Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

"என் வாழ்வில் அர்த்தமாய் நீ

என் வாழ்வில் அர்த்தமாய் நீ அத்தியாயம்23!..

என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 13

   அடுத்தடுத்து வந்த நாட்களில் பிரவீனா, மித்ரனிடம் ஒரு ஒதுக்கத்தை காண்பித்தாள். பார்த்தால் தெரியாத அளவுக்கு… பார்க்கும் போது ஒரு சிரிப்பு, கிளம்பும் போது தலையசைப்பு, புராஜக்ட் சம்மந்தமான வேலைகள் மட்டும் அலசப்படும். மித்ரன் விரைவில் கண்டு கொண்டான்.

முன்பு போல இல்லாமல் ஒருத்தர் மேல் ஒருத்தருக்கு மரியாதையும், நட்புணர்வும் சமீபமாக அதிகம் இருந்தது. பிரவீனா, தன் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயங்களை அவனிடம் பகிர்வதும், ஒரு நட்புணர்வோடு அவனுக்கு அட்வைஸ் செய்வதும் என்று இருந்தவள் பட்டென்று தள்ளி நின்றாள். மித்ரன், தான் கொஞ்சம் அதிகப்படியாக நடந்து கொண்டோமோ என்ற ஒரு எண்ணம். இப்போதுதான் கொஞ்சம் சகஜமாகி வந்தாள். அதிகப்படியாக அக்கறை காட்டி அடித்து ஒதுங்க விட்டாயிற்று போச்சு போ.. இனி, எவ்வாறு சமாதானம் செய்ய?…

 பிரவீனாவின் கலகலப்பேச்சு இல்லாமல் மித்ரனுக்கு வேலையே ஓடவில்லை. ரொம்ப ஜாலி டைப் என்றெல்லாம் அவள் கிடையாது தான். ஆனால், ஒரு அளவுக்கு நன்றாக பழகக் கூடிய பெண். அந்த சகஜ மனப்பான்மை இல்லாமல் போகவும், இவனுக்கு என்னவோ போல் இருந்தது. அவனும் பேச்சு கொடுத்து முயன்று பார்க்க லேசான சிரிப்பு, ஒரு தலையசைப்பு இல்லையென்றால் வேலை இருப்பது போல் கணினியில் தலையை விட்டுக் கொள்வது… மித்ரா, உம் பாடு திண்டாட்டம் தான். லேசாக அக்கறை காட்டியதற்கே முக்கா கிலோமீட்டர் தள்ளி ஓடும் பெண் நீ அவளை ரசிக்கிறாய், அவள் மீது லேசான சலனமும் உண்டு என்றெல்லாம் கண்டுகொண்டால் அவ்வளவுதான். பிரவீனா ஒரு வட்டத்தில் இருக்க மித்ரன் முகம் தொங்கி போய் சுற்றிக் கொண்டிருந்தான்.



Advertisement

ரஞ்சன் இருவரையும் பார்த்தவன் என்னவோ உள்நாட்டு போர் போல என்று நினைத்துக் கொண்டான்.

“சாய், நாளைக்கு என் தம்பி பொண்டாட்டிக்கு தாலி பிரிச்சு கோர்க்குறாங்க… நீயும் வந்துடு…” என்று பிரவீனா சொல்ல,

“உங்க வீடு எனக்கு அலர்ஜி பிரவீ. நான் மாட்டேன்…”

Advertisement

ஹே! பிளீஸ் நீயும் வா சாய். நீ வந்தா நான் உன் பின்னாடியே இருந்துப்பேன். தனியா இருக்குற ஃபீல் இருக்காது…” என்று அவள் வருந்தி சொல்லவும், அவளுக்காக மட்டுமே வர சம்மதித்தாள் சாய் ஶ்ரீ. மற்றபடி பிரவீனா வீட்டு பழக்க வழக்கம் அவளுக்கு கோபத்தை கொடுக்கும்…

Advertisement

“ஹே காய்ஸ்! நாளைக்கு ஒரு கெட் டு கெதர் பிளான் போடலாம?…” பிரவீனாவை சமாதானம் செய்ய பிளான் செய்தான் மித்ரன்.

“நீங்க போயிட்டு வாங்க சார். எங்களால வர முடியாது. நாளைக்கு பிரவீனா வீட்ல ஒரு பங்க்ஷன்.. என்னை இன்வைட் பண்ணி இருக்கா…” என்று சொன்னது சாய் ஸ்ரீ.

மித்ரன், பிரவீனா முகம் பார்க்க.. அவள் அமைதியாக தான் இருந்தாள். அதுவே மித்ரனுக்கு முகம் சுருங்கி போனது. அவள் வீட்டில் ஒரு பங்க்ஷன் தன்னை அழைக்கவில்லையே… தன்னிடம் சொல்ல கூட இல்லை. அப்படி என்ன என்னிடம் கூட பகிர்ந்து கொள்ள முடியாதது. ரொம்ப ஆதங்கமாக இருந்தது அவனுக்கு… ஆனால் உரிமையோடு போய் அவளை கேட்க முடியாதே…

Advertisement

இந்தப் பெண்கள் தான் எவ்வளவு தந்திரவாதிகள். தங்களின் வாழ்க்கையின் கடந்த காலத்தை பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு நட்போடு பழகி விட்டு… இன்று யாரோ எவரோ போல்… முன்பின் தெரியாத மாதிரி எப்படி இருக்க முடியும். நமக்கெல்லாம் இது ஆகாது. எதையும் நேருக்கு நேராக முகத்தைப் பார்த்து கேட்டு பழக்கம்.

அன்று அலுவலகம் முடிந்து செல்லும் வரை கூட தன் வீட்டில் ஒரு பங்க்ஷன் என்று மித்ரனுக்கு, பிரவீனாவிடமிருந்து அழைப்பு வரவே இல்லை.

“பாய் மித்ரன். நாளைக்கு பாப்போம். காலையில சீக்கிரம் வரேன்…” என்று ரஞ்சன் சொல்ல, ஒரு தலையசைப்பை மட்டுமே பதிலாக கொடுத்தான் மித்ரன்.

“என்ன ஆச்சுடா, பல் எதுவும் வலிக்குதா.. பேச முடியலையா?…”

“பேச வேண்டிய ஆள் பேசல. அதனால, நானும் பேசாம இருக்கேன்…” என்றான் மித்ரன்.

“அப்படி யார் உன்கிட்ட பேசாம இருக்குறது?…”

“அது யாரோ?…”

“அந்த யாரோ யாரு?…” யோசனையாக பார்த்தான் ரஞ்சன். அவன் பார்வை லேசாக பிரவீனா பக்கம் சென்று வந்தது.

உண்மையில் அவள்… அவர்கள் பேச்சை கவனிக்கவே இல்லை. அது தான் அதிக வருத்தம் மித்ரனுக்கு… அவனுக்கு எல்லாம் பிரவீனா லேசாக முகம் சுண்டி பேசினால் கூட, பார்வை அவளை விட்டு நகராது. இவள் என்னவென்றால் என் தலையில் இடி விழுந்தால் கூட கண்டுகொள்ள மாட்டாள் போல… ரஞ்சன் பார்ப்பதை கவனித்தான்,

“அதான் யாரோன்னு சொன்னே இல்ல.. அப்புறம் என்ன யாருன்னு கேக்குற? பாய் சொல்லி அரை மணி நேரம் ஆகுது. கிளம்புற வழியை பாரு…” கடுப்பாக சொன்னான் மித்ரன்.

“நான், உன்னை என்னடா பண்ணேன். நட்பேன்னு ஒரு கேள்வி கேட்டது தப்பா?…”

“தப்புதான். நீ தான் முதல்ல என்ன கண்ணு வச்ச… அதனாலதான் ப்ரோக்ராம் சக்ஸஸ் ஆகாம போச்சு…”

“நான், உன்னை கண்ணு வச்சேன்னா எப்ப இருந்துடா மச்சான் இப்படி எல்லாம் பேச பழகிட்ட…”

“அது யார்கிட்டயோ பழகுன தோஷம் மச்சான்”

“லவ் பெயிலியர் அளவுக்கு வந்துருச்சா விசயம்?…”

“டேய்! நான் உன்னை அப்பவே கிளம்ப சொல்லிட்டேன். ஓடிப் போயிரு…” கோபமாக மித்ரன் சொல்ல,

“அப்ப விஷயம் அது இல்லையா?… அப்புறம் எதுக்குடா தாடி வளக்குற அளவுக்கு முகத்தை சோகமா வச்சிருக்க”

“நீ இன்னும் போகலையா..” என்று மித்ரன் அதட்டல் போட்டதும் தான் கிளம்பினான் ரஞ்சன்.

 பிரவீனா, வீட்டு பக்கம் தாலியில் குண்டு, காசு சேர்ப்பதெல்லாம் நாத்தனார் தான் செய்ய வேண்டும். என்னதான் பிரவீனா மூத்த நாத்தனாராக இருந்த போதும்.. அவள் வாழ்க்கை விருட்சமாக இல்லாததால், எப்படியும் ப்ரீத்தியை வைத்து தான் எல்லா சடங்கும் செய்வார்கள். அதில் பிரவீனாவுக்கு வருத்தம் ஒன்றும் இல்லை. அவளும் ஒதுங்கி இருக்க தான் நினைக்கிறாள்.

பெற்றவர்களுக்கு என்னதான் மகள் என்ற பாசம் இருந்த போதும்.. பொது சபையில் அவளை முன்னிறுத்தும் போது சில சலசலப்புகள் வரும். அது எதற்கு என்று பிரவீனாவே ஒதுங்கிக் கொள்வாள். இங்கு, அவளுக்கு தலைவலியாக இருப்பது, அவள் ஒதுங்கி நிற்க விடமாட்டார்கள். அது என்னவோ அவள் ஒதுங்கி நின்றால் அது அவளுக்கு செய்யும் அநியாயமாக கருதுவார் மகேஸ்வரி. அவள் நாத்தனாராக முன் நின்று எந்த சடங்கும் செய்யக்கூடாது. ஆனால், அவள் உடன் இருக்க வேண்டும். அது ஏன் என்று பிரவீனா ஒதுங்கிக் கொள்ள, அவளை இழுத்து நிறுத்துவார் மகேஸ்வரி. இது அவர்களுக்கு பெருந்தன்மையாக இருக்கலாம். ஆனால், அத்தனை பெண்களுக்கு மத்தியில் ஒதுக்கப்பட்டதன் வலி இவள் மட்டுமே அறிவாள்.

இப்படித்தான், பிரேம் கல்யாணத்தின் போதும் நடந்தது. அக்காவாக தாலி எடுக்க, மாலை எடுக்க, செய்முறை செய்ய என்று எல்லாவற்றிலும் பிரவீனா பங்கெடுக்க சரி என்றவர்கள். நாத்தனார் முடி போட மட்டும் ப்ரீத்தியை தான் தேர்வு செய்தார்கள். தன் மகளை எங்கும் விட்டுவிடவில்லை என்பதற்காகவே அவளை அழைத்து மேடையில் நிறுத்த, அப்போதுதான் பிரவீனா தள்ளி நின்றது. இந்த மரியாதை எனக்கு வேண்டாம். என்ன இருந்தாலும் அவன் உடன் பிறந்தவள் நான்… என் கடமையை நான் சரியாக செய்கிறேன். அவ்வளவுதான்!…

ஃபங்ஷன் சின்னதாக வீட்டில் தான் ஏற்பாடு செய்திருந்தார்கள். முன்பே தன்னை தயார் செய்து, மகனையும் தயார் செய்து அங்கு போடப்பட்டிருந்த ஒரு இருக்கையில் மகனோடு சேர்ந்து அமர்ந்து கொண்டாள் பிரவீனா. சாய் ஸ்ரீ வந்தால் அவள் பொழுது அவளோடு சென்று விடும்.

“பிரவீ! என்னடி வெளி ஆள் மாதிரி ரெடியாகி சேர் போட்டு உட்கார்ந்து இருக்க?… போ போ.. போய் வந்தவங்களுக்கு காபி கொடு, பாய விரிச்சு விடு, கிச்சன்ல நீ வைக்கிற உருளைக்கிழங்கு கூட்டு தான் நல்லா இருக்கும்னு சித்தி சொல்லிட்டு இருந்தா.. அதை என்னன்னு பாரேன்…” என்று மகேஸ்வரி வேலையை அடுக்க, எதிர்க்கும் அசராமல் அமர்ந்து கொண்டாள் பிரவீனா.

“என்னடி யாரோ போல உக்காந்திருக்க… உன் தம்பிக்கு விசேஷம். நம்ம வீட்டுக்கு தான் ஆளுக வராங்க. யாருக்கோ என்னவோ போல இருக்க. இவ்வளவு திமிரு ஆகாதுடி…” என்றதும், தாயை நிமிர்ந்து பார்த்தாள்.

முகம் சாந்தமாக இருந்தது. அமைதியான வார்த்தைகள் தான் வெளி வந்தது…

“ஏன் ம்மா, நான் மல்லிகை பூவை வெட்டி வச்சா, சந்தனம் குங்குமத்தை கலந்து வச்சா, வெள்ளி குத்துவிளக்குல விளக்கு போட்டா ஆகாதுன்னு சொல்ற நம்ம சொந்த பந்தம், நான் போடற காப்பியை மட்டும் குடிக்குமா? நான் செய்ற உருளைக்கிழங்கு கூட்டு மட்டும் அவங்களுக்கு இனிக்குமா?…” என்று கேட்க.

“பிரவீ.. என்னடா என்ன சொல்ற…” பதறினார் மகேஸ்வரி.

பிரவீனா சொல்வது உண்மைதான். காலையிலே அவள் சீக்கிரம் எழுந்து கொண்டாலும், காபி போடவும், பாத்திரம் கழுவவும், வீடு கூட்டவும் பிரவீனா வா என்று சொன்னவர்கள், வந்திருக்கும் சொந்தங்களுக்கு கொடுக்க மல்லிகை பூவை வெட்டி வைக்கவும், மஞ்சள் குங்குமத்தை கலந்து வைக்கவும், சாமியாரையில் பூஜை செய்து விளக்கு போடவும், தாம்பாள தட்டை ரெடி செய்யவும் ப்ரீத்தியை மட்டுமே அருகில் வைத்துக் கொண்டார். அவர்கள் யாருக்கும் மறந்தும் கூட பிரவீனாவை உள்ளே அழைக்கவில்லை. அப்புறம் மேல் வேலைக்கு மட்டும் நான் எதற்கு?… தள்ளியே நின்று கொண்டாள் அவள்…

வெளியில் முகம் நிர்மலமாக இருந்தது. சின்ன சடவு கூட பிரவீனா முகத்தில் இல்லை. மிக எதார்த்தமாக சாந்தமாக இருந்தாள். ஆனால், உள்ளுக்குள் வலித்தது. சாதாரண பெண் ஜென்மம் தானே… எப்படி வலி இல்லாமல் இருக்கும். அதுவும் சொந்த குடும்பத்தில், உடன் பழகிய சொந்த பந்தங்களே தள்ளி நிறுத்தும் பொழுது நிச்சயம் வலிக்கத்தான் செய்யும். வேண்டாம் பிரவீ, இவர்களுக்காக எல்லாம் இவ்வளவு ஃபீல் பண்ணி, உன்னை வருத்தி கொள்ளாதே… உனக்கு உன் மகன் இருக்கிறான். வேற யார் வேண்டும். கொஞ்சம் மீண்டு கொண்டாள் பெண்.

சடங்குகள் ஆரம்பிக்க சாய் ஸ்ரீ தோழிக்குத் துணையாக வந்துவிட்டாள். அதன் பின் பிரவீனா சலசலவென்று தன் நட்போடு பேச இணைந்து கொண்டாள். ப்ரீத்தி தான் நாத்தனார் முறையில் முன் நின்று எல்லாம் செய்தது. அழகான காஞ்சி பட்டில் கழுத்து நிறைய நகையும், தலை நிறைய பூவும் வைத்து மங்களகரமாக அமர்ந்திருந்த ஆர்த்தியை பார்த்தாள் பிரவீனா. ஒரு காலத்தில் இவளும் இப்படி அமர்ந்து கணவனோடு சேர்ந்து பொன் தாலி வாங்கிக் கொண்டவள் தான். அன்று பேரன், பேத்தி கல்யாணம் வரை பார்த்த ஒரு சுமங்கலி தான் இவளுக்கு பூஜை செய்தது. எல்லாம் சரியாகவா முடிந்தது?… என் தம்பியாவது நன்றாக வாழ வேண்டும் மனதோடு வேண்டிக் கொண்டாள்.

விழா நடக்கும் பொழுது ஒரு நடுத்தர வயது பெண் தட்டில் வெட்டி வைத்த மல்லிகை பூவை ஒவ்வொருவருக்காக கொடுத்துக்கொண்டு வந்தார்.

“இந்தாங்க பூ இருக்கு எடுத்துக்கோங்க.. அந்த தட்டுல சந்தனம் குங்குமம் இருக்கு வச்சுக்கோங்க..” என்று சொல்லியபடி வந்தவர், சாய் ஶ்ரீக்கு கொடுக்க,

“நான் கல்யாணம் ஆகாத பொண்ணு…”

“அதனால என்ன நல்லபடியா கல்யாணம் நடக்கணும்னு வேண்டிக்கிட்டு.. பூ, பொட்டு எடுத்து தலையில வை…” சகஜமாக பேசியபடி நடந்தவர்.. பிரவீனாவை கவனிக்காமல் அவள் முன் தட்டை நீட்டினார்,

“அச்சோ, சாரி நான் கவனிக்கல…” என்று நகர, பிரவீனா கண்டு கொள்ள வில்லை.

“நில்லுங்க… இவளுக்கு பூ கொடுக்காம எங்க போறீங்க?” சாய் ஶ்ரீ கேட்க.

“அவ பூ எல்லாம் வச்சுக்க மாட்டா…”

“அவ வைக்கிறா, வைக்கலை. அது பேச்சு கிடையாது. எல்லாருக்கும் கொடுத்தீங்க தானே… அவளுக்கும் நீங்க கொடுக்கணும். அவ அதை எடுத்து தலையில வைக்காம, கையில கூட வச்சு இருந்துட்டு போறா… ஆனா, அவளுக்கு நேரா நீட்டின தட்டை எப்படி பின்னாடி நீங்க இழுக்கலாம்…” சண்டைக்கு நின்றாள் சாய் ஸ்ரீ,

“ஏய்! சும்மா இரு சாய்” என்ற பிரவீனா “நீங்க போங்க அக்கா” என்று அவர்களை அனுப்பி வைத்தாள்.

“இது என்ன கூத்தா இருக்கு இந்த பிள்ளை பேசுறது… படிச்சிருந்தா பழக்கவழக்க மறந்தா போகும்” என்று நொடித்துக் கொண்டு சென்றார் அவர்…

“எது, இதுவா நம்ம பழக்க வழக்கம். இந்த பத்தாம்பசிலி தான கூட்டத்திற்கு வரதுக்கு தான் நான் பயந்தேன். உன்னால தான் பிரவீ போ…” முறுக்கி கொண்டாள் சாய் ஸ்ரீ.

“அவங்கள விட்டு தள்ளு. வா, நாம இந்த பக்கம் போய் உட்காருவோம்…”

 “சரி எனக்கு பூவை வச்சு விடு…” என்று திரும்பி நின்றாள் சாய்.

“நானா?…”

“பின்ன வேற யாராம். சும்மா நீயும் என்னத்தையாவது சொல்லாம, ஒழுங்கா வச்சு விடு… எனக்கெல்லாம் நீ.. பொண்ணு பாக்க வந்ததிலிருந்து, குழந்தை பெத்துக்குற வரைக்கும் கூட தான் இருக்கணும்.. இப்ப ஒழுங்கா எனக்கு இந்த பூவ வச்சு விடு…” என்று அதட்ட, சிரித்த முகமாகவே அவள் தலையில் பூ வைத்து விட்டாள் பிரவீனா.

“சரியான வாயாடி நீ…”

“நலங்கு வைக்கிற எல்லாரும் வச்சாச்சா ஆளாத்தி எடுத்திடலாமா?” என்ற ஒரு குரல் வர, யாரும் வைக்காதவர்கள் இருக்கிறார்களா என்று சுற்று முற்றும் பார்த்தவர் ஆளாத்தி எடுத்து விடலாம் என்று சொன்னார் ஆர்த்தி அம்மா. ஆளம் சுற்றி முடித்ததும்,

 “பிரவீனா நீ வா.. நீ வந்து முன்ன நில்லு. தம்பிய தூக்கிட்டு வந்து முதல்ல நீ போட்டோ எடு…” என்றார் மகேஸ்வரி.

அவளை சரி கட்டுகிறாராம். எரிச்சலாக இருந்தது பிரவீனாவுக்கு… இதுதான் உண்மையில் அவளுக்கு வேதனை அளிக்கும் விஷயம். சுற்றியும் சொந்தங்கள் இருக்க வேற வழி இல்லாமல் சாய் ஶ்ரீயோடு சேர்ந்து போட்டோவுக்கு நின்றாள் பிரவீனா.

 நலங்கு வைத்தபின் வெற்றிலையில் பணம் வைத்து தம்பதிகளுக்கு கொடுக்க, தாம்பள தட்டில் மஞ்சள் குங்குமம் வளையல் வைத்து கொடுப்பார்கள். பிரவீனா நலங்கு வைக்காததால், தாம்பாள தட்டு கொடுக்க…

“வேண்டாம். நான் இங்கேயேதான் இருக்கேன். எனக்கு எதுக்கு தட்டு…” என்று நாசுக்காக மறுத்துவிட்டாள் பிரவீனா.

“இல்ல வாங்கிக்கோ.. எல்லாருக்கும் கொடுக்குறோம். உனக்கும் கொடுக்கணும் தானே” என்று கையில் திணிக்க முயல, அதைப் பட்டென்று பிடுங்கி பக்கத்தில் போட்டாள் சாய் ஸ்ரீ. அவளுக்கு அவ்வளவு கோபம். கணவன் இல்லை என்ற ஒரு காரணத்திற்காக எப்படி எல்லாம் உதாசீனப்படுத்துகிறார்கள். குறைந்தபட்ச நாகரீகம் கூடவா இருக்காது. இதில் ஓரளவுக்கு எல்லாரும் படித்த மேல் தட்டு மக்கள் தான். கேட்டால் இதுதானே நம்மூர் பழக்கவழக்கம் பாரம்பரியம் என்று சாடிக்கொள்வது. பிரவீனாவுக்கு வெறும் தட்டு மட்டுமே கொடுக்கப்பட இது இல்லாமலா நாங்கள் இருக்கிறோம் என்று கோபம் சாய் ஸ்ரீக்கு…

மற்றவர்கள் என்ன என்று கவனிக்க முன் பிரவீனா அவளை தள்ளிக் கொண்டு தனியே வந்து விட்டாள். பெற்றவர்கள் இருவருக்கும் கண் கலங்கியது. மங்களகரமான நாள் தான் இன்று தன் வீட்டில் விசேஷமும் கூட… ஊருக்கே பூ கொடுத்து உபசரித்தும், தன் மகளுக்கு தலையில் வைக்க கொடுத்து வைக்கவில்லையே… ஒரே வீட்டில் இருந்து கொண்டு விசேஷத்திற்கு தள்ளி நிற்கும் மகளைப் பார்க்கையில் வேதனையாக இருந்தது பெற்றவர்களுக்கு… மகள் நன்றாக இருப்பாள் என்று நினைத்து தான் செய்தார்கள். இப்படியாகும் என்று அவர்களும் யோசிக்கவில்லை. வெளியிடத்தில் சம்பந்தம் செய்து அவர்களையும் பகைத்துக் கொள்ள முடியவில்லை. மகளைப் பார்த்து வேதனை மட்டுமே பட்டுக் கொண்டார்கள்.

உணவு பந்தி ஆரம்பிக்க சாய் ஶ்ரீ கேட்டே விட்டாள்,

“ஏன் பிரவீ, உங்க வீட்ல இதுக்கும் சாங்கியம் பாப்பாங்களா? நாம கடைசியா தான் சாப்பிடனுமா?…” நக்கலாக கேட்க.

“யார் என்னவோ சொல்லட்டும் நீ என் கெஸ்ட். உன்னை, நான் தான் கவனிக்கணும். வா நாம அந்த பக்கம் போய் உக்காந்து சாப்பிடுவோம்..” என்று அழைத்து சென்று மகனோடு சேர்ந்து அமர்ந்து கொண்டாள்.

 “தாலி பிரித்து கோர்க்கிறதுக்கே இப்படி?… இனி, வளைகாப்பு, பிள்ளை பெறுவது, காதுகுத்துன்னு என்னென்ன வருமோ! எல்லாத்துக்கும் நீ இப்படியே தள்ளி நிக்க முடியுமா? பேசாம நீ தனியா போயிடு பிரவீ… எங்க வீட்டு பக்கத்துல ஒரு வீடு காலியாதான் இருக்கு. நான் என்னன்னு கேட்டு சொல்லவா?” என்றதும், எப்பவும் போல லேசாக சிரித்து வைத்தால் பிரவீனா.

மகேஸ்வரி அருகே வந்த அவரது தங்கை,

“நம்ம வீட்ல மூத்த பொண்ணு பிரவீனா. இவ சரியே கிடையாது பாத்துக்க… வந்திருக்கிற சொந்தங்கள உட்கார வைத்து சாப்பாடு போடாம, மொதல்ல உட்காந்துட்டா… அவ தனியா இருக்கான்னு, நீ ரொம்ப செல்லம் கொடுக்கிற மகேஸ்…” என்றார் அவர்.

 ஆனால், மகளை எட்டிப் பார்த்த மகேஸ்வரிக்கு மகனை மடியில் வைத்து அமர்ந்திருந்த மகளின் கோலம் கண்ணீரை தான் வர வைத்தது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!