Skip to content
Post Views: 2,213
நாம் கேட்ட காலங்கள் – 3
ஜீவபிரகாஷின் கேள்விகளுக்கு எந்த பதட்டமுமில்லாமல் பதில் கொடுத்தான் ராஜமகேந்திரன்.
“உங்க கட்சில நிறைய பேர் திலக்காகதான் ஆதரவா நின்னாங்க. அப்படியிருக்க அவருக்கு ஆக்ஸிடெண்ட் நடக்கலன்னா நீங்க எம்.பி ஆகியிருக்கவே முடியாது. ஸோ மோடிவ் உங்களைத்தானே கை காமிக்குது.” என்று குற்றத்தை லேசாய் சுமத்தும் வகையில் சொல்ல, மகேந்திரனோ
“ஸோ?” என்றான். கால் மேல் கால் போட்டுக்கொண்டு எதிரில் உட்கார்ந்திருந்த ஜீவபிரகாஷைப் பார்த்தான்.
Advertisement
“ஸோ உங்களுக்கு மோடிவ் இருக்குனு சொல்றேன் ஸர்”
“பாலிடிக்ஸ்ல தெரிஞ்ச எதிரியை விட தெரியாத எதிரிங்கதான் அதிகம் ஏசிபி ஸர். அப்படி நான் திலக்கை எதாவது செய்யணும்னு நினைச்சிருந்தா அவன் பிரிவியஸ் டெர்ம் எம்.பி எலெக்ஷன் நின்னப்பவே பண்ணிருக்க மாட்டேனா? அப்படியே இப்போ பண்ணினாலும் நீங்க கெஸ் பண்ற அளவு ஈசியா இருக்காது என் வர்க். க்ளீன் அண்ட் க்ளியரா இருக்கும்” என்றான் கொஞ்சம் திமிராகவே.
அந்த திமிர் உண்மை கொடுத்ததா இல்லை அரசியலின் திண்மை(உறுதி) கொடுத்ததா என்று ஜீவபிரகாஷால் சட்டென்று கணிக்க முடியவில்லை. நம்பவும் முடியாமல், நம்பாமல் என்று ஒரு கலவையான உணர்வில் இருந்தான்.
Advertisement
திலக்கின் வழக்கு அவனுக்கு வேலை என்பதை தாண்டி கடமை. தனிப்பட்ட வகையிலும் அது அவனுக்கு மிகவும் முக்கியமானது.
Advertisement
“இப்போதைக்கு இது மர்டர் அட்டெம்ட், எவிடன்ஸ் கிடைச்சதுன்னா இந்த எம்.பி பதவியெல்லாம் உங்களைக் காப்பாத்தாதுனு சொல்லிக்க விரும்புறேன் ஸர். திலக் ஸர் உயிரோட இருக்கவரைதான் உங்களுக்கு ஸேஃப், அதே நேரம் கண்முழிச்சு அவர் உங்க பெயரை சொன்னா அடுத்த நிமிஷம் என்னோட வர்க்கை நீங்க பார்க்க வேண்டி இருக்கும்” ஜீவபிரகாஷும் சளைக்காதுப் பேசினான்.
“ஓகே, லெட்ஸ் சீ! ஆல் தி பெஸ்ட்” என்றான். ஜீவபிரகாஷ் விடைப்பெற்று செல்ல மகேந்திரன் பெருமூச்சு விட்டான். அப்படியே இருக்கையில் பின்னால் சாய, ஸ்ரீதர் உள்ளே நுழைந்தான்.
“அந்த ஏசிபி யார் தெரியுமா?” என்ற ஸ்ரீதரின் கேள்வியில் மகேந்திரன் முறைத்தான். அந்த பார்வையைப் படித்தவன்,
Advertisement
“அன்பழகன் ஸர் பையன்” என்றிட, மகேந்திரனுக்குச் சட்டென்று புரியவில்லை.
“சக்கரபாணி பேரன். வெங்கட கிருஷ்ணனோட ப்ரண்ட்” என்றிட, மகேந்திரன் தலை மறுப்பாக அசைந்தது.
“என்னடா நடக்குது? இவனுக்கு என்ன தைரியமிருந்தா என்னை வந்து கொஸ்டின் பண்ணுவான்?” என்று குரல் உயர்த்த,
“திலக் வீட்ல உள்ளவங்க சொல்லாம பிரகாஷ் வந்து இன்வெஸ்டிகெட் பண்ண முடியாதே டா. உன் மேல தப்பு இருக்குனு சொல்ல சாலிட் எவிடன்ஸ் இல்லை, இருந்திருந்தா எப்பவோ வந்திருப்பாங்க. இப்போ சந்தேகம் வந்திருக்குன்னா அவங்க சொல்லியிருக்கணும்” சரியாகக் கணித்து சொன்னான் ஸ்ரீதர்.
“இவனுங்களை” என்று பல்லைக் கடித்தான் மகேந்திரன்.
“மச்சி! டென்ஷன் ஆகாத. பார்த்துக்கலாம்” என்று ஸ்ரீதர் சொல்ல,
“ஸ்ரீ, நீ மீட்டீங் ஹால் போ. நான் ஒரு டென் மினிட்ஸ்ல ஜாயின் பண்ணிக்கிறேன்” என்றான் மகேந்திரன்.
மகேந்திரன் அப்படித்தான்! முடிந்தவரையில் உணர்வுகளைக் கட்டுக்குள் வைத்து காரியத்தில் கண்ணாக, கருத்தாக இருப்பான்.
ஸ்ரீதர் சென்றதும் அலைப்பேசி எடுத்தவன், பிரசன்னாவிற்கு அழைத்தான்.
உடனே அழைப்பை ஏற்றவளின் குரல் கேட்க ஆர்வமிருந்தாலும், அவனை விடவும் ஆர்வமாயிருந்தது அவனது கோபம்.
“என்ன நினைச்சிட்டு இருக்கீங்க உங்க வீட்ல எல்லாம்?” என்று கத்தினான்.
“என்னாச்சு மகி” என்று பொறுமையாகவே பிரசன்னவர்தினி பேச,
“தெரியாத மாதிரி நடிக்காதடி. உங்க தாத்தா சொல்லாமயா ஏசிபி வந்து என்னை விசாரிக்கிறான். அதுவும் யாரு அன்பழகன் பையன். எவ்வளவு தூரம் போறீங்கனு நானும் பார்க்கிறேன்” என்று நக்கலாகப் பேச, பிரசன்னா பதில் பேச எத்தனிக்க அவன் விடவில்லை.
“என்ன கேஸ் வேணும்னாலும் போடுங்க. நீ மட்டும் என்ன பாக்கி இருக்க, வரதட்சணை கொடுமை, ஹாரஸ்மெண்ட் அதெல்லாம் கூட உங்க தாத்தா கிட்ட சொல்லி போடு” என்றான் இன்னும் நக்கலாக.
“தப்புப் பண்ணலன்னா ப்ரூவ் பண்ணுங்க மகேந்திரன்.” பிரசன்னவர்தினி அழுத்தமாக சொன்னாள்.
“தப்புப் பண்ணியிருக்கேன்னு நீங்க பரூவ் பண்ணுங்க. எனக்கு எந்த அவசியமும் இல்லை, அண்ட் உன் அருமை தாத்தா கிட்ட போய் சொல்லு. என்னை எதிலேயும் உங்களால சிக்க வைக்க முடியாதுனு” என்றான் இறுமாப்பாக.
பிரசன்ன வர்தினி நொந்துப் போனாள். மாலை தாத்தா வரவும் அவரிடம் நேராகக் கேட்டாள். அவரோ,
“ஆமா பிரசன்னா, நாந்தான் அவன்மேல் சந்தேகம் இருக்குனு சொன்னேன். அதுல என்னயிருக்கு, அவன் தப்புப் பண்ணலன்னா நம்பிக்கையிருந்தா நீயே இங்க வந்திருக்க மாட்ட தானே? என் பேரன் எப்போ படுப்பான்னு காத்திருந்த மாதிரி இல்ல அவன் செஞ்சது” என்றவர் சென்றுவிட, பிரசன்னா அவர் போன திசையையேப் பார்த்து நின்றாள். மகளிடம் வந்த நர்மதா,
“ஹாஸ்பிட்டல் போறேன் டா, நீயும் வரியா?” என்று கேட்க, அவளுக்கும் பெரியம்மாவைப் பார்க்க வேண்டும் போல இருக்க அம்மாவோடு சென்றாள்.
காஞ்சிபுரம் சென்னை நெடுஞ்சாலையில் அமைந்திருந்தது அந்த மிகப்பெரிய மருத்துவமனை. அங்கே பெரும் பாதுகாப்போடு ஐசியுவில் இருந்தான் திலக். இரு காவலர்கள் நிற்க, அவர்களைத் தவிர தனிப்பட்ட முறையில் ஐந்து பேரை அத்தளத்திலும் பத்து பேரையும் மருத்துவமனை சுற்றியும் பாதுகாப்பிற்கு வைத்திருந்தார் வெங்கட கிருஷ்ணன்.
வெங்கட கிருஷ்ணனுக்கு அவர் பெயரன் திலக் என்றால் உயிர். வெங்கட கிருஷ்ணனின் முதல் மனைவிக்குப் பிறந்தவன் கார்வண்ணன். கார்வண்ணனின் அம்மா இறந்துவிட, கோதாவரியை மணந்தார். அவர்கள் இருவருக்கும் பிறந்தவன் கவியரசன். கவியரசன் நர்மதாவின் மக்கள் ரஞ்சனும், பிரசன்ன வர்தினியும். அந்த வீட்டின் ஒரே பெண் வாரிசு பிரசன்னவர்தினி. ஆனால், அந்த செல்லமும் உரிமையும் அவளுக்கு என்றுமே இருந்ததில்லை. பெண் வாரிசாக அவள் இருந்தாலும், பெயர் சொல்லும் வாரிசு ‘திலக்’ மட்டுமே.
கார்வண்ணன் திலக் அவன் அம்மா வயிற்றில் இருந்த சமயம் இறந்துவிட்டான். திலக்கின் தந்தை கார்வண்ணனின் இறப்புக்குக் காரணம் வெங்கடகிருஷ்ணனின் பல வருட நண்பன் சக்கரபாணி. அரசியல் வாழ்க்கையில் எத்தனையோ துரோகங்களையும், சூழ்ச்சிகளையும் சந்தித்திருந்தாலும் உயிர் நண்பன் செய்த துரோகம் வாழ்க்கை மீதே ஒரு வெறுப்பை வெங்கடகிருஷ்ணனுக்குத் தந்தது. அவர் இருக்கும்போதே அவரின் ஆசை மகனும் அரசியல் வாரிசுமான கார்வண்ணன் மறைந்துவிட, சக்கரபாணிக்கு நீதிமன்றம் தண்டை கொடுத்திருந்தாலும் எதுவுமே வெங்கட கிருஷ்ணனின் வெஞ்சினத்தைக் கொஞ்சமும் குறைக்கவில்லை.
அரசியல் ஆவல் பேராபத்தானது என்பது வலிக்க வலிக்க வலிக்க நண்பனிடமிருந்து கற்றுக்கொண்டார் வெங்கட கிருஷ்ணன். முன்னாள் அமைச்சரான அவரின் வாரிசாக மகனை களமிறக்க, அது பொறுக்காமல் தன் வாரிசான அன்பழகனை அடுத்துப் பதவிக்குக் கொண்டு வர வேண்டும் என்று கருவறுத்தார் சக்கரபாணி. நண்பனின் மகன், மகனின் நண்பன் என்றெல்லாம் பகுத்தறிய பதவி ஆசை விடவில்லை. என் மகன் என்னைப்போல் எடுபடியாக இருந்திட கூடாது, அவனுக்கென்று தனியே ஒரு பெயர் கிடைக்க வேண்டும் பேராசையினால் மகன் போல் இருந்தவனைக் கொன்றவர் சிறையில் சில வருடங்களிலே மரித்துப்போனார். அவர் விரும்பியதற்கு எதிராக, உயிர் நண்பனான கார்வண்ணனின் மறைவிலிருந்து மீள முடியாமல் தவித்த அன்பழகன், அரசியலை உதறி தொழிலில் கவனம் செலுத்தினான். தனக்காக என்றாலும் தந்தை செய்த பெரும் துரோகத்தைத் தாங்க முடியாமல் நித்தமும் குற்ற உணர்வில் தவிக்கின்ற தண்டனையோடு வாழ்கிறான்.
சக்கரபாணி செயலினால் மனிதர்கள் மீதான நம்பிக்கை, நட்பு மீதான நம்பிக்கை எல்லாவற்றையும் இழந்தார் வெங்கட கிருஷ்ணன். மருமகளின் பேச்சையும் மீறி பேரனை அவன் விரும்பியபடியும், அவர் விருப்பப்படியும் அரசியலில் ஈடுபட வைத்தார். இப்போதோ அவன் விபத்தில் சிக்கி நாலைந்து மாதங்களாக கோமாவில் இருக்கிறான். இன்னொரு இழப்பைத் தாங்கும் சக்தி அவருக்கில்லை, அவரை விடவும் அவர் மருமகள் அமராவதியை நினைத்து சொல்ல முடியாத வேதனை அவர் மனத்தில். இதில் பிரசன்னவர்தினியின் கணவன் மீதும் அதிகம் சந்தேகம் அவருக்கு. அப்படி அவன் செய்திருந்தால் பேத்திக்காகக் கூட அவர் பார்க்க மாட்டார்.
நர்மதாவும் பிரசன்ன வர்தினியும் மருத்துவமனை செல்ல, அங்கே மகன் இருந்த அறைக்கு வெளியே அமராவதி உட்கார்ந்திருந்தார். பிரசன்னாவைப் பார்க்கும் மிகவும் லேசான புன்னகை. பிரசன்னாவிற்கு அவள் பெரியம்மாவை நிறையப் பிடிக்கும். கார்வண்ணனுக்குப் பெண் குழந்தை வேண்டும் என்று ஆசை, அதனால் அவன் தம்பி மகளை, தங்கள் வீட்டின் ஒரே பெண்பிள்ளை மீது அமராவதிக்குப் பாசம். எல்லாரும் பிரசன்னா மீது பாசம் வைத்திருந்தாலும், திலக் என்பவனுக்கே முன்னுரிமை. அது சில நேரம் பிரசன்னவிற்கு வருத்தம் கொடுத்திருக்கிறது. ஆனால், திலக் தங்கையிடம் எப்போதும் முகம் காட்டியதில்லை. பிரபஞ்சன் கூட சண்டை போடுவான், அடித்திருக்கிறான். அவள் பெரியண்ணா பெயருக்கு ஏற்றார்போல் பெரிய அண்ணனாகத்தான் நடந்திருக்கிறான்.
பெரியம்மாவைப் பார்க்கவும் பெருகிய கண்ணீரை அடக்கியவள், “பெரியண்ணா நல்லாகிடுவாங்க பெரியம்மா” என்றாள்.
“ஆகிடுவான் டா, ஆகிடணும்” என்ற அமராவதிக்கு மகன் இன்றி ஒரு வாழ்க்கையை ஒரு நாளை, ஏன் ஒரு நொடியைக் கூட கற்பனை செய்ய முடியாது. கணவன் இல்லையென்றபோதும் அவனின் நினைவாய் மகன் இருக்கிறான், அவன் உயிரை என்னிடம் கொடுத்திருக்கிறான். அவனை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்று வைராக்கியத்தோடு இத்தனை ஆண்டுகள் கடத்தியவருக்கு மகனுக்கு நடந்த இந்த விபத்து பெரும் சோதனை. அவனுக்காகவே வாழ்ந்தவருக்கு அவனின்றி ஒரு வாழ்க்கையை நினைக்கக் கூட முடியாது.
அல்லும் பகலும் அந்த மருத்துவமனை வாசம். மகன் எந்த நொடி வேண்டுமென்றாலும் விழித்துவிடுவான் என்ற எண்ணம். ஒரு அசையாத நம்பிக்கை, கடவுள் அத்தனை கருணையின்றி நடக்க மாட்டான் என்று இன்றும் நம்பினார். தன் கணவன் தன்னை கலங்க விட மாட்டான் என்று நம்பினார். அவருக்குப் பிரசன்னா வீட்டில் இருப்பதன் காரணம், வெங்கட கிருஷ்ணன் என்ன செய்கிறார் என்பது குறித்தெல்லாம் தெரியாது. எதையும் தெரிந்துகொள்ளவும் விரும்பவில்லை.
திலக்கிற்கு விபத்தென்றதும், வெங்கட கிருஷ்ணன், “யாரு என் பேரனை இப்படி செஞ்சது?” என்று வெகுண்டெழ, அமராவதியோ, ” திலக்கை எப்படியாவது காப்பாத்திக் கொடுத்துடுங்க மாமா” என்று வேண்டினார்.
திலக் கார்வண்ணனின் பிரதிபலிப்பு. அவன் பிரியத்தின் சாட்சி. திலக்கின் புன்னகை கோடி நிலாக்களின் பிரகாசம். அப்படியொரு நல்ல மகன். அம்மாவைப் புரிந்து நடப்பவன். பிரகாசிக்கும் அவன் கண்கள் இன்று மூடியே இருக்க, எப்போது அந்த கண்கள் விழிக்கும் என்று நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தார் அமராவதி.
“அக்கா! இன்னிக்கு ஒரு நாள் வீட்டுக்கு வாங்க. நாலஞ்சு மாசமா இங்கயே இருக்கீங்க, பாதுகாப்புக்கு ஆளுங்க இருக்காங்க. இங்கயே இருந்தா உங்க உடம்புக்கு என்னவாகிறது? சொன்னா கேளுங்க, நானும் பிரசன்னாவும் இருக்கோம். வேணும்னா ரஞ்சனையும் வர சொல்றேன். நீங்க போய் ஒரு நாள் நம்ம வீட்ல ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க” என்றதற்கு அமராவதி மறுப்பாகத் தலையசைத்தார்.
“திலக் முழிச்சிட்டா நான் இருக்கணும். அவன் எப்ப வேணும்னாலும் கண் முழிப்பான், எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு” என்றார். அவர் நம்பிக்கை எப்படியாவது நடந்து விட வேண்டும் என்பதே பிரசன்னாவின் வேண்டுதலாக இருந்தது. அப்போது பிரசன்னாவின் அலைப்பேசி சத்தமிட்டது. ராஜாவின் தம்பி அயன் அழைத்திருந்தான்.
“சொல்லு அயன்”
“அண்ணி எப்படி இருக்கீங்க?”
“ம்ம், நல்லாயிருக்கேன். நீ எப்படியிருக்க? ஸ்டடிஸ் எப்படி போகுது?” என்று விசாரித்தவளிடம்,
“அண்ணி, இந்த வீக் எனக்கும் வியனுக்கும் பர்த்டே. வீட்ல சின்னதா பார்ட்டி, நீங்க கண்டிப்பா வரணும்” என்றான்.
“ப்ளீஸ் அயன். இப்போதைக்கு என்னால அங்க வர முடியாது. நீங்க எஞ்சாய் பண்ணுங்க” என்றாள் உடனே.
அவர்களுக்காகவா பிறந்த நாள் விழா? அண்ணனும் அண்ணியும் பார்க்க வேண்டும், பேச வேண்டும் என்பதற்கு அது ஒரு காரணம். அயன் விடவில்லை.
“அண்ணி! ப்ளீஸ்” என்று கெஞ்சினான். பக்கத்திலிருந்த வியனும் கெஞ்சினான்.
திலக்கிற்கு அடிப்பட்ட செய்திக் கேட்ட கணம் எல்லாரும் துடித்திருக்க, கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் அவனுக்குத் தர வேண்டிய எம்.பி சீட்’டை கட்சியில் சண்டையிட்டு வாங்கி மகிழ்ச்சியாக அதனை சொன்ன மகேந்திரன் முகம் நினைவில் வந்தது. அந்த நாள் கணவனை முதல்முறையாக வெறுத்த நாள். திலக் நன்றாக குணமடையாமல், அவன் விபத்திற்கு ராஜமகேந்திரன் காரணமில்லை என்று உறுதியாகத் தெரியாமல் அங்கு போவதில்லை என்ற முடிவில் இருந்தாள். கணவன் நடவடிக்கைகள் அவளுக்குக் கலக்கம் கொடுத்திருக்க, உணர்வு சுழியில் சிக்கித் தவித்தாள் பிரசன்னா.
“அண்ணி, நீங்க வரலன்னா நாங்க பர்த்டேவே செலிபிரேட் பண்ணல” என்று விதாண்டாவாதம் செய்தான் வியன். கொஞ்சம் கணவன் குணம் அவனிடம் எட்டிப்பார்க்கும் என்று மாமியார் சொன்னது நினைவில் வர,
“பண்ணாத” என்று கடுப்பாக சொல்ல, அயனோ, “அண்ணி, எங்களுக்காக” என்று கெஞ்சினான்.
“நோ அயன்! என்னை ப்ளாக்மெயில் பண்றதெல்லாம் எனக்குப் பிடிக்காது. நான் வர மாட்டேன், வரல. என்னைப் பேச வைக்காத” என்று திடமாக சொன்ன பிரசன்னவர்தினி வேறு வழியின்றி அங்கே செல்லும் நிலை உண்டானது.
error: Content is protected !!