி குழந்தை பெத்தா.. எல்லா பொண்ணுங்களும் ஈஸியா வெயிட் போட்டுருவாங்க. உனக்கும் கல்யாணம் ஆகும் இல்ல அப்ப பாரு..” முறுக்கி கொண்டாள் பிரவீனா.

“இல்லப்பா நான் ஒத்துக்க மாட்டேன் உன் சாப்பாடு தான் உன் வெயிட்டுக்கு காரணம்..” என்றதும், மித்ரன்,

“வெயிட்டா இருக்காங்கன்னு சொல்லாதீங்க சாய் ஸ்ரீ.. கண்ணு பட்டுடுமாம், நம்ம பிரவீனா மேடம் சொன்னாங்க.. நீங்க பாட்டுக்கு அவங்களை பார்த்து கண்ணு வச்சுராதீங்க..” என்று பிரவீனா என்றோ சொல்லியதை வைத்து மித்ரன் கேலி பேச,

“அப்படியா பிரவீ.. உனக்கு திருஷ்டி படுமா..” கேலியாகவே சாய் ஶ்ரீயும் கேட்க.

“ஐயே! அன்னைக்கு ஆதிரனை சார் தூக்கும்போது வெயிட்டுன்னு சொல்லவும், குழந்தையை அப்படி சொல்ல கூடாதுன்னு சொன்னேன். எனக்காக ஒன்னும் சொல்லல.. என்னை கண்ணு வைக்கிறதா இருந்தா வச்சுக்கோங்க.. அப்படியாவது நான் வெயிட் குறையிறேனே..” என்று முகத்தை தூக்கி வைத்து பிரவீனா சொல்ல,

“அவ்வளவு தான.. இனி உங்களை கண்ணு வைக்கிறது தான் என் கண்ணுக்கு வேலையே…” சிரிப்போடு மித்ரன் சொல்ல,

சாய் ஸ்ரீ, பிரவீனா இருவருமே அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர்கள் நட்பு வட்டத்தில் இவனும் இருந்தான். சாதாரண கேலியாகவே அவர்கள் கடக்க.. நிறைய கள்ளம் இருந்தது என்னவோ இவன் மனதில் தான். அதை கண்டு கொண்டான் ரஞ்சன். அவனுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி.. மித்ரன், அவன் வாழ்க்கை முறை எல்லாம் நன்றாக அறிந்தவன் இவன். அதே போல உடன் வேலை பார்க்கும் பெண் என்ற முறையில் பிரவீனா வாழ்க்கையும் இவன் அறிந்ததே..

துஷ்டரைக் கண்டால் தூர விலகு என்பது போல் ஆரம்பத்திலேயே ஒதுங்கிப் போன பெண் தான் பிரவீனா. சில நாட்களாக தான் மித்திரனோடு நட்பாக பழகி வருகிறாள். அதற்குக் காரணம் அவனின் மரியாதையான நடத்தையும், நேர்மையான பார்வையும் தான். அதையே கெடுத்துக் கொள்வது போல, இன்று அவனின் ரசனையான பார்வையும், உரிமையான பேச்சும் ரஞ்சனை திகைப்பிற்குள்ளாகியது.

என்னதான் ரஞ்சன், மித்ரனின் நல்ல நட்பாக இருந்த போதும், பிரவீனா மீதான மித்ரனின் பார்வையை நல்ல விதமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. பிரவீனா ஒரு அப்பாவி பெண். கணவனை இழந்து, ஒற்றைப் பிள்ளையோடு, இந்த வேலையை ஆதாரமாகக் கொண்டே வாழ்க்கையில் ஓடிக்கொண்டிருக்கிறாள்.

ஆனால், மித்ரன் அப்படி அல்ல வாழ்க்கையை இலகுவாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று நினைப்பவன். ரெஸ்பான்ஸ்பில்டி, கமிட்மெண்ட்ஸ் எல்லாவற்றையும் தூர நிறுத்துபவன் சொந்த பெற்றோர்களை கூட தள்ளி வைத்து தான் பார்ப்பான். பிரவீனா குடும்பம் என்ற கட்டுக்குள் வாழும் பெண். இந்த உலகத்திலே இல்லாத கணவன் கூட உண்மையாக, நேர்மையாக இருப்பவள். இருவரும் எவ்வாறு ஒரே நேர்கோட்டில் நிற்க முடியும். அப்படி நிற்பது சாத்தியமே இல்லாத ஒன்று.. மித்ரன் பார்வை தவறானதே என்று முடிவுக்கு வந்தான் ரஞ்சன்.

மித்ரன் நண்பனை கவனிக்கவே இல்லை அவன் பார்வை முழுக்க பிரவீனா மீதுதான்.. சாய் ஸ்ரீ இன்னும் பிரவீனாவை கிண்டல் பண்ணி சிரித்துக் கொண்டிருக்க,

“இங்க பாரு..” என்று தன் போனை எடுத்து முன்பு சேவ் பண்ணி இருந்த போட்டோக்களை காட்டினாள் பிரவீனா.

 “பாரு நான் என்ன அவ்வளவு குண்டாவா இருக்கேன்” என்று பிரவீனா கேட்க.

 “ஹே! போட்டோ சூப்பரா இருக்கு பிரவீ.. எப்ப எடுத்தது, மாசமா இருக்க போல..”

 “சித்ராபௌர்ணமிக்கு எடுத்தது. அப்போ எனக்கு ஆதிரன் எட்டு மாசம். பொங்கல் வைக்க வேணாம்னு சொல்லியும், நான் கேட்காம விரதம் இருந்து, அன்னைக்கு ராத்திரி பௌர்ணமி பார்த்து பொங்கல் வச்சு, மாமா கூட சேர்ந்து நின்னு இந்த போட்டோ எடுத்தேன். இதுதான் என்னுடைய கடைசி சித்ரா பௌர்ணமி பொங்கல் சாய். அதுக்கப்புறம் எத்தனையோ பௌர்ணமி கடந்தும் எனக்கு அந்த நினைப்பு வரவே இல்லை..” விரக்தியாக சொன்னாள் பிரவீனா.

 “மித்ரன் சார் இங்க பாருங்க நம்ம பிரவீனாவ.. எவ்வளவு ஒல்லியா, அழகா இருக்கிறத.. உண்மையாவே நீயா பிரவீ.. இவ்வளவு ஒல்லியா அழகாவா இருந்த?..” ஆச்சரியமாக கேட்டுக் கொண்டிருந்தாள் சாய் ஸ்ரீ.

மித்ரனும் வாங்கி பார்த்தான். இன்று தான் இளங்கோவை பார்க்கிறான். இளங்கோ நல்ல கலர். ஆதிரன் ஜாடை பிரவீனா மாதிரி இருந்தாலும், கலர் எல்லாம் இளங்கோவை கொண்டு போல, நினைத்துக் கொண்டான் மித்ரன். இளங்கோ நல்ல உயரமாக அதற்குத் தக்க உடல் அமைப்போடு பார்க்க நன்றாக இருந்தான். அவன் அருகில் குட்டி எலி மாதிரி இருந்தது பிரவீனா தான்.

ஆனால், மித்ரன் கண்கள் என்னவோ பிரவீனாவை வட்டம் அடித்தது. இளம் மஞ்சள் நிற காட்டன் சேலையில், எட்டு மாத நிறைவயிற்றோடு, தலை நிறைய பூவும், நெற்றியில் குங்குமம் முகம் முழுக்க புன்னகையுமாக, இளங்கோவை ஒட்டி நின்றிருந்தாள் பிரவீனா. இப்போதிருக்கும் பிரவீனாவிற்கும் அப்போதிருந்த பிரவீனாவிற்கும் பத்து வித்தியாசங்கள் கண்டுபிடித்து விடலாம் அப்படி இருந்தது தோற்று அமைப்பு. வாழ்க்கையில் நிறைய அடிபட்டு இருக்கிறாள் என்று உணர்ந்தான் மித்ரன்.

மொபைலில் அடுத்தடுத்த படங்களை தள்ளி பார்த்தான். விண்டேஜ் பிரவீனாவை பார்த்ததும் மித்ரனின் கண்கள் ரசனைக்கு தாவியது அவனையும் அறியாமல்… வேற யாரும் அவனை கண்டு கொள்ளவில்லை ரஞ்சனைத் தவிர..

அன்று மதிய இடைவேளை போகும் போதே மித்ரனை தனியாக தள்ளிக் கொண்டு வந்து விட்டான் ரஞ்சன்.

“என்னடா மச்சான்?..”

“அதான்டா நானும் கேட்கிறேன். உனக்கு என்னடா மச்சான் ஆச்சு. பிரவீனா சிஸ்டரை ஏன் அப்படி பாக்குற?..”

“எப்படி பார்த்தாங்க. நான் சாதாரணமாகத்தான் பார்த்தேன்..”

“பொய் சொல்லாத மித்ரன் நான் உன் பிரண்டு. நீ யாருன்னு எனக்கு நல்லா தெரியும். உன் பார்வை சரி இல்ல, வேணாம் விட்டுடு..”

“என்னடா என் பார்வை சரி இல்லை. ஏதாவது தேவையில்லாம பேசாத..” என்றான் காட்டமாக.

“சும்மா என்கிட்ட கத்தாத மித்திரன். உனக்கே நல்லா தெரியும் பிரவீனா குடும்ப பொண்ணு..” அப்படி ரஞ்சன் சொன்னதும் மித்ரனுக்கு அவ்வளவு கோபம்.

“அப்ப நான் குடும்ப பையன் இல்லையா? எனக்கும் தான் குடும்பம், அக்கா, மாமா, பிள்ளைகள் எல்லாம் இருக்காங்க..”

“மித்ரன் வேணாம். நான் என்ன அர்த்தத்துல சொல்றேன்னு உனக்கு நல்லா புரியும். உன் வாழ்க்கை முறை, வேற உன் டேஸ்ட் வேற.. அவங்க வேற, பாவம்டா அந்த பொண்ணு ரொம்ப அப்பாவி. உன் பார்வையோட அர்த்தம் கூட அந்த பொண்ணுக்கு தெரியல.. அவங்க உன்ன ரொம்ப நம்புறாங்க. அதுக்கு உண்மையா இரு மித்ரன்..”

“இப்போ என்ன தப்பு நடந்து போச்சுன்னு நீ குதிக்கிற.. நான் ரொம்ப ஃப்ரெண்ட்லியா தான் பழகுறேன். பிரவீனாவே ஒன்னும் சொல்ல கிடையாது உனக்கு என்னடா வந்துச்சு” எகிறினான் மித்ரன்.

“சரி மித்ரன் நான் கேட்கிற ஒரு கேள்விக்கு பதில் சொல்லு?..”

“என்ன?”

“பிரவீனா சிஸ்டர் நீ லவ் பண்றியா டா?..” எதையும் யோசிக்காமல் பட்டென்று கேட்டு விட்டான் ரஞ்சன்.

“என்னடா கேக்குற?” அவன் கேள்வியில் மித்ரன் கொஞ்சம் ஆடித்தான் போனான்.

 இதுவரை அப்படி ஒரு கோணத்தில் பிரவீனாவை யோசித்தது கிடையாது. இந்தப் பெண் தன்னை பாதிக்கிறாள் என்று நன்கு அறிவான். தன்னையும் மீறி தன் பார்வை கட்டுப்பாட்டை இழந்து அவள் பின் அலையுது என்று நன்றாக தெரியும். மனம் போன திசையில் பார்வையை மேய விட்டவன். ஒரு நாள் கூட பிரவீனாவை காதல் என்ற அர்த்தத்தில் யோசிக்கவில்லை. இன்று பட்டென்று ரஞ்சன் கேட்கவும், பதில் சொல்லத் தெரியாமல் தடுமாறினான்.

“பிரவீனா பத்தி நமக்கே நல்லா தெரியும். கணவன் இல்லாம, ஒரு குழந்தையை வச்சிட்டு தினமும் வாழ்க்கைய போராட்டமா எதிர்கொள்ற பெண். உன்னோட கோட்பாடுகளுக்கு மொத்தமும் பொருந்தாத பொண்ணு அது.. தேவையில்லாம உன் மனசு அலைபாய விட்டு, பிரவீனா மனசுல சலனத்தை ஏற்படுத்தாத மித்ரன். கல்யாணத்துக்கான வரையறை உனக்கு வேறு.. பிரவீனாவுக்கு வேறு.. வாழ்க்கையில நிறைய கஷ்டத்தை மட்டுமே பாக்குற பொண்ணுக்கு ஒரு பொய்யான நம்பிக்கையை கொடுத்து ஏமாற்றி விடாதே..”என்றதும் பதறி போய்,

“ரஞ்சன் என்னடா?..” என்றான் மித்ரன்.

 “உண்மைய தான்டா சொல்றேன். உன் கேரக்டர் என்னன்னு உனக்கே நல்லா தெரியும். உன் வாழ்க்கை முறைய நான் தப்பு சொல்லல.. ஆனா பிரவீனா சிஸ்டர் ஓட கொள்கை, வாழ்க்கைய பத்தின அவங்களோட நம்பிக்கை வேற.. ஃபர்ஸ்ட் உன்னால கடைசி வரைக்கும் ஒரு பொண்ணோட வாழ்க்கையை கொண்டு போக முடியுமான்னு யோசி.. ரெண்டு பேரும் எதிரெதிர் துருவங்கள். உனக்கு அவங்க மேல விருப்பம் இருந்தாலும் கூட இணைய முடியாது. புரிஞ்சுக்க மித்ரன். பாவம் அந்த பொண்ணு ஏதாவது உதவி செஞ்சு வேலையில் தூக்கி விடு, வாழ்க்கையில கவுத்து விட்டிராத…” கண்டிப்பாக சொல்லி விட்டான் ரஞ்சன்.

 மித்ரன் முகம் ஒரு மாதிரி வாடி போனது. அவனுக்கே அவன் மனம் என்ன நினைக்கிறது என்று சொல்ல தெரியவில்லை. பிரவீனா மீது ஒரு ஈர்ப்பு இருக்கு.. அதன் அடுத்த கட்டம் என்னவென்று அவனுக்கு தெரியவில்லை. ரஞ்சன் எடுத்துச் சொன்ன பின், அவன் மேலே அவனுக்கு சந்தேகம் வந்துவிட்டது.

அதன் பின் அவன் யாரோடும் பேசவில்லை முழுக்க முழுக்க அமைதி தான். இதுவரை ஒரு நாளும் மித்திரனை இவ்வளவு அமைதியாக யாரும் பார்த்திருக்க முடியாது. அலுவலக முடிந்து வீட்டுக்கு கிளம்பும் வரை கூட முழு அமைதியில் தான் இருந்தான் மித்ரன்.

எப்பவும் போல பால்கனி கம்பியில் கைகளை ஊன்றி வானம் பார்த்து நின்று விட்டான். அவன் மனமே அவனிடம் வாதாட தொடங்கி விட்டது. ரஞ்சன் சொன்னது முழுக்க முழுக்க உண்மையே.. தன்னால் ஒரு பெண்ணோடு வாழ்க்கை முழுக்க கடக்க முடியாது.

பிரவீனா மேல் அவனுக்கு அவள் நிலையை குறித்து பரிதாபம், ஈர்ப்பு, ஆச்சரியம் அனுதாபம் என்னவெல்லாம் சொல்லிக் கொள்ளலாம்.. காதல் இருக்கா என்ற கேள்விக்கு அவனுக்கு பதில் தெரியவில்லை. காதலே இல்லை எனும் பொழுது கல்யாணம் வரை எல்லாம் யோசிக்க மாட்டான் மித்ரன்.

பிரவீனா மீதான தன் ரசனையான பார்வையை இனி குறைத்துக் கொள்ள வேண்டும்.. இல்லை முழுதாக அகற்றி விட வேண்டும். இந்த ப்ராஜெக்ட் முடிந்ததும் பிரவீனாவை வேற டீமுக்கு மாற்றி விடலாம். வேண்டாம்.. பிரவீனா நினைவு, சிந்தனை எதுவும் வேண்டாம் மித்ரன். உன் கொள்கை, கோட்பாடு என்பது முற்றிலும் வேறு.. அதில், பிரவீனா கிடையாது. தெளிவாக யோசித்து முடிவு எடுத்து கொண்டான்.

அடுத்த நாளிலிருந்து பிரவீனா பக்கம் பார்வையை செல்ல விடாமல் தடுத்து நிறுத்த முயற்சித்தான். ஆனால் முடியவில்லை. குதிரைக்கு கடிவாளம் கட்டுவது போல கட்டி விட்டாலும் பார்வை பிரவீனா பக்கம் தான் போகும் போல.. தன்னையே நொந்து கொண்டான் தான் ஏன் இப்படி மாறிப்போனோம். எவ்வளவு முயற்சித்தாலும் ஒரு அரை மணி நேரம் தான். அதற்குப்பின் அவன் மனமே அவன் கட்டுப்பாட்டை மீறி அவள் பக்கம் பார்வையை கொண்டு சென்று விடும். அவளின் சிரிப்புச் சத்தம் முதல், ஒரு சின்ன அசைவு கூட அவனின் ஓரப்பார்வையில் கண்டு கொள்வான்.

இதற்கு மேல் முடியாது மித்ரன். உன் மனமும், உடலும் ஒரு பொண்ணைத்தான் தேடுகிறது போல.. என்று தனக்கு தானே முடிவு செய்து கொண்டவன். இரண்டு நாட்களாக ஒரு பெண்ணிடம் போன் கால் மூலம் டேட்டிங் செய்து கொண்டிருக்கிறான்.

அந்த சண்டே மாலில் சினிமா போகலாம் என்று ஒரு பிளான். அந்தப் பெண்ணுக்கு வந்து விட்டதாக, இன்பார்ம் பண்ணிவிட்டு.. மாலில் தன் காரை பார்க் செய்து மேலே சென்றான்.

அவள் எங்கே என்று தேடும் முதலே மித்ரன் கண்ணில் பட்டது பிரவீனா தான். ஆதிரனோடு வந்திருந்தாள். இவனை கவனிக்கவில்லை. இவனும் கண்டுகொள்ளாமல் போக முயற்சித்து நான்கடி எடுத்து வைத்தவன், பின் மனம் கேட்காமல் அவளைத் தொடர்ந்தான்.

“ஹாய் பிரவீனா”

நிமிர்ந்து பார்த்தவள், “ஹலோ சார். நீங்க எங்கே?”

குனிந்து ஆதிரனை தூக்கி கொண்டவன், “எவ்வளவு நாள் ஆச்சு உன்னை பார்த்து..” என்று கன்னத்தில் முத்தமிட்டான். அதன் பிறகு தான்,

“சும்மாதான் பிரவீனா. சண்டே வீட்ல போர். அதான் வெளியே வந்தேன்” என்னவோ அவனுக்கு ஒரு பெண்ணோடு வெளியே வந்தேன் என்று சொல்ல மனம் வரவில்லை.

“நீங்க?.. மால் எல்லாம் வந்து இருக்கீங்க.. அதிசியம் தான்” என்றவன், அங்கிருக்கும் உணவு கடை நோக்கி நகர்ந்தான்.

“சார், எதுவும் வாங்கி கொடுக்காதீங்க. இப்பதான் ஜூஸ், பர்கர் சாப்பிட்டான் போதும்” என்றவாறு அவன் பின்னோடு நடந்தவள்,

 “இங்க குழந்தைகளுக்கான கார்ட்டூன் படம் வந்து இருக்காம். அவன் கிளாஸ்ல எல்லாரும் பாத்துட்டாங்களாம். என்னை மட்டும் கூட்டிட்டு போகலைன்னு சொல்லி நேத்து முழுக்க ஒரே அழுகை. இன்னைக்கு சண்டே வேற.. வீட்டிலேயே வைத்து இவனை சமாளிக்க முடியாது. அதாங்க கூட்டிட்டு வந்துட்டேன். வீட்லயும் யாரும் இல்லை. நானே தான் கூட்டிட்டு வந்து கூட்டிட்டு போகணும்..” சாதாரணமாக பேசிக்கொண்டு நடந்தாள்.

என்ன படம்? எத்தனை மணிக்கு ஷோ? எந்த தியேட்டர் என்றெல்லாம் விவரங்களை அக்கறையாக கேட்டுக் கொண்டான் மித்ரன். அவனுக்கு தான் வந்த வேலையை மறந்து விட்டது.

பிரவீனாவை பொறுத்தவரை மித்திரன் ரொம்ப கண்ணியமானவன். மிக மரியாதையானவன். அவன் தனிப்பட்ட வாழ்க்கை எப்படி இருந்தாலும் உடன் வேலை பார்க்கும் பெண்களிடம் மிக மிக நேர்மையாக நடந்து கொள்பவன். அதுவே அவனோடு நட்பாக பழக வைத்தது.

ஆதிரன் எதுவோ கேட்க. அதை வாங்கி கொடுத்தபடி பிரவீனாவிடம் என்னவோ கேட்டுக் கொண்டிருந்தான்.

“ஹாய் மித்ரன். நீங்க இங்கேயா இருக்கீங்க. உங்களை பார்க்கிங்ல தான நிக்க சொன்னேன்..” என்று வந்தாள் நேத்ரா.

அதன் பிறகு தான் மித்ரனுக்கு எதற்கு வந்தோம் என்ற நினைவே வந்தது. ஒரு மாதிரி கள்ளத்தொடர்பில் மாட்டிக்கொண்ட கணவன் போல திருட்டு மொழியோடு பிரவீனாவை பார்த்தான்.

“நாசமா போச்சு. இப்போதான் கொஞ்ச நாளா, நல்ல மாதிரியா பழகிவாறாங்க. இனி பேசின மாதிரி தான்..” என்று நினைத்து கொண்டே,

“ஹாய் நேத்ரா..” என்றான் சம்பிரதாயமாக.

 “என்ன தன்னை வர சொல்லி விட்டு இவர்களோடு சேர்ந்து நிற்கிறான். தனியாக வருவது போலவும் தெரியவில்லையே” என்று யோசித்து கொண்டு நின்றாள் நேத்ரா.

“உங்க ப்ரெண்ட்டா சார் இவங்கள பாக்க தான் வந்தீங்களா? நீங்க போங்க சார். அவன் சாப்பிட்டான் நான் பாத்துப்பேன்” என்று அந்தப் பெண்ணிடம் அறிமுகப் புன்னகையை சிந்தி விட்டு, தொந்தரவு செய்யாமல் மகனை தூக்கிக் கொண்டு நகர்ந்தாள் பிரவீனா.

என்ன எதுவும் சொல்லாமல் நகர்ந்து விட்டாள். உரிமையாக கோபப்படலாம், ரெண்டு வார்த்தை திட்டி இருக்கலாம், முகத்தை தூக்கிக்கொண்டாவது சென்றிருக்கலாம்.. எதுவும் சொல்லாமல் சாதாரணமாக நகர்ந்து விட்டாள். தான் ஒரு பெண்ணோடு சேர்ந்து நின்றால் இவளுக்கு ஒன்றுமே இல்லையா? மித்ரனே புலம்பி போய் நின்றான்.

“வாங்க மித்ரன். அந்த பக்கம் போய் உட்காருவோம். நமக்கு இன்னும் ஷோக்கு டைம் இருக்கு..” என்று நேத்ரா அவன் கை பிடித்து நகர.. மித்ரன் பார்வை முழுக்க அங்கு ஓரமாக அமர்ந்திருந்த அம்மா, மகன் மீதுதான்..

அவர்கள் இவனை பார்வையால் கூட தொடரவில்லை. அது ஒரு பெரிய ஏமாற்றமாக இருந்தது மித்திரனுக்கு..

நேத்ரா ஏதேதோ பேச.. மித்ரன், அவளில் கவனம் இல்லாமல் அமர்ந்திருந்தான். என்னவோ போல இருந்தது அவர்கள் இருவரையும் தனியாக விட்டு வந்தது. தன்னைத் தப்பாக நினைத்திருப்பாளோ என்று கவலையாகவும் இருந்தது.

நேத்ரா ஒரு மாதிரியாக அவனைப் பார்த்தாள். தன் மேல் அவனுக்கு ஆர்வம் இல்லையோ..

“மித்ரன் டைமாச்சு போகலாமா?” என்று அவள் கேட்க.

“ம்ம், போகலாம். என்ன மூவி?”

“ஹாலிவுட் மூவி..”

“அது சுத்த போர். டிஃபரண்டா ட்ரை பண்ணலாமா?.. குழந்தைகளுக்கான ஒரு கார்ட்டூன் படம் வந்திருக்காம்.ரொம்ப நல்லா இருக்குன்னு என் ஃப்ரெண்ட் சொன்னான். அங்க போலாமா” என்று மித்ரன் கேட்க.

பிடித்தமின்மையை அப்பட்டமாக வெளிக்காட்டினாள் நேத்ரா. அவள் என்னவோ நினைத்து வர, இவன் வேற மாதிரியாக இருந்தான்.

“எனக்கு பிடிக்கல” நேராகவே சொல்ல,

“இட்ஸ் ஓகே நேத்ரா. எனக்கு அங்க போக தான் புடிச்சிருக்கு. பரவாயில்லை, நாம இன்னொரு நாள் சேர்ந்து படத்துக்கு போலாம். நீங்க இப்ப வீட்டுக்கு போங்க..” என்று கூலாக சொல்லி விட்டான் மித்ரன்.

அவள் முகம் உண்மையில் கோபமாக மாற.. இவன் கண்டு கொள்ளாமல் பிரவீனாவை தேடினான். அங்கு அவர்கள் இல்லாமல் போகவும்,

“பை நேத்ரா. நாம இன்னொரு நாள் பார்க்கலாம், டைம் இருந்தால்..” என்று சொல்லி விட்டு.. அவசரமாக கார்ட்டூன் படத்திற்கு ஒரு டிக்கெட்டை வாங்கிக்கொண்டு, பிரவீனா எங்கே என்று தேடி ஓடினான்.

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!