Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கனவும், நினைவும் உனையே

Kanavum Nanavum Uniayae 3 1

3

இமைகள் என்னோடு சண்டை போடுதே
எதிரே வந்தால் என்ன

தினமும் கண்ணோரம் தீபம் வைக்கிறேன்
வெளிச்சம் தந்தால் என்ன

மணி சரிபார்த்து
தினம் வழிபார்த்து
இரு விழிகள் தேய்கிறேன்



Advertisement

வீட்டினரை பார்த்து வந்தவள், லேசாக சிரித்தபடி வந்தாலும், அவள் கண் அவ்வப்போது அங்கு  தாவ நினைப்பதை தவிர்க்க முடியவில்லை,

       தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு வீட்டினரை பார்த்து  வந்தவள் நேராக பாட்டி தாத்தாவின் அருகில் வந்து அமர்ந்தாள்,

        அனைவரும் சாமி தரிசனத்திற்கு போகலாம் என்று சொல்ல.,

Advertisement

     “உங்க பேத்தி அழகா இருக்கா”, என்று பாட்டியிடம் அந்த மணப்பெண்ணின் பாட்டி சொல்லவும்.,

Advertisement

      இங்கு பாட்டியோ, “அழகா தான் இருக்கா., என்ன செய்ய நாங்களும் கல்யாணத்துக்கு பார்க்கலாம் ன்னா”, என்று பேச தொடங்கவும்.,

     அவர்களை பார்த்து முறைக்க., “இப்படி முறைச்சு, முறைச்சு, எங்களை அடக்கி வைக்கிறா”,என்று சொன்னார்.

      இவளோ “பாட்டி எப்பவும் இந்த பேச்சு தானா”, என்று சொன்னவள்.

Advertisement

      “நீங்க பேசிட்டு இருங்க”, என்று நகன்று அமர போக இழுத்து தன் அருகில் வைத்துக் கொண்ட பாட்டி.,

    “சாமி கும்பிட்டுட்டு மண்டபத்துக்கு கிளம்பனும், அதுவரைக்கும் ஒரு இடத்துல இரு, அங்க போறேன், இங்க போறேன் ன்னு காணாமல் போயிடாத”, என்று சொல்லவும்.

    பாட்டியை திரும்பி பார்த்து முறைத்தவள் தாத்தாவிடம்., “எதுக்கு தாத்தா, இந்த பாட்டியெல்லாம் கல்யாணம் பண்ணீங்க, ஒரே தொண தொணப்பு தாங்க முடியல, மார்டனா இருக்கிறேன்னு  பேர்ல, என்னைய ட்ரெடிஷனல் இருக்க விட மாட்டேங்குது”, என்று சொன்னாள்.

       தாத்தாவோ சிரித்துக்கொண்டே, “உங்க பாட்டி சென்னை வர வரைக்கும் ட்ரெடிஷனல் தான்., இங்க வந்ததுக்கப்புறம் அதுவும் மருமகள் வந்ததுக்கு அப்புறம் கூட அப்படி தான் இருந்தா, பேரன் பேத்தி வந்ததுக்கப்புறம் தான் மாறிட்டா”, என்று குறை சொன்னார்.

       இருவரும் ரகசியம் பேசுவதை பார்த்த பாட்டி தான்,  “என்னை பத்தி தானே பேசுறீங்க”, என்று கேட்டார்.

          இவளோ, “இல்ல பாட்டி, தாத்தாக்கு வேற பொண்ணு பார்க்குறத பத்தி பேசிட்டு இருக்கேன்., நீங்க ரொம்ப கல்யாணத்துக்கு அவசரப்படுறீங்க., அதனால தாத்தாக்கு வேற பொண்ணு பார்த்து நாங்க கட்டி வச்சுக்கிறோம், நீங்க வேற வேலையே பாருங்க”, என்றாள்.

     இங்கு பேசிக் கொண்டிருக்க.,  அங்கு மற்றவர்கள் மற்ற விஷயங்களை பேசிக்கொண்டிருந்தனர்.

    ஒன்றுவிட்ட சொந்தம் என்று இவர்களுடைய உறவுகளுமே அங்கு வந்திருக்க, சாமி கும்பிட்டுவிட்டு மண்டபத்திற்கு செல்லலாம் என்று கிளம்ப தொடங்கினர்.

       அவர்களோடு சேர்ந்து வந்தாலும் யோசனையோடு வந்தவளுக்கு பின்பு அந்தப் பக்கமாக திரும்ப கூட இல்லை.

    ஏனென்றால் இவளுக்கு யாரையும் யாரும் அறிமுகப்படுத்தி வைக்கவில்லை. அவளையும் இந்த பாட்டி தாத்தா பார்த்ததோடு சரி ., மற்றவர்கள் யாரும் அவளைப் பார்த்து சிரித்ததோடு சரி, பேசக்கூட இல்லை இவளும் தோளைக் குழுக்கி விட்டு, ‘இதெல்லாம் அவங்க அவங்க இஷ்டம், நம்ம தலையிடக்கூடாது, ஒருவேளை என்னை நாத்தனார் கொடும்மக்காரி அப்படி நினைத்திருப்பார்களோ’, என்று யோசித்துக் கொண்டிருந்தவள்.

      ‘நாம எதுக்கு அவங்க விஷயத்துல தலையிட போறோம், அவங்க பேமிலி அவங்க பார்த்துக்கட்டும்’, என்று யோசித்தபடியே தாத்தா பாட்டி பின் தான் சென்றாள்.

      பின்பு அங்கு மீனாட்சி தரிசித்து, சுந்தரேஸ்வரரிடம் தங்கள் கோரிக்கைகளை வைத்துவிட்டு அங்கிருந்து மண்டபம் கிளம்பினர்.

    அங்கு நிச்சயதார்த்த ஏற்பாடுகளில், முக்கிய  சம்பிரதாய விஷயங்கள் பெரியவர்களோடு பேசி  ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர்.

        இவளோ தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

     பாட்டி தான், “இங்க வா” என்றார்.

    “அது தான் பெரியம்மா வீட்டில் ஆள் வந்திருக்காங்க தானே, அங்க தான் அக்கா இருக்காங்க இல்ல, அவங்களை வச்சு செய்யுங்க., என்னை எல்லாம் எதிலும் இழுக்காதீங்க.,  நான் பஸ்டே சொல்லிட்டேன்ல”, என்று பாட்டியிடம் சொல்லியபடி நகர்ந்து சென்றாள்.

     “ஏன் இப்படி இருக்க”, என்று கேட்டார்.

    அந்த அக்கா கல்யாணம் ஆனவங்க., அவங்க செய்றது தான் முறை,  இதுல எல்லாம் கூப்பிடாதீங்க பாட்டி., இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் நான் செய்ய மாட்டேன்”, என்று சொன்னாள்.

    ” நீதானே கூடப்பிறந்தவ, அப்போ நீ தானே செய்யனும், முறை ன்னு இருக்கு இல்ல, நீ சொல்லுற கலாச்சாரத்தில் இதுவும் ஒன்று தானே”, என்றார் பாட்டி.

      “அதுக்கு எனக்கு கல்யாணம் ஆகி இருக்கணும், அப்படி இருந்தா தான்  இதெல்லாம்”, என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

    “நீங்கதான் இதெல்லாம் சொல்லிக் கொடுக்கிறீர்களா?”,  என்று தாத்தாவை பார்த்து பாட்டி கேட்டார்.

    “எனக்கு வேற வேலை இல்ல பாத்தியா, போய் நிச்சயதார்த்தத்தில் வயசுல மூத்தவளா போய் நில்லு”, என்று தாத்தா சொல்லவும்.,

      பாட்டியோ,  “ஓஹோ எனக்கு மட்டும் தான் வயசாயிடுச்சு., நான் தான் வயசுல மூத்தவ, உங்களுக்கு இப்பதான் வயசு திரும்புதோ, வாங்க நீங்களும்”, என்று சொல்லவும்

    அவர்கள் இருவரும் பேத்தியை கூப்பிட்டு பார்க்க., அவளோ, “நீங்க ரெண்டு பேரும் போங்க., நா இங்க உட்கார்றேனே”, என்று சொல்லி மேடையை பார்க்கும் படி கீழே அமர்ந்து கொண்டாள்.

      பெண் வீட்டின் சார்பாக பெண்ணின் தாத்தா பாட்டி., அப்பா பெரியப்பா சித்தப்பா அவர்களது பிள்ளைகள் என மொத்த குடும்பமும் இருந்தது,

     இவர்கள் வீட்டுப்புறமும் இருவீட்டு சொந்தம், ஒன்று விட்ட சித்தப்பா வீட்டினர், பெரியம்மா வீட்டில் அக்கா அண்ணன் என்று அனைவரும் மேடையில் இருந்தனர்.

    இவளை அழைக்கும் போது இவள் தான் வரவில்லை என்று சொல்லிவிட்டாள்.,

   அமைதியாக அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது பெண்ணின் அம்மா இவளை திரும்பி பார்த்துவிட்டு திரும்புவதை பார்த்துக் கொண்டு தான் இருந்தாள்.

     ஏனோ அவர்களுக்கு இவள் கோயிலுக்கு சென்ற போது பாட்டி தாத்தாவுடன் இவள் பேசிக் கொண்டிருக்கும் போதே, அவள் அண்ணன் இவளிடம் வந்து “எப்படி எக்ஸாம் பண்ண, டிராவல் எல்லாம் சேஃபா இருந்துச்சா” என்று கேட்டுக் கொண்டிருந்தான்.

     இவள் அண்ணனிடம் பேசிக்கொண்டே நிமிர்ந்து பார்க்கும் போது., அவர்களது முகம் மாற்றத்தை கவனித்தவர் அதன் பிறகே சற்று ஒதுங்கி இருக்க தொடங்கினாள்.

     முக மாற்றம் அல்லாமல் அண்ணனின் மனைவியாக போகிறவரிடம் ஏதோ சொல்ல., அந்த பெண்ணும் அவள் அம்மாவை சத்தம் போடுவது தெரிந்தாலும்.,

    ‘வேண்டாம் பிரச்சனைகளை நாமே இழுத்துக் கொள்ளக் கூடாது., வாழ்க்கையில் எல்லாமே நல்லபடியாக இருக்க வேண்டும்., அதை விட்டுவிட்டு., முதல் கோணல் முற்றும் கோணல் என்று ஆகிவிடக் கூடாது., தள்ளியே நிற்போம்’ என்று நினைத்து இருந்தாள்.

         ஆனாலும் அவள் கண் பார்க்க துடிக்கும் அவனை மட்டும் அவ்வப்போது திருட்டுத்தனமாக பார்த்தாலும்., ஒருபுறம் பயமும் இருந்தது., வேண்டாம் இது தேவை இல்லை என்று மனம் வேறு அடித்து கொண்டது.

    மூளையோ அவனைப் பார் என்று அவளை தூண்டிக் கொண்டிருந்தது.

     இது சரிப்பட்டு வராது என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே., அங்கு நல்லபடியாக தாம்பூலம் மாற்றி நிச்சயதார்த்த ஓலை வாசிக்க தொடங்கினர்.

           இவளும் தன் அண்ணனையும், அண்ணியாக வரப்போகிற அவளையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே தன் வீட்டினரையும் பார்த்தாள்.

          அதே நேரம் பெண் வீட்டினராக  இருந்த தாத்தா பாட்டி தான், இவளுடைய தாத்தா பாட்டியிடம் பேசுவது தெரிந்தது.,

    ‘என்ன பேசிக்கிட்டு இருக்காங்க’ என்று இவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே இவளுடைய தாத்தா மேடையில் இருந்து கீழே இறங்கி வந்தவர்., இவளை கைப்பிடியாக தன்னோடு சேர்த்து அழைத்துக் கொண்டே சென்றார்.

      “தாத்தா அப்புறமா வர்றேன்”,என்று இவள் சொல்ல.,

      “பேசாம இரு, அங்க எல்லாரும் ஏன் உங்க பேத்தி மேல வரமாட்டிக்கான்னு கேக்குறாங்க., அப்படி  கேட்டா நல்லவா இருக்கு வா வா., கொஞ்ச நேரம் மேல இருந்துட்டு எல்லாரும் போட்டோ எல்லாம் எடுத்ததுக்கப்புறம் கீழே வந்து உட்கார்ந்துக்கோ”, என்று சொன்னார்.

       இவளோ “நான் கிளம்பணுமே தாத்தா”, என்று சொல்லவும்,

    “போலாம் போலாம் வா”, என்று அழைத்துக் கொண்டு மேலே வந்தார்.

நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த பிறகு, ஒவ்வொருவராக மணமக்களை ஆசீர்வாதம் செய்ய, இவள் தள்ளி நின்று பார்க்கும் போது பெண்ணின் பாட்டி தான்.,

      “என்னமா நீ, மாப்பிள்ளைக்கு தங்கச்சியா பக்கத்திலேயே நிக்கேணுமா இல்லையா” என்று கேட்க,

       இவளோ சிரித்துக் கொண்டே, “இல்ல பாட்டி அக்கா நிக்கிறாங்க இல்ல”, என்று தன் பெரியம்மா மகளை காட்டினாள்.

      அவரோ “உங்க அக்கா நின்னா என்ன?, நீயும் கூட நிக்கனும் இல்ல”, என்று சொன்னாள்.

          சிரித்துக் கொண்டே தாத்தா பாட்டியோடு சேர்ந்து நின்றாள். அப்போது பாட்டி தான், “இங்க வா நீ, இங்க யாரையுமே தெரியாம, நீ இப்படி சட் ன்னு வந்துட்டு இப்படி போகவா”, என்று சொன்னவர்.,

தன் குடும்பத்தினரிடம் அவளை அறிமுகப்படுத்தினார். அறிமுகப்படுத்தியதோடு ஒவ்வொருவரையும் தனித்தனியாக அவளுக்கு உறவு சொல்லி அறிமுகம் செய்தார்.

   எல்லோருக்கும் சிரித்துக் கொண்டே வணக்கம் மட்டும் சொன்னவள், சிரித்தபடியே நின்றாள்.

    பெண்ணை பெற்றவளோ, அப்போது உரிமையாக பேசுவதாக நினைத்துக்கொண்டு, இவளை பார்த்து “மருமகளே” என்று அழைத்து சொல்ல,

      இவளோ சிரித்துக் கொண்டே, “சாரி ஆன்ட்டி, அண்ணா தான் உங்க வீட்டு மருமகன்,நீங்க என்னை மருமகளே சொல்லாதீங்க., பேர் சொல்லியே கூப்பிடுங்க., என் பேரு அனாமிகா”, என்றாள்.

      அவருக்கு அது முகத்தில் அடித்தது போல இருந்தாலும்., சிரித்து சமாளித்துக் கொண்டவர், “உங்க அண்ணன் எங்க வீட்டு மருமகன் னா, நான் உனக்கு  அத்தை முறை தானே, நீ எதுக்கு  ஆன்ட்டி கூப்பிடுற”,என்றார்.

     “சாரி ஆன்ட்டி, நீங்க எங்க அண்ணனுக்கு தான் அத்தை, எனக்கு இல்ல”, என்று சிரித்துக் கொண்டே மறுத்தவள்.,

    “எங்க அண்ணன் அத்தை ன்னு கூப்பிடுவான்.,  நான் ஆண்டினே கூப்பிடுறேன், அதுதான் எனக்கும் கம்ஃபர்டபிலா இருக்கும்”, என்று சொல்லிவிட்டாள்.

    அதே நேரம் சற்று தள்ளி நின்று, இவளை ஆழ்ந்து பார்த்தவனின் பார்வை, இவள் பார்வை அவனிடம் திரும்பவும், அவனதை நகர்த்திக் கொண்டான்.

அப்போது தான் அறிமுகப்படுத்தி வைத்திருந்தார்கள், ‘அவன் வீட்டின் மூத்த பேரன் என்று., மூத்த மகனின் ஒரே மகன் அவன் என்று’ பாட்டி சொல்லி இருக்க இப்போது பார்த்தவள் திரும்பிக் கொண்டாள்.

    ஏனோ அவளுக்கு பெண்ணின் அம்மாவிடம் சாதாரணமாக பேசக்கூட தோன்றவில்லை., ஏனெனில் அவரது பார்வை அவ்வப்போது கூறு போடும் பார்வையாகவே இருந்தது.

    அதே நேரம் அந்த வீட்டின் மற்ற இரண்டு மருமகள்களும் சிரித்த முகமாக சாதாரணமாக பார்த்து நிற்க., அவர்களை ஏனோ இவளுக்கு பிடித்து போயிற்று, சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தவள்,

   பின்பு அனைவரும்  ஒவ்வொரு குடும்பமாக சேர்ந்து குடும்பப் புகைப்படம் எடுத்த பிறகு., அனைவரும் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்தவுடன்.,

   இவள் தாத்தாவிடம் “நான் கிளம்பட்டுமா தாத்தா”, என்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!