Skip to content
Post Views: 12,218
என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 14
பிரவீனா போலவே மித்ரனும் தள்ளி நின்று கொண்டான். என்னவோ கோபம் அவனுக்கு.. தன் இயல்பு மீறி இருப்பது அவனுக்கே பிடிக்க வில்லை. அவள் யார் எனக்கு? ஜஸ்ட் கோ வொர்க்கர். அந்த அளவில் மட்டும் அவளுடனான உறவு இருந்தால் போதுமானது மித்ரன். அனாவசியமாக மனசை அலைபாய விட வேண்டாம். உனக்கு காதல் எல்லாம் ஒத்து வராது. அத்தோடு ஒரே பெண்ணோடு காலம் முழுக்க கொண்டு செல்லும் வாழ்க்கை ஏதோ ஒரு கட்டத்தில் சலிப்பு தட்டி விடும். அதற்கு மேல் பிரவீனா பாவம். அவள் வாழ்க்கையை சீரழித்து விடாதே.. தனக்குத்தானே நிறைய சமாதானங்களையும், அறிவுரையும் கூறிக்கொண்டு.. அவள் போலவே தள்ளி நிற்க தொடங்கி விட்டான் மித்ரன்.
ஏதேனும் வேலை சம்பந்தமான தகவல்களை நேரடியாக வாய் வார்த்தையாக சொல்லாமல், அவளுக்கு மெயில் அனுப்பி விட்டான். ஓரளவுக்கு நால்வரும் நட்பு என்ற வட்டத்தில் இணைந்ததால் உணவு உண்ணும் போது ஒரே மேசையில் அமர்வது தற்போது வழக்கமாகிவிட்டது. அங்கேயும் நேரடியான பேச்சு வார்த்தையை தவிர்த்து, பொதுவான விஷயங்களை பேசிக்கொண்டு நகர்ந்து விடுவார்கள். மித்ரன் சாதாரணமாக காட்டிக் கொண்டாலும், என்னை எதுவும் பாதிக்கவில்லை என்று தனக்குத்தானே கெத்தாக நினைத்துக் கொண்டாலும்… பிரவீனா அவனை அளவுக்கு அதிகமாக பாதித்தாள். அதை ஏற்றுக் கொள்ளத்தான் அவனுக்கு மனதில்லை.
மித்ரன் தள்ளி நின்றும் அதை உணராமல் அவள் போக்கில் பிரவீனா இருப்பது அவள் மேல் இன்னும் கோபத்தை கொடுத்தது. ஒருவேளை அவள் தன் மேல் கோபப்பட்டால், தானும் கோபப்பட்டு ஒதுங்கி விடுவோமோ என்று நினைத்து அவளுக்கு அதிகமான வேலை பளுவை கொடுத்தான். தாமதமாகும் போது அவளிடம் காய்ந்தான். பிரவீனா தான் என்னவென்று புரியாமல் குழம்பி போய் நின்றாள். அவளுக்கு தான் என்ன தவறு செய்தோம் என்றே புரியவில்லை. அவள் இன்னும் ஒடுங்கி கொள்ள.. அதற்கும் அவனுக்கு கோபம் தான் வந்தது. மொத்தத்தில் நிலையாக இல்லாமல் அல்லாடி விட்டான் மித்ரன்.
Advertisement
பிரவீனா வீட்டிலும் ஒரு மாதிரி மன அழுத்தத்தில் இருந்தாள். ஆர்த்தியிடம் அவளுக்கு பெரிதாக எந்த உரசல்களும் இல்லை. அவரவர் இடத்தில் சினேகமாக இருந்து கொண்டார்கள். சமீபமாக சின்ன சின்ன எரிச்சல் பிரவீனாவுக்கு… அது ஆர்த்தி,ஆதிரன் மீது காட்டிய அதிகளவு கண்டிப்பு. கொஞ்சம் சேட்டைகார பிள்ளை தான் ஆதிரன். அதனால் தான் ஆர்த்தி ஆரம்பத்தில் சில கண்டிப்புகளை கொடுக்கும் பொழுது பிரவீனா அமைதியாக தான் இருந்தாள். ஆனால், அந்த கண்டிப்பு கைநீட்டி அடிக்கும் அளவுக்கு போகும்போது தான் பிரவீனாவுக்கு கோபம் வந்தது.
ஆதிரனுக்கு விவரம் தெரிந்த வயதிலிருந்தே, அவன் மாமா வேலை விட்டு வரும்போது ஓடி போய் வண்டியில் ஏறி கொள்வான். அப்படியே அந்த தெருவை ஒரு சுத்து சுத்தி வந்தால் தான் அவனுக்கு திருப்தியே. இது எல்லோருக்கும் தெரியும்.
அன்றும் மாமனின் வண்டி சத்தம் கேட்டதும் முன்னாடி ஓடி வந்த ஆதிரனை பட்டென்று பிடித்து நிறுத்தினாள் ஆர்த்தி.
Advertisement
“வண்டி முன்னாடி ஓடி வாரன் அண்ணி. அவர் ஷட்டன் பிரேக் போடுற மாதிரி ஆகும். எப்பவும் சூழ்நிலை ஒரே மாதிரி இருக்காது. அதோட அவர் வேலை முடிஞ்சு வர்றாரு கொஞ்சம் உட்கார்ந்து டீ, காபி குடிச்சதுக்கு அப்புறம் வெளியே தூக்கிட்டு போகட்டும்” என்று சொல்லும் போது யாருக்கும் தவறாக படவில்லை.
Advertisement
ஆனால், பிரவீனாவுக்கு மட்டும் மகனின் சுருங்கிய முகம் கொஞ்சம் வருத்தத்தை கொடுத்தது. என்னதான் பிரவீனா, அவள் ஸ்கூட்டியில் தூக்கி வைத்து நாள் முழுக்க சுற்றினாலும்… அவனுக்கு என்னவோ அந்த பைக்கில் போக தான் ரொம்ப ஆசை.
வீட்டுக்கு வந்து டீ குடிக்க, டிபன் சாப்பிட, மனைவியோடு பேச என்று அப்படியே பிரேமுக்கு நேரம் போய்விடும். சின்னவன் முகம் மட்டும் ஏக்கமாக இருக்கும். ஆர்த்தி கூறுவதில் தவறில்லை எனும் பொழுது.. தான் மட்டும் எவ்வாறு கண்டிப்பாக சொல்ல முடியும். பிரவீனாவும் விட்டுவிடுவாள்.
“அம்மா நான் டீவி பார்க்கும் போது, அத்தை வந்து டீவிய ஆப் பண்ணிட்டு, என்னை போக சொல்லிட்டாங்க…” என்று பாவமான முகத்தோடு ஆதிரன் சொல்லும் போது துடித்து விடுவாள் தாய்…
Advertisement
“இன்னைக்கு லீவு தான் ஆர்த்தி. அவன் ஹோம் வொர்க் எல்லாம் முடிச்சுட்டான். ஃப்ரீயா டிவி பார்க்கட்டுமே…” என்று பிரவீனா சொல்லும்போது,
“டீவி பாக்குறதும் ஒரு அளவு தான் அண்ணி. அப்பா இல்லாத பையன்னு ரொம்ப செல்லம் கொடுக்காதீங்க . அவன் வளர்ப்பு தப்பா போயிடும். அப்பா இடத்துல இருந்து இவன பாத்துக்கிற பொறுப்பு எங்களுக்கு இருக்கு…” என்று ஆர்த்தி சொல்லும் போது வேற என்ன சொல்ல முடியும்.
முன்பெல்லாம் ஆதிரன் எழுந்ததும், அவன் மாமா அறைக்கு ஓடி சென்று, அவன் மாமன் மார்பில் படுத்துக்கொள்வான். இப்பொழுதெல்லாம் ஆர்த்தி உள்ளே விடுவதே இல்லை.
“உங்க மாமா தான் காபி குடிக்க வெளியே வாராருல. அப்ப, அவர் கூட இரு.. சும்மா சும்மா ரூம்குள்ள வராத…” என்று கண்டிப்பாக சொல்லிவிட்டு,
“உள்ள வந்தா அமைதியா இருக்க மாட்டேன்றான் அத்தை. அவர் பேக்க தொட, டிரஸ் எடுக்க, அங்க இருக்கிற பொருள் எல்லாம் ஆராய… என்ன பழக்கம் இது? எங்க அம்மா எனக்கு நிறைய கிப்ட் கொடுத்துவிட்டு இருக்காங்க. அதெல்லாம் எடுத்து எடுத்து பார்க்கிறான். கண்ணாடி பொருள் கீழே விழுந்தா என்ன ஆகிறது…” என்று சமதானமும் சொல்ல, மகேஸ்வரியும் மருமகள் சொல்லை சரி என்று தான் கேட்பார்.
அப்பா இல்லாத பையன் என்ற அக்கறையில் தானே ஆர்த்தி கண்டிப்பு காட்டுகிறாள் என்று அமைதியாக குடும்பமும் இருக்க… பிரவீனாவுக்கு தான் மனம் ஒரு மாதிரி கஷ்டமாக இருக்கும். பெற்றவளுக்கு தான் பிள்ளையை கையாளவும் தெரியும். எதற்கு ஓங்கி அடிக்க வேண்டும், எதற்கு லேசாக தட்ட வேண்டும், எதற்கு சத்தம் போட்டாலே போதும், எந்த விஷயத்துக்கு சில அட்வைஸ் பண்ணாலே மகன் திருந்தி விடுவான் என்பதை பிரவீனா நன்றாக அறிவாள்.
அதேபோலத்தான் ஆதிரனும். அவனுக்கு அவன் தாயை மட்டுமே நன்கு அறிவான். அத்து குட்டி, லட்டு குட்டி என்று செல்லம் கொஞ்சும் தாய்.. ஆதிரன் என்று தன் முழு பெயரை அழைத்து சொல்லும் பொழுதே பெற்றவள் கோபம் அறிந்து பிள்ளை அமைதியாகிவிடும்.
“அம்மா ஆதிரனுக்கு மொட்டை போடணும்…” என்று பேச்சை ஆரம்பித்தாள் பிரவீனா.
இது இவள் நீண்ட காலமாகவே சொல்லி வருவது தான். இளங்கோவின் ஆசை… பிள்ளை வயிற்றில் இருக்கும் போதே சொல்லிக் கொண்டிருந்தான். அவனுக்கு திருச்செந்தூர் முருகன் மிக முக்கிய கடவுள். பிள்ளை பிறந்ததும் முதல் மொட்டை அங்கு தான் என்று பேசி வைத்திருந்தார்கள்… அப்போதெல்லாம் பிரவீனாவுக்கும் கடவுள் நம்பிக்கை அதிகம். இளங்கோ என்ற ஒருவன் இல்லாமல் போனதாலே, கடவுள் என்ற ஒருவர் இல்லை என்று நினைத்துக் கொண்டாள் பிரவீனா. இப்பவும் அதில் மாற்றுக் கருத்து இல்லை தான். ஆனாலும், கணவனின் ஆசை என்ற ஒன்று மட்டுமே அவள் மனதை அறித்தது.
“பார்ப்போம் பிரவீ. உன் தம்பி பொண்டாட்டிக்கு நாள் தள்ளி போற மாதிரி இருக்காம்…” என்றார் தாய்.
பிரவீனா மனம் சோர்ந்தாள். ஆதிரன் கிட்டத்தட்ட ஒன்றை வருடங்களாக முடி வளர்த்து வருகிறான். இந்த கோவிலுக்கு என்றுதான். “அப்போதெல்லாம் தாய் மாமன் மடியில் வைத்து பெரிய அளவில் செய்ய வேண்டும். அவனுக்கு என்று ஒரு கல்யாணம் முடிந்த பின் செய்தால் நன்றாக இருக்கும்” என்ற தந்தை சொல்லிவிட…
வேற வழி இல்லாமல் பிரவீனா அவன் திருமணம் வரை அமைதி காத்தாள். ஒன்றை வருடங்களாக சாமி முடியை பிள்ளை சுமக்கிறான். எப்படியும் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது… சாமிக்கு வளரும் முடி வெட்டி விடவும் முடியாது. இப்போது ஆர்த்தி உண்டாகுவது போல் இருக்கவும், அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. பிரவீனா ஏதாவது சொன்னால்.. அவள் பக்கம் நியாயமே இருந்தாலும் இந்த இடத்தில் தவறாக போய்விடும். சரி பார்ப்போம் என்று எப்பவும் போல அமைதியாகிவிட்டாள் பிரவீனா.
இப்பொழுதெல்லாம் ஆர்த்தி, பிள்ளையிடம் அதிக உரிமை எடுக்கிறாள். முன்பெல்லாம் வெறும் கண்டிப்பாக மட்டும் இருந்தவள். இப்பொழுது சின்ன சின்ன அடிகளை கொடுக்க ஆரம்பித்தாள்.
அன்று சாப்பிடும் பொழுது மேஜையில் தவறுதலாக தண்ணீர் கொட்டி விட்டான் என்று முதுகில் பட்டென்று ஒரு அடி போட்டாள். பிள்ளை அழுகவில்லை தான். ஆனால், வலியில் பிள்ளை முகம் சுருங்கும்போது பிரவீனாவுக்கு மனம் காந்தியது.
ஒரு நாள் ஜன்னல் கம்பிகளை பிடித்து தொங்கினான் என்று பின் மண்டையில் பட்டென்று கொடுக்க.. உண்மையில் அழுதே விட்டான் ஆதிரன்.
“இப்படி பட்டு பட்டுன்னு கை நீட்டாத ஆர்த்தி. அவன் சின்ன பையன். சொன்னா புரிஞ்சுப்பான். அப்படி இல்லையா, நீ என்கிட்ட சொல்லு நான் அவனை கண்டித்து வைக்கிறேன்…” முகம் தூக்கியே சொல்லிவிட்டாள் பிரவீனா. அவளுக்கு மனம் பொறுக்கவே இல்லை. இந்த ஒற்றை பிள்ளைக்காக தான், அவள் ஓடிக் கொண்டிருப்பது… மகன் அழுவதை பார்க்கவே முடியவில்லை.
“என்ன அண்ணி இப்படி பேசுறீங்க. நான் அவனை பிரிச்சே பார்க்கல… பிரேம் எவ்வளவு செய்றார் உங்களுக்கும், உங்க பையனுக்கும்… அப்ப சரின்னு தான் சொல்றீங்க. அதே இது அப்பா, அம்மா ஸ்தானத்துல நின்னு கண்டிச்சா மட்டும் ஏன் இவ்வளவு கோவப்படுறீங்க. நாளைக்கு அவருதான எல்லாம் பாக்கணும். அப்பா இல்லாத பையனை சொந்தக்காரங்க சரியா வளர்கலன்னு சொல்லிட கூடாது…” என்றவள் அத்தோடு விடாமல்,
“ஆதிரனுக்கு, அவன் வீட்டு உறவுன்னு யாரும் வந்து போகல. அப்பா இல்லை, அவன் வீட்டு சொந்தமும் இல்லை, அவனுக்கு கூட பிறந்த உறவும் இல்லை… பிரேம் எப்பவும் சொல்லுவார், ஆதிரனுக்கு எல்லாம் நாம தான் பாக்கணும்னு.. அவருக்காக மட்டும் தான் உங்க பையன் கிட்ட நான் கண்டிப்பு காட்டுறேன். உங்களுக்கு புடிக்கலைன்னா.. நாங்க தள்ளி நின்னுகிறோம்…” என்று ஆர்த்தி சொன்னதும்.. இப்போது பிரவீனாவுக்கு அழுகை வரும் போல இருந்தது.
தகப்பன் இல்லா பிள்ளை என்று பிரேம் பெரிதாக எல்லாம் தாங்க மாட்டான். ஆதிரனுக்கு ஸ்கேட்டிங்க்கு கட்டும் ஆயிரத்து ஐநூறு ரூபாய் கூட பிரவீனா தான் கட்டுவாள். ஒற்றைப் பிள்ளையை வைத்துக்கொண்டு கஷ்டப்படுகிறேன் என்று பெற்ற தந்தையிடம் கூட நிற்காதவள் பிரவீனா. உடன் பிறந்தவனிடமா கை நீட்டி விடுவாள். இதுவரை அவளுக்கோ, அவள் பிள்ளைக்கோ செலவு என்று தாய், தந்தையிடம் கூட கை நீட்டியது கிடையாது.
இவ்வளவு தன்மானம் பார்த்தும், இருக்கும் குறை ஆண்மகன் துணை இல்லாதது மட்டுமே… அதுவும், ஆதிரன் சின்ன பையன். பெற்ற தந்தையுடன் வாழ கொடுத்து வைக்கவில்லை, புகுந்த வீட்டு சொந்தமும் இவர்களை ஆதரிக்கவில்லை, தன் ஒற்றை மகன் தனியாக நின்று விடக்கூடாது.. அவனுக்கு சொந்தம் என்று யாரும் இல்லாமல் போய்விடக் கூடாது.. தாய்மாமன் பாசத்தோடு ஆண் மகன் துணையோடு தந்தை ஸ்தானத்தில் பிரேம் இருப்பான் என்று நினைத்து தான் உடன் பிறந்தவன் நிழல் நாடியது. அதுவும் தவறு தான் போல…
மகேஸ்வரிக்கு பெரிய மகளை பார்த்து மிக சங்கடமாக போய்விட்டது. மருமகள் மாசமாக இருக்க கண்டித்து பேசினால் எதுவும் ஆகி விடுமோ என்ற பயமும் இருந்தது. புது பெண், மாசமாக வேறு இருக்கிறாள் அதிக கண்டிப்பு காட்ட முடியாது. கொஞ்ச நாள் போனால் புரிந்து கொள்வாள், மகனும் தெளிவடைவான் என்று மகளை தான் சமாதானம் செய்தார். இதுவரை இந்த மாதிரி சண்டைகள் எதுவும் வீட்டில் வராததால், ஆண்களுக்கு குடும்ப பூசல் தெரிய வில்லை.
பிரவீனா, மகனுக்கு குட்டி லப்பர் பேண்டில் முடியை ஒன்று சேர்த்து அடக்கினாள். சீக்கிரம் ஒரு வழி செய்ய வேண்டும் என்று நினைத்து கொண்டாள். இப்படியே விட்டால் பிள்ளைக்கு முடியாமல் போய் விடும்.
அலுவலகத்திலும் மித்ரன் கண்டிப்பாக தான் இருந்தான். தற்போது இருக்கும் தலை வலியை கூட்டுவது போல இருக்கும் அவன் செயல்… இவள் மட்டுமே டார்கெட் என்பது போல கண்டிப்பும், ஒதுக்கமும் இவளிடம் மட்டுமே..
மித்ரன் அதிகம் திட்டுகிறான் என்று பிரவீனா மேலும் ஒதுங்க, அதற்கும் வைத்து செய்தான். அவளை, அவள் வழியில் போ என்று விடாமல்… இவனும், இவன் வழியில் செல்லாமல் ஒரு மாதிரி மன அழுத்தத்தில் சென்று கொண்டிருந்தான்.
அவன் மனம், அவனையும் மீறி பிரவீனாவை நாடுவதை உணர்ந்ததால் வந்து கோபம். தன் மனதை கட்டு படுத்த தெரியாமல் வந்த அழுத்தம் எல்லாம் அவள் மீதே வெறுப்பாக காட்டுகிறான்.
பிரவீனா, பேசாம இவன் மீது மேல் இடத்தில் கம்பளைண்ட் செய்து விடுவோமா என்று யோசிக்க ஆரம்பித்தாள். ஆனாலும், இவனைப் பகைத்துக் கொள்ளவும் பயமாக இருந்தது. சராசரி நடுத்தர வர்க்க குடும்பத்துப் பெண். போடா நீயும் உன் வேலையும் என்று தூக்கிப் போடும் நிலையில் அவள் இல்லை. எல்லோரைப் போலவும் முடிந்த அளவு கண்டுகொள்ளாமல் இருக்க பழகினாள்.
அன்று மதிய உணவு இடைவேளையின் போதும், மித்ரன் முகத்தை தூக்கிக்கொண்டு தான் இருந்தான்.
“ஏன் பிரவீ, அத்துக்குட்டிக்கு முடி வெட்டாம இருக்க…” என்று சாய் கேட்க.
“திருச்செந்தூர் முருகனுக்கு மொட்டை போடணும்பா… உங்க மாமா வேண்டுதல்…” என்றாள் பிரவீனா.
“அப்புறம் எதுக்கு இவ்வளவு முடிய வளர்த்து வச்சிருக்க.. போய் மொட்டை போட வேண்டியது தானே…”
“எம் மடியில வச்சா மொட்டை போட முடியும். வீட்ல சொல்லணும், அவங்க நேரத்தை பாக்கணும், தாய்மாமன் கிட்ட பர்மிஷன் வாங்கணும்.. நிறைய வேலை இருக்கு…”
“நம்ம மித்ரன் சார் சொல்ற மாதிரி, என்ன உங்க சிஸ்டமோ போ…” என்று சாய் ஶ்ரீ சொன்னதும், தன் பெயர் அடிபடுவது உணர்ந்து மித்ரன் காதை கூர்மையாக்கினான்.
“அது ஒரு வகையில உண்மைதான்…”
“இன்னைக்கு காலையில நம்ம அதிரனை பார்த்ததும்.. எனக்கு என்ன தோணுச்சு தெரியுமா? நீ கோபப்படக்கூடாது…”
“மேடத்துக்கு அப்படி என்ன தோணுச்சாம்?…”
“நம்ம மித்ரன் சார குளோனிங் பண்ண மாதிரி இருந்துச்சு… அதே கலர், அதே கெட்டப், அப்படியே இருந்தான் நம்ம ஆதிரன்” என்று சொல்லி சாய் ஸ்ரீ சிரிக்க, மித்ரன் முகம் ஆர்வமாகியது…
பிரவீனாவும், “காலையில அத்து குட்டிக்கு தலை சீவும் போது நானும் அப்படித்தான் நினைச்சேன். நம்ம சார் மாதிரியே கெட்டப்…” என்றாள்.
பெண்கள் என்னவோ சாதாரணமாக தான் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால், மித்ரனுக்கு தான் முகம் எல்லாம் பூரித்து போனது. “என்ன ஆதிரன் தன்னை போலவா இருக்கிறான்!.. பார்க்கணும் போல இருந்தது. சாரை பார்த்தும் ரொம்ப நாள் ஆச்சு இன்னைக்கு போய் பாத்துட்டு வருவோமே!…”
அன்று மாலை பிரவீனா வீட்டுக்கு கிளம்பும்போது வேற டாஸ்க் அசைன் பண்ணி, அப்பொழுதே முடித்துக் கொடுக்க சொன்னவன், மித்ரன் மட்டும் சீக்கிரம் கிளம்பி விட்டான். அவனுக்கு நன்றாக தெரியும், ஆதிரன் தாத்தா கொஞ்சம் லேட்டாக தான் வருவார். அதுவரை மித்ரன் ஸ்கூல் கேம்பஸில் தான் விளையாடிக் கொண்டிருப்பான்.
மான்சி மூலம் அங்கு சென்று வருவது இவனுக்கு பழக்கம் என்பதால் எளிதாக உள்ளே சென்று விட்டான். அங்கு மணலில் ஓடி விளையாடிக் கொண்டிருந்த ஆதிரனை தான் மித்ரன் கண்கள் படம் பிடித்தது.
ஒருவகையில் ஒத்துக் கொள்ளும் படியாக தான் இருவரும் இருந்தார்கள். முக ஜாடை தான் வேற தவிர, கலரும், கெட்டப்பும் ஒரே மாதிரி இருந்தது. அவனைப் போலவே கிளிப் குத்தி, முடியை பேண்டில் அடக்கி இருந்தான் ஆதிரன்.
அதைப் பார்த்ததும் மித்ரனுக்கு என்னவோ ஒரு பெரிய சந்தோஷம். அவனைத் தூக்கிக் கொள்ள ஆசையாக இருக்க, தூக்கிக் கொண்டான்.
“ஹாய் அத்து!…”
“ஹாய் மித்து!…”
“சார் எப்படி இருக்கீங்க?…”
“நான் உங்கள ரொம்ப நாள் தேடுனேன். அப்புறம் மறந்துட்டேன்” என்று ஆதிரன் சொன்னதும் மித்ரனுக்கு மனம் உருகி போனது. சிறு பையன் தன்னைத் தேடி இருக்கிறானே என்று வாஞ்சையாகவும் இருந்தது.
“சார் என்னை தேடுனீங்களா எதுக்காம்?…”
“நீங்க என்னோட ப்ரெண்ட். உங்களைப் பார்க்கவே இல்லையே. அதான் தேடினேன்” குழந்தையாக பதில் சொன்னான் ஆதிரன்.
“இனி தினமும் பார்ப்போமா…”
“பார்க்கலாமே! நீங்க என் கூட சேர்ந்து விளையாடுவீங்களா?..”
“இனி எனக்கு இதை விட பெரிய வேலையே கிடையாது அத்துகுட்டி” என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டான்.
“நீங்க என்னை மாதிரியே இருக்கீங்க” என்று அவன் முடியை தொட்டு ஆதிரன் கேட்கவும்.
பெரிதாக சிரித்தவன் “நான் ஒன்னும் உன்னை மாதிரி இல்லை. சார் தான் என்ன மாதிரி இருக்கீங்க…” என்றான்.
“நான் ஏன் உங்கள மாதிரி இருக்கேன்…” என்று சின்னவன் கேட்டதும், பதில் தெரியாமல் முழித்தவன்,
“அது வந்து… நாம ரெண்டு பேரும் ப்ரெண்ட்ஸ் தானே.. அதனால் தான்” என்று மித்ரன் சமாதானம் செய்ய, சரி என்று ஒத்து கொண்டான் சின்ன குட்டி.
அடுத்தடுத்த நாட்களில் ஆதிரனுக்காகவே மித்ரன் தொடர்ந்து பள்ளிக்கு வந்தான். அவனின் மன அழுத்தத்திற்கு ஆதிரனுடன் இருப்பது பெரும் ஆறுதலாக இருந்தது.
வீட்டிற்கு வந்தும் ஆதிரன் என் ஃபிரண்ட் மித்து என்று பேச.. யாருக்கும் பெரிதாக சந்தேகம் வரவில்லை. அவர்கள் மித்து என்ற ஒருவன் இவ்வளவு பெரிய ஆள் என்றெல்லாம் யோசிக்கவில்லை. பிரவீனாவுக்கு தெரிந்தாலும் அவள் பெரிதாக பட்டு கொள்ளவில்லை. அவனின் அக்கா பெண் அங்கிருப்பதால் வந்திருப்பான் என்றே நினைத்துக் கொண்டாள். அவன் பற்பசாக ஆதிரனுக்காகவே வருகிறான் என்றெல்லாம் பிரவீனா யோசிக்கவில்லை. இவர்கள் இருவரின் பழக்கத்தின் ஆழம் அவளுக்கு தெரியவில்லை. தந்தையின் பாசத்தையும், அரவணைப்பையும் தாய்மாமனிடம் உணர்ந்தவன். அது பட்டென்று நின்று போக… மெல்ல மெல்ல மித்ரனிடம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்தான் ஆதிரன். அதை பிரவீனா உணரவில்லை.
அன்று மாலை பிரவீனா, வீடு வரும் பொழுது அவளின் தங்கை குடும்பமே அங்கு அமர்ந்திருந்தது. மகேஸ்வரி கையை பிசைந்து கொண்டு நின்றிருக்க, என்னவோ என்று பார்த்திருந்தாள் பிரவீனா.
“வா பிரவீ… அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை குட்டி பாப்பாவுக்கு மொட்டை எடுக்கிறோம்… வீக் எண்டு தானே.. நீயும் ஆதிரனும் மறக்காம வந்துரனும்…” என்று முறையாக அழைத்தான் ஶ்ரீதர்.
சந்தோசமாக தலையசைத்தவள். அத்தை, மாமா என்று எல்லோரும் வந்து இருக்க அவர்களுடன் பேச அமர்ந்து கொண்டாள்.
பெரிய தர்ம சங்கடத்தில் சிக்கிக்கொண்டது பிரவீனா பெற்றவர்கள் தான். ஒன்றை வருடமாக சாமிக்கு முடி வளர்த்து ஆதிரன் காத்திருக்க, ஒரு ரெண்டு மாசமாகத்தான் பிரீத்தி சொல்லிக் கொண்டிருக்கிறாள் சாமிக்கு முடி எடுக்க வேண்டும் என்று…
இவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், ஸ்ரீதர்.. தன் மனைவி, மகள், பெற்றோரோடு வந்து தாம்பளத்தில் பழம், தேங்காய், வெற்றிலை பாக்கு, உடைகளோடு தேதி சொல்லி அழைக்கவும் என்ன சொல்வது என்று தெரியவில்லை இவர்களுக்கு…
என்னதான் சொந்தமாக இருந்த போதும் வீட்டின் மாப்பிள்ளை. அதுவும் தற்போது இருக்கும் ஒரே மாப்பிள்ளை. சம்பந்தக்காரங்களை அழைத்துக் கொண்டு முறையாக வந்து சொல்பவன் மேல் கோபம் கொள்ளவும் முடியாது. அவர்கள் காதுகுத்து போல பெரிதாக எல்லாம் செய்யவில்லை. குடும்பத்தார் முன்னிலையில் சிம்பிளாகத்தான் விழா வைக்கிறார்கள். அதனால் செலவு பெருசு என்றெல்லாம் சொல்ல முடியாது. இவர்கள் நேரம் ஒதுக்கி செல்ல வேண்டும் அது மட்டுமே…
ஆனால், அவ்வாறு செய்தால், அது பெரிய மகளுக்கு செய்யும் அநியாயம் ஆகிவிடும். தங்களை மட்டுமே நம்பி நிற்கும் பெண்ணை உதாசீனப் படுத்தியது போல் ஆகிவிடும். அதற்காக தங்களை மதித்து மரியாதை செய்யும் உறவை தள்ளி வைக்கவும் முடியாது. ப்ரீத்தி குடும்பம் சென்ற பின், பிரவீனா தன் அறைக்கு சென்று விட.. மற்றவர்கள் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள் நிச்சயம் பிரவீனாவுக்கும் கேட்கும்…
“என்னங்க இது இப்படி சங்கடமாகி போச்சு” என்று மகேஸ்வரி சொல்ல,
“செலவு ஒன்னும் நமக்கு பெருசு இல்லை. போக தான் வேணும். வேற என்ன பண்றது அக்காவை தான் சமாதானம் செய்யணும்…” என்றான் பிரேம்.
“ப்ரீத்தி தன் குடும்பத்தோடு இப்படி வந்து நிற்கும்னு நான் நினைக்கவே இல்லை”என்றார் தந்தை.
“இப்ப என்ன செய்றது. மூத்தவ பிரவீனா தான். அவ ஒரு வருஷமா சொல்லிட்டு இருக்கா.. இன்னைக்கு அவளை விட்டுட்டு, அவ தங்கச்சிக்கு நாம செஞ்சா தப்பா போய்டாதா? அவ மனசு ரொம்ப வருத்தப்படும்…” என்றார் மகேஸ்வரி.
“அதனால என்னம்மா பண்ண முடியும் பிரவீனா நம்ம வீட்லே இருக்கா… அக்காக்கு பெருசா எந்த பிரச்சனையும் வராது. ஆனா, ப்ரீத்தி அப்படி கிடையாது. அவ புருஷன், அத்தை, மாமா எல்லாரும் நாம யோசிக்கணும். அவங்க சொந்தக்காரங்களும் வருவாங்க, நம்ம மரியாதை என்ன ஆகுறது…” என்றான் பிரேம்.
தந்தை முகம் யோசனையாக இருக்க,
“ஆமாங்க பிரேம் சொல்றதும் சரிதான். பிரவீனாவை யாரு என்ன கேட்க போறா?.. ஆனா, பிரீத்திய தள்ளி போட சொன்னா, அது சரியா இருக்காது. அவ புகுந்த வீட்ல வாழ்றா… நாளைக்கு நம்ம பொண்ணு தான் கஷ்டப்படும். பிரவீனாவை சமாளிச்சுப்போம். ப்ரீத்திக்கு செய்ற கடமையை சரியா செய்வோம்…” என்று மகேஸ்வரி சொல்ல, வேற யாருக்கும் எந்த வழியும் தெரியவில்லை.
அடுத்தடுத்து திட்டமிட ஆரம்பித்தார்கள். யார் யாருக்கு உடை எடுக்க வேண்டும், எத்தனை தட்டு வைக்க வேண்டும்? பிள்ளைக்கு என்ன வாங்க வேண்டும்? கார் புடிக்க? உணவுக்கு சொல்ல என்று வேலைகள் நடக்க ஆரம்பித்தது.
பிரவீனாவிடம் சொல்லவில்லை. ஒரு நாள் முன்பு சொன்னால் போதும், அவள் வருத்தப்படுவாள் என்றே மறைத்தார்கள். அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை கிளம்ப ரெடியாகி இருக்க… இந்த வார வியாழக்கிழமையே பிரவீனா கிளம்பி விட்டாள்.
ஒரு முக்கியமான தோழியின் வீட்டில் விசேஷம், கண்டிப்பாக சென்றே ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து கிளம்பி விட்டாள். யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. மகனை மட்டும் கையில் பிடித்துக் கொண்டு இரவு எட்டு மணிக்கு திருச்செந்தூர் செல்லும் வண்டியில் ஏறிக்கொண்டாள். இரவு பன்னிரண்டு மணிக்கு தான் மித்ரனுக்கு லீவ் அப்ளிகேஷன் மெயில் போட்டாள்.
பார்த்ததும் பயந்து போனான் மித்ரன். அன்று மாலை வரை கூட லீவ் பற்றி வாயைத் திறக்கவில்லை பிரவீனா. அவசர லீவ் என்றால் என்னவோ என்று பயந்து அந்த நேரமே அவளுக்கு அழைத்து விட்டான். தனக்கு கீழே வேலை பார்க்கும் பெண் என்றாலும், இந்த நேரத்தில் போன் செய்யலாமா? என்றெல்லாம் அவன் யோசிக்கவே இல்லை. என்னவோ பிரவீனாவுக்கு பிரச்சனையா என்று பயந்து தான் அழைத்தான்.
இவளும் எதற்கு அழைக்கிறான் என்று புரியாமல் அழைப்பை ஏற்க,
“என்ன பிரவீனா எதுவும் பிரச்சனையா?” என்றான் பதட்டத்தோடு…
“பிரச்சனையா? எனக்கென்ன பிரச்சனை சார்?” புரியாமல் அவள் கேட்க.
என்ன சொல்லுவான், “மிட் நைட்ல லீவ் மெயில் வரவும் கொஞ்சம் பயந்துட்டேன். உனக்கு வேற ஒன்னும் பிரச்சனை இல்லையே. நீ, ஆதிரன் எல்லாம் நல்லா இருக்கீங்க தான” என்று பதட்டத்தோடு கேட்க.
அவன் குரலும் அந்த குரலில் இருந்த அக்கறையும் இவள் மனதை என்னவோ செய்ய பட்டென்று போனை கட் பண்ணி விட்டாள்.
error: Content is protected !!