Skip to content
Post Views: 10,966
என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 15
மித்ரனுக்கு, பிரவீனா போனை கட் பண்ணினதும் ஒன்றும் புரியவில்லை. திரும்ப முயற்சி செய்து பார்க்க.. சுவிட்ச் ஆப் என்று வந்தது. என்ன ஆச்சு அவள் எங்கிருக்கிறாள்? அவளுக்கு என்ன பிரச்சனை? தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை. பேசாமல் அவள் வீட்டுக்கே சென்று பார்த்து விடுவோமா என்று ஒரு நொடி தோன்றியது… அடுத்து மித்ரன் தாமதிக்கவில்லை.
இரவு பன்னிரண்டு மணிக்கு, தான் ஏன் பைத்தியக்காரன் மாதிரி பிரவீனா வீட்டை நோக்கி ஓடுகிறோம் என்றெல்லாம் அவனுக்கு தெரியவில்லை. அவன் மனம் என்னதான் காதல், கல்யாணம், குடும்ப வாழ்க்கை எல்லாம் நமக்கு செட்டாகாது என்று தோன்றினாலும்… அவனையும் மீறி அவன் மனம் பிரவீனாவை தேடி ஓடத்தான் செய்கிறது. அதற்கு முறையான காரணம் அவனுக்கு பிடிபடவே இல்லை. ஒருவேளை காதலாக இருக்குமோ என்று நினைத்தாலும் அதை ஏற்றுக் கொள்ள மனம் விரும்பவில்லை.
இங்கு பிரவீனா மனம் பெண்டுலம் போல ஆடிக்கொண்டிருந்தது. இதுவரை, மித்திரனை தனக்கு மேல் அதிகாரி, ஒரு நல்ல நண்பன்.. அந்த ரீதியில் தான் பார்த்தாள். மித்ரன் கேட்ட வார்த்தை எதார்த்தமாக, சாதாரணமாக ஒரு நல்ல நட்பில் இருக்கும் பலர் கேட்பதுதான். ஆனால், அதன் பொருள் பாதிக்கப்பட்டவர்களுக்கே தெரியும். நாம் தனியோ இந்த உலகத்தில் என்ற விரக்தியில் இருப்பவளுக்கு உன் மீது அக்கறை கொண்டவன் நான் என்று உணர்த்தும் விதமாக மித்திரனின் வார்த்தைகள் அவளுக்கு வலியை கிளறச் செய்தது. இன்னும் பிரவீனா மித்ரன் மனதை ஆராயவில்லை. அவளுக்குள் எழுந்த வலி எல்லாம் கடவுள் ஏன் என்னை சபித்தார் என்பது தான்…
Advertisement
இந்த உலகத்தில் எத்தனையோ பாவங்களையும், கொடூரங்களையும் செய்தவர்கள் கூட நன்றாக இருக்கும் பொழுது… எந்த பாவமும் செய்யாமல் ஒரு வார்த்தை பிறரை கடிந்து பேசினால் கூட மனம் புண்படும் இவளுக்கு.. கடவுள் இவ்வளவு பெரிய தண்டனையை கொடுத்து விட்டாரே என்ற ஆதங்கமும், கோபமும் நெஞ்சமுட்ட நின்றது. அப்படி என்ன வரத்தை கடவுளிடம் கேட்டாள்?…
பொன்னும், பொருளும், பூரண ஐஸ்வரியமும், ஊர்மெச்சம் வாழ்க்கையும் கேட்கவில்லையே!… இந்த உலகத்தில் பிறந்து, விவரம் அறிந்த வயதில் இருந்து கடவுள் என்று யாரை கைகூப்பி வணங்கினாளோ… அவரிடம் என்ன பெரிதாக கேட்டுவிட்டாள். தீர்க்க சுமங்கலி என்ற வரத்தை தானே!… ஆண், பெண் இணைவு என்பது சாதாரண செயலாகவோ, இயற்கையின் நிகழ்வாகவோ கடக்கும் சமூகத்திலா இந்த பேதைப் பெண் பிறந்திருக்கிறாள்.
உன் உடலின் பாதி, உன் வாழ்வின் மீதி உன் பதி என்றல்லவா வளர்த்து விட்டார்கள். உடுத்தும் உடையிலிருந்து, வைக்கும் பூவிலிருந்து, வணங்கும் கடவுள் முதற்கொண்டு வாழும் முறைமை வரை கணவனை கொண்டே கட்டமைக்கப்பட்ட சமூகமாகி போனது நம் பெண் சமூகம்…
Advertisement
ஒடுக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில் விதவைகளும் இடம்பெறும் அளவுக்கு நம் சமூக மேன்மை உள்ளது. வேற என்ன சொல்ல முடியும். இங்குதானே இளம் வயது விதவைகள் எல்லாம் ஏதோ பூர்வ ஜென்மத்து பாவிகள் போல நடத்தப்படுகிறார்கள். பிரவீனா வாசல் தெளித்து மார்கழி கோலம் போட்டே பல நாட்கள் ஆகிவிட்டது.
Advertisement
முன்பு ஒரு முறை அவ்வாறு செய்ய… அவள் சொந்த பெரியம்மா முறை உள்ள அம்மாவே, “பிரவீ, உன் தங்கச்சி கல்யாண விஷயமா இனி தினமும் எங்களுக்கு வெளிய போற வேலை இருக்கும். காலைல உங்க பெரியப்பா வெளியே போகும்போது நீ நிக்கிற… நாங்க எதுவும் பெருசா நினைக்க மாட்டோம். ஆனால், மத்தவங்க சொல்றாங்க பார்த்து இருந்துக்கோ…” என்றதும், அதன் பின் அதிகாலை எழுந்தாலும் கதவு திறந்து முதலில் வெளியே செல்ல மாட்டாள்.
பிரவீனா இந்த ஐந்து வருடத்தில் இந்த மாதிரி பலதும் பார்த்து விட்டாள். ஆனால், மனம் என்னவோ மகனோடு தனியே நிற்க இருக்கும் வைராக்கியம்… தனக்கென்று ஒரு புதியதோர் வாழ்வை தொடங்குவோமா என்று நினைப்பில் இருந்ததில்லை. அவள் வாழ்வில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சங்கடங்களும், அவள் கணவனையே நினைவு படுத்த தொடங்கியது. கணவன் பிழைத்து விட்டிருக்கலாமோ, கடவுள் கொஞ்சம் கருணை காட்டி இருக்கலாமே என்று மனதோடு நிறைய புலம்புவாள். கடந்து போன காலம் ஒரு நாளும் எதிர்காலமாக மாறாது என்று நன்றாக தெரிந்த போதும், அதை கடந்து வர தெரியவில்லை பெண்ணிற்கு… மித்ரனின் வார்த்தைகள் அவளுக்கு, கணவனின் நினைவு அதிகமாக்கியது. இன்று மட்டும் தன் கணவன் உயிரோடு இருந்திருந்தால் பிறந்த வீட்டில் கூட மரியாதை கிடைத்திருக்கும். கணவன் குழந்தையோடு, மரியாதையாக, சமூக அந்தஸ்தில் வாழும் பெண்ணிற்கு இருக்கும் மரியாதை… வாழ வழி இல்லாமல் பிறந்த வீட்டில் தஞ்சம் புகுந்த பெண்ணிற்கு கிடைப்பதில்லையே?… இவள் எங்கு போவாள்? எப்படி ஆயினும் இவளுக்கு நம் துணை தேவைதானே? நம்மளைக் கடந்து செல்ல மாட்டாள் என்று தன் குடும்பத்தின் மறைமுக எண்ணம் தானே… இன்று அவளை விட ஆறு ஆண்டுகள் இளைய பெண்ணிற்கு அந்த வீட்டில் கொடுக்கும் மரியாதையை தனக்கு கொடுக்கவில்லை.
இன்று ப்ரீத்திக்கு கொடுக்கப்பட்ட மரியாதையும், கௌரவமும் அந்த வீட்டில் பிறந்தால் என்பதற்காக கொடுக்கவில்லை. அந்த வீட்டுப் பெண்ணை மனம் முடித்த மருமகனுக்காக கொடுக்கப்பட்ட மரியாதை. அவர்களை அண்டி கணவனை இழந்து வாழும் இவளது சொல் பெரிதாக முக்கியத்துவம் படவில்லை. வேறு என்ன காரணம் இருக்கப் போது நம் வீட்டில் நம்மை நம்பி இருக்கிறாள்.. நாம் சொன்னால் கேட்டுக் கொள்வாள் என்ற எண்ணம். அது சரியோ தவறோ இவளுக்கு பிடிக்கவில்லை.
Advertisement
அதன் பொருட்டு தான் என் மகன். எனக்கான கடமை… தாய்மாமன் மடியில் வைத்து தான் முடி இறக்க வேண்டுமா?.. ஏன் பத்து மாதம் வயிற்றில் சுமந்தவள் மடியில் சுமக்க மாட்டேனா!.. என் மடியில் வைத்து முடி இறக்கினால், அந்த காணிக்கையை கடவுள் ஏற்றுக்கொள்ள மாட்டாரா?.. அப்படி ஏற்றுக் கொள்ளாமல் கடவுள் கோபம் கொண்டால் கொள்ளட்டும்… இதைவிட பெரிதாக வேறு என்ன தண்டனையை அந்த கடவுள் எனக்கு சரி கட்ட முடியும். காலத்திற்கும் நினைத்து அழும் படியான கடவுள் கொடுத்த பெரிய தண்டனையை நெஞ்சை நிமிர்த்தி வாங்கிக் கொண்டவள் நான்?… வேற என்ன வர போகுது.. மன தைரியம் பிறக்க துணிந்தாள் பெண்…
நடுராத்திரி முழுவதும் பிரவீனா ஏரியாவையே சுற்றி வந்தான் மித்ரன். அவள் வீடு மிக நிசப்தமாக இருந்தது. பெரிதாக பிரச்சனை, கலவரம் மாறி ஒன்றும் தெரியவில்லை. ஒருவேளை ஆதிரனுக்கு தான் முடியவில்லையோ? அதனால் தான் லீவு எடுக்கிறாளா பிரவீனா?… காலை ஐந்து மணி வரை அந்தப் பக்கம் சுற்றியவன்.. ஒன்றும் கண்டுபிடிக்க முடியாமல் போக, சாய் ஸ்ரீயிடம் கேட்டுக்கொள்ளலாம் என்று கிளம்பிவிட்டான்.
அதே அதிகாலை ஐந்து மணிக்கு பிரவீனா தன் மகனோடு திருச்செந்தூர் வந்து இறங்கிவிட்டாள். உறங்கும் மகனை மடியில் வைத்து, ஒரு ஆட்டோ பிடித்து அந்த கடற்கரை முருகனைக் காண வந்தாள் பிரவீனா. நிதர்சனமாக வாழ்வில் பட்ட அடி கடவுளே இல்லை என்று உறுதி கொண்டாலும்… கடவுள் சன்னதியில் கால் வைத்ததும் மனம் கடவுள் பிரசன்னத்தை, தன்னை மீறி உணரத்தான் செய்தது.
பிரவீனா மகனை தன் மடியில் வைத்து முடி இறக்கினாள். யாரையும் தேட வில்லை. பொதுவாகவே, அவள் குடும்பம் சார்ந்த பெண். சொந்த பந்த உறவுகளுடன் சேர்ந்து வளர்ந்தவள். குடும்பம், சொந்தங்கள், உறவு பிணைப்பு என்பதற்கெல்லாம் பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கும் பெண்… அவள் கணவன் இருக்கும் வரை அப்படித்தான் பிரவீனாவும் இருந்தாள். எந்த இடத்திலும் நான், என் குடும்பம் என்ற நிலைப்பாட்டை அவள் விட்டதே இல்லை. அவ்வளவு தூரம் சொந்தங்களை இழுத்துப் பிடிப்பாள். அப்படி எல்லாம் சொந்த பந்தங்களை அனுசரித்து என்ன பயன்?.. தான் பெற்ற ஒற்றை மகனுக்கு துணை நிற்க ஒரு சொந்தம் இல்லையே?
ஆதிரன் தாய் முகம் பார்த்து நடக்கும் சமத்துப் பிள்ளை. பெற்றவள் முகம் பார்த்தே.. அவள் கைப்பிடியில் இழுவைக்கு சரியாக வந்தான். ஏன்? என்ன? எதற்கு? என்ற எந்த நச்சரிப்பும் இல்லாமல், அவள் இழுவைக்கு தோது கொடுத்து அவளுடன் நடந்தான். அது ஒரு வகையில் பிரவீனாவை பெருமை கொள்ளச் செய்தாலும், தந்தையில்லாப் பிள்ளையின் பொறுப்பை மகன் ஐந்து வயதிலே ஏற்க ஆரம்பித்து விட்டானோ என்று வலிக்கவும் செய்தது.
பிரவீனா சுற்றிலும் பார்த்தாள். அங்கு ஆதிரன் வயதில் ஒரு சிறுவனுக்கு முடி இறக்க… சுற்றிலும் கிட்டத்தட்ட இருபது பேர் இருந்தார்கள். அவ்வளவு சந்தோஷமும், கூச்சலும்… அந்த சிறுவனுக்கு செல்லமும், மகிழ்ச்சியுமாக இருந்தது. கணவனை இழந்த தன்னை போலவே, தகப்பனை இழந்த தன் மகனும் நிறைய சந்தோஷங்களை இழக்கிறானோ என்று மனம் வேதனையாக நினைத்தது. இவ்வளவு தூரம் வந்துவிட்டு கடவுளை தரிசிக்காமல் செல்ல பிரவீனாவுக்கு மனம் வரவே இல்லை. பக்தி என்பது அவளோடே பிறந்தது போல… அவளையும் மீறி பிள்ளையோடு முருகனை பார்க்க சென்றாள்.
இன்று பெரிதாக அவளுக்கு எந்த வேண்டுதலும் இல்லை. ஒன்றே ஒன்று தான். “என் கணவனை நான் பாதியில் இழந்தது போல, என் மகன் என்னை பாதியில் இழக்கக்கூடாது. எத்தனை சொந்தங்கள் உடன் இருந்தாலும், பெற்றவர்களே பிள்ளைக்கு துணை நிற்க முடியும். இந்த வாழ்க்கை உண்மையில் எனக்கு சுமக்க முடியாத பாரமாக இருந்த போதும், என் மகன் ஆளாகி தனித்து நிற்கும் வரை, இந்த உடலில் உயிரை விட்டு வை இறைவா!”
அவ்வளவுதான் பிரவீனா வேண்டுதல் முடிந்து மகனோடு திரும்ப சென்னை பயணமானாள். பெரிதாக மாற்றம் இல்லாத போதும், அவள் மனம் நிறைய மாற்றங்களை உள்வாங்க தயாராக நின்றது. நான், என்னை நம்பி என் வயிற்றில் பிறந்த என் மகன்.. வட்டத்தை மிக சுருக்கிக்கொண்டாள். அடுத்த நாள் அதிகாலையில் மகனோடு பிரவீனா வீடு வந்து இறங்கும்போது வீடே அவளை அதிர்ச்சியாக பார்த்தது. அவளிடமிருந்து இப்படி ஒரு எதிர்வினையை எதிர்பார்க்கவில்லை என்பதை அவர்கள் முகத்தில் இருந்த அதிர்ச்சி காட்டிக் கொடுத்தது.
“ என்னடி பிரவீனா இதெல்லாம்?…” தாய் அதட்ட, தந்தையின் முகத்தில் இயலாமை பெரிதாக தெரிந்தது.
“என்னம்மா? சாமி முடிய ரொம்ப நாள் வைக்க முடியாது. தோணுச்சு அவ்வளவுதான்” பட்டென்று என்று முடித்துக் கொண்டாள் பெண்.
“அதுக்காக எங்ககிட்ட ஒரு வார்த்தை கூட சொல்ல மாட்டியா?.. நாங்க ஒரு முடிவு எடுப்போம் தானே…”
“அதுவரைக்கும் பிள்ளையை இப்படியே வச்சி இருக்க சொல்றியா?”
“உனக்கு உன் தங்கச்சி மீது என்ன பொறாமை?…” என்றதும், அவளுக்கு அப்படி ஒரு கோபம் வந்தது.
“என்ன சொன்னீங்க?” என்று சத்தமாக கேட்க.
“என்ன பேசுற நீ?” அவள் தந்தை கூட அதட்டல் போட்டார்.
“பின்ன என்னங்க? இவ்வளவு நாள் அமைதியாக இருந்தவ.. இன்னைக்கு திடீர்னு நம்ம யாருகிட்டயும் ஒரு வார்த்தை கூட சொல்லாம, பிள்ளைக்கு மொட்டை எடுத்து வந்துருக்கானா, என்ன அர்த்தம்”
“என்ன அர்த்தம். எனக்கு உங்க மேல கோபம். அது தான் அர்த்தம்” பிரவீனா வெடித்தாள்.
“நாங்க என்னடி பண்ணுனோம். நல்லது நினைச்சு தான் உன்னை சொந்தத்தில் கட்டிக் கொடுத்தோம். உன் விதி இப்படி ஆகிப்போச்சு. உன் தலையெழுத்தை கடவுள் இப்படியா எழுதணும்.. பாதியில தாலி அறுத்து நிக்கிற வரம் வாங்கி வந்திருக்கியே… நான் என்னத்த சொல்ல?” அழுகை வந்தது அவருக்கு…
“நீ சொல்றது உண்மைதாம்மா என் விதி இப்படி ஆகி போச்சு. கடவுள் எழுதின எழுத்தை யார் மாத்த முடியும். உங்க யாரையும் நான் தப்பு சொல்லலை. எனக்கு தான்… நான் உங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமா பாரமாயிட்டு வாரேன்னு ஒரு எண்ணம்”
“என்னம்மா பேசுற? பெத்தவங்களுக்கு பிள்ளை எப்படி பாரமாகும். நாங்க ஒரு நாளும் உன்னை அப்படி நினைச்சது இல்லை பிரவீனா. உன்ன காலத்துக்கும் பாத்துக்குற கடமை எங்களுக்கு இருக்கு” என்றார் தந்தை.
விரக்தியாக சிரித்தவள், “யாரும் என்னைப் பார்த்துக்க வேணாம் ப்பா. நான் என்ன உங்களுக்கு குழந்தையா? எனக்கே அஞ்சு வயசுல ஒரு குழந்தை இருக்கு.. நான் உங்க எல்லாருக்கும் சொல்றது ஒன்னு தான். நாம எல்லாம் ஒரே குடும்பம். நானும் இந்த வீட்டில ஒரு அங்கம்ன்னு நினைக்கும் போதெல்லாம் நீ தனின்னு உணர்வை தாரீங்க…”
“அதேபோல நான் தனி. நாமெல்லாம் ஒரே வீட்டில் இருந்தாலும், நான் வேற வீட்டு பொண்ணு. என் குடும்பம் வேறன்னு நினைச்சா? அதுக்கான மதிப்பும், மரியாதையும் எனக்கு கொடுக்கணும். அப்ப மட்டும் நாம எல்லாம் ஒரே குடும்பமாகிறோம். நீ என்ன தனி ஆளா நீ இந்த வீட்டு பொண்ணுன்னு சொல்லிடுறீங்க?… நான் சொல்றது ஒன்னே ஒன்னு தான் ப்பா. நான் தனியா இல்லை இங்கேயே இருக்கிறனால இந்த வீட்டு பொண்ணா?… எதுவா இருந்தாலும் நானும், என் பிள்ளையும் உங்களுக்கு பாரமா இருக்க மாட்டோம்” என்று பிரவீனா சொன்னதும்,
“பிரவீனா” என்ற அதட்டல் வந்தது.
“என் பிள்ளைக்கு பத்து ரூபாய்க்கு ஒரு பிஸ்கட் வாங்கினாலும் அது என் காசு. நான் இங்கேயே இருக்கிறதால உங்க கிட்ட எதையும் ஃப்ரீயா எதிர்பார்க்கல…” ஒவ்வொருவர் முகமும் மாறத் தொடங்கியது. அவள் யாரை சொன்னால்? யாருக்காக சொன்னால் என்று தெரியவில்லை பொதுவாக பேசத் தொடங்கினாள்.
“என் பிள்ளைக்கு என்ன தேவையோ அதை நானே பார்த்துப்பேன். ஒரு உதவியா கூட என்னைக்கும் என் தம்பி கிட்டையோ, என்ன பெத்தவர் கிட்டையோ கை நீட்ட மாட்டேன்…”
“அக்கா, என்ன இது?” என்றான் பிரேம்.
“நெஜம்தான் பிரேம். நாம் எல்லாம் ஒரே வீட்ல இருக்கோம். இதுவரைக்கும் என்ன ஏதுன்னு கணக்கு பார்த்ததில்லை. இனி எப்படின்னு தெரியாது. ஆனா, ஒரு மனஸ்தாபம் வந்துரக்கூடாது. அதுக்கு முன்னாலேயே பேசி தெளிவுபடுத்துகிறது நல்லது தான்…”என்றவள்,
“அப்பா… கணவனை இழந்துட்டு நான் தனியா நிக்கறதுனால, உங்ககிட்ட எனக்கு எந்த கரிசனமும் வேண்டாம். மத்த ரெண்டு பிள்ளைகளுக்கு என்ன செய்றீங்களோ அதையே எனக்கு செஞ்சா போதும்… ஒரே வயித்துல பிறந்த எல்லாரும் ஒன்னாவே முன்னேற முடியுமா என்ன? என் தம்பி தங்கச்சிகளை விட நான் பின்னாடி நின்னா? அம்மா சொல்ற மாதிரி நான் வாங்கி வந்த வரம் அப்படி… என் மகன் வளர வரைக்கும் என்னால் தனியா போய் இருக்க முடியாது. பெத்தவங்களா நீங்க இருக்கிற வரைக்கும் எனக்கு ஒரு நிழல். அத தாண்டி.. எனக்கு இளைய பிள்ளைகளை நான் தான் பாக்கணும். அவங்கள பாக்குற வசதி எனக்கு இல்லாட்டியும் கூட அவங்க கிட்ட வசதியை எதிர்பார்க்கிற நிலைமையில நான் இருக்க மாட்டேன்…” ஆர்த்திக்கு சுருக்கென்று தைத்தது.
“என்னடி என்னென்னமோ பேசுற… குடும்பம்னு இருந்தா சில சலசலப்பு இருக்கத்தான் செய்யும். நீ உன் மாமியார் வீட்டுல இருந்தா மட்டும், உன்னை தங்கமா தாங்க போறாங்களா?… எங்க கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம ஏன் பிள்ளைக்கு மொட்டை எடுத்த?” என்ற தாய்க்கு…
“நான் ஃபர்ஸ்ட் உங்களுக்கு தான் மா விளக்கம் கொடுக்கணும். நீங்க, மொத என்னை, என் தம்பி தங்கச்சி கூட கம்பேர் பண்ணி பேசறத நிப்பாட்டுங்க.. என் தம்பி மேலையும், தங்கச்சி மேலையும் அவங்க நல்லா வாழ்றாங்கன்னு எனக்கு ஒரு நாளும் பொறாம வந்தது கிடையாது…”
“அதில்லை பிரவீனா” என்று தாய் தொடங்கும் போதே,
“அம்மா, ஒரு விசேஷம் கோவில்ன்னு எங்கு தொடங்கும் போதும் என் முகம் கொஞ்சம் வாட்டமா தான் இருக்கும். அதுக்கு காரணம், என் கூட பொறந்தவங்க நல்லா இருக்காங்க.. என் வாழ்க்கை இப்படி ஆகி போச்சேன்ற பொறாமைலாம் கிடையாது. என்னை கடவுள் இப்படி நிக்க வச்சுருச்சேன்ற ஆற்றாமை தான். எல்லோரும் ஜோடியா நிக்கும் போது, நான் மட்டும் ஒத்த பிள்ளையோட தனியா நிக்கிறனேன்ற வலி எனக்கு இருக்கும் தானே… எந்த கோவில் விசேஷத்திலும் எல்லாரும் குடும்பமா போய் வரும்போது நான் மட்டும் எதிலும் கலந்துக்க முடியாம தனியா நிக்கிறேன். அப்ப எனக்கு வேதனையாத்தான் இருக்கும். நான் பெத்த என் மகனுக்கு கூட என்னால சந்தோஷமா ஒரு ஃபங்ஷன் வைக்க முடியல.. என் இயலாமை எனக்கு அழுகை வரும்…”
“இப்படி நிறைய விஷயத்தை நான் கடந்து வரத்தான் செய்யணும்.. பல இடத்துல என் கணவர் என் கூட இல்லையேன்னு எனக்கு வலிக்கத்தான் செய்யும்.. முகம் வாடும், அழுகத்தான் செய்வேன். அதெல்லாம் மத்தவங்க மேல எனக்குள்ள பொறாமை கிடையாது. அவங்க நல்லா வாழ்ந்திட கூடாதுன்ற கெட்ட எண்ணமும் கிடையாது. என்னை விட முன்னேறிட்டாங்களே என்ற ஆதங்கமும் கிடையாது. என் விதியை கடவுள் இப்படி எழுதிருச்சேன்ற வலி…”
“ஏன் இப்படி இருக்கேன்னா நான் என்னத்த சொல்லுவேன். என் புருசன் எனக்கு இல்லாம போயிட்டாரே… திரும்பி வந்துடுவார்ன்ற நிச்சயம் இல்லாம, திரும்பி வர முடியாத இடத்துக்கு போயிட்டாரே… அந்த கஷ்டம் வலி எனக்கு இருக்கத்தான் செய்யும், சில நேரம் என் முகத்தில் அது காட்டவும் செய்யும். அதை என்னால மறக்கவும், மறைக்கவும் முடியாது. அந்த வலி என் முகத்தில் எப்பவும் இருக்கும். அது மாறாது… அதை மறைத்து என்னால நடிக்கவும் முடியாது” என்றவள், உறங்கும் பிள்ளையோடு உள்ளே சென்று விட்டாள்.
வீட்டு ஆட்கள் தான் திகைப்பில் நின்று இருந்தார்கள். பிரவீனாவா இப்படி பேசியது? எப்போதும் எதையும் அமைதியாக கடந்து போகும் இவளா பேசியது?
அடுத்த நான்கு நாட்களும் பிரவீனா மிக இறுக்கமாக இருந்தாள். என்னவோ என்று நெருங்க முயன்ற மித்ரனை கூட பிரவீனா நெருங்க விடவில்லை. அவளுக்கு அவன் மீதும் கோபம் தான்.
நல்ல நட்பு என்ற வட்டத்தில் தான் அவனை வைத்திருந்தாள். நல்ல நட்பாக இருந்தவன் திடீரென்று ஒதுங்கியதும், வெட்டிக்கொண்டு பேசியதும், கல்லெடுத்து எரியும் நாய் போல விரட்டி விட்டதையும் அவள் மறக்கவில்லை. பிரவீனா என்ன இவனுக்கு அவ்வளவு எளிதாக போய்விட்டாளா? எத்தனையோ உறவுகளின் விலகலை நேரடியாக பார்த்தவள் இவள்… இவன் யார் எனக்கு? நீ போடா என்று தள்ளி நின்று கொண்டாள்.
முன்பு முடிவெடுத்து ஒதுங்கி நின்றது மித்ரன் தான். இன்று பிரவீனா தள்ளி நிற்க. அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. இந்த மாத கடைசியோடு அவர்களின் ப்ராஜெக்ட் வொர்க் முடிகிறது. அடுத்து யார் யார் எந்த டீம் என்று தெரியாது. யார் மாறினாலும், நானும் பிரவீனாவும் சேர்ந்தே இருக்க வேண்டும் என்று மேனேஜரோடு மல்லு கட்டிக்கொண்டு நின்றான் மித்ரன். மனித மனம் குரங்கு என்பதை சரியாக நிரூபித்துக் கொண்டிருந்தான்.
“பிரவீனா” என்றான் மித்ரன்.
“சொல்லுங்க சார்…” பெரிதாக பட்டுக் கொள்ளாத தன்மை அவள் குரலில்…
நான் என்ன யாரோவா? தள்ளி நின்று பேசுறா என்று நினைத்தவன், பெரிதாக தும்மினான். தொண்டை வலிக்க இரும்மினான். பிரவீனா கண்டுகொள்ளவே இல்லை. அவன் நினைவு என்னவோ அன்று மாதிரி நலம் விசாரிப்பாள், ஏதேனும் வேண்டுமா என்று கேட்பா என நினைத்தான். நீ யார் எனக்கு என்ற பார்வையை பிரவீனா தர.. அவ்வளவு எரிச்சல் அவனுக்கு…
“சார் சொல்லுங்க?…”
“வேற ஒன்னும் இல்ல மேடம். நான் வெளிநாட்டில் இருக்கும் போது ஆன்லைன்ல சில வேலைகளை முடிச்சு கொடுப்பேன். இப்ப நான் ரொம்ப பிஸி… அந்த வேலையை நீங்க தொடர முடியுமா? ஜஸ்ட் ஒரு ஹெல்ப் தான்.. உங்க ஒர்க்கான பணம் உங்களுக்கு கிடைக்கும். என்னை நம்பலாம்…”
சாய் ஸ்ரீ மூலம் மித்ரன் அறிந்து கொண்டது அவளுக்கு பண பிரச்சனை உண்டு என்பது மட்டும்தான். அவள் வருமானம் முழுக்க பிள்ளை படிப்பு செலவுக்கு மட்டுமே போய்க்கொண்டிருக்கிறது. சேமிப்பு என்ற ஒன்றை இதுவரை அவள் தொடங்கவில்லை. அந்தக் கவலை அவளுக்கு பெரிதாக இருக்கிறது. ஒரு அவசரம் என்றாலும் பிறரை எதிர்பார்க்கும் நிலை… நல்ல வேலையாக இதுவரை அப்படி ஒரு அவசர தேவை அவளுக்கு வந்ததே இல்லை. ஆனாலும் பணப்பிரச்சனை அவளுக்கு உண்டு.
ஒருவேளை இதுதான் பிரவீனாவுக்குரிய கஷ்டமாக இருக்கும் என்று நினைத்த மித்திரனோ… அவளுக்குரிய கஷ்டத்தை போக்க முயன்றான். என்னவோ யாரோ போல தள்ளி நிற்க முடியவில்லை. பிரவீனா மிக ரோஷம் பார்ப்பாள் பெற்றவர்களிடம் கூட கை நீட்டாதவள். ஆதிரன் பொறுப்பை தான் ஏற்றுக் கொள்வதாக சொன்னால் அவ்வளவுதான். அதனாலே அவள் ஓரளவு ஏற்றுக் கொள்ளும்படியான ஒரு வேலையை ஏற்பாடு செய்தான்.
பிரவீனாவுக்கு மிகுந்த தயக்கம். நன்றாக பழகியவன், பட்டென்று ஒதுங்கிக் கொண்டான். இப்பொழுது ஒரு ஹெல்ப் ஆக கேட்டாலும், தன்னை உதாசீனப்படுத்தியவனோடு மீண்டும் நட்பு வேண்டுமா என்று ஒரு மனம் ரோசமாக நினைத்தது… ஆனால், அதையும் மீறிய நிதர்சனம் பணத் தேவையை அறிவுறுத்த.. கொஞ்சம் தயங்கியே என்றாலும் அவன் கொடுத்த ஆஃபரை ஏற்றுக் கொண்டாள்.
மித்ரன் இதைக் கொண்டே அவள் நட்பு வட்டத்தில் மீண்டும் நுழைய முயற்சிக்க… பிரவீனா சகஜமாக இருப்பது போல் தெரிந்தாலும் அவனிடம் ஒரு ஜாக்கிரதை உணர்வை கொண்டு வந்தாள்.
“போடா லூசு பயலே… அவ நல்லாத்தான் இருந்தா.. நீயும், உன் முட்டாள்தனமான கொள்கையும்.. ஒரு நல்ல நட்பை இழந்ததோட ,அவள் அருகாமையையும் அவளோட நன்மதிப்பையும் இழந்து விட்டாயே மித்ரா…” மனதோடு புலம்பி கொண்டான்.
பிரவீனாவுக்கு வேலை எளிதாக இருந்தது. அவள் முடித்துக் கொடுக்கும் வேலைக்கு வாரம் வாரம் கையில் பணமும் வந்தது. அது அவளுக்கு ஒரு பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது. கைக்கும் வாய்க்கும் பத்தாமல் இருந்த நிலை போய், ஓரளவு வருமானம் என்று கையில் நிற்க… அவ்வளவு சந்தோஷம் அவளுக்கு… இப்போதைக்கு அவளுக்கும், அவள் மகனுக்கும் பணம் தேவை தான் அவசியமாக இருந்தது. அது ஓரளவுக்கு பூர்த்தியாக தொடங்கியது.
பிரவீனா முகத்தில் இந்த ஒரு தெளிவையும், மகிழ்வையும் கொண்டு வர திரைக்குப் பின்னால் மித்திரன் சில வேலைகளை செய்தான். வெளிநாட்டு ப்ராஜெக்ட் வேலையை முடிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அத்தோடு வாரம் வாரம் பணமும் கொடுக்க மாட்டார்கள். பிரவீனா முன் அனுபவம் இல்லாத ஒரு கட்டாயத்தில் வேலைக்கு வந்த பெண். அதைத்தான் மித்திரன் பயன்படுத்திக் கொண்டான். உண்மையில் அந்த ப்ராஜெக்ட் வேலையை முடிப்பது மித்ரன் தான். அதில் மிகச் சிறிய ஒரு பகுதியை மட்டுமே பிரவீனா செய்கிறாள்.
அவளின் வேலை நேரம், அவளுக்கு தேவையான ஓய்வு என்பதெல்லாம் கணக்கில் கொண்டு தான்.. மற்ற வேலைகளை தன் பக்கம் வைத்துக் கொண்டு ஒரு சிறு வேலையை மட்டும் அவளுக்கு கொடுத்து, வெளிநாட்டு பணம் என்று ஓரளவுக்கு கணிசமான தொகையை அவள் வங்கி கணக்கில் போட்டான். இந்த பைத்தியக்காரத்தனம் எல்லாம் தேவையா என்றால்? ஆம், அவனுக்குத் தேவைதான்.
பிரவீனா முகத்தில் இருக்கும் நிம்மதி அவனுக்கு மிக மிக தேவை. அதற்கு என்ன காரணம் என்று ஓரளவு அவன் கண்டறிந்த போதும், மேற்கொண்டு அதை எடுத்து செல்ல ஏதோ ஒரு தடை. ஆனால், அவள் முன்னேற வேண்டும். அவள் நிம்மதியாக வாழ வேண்டும். பிரவீனா முகத்தில் இருக்கும் நிம்மதி. தனக்கு அமைதியை தருவதை, அவன் மெல்ல மெல்ல உணர்ந்தான்.
error: Content is protected !!